வெள்ளி, பிப்ரவரி 25, 2011

காதல் என்பது கடவுள் அல்லவா

காதலர் தினம் இந்த வருஷமும் வந்துட்டு போயாச்சு. வாழ்த்து அட்டைகள் , பரிசுகள் பரிமாறுதல், பூங்கொத்து அனுப்புதல், துணைவியையோ, காதலியையோ  இரவு விருந்துக்கு அழைத்து செல்லுதல் என்று அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் கொண்டாடி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். காதலர் தினம் கொண்டாடுவது நல்லதுன்னு நினைக்கற அதே நேரத்தில்,  காதலை/அன்பை தெரிவிக்கறதுக்கு வருஷத்துல இந்த ஒரு நாள் மட்டும் தான் என்பது போன்ற ஒரு பிம்பத்தை இது போன்ற கொண்டாட்டங்கள் உண்டாக்குதுனு தோன்றவும் செய்கிறது. இந்த ஒரு நாலாவது ஏதாவது செய்யறாரே/ளே  அதையும் வேண்டான்னு சொல்ல சொல்றீங்களா அப்படின்னு சிலர் முணுமுணுக்கறதும்  காதில் விழுகிறது.


இன்றைய அவசர யுகத்தில் காதலிக்கறதுக்கு/அன்பை பரிமாறிகிறதுக்கு எல்லாம் எங்கே நேரம், தினம் தினம் ஆபிஸ் போய்ட்டு வந்து குடும்பத்தை கவனிக்கவே நேரம் சரியா இருக்கு, இதுல காதலாவது கத்திரிக்காயாவது அப்படின்னு நிறைய பேர் அலுத்துக்கொள்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இயந்திரமயமான இந்த வாழ்க்கை சூழலில் பாலைவன சோலை போல இளைப்பாறுவதற்கும், ஆறுதல் கொள்வதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் காதல் கண்டிப்பாக தேவை.

காதல்....நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான் என்ற  திரைப்பட பாடல் வரிகள் காதலுக்கு அழகான விளக்கம் தருகிறது. வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகள், அனுபவங்கள், ரசனைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொள்ளுதல் ஒரு அதிசய நிகழ்வு தான். ஆனாலும் அந்த அன்பும் அக்கறையும் வாழ்நாள் முழுவதும் தொடருகிறதா   என்ற கேள்வி எழாமல் இல்லை.  வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு, அலுவலக வேலை 
என்று பெண்களும் ஆண்களும் வாழ்க்கை என்னும் இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சிய வெறியுடன்   ஓடி கொண்ட இருக்கின்றனர்.
எதற்காக இந்த வேகம் எதை சாதிக்க இவ்வாறு சென்று கொண்டு இருக்கிறோம் என்ற நிதானம் வருவதற்குள் முக்கால்வாசி  வாழ்க்கை 
முடிந்து விடும். 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது

என்று அன்பை முன்னிறுத்தி பேசுகிறது குறள்.  அன்பு என்பதன் அளவுகோல் என்ன? காதலர் தினம் அன்று வாங்கும் மற்றும் கொடுக்கும் பரிசுகள் மட்டும் அன்பின் அளவுகோலாகிவிடுமா  என்ன? எனக்கு தெரிந்த ஒருவர் மனைவிக்கு சில வருடங்களாக வயிற்றுவலி. ஆனாலும் மனைவி அதை பெரிதாக எண்ணவில்லை. ஏதோ கை வைத்தியம் பார்த்து சமாளித்து வந்தார். கணவரும் மனைவியின் உடல் நிலை பற்றி  தெரிந்தும் மனைவியை மருத்துவரிடம் அழைத்து செல்ல எத்தனிக்கவில்லை. மிகவும் மோசமான வயிற்று வலியால் மனைவி துடித்த ஒரு நாள் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் அந்த மருத்துவர் "நீங்கள் ஏன் இவ்வளவு தாமதம் செய்தீர்கள் இப்பொழுது நோய் முற்றி விட்டது இனி நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை"  என்று கூறிவிட்டார். அந்த பெண்மணி சில நாட்களிலேயே உயிர் இழந்தார். அந்த கணவரோ நன்கு படித்தவர் தான். 
மனைவிக்கு வைத்தியம் செய்யும் அளவுக்கு பொருள் வசதியும் உண்டு. எனினும்
பொருள் வசதி  இருந்தும் மனைவியை அன்பாக கவனிக்க தெரியவில்லை. இன்று தனது கடைசி காலங்களை தனியாக கழித்து 
வருகிறார்.  இது ஒரு உதாரணம் தான். இந்தியாவில் இது போன்று பல மனைவிகள் தங்கள் உடல் நலத்தை ஒரு பொருட்டாக கருதாமல் குடும்பத்திற்காக உழைத்து வருகின்றனர்.  அதிக அளவில் கான்சர், காச நோய் போன்றவற்றால் உயிரிழப்பது இந்திய ஆண்களை விட இந்திய பெண்கள் தான் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. இந்திய ஆண்கள் தான் காதலிக்கு நினைவு சின்னம் கட்டுவதில் வல்லவர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்றாயிற்றே. எனவே யாரும் தாஜ்மஹால் கட்ட பிரயத்னப்படாதீர்கள்.  வாழும் காலத்தில் அவரவர்  இணை மகிழ்ச்சியாக இருக்க அன்பாக
ஒரு குடிசையேனும் கட்டுங்கள்.

அன்பை வெளிப்படுத்த ஆடம்பர வார்த்தைகள் தேவை இல்லை. ஆரவாரங்கள் 
தேவை இல்லை. எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணும் பாங்கு உள்ள ஒருவருக்கு அன்பு செலுத்துவது என்பது சுலபமானது.  அன்பாக பேசுவதற்கு அதிக நேரம் தேவை இல்லை. தொலைக்காட்சியையும், கணினியையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்தாலே அன்பை வெளிப்படுத்த தேவையான காலமும் நேரமும் நிறையவே கிடைக்கும்.  குடும்பத்தினரோடு அளவளாவுங்கள், குடும்பத்தினரின் உலகத்தை அறிய முயற்சி செய்யுங்கள், குடும்ப வேலைகளில் பங்கெடுத்து கொள்ளுங்கள், உங்களால் முடிந்த உதவிகளை கேட்காமலே செய்யுங்கள். வாரம் ஒரு முறையேனும் குடும்பத்தினரை வெளியில் அழைத்து செல்லுங்கள்.  செல்வதற்கு செலவில்லாத கடற்கரை, கோயில், பூங்கா போன்ற பல இடங்கள் உண்டு. மனம் திறந்து பாராட்டுங்கள். வாரத்தில் எதாவது ஒரு நாளில் ஒரு வேளையேனும் மனைவிக்கு சமையல் வேலையில் இருந்து ஓய்வு கொடுங்கள். மனைவி/குழந்தைகளின்  
விருப்பம்  அறிந்து அவர்கள் விரும்பும் துறையில் அவர்களை 
உற்சாகப்படுத்துங்கள்.  நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக எதையும் செய்வீர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்கு விதையுங்கள். அன்பிற்கு முதல் எதிரி "தான்" என்கிற அகந்தை. ஆங்கிலத்தில் "ஈகோ" என்பார்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஈகோ என்ற மாயச்சுவர் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  பெண்களாக இருப்பின் தொலை காட்சியை அணைத்து விட்டு குழந்தைகளை அணையுங்கள். அக்கம் பக்கம் வெட்டி பேச்சுகளை தவிர்த்து கணவனோடு அளவளாவி மகிழுங்கள். அப்புறம் என்ன எல்லா நாட்களும் உங்களுக்கு காதலர் தினம் தான்.

வாழ்க்கையில் சந்தோஷம் தருவது பணம் மிகுதியாக இருந்த நாட்கள் அல்ல. இரு மனம் இணைந்த நாட்களே உண்மையான மகிழ்ச்சியை தருவது. பல குறை நிறைகளை கொண்ட ஒரு பெண்ணை ஆணோ அல்லது ஒரு ஆணை பெண்ணோ உண்மையாக நேசிக்க முடிந்தால் எந்த குறையும் இல்லாத இறைவனை எவ்வளவு அதிகமாக நேசிக்க முடியும் என்று எண்ணிப்பாருங்கள்.ஆம் காதலும் கடவுளை கண்டறிய அழகான சுலபமான  வழி.  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக