சில்லென்று குளிர்ந்த காற்று வீசியவாறு அவ்வப்போது சிறு தூறலும் போடும் வானம். அதிகாலை நேரத்தில் குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. சில மணிநேரங்களே உறங்கியிருந்தாலும் செல்லும் இடம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் சீக்கிரமாக தயாராகி நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் கீழ் தளத்திற்கு வந்து புறப்பட தயாராக காத்திருந்தோம். ஜன்னல் மற்றும் மேல் கூரையில் கண்ணாடி பதித்து நவீன ரதம் போன்ற அழகான பேருந்து குறித்த நேரத்தில் வந்ததும் ஏறி அமர்ந்தோம்.வேறு சில தங்கும் விடுதிகளுக்கும் சென்று பயணிகளை ஏற்றி கொண்டு க்ரைஸ்ட்சர்ச்சில் இருந்து பேருந்து விரைவாக புறப்பட்டது.
|
ஆல்ப்ஸ் மலை தொடரின் அழகு தோற்றம் |
க்ரைஸ்ட்சர்ச்சில் இருந்து மவுண்ட் குக் வழியாக குயின்ஸ்டவுன் செல்வதாக எங்கள் பயண ஏட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஓட்டுனர் அழகாக கடந்து செல்லும் இடங்களை பற்றி விவரித்தவாறே வர நாங்களும் இயற்கை காட்சிகளை ரசித்தவாறே பயணித்தோம். தெற்கு ஆல்ப்ஸ் மலை தொடரின் அழகை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. எனவே ஒரு புகை படம் உங்கள் பார்வைக்கு.
பச்சை பட்டை விரித்தது போன்ற புற்கள் படர்ந்த அழகான மலை தொடரும், அம்மலையின் ஊடே பாய்ந்து மறையும் ஆறுகளும், கண்ணையும் கருத்தையும் கவரும் சிறு நகரங்களையும் தாண்டி பேருந்து சீராக பயணித்து டேகபோ என்ற ஏரியை அடைந்தது.
|
டேகபோ ஏரி |
|
|
|
பனி பாறைகள் உருகியதால் உண்டான நீரில் இருந்து உருவாகிய அழகிய ஏரி டேகபோ. லூபின்ஸ் என்று சொல்லப்படும் வண்ண மலர்கள் அந்த ஏரியின் கரையில் வளர்ந்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. பனி உருக்கத்தில் இருந்து உருவானதால் அந்த நீர் அழகான நீல நிறத்தில் பளபளத்தது. அந்த ஏரியின் கரையினில் தேவாலயம் ஒன்றும் அமைந்து இருக்கிறது.அந்த இடத்தை விட்டு பிரிய மனம் இல்லாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறினோம். A thing of beauty is a joy forever என்ற சொற்றொடருக்கு அர்த்தம் அளிக்கும் வகையில் இருந்தது அந்த ஏரியும் அதனை சுற்றி அமைந்திருந்த அழகிய பனி படர்ந்த மலைகளும். ஓட்டுனரும் எங்கள் மன ஓட்டத்தை அறிந்தவர் போல கவலை படாதீர்கள், மேலும் ஒரு அழகான ஏரியை நாம் சிறிது நேரத்தில் அடைவோம் என்றார். அவர் கூறியவாறே நாங்கள் அடுத்து அடைந்தது புககி என்ற ஏரி. டேகபோ போன்ற அழகிய அந்த ஏரியும் மனதுக்கு ரம்யமாக இருந்தது.
மலையும் மலையும் சார்ந்த இடங்களையும் குறிஞ்சி என்பர் பண்டை தமிழர். அந்த குறிஞ்சி நிலத்திற்கு முருகனை தெய்வமாக குறிப்பிடுவர். முருகு என்றால் அழகு என்று பொருள். குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வர். அதாவது மலை இருக்கும் இடங்கள் எல்லாம் அழகான இடங்கள் என்று நம் முன்னோர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார்கள் என்று தோன்றியது. மலைகளுக்கு முன்னால் நாம் நிற்கும் போது 'தான்' என்ற எண்ணம் தகர்ந்து இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கு முன் நாம் எம்மாத்திரம் என்ற உணர்வும் எழுகிறது. அதனாலயே தவம் செய்யவும் மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் செய்யவும் மலைகளையே தேர்ந்து எடுத்த நமது முன்னோர்களின் பேரறிவை எண்ணி வியந்தேன்.
புககி ஏரியில் இருந்து புறப்பட்ட பேருந்து மவுண்ட் குக்கை மதியம் அடைந்தது. மவுண்ட் குக்கில் உள்ள சர் எட்மண்டு ஹிலரி ஆல்பைன் மையத்தில் தூரத்தில் தெரிந்த குக் சிகரத்தை ரசித்தவாறே மதிய உணவு உண்டோம். சர் எட்மண்டு ஹிலரி மவுண்ட் குக்கில் பல முறை ஏறி பயிற்சி எடுத்த பின்பே எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறினாராம். எனவே அவர் நினைவாக சர் எட்மண்டு ஹிலரி ஆல்பைன் மையம் மவுண்ட் குக் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பலரும் குக் மலையில் ஏறி சாதனை புரிந்து வருகின்றனர். அங்கிருந்து கிளம்பி சுமாராக நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு குயின்ஸ்டவுனை அடைந்தோம்.
|
மவுண்ட் குக் |
|
மெக்கின்சி வடிநிலம் |
|
வாகடிப்பு ஏரி - குயின்ஸ்டவுன் |
குயின்ஸ்டவுன் என்று இங்கிலாந்து விக்டோரியா மகாராணியை பெருமைபடுத்தும் வகையில் பெயரிட்டு இருக்கலாம் என்ற கருத்து உண்டு. அது 100 சதவிகித உண்மை என்றே தோன்றியது. அவ்வாறு அரசிகள் வசிக்க தகுதி வாய்ந்த அழகிய நகரம். வாகடிப்பு ஏரியும், ரிமார்கப்ள்ஸ் என்றழைக்கப்படும் மலைகளும் சூழ்ந்த அந்த நகரம் கண்ணை மட்டும் அல்ல கருத்தையும் கவரும். இரண்டு நாள் தங்கிய உடனேயே பல நாட்கள் தங்க வேண்டும் என்ற என்ணத்தை உண்டாக்கியது.
அடுத்த நாள் குயின்ஸ்டவுனில் இருந்து ஒரு நாள் பயணமாக கிளம்பி பியோர்ட்லாந்து தேசிய பூங்காவில் உள்ள மில்போர்ட் சவுண்ட் என்ற இடத்திற்கு சென்றோம். மில்போர்ட் சவுண்ட்டை ருட்யார்ட் கிப்ளிங் உலகின் எட்டாவது அதிசயமாக குறிப்பிடுகிறார். குயின்ஸ்டவுனில் இருந்து கிளம்பி டிஅனு, ஹோமர் சுரங்க வழியாக பியோர்ட்லாந்து தேசிய பூங்காவை அடைந்தோம். அங்கிருந்து படகுகள் மூலம் மில்போர்ட் சவுண்ட்டை அடையலாம். கிளடோவ் என்ற ஆறு, சுமார் 16 கிலோ மீட்டர்கள், நேர் செங்குந்தான மலைகளின் இடையில் பாய்ந்த பின்பு டாஸ்மான் கடலில் கலக்கிறது. இந்த இடத்தில் உள்ள உயரமான சிகரத்தை மித்ரி சிகரம் என்று அழைகின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்த இந்த படகு பயணம் என்னால் மறக்க முடியாத ஒன்று. லேடி போவன் நீர்வீழ்ச்சி மற்றும் ஸ்டர்லிங் நீர்வீழ்ச்சியும் அந்த மலைகளின் ஊடாக வழிந்து டாஸ்மான் கடலில் கலக்கிறது. மழை பொழியும் போது திடீரென்று தோன்றி மறையும் சிறு சிறு நீர்வீழ்சிகளும் அந்த இடத்தை மண்ணில் தோன்றிய அதிசயமோ என்று எண்ணி வியக்க வைத்தது. நியூசிலாந்து பயணம் செல்லும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று மில்போர்ட் சவுண்ட்.
|
மிர்ரர் ஏரி - பியோர்ட்லாந்து தேசிய பூங்கா |
|
பியோர்ட்லாந்து தேசிய பூங்கா மற்றொரு தோற்றம் |
|
மித்ரி சிகரம் - மில்போர்ட் சவுண்ட் |
அழகான அந்த நாளை அசை போட்டபடியே மீண்டும் குயின்ஸ்டவுனை அடைந்தோம். அடுத்த நாள் "தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் எடுக்கப்பட்ட இடங்களை பார்க்க செல்வதாக திட்டம். இந்த பயணம் எப்படி இருந்தது என்று அறிய ஆவலாக உள்ளீர்கள் தானே? அது அடுத்த பாகத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக