வெள்ளி, டிசம்பர் 11, 2020

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 4


ஐஸ்லாந்து ஊர் மற்றும் இடப் பெயர்கள் எத்தனை கடினமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் ஒரு மீம். இணையத்தில் இருந்து எடுத்தது. 

நிறைய வேலைகள் இருந்ததால் இந்த தொடரை தொடர்ந்து எழுத இயலவில்லை.  மீண்டும் விட்ட அருமையான ஐஸ்லாந்த் பயணத்தை தொடருவோம். Sudavik-இல் இருந்து கிளம்பிய நாங்கள் அடுத்து சென்றது  Akureyri என்ற வடக்கு ஐஸ்லாந்தில் உள்ள ஊருக்கு. ஆனால் அந்த ஊருக்கு செல்வதற்கு முன்னால் நாங்கள் ஒரு நாள் இரவு மட்டும் Kolugljufur Canyon என்ற இடத்தில் தங்கிவிட்டு செல்வதாக திட்டம். Isafjordur-இல்  இருந்து Akureyri என்ற ஊர் கிட்டதட்ட 7 மணி நேர பயணம். அதுவும் கீழே கொடுக்கப்பட்ட வரைபடத்தில் பார்த்தீர்கள் என்றால் இது நிறைய Fjord அமைந்திருக்கும் சாலைகள் வழியாக பயணிக்க வேண்டிய இடம். இதனால் இந்த பயணத்தை ஒரே நாளில் மேற்கொள்ளாமல் மெதுவாக இயற்கையை ரசித்தவாறே செல்ல வேண்டும் என்ற காரணத்தால் எங்கள் பயண திட்டத்தில் இந்த Kolugljufur Canyon ஐ இணைத்திருந்தோம். பயணதிட்டத்தில் ஒரு அற்புதமான இடத்தை இணைந்திருந்தது மிகவும் நல்லதாக போயிற்று. 





Sudavik-இல் இருந்து கிளம்பி நாங்கள் முதலில் சென்றது Valagil Canyon எனப்படும் ஒரு பள்ளத்தாக்கிற்கு. இது Sudavik என்ற ஊரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கேயுள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நடந்து சென்று Valagil Falls  எனப்படும் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்.  யாரும் அற்ற ஒரு அகன்ற பள்ளத்தாக்கில் புல்வெளிகளும், அழகான சிற்றோடைகள் சலசலக்க  இயற்கையுடன் இணைந்த அந்த சுகானுபவம் இயற்கை மீதான மனிதனின் பார்வையை விசாலப்படுத்தும். இந்த அண்ட பேரண்டத்தில் நாம் ஒரு துளி. அந்த துளி தேனாவதும், ஆலகால விஷமாவதும் நமது கையில் தான் இருக்கிறது. நாம் என்பது ஒரு இந்த பிரபஞ்ச காலத்தில் ஒரு அணுவை விட குறைந்த காலத்தில் மின்னி மறையும் ஒரு உயிரினம். நமது சுய தேவைக்காக நாம் இந்த பூமியை மாசுபடுத்துதலை விடுத்தது இந்த பூமியை காப்போம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏற்படும். நிறைய இடங்களில் பாதை சிறிய மரப்பாலங்களின்  மேலும், சிறிய ஓடைகளை தாண்டிக் குதித்தும் கடக்க வேண்டியிருந்தது. கிட்ட தட்ட 4 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடந்த பின்னும் குழந்தைகள் அந்த அனுபவத்தை ரசிக்கவே செய்தார்கள். கால் வலிக்கிறது என்று முரண்டு பிடிக்கவில்லை.  




Valagil அருவியின் புகைப்படத்தையும் Valagil Canyon அழகையும் சாதாரண காமிராவில் சிறைபிடிக்க முடியாது என்றாலும் முடிந்த அளவு படம் பிடித்திருக்கிறேன். கண்டு களியுங்கள். அடுத்து சிறிது தூரம் பயணம் செய்து Hvitanes என்ற ஊரை அடைந்தோம். கடல் சிங்கங்கள் அந்த ஊர் கடற்கரையில் நிறைய காண முடிந்தது. Binocular வழி பார்க்கும் வசதியும் உள்ளது. அவற்றை சிறிது நேரம் பார்த்து விட்டு காமிராவில் அவற்றை சிறை பிடித்து விட்டு அங்கிருந்து கிளப்பினோம்.

                                                        (Hvitanes - இல் கடல் சிங்கம் )


மதியம் மூன்று மணியை நெருங்கி விட்டதாலும், காலையில் அதிக தூரம் நடந்ததாலும், மதியம் சிறிது  பசி வயிற்றை கிள்ளவே Litlibaer என்ற ஒரு பெயருடைய Pancake விற்கும் சிறிய அழகிய ஹோட்டலை அடைந்தோம்.  Pancake என்பது மைதாமாவில் செய்யும் தோசை போன்ற ஒன்று. இதை அழகாக வட்ட வடிவத்திலும், அல்லது இதய வடிவம் போன்ற அச்சிலும் செய்து தருகிறார்கள். Route-61 இல் இது கண்டிப்பாக நிறுத்த வேண்டிய ஒரு இடம். இந்த இடத்தை பற்றி ஏற்கனவே இணையத்தில் தகவல் இருந்ததால் கண்டிப்பாக இங்கு சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தோம். Pancake -கை, கிரீம் மற்றும் மேப்பிள் சிரப் ஆகிவற்றுடன் தருகிறார்கள். வெளியில் உள்ள குளிருக்கு அந்த சூடான Pancake  மற்றும் இளஞ்சூடு கொண்ட சிரப்பும் தேவாமிர்தமாக இருந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. சூடான சாக்லேட் பானத்துடன் குழந்தைகளும், நாங்களும் ஒரு பிடி பிடித்தோம். பழமையான டிசைன் கொண்ட பீங்கான் கிண்ணங்களில், தட்டுகளில் மிகவும் அழகாக இந்த உணவை வைத்திருந்தார்கள். 





அங்கே இருந்த   பார்வையாளர்களுக்கான புத்தகத்தில் "யாதும் ஊரே.  யாவரும் கேளிர்" என்று தமிழில் எழுதி கையெழுத்திட்டு வந்தோம்.  Litlibaer- இல் இருந்து கிளம்பி நேராக வட கிழக்கு ஐஸ்லாந்தில் உள்ள Vidhistaltunga என்ற இடத்தில் இருந்த Daeli Huts என்ற பயணியர் விடுதியில் அன்று இரவு தங்குவதற்காக முன்பதிவு செய்திருந்தோம். இந்த பயணியர் விடுதியில் தனித் தனி மரக் குடில்கள் இருந்தது. குளியல் அறை, மற்றும் சமைக்கும் அறை  மட்டும் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. அடிக்கடி மழை தூறியபடி சற்றுக் குளிரான காற்று வீசும் ஒரு இதமான பருவ நிலை ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது. மரக் குடில்களை சுற்றி நிறைய மரங்கள் இருந்தன. ஒரு காட்டுக்கு உள்ளே தங்குவது போன்று ஒரு உணர்வை தந்தது. இந்த மாதிரி இடங்களில் பெரும்பாலும் உணவு விடுதிகள் அருகில் இருப்பதில்லை. இருந்தாலும் நேரம் கடந்து சென்றால் அவை பெரும்பாலும் மூடி இருக்கலாம். எனவே கையில் உணவு கொண்டு செல்வது நல்லது. நாங்கள் முன்னேற்பாடாக இரவு உணவை முந்தைய தினமே சமைத்து கையில் எடுத்து வந்திருந்தோம். அதனால் இரவு உணவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அந்த பொது சமையல் அறை சென்று உணவை சூடுபடுத்தி நிம்மதியாக சாப்பிட்டோம். பின்னர் அந்த ரம்யமான சூழ்நிலையை ரசித்தவாறே உறங்கச் சென்றோம்.


அடுத்த நாள் காலையில் அந்த இடத்தில் இருந்து செல்ல மனமில்லாமல் கிளம்பி, Kolufossar என்ற நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றோம். Hvammstangi என்ற ஊரில் Vididalsa என்ற ஆற்றின் மேல் Kolufossar நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. Salmon வகை மீன்கள் அதிகம் இந்த Vididalsa ஆற்றில் உள்ளது. அருவியின் மேல் ஒரு மரப்பாலம் அமைத்துள்ளது. அதில் ஏறி அருவியின் அழகை நன்றாக ரசிக்கலாம்.
 

சிறிது நேரம் அங்கே இருந்து அந்த அருவியை ரசித்த பின் Akureyri யை நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம். ரிங் ரோட்டில் (Route-1) முன்பே கூறியுள்ளது போல நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கிழக்கு திசையில் பயணித்தால்  Akureyri யை ஒரு நான்கு மணி நேர பயணத்தில் அடையலாம். எனினும் இலக்கை  விட பயணமே அழகு என்பதால் அன்றைய தினத்தை நாங்கள் Vatsnes தீபகற்பத்தில் இன்னும் சில இடங்களை பார்த்து விட்டு பின்பு Akureyri-ஐ அடையலாம் என்று முடிவு செய்து, நாங்கள் முதலில் சென்றது Hvitserkkur என்ற இடத்திற்கு. கடற்கரைக்கு அருகாமையில் ஒரு நீர் அருந்தும் காண்டாமிருகத்தை ஒத்ததான ஒரு பாறை இருக்கிறது.  Rhino Rock அல்லது Icelandic Troll Rock என்ற ஆங்கில பெயரும் இதற்கு உண்டு. இந்த கடற்கரையில் நிறைய நீர் சிங்கங்கள் வசிக்கின்றன. அந்த கடற்கரை ஓரம் எங்கும் பல்வேறு நீர் சிங்கங்களை கூட்டம் கூட்டமாக காணலாம். இந்த Rhino Rock மேலிருந்து பார்க்கும் வண்ணம் மரத்தாலான ஒரு பார்வையாளர் மேடையும் அமைத்திருக்கிறார்கள். 




  

கருப்பு மண் நிறைந்திருந்த இந்த கடற்கரை புதுமையாக இருந்தது 


அந்த கடற்கரையை சுற்றி இருந்த மலைகளும், பச்சை பசேல் புற்கள் நிறைந்த மலை முகடுகளை, நீல வானமும் கண்ணுக்கு அத்தனை குளுமை. காரை பார்க் செய்து விட்டு சிறிது தூரம் நடந்த பின்பே இந்த Rhino Rock-ஐ பார்க்க முடியும் என்பதால் அதற்கு ஏற்றார் போல நேரம் ஒதுக்கி பார்த்து வரவேண்டிய இடம் இது.


அடுத்து நாங்கள் சென்றது Borgarvirki என்ற கல்லால்  ஆன ஒரு கோட்டைக்கு. நிறைய கற்களால் வட்ட வடிவில் கடல்மட்டத்திற்கு 177 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய பசால்ட் பாறைகள் நிறைந்த கோட்டையான இதை ஒரு காலத்தில் வைகிங் படைகள் பயன்படுத்தின என்றும் கூறப்படுகிறது.







இதற்கு பிறகு பயணம் செய்து அன்று இரவு தங்குவதற்காக நாங்கள் Akureyri-யில் முன்பதிவு செய்திருந்த தங்கும் இடத்தை அடைந்தோம். Akureyri  என்பது வடக்கு ஐஸ்லாந்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். நிறைய கடைகள் மற்றும் ஒரு திரை அரங்குக்கு அருகில்  அமைந்திருந்தது நாங்கள் தங்கி இருந்த அந்த வீடு. வீட்டுக்கு சென்று அன்று இரவு ஓய்வெடுத்தோம். இரவு உணவை சமைத்த பின் அனைவரும் உண்டு உறங்கச் சென்றோம். எனினும் காரில் இருந்து பெட்டிகளை இறக்கி பின் அதை திறந்து பாத்திரங்களை எடுத்து பருப்பு வைத்து, காய்களை வெட்டி உணவு தயாரிப்பது என்பது கடினம் என்றாலும் புதிய இடங்களில் பெரும்பாலும் எத்தனை மணிக்கு அந்த இடத்தை அடைவோம், அங்கே அந்த நேரத்தில் எந்த உணவகம் திறந்திருக்கும், நாம் தங்கும் இடத்தில இருந்து எத்தனை தொலைவில் அந்தஉணவகம் இருக்கும் என்பது போன்ற விஷயங்களை பற்றி கவலை கொள்ளாமல் கையில் அரிசி, பருப்பு கொஞ்சம் மசாலா பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வைத்திருப்பது நலம் . இது குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது தேவையற்ற உணவை பற்றிய கவலையை தடுக்க உதவும். 

அடுத்த நாள் கிட்ட தட்ட மதிய வேளையிலேயே Akureyri-யில் இருந்து கிளம்பினோம். அருகில் உள்ள  Lake Myvatn அதை சுற்றிலும் உள்ள வெந்நீர் ஊற்றுகள் மற்றும் இயற்கை காட்சிகளை பார்த்து விட்டு அன்று இரவு மீண்டும் Akureyri திரும்புவதாக திட்டம்.முதலில் பார்த்தது Godafoss என்ற பெயருடைய கடவுளர்களின் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் ஒரு அருவி. Godafoss மிகவும் அழகான ஒரு நயாகரா போன்று ஒரு வட்ட வடிவில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி. ஐஸ்லாந்தில் கோடை என்றாலும் அருவி போன்ற இடங்களுக்கு அருகில் மிகவும் குளிர்ந்த காற்று வீசி குளிராகவே இருந்தது. கடவுளர்களின் அருவி என்பதற்கு ஏற்ப நிறைய ஓசையுடன் குளிர்ந்த ஐஸ் பாறைகள் உருகி நிறைய நீர் பொங்கி பிரவகிக்கும் அந்த அருவியை காண நிறைய பயணிகள் வந்திருந்தனர்.






அதற்கு பிறகு Lake Myvatn சுற்று பகுதியில் இருந்த பல்வேறு இடங்களை காண சென்றோம். முதலில் சென்றது Leirhnjukur என்ற இடத்திற்கு. எரிமலை குழம்புகள் வெடித்து சிதறி அது குளிர்ந்த பின் அதன் மேல் பாசிகள் வளர்ந்து வேற்று கிரகத்திற்கு வந்தார் போல காணப்படும் எரிமலை கற்கள் நிறைந்த ஒரு இடம். 5 டிகிரி சென்டிகிரேடு குளிர் உள்வரை சென்று நம்மை ஒரு வழியாக்கினாலும் எப்படியும் பார்த்து விடுவது என்று நான் மட்டும் இறங்கி இந்த எரிமலை பாறைகள் சுற்றிலும் இருந்த பாதை வழியாக நடந்து krafla என்ற பெயர் கொண்ட மலையில் அடிவாரத்தில் இருந்த வெந்நீர் ஊற்றை பார்த்து விட்டு திரும்பினேன். கிட்ட தட்ட முக்கால் மணி நேர நடை, உயிரை தொடும் குளிர் என்றாலும் வெற்றிகரமாக நடந்து சென்று புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றில் அந்த இடங்களை சிறை பிடித்து கொண்டு திரும்பினேன். காருக்கு திரும்பி ஆசுவாசம் கொள்ள அரை மணி நேரம் பிடித்தது. இந்த இடம் eurasian தகடு மற்றும் வட அமெரிக்க தகடு ஆகிய இரு தகடுகளுக்கு இடையே அமைத்திருக்கிறது. கீழே புகைப்படத்தில் பார்த்தால் Krafla என்ற மலைத் தொடர் எங்கிருக்கிறது என்பது தெளிவாகும்.








ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு சென்று வந்தது போல இருந்த அந்த இடம் இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது. அதன் பிறகு நாங்கள் காண சென்றது Viti என்னும் எரிமலை வாயை(Crater) காண. 5 வருடங்களுக்கு மேலாக எரிமலை வெடித்து எரிமலை குழம்பை கக்கிய பின் இன்று குளிர்ந்து ஒரு கிண்ணம் போன்ற அமைப்பை அடைந்துள்ள இந்த எரிமலை வாயில் இப்போது நீர் நிரம்பி நீல வண்ணத்தை பிரதிபலித்தது அத்தனை அழகாக இருந்தது.


இதற்கு அடுத்த சென்றது Namafjall என்ற இடத்திற்கு. அடியில் கனன்று கொண்டிருக்கும் பூமியில் இருந்து சூடான வெந்நீர் ஊற்றுகளும் கொதித்துக் கொண்டிருக்கும் சேற்றுக் குழம்பும் ஏதோ ஒரு வேற்று உலகத்தை நமக்கு ஞாபகம் செய்யக் கூடும். Namafjaal என்ற மலைகளின் அடிவாரத்தில் அமைந்து இருந்த இந்த வெந்நீர் ஊற்றுகளும், கொதிக்கும் சேற்றுக் குழம்பும் அந்த இடத்திற்கு ஒரு ஆச்சரிய அதிர்ச்சி. அதிலும் அந்த நீராவியில் எழும் புகை Sulphur நிறைந்ததாக இருந்ததால் கொஞ்சம் அழுகிய முட்டை போன்ற ஒரு வாசனையை நுகர முடிந்தது. பூமி என்ற பெண்ணும் ஒரு அழகான ஆபத்து என்று ஒரு கணம் தோன்றி மறைந்தது. Namafjaall காணொளிகளை கீழே இணைத்திருக்கிறேன். 





அடுத்து சென்றது Lake Myvatn பகுதியில் இருந்த Grjotagja என்ற குகை வெந்நீர் ஊற்றை காண. ஒரு குகையில் கிட்ட தட்ட 100 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பம் உள்ள நீரால் இந்த குகை நிரம்பி இருக்கிறது. Game of Thrones என்ற மிகவும் புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர் இங்கே படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த குகை ஊற்றை காண நிறைய சுற்றுலா பயணிகள்  வந்திருந்தார்கள்.  




 இதற்கு பிறகு நாங்கள் சென்றது Dimmuborgir என்ற இடத்திற்கு. பல ஆண்டுகளாக எரிமலை குழம்புகள் வெடித்து சிதறி பல்வேறு வடிவ பாறைகளை செதுக்கி இருந்தது. உருண்டை வடிவ ஓட்டைகள் உள்ள பாறைகளும்,  எரிமலை குழம்பு செதுக்கிய குகை வடிவ பாறைகளையும் இங்கே காண முடியும். நிறைய பாதைகள் இருந்தன இந்த இடத்தை சுற்றிப் பார்ப்பதற்கு, எனினும் அனைவரும் களைப்புடன் இருந்ததால் இங்கு இருந்த உணவு விடுதியில் உணவு மற்றும் காபி அருந்தி கொஞ்சம் ஆசுவாசமானோம். அதன் பின்னர் trail-களின் வழியாக நடந்து அந்த இடத்தை சுற்றிப் பார்த்தோம். உங்கள் விருப்பம் போல எந்த trail-ஐயும் தேர்ந்தெடுத்து சுற்றி வரலாம். சில பாதைகள் பல கிலோமீட்டர் தூரம் உடையது. கிட்ட தட்ட நேரம் மாலை 6 மணியை ஒட்டி இருந்ததால் நாங்கள் எளிதாக நடந்து காணக்கூடிய ஒன்றிரண்டு trail-களில் மட்டுமே சென்று அந்த இடங்களை பார்த்தோம்.  Dimmu என்றால் கரிய என்றும் borgir என்றால் கோட்டை அல்லது தூண் என்ற பொருள் வரும். 2300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் நீண்ட நெடிய தூண்கள் போன்ற அமைப்பை விட்டு சென்றிருக்கின்றன. 






கடைசியாக Lake Myvatn -ஐ சுற்றி  சில புகைப்படங்களை எடுத்த பின் அன்றிரவு தங்குவதற்காக நாங்கள் எடுத்திருந்த அறைக்கு திரும்பினோம். Akureyri-ஐ அடுத்து அப்படியே கிழக்கு ஐஸ்லாந்தை அடைந்து அங்கே சில தினங்கள் தங்கி மீண்டும் Reykjavik வந்து அங்கிருந்து ஊர் திரும்புவதாக திட்டம். அடுத்த பயணம் என்ன என்ன இடங்களையும்  ஆச்சரியங்களையும் கொண்டுள்ளது என்பதை அடுத்த பயண அனுபவத்தில் பார்க்கலாம். இன்னும் வரும்....

ஐஸ்லாந்து பயண அனுபவம் - பாகம் 5 இங்கே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக