வியாழன், ஜனவரி 13, 2011

நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 1


நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஏன் தோன்றியது என்று  
தெரியவில்லை. Divinely Inspired என்பார்களே அது போல கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு எண்ணமாகவே திடீரென்று என் மனதில் எழுந்தது. சரி, வலைத்தளத்தில் நியூசிலாந்து பற்றி படித்து தான் பார்ப்போமே என்று எண்ணி அந்நாட்டை பற்றி படிக்க படிக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் என்ற எண்ணம் வலுத்தது.நிறைய தேடலுக்குபின் வலைதளத்தின் மூலமாகவே ஒரு பயண முகவரை அணுகி நாங்கள்  பார்க்க நினைத்த இடங்களின் பட்டியலை கொடுத்தேன். அழகான பயண விவர ஏடு விரைவாக மின்னஞ்சல் வழியாக வந்தது. பிறகென்ன, வானத்து தேவதைகள் ஒன்று கூடி 'ததாஸ்து' என்று சொன்ன 2008 ஆண்டு  நவம்பர்  மாதம் மூன்றாம் வாரத்தில் இனிமையாக தொடங்கியது நியூசிலாந்து பயணம். வட அமெரிக்காவில் இருந்து பயண முகவர் குறித்து தந்த பயண விவர ஏட்டின் படி லாஸ் ஏஞ்சல்ஸ், ஆக்லாந்து வழியாக பயணித்து க்ரைஸ்ட்சர்ச்  நகரை நானும் என் கணவரும் அடைந்தோம்.

நியூசிலாந்து பற்றிய ஒரு சிறிய அறிமுகம் - வடக்கு தீவு, தெற்கு தீவு ஆகிய இரண்டு பெரிய தீவு பகுதிகளையும் மற்றும் பல்வேறு சிறு தீவுகளையும் உள்ளடக்கி, பசிபிக் பெருங்கடலில் தென் மேற்கு கோளார்த்ததில் அமைந்துள்ளது. சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட நாடு. கண்ணை கவரும் அழகிய மலைகள், அம்மலை முகட்டில் வெள்ளியை உருக்கி வார்த்தது போன்ற உறைபனி படலம், அந்தப்பனி படலத்தில் இருந்து உருவாகி பிரவாகிக்கும் ஏரிகள் மற்றும் ஆறுகள், எங்கும் பச்சை பட்டாடையை விரித்தது போன்ற புல்வெளிகள், பால் போன்ற நீரை சுரக்கும் அருவிகள் என்று எங்கெங்கு காணினும் கொள்ளை அழகோ அழகு. மக்கள் தொகை தோரயமாக 43 லட்சம்.

க்ரைஸ்ட்சர்ச் விமான நிலையத்தை அடைந்ததுமே முதலில் எனக்கு தோன்றிய எண்ணம்  "ம்ம்ம்  விமான நிலையம் எவ்வளவு  சிறியதாக இருக்கிறது என்று".  அமெரிக்காவில் உள்ள பெரிய விமான நிலையங்களை பார்த்த பிறகு எந்த ஊர் சென்றாலும் இதே உணர்வு தான் வருகிறது. உதாரணமாக இந்தியாவில் எந்த ஹோட்டலிலாவது காபி/தேனீர் அருந்த சென்றால் முதலில் எனக்கு தோன்றுவது இந்த டபரா டம்ளர் எல்லாம் எவ்ளோ சின்னதா இருக்கு என்பது தான். விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும்,  எங்கள் ஹோட்டலை அடைந்து அங்கே பெட்டிகளை விட்டு விட்டு நாங்கள் முதலில் சென்ற இடம் க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் சதுக்கம்.


க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் வெளிப்புற தோற்றம்


க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் உட்புற தோற்றம்

நிலவில் மட்டும்தான் ஸ்டார்பக்ஸ்இல்லை என்று  தோன்றுகிறது. அந்தளவுக்கு எங்கு
சென்றாலும் ஸ்டார்பக்ஸை விட்டு அதிக தூரம் செல்ல முடியாது போலும். க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் சதுக்கமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இன்னொரு விஷயம் - நியூசிலாந்தில் உள்ள அளவிற்கு உணவகம் அதிகம் உள்ள நாடு இல்லை. அதாகப்பட்டது அங்கு உள்ள ஜனத்தொகைக்கும் உணவகத்துக்கும் உள்ள விகிதம் மிகவும் குறைவு.  இது எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று. எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கே மெக்சிகன், சைனீஸ், இந்தியன் என்று பல தரப்பட்ட நாடுகளின் உணவு வகைகளை சுவைத்து மகிழலாம். க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் சதுக்கம் அருகில் உள்ள தபால் நிலையம், மற்றும் கடைகள்,அருகிலுள்ள சிறிய பூங்கா ஆகியவற்றை சிறிது நேரம் பார்த்துவிட்டு மதிய உணவிற்காக ஹோட்டலுக்கு திரும்பினோம். திரும்பியதும் குளித்து விட்டு சிறிது நேரம் உறங்கலாம் என்று எண்ணி பெட்டிகளை திறந்து எனது பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் கணவர் "என்னுடைய பாஸ்போர்ட்டை காணவில்லை" என்றார். ரூம் மற்றும் அவரது பை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. உடனே காலையில் இருந்து சுற்றி பார்த்த ஒவ்வொரு இடமும் சென்று அங்கு யாராவது பாஸ்போர்ட்டை கண்டெடுத்தார்களா என்று விசாரித்தோம். எல்லா இடத்திலும் இல்லை என்ற பதில்.  பயமும் பதற்றமுமாக  கடைசியாக நாங்கள் சென்ற இடம் க்ரைஸ்ட்சர்ச் தபால் நிலையம்.  விசாரிப்பதற்காக தபால் நிலைய வரிசையில் காத்திருந்த போது என் கணவரிடம் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து என்ன என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என்றேன். அவரும் காலையில் விமானத்தில் இருந்து இறங்கியதில் இருந்து நடந்த ஒவ்வொன்றையும் சொல்லி கொண்டே வந்தார். குடியேற்றம் முடிந்ததும் பாஸ்போர்ட்டை இந்த பையில் வைத்தேன் என்று தன் சட்டை பையை காட்டியவர் ஏதோ நினைவு வந்தவராக உள்பக்கமாக இருந்த
பாதுகாப்பு  பையையும் சோதித்து உற்சாக துள்ளல் போட்டார். என்னவென்றால் கை மறதியாக மேற் சட்டையில் உள்ள பாதுகாப்பு பையில் பாஸ்போர்ட்டை வைத்துவிட்டு காணவில்லை காணவில்லை என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தானும் அவஸ்தைப்பட்டு என்னையும் அவஸ்தைக்கு உள்ளாக்கி இருக்கிறார். பிறகென்ன இன்றும் வீட்டில் எதாவது காணவில்லை என்று அவர் சொன்னால் பாஸ்போர்ட்டை கையில் வைத்து கொண்டே காணவில்லை என்று சொன்னவர் தானே நீங்கள் என்று கிண்டல் செய்வதுண்டு. எப்படியோ பாஸ்போர்ட்டை பத்திரமாக இருந்ததே என்று நிம்மதி பெருமுச்சி விட்டதோடு அல்லாமல், எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தை நினைத்துகொண்டே மறுபடியும் ஹோட்டலை அடைந்தோம்.


தாவர பூங்கா - ஒரு காட்சி
தாவர பூங்கா - மற்றொரு காட்சி

அன்று  மாலை க்ரைஸ்ட்சர்ச் தாவர பூங்கா மற்றும் அதனை ஒட்டயுள்ள கண்டர்பரி அருங்காட்சியகம் ஆகியவற்றை கண்டு களித்தோம். அக்காலத்தில் அண்டார்டிகாவுக்கு செல்லும் பயண குழுவினர் அனைவரும் நியூசிலாந்து வழியாகவே பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சென்று திரும்பிய குழுவினர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள், வாகனங்கள் ஆகியவை காட்சிக்காக வைக்க பட்டிருந்தது. நியூசிலாந்து பூர்வ பழங்குடியரான மோரி மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பாத்திரங்கள்,பச்சைக்கல் ஆபரணங்கள் ஆகியவையும் பார்வைக்காக வைக்கபட்டிருந்தது. அருமையான சேகரிப்பு. அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

அருங்காட்சியகத்தில் எடுத்த சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.



ஆதாம் போன்ற முதல் மனிதன் - டிக்கி என்பார்கள்


அருங்காட்சியகத்தில் இருந்து மேலும் சில காட்சிகள்




அன்றிரவு உணவு முடிந்து நாங்கள் தங்கும் ஹோட்டலுக்கு சென்று அடுத்த நாள் செல்லப்போகும் குயின்ஸ்டவுன் பயணத்துக்காக தயாரானோம். குயின்ஸ்டவுனை Adventure Capital  என்பார்கள். குயின்ஸ்டவுன் பயணம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? அது அடுத்த பாகத்தில்.

 பயணம் தொடரும்....

அடுத்த பாகம் கீழே

1 கருத்து:

  1. அற்புதமான கட்டுரை நியூசிலாந்து நகருக்கே சென்று வந்த ஒரு பிரமிப்பு. மனிதனாக பிறந்த ஒவ்வோருவரும் கண்டிப்பாக ஏதாவது ஒரு வெளி நாட்டிற்கு சென்று வரவேண்டும்.


    பதிலளிநீக்கு