புதன், பிப்ரவரி 02, 2011

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவ்வாறு மனதை வாட்டமுற செய்த செய்தி ஒன்றை சமீபத்தில் CNN இணையதளத்தில் படித்தேன். ஆப்கானிஸ்தானில் பசியால் வாடும் பிஞ்சு குழந்தைகளுக்கு உணவு தர இயலாத தாய்மார்கள் அவர்களுக்கு ஒபியம் அளித்து
உறங்க செய்கின்றனர். இதனால் அங்கு பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் கூட போதைக்கு அடிமை ஆகி விடுகின்றனர் என்றும் தலை நகர் காபூலில் ஒபியதிற்கு அடிமையான  சில லட்சக்கணக்கான நோயாளிகள்  இருக்கின்றனர் என்பதும் அந்த அறிக்கையின் சாராம்சம். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உணவின்மையால் போதைக்கு அடிமை அடிமை ஆகும் கொடுமையை என்ன சொல்வது. ஆப்கானிஸ்தானை விடுங்கள், ஏன் இந்திய மண்ணிலேயே கிட்ட தட்ட 200 லட்சம் இந்தியர்கள் தினமும் பசியால் வாடுகிறார்கள் என்று UN அறிக்கை ஒன்று கூறுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவோ, வளரும் நாடுகளில், உணவு பொருட்கள் ஏற்றுமதியில் முதலாம் இடத்தில் உள்ளது. இதைதான் கண்ணை விற்று சித்திரம் வாங்குவது என்று சொல்வார்கள்.

வளரும் மற்றும் மூன்றாம் தர நாடுகளில் உள்ள உணவு பற்றாகுறைக்கு பல காரணங்கள் உண்டு. எனினும் முக்கியமான சில என்று பார்த்தால் மக்கள் தொகை பெருக்கம், ஸ்திரமான அரசாங்கம் இல்லாமை, அரசாங்க கொள்கை, நில உரிமை இல்லாமை, சுற்று சூழல் பாதிப்பு மற்றும் பருவ மழை இல்லாமை, போதிய விவசாய நிலங்கள் இல்லாமை  ஆகியன.

மக்கள் தொகை பெருக்கம் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கொண்டு கணக்கிட்டால் மக்கள் தொகை ஒவ்வொரு 13 ஆண்டும் 100 கோடி என்ற அளவில் அதிகரிக்கும். அதாவது பதிமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இந்தியா அளவு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் சேரும். எனினும் இவ்வளவு மக்களுக்கு தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியன இன்று இருக்கும் நீர், நில வள ஆதாரங்களை கொண்டே சந்திக்க வேண்டும். ஏற்கனவே மிகவும் தட்டுப்பாட்டுக்கு ஆளாகி உள்ள இந்த வளங்கள் இன்னும் சில ஆண்டுகளில் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எட்டா கனி ஆகிவிடும். இதனால் பசி, பட்டினி, உள்நாட்டு போர் போன்ற அழையா விருந்தாளிகளை உலக நாடுகள் ஒவ்வொன்றும் எதிர்கொள்ள நேரிடும். அதிக மக்கள் தொகை உள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்த மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க தேவையான நில நீர் வளங்களை ஏற்படுத்தவோ அல்லது இப்போது இருக்கும் வளங்களை வீணாக்காமல் இன்னும் சிறப்பான  முறையில் பயன்படுத்த வேண்டிய வழி வகைகளை ஆராய வேண்டும். இது உடனடியாக செய்ய வேண்டிய ஒன்று. இல்லை என்றால் நில நீர் வளங்களுக்காக இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே போர் உண்டாகும் அபாயம் உண்டு. இது இந்த இரண்டு நாடுகளை மட்டுமன்றி ஆசிய பிராந்திய நாடுகளையும் அழிவு பாதையில் அழைத்து செல்லும்.

ஸ்திரமான அரசாங்கம் அல்லது  சர்வாதிகார ஆட்சி அமையப் பெற்ற நாடுகளில் உணவு பற்றாகுறை என்பது புதியது அன்று. உதாரணமாக பல நாடுகளை சொல்லலாம். ஜிம்பாப்வே ஒரு காலத்தில் உணவு தன்னிறைவு பெற்று  இருந்தது. ஆனால் ராபர்ட் முகாபே ஆட்சி காலத்தில் கறுப்பின மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக பயிர் செய்து வந்த வெள்ளையர்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு கறுப்பின மக்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் மழை பொய்த்தாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் அந்த நிலங்களில்  மகசூல் படி படியாக குறைந்து ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்யும் அளவு தன்னிறைவு பெற்ற ஜிம்பாப்வே இன்று உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது.  உணவு தட்டுப்பாடு, உயரும் பண வீக்க விகிதம், பசி பட்டினி மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் என்று அந்நாட்டு மக்கள் பல்வகையிலும் அல்லலுற்று வருகின்றனர். நான் முதலில் குறிப்பிட்ட போதைக்கு அடிமையான ஆப்கான் நாட்டு  குழந்தைகள், மியான்மர், பங்களாதேஷ், ஹைதி ஆகிய  நாட்டில் நிகழும் பட்டினி சாவுகள், ஆப்ரிக்க  நாடுகளில் பரவலாக உள்ள உணவு தட்டுப்பாடு ஆகியன அந்நாடுகளில் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமையின் நேரடி எதிரொலியே.

அரசாங்க கொள்கை ஒரு நாட்டின் தலை எழுத்தையே மற்றும் வல்லமை கொண்டது. பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மானியம், இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி ஆகியன வழங்கி ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலாகட்டும்,  வெள்ளம், வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு தொகை வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலாகட்டும், உணவு மற்றும் கச்சா பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதிலாகட்டும்  அரசாங்கத்தின்
முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் உணவு உற்பத்தியில்  தன்னிறைவு அடைவது என்பது இயலாத ஒன்று. எனினும் அரசாங்கத்தின் கொள்கைகள் விவசாயிகளின் குறிக்கோள் ஆகியவை இரண்டும் இணைந்து நேர் கோட்டில் பயணம் செய்தால் தான் ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்.

பூமியின் நுரையீரல்கள் எனப்படும் அமேசான் காடுகள் வேகமாக அழிந்து வரும் அவலம் ஒன்று போதும் அதிக மக்கள் தொகையும் அதனால் ஏற்படும் சுற்று சூழல் கேட்டிற்குமான தொடர்பை விளக்குவதற்கு. மேற்கத்திய வாழ்க்கை முறை இன்று எல்லா நாடுகளிலும் ஓரளவு கடைபிடிக்க படுகிறது. மெக்டோனல்ட்ஸ், பிட்சா ஹட்  போன்ற அமெரிக்க உணவகங்கள் மட்டுமன்றி மேலை நாடுகளில் உள்ள வாழ்க்கை முறையும் இன்று பரவலாக எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கபடுகின்றன.  உலகமயமாக்குதலின் காரணமாக இன்று நடுத்தர வர்க்க மக்களிடம் வாங்கும் சக்தி பெருகி உள்ளது. இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும் நுகர்வோர் எண்ணிக்கை பெருகி வருவதால் நிறைய இயற்கை வளங்களை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக இழந்து வருகிறோம். உதாரணமாக இன்று இந்தியாவில் கார் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய கார் உற்பத்தி செய்ய தேவைப்படும் இரும்பு, அதை உருக்க தேவைப்படும் நிலக்கரி, உற்பத்தி செய்யப்பட பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், அந்த வாகனங்கள் செல்ல சாலைகள், பாலங்கள்  போன்ற கட்டமைப்பு வசதி என்று அந்த ஒரு பொருளை செய்வதற்கு தேவைப்படும் மண் சார்ந்த மூலபொருட்களின் எண்ணிக்கையோ மிகவும் நீளம்.  இது ஒரு உதாரணம் தான். இது போல எலெக்ட்ரானிக்  உபகரணங்கள், ஆடை தயாரிப்பு, உணவு பொருட்கள் உற்பத்தி போன்ற தேவைகளுக்காக நாம் வாழும் இந்த பூமியை வேகமாக சுரண்டி வருகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்திய பின்  மறு பயன்பாடு செய்ய இயலாமல் காற்று, நீர், நிலம் ஆகியவற்றை மாசு படுத்தி வருகிறோம். உதாரணமாக இன்று அனைவரும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை சொல்லலாம். பிளாஸ்டிக் குப்பை இல்லாத ஊரே இல்லை இந்தியாவில். முன்பெல்லாம் கடைகளில் துணி பைகளில் பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அப்போதெல்லாம் இவ்வளவு குப்பை இருந்திருக்காது என்று தோன்றுகிறது.

அண்டார்டிகாவில் பனி பாறைகள் உருகுவதாகவும் அதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல நிலப்பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக உலக விஞ்ஞானிகள் காட்டு கத்தல் போட்டும் எந்த நாடும் அதை காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் வாழ்க்கை முறையை தன் நாட்டு மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்யும் விஷயமாகவே இதை வளரும் நாடுகள் கருதுகின்றன. இதனால் சுற்று சூழல் பாதிப்பை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதிலேயே குறியாக உள்ளன. இத்தகைய மனப்போக்கு மிகவும் ஆபத்தானது.

எண்ணெய் வளங்களுக்காக நாடுகள் ஒன்றுடன் ஒன்று போர் தொடுப்பது இன்று நாம் கண்கூடாக காணும் நிகழ்வு. ஆழ் கடலில் துளையிட்டு எண்ணெய் எடுப்பதும் அதனால் நீர் வளங்களை மாசு படுத்துவதும் மெக்ஸிகோ வளைகுடாவில் நாம் கண்ணார கண்ட நிஜம்.  சர்வாதிகார  அரசுகளையும், தீவிரவாத அமைப்புகளின் பிடியில் உள்ள நாடுகளையும் எண்ணெய் வளங்களுக்காக ஆதரிப்பது போன்ற ஆபத்தான அணுகுமுறையை இன்றைய நாடுகள் கடைப்பிடிக்கின்றன. மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை கண்டுபிடிப்பதில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு ஆர்வமின்மையால் அது போன்ற முயற்சிகளுக்கு இந்த நாடுகள் முடிந்த அளவு தடை ஏற்படுத்துகின்றன. இதனால் நிலவுக்கு மனிதனை அனுப்ப முடிந்த நம்மால் எண்ணெய் அல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனத்தை  இந்நாள் வரை கண்டுபிடிக்க இயலவில்லை.வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் ஏற்பட்டுள்ள பூமியின் தட்ப வெட்ப மாற்றத்தின் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் அளவுக்கு அதிகமான பனிப்பொழிவோ அல்லது மழையோ அல்லது வறட்சியோ ஏற்படுகிறது. இது மண்ணை சார்ந்து வாழும் விவசாயிகளை மட்டுமன்றி அனைவரையும் பாதிக்கிறது.

பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவைக்காக அண்டை நாடுகளிடம் விளைநிலங்களை குத்தகைக்கு எடுக்கும் கூத்தும் நடக்கிறது. சீனா 2.8 லட்சம் ஹெக்டர் நிலத்தை காங்கோ நாட்டிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளது. இதே போன்று தென் கொரியா சூடன், மடகாஸ்கர் போன்ற நாடுகளிடம் இருந்து லட்சக்கணக்கான ஹெக்டர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. லட்சக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கும் இத்தகைய நாடுகளிடம்
இருந்து பெற்றுள்ள நிலங்களை பயிர் செய்ய தேவையான தண்ணீரையும் அந்தந்த நாட்டிலிருந்தே பெற வேண்டும். இது ஏற்கனவே வறட்சியால் கஷ்டப்படும் அந்த நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். இது போன்ற உடன்பாடுகள் நீதிக்கு புறம்பானவை மட்டுமன்றி இதை போன்ற  ஒப்பந்தங்கள் காரணமாக உள்நாட்டு போர்/கலகம் ஆகியன  ஏற்படக்கூடும்.

அமெரிக்கா ரெட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தில் இருந்து ஒரு படிப்பினை என்று எடுத்தால் அது - உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்வும் அந்த நாட்டை மட்டுமே பாதிக்கும் நிகழ்வு அல்ல. உலகமயமாக்குதலின் காரணமாக உலகம் மிகவும் சுருங்கிவிட்டது.ஒரு இடத்தில் உள்ள மேடு  இன்னோர் இடத்தில் உள்ள பள்ளத்தின் பிரதிபலிப்பே. எனவே ஆப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகளின் வறுமை மற்றும் அதை சார்ந்த போதை பழக்கம் அந்த ஒரு சமுதாயத்தை மட்டும் பாதிக்கும் ஒரு விஷயம் அல்ல. அது உலகம் அனைத்திற்கும் பொதுவான பிரச்சனை என்ற நோக்கில் அணுகப்பட வேண்டும். உலகில் எப்போதும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு மறைய போவதில்லை. ஆனால் ஏழைக்கு உணவு என்பதே கனவாக ஆனால் அது நல்லதல்ல. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகம் அழிந்திடும் என்பது இன்றைய உலக நியதி.

சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன என்று அலசினால் எனக்கு தோன்றும் சில தீர்வுகள்.
முதலில் ஆப்கானிஸ்தானை எடுத்து கொள்வோம். அங்கு நிலவும் வறுமைக்கு காரணம் அங்கு பெண்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவதே. கல்வி, தொழில் ஆகிவற்றில் பெண்கள் மிகவும் பின் தங்கி இருப்பது மட்டுமன்றி ஆண்களை சார்ந்தே வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் ஆண்களின் துணை இன்றி குடும்பத்தை பேணுவது இயலாத ஒன்றாக இருக்கிறது. இத்தகைய நிலையில் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி  அளித்து அவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானம் கிடைத்திட உதவ வேண்டும். இதனால் படி படியாக அங்கு நிலவும் வறுமையை குறைக்க முடியும். மேலும் தற்போது போதைக்கு அடிமையான மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் அங்கு ஏற்படுத்த பட வேண்டும். இது மட்டுமன்றி போதையினால் உண்டாகும் தீய விளைவுகளை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மண்ணிற்கு கேடு விளைவிக்கும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வளரும் காய், கனி மற்றும் தானிய வகைகளை விடுத்து இயற்கை முறையில் வளரும் உணவு பொருட்களை அனைவரும் வாங்க வேண்டும். இது  இயலாதோர் தங்கள் பகுதிகளில் உள்ள குறு விவசாயிகள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் விளைவிக்கும் உணவு வகைகளை வாங்க வேண்டும். இதனால் மண் சார்ந்த சுற்றுசூழல் பாதிப்பில் இருந்து சிறிதளவாவது  மீள முடியும்.

கார்பன் டை ஆக்சைடு  வாயு உமிழ்வினால் உண்டாகும் தீய விளைவுகளை நாளைய பிரச்சனையாக பார்க்காமல் இன்றைய பிரச்சனையாக அணுக வேண்டும். மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனத்தை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். இது காற்று மண்டலம் மாசுபடுவதை பெருமளவு குறைக்கும்.

நாம் ஒவ்வொருவரும் எரிபொருள் சிக்கனம்,தண்ணீர் சிக்கனம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். நாம் வீணாக்கும் நீர் விவசாயத்திற்கோ அல்லது மின்சார உற்பத்திக்கோ பயன்படக்  கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போது புகையிலை பயிரிட் பயன்படுத்தப்படும் 5 லட்சம் ஹெக்டர் நிலத்தில் தானியம் பயிரிட முடிந்தால்  உலகின் உள்ள அனைவருக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவை பெற முடியும். இதனால் பசி பட்டினி மற்றும் அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து பலரை காக்க முடியும்.

இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் உணவு தேவைக்காக ஒதுக்கப்படும் தானியத்தில் 10 சதவிகிதம்  குறைத்தால் கிட்ட தட்ட 64 லட்சம் டன்கள் தானியத்தை மிச்சம் பிடிக்க முடியும். இதன் மூலம் உலகில் உள்ள அனைவருக்கும் கிட்டத்தட்ட 26 மாதங்கள் உணவளிக்க முடியும். இதையே 20 சதவிகிதம் என்ற அளவு குறைத்தால் மேலும் 48 மாதங்களுக்கு உணவளிக்க முடியும். எனவே வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இறைச்சி உணவின் மீது வரி விகித்து இறைச்சி உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.


சொந்த சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி.

தாயை கொள்ளும் பஞ்சத்தை
தடுக்க முயற்சியுறார்
வாயை திறந்து சும்மா- கிளியே
வந்தே மாதரம் என்பார்.

முண்டாசு கவிஞன் பாரதி சொல்வது போல் வேறு யாரும் அழகாக சொல்ல முடியாது. பஞ்சம் பசி இன்றைய நிஜம். இது நாளைய நிஜமாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறாமல் காப்பது நம் அனைவரின் கையிலும் உள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக