புதன், பிப்ரவரி 16, 2011

நான் ஆணையிட்டால்

 தமிழ்நாட்டுல எலக்க்ஷன்   வரப்போகுது. ஆள் ஆளுக்கு அரசியலுக்கு வருவேன், எலக்க்ஷன்ல நிப்பேன்னு பயமுறுத்திக்கிட்டு  இருக்கற இந்த நேரத்தில பத்திரிக்கைகளும் அவங்க பங்குக்கு "அரசியலுக்கு ரஜினி சாரு வந்துருக்காக , நம்ம அண்ணன் விஜய் வந்திருக்காக, பங்காளி விஜயகாந்த் வந்திருக்காக" என்று சகட்டு மேனிக்கு அள்ளி விட்டிட்டு இருக்குது. ஒரு வேளை அரசியல்ல குதிச்சி இந்த நடிகர்கள் யாராவது தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆனால் என்ன ஆகும் அப்படின்னு ஒரு கற்பனை:

முதல்ல நம்ம இளைய தளபதி விஜய்

முதலமைச்சர் கார் சட்டசபை வளாகத்துக்குள்ள நுழைஞ்சதும் எல்லா எம்.எல்.ஏ-  களும் முதலமைச்சரை வாழ்த்தி ஒரு குத்துபாட்டு பாடி ஆடனும்கறது  கட்டாயமாயிடும். கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன்ஸ் போன்ற ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு எதிர் கட்சி தலைவர் ஆகறதுக்கு பலமான வாய்ப்பு உண்டு. அப்பதானே அண்ணன் விஜய் சட்டமன்றத்தில குடுக்கிற பஞ்சுக்கு ஈடு கொடுக்க முடியும். எல்லாரும் முதலமைச்சரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே அப்படின்னு கூப்பிடாம மாண்புமிகு  அண்ணன் அல்லது ..ண்ணா விஜய் அவர்களே அப்படின்னு மரியாதையா கூப்பிடணும்னு
சட்டசபைல தீர்மானம் இயற்றுவாங்க.  போலீஸ்காரங்களுக்கு  துப்பாக்கிக்கு பதில் திருப்பாச்சி அரிவாளை  வீசி எப்படி திருடனை புடிக்கறதுன்னு பயிற்சி தருவாங்க. கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது கில்லி விருதுன்னு  பெயர்
மாற்றம் செய்யப்படும். டிவி-ல வாரம் ஐந்து நாட்கள்  விஜய் படங்கள் மட்டுமே ஒளிபரப்பாகணும்னு  சட்டம் கொண்டு வரப்படும். அதனால விஜய் படத்தை பார்க்காம அல்வா குடுத்த தல ரசிகர்கள் மற்றும் படத்தை வேணும்னே படத்தை பார்க்காத எல்லாரும் கண்டிப்பா படத்தை பாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். படம் பாத்து பித்து பிடிச்ச நிலையில் உள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பா இலவச மருத்துவ உதவி வழங்கப்படும். மேலும் டிவில வைக்கப்படும் போட்டிகளில் பங்கு பெற்று பரிசு வெல்லும் அதிர்ஷ்டசாலி நேயருக்கு   இலவச விஜய் பட DVD வழங்கப்படும். கில்லி, சுறா போன்ற விஜய் திரைப்படங்களில் பெயர்களை தங்கள் பெயர்களில் கொண்டுள்ள திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். உதரணமா சுறா-1 , சுறா - 2..சுறா- 100  என்று வரிசையா படங்கள் ரிலீஸ் ஆகி ஓடினா, ஒரிஜினலா  எந்த விஜய் படம் நல்லா இல்லை என்பதே மக்களுக்கு மறந்து போய்டும். இதன் மூலம் ஒரு வேளை அடுத்த தேர்தல்ல விஜய் தோத்துட்டாலும் அவர் தன்னோட சினிமா  வாழ்கையை புதுப்பிச்சுக்க முடியும். என்ன நான் சொல்றது !!!

அடுத்து உங்கள் ரஜினி:
 

நான் லேட்டா  வந்தாலும் வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன். நான் எப்ப வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்திலே கரெக்டா வருவேன் அப்படின்னு எகிடு தகிடா பஞ்சு டயலாக் அடிச்சே மக்களை குழப்பிக்கிட்டு இருக்கற ரஜினி முதலமைச்சர் ஆனா கோனார் உரை மாதிரி ரஜினி தோராயமா என்ன சொல்ல வரார்ன்னு புரிஞ்சிக்க ஒரு டிக்ஷனரியை தமிழக அரசே அடிச்சி வெளியிடும். நான் ஒரு தடவ கையெழுத்து போட்டா நூறு  தடவை கையெழுத்து போட்டா மாதிரின்னு ரஜினி அடம் பிடிப்பதால் அரசாங்க கோப்புகள் பல நகராமல் தேங்கி இருக்கும். பொதுப்பணி துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர்னு எல்லா அமைச்சரவை பதவிகளையும் ரஜினியே வகிப்பார். எப்படின்னு ஆச்சரியப்படறவங்க மீண்டும் எந்திரன் படத்தை பார்ப்பது நல்லது. சிட்டி
மாதிரி நிறைய குளோனிங் ரஜினிக்களே   இந்த பதவிகளை வகிப்பாங்க கரெக்டா கணிக்கறவங்க கைய கொடுங்க. கலக்கிட்டீங்க. இதனால அமைச்சர் பதவி கிடைக்கும்னு ரஜினி கட்சியோட கூட்டணி வைக்கிற கட்சிகளுக்கு சொல்லறது என்னன்னா - உங்க கனவு பலிக்காது. டாட் !!!. ரஜினி படத்து பாட்டிலெல்லாம் கூட ஆடற டான்சர்ஸ்  போல சட்ட சபைக்கு போற ரஜினி கட்சி எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் கண்டிப்பா சீருடை அணியணும் என்பது கட்டாயமாக்கப்படும். சீருடை அணியாமல் போனா "நம்ம கூட்டத்துல ஒரு ப்ளாக் ஷீப் இருக்கு பே பே" என்று ரஜினி கொடுக்கற வாய்சில் முதல் நாள் ராகிங்ல தனியா மாட்டின ஜூனியர் போல நிலைமை ஏடாகூடமா ஆகிடும்.  ரஜினியோட ஜப்பானிய ரசிகர்களின் வேண்டிகோளுக்கு இணங்கி தமிழக சட்டசபை நிகழ்வுகள் ஜப்பானில் லைவ்வா ஒளிபரப்பபடும். இதனால் வேட்டி கிழிப்பு, மைக் எறிதல், செல்லமாக முதுகில் தட்டல் போன்ற தமிழ்நாட்டு சட்டசபை கலாசாரம் ஜப்பானிலும் வேகமாக பரவ வாய்ப்பு உண்டு.  ரஜினியோட ஸ்டைல் மற்றும் மானரிசம் ஆகியவற்றை ஆராய்ச்சி தலைப்பாக எடுத்து ஆராய்ச்சி செய்யும் பி.எச்.டி மாணவர்களுக்கு அரசு சார்பாக ஊக்கத் தொகை வழங்கப்படும்.குழந்தைகளுக்கு பேர் வைக்க சொல்லி குழந்தைகளை நீட்ற தாய்மார்கள் ஜாக்கிரதை - ஏன்னா குழந்தைக்கு CR -20 , CR - 21 அப்படின்னு ரோபோக்களோட  பேர் சூட்டப்படற அபாயம் இருக்கு.  அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா அப்படிங்கற பொன் மொழிக்கு ஏற்ப ரஜினி ஆட்சியில தமிழ் நாட்டுக்கு USA-நாடு அப்படின்னு  பேர் மாத்தினாலும் மாத்துவாங்க. ஏன்னா அவர் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்னா மாதிரி இல்லையா !!!

அடுத்து நம்ம கேப்டன் விஜயகாந்த்:
கேப்டன் கோட்டைக்கு போனாலும் இல்ல தொகுதிக்கு போனாலும் எப்பவுமே போலீஸ் உடையில தான் போவாரு. அப்பதான் தமிழ் மாநிலத்து காவல்காரன்னு நம்புவாங்க இல்லையா.காப்டனுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தைகள் என்ன என்ன அப்படிங்கறத லிஸ்ட் போட்டு எல்லாருக்கும் தருவாங்க. அநேகமா எந்த லிஸ்ட்ல  இடிப்பு அப்படிங்கற வார்த்தை முன்னிலைல இருக்கும்னு நம்பறேன். சட்டசபை நடுவுல ஒரு ஆலமரம் செட் போடப்பட்டு அங்கே தான் நம்ம தலைவர் முக்கிய முடிவுகளை எடுப்பாரு. எதிர் கட்சி தலைவர் தலை சுத்தற அளவுக்கு புள்ளிவிவரங்களை அடுக்குவது, எதிர் கட்சிக்காரர்களை பார்த்து அம்மா கிட்ட குடிச்ச பால கக்கிடுவ அப்படின்னு மெரட்டுறது,  அடிக்கடி கண் சிவந்து எதிர் கட்சிகாரங்களை பார்த்து துடிக்கிற நரம்பு இருந்தா, அந்த நரம்புல முறுக்கு இருந்தா, அந்த நரம்புல ஓடற ரத்தம் இருந்தா இன்னொரு தடவை அந்த குற்றச்சாட்டை சொல்லு பார்க்கலாம்னு சவால் விடறதுன்னு சட்டசபையை ரக்க ரக்க ரக்க-னு அலற வைப்பாரு நம்ம ஒன் மேன் ஆர்மி. 
தன்னோட படங்களில் பாக்கறவங்க அலுத்து போற அளவுக்கு தீவிரவாதிகளை வேட்டை ஆடியும், மீதி சமயம் கிராமத்து சப்ஜெக்டையும், அம்மா சென்டிமென்ட்டையும் வித விதமா பிரிச்சி மேஞ்சி  ரசிகர்களை பாடுபடுத்திய கேப்டன் வெள்ளி திரைக்கு சின்னதா லீவ் விட்டுடுவார். இதனால ரசிக மகா ஜனங்கள் குஷியாகி "வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே" அப்படின்னு பேஸ்புக்ல தங்கள் நன்றியை வெளிப்படுத்தோ படுத்துன்னு  வெளிபடுத்துவாங்க. தமிழ் சேவையே என் வேலை அப்படின்னு தமிழை  வாழ வைக்க கேப்டன் வருடந்தோறும் செம்மொழி மாநாட்டை நடத்துவார்.  இந்த மாநாட்ல சாலமன் பாப்பையா அல்லது பட்டிமன்ற ராஜா தலைமையில தமி(ள்)ழால    காப்டனுக்கு
சிறப்பா இல்ல கேப்டனால தமி(ள்)ழ்   சிறந்துச்சா அப்படின்னு மக்களை குழப்பி மண்டை காய வைக்கற பட்டிமன்றம் நடக்கும். எவ்ளோ நாலு தான் காப்டனாக இருக்கறது அப்படின்னு தனக்கு மேஜர், கர்னல் அப்படின்னு வருஷா வருஷம் பதவி உயர்வு கொடுக்கணும்னு தமிழ் திரை உலகத்திற்கு உத்தரவு போடுவார். அரசு ஊழியர்கள் பாரம்பரிய வேட்டி சட்டையில
பணிக்கு வரணும், மின்வெட்டு இருக்கும் போதும் மருத்துவர்கள் செல்போன் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்யணும்,
போலீஸ்காரங்க தோட்டாவை பிடிச்சி   மீண்டும் சுட்டவனை நோக்கியே திருப்பி
விடணும் அப்படின்னு அவர் போடற அதிரி புதிரி உத்தரவுகளால எல்லாரும் அரசு பணியிலிருந்து விலகி மீண்டும் மண்வெட்டிய தூக்கிகிட்டு விவசாயிகள் ஆனாலும் ஆகலாம்.                  

பின் குறிப்பு: ஜனநாயக ஆட்சியில் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். எனினும்
வெள்ளி திரையின் வெளிச்சத்தில் மதி மயங்கி நிழலை நிஜம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டு பொது ஜனத்தை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கவே இந்த கட்டுரை.


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக