![]() |
பிரிட்ஜ் பிட்வீன் காட்டினன்ட்ஸ் |
![]() |
மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் எனப்படும் அட்லாண்டிக் வெடிப்பு |
![]() |
Valahnukur மலை |
![]() |
ஆக் பறவை |
![]() |
பிரிட்ஜ் பிட்வீன் காட்டினன்ட்ஸ் |
![]() |
மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் எனப்படும் அட்லாண்டிக் வெடிப்பு |
![]() |
Valahnukur மலை |
![]() |
ஆக் பறவை |
சென்ற மாதம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா என்ற அமைப்பினர் புரட்சி கவி பாரதிதாசனின் 130-வது பிறந்த நாளையொட்டி "புரட்சிக் கவிஞரின் புரட்சிக்கு கருத்துக்கள் என்ற தலைப்பில்" நடத்திய கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற என்னுடைய கட்டுரை. விதிகளுக்கு ஏற்ப ஒரு சில பகுதிகளை நீக்கியும், சுருக்கியும் மாற்றியும் எழுதி அனுப்பி இருந்தேன். முழுமையான கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு.
பாரதிதாசனின் புரட்சி கருத்துக்கள்
கனல் வீசும் கண்களும், மிடுக்கான துடிப்பான மீசையும், தலையில் முண்டாசுமாய் ஒரு அக்னி துண்டாய் தோன்றி தமிழ் புலவர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கு ஒரு குணமுண்டு என்று நிறுவியவர் மகாகவி பாரதி. அந்த வீரிய விருக்ஷத்தின் அடியில் முளைத்த அடி வாழையாய் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் புரட்சி கவிஞர் பாரதிதாசன். தமிழ் உள்ள மட்டும் அவரின் பெயரையும், உலகில் கடைசி தமிழர் உள்ள மட்டும் அவரின் புகழையும் அழிக்க இயலாது. அவரின் கவிதையில் தமிழ் துள்ளும், புரட்சி கருத்துக்கள் அள்ளும்.பாரதிதாசன் அவர்கள் இசையில் தேர்ந்த கவிஞர்; சிறந்த நாடக ஆசிரியர்; பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்; சுதந்திர போராட்ட வீரர்; திரைக்கதை ஆசிரியர்; பன்முக வித்தகர்."பாரதி வழங்கிய ஞான ரதம், அவர்தந்த கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை விட உயர்வானது அவர் உருவாக்கி கொடுத்த கனக. சுப்புரத்தினமே" என்ற புதுமை பித்தனின் வாக்கினில் பாவேந்தர் பாரதிதாசனின் உயர்வினை அறியலாம்.
விஞன் என்பவன் மொழியை லாவகமாக கையாளும் திறமை பெற்றவன் மட்டுமல்ல.அக்கவிஞன் சிந்தனையில் தோன்றிய கருத்துக்கள் சமூகத்தில் விதைத்த மாற்றம் என்ன என்ற அளவுகோல் கொண்டே அளக்க வேண்டும். தொலைநோக்கு கொண்ட புரட்சி கருத்துக்களை சொன்னதால் மட்டுமே பாரதிதாசனை நாம் கொண்டாடவில்லை. அந்த கருத்துக்கள் இக்காலத்திற்கும் எதிர்வரும் எல்லா காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதாலேயே அவர் கவிதைகளும், உயர் சிந்தனைகளும் இன்றும் போற்றப்படுகிறது.
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக் கின்றேன்.
என்று பாரதியை தன்னுடைய பெயரில் மட்டும் அல்ல, தன்னுடைய தமிழாலும் போற்றியவர். கனக. சுப்புரத்தினம் என்ற தன் இயற்பெயரை துறந்து பாரதியின் மீது கொண்ட நட்பின் ஆழத்தால் பாரதிக்கு தாசன் அதாவது "பாரதியின் அடிமை" என்ற பெயரை விரும்பி ஏற்றவர். வள்ளுவன் காட்டும் "நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்ற தூய நட்பின் இலக்கணத்தின் வழி ஒழுகியவர் என்றால் அது மிகையாகாது.
பைந்தமிழ் தேர்ப்பாகன், நீடுதுயல் நீக்க பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூர செங்கோ என்று தமிழ் சமூகத்திற்கு பாரதியை அறிமுகம் செய்யும் தகுதி வாய்ந்த ஒரே கவிஞன் பாவேந்தர் மட்டுமே. மேற்கத்திய உலகில் ஷெல்லியும் கீட்சும் எவ்வாறு இரட்டை கவிஞர்கள் என்று அறியப்பட்டனரோ அது போலவே சம காலத்தில் வாழ்ந்த பாரதியும், பாரதிதாசனும் தமிழ் தாய் ஈந்த இரட்டை குழந்தைகள் என்றே சொல்லலாம்.
கவிஞருக்கே வாய்த்த உள்ளம் பிறர் நலம் பேணுவது. தன் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் கருத்துக்களை பாமரரும் அறியும் வண்ணம் தெளிவாய் உரைப்பது.
அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.
என்று குடும்பவிளக்கில் பாரதிதாசன் கூறுவது இக்கணமே நாம் வாழும் இச்சமூகத்திற்கு நற்தொண்டுகள் புரிய வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொருவருக்கும் நிச்சயம் விதைக்கும். நிகழும் ஓவ்வொரு மரணமும் நாம் நல்லது செய்வதற்காக உள்ள குறைவான கால அளவையே காட்டுகிறது என்பதையே "உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா" என்று அறை கூவல் மூலம் அறிவிக்கிறார்."தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்" என்று சமுதாய சிந்தனை யற்று உள்ளோரை பழிக்கிறான். "வேடிக்கை மனிதரை போல வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று பாரதி சுழற்றிய சொல் சட்டைக்கு சிறிதும் குறைவானதில்லை இவ்வரிகள்.
அவரது கவிதைகளில் மனிதர்கள் அனைவரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற பொது நலம் எப்பொழுதும் மேலோங்கியே இருக்கும். செந்தாமரையை காணும் போதும் , கூட்டமான வெண்புறாக்களை காணும் போதும் சாமானிய கவிஞர் போல் அழகிய காட்சிகளை மட்டும் வர்ணனை செய்யாமல் மேலோர் கீழோர் என்று பிரிந்து கிடைக்கும் தமிழ் இனம் ஒன்று படவேண்டும் என்னும் உயர் சிந்தனையை அக்கவிதையை படிப்பவருக்கும் கடத்துவார்.
இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!
இயற்கை அழகில் தன்னை மறப்பது கவிஞர்களின் இயல்பு. ஆனால், பாரதிதாசன் பசுமையான சோலையைப் பார்க்கும் பொழுது கூட அதனை உருவாக்கப் பாடுபட்ட தொழிலாளர்களின் நிலையை, துயரத்தை எண்ணிப் பார்க்கின்றார்.
சித்திரச் சோலைகளே உமைநன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே
என்று தொழிலாளர் படுத்துயரை எண்ணி துயரம் கொள்கிறார்.
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூலில் அவர் அந்த மலையின் இயற்கை காட்சியை கீழ் கண்டவாறு வர்ணிக்கிறார்.
குயில் கூவிக் கொண்டிருக்கும். அழகு மிக்க மயில் ஆடிக் கொண்டிருக்கும். மணமிக்க காற்று குளிர்ச்சியாக வீசும். கண்ணாடி போன்ற தெளிந்த நீர் ஊற்றுகள் இருக்கும். பழ மரங்கள் நிறைய உண்டு. பூக்களிலே தேனீக்கள் இருந்து இசைபாடிக் கொண்டிருக்கும்.
அத்தகைய சஞ்சீவி மலை சாரலில் வஞ்சியும்,குப்பனும் காட்டு மூலிகையை உண்டு உலகின் வாழும் மாந்தரின் பேச்சினை கேட்கும் திறம் பெறும் போது, ஆங்கிலேயேர் ஒருவர் சொல்வது போல் அமைந்த இந்த பாடலில் சாதி சமய வேறுபாடுகளையும் அவற்றை பின்பற்றும் சமூகத்தை சாடுகின்றார். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையும், தீண்டாமையும் புரையோடிய இச்சமூகத்தில் புராணங்களையும், இதிகாசங்களையும் எள்ளி நகையாடும் நெஞ்சுரமும், கொண்ட கொள்கை மாறாமல் நிற்கும் தனித்திறனும் , சொல்வன்மையும், ஆழ்ந்த கருத்துக்களை பாமரரும் விளங்கும் வண்ணம் எளிய நடையில் சொல்லும் திறனும் பாவேந்தர் அவருக்கே உரியது.
நாவலந்தீவு நமைவிட்டுப் போகாது
வாழ்கின்றார் முப்பது முக்கோடி மக்களென்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
ஆகையால் எல்லோரும் அங்கே தனித்தனிதான்
ஏக மனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
பேதம் வளர்க்க பெரும் பெரும் புராணங்கள்
சாதிச் சண்டை வளர்க்க தக்க இதிகாசங்கள்!
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்து தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்
தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்;
கவிஞர் கண்ணதாசனும் அவர் பின் வந்த கவிஞர்களும் பாரதிதாசனிடம் இருந்து தமிழ் சொற்களையும், அவர்தம் உயரிய கருத்துக்களையும் கடன் பெற்றே தமிழ் சமூகத்திற்கு அளித்தனர் என்பதே உண்மை. பாரதிதாசன் என்ற தமிழ் அன்பனுக்கு தானும் அன்பன் என்று உரைத்து கவிஞர் தி.ராஜகோபாலன் தன் பெயரை "கனக சுப்பு ரத்தின தாசன்" என்று பொருள் வருமாறு "சுரதா" என்று பெயர் சூட்டிக் கொண்டார். பாரதிதாசனின் கவித்திறனே இத்தகைய ஒரு தாக்கத்தை உண்டு செய்திருக்க முடியும் என்பதில் இருவேறு கருத்துக்கள் எழுவதற்கு வாய்ப்பேயில்லை.
கடவுள் பெயராலும் விதியின் பெயராலும் பாட்டாளிகளை ஏமாற்றும் கயவர்களைக் கடிந்து கொள்ளும் பாவேந்தர், அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும் விடுக்கின்றார். அதில், ஏழைகளின் இரத்தம் கொதிப்பேறும் முன் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களைத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.
செப்புதல் கேட்பீர் - இந்தச்
செனத் தொழிலாளர் மிகப் பலர் ஆதலின்
கப்பல்களாக - இனித்
தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்
இப்பொழுதே நீர் - பெறு
இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
காட்டை நாடாக்கினோமே! கழனி திருத்தி உழவு செய்தோமே! நாடுகளைப் படைத்தோமே! அங்கு நான்கு திசைகளிலும் வீதிகள் வகுத்தோமே! வீடுகள் கட்டினோமே! மலையைப் பிளந்தோமே! கடலைத் தூர்த்தோமே! கப்பல்கள் செலுத்தினோமே! தொழிலாளராகிய நாங்கள் படைத்ததல்லவா இந்த உலகம் என்று கேட்கின்றனர் புரட்சிக்கவிஞர் கண்ட தொழிலாளர்கள். இந்த வரிகள் பாரதிதாசன் எழுதிய "தொழிலாளர் விண்ணப்பம்" என்ற கவிதைகள் காணப் பெறுகிறது. "வலியோர் சிலர் எளியோர் தம்மை வதையே புரிகுவதா" என்று திராவக சொல்லெடுத்து இச்சமுதாய நிலையை சுட்டினார்.
புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்
புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.
ரதிதாசன் பெரியார், பாரதி என்று இருவேறு பெரிய ஆளுமைகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். முன்னவர் பெண் விடுதலை, விதவை திருமணம், சுயமரியாதை கருத்துக்களுக்கு வித்திட்டவர். பின்னவர் அவருக்கு தமிழ் பற்றை ஊட்டியவர்.
"பெண்ணுக்கு பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை"
"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீந்துவரல் முயற்கொம்பே”
என்று பெண்விடுதலையை பாடியவர். விதவையின் நிலையை இவ்வாறு உரைத்தார்.
கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரிற் பழுத்த பலா-மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்
வடிகின்ற வட்ட நிலா!
கவிஞர் பாடு பொருளின் உணர்வை வாங்கி கவி புனைவது என்பது பாரதிதாசனின் தனி திறன். கைம்மை பெண்டிர் படும் துயரை தன் துயராய் எண்ணும் உள்ளம், அன்னை மனம் வாய்த்தவருக்கே அது சாத்தியம்.
பொதுவுடைமை என்பது எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். ஆண்டான் - அடிமைச் சிந்தனை மாறவேண்டும். ஏழை - பணக்காரன் நிலை மாற்றம் பெறவேண்டும். ஏழை என்றும் பணக்காரன் என்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதை,
ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ
என்ற பாடலின் மூலம் ஒத்த நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகின்றார்.
பாரதிதாசன் காற்றினை சுவாசித்தவன் அல்ல, தமிழினை சுவாசித்தவன், தமிழ் இயக்கம் என்ற நூலில்
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு
தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு
என்றே உணர்ச்சி ததும்ப உரைக்கும் போது தமிழர் என்ற பெருமித உணர்வு நமக்குள்ளும் கொப்பளிக்கும்.
புரட்சி கவி என்னும் இலக்கியத்தில் சூரியனை இருள் அழியாக்க முடியதை போல, சேறு செந்தாமரை வாசத்தை மறைக்காதது போல தமிழ் வாழ்வாங்கு இவ்வையகத்துள் வாழும் என்று முழங்கினார்.
காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ?
தாய்மொழியின் வீழ்ச்சி என்பது இனவியல், வாழ்வியல், பொருளாதாரம், நிலவியல், பண்பாட்டியல் என்று அனைத்து வீழ்ச்சிகளுக்கும் முதல் படி என்பதை பாவேந்தர் நன்கு உணர்ந்திருந்தார். அந்த தெளிவை, அணையா தீயான தமிழ் உணர்வை தமிழ் சமூகத்திற்கும் கடத்தியவர் அவர்.
தமிழறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்!
அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்என் னாவி
அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ?
உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!
காற்செருப்பை பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம்
மேற்படுத்தும் எவற்றினுக்கும் பெறப்பட்ட தன மொழியை தமிழை தீயோர்
போற்றுதற்குரிய பொதுவினின்று நீக்கி வைத்தால் பொறுப்பதுண்டோ
என்ற பாவேந்தரின் வினாவிற்கு எந்த மொழியிலும் மறுப்பளிக்க இயலாது.
பாரதிதாசன் புதியதோர் உலகை தோற்றுவிக்க தோன்றிய போராளி. கவிதை தமிழில் இருந்த இருள் காட்டை அழித்த நிலா. குடும்ப விளக்கெனும் வெளிச்சத்தை ஏற்றி உறவுக்கு ஒளி கொடுத்தவர். மக்களுக்கு என்று எளிய நடையில் தமிழில் கவி சிற்பம் வடித்த "சொல்" வேந்தர். தமிழினத்தை பிடித்திருந்த சாதியெனும் பேயையும், மூட நம்பிக்கை என்ற பேதமையையும், மதம் என்ற மதிமயக்கத்தையும் உடைத்தெறியும் அருமருந்தாய் தோன்றியவர்.பெண்ணடிமை என்னும் பெரும் நஞ்சையும், கைம்மை பெண்டிர் படும் பெரும்துயரையும் பொசுக்கிய தீப்பொறி. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லையென்றாலும் அவர் எழுதிய அர்த்தம் தோய்ந்த கவிதைகளையும், புதினங்களையும் வாசித்து நற்றமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாய் இருக்க முடியும். பாரதிதாசனின் தமிழில் திளைப்போம், அவர் நினைவினை போற்றுவோம்.
முகநூலில் பாரதிதாசன் தமிழ் மன்ற பக்கத்தில் இணைத்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.