வெள்ளி, டிசம்பர் 18, 2020

வல்லினச் சிறகுகள் - கவிதை நேரம்

உலக பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா என்ற அமைப்பு மாதம் ஒரு முறை வல்லின சிறகுகள் என்ற மின்னிதழை வெளியிட்டு வருகிறது. கவிஞர்களுக்கு அதுவும் குறிப்பாக பெண் கவிஞர்களுக்கு மட்டுமேயான இந்த இதழ் நேர்காணல், மொழி பெயர்ப்பு கவிதைகள், அயல் நாட்டு கவிஞர்கள் அறிமுகம் மற்றும் உலகெங்கும் உள்ள பெண்கள் எழுதும் கவிதைகள் ஆகியவற்றை தாங்கி வருகிறது. செப்டெம்பர் 2020 தொடங்கப்பட்ட இதழ் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வாக்கில் வெளியாகிறது. சென்ற இதழில் மட்டும் அல்லாமல் இந்த மாத இதழிலும் என்னுடைய கவிதை வெளியாகி உள்ளது. கீழ் உள்ள இணைப்பில் இந்த மின்னிதழை வாசிக்கலாம்.

https://tinyurl.com/y79sywfs

என்னுடைய கவிதை கீழே:

கருப்பொருள்


அந்தி மஞ்சள் வானம் அடர்நிற தேநீர்

பளிங்கு வெள்ளை தாள்களில் 

கவி பச்சைக் குத்த பேனா

பாடு பொருளாய் எதைக் கொள்வது 

பளிங்கு நிலவை வர்ணித்து

நட்சத்திரங்கள் அளவு கவிதை நெய்தாகிவிட்டது

காதல் பற்றி திரைப்பாடல் சொல்லாததை 

ஒருபோதும் என் பேனா பிரசவிக்காது

மழலை தருமின்பம் ஒரு தாயை விடவா

என்னால் அழகுற தமிழில் வடிக்க முடியும்

நாட்டைப் பற்றி முண்டாசுக் கவி பேசாததையா

இந்தச் செல்பேசிக் கவியால் உரைக்கவியலும்

பெண்ணைக் கவிதையால் போற்றலாம்

எனினும் சுயவிளம்பரத்தில் பற்றில்லை

இயற்கையை கவிதையில் சுருக்க

கனமான சொற்கள் என் வசமில்லை

பாடுபொருளற்ற நேரங்களில்

வார்த்தைகளால் வடிக்கவியலா மௌனமே

மென்கவிதையாகி விடுகிறது





அத்துடன் வல்லின சிறகுகள் அமைப்பு நடத்தும் உலகளாவிய மருத்துவர் ஜெ. அம்பிகாதேவி நினைவுப் பரிசு போட்டியை பற்றிய விவரங்களை பக்கம் மூன்றில் காணலாம். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பான பரிசுகள் காத்திருக்கின்றன. பார்த்து பயனடையுங்கள்.



சென்ற வல்லின சிறகுகள் இதழில் வெளியான கவிதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

http://pachaimannu.blogspot.com/2020/11/blog-post.html






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக