வெள்ளி, ஜனவரி 19, 2024

தங்கத் தமிழன்


தனது 100-வது படத்தின் பெயரை உச்சரிக்கவே பல ஹீரோக்கள் யோசிப்பார்கள். ஏனெனில் அந்தப் படம் அப்படிப்பட்ட பயங்கரமானத் தோல்விப் படமாக அமைவது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் தலையெழுத்தாக இருந்தது. 100-வது படம் வெற்றிப் படமாகவும் அமைந்து, அந்தப் படத்தின் பெயர், அடைமொழியாக நிஜப் பெயருடன் இணைந்து ஒருவரின் அடையாளமாக மாறும் அதிசயம் எல்லாம் ஒரு சிலருக்குத் தான் வாய்க்கும். அப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்தியவர் நடிகர் விஜயகாந்த். 'கேப்டன்' என்ற தனிப்பெரும் அடையாளத்திற்குச் சொந்தக்காரர். "சாப்பிட்டீங்களா" என்பதைக் கேள்வியோடு மட்டும் நிறுத்தி விடாமல், இல்லை என்று பதில் வராத வண்ணம் தன்னை வந்து சந்திக்கும் அனைவருக்கும் உணவு வழங்கியவர். இப்போது விஜயகாந்த் பற்றி பல பேட்டிகளில் பல நடிகர்கள், பாடலாசிரியர்கள், டைரக்டர்கள் தாங்கள் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் அலுவலகத்திற்கு சென்றால் கண்டிப்பாக உணவு கிடைக்கும் என்று கூறுவதைக் கேட்டு வருகிறோம். 

தனது ரசிகர் மன்றம் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் இலவசத் திருமண உதவி, விஜயகாந்த் மருத்துவமனை வாயிலாக மருத்துவ உதவி, மகளிருக்கான உதவி எனப் பல உதவிகளைச் செய்துள்ளார். உதவி என்று யார் கேட்டாலும் "நான் இப்போது அதிக வேலைப்பளுவில் இருக்கிறேன், அப்பறம் பார்க்கலாம்" என்று ஒருபோதும் சொன்னதில்லை என்று அவரைப் பற்றி கமலஹாசன் சமீபத்தில் சொல்லி இருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் நான் என்னுடைய கடமையைத் தான் செய்தேன் இதில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவு என்ன இருக்கிறது என்று விஜயகாந்த் எப்போதும் இதைப் பெரியதாக எண்ணியதில்லை.

தலைமை பண்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லில் காட்டாமல் செயலில் காட்டி விட்டுச் சென்றுள்ளார் கேப்டன் விஜயகாந்த். பிரச்சனைகளை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லாமல் இன்றே அதைத் தீர்ப்பது என்ற முனைப்பு அவருடைய தனிப்பெருங் குணங்களில் ஒன்று. நடிகர் சங்கத் தலைவராக இருந்த போதும், அந்தப் பொறுப்பில் இல்லாத போதும், யாராவது அழைத்து, எனக்கு இந்தப் பிரச்சனை என்று சொன்னால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் ஒரு சுமூகமான முடிவினை எட்டாமல் ஓய மாட்டார் கேப்டன். "என்னுடைய மகள் மருத்துவராக இன்று இருப்பதற்கு விஜயகாந்த் தான் காரணம், அவர் மருத்துவர் ஆக முயற்சித்து தோல்வி அடைந்ததை தெரிந்து கொண்ட விஜயகாந்த் தானாகவே ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பேசி அவர் அந்த மருத்துவக் கல்லூரியில் சேர ஏற்பாடு செய்தார்" என்று இயக்குனர் கஸ்தூரிராஜா சமீபத்தில் அவரைப் பற்றிய இரங்கல் உரையில் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

ஒரு பொறுப்பை எடுத்து விட்டால் அதை செம்மையாக செய்து முடிப்பது இன்றியமையாதது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடித்து சாயங்காலம் நடிகர் சங்கத்திற்கு வந்து ஒரு தலைவர் என்றால் அனைவரையும் சந்திக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

எளிமை என்பதை வார்த்தையாக இல்லாமல் நிஜமாகவே அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். எந்தவொரு ஈகோவும் பார்க்காமல் பொது விஷயத்திற்காக யாரையும் எந்த நேரத்திலும் சந்தித்து பேசுவது, நான் பெரிய நடிகர், என்னைத்தான் எல்லாரும் வந்து பார்க்க வேண்டும் என்று எண்ணாமல் ஒருவர் உச்ச நடிகரோ, சாதாரண மனிதரோ எப்படியானவராக இருந்தாலும் ஈகோ இல்லாமல் அனைவரையும் சென்று சந்தித்தது அவருடைய சிறந்த குணத்தில் ஒன்று. அவருடைய 18 படங்களை இயக்கிய திரு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் "விஜயகாந்த் அவர்கள் உச்ச நடிகராக வளர்ந்த பின்னும் நான் சென்று அவரைப் பார்த்ததே இல்லை. நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு அவரே தான் என்னை வந்து பார்ப்பார்" என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பண்பு திரைத்துறையில் மிகவும் அரிதான ஒன்று.

கடைசி வரை தமிழ்ப் படங்கள் அல்லாமல் வேறு எந்த மொழிப் படத்திலும் எந்த காரணத்திற்காகவும் நடித்ததே இல்லை. கொள்கை என்பதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கொள்கைப்பிடிப்புடன் இருந்ததெல்லாம் அதிசயமே.

திரையின் முன் மட்டுமே நடித்தவர். நிஜத்தில் நடிக்காமல் வெள்ளந்தியான மனிதராகவே வாழ்ந்தார். பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய எழுதியதையோ அல்லது சக கலைஞர்கள் அவரைப் பற்றி தேர்தல் நேரத்தில் பேசியதையோ எந்த நேரத்திலும் விமர்சித்ததும் இல்லை, தன்னிலை விளக்கம் அளித்ததும் இல்லை. "காந்த்" என்று பெயர் வைத்துக்கொண்டால் இவர் பெரிய நடிகரா என்று இவரை ஒதுக்கிய நடிகைகளை எல்லாம் தான் வளர்ந்து பெரிய நடிகரான பிறகு ஒதுக்காமல் அவர்களுடனும் இணைந்து நடித்தார்.

அவருடைய தலைமைப் பண்பிலேயே மிகவும் உயரியது அவருடைய மனத்திண்மை தான். கலைஞர், ஜெயலலிதா என்று இரு வேறு ஆளுமைகள் இருந்த போதும் துணிந்து அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தது எல்லாம் அவருடைய மனவுறுதிக்கு சிறந்த எடுத்துக்காட்டன்றி வேறென்ன. நிஜ வாழ்விலும் களத்தில் இறங்கி அவர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பாங்கு பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவர்களே சொல்லியிருக்கிறார். எந்த ஊராக இருந்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் சக நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பும் துணிவு கொண்ட நடிகர் அவர் ஒருவரே. திமுக, அதிமுக என்று இரண்டு கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்யுமாயின் என்னுடைய கட்சியை கலைத்துவிடத் தயார் என்று பகிரங்கமாக சொன்னவர். உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட ஒருவருக்கே அந்த எண்ணம் வரும்.

நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்க நடிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மலேஷியாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தாமல், கேப்டன் விஜயகாந்தே ஒரு திரைப்படத்தில் நடித்து அந்தப் பணத்தை கொண்டு கடனை அடைத்திருக்க முடியாதா என்ன. ஆனால் நடிகர்கள் அனைவரையும் இந்தப் பணியில் இணைந்து அவர்கள் அனைவரிடமும் நடிகர் சங்கம் என்ற குழு மனப்பான்மையை வளர்த்த பெருமை கேப்டன் அவர்களையே சாரும்.

150 படங்கள் வரை நடித்திருக்கிறார். முழு சம்பளம் வாங்கிய படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவர் வீட்டில் தயாரிப்பாளர்கள் அளித்தும், இன்னும் வங்கியில் போடப்படாமல் வைத்திருக்கும் காசோலைகள் பலவுண்டு என்று திரைத்துறையில் பலர் தெரிவித்து இருக்கிறார்கள். அவர் தூக்கி விட்ட நடிகர்கள் பலருண்டு. யாரையும் போட்டியாக எண்ணாமல் அனைவரும் வரட்டும் என்று இன்று முன்னணியில் உள்ள பல நடிகர்களுக்கு உதவிய நல்ல மனிதர். ஐம்பதுக்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களை இயக்குனராக்கி அழகு பார்த்தது, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு படவாய்ப்பு அளித்தது, தன்னுடன் இருந்த அனைவரும் வாழ வேண்டும் என்று தன்னைச் சுற்றி இருந்த பலரையும் தயாரிப்பாளர்களாக்கி அழகு பார்த்தவர். வடிவுக்கரசி அவர்கள் "அன்னை என் தெய்வம்" என்ற திரைப்படத்தை தயாரித்த போது யாரைக் கதாநாயகனாகப்  போடலாம் என்று விஜயகாந்த் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, "இப்போது நடிகர் மோகன் அவர்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே அவரைப் போடுங்கள்" என்று பரிந்துரை செய்தார். நான் பெரிய ஹீரோ என்னை போடுங்கள் என்றோ, என்னிடமே வந்து யாரை ஹீரோவாக போடலாம் என்று கேட்கிறீர்களே என்றெல்லாம் அவர் கேட்கவே இல்லை. எத்தனை பரந்த மனம் கொண்டவர் என்பதற்காக இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். 



மதுரையில் இருந்து வந்து மிகவும் கடினமாக உழைத்து பல உயரங்களைத் தொட்டவர். எம்.ஜி.ஆர் அவர்களின் தயாள குணத்தைக் கண்டு, வாழ்ந்தால்  இப்படிப்பட்ட கொடையுள்ளத்துடன் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டவர். ஒரு உயரிய சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டு அதற்கு நம்மை ஒப்புக் கொடுத்தால் அந்த சிந்தாந்தமே நம்மை உயர்வான நிலைக்கு இட்டுச் சென்று விடும் என்பதை விஜயகாந்த் அவருடைய வாழ்க்கையும் , அவருடைய இறப்புக்கு கூடிய கூட்டமே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. "கருப்பு எம்.ஜி.ஆர்" என்ற பட்டப்பெயருக்கு முழு தகுதி பெற்றவர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற குறள் காட்டும் நெறியில் நின்று, வள்ளல் என்று மக்கள் போற்றும் ஒரு மாமனிதராக வாழ்ந்தவர். இன்றைய நவீன காலத்தில் இப்படிப்பட்ட மனிதரா என்று சொல்லும் அளவிற்கு அவருடைய சொல்லும் செயலும் என்றும் மாறுபடாமல் ஒன்றாகவே இருந்தது. "தப்பு பண்ணா மன்னிக்கணும், அது தான் பண்பு" என்று தன்னை விட்டுப் போன தன் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட அவர் என்றும் குத்திக் காட்டியதில்லை.  இதற்கும் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களையும், தன்னுடன் இருபத்தைந்து, முப்பது வருடங்களளாக பயணித்தவர்களையும் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக அழகு பார்த்தவர். தான் வளர்த்தவர்கள் தன்னை உதறித் தள்ளி செல்கிறார்கள் என்ற கோபம் கூட இல்லாதவர். சில நேரங்களில் அவருடைய நேர்மையான கோபத்தை கூட அன்றைய காலத்தில் பத்திரிக்கைகள் எப்படி சித்தரித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அதற்கு பிரயாசித்தமாகத் தான் இன்று சினிமாவில் ஏதோ ஒரு பணியில் இருப்பவரைக் கூட "விஜயகாந்த் எப்படிப்பட்ட நல்லவர் என்று சொல்லுங்களேன்" என்று   பத்திரிக்கைகளும் ,ஊடகங்களும் வலிந்து பேட்டி கண்டு ஒளிபரப்பி வருகின்றன. விஜயகாந்த் ஆட்சிக்கு வந்திருந்தால் இங்கே எல்லாமும் சரியாக நடந்திருக்கும் என்ற கோணமும் உண்டு.  ஆனால் வாழ்நாள் முழுவதும் அவரைச் சுற்றி இருந்த பலர் நம்மில் சிலர் தானே. ஒரு சின்ன உயர்விற்கே அகங்காரத்துடனும், சக மனிதனை மதிக்காத தன்மையுடனும், புகழ், பணம், அதிகார போதையில் அடுத்தவரை இம்சிக்கும் மனமும் கொண்ட மனிதர்கள் இருக்கும் வரை விஜயகாந்த் போன்ற நல்ல மனிதன் தலைவனாகி இருந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து மாறுவதற்கு வழியில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

ஆனால் விஜயகாந்த் உண்மையிலேயே எல்லா விதமான  அச்சங்களையும்  கடந்தவர். சினிமாவில் காதல் காட்சிகளை விடவும், குடும்பக் காட்சிகளை விடவும், சண்டைக் காட்சிகளை மிகவும் விரும்புபவர் என்பார்கள். தன்னை நாடி வந்த மக்களுக்கு நல்லது செய்து எதையும் திரும்ப எதிர்பார்க்காதவர். தன்னை சுற்றி இருந்தவர்கள் உயர்த்திப் பார்த்தவர். துரோகம் செய்தவர்களை, தன்னை விட்டு விலகியவர்களை ஒரு போதும் குறை கூறாதவர். தன்னை பழித்தவர்களை என்றுமே அவர் பெரியதாகக் கருதியதே இல்லை. இதற்கு தனி துணிவு  வேண்டும். அத்தகைய துணிவும், நல்ல மனமும் கொண்ட ஒரு மனிதன் இன்று நம்மிடையே இல்லை என்ற துயரமே நமக்குப் பெரிய தண்டனை தான். அத்தகைய துணிவும், நல்லெண்ணமும் இந்த மண்ணில் தழைக்க வேண்டும். விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதன் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று நமக்கு எழும் எண்ணமே அவருடைய செம்மாந்த வாழ்க்கைக்கு ஒரு சிறந்த சாட்சி.

போய் வாருங்கள் கேப்டன்!! வரலாறும், மண்ணும், இந்த மக்களும் என்றும்  உங்கள் பெயரை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக