சென்ற வாரம் சூலை 4, 2025 அன்று பேரவையின் 38வது விழாவில் வாசித்த கவிதை.
இராலே மாநகரில் நற்றமிழர் கூடலிலே
தமிழ்த்தென்றல் கமழுமிந்த கவியரங்க மேடையிலே
சுடாத சூரியனை சினேகனை நடிவிருத்தி
எண்கோளாய் சுழல்கின்றோம் தமிழன்னையை தோளுயர்த்தி
முக்கூடல் சிப்பிக்குள் பிறந்திட்ட தமிழ்முத்து
விண்தோன்றா அமுதமென வேர்விட்ட நல்வித்து
யாதுமாகி நின்றாய் தமிழேவெனும் பொருண்மையிலே
கவிபாட விழைந்தே வணங்குகின்றேன் சபையினையே
நான்முகனின் நெஞ்சிலுறை நாயகியின்
கைகளிலே கன்னலெனநீ விளைந்தாயோ
குமரிக்கண்டத்திலே சங்கம் கண்டு
கற்றறிந்தோர் சிந்தையிலேநீ கிளைத்தாயோ
கத்தும்கடல் தோணியேகி மொழிகட்கு
தாயுமாகி சொற்களீந்து கரம்சிவந்தாயோ
கணியன் காதலினால் கசிந்துருகி கேளிரென
மொழிந்ததனால் மூப்பில்லா முகம்பெற்றாயோ
ஆதியிலே வந்ததெல்லாம் பாதியிலே
பொலிவிழந்து போனவிடம் யார் பகர்வாரோ
உன்மேனியிலே மேகலையாய் மாற்றமதை
பூட்டுகிறாய் பூக்களிடம் புதுமை கற்றாயோ
வடமொழியே வண்மொழியாம் வாய்பேச்சு
வீரரெல்லாம் அலர்கூறி வேலெறிந்தபின்னே
சிந்துவெளி விட்டதெல்லாம் சங்கத்தமிழ்
தொட்டதென வளம்காட்டி வாகை சூடினாயே
காலத்தால் கரைக்கவொண்ணா கருத்தான
பனுவல்பல பெற்றிங்கே பாரில் உயர்ந்தாயே
சர்ப்பமாக சிறப்பு ழகரம் முப்புள்ளியை
சிரசில்சூடி மலைமகளின் பதியை ஒத்தாயே
வல்லினமும் மெல்லினமும் கொடியிடைமேல்
இடையினமும் சமத்துவமாய் பெயரில் சுமந்தாயோ
பித்தா எனவழைத்து பரமனையும்
பலசொல்லி வைதாலும் வாழ்விக்கும் தாயோ
நெற்றிக் கண்ணைக் காட்டிடினும்
நற்றமிழே வேதமெனும் நக்கீரப்படை அடைந்தாயோ
யானே கள்வனென்ற கோமகனின்
கொற்றம்சாய்த்து அறத்திற்கு காப்புமானாயோ
செம்மொழிக்கு இலக்கணமாய் சுட்டுகின்ற
தகுதியாவும் தன்னகத்தே தாங்கி நின்றாயே
உன்னருமை உணராத உணர்விழந்த
பேர்களுக்கு பகற்கனவே பாரில்நிறை வாழ்வே
அன்பெனும் மாமருந்தே மறத்துக்கும்
மாற்றாகுமென வள்ளுவமாய் மண்ணில் மலர்ந்தாயே
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்
கூற்றாகுமென அரியணைக்கும் சிலம்பில் உரைத்தாயே
குறிஞ்சியிலே கூவும்குயில் ஓசையிலே
குடிபுகுந்து ஐம்பூதமுங்களின் ஐயை ஆனாயே
மருதத்திலே யாழிசையாய் முத்தமிழே
முன்பிறந்தாய் வையமாளும் வளைக்கரமும் நீயே
வான்மழையை வரவேற்ற வண்ணமயில்
வனப்பெல்லாம் வஞ்சியுந்தன் பேரெழில்முன் வீணோ
ஒருபொருட் பன்மொழியாய் பல்பொருள்
ஒருமொழியாய் மொழிவானில் விடிவெள்ளியும் நீயோ
வடவேங்கடம் தென்குமரி இடையினிலே
இளைக்காமல் இணையமேறி தடம் பதித்தாயே
அருஞ்சொல் களஞ்சியமே கன்றாத
மொழிவளத்தால் நடமாடும் நாமகள் ஆனாயே
யாப்புக் கட்டுடைத்து புதுக்கவிதை ஏர்பிடித்தே
எளியோர்க்கும் அருள்கின்ற தாயே
மாற்றத்தின் முகவரியே முன்தோன்றிய மாமணியே
மரணமில்லா பெருவாழ்வாய் மலர்ந்ததாயே
நிலையில்லா நிலவுலகில் நீள்புகழை
நாட்டிவிட்டு அமுதமாக அகத்தில் உறைந்தாயே
கொற்றவையே குலக்கொழுந்தே தெவிட்டாத
தீஞ்சுவையே யாதுமாகி எங்கும் நிறைந்தாயே