செவ்வாய், ஜனவரி 14, 2025

பொங்கல் வாழ்த்துகள் - கவிதை



தைப் பிறந்தது புதுஇன்பம் மலர்ந்தது
தத்தையும் தாவுது தாமரை பூக்குது
அகிலும் மணக்குது கயல்கள் துள்ளுது
ஆவாரம் முகிழ்ந்தது பாரெல்லாம் உவக்குது

வடமொழி நீக்கி தூயத் தமிழணி செய்வோம்
வற்றாத சொல் நிதியமென உலகுக்குச் சொல்வோம்
கலை வளர்ப்போம் கொடுந்தளை தகர்ப்போம்
இல்லாமை போக்குவோம் போகியை போக்கியாய் நாட்டுவோம்

நெற்மணியும் நற்கரும்பும் விளைந்தே பசிதீர்க்க
நல்விளைச்சல் நல்கிய கதிரும் வான்நிறைக்க
தரணிவாழ உழைக்கும் உழவர் உளம்களிக்க
முற்றத்திலே பொங்கலிட்டு நன்றிசொல்வோம் உரக்க

ஆநிரைகள் மந்தைகளில் துள்ளி திரிந்திருக்கும்
அன்பில்நிறை அவையெனவே பொங்கலூட்டி உய்வோம்
பயிர்செழிக்க இன்னல்பல களைந்திட்ட மகளிர்
பாதம்பணிந்து காணும் பொங்கலன்று மிக்கு ஏற்றமுறுவீர்

அறம் பொருள் இன்பம்யாவும் ஈரடியில் புகட்டும்
அகிலம் போற்றும் வள்ளுவத்தை அனைவரிடமும் சேர்ப்போம்
வழுக்குமரம் ஏறுதழுவல் மாட்டுப் பந்தயப் போட்டி
உடலுக்கு உறுதி சேர்த்து தமிழுணர்வை வளர்த்தெடுக்கும்

இயற்கையோடு மனிதவாழ்வை பிணைக்கும் உயர்பண்பு
இல்லாரென்றும் கொண்டாரென்றும் பேதமற்ற அன்புணர்வு
சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சான்றோர் கண்டமரபு
சகம்போற்ற வாழட்டும் பீடுநிறை பெருவாழ்வு

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!! 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக