விளம்பரங்களை நமது சமூகத்தின் கண்ணாடி என்று கொண்டால், விளம்பரங்களில் வரும் பெண்கள், மணமும் குணமும் நிறைந்த சாம்பாரை செய்கிறவளாக இருக்கிறாள். கணவனின் அழுக்கு உடைகளை வெளுப்பவளாக இருக்கிறாள். ஊக்க பானம் கொடுத்து மகனை படிக்க வைப்பவளாக இருக்கிறாள்.தனக்குள் இருக்கும் ஐஸ்வர்யா ராயை பலவித களிம்பு பூசி, கொக்கி போட்டு இழுக்கும் வித்தையை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறாள். எத்தனை வேலைகள் செய்தாலும் எவ்வித சோர்வும் இன்றி அழகாக வலம் வருபவளாக இருக்கிறாள்.
சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை ஒரு கண்ணாடி எனக் கொண்டால், சில ஆண்டுகளுக்கு முன், தில்லியில் ஒரு இரண்டு வயது குழந்தையின் தாய் ஒரு நபரின் தற்கொலைக்கு காரணமானாள் என்று அந்த நபருடைய குடும்பத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, முகத்தினில் கருப்பு மை பூசப்பட்டு வீதியில் இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறாள். ஒரு ஆணின் காதலை ஏற்காத பெண்ணிற்கு கத்தி குத்து, ஆசிட் வீச்சு, உடலுக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தலித் பெண் என்றால் ஹத்ராஸ் சம்பவம் போல வன்கொடுமை செய்யப்பட்டு மரணமடைந்த அவளுடைய உடல் கூட எந்த வித குற்ற உணர்வும் இன்றி நள்ளிரவில் எரிக்கப்படுகிறது. ஒரு பெண் காதல் வயப்பட்டு வேறு ஒரு சாதி ஆடவனை கைப்பிடித்தால் கௌரவக் கொலை என்ற பெயரில் அழிக்கப்படுகிறாள். 15 முதல் 18 வயது வரை இளவயது பெண் திருமணங்கள் கொரோனா காலத்தில் அதிக அளவு நடந்ததாக நாம் அறிய வருகிறோம்.
மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி
ஆசைப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவி மனைவி ஆனாள்
முகம் தெரியாதவனின் கையை பிடித்து ஏழடி எடுக்கையில்
ஹோம குண்டத்தில் சாம்பல்
வழியெங்கும் நெருப்பு
இதற்கு முக்கிய காரணம் பெண்கள் படித்தவர்களாக இருந்தால் தங்களுக்கு என்று குடும்பம், வேலை என்று எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு வலிமையான இடத்திற்கு வந்து விடுவாள் என்ற பயம் தான்.
அதிகம் பேசும் பெண்ணை வாயாடி என்போம், ஆனால் அதிகம் பேசும் ஆணுக்கு தமிழில் பெயர் இல்லை வீட்டை விட்டுச் சென்ற பெண்ணிற்கு ஓடு காலி என்றும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்ணுக்கு மலடி என்றும் பெயர் உண்டு. நேர்த்தியாக உடை உடுத்தினால் எத்தனை ஜோடிக் கண்கள் ஒரு பெண்ணை உரசிச் செல்கிறது. ஒரு பெண் கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை எத்தனை கரங்கள் தீண்டாத் துடிக்கிறது. இவ்வாறாக பெண்ணின் சிறகுகளை வெட்டி விட்டால் அவளால் எத்தனை தூரம் சென்று விட முடியும்.
பெண் விடுதலை என்பது ஆண்களைச் மட்டும் சார்ந்தது அல்ல, தவறிழைக்கும் ஆண்கள் வளர்ந்த குடும்பத்தில் இருக்கும் பெண்களையும் சார்ந்தது தான். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு ஆண்களிடம் எந்த அளவு இருக்கிறதோ அளவு பெண்களிடமும் உள்ளது.
ஆற்றின் நீரோட்டத்துக்கு எதிராக ஒரு நீர் நாய் எப்படி அணைக்கட்டுகிறதோ அப்படி ஒரு பெண்ணும் நினைத்தால் சமூக போக்கிற்கு எதிராக உயர்ந்து நிற்க முடியும். இதற்கு முக்கியத் தேவை பெண்ணிற்கு மனஉறுதியும், எதற்கும் அஞ்சாத திறனும் மட்டுமல்ல, அவளுடைய குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் தான். ஒரு பெண்ணுக்கு அரணாக ஒரு சமூகமோ, அரசாங்கமோ உதவிக்கு வராத சூழலில் ஒரு பெண்ணின் கரங்களுக்கு வலு சேர்ப்பது அவளுடைய குடும்பம் மட்டுமே. ஆனாலும் குடும்ப கௌரவம், சாதிப் பெருமை போன்றவற்றை முன்னிறுத்தும் குடும்பச் சூழலில் பெண்கள் தங்களுடைய குடும்பங்களில் இருந்து பாதுகாப்பும், உதவியும் பெறுவது இல்லை. எனவே தான் ரிதன்யா போன்ற இளம் பெண்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் பரிதாப நிலையை காணும் சூழலில் வாழ்கிறோம்.
ஆண்களைப் பற்றிய புரிதல் இல்லாமலும், பெண் பிள்ளைகளின் சொந்த விருப்பங்களை மதிக்காமலும் வளர்த்து, திருமணம் என்பதே அவளுக்கான விடுதலை என்ற எண்ணத்தை விதைத்து, சுய சார்பு என்ன என்பதே தெரியாமல், தவறான உறவுகளிடம் இருந்து பிரிந்து தனியாகவும் வாழ முடியும், சாதிக்க முடியும் என்பதைப் பற்றிய புரிதல் இல்லாமல் வளர்ப்பதே பெண் பிள்ளை வளர்ப்பு என்பதையே இன்றும் பல குடும்பங்கள் கடைப்பிடிக்கின்றன. என்னுடைய தோழி ஒருத்தி மேலே படிக்க விரும்பியபோதும், அவளுக்கு பிடித்த ஒருவரை மணக்க விரும்பிய போதும் உனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி அவளை மேற்படிப்புக்கு அனுப்பாமல், அவள் விரும்பியவரைப் பற்றியும் கவலைப்படாமல் அவளுக்கு வேறு ஒரு இடத்தில் மணம் முடித்ததும் நிகழ்ந்த ஒன்று. திருமணம் என்பது பெரும்பாலும் பெண்ணின் விருப்பதிற்கு மாறாக நிகழும் ஒன்று என்பதும் எழுதப்படாத விதி.
கோடிக்கணக்கில் யாரோ ஒருவனை நம்பி கொடுக்கப்படும் வரதட்சணை பணத்தை தவிர்த்து, சொந்த பெண்ணின் மீது நம்பிக்கை வைத்து அவள் சொந்தக் காலில் நிற்க, சுயசார்புடன் வாழ, சமுதாயத்தை புரிந்து கொள்ள, வெற்றி தோல்விகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களை பெற்றோர் அளிக்க வேண்டும். பெண்களுக்கு சுய சம்பாத்யம் தேவை. எதிர்பார்ப்புகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து வாழ, சமூக ஓட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் இத்தகைய சுயசார்பு அவர்களுக்கு அளிக்கும் என்பது திண்ணம். நாளை பற்றிய நம்பிக்கையுடன் வாழும் ஒரு பெண்ணை அசைக்கக் கூடிய சக்தி இந்த உலகத்தில் இல்லை.
"நீ கல்யாணத்துக்கு அப்புறம் உன் இஷ்டத்துக்கு கணவனுடன் எங்கு வேண்டுமானாலும் போ, இப்போ எங்கேயும் போகணும்னு சொல்லாதே", "நீ வேலையெல்லாம் பார்க்க வேண்டாம், ஊரு எங்களை பொண்ணோட சம்பாத்தியத்துல வாழறோம்னு சொல்லும்", "பொண்ணை ஆண் வாசனை படாம கட்டுக்கோப்பா வளர்த்துட்டோம்", "படிக்கறது எல்லாம் புகுந்த வீட்டுக்கு போன பிறகு பார்த்துக்கோ" என்று அரதப் பழசான வசனங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு எதிராக ஒலிக்கும் போதெல்லாம் அழகான வாழ்வைத் தொலைக்கும் ரிதன்யாக்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காக, வாழ்வின் பக்கங்களில் தனக்கென வாழாமல், நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை வாழ்ந்து கொள்ளலாம் என்று வாழ்வைத் தள்ளிப் போடும் பெண்களே இங்கு மிகுதி. ஒரு ஆணுக்கு வாழ்வில் ஒரு சில பகுதிகள் கடினமாக இருக்கலாம். ஆனால் வாழ்தலே கடினமாக இருப்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்று. இன்று உலகத்தில் போர் நடக்கும் நாடுகள் எல்லாம், ஆண் பெண் பாகுபாடு அதிகம் நிலவும் இடங்களே. கல்வி, வேலை வாய்ப்பு, சுதந்திரம் என்று எல்லாமும் சமநிலையில் கிடைக்கும் நாடுகளிலேயே அமைதியும், வளர்ச்சியும் குடியிருக்கும். "மரபு" என்ற தலைப்பில் கவிஞர் ந. ஜெயபாஸ்கரன் எழுதியிருக்கும் இந்தக் கவிதை தற்கால வாழ்வின் அவலத்தை காட்டும் காலக் கண்ணாடி.
ஏதாவதொன்றை
எனதறையில்
எங்காவது வைத்துவிட்டுத் தேடுவது
அன்றாட வேலைகளில்
ஒன்றாகிவிட்டது எனக்கு
நீண்ட நேரத் தேடலுக்குப் பின்
கிடைக்கும் ஒவ்வொன்றும்
முந்தைய தேடுதலில்
கிடைத்திருக்க வேண்டியதாக
இருந்து தொலைக்கின்றன.
வியர்த்துச் சொட்டச் சொட்ட
எனக்கு நானே புலம்பியபடி
எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையல் அறை ஜன்னல் வழியே
பார்த்துப் பரிகசிப்பது
பிடித்தமான வேலையாகி விட்டது
என் மனைவிக்கு
சமையலறையில்
என் கண்களைக் கட்டி விட்டாலும்
எந்தப் பொருளிலும் விரல் படாமல்
கேட்ட பொருனைக் கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று
சவால் விடவும் செய்கிறாள் அங்கிருந்து
அவளிடம்
சொல்லிக் கொள்வதில்லை நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக