ஞாயிறு, ஜனவரி 09, 2011

கழுத்தளவு காசு

குளிரை விரட்ட முடியாமல் மேகக் கூட்டத்தின்   இடையே மறைந்தும், சிற்சமயம் தெரிந்தும் போக்குக் காட்டியபடியே இருக்கும் சூரியன் ஒளிவீசும் ஒரு டிசம்பர் மாதத்து முற்பகல். தொலைக்காட்சியில் முத்து படத்தில் வரும் "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்த பாட்டில் வரும் "கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன். கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்ற வரிகள் மனதை ஏதோ செய்தது. சமீப காலமாக ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் வரும் 2G ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் அதனால் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஆகியன மனதில் நிழலாடியது.

இன்றும் வளர்ச்சியில் மூன்றாம் தர நாடுகளின் வரிசையில் உள்ள இந்தியா ஊழலில் மட்டும் அசுர வேகத்தில் முன்னேறி முதல் இடத்தை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் சொல்வார்களே "Mad Dash " என்று, அது போல இந்தியா என்னும் குதிரை இன்று ஊழலில் மூர்க்கத்தனமாக பாய்ச்சல் காட்டுகிறது.

சுதந்திரம் கிடைத்த 60 ஆண்டுகளில் சுதந்திரத்திற்காக போரிட்ட தியாகிகளின் தியாகத்தை கேலி கூத்தாக்கும் இம்மாதிரி ஊழல்கள் நாட்டின் சாபக்கேடு .ஊழல் நாட்டை உள்ளிருந்தே அரிக்கும் கரையான். ஊழல் அடுத்த தலைமுறை மீது நாம் தொடுக்கும் போர். ஊழல் வளரும் செடியின் வேரில் அமிலம் ஊற்றும் பாதகம். ஜேம்ஸ் பாண்ட் எப்படி licensed to kill - லோ அதுபோல நம் நாட்டு அரசியல்வாதிகள் licensed to loot என்பது வேதனையிலும் வேதனை.


பாரதியார் இருந்திருந்தால் "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவது உண்டோ " என்று பாடி கலங்கி இருப்பார். (அவரையும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பர்  என்பது வேறு விஷயம்.). இதில்  மாபெரும் வேடிக்கை என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரை பதவி விலக செய்யவே எதிர் கட்சிகள் தலையால் தண்ணீர்  குடிக்க வேண்டியிருந்தது. குற்றம் நிரூபிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குமோ என்று யோசிக்க யோசிக்க தலை சுற்றுகிறது.



1.76 லட்சம் கோடி. இது கழுத்தளவு காசு இல்லை. சிரசளவு  காசு!!!. சில  லட்சங்கள் உள்ளவர் என்றால் கார், ஒரு பிளாட், கொஞ்சம் நகை என்று ஓரளவு வசதியாக வாழ முடியும். சில கோடிகள் உள்ளவர்  என்றால் லட்சாதிபதியை விட பெரிய கார், பல பங்களாக்கள், இன்னும் நிறைய நகைகள் என்று இன்னும் ஆடம்பரமாக வாழலாம். இதை விட வேறு என்ன வாங்க முடியும் என்று இவர்கள் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிக்கின்றனர் என்பது புரியாத புதிர். 'நெல்மணி' என்பது money -யில் இருந்து வளர்வதில்லை என்று இந்த அரசியல்(வி)யாதிகளின் காதில் யாரேனும் சொன்னால் நல்லது. திருடனுக்கு கூட தொழில் தர்மம் உண்டு. அதாவது ஏழைகளின் வீட்டில் எவனும் திருட செல்வதில்லை. அரசியல்வாதிகள் அடிப்பதோ எப்போதும் ஏழைகளின் பணத்தை தான்.

அடுத்தவனை விட தனக்கு அதிக பணம்  இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்
தவறில்லை. அந்த பணத்தை எப்படி அடைவது என்பதில் தான் நல்லவனும் தீயவனும் வித்தியாசப்படுகிறான். நல்லவன், தீயவன் என்ற பிரிவில் மூன்றவதாக அரசியல்வாதி என்ற பிரிவையும் சேர்க்க வேண்டும். ஏன் என்றால் நல்லவன் தீயவனாகலாம். தீயவன் நல்லவனாகலாம். ஆனால் அரசியல்வாதி தீயவனாக கூட ஆக முடியாது. அந்தளவிற்கு பணத்தை மட்டுமே குறியாக கொண்டு மனிதத்தை  மறந்த கூட்டம். அரசியல் ஒரு சாக்கடை என்பது அனைவரும் அறிந்ததே. அது தூர்வார கூட முடியாத ஒரு கட்டத்தை எட்டிகொண்டிருகிறது என்பதுதான் நிதர்சனம்.

ஊழலைவிட வேதனை தருவது ஒன்று உண்டெனில் அது மக்களின் மனப்போக்கு தான். ராமன்  ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை ஜனநாயகத்திற்கு அடிக்கும் சாவுமணி. இவ்வளவு பெரிய ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் ஒன்று கூட இதுவரை நடக்கவில்லை. பொங்கலுக்கு 10 ரூபாய் இனாம் குறைந்தாலே வேலை நிறுத்தம் செய்யும் நமக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏன் ஒரு சிறிய உறுத்தலை கூட ஏற்படுத்தவில்லை?. 'எதை  கண்டும்  கலங்காத  மனம் வேண்டும்' என்று பராசக்தியிடம் வேண்டி பெற்றார்களோ நம் மக்கள் இல்லை, நடக்கும் அனைத்து விசாரணைகளும் அடுத்த பெரும் ஊழலை கண்டறியும் வரைதான்  என்ற விரக்தியோ தெரியவில்லை.


சரி, ஊழல்  நடக்காமல் எப்படி தடுப்பது, இதற்கு என்னதான் தீர்வு என்று யோசிக்கும் போது எனக்கு தோன்றும் சில தீர்வுகள்:

தப்பு நடப்பதற்கு அரசியல் வர்க்கம் மட்டும் காரணம் இல்லை. அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. 20000 முதல்  50000 ருபாய் வரை உள்ளது இன்றைய IAS அதிகாரிகளின் சம்பளம். மற்ற அரசு ஊழியர்களின் சம்பளமும் இதே அளவிலோ இல்லை இதற்கும் குறைவாகவோ இருக்கிறது.இன்றைய விலைவாசியில் வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே  சரியாக இருக்கும். தேவை இருப்பதே தவறு செய்ய காரணமாகிறது. முதல் இரு முறை தவறு செய்யும் போது இருக்கும் குற்ற உணர்வு மூன்றாவது முறையில் இருந்து காணமல் போய்விடும். எனவே தவறே ஏற்படாத வகையில், மாறி வரும் கால சூழலுக்கு ஏற்ப அதிகாரிகளின் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளை போல ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.தவறு செய்யும் அதிகாரிகள் குற்றம் நிரூபிக்கபட்டால் மீண்டும் சிபாரிசின் பேரில் அதே பதவிக்கு வராத வகையிலும், அந்த அதிகாரியின் ஆயுட்காலம் முழுவதும் எந்த அரசாங்க பதவியிலும் அமர இயலாத வகையிலும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை.ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டு சரியான ஆளுக்கு ஒட்டு போட வேண்டும். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்கு சமம். ஊழல் அரசியல்வாதியை தண்டித்த மாதிரியும் ஆயிற்று, நல்லவனை ஜெயிக்க வைத்த மாதிரியும் ஆயிற்று. நாளடைவில் பணம் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது என்ற நிலைமை உருவானால் ஊழல் குற்றங்கள் பெருமளவு குறையும். ஊழல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதியை 20 வருடங்களுக்கும், அந்த அரசியல்வாதி சார்ந்த கட்சியை 10 வருடங்களுக்கும் தடை செய்யும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கபட்டால் தான் குற்றவாளி என்ற நிலைப்பாடு நமக்கு இதுவரை உதவவில்லை என்பதால் இந்த புதிய நிலைப்பாடு. எனினும் பொய் குற்றச்சாட்டில் இருந்து அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டங்கள் அமைய வேண்டும்.

இதை விட முக்கியம் தனி மனித கட்டுப்பாடு. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. எனவே அடுத்த தலைமுறையை வளர்க்கும் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாய்மார்களுக்கும தந்தைமார்களுக்கும் பணத்தை எப்படி வேண்டுமானாலும் ஈட்டலாம் என்ற மனநிலை உள்ள சமுதாயத்தை வளர்க்காமல் நேர் வழியில் மட்டுமே ஈட்ட வேண்டும் என்ற மனநிலை உள்ள சமுதாயத்தை வளர்க்க வேண்டும்.

கனவு காணுங்கள் என்றார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது  கனவு கண்டால் மட்டுமே அடையகூடிய ஒன்று அல்ல. கனவு மெய்பட வேண்டும் என்று முனைப்புடன் இணைந்து செயலாற்றினால் மட்டுமே இது சாத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக