புதன், டிசம்பர் 09, 2020

விடியல்


 

பரமசிவம் “அப்பாடா” என்றவாறே அந்த சேரில் சாய்ந்து உட்கார்ந்தார். அந்தப் பழைய நாற்காலியும்  அவருடைய சோர்வை பிரதிபலிப்பது போல் “க்ரீச்” என்று சப்தம் எழுப்பியது. கழுத்தில் வியர்வை அரும்பி அவரது முதுகில் வழிந்தது. டேபிளிலில் இருந்த ஃபேன் ஸ்விட்சை தட்டினார். ஃபேன் காற்றுப் பட்டதும் ரொம்ப இதமாக இருந்தது. அவருடைய அரவம் கேட்டு அவருடைய மனைவி ராஜம் ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரவும், அதை ஆர்வத்துடன் வாங்கிப் பருகினார்.

பரமசிவத்திற்கு வயது எழுபத்தி இரண்டு ஆகிவிட்டது. கவர்மெண்ட் உத்யோகத்தில் இருந்து ரிட்டையர்ட் ஆன பின், முழு மூச்சாக விவசாயத்தை கவனிக்கிறார். வயோதிகத்திற்கு ஏற்றத் தளர்வு அவரிடம் இருந்தது.  பரமசிவம் தண்ணீர் அருந்தி முடித்தவுடன் ராஜத்திடம் இருந்து உடனடியாக  கேள்வி புறப்பட்டது. “ஏங்க வக்கீலை பார்த்தீங்களா? என்ன சொன்னார்?” என்றாள்.

பரமசிவம் தன்னிடம் வேலை பார்த்த முத்தையனுக்கு தன்னுடைய நிலம்   ஒன்றினை போக்கியமாக கொடுத்திருந்தார். நிலத்தைப் பெற்றுக் கொண்ட முத்தையன்  போக்கியத்திற்கு பேசிய தொகையையும் தரவில்லை. நிலத்தையும் ஒப்படைக்கவில்லை. எனவே நீதிமன்றத்தின் மூலமாக இந்த பிரச்சனையை அணுகுவது என்ற முடிவிற்கு பரமசிவம் வந்திருந்தார். அது சம்பந்தமாக வக்கீலை பார்த்துவிட்டு அப்போது தான் வீட்டிற்கு திரும்பியிருந்தார்.

“பார்த்தேன் ராஜம் . நிலத்துக்கான பட்டா நம்ம பேர்ல தான் இருக்கு. அதனாலே வேற யாரும் நம்முடைய நிலத்திற்கு உரிமை கொண்டாட முடியாது என்பதை உறுதியாகச் சொன்னார். நமக்கு ஒண்ணுன்னா இந்த ஊர்ல நமக்காக பேச ஆளுங்க இல்லங்கறது தான் பிரச்சனை பண்றாங்க. உடம்பு இருக்குற இருப்புக்கு, முன்ன போல போய் நிலத்தை பார்க்க முடியல. இதெல்லாம் அவங்களுக்கு சாதகமா இருக்கு. அது மட்டும் இல்லாம உள்ளூர்ல முத்தையன் சொன்னபடி கேட்டு அவனுக்காக பரிந்து பேசறதுக்கு ஆளுங்க இருக்காங்க. முத்தையன் நிலத்தை பயன்படுத்த கோர்ட்ல தடை உத்தரவு  வாங்கலாம்னு வக்கீல் சொல்றார். கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன், வக்கீல்ன்னு அலையணும். சரவணன் கிட்டப் பேசறேன். என்ன சொல்றான்னு பார்ப்போம்” என்றார். 

ராஜத்திற்கு நன்றாகத் தெரியும், அவர்களது மகன் சரவணன் இதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணக் கூடியவன் இல்லை என்பது. சரவணன், ராதா என்று அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ராதா திருமணமாகி கணவர் மற்றும்  குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறாள். சரவணனுக்கு திருமணமாகி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறான். 

முன்பெல்லாம் பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வசிப்பது இருவருக்கும் பெருமையாக இருந்தது. கொஞ்சம் வயது ஏற ஏறத்தான் அவர்களுக்குக் கவலை வந்தது.பரமசிவமும் ராஜமும் மாயவரத்தில் வசித்தனர், சிதம்பரத்திற்கு அருகில் இருந்த லால்பேட்டையில் அவர்களுக்கு பத்து ஏக்கர் நிலம் மற்றும் வீடு இருந்தது.  பூர்வீக சொத்து என்பதால் பரமசிவத்திற்கு அந்த நிலங்களை சரியாகப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது எண்ணம். “என் கண் மறையுற வரைக்கும், இதை நல்லப்படியாக பாதுகாத்து வைப்பது என்னுடைய கடமை” என்பார். 

பரமசிவத்தின் தாத்தா லால்பேட்டைக்கு வெறும் ஐந்து ரூபாயுடன் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து சேர்த்த வாங்கிய நிலங்கள் இவை. ஆனால் விவசாயம்  முன்பிருந்தபடி அத்தனை ஆரோக்கியமாக இல்லை. காவிரியில் தண்ணீர் வந்தாலும், கொள்ளிடம் நிரம்பினால் தான் பரமசிவத்தின் நிலங்களுக்கு தண்ணீர் வரும். காவிரியில் தண்ணீர் வருவதும் கல்லில் நார் உரிப்பதும் ஒன்றுதான். அப்படியே தண்ணீர் வந்தாலும், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை, விளைந்த பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காதது என்று பல்வேறு பிரச்சனைகள்.

சென்ற முறை ஃபோனில் பேசியபோதே சரவணன் ராஜத்திடம், “ஏன்மா அப்பாவை நிலத்தை இப்பவாவது விக்கச் சொல்லு. வயசான காலத்துல வீட்ல நிம்மதியா இருங்கன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறார். இதுக்கு மேல என்ன சொல்லி புரிய வைக்க” என்று கோபமாகவே பேசினான்.

மருமகளுக்கும் இந்தப் பூர்வீக நிலத்தைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ பெரிய அபிப்ராயம் இல்லை. சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், இந்த மாதிரி ஒரு கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து விவசாயம் செய்து வாழ வேண்டும் என்பதெல்லாம் அவளுக்கு மிகவும் கடினமே. தற்போது உள்ள பிரச்னையை சொன்னால், திரும்பவும் சரவணன் நிலத்தை விற்கத் தான் ஆலோசனை சொல்வான். மகன் சொன்னாலும் தன்னுடைய கணவர் இந்த ஆலோசனையை கேட்கப் போவதில்லை. சரவணனையும் குற்றம் சொல்லி ஒன்றும் இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டுமே இப்பொழுது அந்த கிராமத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்கள். அவர்களும் வெளியூரில் இருந்து வந்து வேலைகளை முடித்துவிட்டு,  பின்பு உடனேயே அவர்களுடைய ஊருக்கு திரும்பச் சென்றுவிடுவார்கள். அந்த ஊரில் தங்குவதில்லை.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை, அவர்கள் வீடு இருந்த தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் முக்கியஸ்தர்கள், நிலச்சுவான்தார்கள் என்று பலர் இருந்தனர். நகரத்தை நோக்கி அனைவரும் நகரத் தொடங்கிய பின், ஆட்கள் யாரும் இல்லாமல், இப்பொழுது அந்த தெருவே வெறிச்சோடிப் போய் விட்டது. அந்தத் தெருவில் உள்ள ஒன்றிரண்டு வீடுகள் மட்டுமே இப்பொழுதும் புழக்கத்தில் இருக்கிறது. ஏனைய வீடுகள் எல்லாம் பெரும்பாலும் பூட்டியே இருக்கின்றன. வெளியூரில் இருந்து யாரேனும் எப்போதாவது வந்து வீட்டை பார்வை இட்டுச் செல்வதோடு சரி. இரவில் மின்சாரம் நிற்பது அல்லது அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் என்பது போன்ற தொல்லை வேறு.  “ராத்திரி இந்த மங்கலான பல்பு வெளிச்சத்துல உப்புமாவை கிளறும் தலையெழுத்து என்னைக்கு எனக்கு மாறப் போகுதோ” என்று அலுத்தவாறே அடுக்களைக்குச் சென்றாள் ராஜம்.

அன்று இரவே சரவணனுக்கு ஃபோன் போட்டார் பரமசிவம். பிரச்சனையை கேட்டவன் “ஏன்ப்பா, நான்தான் சொன்னேனே. இப்போ நீங்க சண்டைப் போட்டு வாங்குற நிலம் எவ்வளவு விலை போகும்”…

“என்ன ஒரு, ஒரு லட்சம் கிடைக்கும்.” 

“இதுக்காக நீங்க இப்போ அங்கே இங்கேன்னு அலைஞ்சி திரிஞ்சி  என்னத்தை சாதிக்க போகுறீங்க. நான் ஒரு தடவ குடும்பத்தோட அங்க வந்து போகணும்னாலே ஃபிளைட் டிக்கெட் விலை அதை விட ஜாஸ்தி ஆகும். நீங்க உடம்பு நல்லா இருக்கும் போதே, இப்போ மிச்சம் இருக்குற நிலத்தையாவது வித்து வங்கியில் போடற வழிய பாருங்க. நானோ என்னுடைய மனைவியோ அந்த ஊர்ல வந்து கஷ்டப்படணும்னா நீங்க நினைக்கறீங்க”

“இல்லப்பா. எங்க தாத்தா பார்த்து பார்த்து வாங்கின இடம். நாளைக்கு பரமசிவன் ஏமாந்துப் போய் நிலத்தை விட்டாருன்னு ஊர்ல எல்லாரும் பேசுவாங்க. முத்தையன் அடாவடியா நம்ம நிலத்த வளைச்சிப் போட்டு, பயிர் செய்துகிட்டு இருக்கிறான். யாரும் கேக்கலைனா இப்போ எடுத்துக்கிட்ட நிலத்தோட சேர்த்து, முழு நிலமும் கையை விட்டுப் போய்டும். நீ தான் உனக்கு தெரிஞ்ச ஃபிரண்டு போலீஸ்ல இருக்காருன்னு சொல்வியே, அவருகிட்டச் சொல்லி ஏதாவது உதவி பண்ண முடியுமான்னு கேட்டுச் சொல்லு.”

“என்னப்பா நீங்க, அந்த 30 சென்ட், போனா என்ன.. இருந்தா என்ன.. இப்போ. நிலத்தை வித்துட்டு வீட்ல ஓய்வா இருங்கன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா கைவிட்டுப் போன ஒண்ணை சரி பண்ணணும்னு சொல்றிங்க. ஒண்ணும் செய்ய முடியாதுன்னு விட்டுட்டுப் போங்க” என்றான் கடுமையாக.

அது எப்படிப்பா” என்று ஆரம்பித்தவரிடம்…

“சரி, நீங்க நீதிமன்றத்திற்கு போய் தடை உத்தரவு வாங்கறிங்கன்னு  வெச்சுக்கலாம். அந்த நிலம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விலைப் போகும்னு சொல்றிங்க. இதுக்கு நீங்க அங்கேயும் இங்கேயும் அலைஞ்சி போலீஸ்காரனை பார்த்து, அப்பறம் வக்கீலுக்கு காசு கொடுத்து, மீட்கும் போது நிலத்தோட முக்கால்வாசி விலை அளவு செலவு பண்ணியிருப்போம். இந்த வயசான காலத்துல உடம்பாலயும் கஷ்டப்படணும், பணத்தாலயும் நஷ்டப்படணும். பேசாம விடுங்க. இதெல்லாம் நான் வந்து பாக்கணும்னா அதுவும் கஷ்டம்.”

“விவசாயி சேத்துல கால வெச்சாதான், சோத்துல நாம கையை வெக்க முடியும்னு லைக்ஸ் வாங்க வேணா முகநூல்ல போட்டுக்கலாம். இன்னைக்கு ஊருக்கு வந்து விவசாயம் பாக்கற மாதிரியா இருக்கு. தண்ணி வரலை, ஆள் கிடைக்கலை, போட்ட முதல் எடுக்கற அளவு கூட இப்போ விளைபொருளை விற்க முடியலை. நீங்க இப்போ விவசாயம் பண்றது எல்லாம் உங்களுக்கு கொஞ்சம் பொழுது போகுது. அதை தவிர வேற ஏதாவது உபயோகம்  இருக்கா. விவசாயம் பண்றதுக்கே, இன்னைக்கு வேற ஏதாவது தொழில் பண்ண வேண்டிய நிலைமையில தானே இருக்கோம். இதெல்லாம் தேவை இல்லாத வேலை.மிச்சம் இருக்குற நிலத்தை வித்து பேங்க்லே போடுங்க. வட்டியாவது வரும்” என்று படபடவென பொரிந்தான்.

பரமசிவமும் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் மெளனமாக ஃபோனை வைத்தார்.

ஒரு வாரம் கழித்து ஒரு சாயங்கால வேளையில், சரவணன் அவனுடைய கணினியில் ஏதோ ஒரு வேலையில் மூழ்கி இருந்தான். அவனுடைய மகள் நந்தினி வந்து “அப்பா பார்க்குக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்றாள். 

“இரு நந்து, அப்பா ஒரு ப்ரோக்ராம் எழுதிக்கிட்டு இருக்கேன். முடிச்சிட்டு வரேன். ஒரு மணி நேரம் கழிச்சுப் போகலாம்.”

“நீங்க மேலாளர் தானே. உங்ககிட்ட வேலை பாக்குற ஒருத்தரால எழுத முடியாதா? நீங்க ஏன் எழுதணும்?”

“இல்ல நந்து, நானே இதைச் செய்யும் போது எனக்கு ப்ரோக்ராமிங்  செய்யறது எப்படிங்கறது மறக்காம இருக்கும். ப்ரோக்ராமிங் என்பது கணினி துறையில தேவைப்படற ஒரு அடிப்படையான திறமை. இது தான் அடித்தளமின்னு  சொல்லலாம். புதுசு, புதுசா எத்தனை சிறந்த மென்பொருள் வந்தாலும், இந்தத் துறைக்கான அடிப்படை திறமை நல்லா ப்ரோக்ராம் எழுதறது தான். அதை மறக்கக் கூடாது. அதான் நேரம் கொஞ்சம் கூட ஆனாலும், எப்பவுமே நானே எழுதிப் பார்ப்பேன். அதுல எனக்குப் பெரிய ஆத்ம திருப்தியும் கிடைக்கிது”

அப்பா, அப்படின்னா வாழறதுக்கான அடிப்படை தேவை உணவு தானே. அந்த உணவு எப்படி விளைவிக்கணும்னு ஒவ்வொரு மனுஷனுக்கு தெரிய வேண்டாமா?

மகள் கேட்ட கேள்வி, அவனை ஒரு நிமிஷம் திகைக்க வைத்தது.

“என்ன நந்து, பெரிய மனுஷி மாதிரி பேசற? இதை எல்லாம் உனக்கு யாரு சொல்லிக் கொடுத்தா “

போன வாரம் நீங்க தாத்தாவோட கோபமா பேசிட்டு ஃபோனை வெச்சிட்டிங்க. அதுக்கப்புறம் ஒரு நாள் தாத்தா என்னோட பேசினாங்க. தாத்தா என்ன சொன்னாங்க தெரியுமா அப்பா? நந்து, ஒவ்வொரு மனுஷனும் லாப நஷ்ட கணக்குப் பார்த்தா உலகத்துல எதுவும் மிஞ்சாது. மரம் வெச்சவன் இதனாலே எனக்கு என்னப் பலன் கிடைக்கும்னு யோசிச்சிருந்தா, இன்னைக்கு யாருக்கும் நிழல் என்பது என்னன்னு தெரியாமப் போயிருக்கும். விவசாயம் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வாழ்வியல் திறன். அதை எல்லா தலைமுறையும் கத்துக்கணும். நீ அடுத்த முறை ஊருக்கு வரும்போது உனக்கு விவசாயம் பத்தி எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் நான் சொல்லித்தரேன்.

படிச்சவங்க அவங்கப் படிப்பை பயன்படுத்தி ஒரு தொழில்ல இருக்குற பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரணுமே தவிர, இந்தத் தொழில்ல லாபம் இல்ல, அதனாலே செய்யாதேன்னு சொல்றது தப்பு. எந்தத் தொழில் செஞ்சாலும், பசிச்சா அரிசி மட்டும் தானே சாப்பிட முடியும். ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊரில் கொரோனா ஊரடங்கினால் நிறைய பேர் வேலைக்குப் போக முடியாம கஷ்டப்பட்ட போது, நிறைய பேருக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு உணவு குடுத்து உதவினேன். சாமி மாதிரி வந்து சாப்பாடு கொடுத்த நீயும் உன் குடும்பமும், எப்பவும் நல்லா இருக்கணும்னு அவங்க வாழ்த்தினபோது கிடைச்ச ஆத்ம திருப்தி, நான் முப்பது வருஷம் கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை பார்த்தபோது கூட கிடைக்கலை.

விவசாய நிலங்கள் பிளாட்டா மாறுகிற இந்தக் காலத்துலே, இயற்கையோடு இணைந்து வாழும் விவசாயம் தான் சரியான தொழில் அப்படிங்கறதை கணினித் துறையில் கோலோச்சும் இந்த தலைமுறை ஏனோ புரிஞ்சிக்கலை. இந்த நாட்டு மக்களை பஞ்சத்துல விழுந்திடாம காக்கப் போற கடைசி நம்பிக்கை, விவசாயம்  தான். அந்த நம்பிக்கைக்கு பங்கம் வராம இருக்க என்னால முடிஞ்ச அளவு விவசாயத்தை காப்பாத்த நினைக்குறேன். இது தப்பு இல்லை தானே? பணத்தை வங்கியில் போட்டா வட்டி வரும். ஆனா, கொரோனா வந்த போது எவ்வளவவு பணம் கொடுத்தாலும் சானிடைசர், முகக்கவசம்,உயிர்வளி மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம்  வாங்க முடிஞ்சதா என்ன. வங்கிகள் தர வட்டிப் பணம் சந்தை பொருளாதாரம்னா, விவசாயம் என்பது தற்சார்பு பொருளாதாரம். இதை என் மகன் தலைமுறை சரியா புரிஞ்சிக்கலை. இதை உன்னோட தலைமுறையாவது புரிஞ்சி செயல்படனும் கண்ணம்மான்னு  சொன்னாங்க தாத்தா.  

இதைக் கேட்ட சரவணன் மனதில் அப்பாவை நினைத்து ஒரு நிமிடம் பெருமிதம் பொங்கியது. அவரிடம் கோபமாய் பேசியதற்கு மானசீகமாய் மன்னிப்புக் கேட்டான். அப்பா சொன்ன மாதிரி நாளைக்கு காலையிலே என்னுடைய நண்பனைக்  கூப்பிட்டு பேசறேன். கண்டிப்பா ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். நாளை விடியும் நாள் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்று அவன் மானசீகமாய் நினைத்த போது, உலகில் எங்கோ ஓரிடத்தில் வசிக்கும் ஒரு விவசாயின் கனவாகவே இந்த பிரபஞ்சம் அதைப் பதிவு செய்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக