வெள்ளி, ஏப்ரல் 30, 2021

கதம்ப மாலை - 7

மண்டேலா 

ஒரே ஒரு ஓட்டு என்ன செய்யும்? சாதிய கட்டமைப்புகள் இன்னும் கிராமங்களில் எத்தனைஆழமாக இருக்கிறது. ஒரு தனி மனிதன் நல்ல மாற்றத்தை கொண்டு வர முயன்றால் அது முடியுமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக வந்திருக்கும் படம் தான் மண்டேலா.தனக்கு  பெயர் சூட்டப்படும் போதே இந்த பேரு உயர் ஜாதிக்காரனோட பெயரா என்று ஹீரோ உறுதிப்படுத்திக் கொள்ளும் காட்சி இன்றும் எத்தகைய ஜாதிய கட்டமைப்புகள் எத்தனை ஆழமாக உள்ளன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல காட்டுகிறது. சங்கிலி முருகன் ஊரில் உள்ள பெரிய மனுஷனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய இரண்டு மகன்கள் வெவ்வேறு ஜாதியை சார்ந்த அம்மாக்களுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் இருவரும் தேர்தலில் நிற்கிறார்கள். இருவரும் சம பலம் உடையவர்களாக இருக்கும் நேரத்தில் நமது ஹீரோ புதிதாக வாக்காளர் அட்டையை பெறுகிறார். அப்புறம் அவருடைய வோட்டிற்காக என்னென்ன நடந்தது? மண்டேலா யாருக்கு வோட்டு போட்டார். அதனால் அவருக்கு என்ன நடந்தது? அவர் ஆசைப்பட்ட மாதிரி அந்த ஊரில் அவரால் சலூன் திறக்க முடிந்ததா? அவருடைய கூட வரும் அவருடைய உதவியாளர்/நண்பன் என்ன ஆனான்? படத்தின் பலம் என்றால் அது சரியான ஆட்களை சரியான இடத்தில பொருத்தியது தான். அங்கங்கே லாஜிக் இடித்தாலும் சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சமும் போர் அடிக்காமல் சொல்லி இருக்கின்றனர். காமெடியன்கள் பெரும்பாலும் குணசித்ர வேடத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்கள். யோகி பாபுவும் தன்னுடைய குணசித்ர நடிப்பில் பின்னுகிறார்.தேன்மொழியாக நடித்த ஷீலாவும் ஜாடிக்கேத்த மூடி. பாந்தமாய் நடித்திருக்கிறார். நிற்க, கொஞ்சம்  பழைய படத்தை பற்றி இப்ப எழுதறீங்களே என்று கேட்போருக்கு. இன்னும் இரண்டு நாளில் சட்டமன்ற தேர்தல் ரிசல்ட். வாக்குப் பெட்டியை மாத்தாமல், EVM-இல் எந்த பிரச்சனையும் இல்லாமல் உண்மையாக தேர்தல் நடத்திருக்குமானால் ஆட்சி மாற்றத்தை எதிர் பார்க்க முடியும். இல்லை என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஆட்சியும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வெளியே முட்டாள்கள் போல நடித்து, உள்ளுக்குள் கொஞ்சமும் அசராமல் சொத்து சேர்த்து மக்களை சுரண்டும் ஆட்சியும் அரங்கேறும். தனி மனித வோட்டு எத்தனை முக்கியம் என்பதும், தனி மனித உரிமை எத்தனை முக்கியம், நாம் எதைப்  படிப்பது, எதை குறித்து பேசுவது, எது நம் மேல் திணிக்கப் படுகிறது என்ற புரிதலும்,இந்த நோய்க் காலத்தில் நமக்கு நமது முன்னோர்கள் வடிவமைத்த சுகாதார கட்டமைப்புகள் எத்தனை முக்கியம், அதை எவ்வாறு காப்பாற்றுவது என்பதையும் மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இன்று தமிழகத்தில்  250 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார் என்ற நிலையை தமிழகம் வரும் காலங்களில் இழந்தால் என்னவாகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 


அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் கொண்டு வந்ததன் மூலம் மருத்துவம் படிக்கவே வழி இல்லாமல் செய்தால் நாளைக்கு நமது மருத்துவத்திற்கு நாம் எங்கு செல்வது என்று யோசிக்க வேண்டும். மேல்தட்டு மாணவர்கள் மருத்துவம் படித்து தாய் நாட்டிற்கு சேவை செய்யப் போவது இல்லை . வெளிநாடுகளுக்கு சென்று அந்த ஊர் வளர்ச்சிக்கு என்று அவர்கள் உழைக்கப் போகிறார்கள். இன்று நாம் அனுபவிப்பது யாரோ ஒருவர் நட்டுச் சென்ற மரத்தின் நிழல். நமக்கும் புதிய மரத்தை நட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே மக்கள் மண்டேலா படத்தை பார்த்து நாலு கருத்து மட்டும் சொல்லிவிட்டு போகாமல் உண்மையிலேயே தங்கள் வோட்டின் பலத்தை அறிந்து அதை வீணடித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் முடிவை எதிர் நோக்குகிறேன். நம்பிக்கை, அது தானே வாழ்க்கை.

தொடரும் துரோகம் 

கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 உயிர்களை பலி கொடுத்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். இப்பொழுது கொரோனா தாக்கத்தின்  எதிரொலியாக அந்த நிறுவனத்தை ஆக்சிசன் தயாரிப்பிற்கு என்று மீண்டும் ஓரிரு மாதங்கள் திறந்திருக்கிறார்கள். திருச்சி BHEL நிறுவனத்தில் ஆக்சிசன் தயாரிப்பிற்கு என்று இருக்கும் மூன்று  ஆலைகளையும் பயன்படுத்தலாம் என்று திரு. எம்.பி.சிவா சொன்னது  கவனிக்கத்தக்கது.  தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு ஆலை இத்தனை நாட்கள் இயங்கவில்லை என்றால் அதனை பிரித்து எடுத்து வேண்டாததை விற்று, மற்றவற்றை தூக்கிப் போட்டு அந்த இடத்தை காலி செய்வது தானே முறை. ஆனால் அந்த இடத்தை காலி செய்யாமல் இருப்பது ஏதேனும் ஒரு காரணம் சொல்லி திறந்து கொள்ளலாம் என்பதாலா? இப்பொழுது சொல்லும் காரணம் கொரோனா. ஆனால் இந்த ஆலையின் செயற்பாடுகள் குறித்து மேற்பார்வை செய்யும் குழுவில் பொதுமக்கள் இடம் பிடிப்பதற்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்றால் என்ன தான் நடக்கிறது என்று தோன்றுகிறது. மக்கள் எல்லாம் இதை மறந்து விடுவார்கள் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்பதாகவே இருக்கிறது இவர்கள் செயல்பாடு. ஆட்சியாளர்கள் தனியார் முதலாளிகளுக்காக எப்படி எல்லாம் உழைக் கிறார்கள் என்று நினைத்தாலே புல்லரிக்கிறது.


கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம், எந்த இயற்கை பேரிடர் வந்தாலும் செயல்படாத அரசாங்கம், தன் நாட்டு மக்களையே சுட்டுக் கொன்று அந்நிய முதலாளிகளின் காலில் வீழ்ந்து கிடைக்கும் அரசாங்கம், சாதி மத இனத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் அரசாங்கம், மக்களை நசுக்கி ஜனநாயக குரல்வளையை நசுக்கும் அரசாங்கம், மேலும் மக்களுக்கு எதிரான பல அநீதியான திட்டங்களை செயல்படுத்த எடுத்திருக்கும் இன்னொரு முயற்சியாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது.  இப்படிப்பட்ட நிலையில் ஒரு நினைவூட்டலுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த சொந்தகளுக்காக எழுதிய கவிதையை பதிவிடுகிறேன். இந்த கவிதையை படித்து மக்கள் தங்கள் ஞாபகங்களை புதிப்பித்துக் கொள்ளுதல் இன்றைய காலத்திற்கு தேவையான ஒன்று என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. 

ஆலையை மூடுஅமிலக் காற்றை சற்றே அணை

போபால் போல வேண்டாம்மீண்டும் ஒரு  வரலாற்று பிழை 

இருபது ஆண்டாய் வேண்டிக்கேட்டோம் நிலம்நீர்மாசற்ற வளி

ஆலகால நஞ்சை கக்கும் விட அரவிற்க்கோர் முற்றுப்புள்ளி    

 

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு

தூத்துக்குடி மக்களுக்கு இஃதொரு இடுகாடு

பூக்களின் பேரணியை ஒடுக்க - கொணர்ந்தனர்

குலவேரறுக்கும் கோடரி ஒன்று 

 

முதலாளிவர்க்கம் மகிழ தேர்தல் நிதி எனும் கடன்சுமை தீர்க்க

அஞ்சா பாதகம் செய்தனர் ஆட்சியை தக்க வைக்க 

துப்பாக்கியால் சுட்டு தாக்கு,  மரண பயம் உண்டாக்கு

லத்தியை சுழற்றி தாக்குபிஞ்ஜென்றாலும் பொடிப்பொடி யாக்கு  

 

ஆட்சியாளர் ஏவல் செய்ய காக்கிச்சட்டை போட்ட படை  

நம் நண்பனல்ல துரோகி என்றே இதயமின்றி செய்த கொலை  

காவலன் அல்ல காலன் என்றே ஊர்திதனின் மேலமர்ந்து

கொத்துக் கொத்தாய்  சுட்டுக்குவித்தனர் காக்கும் கடமைதனை மறந்து

 

பேச்சிலே சிறந்த மங்கை வெனிஸ்டா என்றொரு நங்கை

வக்கீலாகி நீதி வெல்ல காலனிடம் காலம் கேட்டாள்

சொகுசான வாழ்க்கை அல்ல வாழ்வாதாரம் தானே கேட்டாள்

கொடும் நஞ்சை அவள்வாயிலூட்ட விண்ணுலகம் பறந்தே போனாள்

 

புதுமண மாலை கூட காய்ந்து சருகாகவில்லை

மணிராஜ் என்றொரு மன்னன் வீடுபோய் சேரவில்லை

நல்லதொரு குலவிளக்கு வினோத் என்னும் மணி விளக்கு

ராணுவத்தில் ஒளிர்ந்திருப்பான் அவன்உயிர் குடித்தது ஏன் விளக்கு   

 

திருப்பூர் குமரன் அல்ல இவர் தூத்துக்குடி செல்வசேகர்

தடியடிக்கு உயிரை ஈந்தார் தமிழ் மகனே உன்போல் யாவர் 

வாவூசி பிறந்த மண்ணில் வீரத்திற்கு ஏது எல்லை

தமிழரசரின் மரணம் கேட்டு கலங்காத தமிழ்நெஞ்சம் இல்லை  

 

காசநோய் கான்சர் வேண்டாம் கரியமில காற்றும் வேண்டாம் 

கருணை மட்டும் வேண்டும் என்ற காளியப்பன் ஏன் இறந்தான்    

நடிக்காதே எழுந்திரு என்றே கேலி செய்த கயவர் கூட்டம்

சிறைபுகும் நாளும் பக்கம் வெல்லட்டும் நீதி என்றும்   

 

இரு சிறார்களின் ஆசைதந்தை கிளாட்ஸ்டன் இன்று இல்லை

தன் சந்ததிக்கு போராடியவன் சமூக விரோதி இல்லை 

தப்பான முகவரி என்றால் தபால் கூட வருவதில்லை

கண்மூடி தோட்டா எய்தவன் தமிழனில்லை மனிதனில்லை 

 

கார்த்திஅந்தோணி ஜான்ஸி மற்றும் ஜெயராமன்

இவர்தம் உயிர் குடித்த பேர்களுக்கு காலமே தான் காலன்

கையூட்டு பணத்திற்கென்று கொலை செய்ய துணிந்திட்டீர் 

தன் இனத்தை கொன்ற பாவம் எங்கு தொலைப்பீர் சிந்திப்பீர் 

 

மக்களுக்காவே நான் என்றே நீலிக் கண்ணீர் வடித்தீரே 

உரிமைக்குரல் கொடுத்தோர் துடிதுடிக்க வேடிக்கை பார்த்தீரே   

இளம்பிஞ்சை சிதைக்கும் சிலர் பயமின்றி தான் வாழ  

உனக்காகவும் குரல் கொடுத்த மாமனிதர் வீணே சாக      

 

ஆட்சியும் அதிகாரமும் இம்மக்கள் இட்ட பிச்சை

சிறிதாவது உணவில் சேர்ப்பீர் தூத்துக்குடி தந்த உப்பை 

காசுகளை எறிந்து எந்தன் உயிரினை விலை பேசாதே

தமிழர் கர்ணப் பரம்பரை இதை எப்போதும்நீ மறவாதே 

 

இணையத்தை துண்டித்தாய்மின்சாரத்தை சிறைபிடித்தாய்

பத்திரிக்கை,முகநூல்ட்விட்டர் எல்லாம் பாங்கை சாற்றினாய் 

கொதிக்கின்ற எரிமலையை குளீர்நீர் என்றே எண்ணினாய்    

உலகெங்கும் ஒலிக்கும் தமிழ்குரல் எங்கனம் நீ மாற்றுவாய் 

 

அரசே,ஆலையை இடி

அயல்நாட்டு முதலாளியை சிறைபிடி

மக்களின் நண்பன் என்று பசப்பும் நரிகளை சுடு

முடியாவிட்டால் வெஞ்சிறைதனில் இடு 

பகைமை கொண்டு வஞ்சம் தீர்த்த

அதிகார வர்க்கம் நீக்கு       

கறைபடிந்த வரலாற்றை கொஞ்சம்

இப்போதேனும் திருத்தி மாற்று 

இயற்கையை காத்து வாழ்ந்தால் 

மானுடம் பிழைத்துப் போகும்

இப்பூமிக்கு மாற்று இல்லை

உணர்ந்தால் உன்வம்சம் வாழும்  

 

இன்னொரு இரங்கற்பா இயற்ற என்னிடம் வார்த்தையில்லை

இதயத்தில் பட்ட  ரணம் மாறவில்லை ஆறவில்லை

இறந்தவர்கள் எவரோ இல்லை எமதன்பு  தங்கை தனயன் 

இவர் போல யாருமில்லை தலைவணங்கும் உலகத் தமிழன் 

வாழ்க தமிழ் வெல்க தமிழர் !!!

மாறா - இன்னிசை விழா 




சமீபத்தில் வந்த படங்களில், பாடல்களில் நிறைய கவர்ந்தது என்றால் அது மாறாவைத் தான் சொல்வேன். ஜிப்ரான் இசையில் தாமரை எழுத்துக்களில் மனதில் ஒரு சாரல் மழை போல வந்து அமர்ந்து உள்ளது என்று சொன்னால் அது மிகை இல்லை. என்ன அழகான பாடல் வரிகள். படத்தின் தன்மையுடன் பொருந்திப் போகும் வரிகள், அழகான ஒரு அன்புணர்ச்சியை, தவிப்பை, மென் காதலை,சோகத்தை என்று நமது உணர்வுகளுக்கு ஏற்ப அந்த பாடல் வரிகள் நம்மை தாலாட்டுகிறது.

"வானத்திற்கும் மேகத்திற்கும் ஊடே உள்ள வீடொன்றில் 

யாரும் வந்து ஆடிப் போகும் ஊஞ்சல் வைத்த என் மூன்றில்

போகும் போக்கில் போர்வை போர்த்தும் பூந்தென்றல்"

என்ற வரிகள் ஒரு அறை உனது என்ற பாடலில் வருகிறது. ஒரு வீடு இதே போன்று எங்கோ நமக்காக காத்துக் கொண்டிருக்கும் என்றால் அது எத்தனை சுகமானது.

"ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கடந்திடுமா?

ஒரு முகம் எனது மறு முகம் உனது இருவரும் நிலவின் இரு புறமா? 

ஒரு இமை உனது இரு இமை எனது இடையினில் கனவு நிகழ்ந்திடுமா?"

என்று கவிதை துள்ளும் பாடல் இது. கேட்டுப் பார்த்தால் மிகவும் பிடித்து போகும் ஒரு பாடல் இது.

தீராநதி பாடல் ஒரு சுகமான சுமையை மனதில் இறக்கி விட்டுப் போகிறது. பாருவும் மாறாவும் இணைவார்களா, வெள்ளையனும் மீனாட்சியும் இணைவார்களா என்பதெல்லாம் இந்த பாடலை கேட்கும் போது நமக்கு எழும் கேள்வி. அதற்கு  

"நானும் நீயும் தான் இணைக்கிற பாலம் 

தேடும் மீனாய் நீரில் நானிருந்தேன் 

தொலைவில் நீயிருந்தாய்" 

என்று போகிற போக்கில் கதையின் சாராம்சத்தை சொல்லி விட்டுப்  போகிறது இந்தப் பாடல். 

யார் அழைப்பது என்று தொடங்கும் பாடலும் அற்புதம்.

"போ என அதைத் தான் துரத்திட வாய் மறுக்குது 

குரலின் விரலை பிடித்து தொடர தான் துடிக்கிது

உடலின் நரம்புகள் ஊஞ்சல் கயிறு ஆகும் ஆராரோ  

உயிரை பரவசமாக்கி இசைக்கும் ஆரிரோ ராரோ" 


"சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் 

போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா 

பாதி வரை கேட்கும் கதை முடியாதெனில் 

மீதி கதை கேட்கும் தேடாமல் யார் சொல்லுவார் 

அலைவார் அவரெல்லாம் தொலைவார் வசனம் தவறு 

அலைவார் அவர்தானே அடைவார்" 

அப்படின்னு வாழ்க்கை என்பது ஒரு அருமையான பரிசு. அதை திறக்க திறக்க பல அற்புதங்களை நமக்கு காட்டிக் கொண்டே இருக்கும் என்று சொல்லும் வரிகள் தான் எத்தனை அழகு.

'ஓ அழகே' என்ற பாடலும் அத்தனை அருமை. பாடல் வரிகளில் எதை சொல்வது எதை விடுப்பது என்று ஒரு இனிமையான திண்டாட்டத்தை தரும் பாடல் வரிகள். 

 "தூர அலைகள் காலை நனைக்கும்

மாய நதி இது

மேகம் தணிந்து வாசல் தெளிக்கும்

தூய மழை இது

விழாக்கள் தோறும் ஓரமாக

நின்று பார்க்க நேரும்

நிலாக்கள் இன்றி வானம் கூட

மெளனமாக மாறும்

ஒரு வீடு பரிவோடு

வரவேற்க நீளும் போது

அதனோடு உரையாடு

அது போல் ஒரு வரம் ஏது"

'காத்திருந்தேன்' பாடல் காதலிப்பவர்களுக்கும், வாழ்க்கையை காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்குமான ஒரு அழகான கவிதை பூச்செண்டு.

"முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்…
பல கதவு மோதும் காகிதம் ஆனேனே…

அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்…
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே…

பேசாத கதை நூறு…
பேசும் நிலை வரும் போது…
வார்த்தை என எதுவும் வராது…
வராது வராது மௌனம் ஆனேனே…

காலம் உறைந்தே போகும்…
காற்று அழுதே தீரும்…"

 இசை அழகா, பாடல் அழகா, நடித்த நடிகர்கள் அழகா, படமாக்கிய விதம் அழகா. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அழகான இயல்பான படத்தை திரும்ப திரும்ப பார்த்தேன்னு சொன்னா அது மாறா தான். மாறா படத்துல இருக்குற நாம் கவனிக்காத விஷயங்களுக்கு ஒரு வீடியோ போட்டுருக்காங்கன்னா பார்த்துக்கோங்க. இதுல வீடியோல சொல்றத விட இந்த வீடியோல இருக்கற கமெண்ட்ல சொல்ற விஷயங்கள் ரொம்ப நிறைய.


கண்டிப்பாக படத்தை பார்த்துட்டு அப்பறம் வீடியோவை பார்த்துவிட்டு மீண்டும் படத்தை பாருங்க. அட அப்படின்னு நிச்சயமா வாய் விட்டு சொல்ற நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. அறிமுக இயக்குனர் திலீப் குமாருக்கு பாராட்டுக்கள். சிறப்பான திரைப்படம். மாறா பார்த்திட்டு சார்லி (மலையாளம்) பார்த்திங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா சார்லி பிடிக்காம போகலாம். மாறா பல விஷயங்களில் அசத்தல். சார்லியை விட ஏ-ஒன்.

கொரோனா - தொடரும் துயரம் 

மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு இடத்தில்  இருக்கிறார்கள் என்பதை தவிர வேறு ஏதும் சொல்ல இயலவில்லை. அனாவசியமாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். அரசாங்கம், ஆஸ்பத்திரி என்று எதையும் நம்பி இருக்க வேண்டாம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன" என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது மக்களாகிய நமக்குத் தான் என்ற புரிதல் வேண்டும். வசதி இருப்பவர்கள், முடிந்தவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். இல்லாதவர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மிக அவசியம்.சமூக வலைத்தளங்களில் இரண்டு பெற்றோரையும் இழந்து வாடி நிற்கும் குழந்தைகள் பற்றி படிக்கும் போது மனம் பதறுகிறது. நிறைய இடங்களில் இடைவிடாமல் எரியும் மயானங்களின் நெருப்பை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உயிர் வளிக்காகவும், ஐசியூ விற்காகவும், மருந்திற்கும் நிற்கும் பெரிய கியூவைப் பார்த்தால் இதெல்லாம் எப்போ சரியாகும் என்று ஆயாசமாக இருக்கிறது. இந்த சில வாரங்களில் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், திரு.கே.வி.ஆனந்த், திரு தாமிரா அவர்களின் இழப்பும் மிகவும் துயரத்தை தருகிறது.

இந்த நோய்த் தொற்றை நம்மால் எதிர் கொள்ள முடியும். நேர்மறை விஷயங்களில் மனதை செலுத்தி நாம் அச்சம் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம். எனவே இந்த நேரத்தில் நல்ல உணவு, நல்ல சுத்தமான சூழல், பிறரை விட்டு விலகி இருத்தல் ஆகியவற்றை கடைபிடித்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.  

கொசுறு 

சமீபத்தில் (மீண்டும்) ரசித்த இரு பாடல்கள்:





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக