சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வழக்கம் போல மனித கூட்டத்தில் பிதுங்கி வழிந்தது. நிறைய பேர் வந்து போகும் ரயிலின் ஒலியையும் தாண்டி செல்போனை பார்த்தவாறும், யாருடனோ பேசியவாறும் நிறைய இரைச்சலை இலவசமாக உற்பத்தி செய்துக் கொண்டிருந்தார்கள். துப்புரவு பணியாளர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தண்டவாளங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எனினும் தண்ணீரால் சுத்தம் செய்ய முடியாத குப்பைகள் அடங்கிய பிளாஸ்டிக் கவரை சிலர் தண்டவாளத்திலேயே வீசி சென்றனர். துப்புரவு பணியாளர் முகத்தில் தெரிந்த ஆயாசத்தை வார்த்தையில் வடித்தால் "ATM -ல பணம் போட தெரியுது.குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள் என்று எழுதி வைத்தும் இந்த மனிதர்களுக்கு ஏன் தெரியவில்லை" என்பதாக இருக்கும். சிலர் எந்த ரயிலையும் பொருட்படுத்தது தண்டவாளங்களை அனாயசமாக ஸ்பைடர் மேன் போல தாவித் தாவி கடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சவால் விடும் வகையில் கூட்டத்தின் ஊடே மிக மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தாள் அகிலா. அவள் வயோதிகத்தின் காரணமாக தான் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறாள் என்பதை எளிதாக ஊகிக்க முடிந்தது. வெள்ளை ஜாக்கெட், வயதான பெண்கள் அணியும் சுங்குடி புடவை, வெறுமையான நெற்றி, கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி, இரண்டு கைகளிலும் ஒரு ஜோடி தங்க வளையல்கள் அணிந்து இருந்தாள். அவளுடைய மணி பர்சில் செல்போன், கொஞ்சம் பணம் மற்றும் இரவு உணவு ஆகியன இருந்தது. மற்றொரு பையில் ஒரு நாலைந்து புடவைகள், ஒரு துண்டு, பிஸ்கட் மற்றும் பழம் இருந்தது. மெதுவாக நடந்து, அகிலா அந்த ட்ரெயின் கம்பார்மெண்டில் நுழைந்த போது மணி மாலை 6:00 ஆகியிருந்தது. 7:00 மணிக்கு தான் அவளுடைய வண்டி கிளம்பும் என்றிருந்தாலும் அந்த கம்பார்ட்மெண்ட் ஓரளவுக்கு கூட்டமாகவே இருந்தது. அந்த துணிப் பையும் மணிபர்சையும் எடுத்துக் கொண்டு நடப்பதே அவளுக்கு கடினமாக இருந்தது. அவற்றை எடுத்துக் கொண்டு அந்த கம்பார்ட்மென்டில் ஏற மிகுந்த சிரமம் உண்டாயிற்று அவளுக்கு.
ஈஸ்வரா..முருகா என்று மனதிற்குள் எல்லா கடவுள்களையும் அழைத்துக் கொண்டே ஏறினாலும் ஆர்தரைடிஸ் வந்த பின் அவளுடைய கைகளும் கால்களும் அவள் சொற்பேச்சு கேட்பதாய் இல்லை. அவற்றை அசைத்தோ, மடித்தோ எந்த ஒரு காரியத்தையும் செய்வது என்பது பெரும் பிரயத்தனம் ஆயிற்று.
அவள் கணவன் கிருஷ்ணன் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் பண்ணையில் வேலை செய்யும் 10 ஆட்களுக்கு சமைத்து போட்டு, 3 பிள்ளைகளை பெற்று வளர்த்து, வீட்டு வேலை, தோட்ட வேலை என்று எல்லாவற்றையும் பார்த்தவள். சுறுசுறுப்பு என்றால் தேனிக்கு அடுத்தாக அந்த ஊரில் அவளைத் தான் சொல்வார்கள். அப்படி ஒரு காலம். அத்தனை வேலைகளையும் செய்ததோ என்னவோ வயோதிகத்தில் எலும்பு தேய்மானம், ஆர்தரைடிஸ் என்று பெண்களை வருத்தும் நோய்கள் அவளை விட்டு வைக்க வில்லை. மகன் நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கிறான். இரண்டு பெண் பிள்ளைகளும் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து அவர்களுக்கும் கல்லூரியில் படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். கிருஷ்ணன் பண விஷயத்தில் ரொம்ப கெட்டி. சம்பாதிக்கவும் செய்தார். சேர்த்து வைக்கவும் செய்தார். அவருடைய சேமிப்பு 5 லட்சம் மற்றும் கிராமத்தில் ஒரு தோப்பு சூழ்ந்த வீடும் உண்டு. சாப்பாட்டுக்கும் வசதிக்கும் குறைவு இல்லை. ஆனால் வியாதியின் காரணமாக தனியே சமைத்து சாப்பிடும் அளவிற்கு உடம்பு இடம் கொடுக்க வில்லை. ஒன்று விட்ட பெரியப்பா மகள் கௌரி அவ்வப்போது வந்து ஒரு நாலைந்து நாள் தங்கி விட்டு போவாள். அதைத் தவிர இந்தக் கிழவியை தேடி வருபவர் யாரும் இல்லை. கௌரியும் அகிலாவின் வயதை ஒத்தவள். கணவன் இறந்து சில ஆண்டுகள் ஆகிறது. திருமணம் ஆன மகனுடன் வசிக்கிறாள். கொஞ்சம் நடுத்தர குடும்பம் அவளுடையது. எனினும் உடலில் வலு இருப்பதாலும், யாருக்கும் பாரம் இல்லாமல் இருப்பதாலும் மருமகள் ஒத்து இருக்கிறாள். கௌரியும் மகன் வீட்டிலேயே எப்பொழுதும் இருக்காமல் அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கும் அவ்வப்போது சென்று வருவதால் அவளுக்கும் அவ்வப்போது கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். மருமகளிடம் இருந்து சற்றே விலகி இருக்கும் வாய்ப்பு இருப்பதால் இன்னும் மருமகள் பகைத்துக் கொள்ளவில்லை என்பது கௌரியின் எண்ணம். "இப்படி அலையாம கொள்ளாம இருக்க ஒரு வழி இன்னும் அமையல" என்று அங்கலாய்த்து கொள்வாள். அகிலாவும், "அலையாம இங்கேயே என்னுடன் இரு" என்று அவளிடம் சொன்னது இல்லை. கௌரியின் மகன் என்ன சொல்வானோ என்ற ஒரு பயம். அது மட்டும் அல்லாமல் தனது பிள்ளைகள் எல்லாம் "நாங்க உன்னை பார்த்துக்கலேன்னு நீ எல்லாருக்கும் காமிக்கற மாதிரி இருக்கு" என்று சொல்வார்களோ என்று வேறு பயம். பெண்கள் பிறந்தது முதல் இறப்பது வரை இப்படி பட்ட சங்கடங்களில் இருந்து உழன்றே வாழ்கிறார்கள் என்று நினைத்தாள். ஒரு வேளை ஆண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கக் கூடாது என்றே திருமணத்தின் போது ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் குறைந்த வயது இருப்பது போன்று பார்த்துக் கொள்கிறார்கள் என்பதும் கூட அவளுடைய இப்போதைய சந்தேகம். ஆண்களுடைய பிரச்சனை என்றால் இந்த சமூகம் இதை உடனே தீர்த்திருக்கும். பெண்களின் பிரச்சினை என்பதாலே இது இன்னும் தீர்க்கப் படாமலேயே உள்ளது. முதுமையில் பெண்களின் நிலைமை பரிதாபம் தான். அகிலாவை போல பெரிய படிப்பறிவு இல்லாத பெண்களின் நிலைமை இன்னும் மோசம். வங்கியில் பணம் இருந்தாலும் அதை எடுப்பது முதல், அதைக் கொண்டு மளிகை சாமான், வீட்டு உபயோக சாமான் என்று வாங்கி கொண்டு வந்து சேர்ப்பது வரை பெரும் பிரயத்தனப்பட்டே செய்ய வேண்டியிருக்கிறது. உடல் நலனில் இன்றைக்கு இருக்கும் அக்கறை முந்தைய காலத்தில் இருந்திருந்தால் தான் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றியது. "என்ன யோசிச்சு என்ன புண்ணியம், நடந்தது நடந்தாச்சு" என்று சற்றே வலியெடுத்த கை மூட்டுகளை நீவி விட்டாள். இன்னைக்கு புதுசா வேலையிலே சேர்றவங்களுக்கே 20 லட்சம் சம்பளம் கொடுத்து சேர்த்துக்கறாங்க. என் கிட்ட இருக்கற பணம் நகை எல்லாம் ஒரு வருஷத்துலேயே இன்றைய காலத்துல சம்பாதிச்சிடலாம். அம்மாவை பார்த்துக்கிட்டாலும், பார்த்துக் கொள்ளா விட்டாலும் பசங்களுக்கு இந்த சொத்தெல்லாம் வந்து சேர்ந்திடும். இதுல அம்மாவை கடைசி காலத்துல பசங்க பார்த்துப்பாங்க அப்படிங்கறதை எல்லாம் எதிர் பார்க்க முடியாது என்று மிகவும் தாமதமாக அவளுக்கு புரிய ஆரம்பித்தது.
அகிலாவுடைய ஒரே மகன் சிவா கான்பூரில் ஒரு வங்கியில் வேலையில் இருந்தான். மருமகள் ஆஷா, பேரன் ஆகாஷ் என்று அளவான குடும்பம். சொந்த ஊருக்கு கான்பூரில் இருந்து வந்து போக முடியவில்லை என்பதால் அகிலா மட்டும் வருடத்திற்கு ஒரு தடவை என்று கான்பூரில் 3 மாதம் என்ற அளவில் தங்கி இருந்து விட்டு பிறகு மதுரைக்கு அருகில் உள்ள தன்னுடைய கிராமத்திற்கு வந்து விடுவாள். ஒர் அளவிற்கு உடம்பு நன்கு இருந்தவரை இது சாத்தியம் ஆயிற்று. பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என்று சென்று வந்து கொண்டிருந்தாள். ஆஷாவும் மாமியார் வருவது போவது என்பது கொஞ்சம் அதிகப்படியான வேலை என்று முகத்தை காட்டினாலும் சில வருடங்கள் வரை இந்த ஏற்பாடு ஒரு அளவிற்கு சுமூகமாகவே போயிற்று. அகிலாவும் வீட்டு வேலைகளில் ஓரளவு பங்கெடுத்து வந்ததாலும், ஆஷாவிற்கு பெரிய அளவில் குறை சொல்லுவதற்கு ஒன்றும் இல்லாது போயிற்று. ஆனால் சென்ற முறை கான்பூர் சென்ற போது அகிலா பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிறகே அவளுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் ஆயிற்று என்றே சொல்ல வேண்டும்.
கணவன் இருக்கும் வரை முணுமுணுத்தபடி வேலை செய்யும் ஆஷா அவன் அலுவலகத்திற்கு சென்ற பின்பு
"ஏ, கிழவி ஏன் இந்த
மாதிரி படுத்தற? இப்போ நீ இருக்கல, வரல போகலைன்னு யாரு அழுதா? நல்லா இருந்த வரைக்கும் உன் பொண்ணுகளுக்கு போய்
செஞ்சிட்டு இருந்த. இப்போ என்னனா குளிக்கறதுலேர்ந்து, போறது வர்றது
எல்லாம் நான் பார்க்க வேண்டி இருக்கு. எனக்கு என்ன தலையெழுத்து?" என்று
நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசை பாடி நெஞ்சை ரணமாக்குவாள்.
அகிலாவிற்கு நெருப்பை வாரி மேலே இறைத்தார் போல இருக்கும். கண்ணில் நீர் திரளும். இறைவா 'ஏன் என்னை இந்த மாதிரி உயிருடன் வைத்திருக்கிறாய்" என்று அவள் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்யாத நாளே இல்லை. அவளே முடிந்த வரை உட்கார்ந்தபடியே நகர்ந்து நகர்ந்து சென்று தன்னுடைய காரியங்களை பார்த்துக் கொள்ள முயற்சிப்பாள். சிவா அவள் படும் வேதனைகளை பார்த்தும் பாராத மாதிரி இருப்பான். அவனுக்கு சோறு முக்கியம், அப்பறம் பொண்டாட்டியின் தயவு முக்கியம் என்ற முடிவுக்கு வந்திருப்பானோ என்று நினைப்பாள். யாரையாவது பாத்ரூம் செல்ல வேண்டும் என்று உதவிக்கு கூப்பிட்டால் அவர்களில் யாராவது ஒருவர் வருவதற்குள் இருபது முப்பது நிமிடங்கள் கடந்து விடும். அத்தனை நேரம் இயற்கை உபாதையை அடக்கி வைக்கும் அளவிற்கு வயதானதால் முடியவில்லை அவளுக்கு. இதே போல ஒரு நாள் அவள் அழைத்த சில மணி நேரம் கழித்தும் யாரும் வராது போக அவளுடைய உடையிலேயே சிறுநீர் கழித்து விட்டு கழிவிரக்கத்துடன் அவள் அமர்ந்திருக்க, என்ன நடந்தது என்று அவள் அறையில் நுழைந்தவுடன் நாற்றத்தின் மூலம் உணர்ந்த அவளுடைய மருமகள் வாயிலிருந்து வந்து விழுந்த சொற்கள் காது கூசும் ரகம். அதைக் கேட்டு அந்த கடவுளுக்கே கண் திறந்ததோ என்னவோ அவளுக்கு உடல் நிலை ஓரளவு சரியாக தொடங்கிற்று. கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நடமாட தொடங்கினாள். பின்னர் வலியுடனே வீட்டை சுற்றி நடமாடும் அளவிற்கு உடல் தேறினாள். ஓரளவிற்கு சரியானவுடன் சிவாவிடம் 'ஏன்ப்பா ஒரு டிக்கெட் போட்டு கொடு. ஊருக்கு போயிட்டு கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்' என்று அகிலா கேட்கவும், அவள் மகனும் "ஹ்ம்ம், சரி சரி. ஊருக்கு போயிட்டு அடுத்த தடவ வருவியோ போய்டுவியோன்னு யாருக்கு தெரியும் "எதுக்கும் எனக்கு பவர் ஆப் அட்டர்னி" போட்டு கொடுத்துட்டு போ என்றான். "நீ ஏன் அங்க போறே இங்கேயே இரு" என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு நல்லவன் இல்லை என்று அவனை பற்றி தெரியும். ஆனால் விட்டேத்தியாக யாரை பற்றியோ சொல்வது போல பேசும் அவன் சொற்களில் அன்றே அகிலா பாதி இறந்து விட்டாள். "சரிப்பா அதற்கென்ன. உனக்கு சுலபமா இருக்கும்" என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. அவன் சொல்படி "பவர் ஆப் அட்டர்னி" யும் போட்டுக் கொடுத்தாள். அடுத்த இரண்டு நாட்களில் அவள் கான்பூரில் இருந்து மதுரை வந்தாள். பிளைட்க்கு கூட பணத்தை தந்து விட்டே பிளைட்டில் ஏறினாள் உலகின் மிக மோசமான விலங்கு மனிதன் மட்டுமே. அதுவும் அப்பா, அம்மாவின் கடைசி சொட்டு ரத்தம் கூட பயன்படும் என்று உறிஞ்சி சுவைப்பதில் அவர்களை போன்ற கில்லாடிகள் யாரும் இல்லை. மதுரை வந்த பிறகு தெரிந்தவர் துணையுடன் எப்படியோ தனது கிராமத்து வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டாள்.
"அகிலாம்மா , நீங்க உடம்பு முடியாம இருக்கும் போது ஏன் வந்திங்க?" என்று வருவோர் போவோர் கேட்கும் கேள்விகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், "கடைசி பொண்ணு ஜெயா வரேன்னு சொல்லியிருக்கு" அப்படி இப்படி என்று சொல்லி ஒரு மூன்று மாதம் தள்ளினாள். அதற்கு பின்னும் ஊர் வாயை மூட முடியாமல் போக ஜெயாவிற்கே போன் செய்தாள். "ஊருக்கு வரியா, சரி வா" என்று ஜெயா சொன்னாளே தவிர, "நான் வந்து கூப்பிட்டுகிட்டு வரேன்" என்று ஒரு வார்த்தை இல்லை.
எப்படியோ தட்டு தடுமாறி இளைய மகள் ஜெயா வீட்டிற்கும் வந்து விட்டாள். கிட்ட தட்ட ஒரு மாதம் போயிருக்கும். "அம்மா, என் பொண்ணுக்கு வேலை பெங்களூர்ல கிடைச்சிருக்கு. நான், அவளோட பெங்களூர் போய், வீடு பார்த்து செட்டில் பண்ணனும். உன்னால அங்க வர முடியாது. நீ பேசாம ஊருக்கு போய் இரு. நான் வந்த பிறகு சொல்றேன்", என்று போன வாரம் அவள் மகள் ஜெயா சொன்ன போது அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதோ இன்று திரும்பவும் தள்ளாத வயதில் தன்னுடைய கிராமத்து வீட்டை நோக்கிய பயணம். தனக்கு என்று ஒரு கூடு இருந்தாலும், தனிமை என்பது தள்ளாத வயதில் ஒரு பெரும் கொடுமை. கிராமம் என்பதால் அனைவரும் பேசுவார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், தள்ளாத வயதில் உதவி இல்லாமல் காலம் தள்ளுவது அவளுக்கு மிகுந்த சிரமத்தை அளித்தது. சின்ன சின்ன உடல் உபாதைகள் கூட மனதில் பெரிய பயத்தை விதைத்தது. சொந்தத்தில் யாரேனும் இறந்து விட்டார்கள் என்பதை போன்ற செய்திகளை கேட்டால் சில நேரம் அகிலாவிற்க்கு சிறு வயதில் அவர்களுடன் கழித்த நினைவுகள் வந்து போகும், ஏனைய பல நேரங்களில், என்னை விட சின்னவன் அவனே போய்ட்டான், நான் இன்னும் அல்லாடறேன் என்ற கழிவிரக்கமும் வந்து போகும். "வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டுப் போகும்" என்பதை போல "முதுமையில் வாய் விட்டு சொன்னாலே மனச்சுமை விலகி நோயும் வாழ்வும் அச்சுறுத்தலாக தெரியாது" என்று எண்ணி பெருமூச்செறிந்தாள். சொல்வதற்கு அவளுக்கு நேரம் நிறைய இருந்தது. கேட்பதற்கு தான் யாரும் இல்லை.
அகிலா தனது இளைய மகள் ஜெயா வீட்டில் இருந்த போது கேள்விப் பட்ட இன்னொரு விஷயமும் இப்போது நினைவில் வந்து மனதை உலுக்கியது. அகிலாவின் கிராமத்தில் அவள் வசித்த தெருவிற்கு அடுத்த தெருவில் இருந்த சுப்ரமணியன், அவருடைய மனைவி சுசீலா இறந்த பிறகு தனியாகவே வசித்து வந்தார். சுப்ரமணியன், அகிலாவுடைய கணவன் கிருஷ்ணனின் நண்பர் வேறு. அவருக்கு 2 ஆண்கள் 3 பெண்கள் என மொத்தம் ஐந்து குழந்தைகள். சுப்பிரமணியனின் குழந்தைகள் தஞ்சாவூரிலும், கும்பகோணத்தில், சென்னையிலும் வசிக்கிறார்கள். சுப்ரமணியன் ஒரு நாள் நெஞ்சு வலி ஏற்பட்டு அவருடைய வீட்டிலேயே இறந்துவிட, அவருடைய உடல் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் யாரும் பார்க்காமலே இருந்து, புழு வைத்து, வீடெங்கும் புழுக்கள் நெளிந்து, ஜன்னல் மற்றும் கதவுக்கு அடி வழியாக புழுக்கள் வெளியே வர ஆரம்பித்த பின்னரே, யாரோ பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணியனின் உடல் மிகவும் சிதைந்திருந்ததால் அனாதை பிணம் போல சடங்குகள் எதுவும் செய்யப் படாமலே தகனம் செய்யப் பட்டது. அந்த சம்பவத்தை கேள்விப் பட்டவுடன் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிட முடியவில்லை அகிலாவால். இப்பொழுதும் நினைத்தால் மனசு வலித்தது அவளுக்கு. மனுஷாள் யாருக்கும் தேவை இல்லை. இந்த அவசர உலகத்தில் பணம் போதும் என்றே அனைவரும் நினைக்கின்றனர். மனிதர்களின் தேவை தீர்ந்த பின் குப்பை போல இந்த சமூகம் நம்மை ஒதுக்கினாலும் பெற்று வளர்த்த பிள்ளைகளும் இவ்வாறே இருக்கின்றனவே என்று நினைத்த போது அவளுக்கு கண்கள் கலங்கின.
இந்த நினைவில் சிலை போல எவ்வளவு நேரம் இருந்தாளோ தெரியாது "பாட்டி, இந்த ஜன்னலோரம் சீட்ல நான் உட்காரலாமா?. குரல் கேட்ட திசையில் பார்வையை செலுத்தினாள். கேள்வி கேட்ட சிறுவனுக்கு ஒரு எட்டு வயது இருக்கும். ஆரஞ்சு வண்ண சட்டையும், கோடு போட்ட கால்சட்டையும் அணிந்து இருந்தான். சற்றே மாநிறமாக பார்க்க லட்சணமாக இருந்தான். அவன் அருகில் இருந்த சிறுமிக்கு நான்கு வயது இருக்கும்" என்று தோன்றியது. அவளும் இவளை பார்த்தவாறே நின்றிருந்தாள். அவளுடைய குழந்தைகள் அந்த வயதில் எப்படி இருந்தார்களோ அப்படியே இருந்தார்கள் என்று தோன்றியது அந்தக் குழந்தைகளைப் பார்ப்பதற்கு. தாய்மை என்பது சுயநலமற்ற பேரன்பு. பெற்ற பிள்ளைகள் யாரும் திரும்பி பார்க்க விட்டாலும் அவர்களை பற்றிய நினைவுகள் என்றும் களங்கப்படுவதில்லை.
"உனக்கு இல்லாததா, வாப்பா வந்து உக்கார்ந்துக்கோ" என்றாள் வாஞ்சையுடன். சீட்டில் இருந்து சற்றே நகர்ந்து அவர்கள் இருவரும் ஜன்னலோரம் அமர்வதற்கு இடம் கொடுத்தாள். அப்பொழுது தான் கவனித்தாள். எதிர்த்த சீட்டில் ஒரு 35 வயது பெண்மணி அமர்ந்து இருந்தாள். செல்போன் கண்டுபிடித்த காலத்தில் வாங்கப்பட்ட போனில் யாரிடமோ மும்முரமாக பேசியவாறே இருந்தாள். சாதாரண வாயில் புடவையும் கழுத்தில் ஒரு மெல்லிய தங்க சங்கலியும், கையில் சாதாரண ரப்பர் வளையலும் அணிந்து இருந்தாள் அவள் குழந்தைகள் ஜன்னலருகே அமர்ந்ததை அப்பொழுது தான் கவனித்தாள் போலும்.
"ஒரு நிமிஷம், இரு " என்று போனில் கூறியவள். ப்ரீத்தா, ஜெகதீஷ் இங்க வாங்க என்றாள். சாரிமா, போன்ல பேசிகிட்டு இருந்தேன். பசங்க உங்க சீட்ல உட்கார்ந்து இருக்கறத கவனிக்கல" என்று அகிலாவிடம் மன்னிப்பு கேட்டாள்.
"எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லேம்மா. பசங்க கொஞ்ச நேரம் உக்கார்ந்துகிட்டு வரட்டும்" என்றாள் அகிலா.
'நன்றிமா. உங்களுக்கு கஷ்டமா இருந்தா இங்க அனுப்பி விடுங்க. என் பக்கத்துலேயும் இடம் இருக்கு" என்றாள்.
"சரிம்மா. நீ கவலைப்படாதே" என்றாள் அகிலா. குழந்தைகள் இருவரும் அவர்கள் பேசியதை கவனித்ததாகவே தெரியவில்லை. ஜன்னல் வழியாக அவர்களுக்கு தெரிந்த உலகத்தில் சஞ்சரிக்க தொடங்கி இருந்தார்கள். ட்ரெயின் கிளம்ப ஒரு ஐந்து நிமிடம் என்ற அளவில் இருக்கும் போது அடித்து பிடித்து மித்ரா அந்த கம்பார்ட்மெண்டில் ஏறினாள். சீட்டை தேடி வந்தவள் அகிலா இருக்கையில் அருகில் இருந்த சீட்டில் வந்து அமர்ந்தாள். வேகமாக ஓடி வந்திருக்கிறாள் என்பது அவளுடைய நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வை அரும்புகள் சொல்லியது. மூச்சு இரைத்ததால் தண்ணீர் பாட்டிலை பையில் இருந்து எடுத்தவள் வேகமாக சில மடக்குகள் குடித்தாள். அவள் தன் கையில் இருந்த கடிகாரத்தில் மணி பார்க்கவும், அந்த நெல்லை எக்ஸ்பிரஸ் மெதுவாக அந்த பிளாட்பாரத்தை விட்டு கிளம்பவும் சரியாக இருந்தது.
ஒரு வார பத்திரிக்கையை பையில் இருந்து துழாவி எடுத்து அதை ஸ்வாரஸ்யமன்றி புரட்டினாள் மித்ரா. கிட்ட தட்ட அந்த ட்ரெயினை தவற விட்டுருப்பாள். அடித்து பிடித்து வந்ததில் காலில் சிராய்த்து விட்டது. ரத்தம் கசிந்து அவள் அணிந்திருந்த லெக்கிங்கில் ஒரு கறையாக ஒட்டியிருந்தது. கொஞ்சம் லெக்கிங்கை மடித்து விட்டவள் தன்னுடைய கர்சீப்பில் தண்ணீரை ஒற்றி காயத்தை சிறிது சுத்தம் செய்தாள். "பார்த்து வரக் கூடாதா கண்ணு", என்றாள் எதிரில் இருந்தவள். "இரும்மா, பசங்க காயம் அடிக்கடி பட்டுக்குதுன்னு பேண்ட்-எயிட் வெச்சிருப்பேன். இரு பாக்கிறேன்" என்றாள் எதிர் சீட்டில் இருந்தவள். கொஞ்ச நேரம் தேடியவள், இந்தாம்மா என்று ஒரு பழுப்பு நிற பேண்ட்-எயிடை நீட்டினாள். "பரவாயில்லைக்கா" என்றாள் மித்ரா சங்கோஜமாக, காயத்தில் இருந்து ரத்தம் நிற்காமல் இருக்கவே சரி ஆபத்திற்கு பாவம் இல்லை என்று வேறு வழியின்றி வாங்கினாள். "நன்றிக்கா" என்று கூறியவள் காயத்தில் அந்த பேண்ட்-எயிடை வைத்து ரத்தம் நிற்குமாறு அமுக்கி பிடித்தாள். ஏனோ மித்ராவிற்கு அம்மாவின் ஞாபகம் வந்தது.
மித்ராவின் அம்மா சுவலட்சுமி ஒரு செவிலி. சின்ன வயதில் இருந்து ஊசி என்றால் அம்மாவிடம் மட்டுமே போட்டுக் கொள்வாள். அம்மாவும் அவளுக்கு பிடிக்கும் என்று பல வண்ண நிறத்தில் பேண்ட்எயிட் வைத்திருப்பாள். அப்படி புது நிற பேண்ட்-எயிட் கிடைக்க வில்லை என்றால் அவளே அழகான வண்ண ஸ்டிக்கர்களை சாதாரண பேண்ட்-எயிட் மீது ஒட்டி புதுமையான ஒரு பாண்ட்-எயிடை உருவாக்குவாள். பெரும்பாலான குழந்தைகள் ஊசியை பார்த்தாலே அலறும். ஆனால் மித்ராவோ நேர் எதிர். ஊசிக்கு பிறகு என்ன நிறத்தில், டிசைனில் பாண்ட்-எயிட் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பாள். சுவலட்சிமியும் அவளை ஏமாத்தியதே இல்லை.
கையில் இருந்த வார இதழின் புதிய பேப்பர் மணம் மித்ராவின் நாசியை துளைத்து மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்த்தியது. நாம் பூமியின் வாழ்வது எத்தனை நாட்கள் ஆனாலும் நமது எண்ணங்கள், நினைவுகள், உடல் தேவைகள் இவற்றை தாண்டி பல நேரங்களில் வாழ்வதே இல்லை. மித்ரா அவளுடைய அண்ணன் மிதுன் சுவலட்சமி, சசி என்று அழகான குடும்பம். அழகாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வு அப்பா சசி ஒரு விபத்தில் சிக்கிய பின் தலை கீழாக மாறியது. விபத்து நட,ந்த பிறகு யாரும் உதவிக்கு வராமல் பல மணி நேரம் போராடிய சசி மருத்துவ உதவி கிடைக்காமலேயே போராடி உயிரிழந்தார் என்பது மித்ராவிற்கு மிகுந்த வருத்தம் தரும் விஷயம். "அம்மா, எல்லாருக்கும் எல்லாரும் அவங்க கஷ்ட நேரத்துல உதவணும்" என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பாள் மித்ரா. மித்ரா "உலகம் நீ நினைப்பது போல் இல்லை, பல விதமான மனிதர்கள் கொண்டது. பல விதமான எதிர்பார்ப்புகள், பல விதமான ஆசைகள், கனவுகள், பல விதமான சுயநலங்கள். உனக்கு புரியாதும்மா. நீ சின்ன பெண்" என்பாள் சுவலட்சுமி.
சசியின் மறைவிற்கு பிறகு சுவலட்சிமியே மித்ராவிற்கும் அவளுடைய அண்ணனுக்கும் தாயும் தந்தையும் ஆனாள். அம்மா செல்லம் மித்ரா. மித்ரா கேட்டு நடக்காதது ஒன்றும் இல்லை. தாயும் ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றியதால் குடும்பத்தை நடத்தும் அளவிற்கு வருமானம் இருந்தது. மித்ராவும் பெரிய பெரிய விஷயங்களை கேட்டு ஆசை பட்டது இல்லை. பூ வேணும், வளையல் வேணும், ஹேர் கிளிப் வேணும் என்று சிறிய ஆசைகள் தான். புதுசா வார இதழ் வந்தா அம்மா அண்ணா இருவருக்கும் முந்தி தானே படிக்க வேண்டும், டிவியில தான் செலக்ட் செய்யற நிகழ்ச்சியை தான் எல்லாரும் பார்க்கணும் என்பது போன்ற சின்ன சின்ன ஆசைகள் என்பதால் யாருக்கும் அதை நிறைவேற்றுவதில் கஷ்டம் இருந்ததில்லை . படிப்பிலும் இரண்டு பிள்ளைகளும் சோரம் இல்லை என்பது தாய் சுவலட்சமிக்கு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. மிதுன் வெட்னெரி டாக்டருக்கு படித்து முடித்து ஒரு வேலையிலும் சேர்ந்தான். மித்ராவும் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். ஒரு அளவிற்கு பிள்ளைகள் வளர்ந்து வாழ்க்கை பளுவில் கை கொடுக்க வந்ததே சுவலட்சமிக்கு ஒரு தெம்பாக இருந்தது.
நாம் சமூகத்தில் ஓரளவு தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் போது வாழ்க்கை தலையில் ஓங்கிக் கொட்டி "நீ என்ன பெரிய ஆளு" என்று கேட்டு மறுபடியும் கீழே போட்டு மிதிக்கும். வாழ்க்கையின் மேலும் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தின் மேலும் நம்பிக்கை கொள்ள பல வருடங்கள் தேவைப்படலாம். ஆனால் நம்முடைய நம்பிக்கையையும், உறுதியையும் குலைக்கும் தருணங்கள் கண நேரத்தில் தோன்றி அந்த மாய பிம்பத்தை நசுக்கி போடும். அப்படியான தருணங்களில் நமக்கு அளிக்கும் கசப்பான அனுபவங்கள் நம்முடைய வாழ்க்கை மீதான பார்வையையே மாற்றும் வலிமை மிக்கது.
சுவலட்சமிக்கு இரண்டாம் நிலை கர்ப்பப்பை புற்றுநோய் என்று அறிந்ததும் அந்த மொத்த குடும்பமும் நொறுங்கி போனது. "அம்மா, அப்பா எல்லாம் எனக்கு நீ தானே மா, அப்பா போன போது கூட நான் இருக்கேன்னு. மித்ரா, கவலை பட கூடாதுன்னு சொல்லுவியே மா? நீ இல்லனா எனக்கு வேற யாரு இருக்கா?" என்று மித்ரா அழுத போது கூட சுவலட்சுமி அவளை அணைத்து "அப்பாவுக்குமான ஆயுளையும் பலத்தையும் கடவுள் எனக்கு கொடுத்திருக்கார். தினமும், பேஷண்டை பார்க்கற நானே நொறுங்கி போனா அப்பறம் எப்படிம்மா வியாதி குணமாகும்னு என்னாலே நாலு பேஷண்டை பார்த்து சொல்ல முடியும். பாதி வியாதி மனசுக்கு தான். நாம தான் தைரியமா இருக்கணும். என்னுடைய வியாதிக்கு சிறந்த மருந்து உன்னோட சிரிச்ச முகம் தான். அதனால நீ இனிமே இப்படி எல்லாம் அழ கூடாதுன்னு" என்று சிரிச்சுத் கொண்டே சொன்னாள். அவளுடைய நேர்மறையான அணுகுமுறையே அவள் அந்த வியாதியை வெல்ல ஏதுவாய் இருந்தது.
கர்ப்பப்பை நீக்கம், கீமோ தெரபி எல்லாம் முடிந்து மெல்ல உடல் தேறினாள் சுவலட்சுமி. பழையபடி உடல் தேறியதும் மிதுனிடம் மெல்ல அவனுடைய திருமண பேச்சை எடுத்தாள். "அப்பா, நான் நல்ல நிலைமையில இருக்கும் போதே உனக்கும் ஒரு நல்ல இடத்துல கல்யாணம் முடிச்சா எனக்கு சந்தோஷமா இருக்கும். மித்ராவை நீ நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுவேன்னு நான் நம்பறேன். உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா அதையே செய்யலாம். இல்லன்னா நானே பாக்கறதுக்கும் தயார்".
மிதுன் மிகுந்த தயக்கத்திற்கு பின் "என் கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணு மா. பேரு சுமித்ரா. நமக்கும் ஒரு விதத்துல சொந்தமா வரும். உனக்கும் பிடிச்சிதுன்னா எனக்கும் சம்மதம்" என்றான். சுமித்ரா அவளுடைய தூரத்து உறவினரின் பெண். பார்க்க நல்ல அழகாக இருந்தாள். சிவந்த நிறம். சுருள் முடி. பி.ஏ. வரை படித்திருந்தாள். அவர்கள் வீட்டிலும் சம்மதிக்கவே ஒரு நல்ல நாளில் மிதுனுக்கு மனைவியானாள். வீட்டின் மேல் தளத்தில் மிதுனும் சுமித்ராவும் இருக்க, சுவலட்சுமியும், மித்ராவும் கீழ் தளத்தில் வசித்தார்கள். மித்ரா ஹாஸ்டலில் தங்காமல் தினமும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தாள்.
தனக்கு பின் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேறு ஒரு ஆள் வந்ததாலோ என்னவோ சுவலட்சமிக்கு மீண்டும் புற்றுநோய் திரும்பியது . தனக்கு பின் மகனும் மருமகளும் மித்ராவை பார்த்துக் கொள்வாள் என்று நம்பிக்கையிலேயே இந்த முறை நோயுடன் அதிகம் போராடாமலேயே போய்விட்டாள். மித்ராவை அம்மாவின் இழப்பு பெரிதாக பாதித்தது.
தனியாக அவள் மட்டும் கீழ் தளத்தில் இருக்க முடியாததால் அண்ணன் குடும்பத்துடன் மேல்தளத்திற்கு சென்று தங்க வேண்டியதாய் இருந்தது. வீட்டிற்கு வந்தால் அம்மாவின் நினைவு வந்து வாட்டும் என்பதாலும் புதிதாய் திருமணம் ஆன அண்ணன் அண்ணியுடன் தங்குவதற்கும் தயங்கி வீட்டுக்கு வராமல் காலேஜ் ஹாஸ்டலிலேயே தங்கிவிடுவாள் மித்ரா. அண்ணனும் கிளினிக்கிற்கு வேண்டும் என்று கீழ் தளத்தை அவனுடைய அலுவலகமாக மாற்றி இருந்தான். பேமிலிக்கு வேண்டும் என்று மேலேயும் கீழேயும் கொஞ்சம் வீட்டை விஸ்தாரமாய் கட்டினான். மித்ராவும் காலேஜ் முடித்து ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து சில வருடம் உருண்டோடியது.
அண்ணனுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. பெரியவளுக்கு 4 வயதும், சிறியவளுக்கு 2 வயதும் ஆகி விட்டது. மித்ராவிற்கும் வயது ஆகிக் கொண்டு இருந்தது. அவளுடன் கூட படித்த ஸ்கூல் மற்றும் காலேஜ் தோழிகள் நிறைய பேர் கல்யாண பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுக்கும் போது அவளுக்கும் மிதுன் நல்ல இடத்தில இதே போல மணம் முடிப்பான் என்று நினைத்துக் கொள்வாள். ஆனால் மிதுன் அவள் கல்யாணத்திற்காக எந்த முயற்சியும் எடுத்தார் போல தெரியவில்லை. இதை எப்படி அவனிடம் கேட்பது என்று யோசித்து பார்த்தும் அவளுக்கு சரியான வழி ஒன்றும் புலப்படவில்லை.
இந்த முறை அவள் அலுவலக விடுமுறையில் வீட்டிற்கு சென்ற போது தான் மிதுன் அவளுடைய திருமணம் பற்றிய என்ன எண்ணத்தில் இருக்கிறான் என்ற கேள்விக்கு விடை தெரிந்தது. அவள் ஹாலில் அமர்ந்து டிவியில் ஏதோ ஒரு திரை இசை பாடல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே கிளினிக்கில் இருந்து வேலை முடிந்து மேலே வந்த மிதுன் "கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வா, மித்ரா" என்றான். அவளும் சமையலறை சென்று தண்ணீர் எடுத்து வந்து தந்தாள். அதை வாங்கி குடித்தவன், "தாங்க்ஸ்" என்றான்.
"அப்பறம் ஒர்க் எல்லாம் நல்லா போகுதா?"
"போகுது அண்ணா, புது ப்ராஜெக்ட் கொடுத்திருக்காங்க. புது டெக்னாலஜி. ஸ்பெக்ஸ் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கு. அதனால வேலை ரொம்ப ஜாஸ்தி. வீட்டுக்கு வர லீவ் கூட கொடுக்கறது இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு லீவ் வாங்கினேன் இங்க வர."
"ஹ்ம்ம், நீ ஏன் கஷ்டப்பட்டு லீவ் எல்லாம் வாங்கறே. அங்கேயே இருந்து முடிச்சி கொடுத்துட்டு அப்பறம் வர வேண்டியது தானே."
"இந்த ப்ராஜெக்ட் மூணு வருஷ ப்ராஜெக்ட். ஒரு வருஷம் முடிஞ்சிடிச்சு. இன்னும் ரெண்டு வருஷம் பாக்கி இருக்கு. அப்பறம் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் தான் வர முடியும். சரி, உங்கள எல்லாம் பாத்து ரொம்ப நாள் ஆச்சே அப்படின்னு வந்தேன்"
"இங்க பாரு மிது, நானும் வேலைல பிஸி. அண்ணியும் பசங்கள பார்த்துக்கறதுல பிஸி. நீ அங்க ஹாஸ்டெல்ல இருக்கறது உனக்கு வசதியாவும், பாதுகாப்பாவும் இருக்குன்னு நினைக்கறேன். கொஞ்சம் நண்பர்களும் கிடைச்சிருப்பாங்க. நீ அங்கேயே உன் தோழிகள் கூட என்ஜாய் பண்ணு. நாங்க எப்பவாவது சென்னை வரும் போது உன்னை வந்து பாக்கறோம். அடிக்கடி நீ தனியா ட்ராவல் பண்ணி வரது பாதுகாப்பாக இருக்காது. அதனால இப்படி எல்லாம் திடு திடுப்புன்னு வராதே. உனக்கு புரியும்னு நினைக்கறேன். பார்த்துக்கோ" என்றான்.
அவன் சொன்னதில், சொல்லாமல் விட்டது சில. அவளுக்கு கொஞ்சம் புரிந்த மாதிரியும் இருந்தது, கொஞ்சம் புரியாத மாதிரியும் இருந்தது. வராதே, என்பதை இவ்ளோ நாசுக்காக சொல்கிறானே, இவன் நம் கூட பிறந்தவனா என்று ஒரு கணம் தோன்றியது. அம்மாவிற்கு பின் அண்ணன் மட்டுமே அவளுக்கு இருந்த ஒரே உறவு. அவனும் இப்படி சொல்லும் அளவிற்கு பெரியதாக ஒரு தவறும் அவள் செய்யவில்லை. இரவு உணவு முடிந்த பிறகு, பாத்திரம் துலக்கியவாறே அவளுடைய அண்ணியிடம் மெதுவாக "அண்ணி, நான் இங்க வரதுல உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் இருக்கா. அண்ணன் ஏதோ சொன்னார். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்றாள் மெதுவாக.
"நீ இங்க அடிக்கடி வந்து போகும் போதெல்லாம் கல்யாண வயசுல இருக்கற தங்கச்சிக்கு உங்க அண்ணன் இன்னும் கல்யாணம் செஞ்சு வைக்கலேன்னு எல்லாரும் பேசறாங்க. வீடு கட்டினது, பசங்க பிறந்தது என்று நிறைய செலவு. இந்த நேரம் நிறைய செலவு பண்ணி உனக்கு கல்யாணம் எல்லாம் செய்ய முடியாது. ஐ.டி.லே வேலை செய்யற வரன் அப்படின்னா குறைஞ்சபட்சம் ஒரு பத்து அல்லது பதினைந்து லட்சம் செலவு ஆகும். விலைவாசி விக்கிற விலையில் இப்போ கல்யாணம் செய்யறது எல்லாம் ரொம்ப காஸ்டலியான விஷயம். நீயே யாரையாவது பார்த்து பண்ணிக்கோ. நானும் ரெண்டு பெண் குழந்தைகளை வெச்சிருக்கேன். நாளைக்கு அதுகளையும் படிக்க வெச்சி கரையேத்தனும். உனக்கே செஞ்சிட்டா அப்பறம் என் பசங்களுக்கு எங்க போறது" என்றாள் நறுக்கு தெறித்தார் போல.
அன்று இரவு முழுவதும் பேயறைந்தார் போல இருந்தாள் மித்ரா. வீதி வரை கூட உறவு இல்லை என்பது அவளுக்கு கசந்தது. "சீ, என்ன இந்த மனிதர்கள்" என்று மருகினாள். அடுத்த நாளே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று பெரு முயற்சி செய்து பெற்ற ட்ரெயின் ரிசர்வேஷன் இது. கடைசி நேரத்தில் கிடைத்ததால், அடித்து பிடித்து தான் வந்து ஏற முடிந்தது. அப்படி தான் ஓடி வருகையில் காயம் பட்டுக் கொண்டாள். காயத்தை பார்த்தவள், மனதில் இருப்பதை விட சிறிய காயம் தான், எப்படியும் இந்த கால் காயம் சீக்கிரம் ஆறிவிடும் என்று தேற்றிக் கொண்டாள். அந்த அக்கா தந்த பாண்டெயிடை போட்ட பின்பு பெருமளவு ரத்தம் நின்றார் போல தெரிந்தது. அவசரமாக ஓடி வந்ததில் வெறும் பிஸ்கட் பாக்கெட் மட்டுமே வாங்க முடிந்தது. எங்கேயாவது நிறுத்தினால் ஏதாவது சாப்பாடு வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
பவானி அந்த செல்பேசியை அணைத்தாள். தன் முன்னாள் இருந்த வயதான பெண்மணியையும், காயத்திற்கு பாண்டெயிடை அணிந்து ஏதோ புத்தகத்தில் லயித்திருந்த அந்த இளம் பெண்ணையும் பார்த்தாள். குழந்தைகள் இருவரும் அந்த வயதான பெண்மணிக்கு அருகில் சமர்த்தாக அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதாவது வேணுமா சாப்பிட என்று பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து சைகையிலேயே கேட்டாள். குழந்தைகள் இருவரும் தலையை ஆட்டவே அந்த பிஸ்கட் பாக்கெட்டை மீண்டும் உள்ளே வைத்தாள். ஒரு மிடறு தண்ணீரை கையோடு கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் இருந்து குடித்தவள் ஊரில் இருந்து வந்த பிறகு, இருக்கப் போகும் வேலைகளை எண்ணிப் பார்த்தாள். இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததால் நிறைய துணிகள் சேர்ந்து இருக்கும் தைத்துக் கொடுப்பதற்கு. மாலை வேளைகளில் அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளுக்கு கணக்கு டியூஷன் வேறு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்க்கு நடுவே சமையல், வீட்டு வேலை என்று சரியாக இருக்கும். காலை முதல் இரவு படுக்கும் வரை வேலை நிறைய இருக்கும். எண்ணியதுமே ஆயாசமாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டாள் . தடக் தடக் என்று அந்த ரயில் போடும் கீதம் தாலாட்டை போலவே இருந்தது.
இரவுப் பொழுதுகளில் ரயில் பயணம் என்பது பவானிக்கு நிரம்பப் பிடிக்கும். பெர்த் இருப்பதால் நன்றாக காலை நீட்டிப் படுத்து உறங்கலாம். கையில் இரவு உணவிற்காக இட்லி எடுத்து வந்திருந்தாள். பசங்களுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு முடித்தால் படுக்க வேண்டியது தான். நன்றாக ஓய்வு எடுத்தால் தான் அடுத்த நாளைக்கான வேலைகளை செய்ய முடியும். பெண்களுக்கான வேலைகள் ரயிலும் தண்டவாளமும் போல. முடிவே இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். சாகும் நாள் அன்றே பெண்களுக்கான வேலைகள் தீரும் என்று நினைத்துக் கொண்டாள். தன்னையே அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளியேறியது. இப்பொழுதே சாப்பிட கொடுத்து விட்டால் காலை வேளையில் குழந்தைகளுக்கு சீக்கிரமே பசிக்கலாம். எனவே கொஞ்ச நேரம் பொறுத்தே சாப்பாட்டை கொடுக்கலாம், அது வரை கொஞ்சம் கண்மூடி அமர்ந்திருக்கலாம் என்று நினைத்தாள்.
கண்ணை மூடியதும் பழைய எண்ணங்கள் வந்து போனது. சிதம்பரத்திற்கு பக்கத்தில் லால்பேட்டை என்று ஒரு சின்ன ஊர். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவள் பவானி. விவசாய வேலை, பண்ணை வேலை என்று பாடுபட்டே குழந்தைகளை வளர்த்தார்கள் அவளுடைய பெற்றோர். பவானிக்கு ஒரு கூடப் பிறந்த அக்கா. அக்காவை 12 வது வகுப்பு வரை படிக்க வைத்து 10 பவுன் நகை போட்டு சிதம்பரத்தில் திருமணம் முடித்து கொடுத்தார்கள். மாப்பிள்ளை ஒரு பட்டறை வைத்திருந்தார். அந்த ஒரு கல்யாணத்தை முடிக்கவே கடனை உடனை வாங்கித் தான் செய்தார்கள். அடுத்து பவானிக்கு அவ்வளவு செலவு செய்ய முடியாது என்று சொந்தத்திலேயே ஒரு இடத்தை பேசி முடித்தார்கள். வாசு சென்னையில் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தான். அவளை கரம் பிடித்த நேரம் அந்தக் கடையில் வியாபாரம் பெருகியது. அவனுடைய முதலாளியே வாசுவுக்கு வேறு ஒரு இடத்தில சிறிய கடையை வைத்துக் கொடுத்தார். வாசுவும் திறமையாக வேலை பார்த்து வியாபாரத்தை பெருக்கினான். வாழ்க்கை இனிமையாக சென்றது. ஜெகதீஷ் பிறந்தான். சொந்தமாக ஒரு இடம் வாங்கி ஒரு சிறிய வீட்டை கட்டினார்கள். வியாபாரம் வளர, வாசு நிறைய நேரம் கடையில் இருந்து வியாபாரத்தை செய்ய நேர்ந்தது. வீட்டில் சும்மா இருக்க முடியாமல் பவானி உபயோகமாக இருக்குமே என்று தையல் பயின்றாள். அக்கம் பக்கம் இருந்த குழந்தைகளுக்கு தமிழ், கணக்கு பாடங்கள் சொல்லித்தர ஆரம்பித்தாள். கொஞ்சம் வருமானமும் வந்தது. பொழுதை உபயோகமாக கழிக்கவும் முடிந்தது. தையல் பயிற்சி முடித்த பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு நேர்த்தியாக தைத்துக் கொடுக்க ஆரம்பித்தாள்.இதனால் வாடிக்கையாளர்கள் பெருக, வருமானம் வர ஆரம்பித்தது.
"க்ரீச்" என்ற ஒலியுடன் வண்டி நின்றதும் பவானி தன் சிந்தனை கலைந்து கண் திறந்தாள். செங்கல்பட்டு என்று பல வண்ணங்களில் எழுதப்பட்ட பலகை வரவேற்றது. ஹிந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியுணர்வு என்று பல்வேறு காலங்களில் எழுதப்பட்டது போலும். ஒரு சில இடங்களில் புதியதாகவும் ஒரு சில இடங்களில் பழையதாகவும் அந்தி வானம் போல என்ன வண்ணம் என்று சொல்ல இயலாத அளவு பல வண்ணங்களில் காட்சியளித்தது அந்த பெயர் பலகை. பழம், வெள்ளரி, பாப்கார்ன் என்று பலதும் விற்கப்பட்டது.
"அம்மா, அம்மா" என்று ப்ரீத்தா அழைத்ததும் பவானி அவளைப் பார்த்தாள்.
"என்னம்மா வேணும்? "பாப்கார்ன்" என்றாள் ப்ரீத்தா எதிர் பார்ப்புடன். சரி, பாப்கார்ன் மட்டும் தான், என்ன சரியா? என்றவாறே பேரம் பேசி பாப்கார்ன் இரண்டு பாக்கெட் வாங்கி "ரெண்டு பேரும் சாப்பிடுங்க" என்று கொடுத்தாள். பின்னர் சாய்ந்து உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அருகில் இருந்த இளவயது பெண் வெளியே பார்வையை செலுத்தி எதையோ தேடியவாறே இருந்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ, அவளும் இரண்டு பாப்கார்ன் பாக்கெட்டுகள் வாங்கி கொண்டாள். இவள் பார்ப்பதை கண்டதும் "இல்லை, நைட் சாப்பிடறதுக்கு சாப்பாடு எதுவும் எடுத்துக் கிட்டு வரலை. அதான், ஏதாவது சாப்பாடு கிடைக்குமான்னு பார்த்தேன்" என்றாள். "இங்கெல்லாம் அதிக நேரம் ட்ரெயின் நிக்காது. வேற ஏதாவது ஸ்டேஷன்ல பார்க்கலாமா" என்றாள் ஆதரவாக. "இல்லைனா என் கிட்ட இட்லி இருக்குமா. ரெண்டு இட்லி கூடுதலாவே எடுத்துட்டு வந்திருக்கேன். உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லனா நீயும் சாப்பிடலாம்" என்றாள் வாஞ்சையுடன். "இல்லைக்கா எப்படியும் அடுத்த ஸ்டேஷன்ல சாப்பாடு கிடைச்சுடும். வாங்கிக்கறேன்" என்றாள்.
உங்க பேரு என்னக்கா?
பவானி. உன் பேரு என்னம்மா?
என் பேரு மித்ரா.
ரொம்ப நல்ல பேருமா. எங்க வரைக்கும் போறேம்மா?
மதுரை வரைக்கும் போறேன். நீங்க எது வரைக்கும் போறீங்க அக்கா?
நானும் மதுரை வரைக்கும் தான் போறேன். மதுரைல ஒரு கல்யாண வீட்ல வேலை. அந்த வேலைய முடிச்சி கொடுத்துட்டு அப்பறம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் ஒரு வேண்டுதல் பாக்கி இருக்கு. அப்படியே அதையும் முடிச்சிட்டு வரலாம்னு போறோம்.
மதுரைல எவ்ளோ நாளுமா?
ஒரு ரெண்டு மூணு நாளு. பிரெண்ட்டை பார்க்க போறேன் .
சிறிது நேரம் மௌனம் நிலவியது.
"ப்ரீத்தா, ஜெகதீஷ் வாங்க சாப்பிடலாம்" என்று அழைத்தாள் பவானி. ரயில் செங்கல்பட்டை தாண்டி விரைந்து கொண்டிருந்தது.
அதே கம்பார்ட்மெண்டில், இரண்டு அடுக்குகள் தாண்டி அமர்ந்திருந்த கதிர் கடந்து போகும் இரவுக் காட்சிகளை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தான். மதுரைக்கு பக்கத்தில் சிறுவளை என்ற கிராமம் தான் அவன் சொந்த ஊர். சொந்த ஊருக்கு தான் போகிறான் என்றாலும் பெரியதாக அவனுடைய முகத்தில் மகிழ்ச்சியில்லை. கொஞ்சம் ஆற்றாமையும் நிறைய கோபமும் அவன் கண்களில் தெரிந்தது.
நிறைய கோபத்தை அவன் கண்கள் பிரதிபலித்தாலும் அவனுடைய இதழ்களில் ஒரு மெல்லிய முறுவல் இழையோடியது. அது இன்றைய சினிமாக்களில் வரும் வில்லனை ஒரு சாயலில் நினைவு படுத்தியது. அவனுடைய பையில் இருந்த 10000 ருபாய் முகூர்த்த பட்டு சேலை அந்த பையை பத்திரமாக எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பை கொடுத்திருந்தாலும், அவன் அதை பொருட்படுத்தாது, அந்த பையை அலட்சியமாக வேறு யாரோ அமர்ந்து இருந்த சீட்டின் அடியில் வைத்திருந்தான்.
"இப்படி ஒரு காரியம் பண்ணி என் குடும்ப மானத்தை வாங்கிட்டா இல்ல. அவளை சும்மா விட கூடாது" என்று உள்ளுக்குள் கனன்றான். ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருந்த முகூர்த்த புடவையை அவளுடைய பிணத்திற்கு போர்த்த வேண்டும் என்ற பேராவல் ஒரு நிமிடம் எழுந்து அடங்கியது. "மீனாட்சியும் மீனாட்சி பேரைப் பாரு. செய்யறது எல்லாம் கேவலமான காரியம். இவளுக்கெல்லாம் பேரு யாரு வைக்கறா" என்று பொருமினான். "அவளை கொன்னா தான் ஏன் ஆத்திரம் தீரும்" என்று நினைத்தான். அந்த எண்ணம் அவனுடைய கொதிக்கும் மனதிற்கு ஆறுதல் தருவதாக இருந்தது. தடக் தடக் என்று அதிர்ந்த அந்த ரயில் சத்தம் அவனுடைய கொடிய எண்ணத்திற்கு ஒரு முன்னுரையை போலவே ஒலித்தது.
இன்ஸ்பெக்டர் ராம் அவருடைய 10 வருட போலீஸ் துறை அனுபவத்தில் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். சில்லறை திருட்டு, மணல் திருட்டு, கஞ்சா, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை என்று பார்க்காத குற்றம் இல்லை. முதலில் கேஸ் வரும் போதெல்லாம் இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியம் வரும். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து மனிதர்கள் மேல் உள்ள நம்பிக்கையே தேயும் அளவிற்கு நிறையவே மாறியிருந்தார். போலீஸ் புத்தி என்பார்களா அந்த போலீஸ் புத்தி அவருக்கு இப்போது இயல்பாய் வந்தது. சில சமயம் குடுமபத்தினரிடம் பேசும் போதும் கூட சந்தேக புத்தி என்பது இயல்பாகி போனது. "எங்க போனே இந்த நேரத்துல" என்ற அவருடைய குழந்தைகளின் மீதான விசாரணை கூட அவருடைய மனைவிக்கு கோபத்தை தந்தது. வீட்டுக்கு வந்த பிறகும் "இது என்ன போலீஸ் ஸ்டேஷன் மாதிரி. ஒரு டம்ளர் சலவை கஞ்சிய குடிச்சா மாதிரி விறைப்பாவே இருந்தா எப்படி" என்று அவரின் காதுபடவே புலம்புவாள். "என்ன செய்யறது? சந்தேகம் கூடவே வளர்ந்தது" என்பார்.
மதுரை திலகர் திடலில் உள்ள அந்த C-4 காவல் நிலையம் பரபரப்பாக இருந்தது. 'சார், எஸ்.பி. ஆபீஸ்-லேர்ந்து போன்' என்றதும் யோசனை கலைந்து அந்த போனை சரக்கென்று வாங்கினார் இன்ஸ்பெக்டர் ராம்.
'வணக்கம் சார். இன்ஸ்பெக்டர் ராம் பேசறேன்' என்றார்.
ராம், நான் எஸ்.பி. முத்துமாணிக்கம் பேசறேன். ஒரு பைல் அனுப்பறேன் பாருங்க. அடுத்த 72 மணி நேரம் மதுரை ஏர்போர்ட், ஜங்ஷன் மற்றும் உங்க ஏரியால இருக்கற செக்போஸ்ட் எல்லா இடத்துலயும் செக்யூரிட்டிய அதிகப் படுத்துங்க. சந்தேகப்படறா மாதிரி இருக்கறவங்கள நல்லா விசாரிச்சு அனுப்புங்க. திருப்தி இல்லனா ஒரு ரெண்டு நாள் ரிமாண்ட் பண்ணுங்க . முக்கியமான என்ட்ரி - எக்ஸிட் ஏரியால ஏதாவது CCTV கேமரா ஒர்க் செய்யலைன்னா அதை உடனே தெரியப்படுத்துங்க. எவெரி 24 ஹவர்ஸ் எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்க.
சரி சார். என்ன விஷயம் சார்? ஸ்டேஷன்ல ஒரு 10 போலீஸ் காரங்க இப்போ செக்யூரிட்டிக்குன்னு ரீ-அசைன் பண்ண முடியும். இன்னும் ஒரு இருபது பேர் இருந்தா நல்லா இருக்கும் சார்.
ஒரு சிலை கடத்தல் கேசு. கொளஞ்சி ஆதினத்துலே இருந்து சிலைகளை கண்டுபிடிக்க சொல்லி பிரஷர். ஆட்கள் பத்தி கவலை வேண்டாம். அதெல்லாம் நான் பேசிட்டேன். D-3 ஸ்டேஷன்லேர்ந்து ஒரு நாலு கான்ஸ்டபிள்ளும், சுப்ரமணியாபுரம் ஸ்டேஷன்லேர்ந்து இருந்து ஒரு 6 கான்ஸ்டபிள்ளும் வருவாங்க. அவங்களுக்கு விரிவா தகவல் சொல்லி அனுப்புங்க. இதுக்கும் மேல ஆட்கள் தேவைன்னா மத்த ஸ்டேஷனை கான்டாக்ட் பண்ணுங்க. எஸ்.பி. ஆர்டர் ன்னு சொல்லுங்க. மறந்துடாதீங்க எனக்கு ரிப்போர்ட் வந்தாகணும் எவெரி 24 ஹவர்ஸ்'. அவர் சரி என்று சொல்ல வாயெடுப்பதற்குள் அந்த கால் துண்டிக்கப்பட்டது.
அந்த C-4 ஸ்டேஷன் எப்போதும் ஒரே பிஸி தான். வெட்டு, கொலை, அடிதடி, திருட்டு என்று பல விதமான கேஸ்கள் வரும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, அவர்களுக்கு எதிரான ஆவணங்களை தயார் செய்வது என்று வேலை பெண்டு கழலும் . இது மட்டும் இல்லாமல் வரும் விஐபி-க்களுக்கான செக்யூரிட்டி, டிராபிக் ஒழுங்குபடுத்தல், போதை பொருள் கடத்தல் தடுப்பு என்று பல விதமான சவாலான பணிகள் நிறைந்த வேலை. "இன்னும் நல்லா படிச்சிருந்தா இந்த மாதிரி வேகாத வெயில்ல கஷ்டப்படற வேலையா இல்லாம, போனை எடுத்து இதை பண்ணுன்னு அதை பண்ணுன்னு ஆர்டர் போடற வேலை எனக்கு கெடச்சிருக்கும்" என்பதை நீண்ட பெருமூச்சின் மூலம் வெளிப்படுத்தினார்.
"நம்ம ஸ்டேஷன் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 250 CCTV கேமராவில் எத்தனை வேலை செய்யவில்லை" என்ற ரிப்போர்ட் கொடுங்க என்று உத்தரவு போட்டுவிட்டு, காவல்துறையின் நண்பர்கள் மற்றும் ஏனைய ஸ்டேஷன்களை அழைத்து வேறு 10 போலீஸ்காரர்களுக்கு ஏற்பாடுகள் செய்தார். அவர்கள் எந்த எந்த இடங்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக செல்ல வேண்டும் என்பதையம் தெரிவித்து விட்டு, அவர் தனது டேபிளுக்கு வரவும், ஒரு கான்ஸ்டபிள் ஒரு கோப்பை அவருடைய டேபிளில் வைக்கவும் சரியாக இருந்தது.
எடுத்துப் படிக்கத் தொடங்கினார். சென்னை பெருங்குடியில் இருந்து திருடப்பட்ட ஆனந்த நடராஜரின் ஐம்பொன் சிலை, பார்வதி தாயார், முருகன், மற்றும் விநாயகர் சிலைகளின் அளவுகள் மற்றும் எடையும் குறிக்கப் பட்டு இருந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தயாரிக்கப்பட்ட தரவாய் இருக்கக் கூடும் என்று தோன்றியது. ஏனெனில் வழக்கத்தை விட சற்று அதிகமான தகவல் இருந்தது. சிலை திருட்டு என்பது ஒரு நூதனமான திருட்டு என்பதை அறிந்தவர். கிட்ட தட்ட 40,000 கோவில்கள் கொண்டு ஒரு காலத்தில் மிகவும் பணக்கார மாநிலமாக இருந்த தமிழகத்தில் கிட்ட தட்ட 4.3 லட்சம் சிலைகள் இருப்பதாக சொல்லப் படுகிறது. இந்தியா முழுவதும் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் ஒரு இருபது விழுக்காடு அதாவது 14 லட்சம் சிலைகள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழர்கள், செப்பை கொண்டு அழகிய வட்ட முகத்துடன் கூடிய அழகிய சிலைகள் செய்வதில் வல்லவர்கள். பாண்டியர்களில் அழகிய கற்சிலைகளை வடிப்பதில் தேர்ந்தவர்கள். இந்த சிலைகள் தான் சிலை கடத்தல் பேர்வழிகளின் பிரதான இலக்கு. எத்தனை பழமையான சிலைகளோ அத்தனைக்கு அத்தனை அந்த சிலைகள் சர்வதேச சந்தையில் விலை போகும்.
சர்வதேச மார்க்கெட்டில் கண்டிப்பாக விலை போகும் என்று தெரிந்த சிலைகளை வெளியூர் மற்றும் வெளிநாட்டு ஏல நிறுவனத்தின் அதிகாரிகள், அல்லது சிலை சேகரிப்பாளர்கள் முதலில் தெரிவு செய்வார்கள். இதற்காக தங்கள் ஆட்களை இந்தியாவிற்கு அனுப்பி, அவர்களை இந்தியாவில் இம்மாதிரி செயலில் ஈடுபடும் ஆட்களுடன் நட்பு கொள்வர். இந்த குழு பல்வேறு கோவில்களுக்கு சென்று தங்களுக்கு வேண்டிய சிலைகளை குறித்து தகவல் சேகரிப்பர். தெரிவு செய்யப்படும் சிலைகள் எங்கு உள்ளது, அந்த கோயில்களில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது, அந்த கோயிலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நபர்கள் எப்படிப்பட்டவர், அவர்கள் நமக்கு உதவுவார்களா என்பதை தெரிந்து கொண்டு, எல்லாம் ஒத்து வரும் பட்சத்தில், உள்ளூரில் உள்ள சிறு திருடர்களை கொண்டு அந்த சிலைகளை கடத்துவர். அந்த திருடர்கள் கடத்தும் சிலைகள், பல்வேறு கைகள் மாறி, இறுதியில் கலை பொருட்கள் என்ற பெயரில், சில சர்வதேச துறைமுகங்கள் வழியாக வெளி நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் மட்டும் சிலைகள் மற்றும் பழைமையான பொருட்களின் வர்த்தகம் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் என்ற அளவில் நடக்கிறது. அதிகார பலமும், பண பலமும் கொண்டு நமது பாரம்பரியமும் கலாச்சாரத்தின் விழுமியங்களும் களவு போவதை பற்றிய விழிப்பு உணர்வு போதிய அளவு மக்கள் மத்தியில் இல்லை என்பது வருந்தக் கூடிய விஷயம் என்று நினைத்தார் இன்ஸ்பெக்டர் ராம். ஆனால் போதுமான அளவு தரவுகளும், சிலைகளை பற்றிய தகவல் காப்பகங்கள் இன்னமும் கொண்டு வருவதில் அரசாங்க மிகுந்த சுணக்கம் காட்டுவதால் ஆண்டு தோறும் ஒவ்வொரு இந்திய மாநிலமும் 150 முதல் 200 சிலைகள் வரையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கின்றன என்பது இன்றைய யதார்த்தம். 1970 முதல் இன்று வரை வெறும் 19 சிலைகளை மட்டுமே அயல் நாட்டிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது இந்தியா என்பது, 1900 முதல் இந்தியா ஒலிம்பிக்கில் வாங்கிய 28 மெடல்களின் அளவை விடவும் மிகவும் கம்மி. வேலியாய் காக்கும் பொறுப்பில் உள்ளோர்களின் அலட்சியமே இந்த துயரத்திற்கு காரணம்.
எப்படியாவது முயன்று இந்த சிலைகளையாவது கடத்தப்படாமல் தடுக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் ராம்.
இந்த குறுநாவலின் மீதிப் பகுதியை Kindle வழியாக படிக்கலாம். இதற்கான இணைப்பு கீழே.
https://www.amazon.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-Tamil-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-ebook/dp/B08Y8BCRM9/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&qid=1616766493&s=digital-text&sr=1-1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக