அந்த ஒலிபெருக்கி சத்தம் இரண்டு தெரு தாண்டியும் ஒலித்தது. "அன்பான வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை திரு.மாரியப்பன் அவர்களுக்கு முறம் சின்னத்தில் அளித்து வெற்றி பெற செய்யுங்கள்" என்ற அறிவிப்பிற்கு பின் ஏதோ ஒரு பிரபலமான திரைப்பட பாடல் ஒலித்தது. அந்த வண்டி கிட்ட தட்ட முக்கால் மணி நேரத்தில் அந்த அறிவிப்பை எல்லாம் முடித்துக் கொண்டு அடுத்த கிராமத்திற்கு செல்லத் தயாரானது. கிராமத்தின் கடை கோடியில் இருந்த அந்த குடிசை வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்திய டிரைவர் இறங்கி "அம்மா அம்மா" என்று குரல் கொடுத்தான். "யாருப்பா" என்று குடிசை உள்ளிருந்து மெலிதான குரல் ஒலித்தது. "தண்ணி கெடைக்குமா. தாகமா இருக்கு" என்றான். "இருப்பா வரேன்" என்ற குரல் கொடுத்த பெண்மணி சில வினாடிகளில் ஒரு சுத்தமான குவளையில் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள். வாங்கி குடித்தவன் "நன்றி தாயி", என்று குவளையை திரும்ப கொடுத்தான். அந்த பெண்மணி "சரிப்பா" என்று குவளையை வாங்கி வைத்துக் கொண்டாள். ஆத்தா "ஊரு கடைசியில இருக்குதே உன் வீடு. எப்படி சமாளிக்கற" என்றான் கரிசனமாக. "அதை ஏன்பா கேக்கற" என்றாள் ஆத்தா என்று அழைக்கப்பட்ட பொன்னுமணி. "உடம்பு முடியாம தான் நடந்து போய் காய், சமையல் சாமான் எல்லாம் வாங்க வேண்டியதா இருக்கு. சில நாள் போக முடியலைன்னா மூணு வேளையும் கஞ்சி தான். தெரிஞ்சவங்க யாராவது போனா காசு கொடுத்து வாங்கியாற சொல்வேன். ஆனா, காசு எப்போவாவது தான் இருக்கும். தோப்புக்கு போன அய்யா எப்போவாவது காசு இருந்தா தருவார். கஷ்டம் தான் தம்பி. எப்படியோ போகுது. ஆமா தம்பி நீங்க என்ன ஜோலியா வந்தீக" என்றாள்.
"ஆத்தா
தேர்தல் பிரசாரத்திற்கு வண்டி ஓட்டறேன்.
இப்போ கல்வித் துறை மந்திரியா
இருக்காரு இல்லிங்க மாரியப்பன், அவருக்கு தான்.
இன்னும் மூணு ஊருக்கு போயிட்டு அப்பறம் தான் கூலி தருவாங்க. அதை வாங்கினா தான் மத்தியானம் சாப்பாடு சாப்பிட
முடியும். நான் போயிட்டு வரேன் ஆத்தா"
என்றவாறு கிளம்பினான்.
பொன்னுமணிக்கு "மாரியப்பன்" என்ற பெயரை கேட்டதும் பழைய நினைவுகள் வந்து போனது. "ஹ்ம்ம்" என்று பெருமூச்செறிந்தாள். மறுபடியும் குடிசையில் மெதுவாக நுழைந்தாள். சமைக்கலாமா வேண்டாமா என்று யோசித்தாள். உடம்பு வலி ஒரு புறம் என்றால், மறுபுறம் அடுத்த வேளை உணவுக்கு என்ன என்ற மனவலி. நொய் அரிசி கொஞ்சமே இருந்தது. ஒரு சிறிய கைப்பிடி அளவு எடுத்து பறவைக்கும் அணிலுக்கும் வைத்து விட்டு, மீதி இருந்த நொய்யில் கஞ்சி தயார் செய்தாள். குருவி, அணில் எல்லாம் உண்ட பிறகு மிச்சம் சிதறி இருந்த அரிசியை உண்ண தவறாமல் ஒரு காக்கை ஒன்று வரும். அதன் காலில் முன்பு அடிபட்டிருக்கும் போல. கொஞ்சம் வித்தியாசமான நடை அதற்கு. கொஞ்சம் தத்தியும், கொஞ்சம் பறந்தும் வந்து கீழே சிதறிய அரிசியை கொத்தித் தின்னும். பார்க்க பாவமாக இருந்தால் சோறு பொங்கும் போது ஒரு கைப்பிடி சோறும் வைப்பாள். அதை தான் மட்டும் சாப்பிடாமல், கா..கா என்று எல்லா காகத்தையும் அழைத்து பின்பே கூட்டமாக சாப்பிடும். உனக்கே சோறு இல்ல. இதுல நீ எல்லாரையும் வேற கூப்பிடற" என்பாள். அதற்கு புரியுமோ இல்லையோ தலையை சாய்த்து இவளை பார்த்து விட்டு பறந்து செல்லும்.
"எங்க இவரைக் காணோம்" என்று வாசலில் வந்து அமர்ந்து ரோட்டை பார்த்து கொண்டிருந்தாள். உச்சி வெயில் ஏறி இருந்தது. "ஸ்ஸ்ஸ்...என்ன வெயில்" என்று சொன்னவாறே முத்தையா மெதுவாக வந்து அவள் அருகே வந்து அமர்ந்தார். அவர் வருவார் என்று அவருக்காக கொண்டு வந்த சொம்பு நீரை அவரிடம் நீட்டினாள். அதை குடித்து ஆசுவாசம் அடைந்தவரை பார்த்து "என்னங்க, சமையலுக்கு ஏதாவது சாமான் வாங்கியாந்திங்களா?" என்றாள் எதிர் பார்ப்போடு.
"இந்தா, காசு எங்க இருக்கு, வாங்கியாற?. இன்னைக்கு தான் அய்யாவை பார்த்து கேக்கணும். சரி, என்ன ஆக்கி வெச்சிருக்க?" என்றார்.
"கஞ்சி தான். வேற என்ன? ராத்திரிக்கு சமைக்கறதுக்கு கூட ஒண்ணும் இல்ல. நாளைய பொழைப்பு எப்படி ஓடுமோ" என்றாள் கவலையாக.
அவள் எடுத்து வந்த கஞ்சியை இருவரும் பகிர்ந்து, பச்சை மிளகாய் தொட்டுக் குடித்தார்கள்.
"தேர்தல்ல நம்ம மாரியப்பன் நிக்கறானாம். வண்டியிலே சொல்லிகிட்டே போனாங்க.” என்றாள் பொன்னுமணி.
"அவனா" என்றவர் வேறு எதுவும் பேசாமல் பழைய நினைவுகளில் மூழ்கினார்.
மாரியப்பனும் முத்தையாவும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். அந்த ஊரில் இருந்த ஒரே தொடக்க பள்ளியில் ஐந்தாவது வரை மட்டுமே படிக்க வசதி இருந்தது. மாரியப்பன் படிப்பை விட அடிதடி சண்டை என்று இருப்பான். அக்கம் பக்கத்து வீடு என்பதால் முத்தையாவிடம் வம்பு வளர்க்க மாட்டான். ஆனால் முத்தையா தவிர மற்ற எல்லாரிடமும் சண்டை போடுவான். அதனால் முத்தையாவை தவிர வேறு யாரும் அவனிடம் முகம் கொடுத்து பேச மாட்டார்கள். பயம் வேறு, அடித்து விடுவானோ என்று. அவனுடைய பெற்றோர்கள் எத்தனை சொல்லியும் திருந்தவில்லை. ஆளும் நல்ல வளர்த்தி வேறு. மற்ற சிறுவர்களை விட பெரிதாக இருப்பான். அவனுடைய சுபாவம் தெரியாத ஆசிரியர் ஒருவர் அவனை கண்டிக்க, ஒரு நாள் அவர் வரும் வழியில் மறைந்திருந்து உண்டிவில்லால் அவர் தலையில் குறி பார்த்து அடித்து விட, ஆசிரியருக்கு பலத்த காயம். அதில் இருந்து அவனை ஆசிரியர்கள் யாரும் கண்டிப்பதும் இல்லை. ஆனால் அதன் பின் அவன் பள்ளிக்கும் வருவது நின்று போயிற்று. முத்தையா எங்கேயாவது அவனை பார்த்தால் ஸ்கூலுக்கு வரலையா என்றால் உதட்டை பிதுக்கி அது என்னத்துக்கு என்பது போல ஒரு பார்வை பார்ப்பான்.
தொடக்க பள்ளியை முடித்து
முத்தையா நடுநிலை பள்ளியில் சேர்ந்திருந்தார். மாரியப்பன் இப்பொழுது
அந்த ஊரில் உள்ள பொறுக்கி பசங்களுடன் சேர்த்து ஊர் சுற்றத் தொடங்கி
இருந்தான். சிறிய அளவு திருட்டு எல்லாம் செய்கிறான் என்பார்கள் அவனை பற்றி
ஊரில். அவனுடைய நண்பர்களை பார்த்தாலும்
முத்தையாவிற்கு அப்படித்தான்
தோன்றும். நல்ல தடி தடியாய் அடியாள் மாதிரி இருப்பார்கள். ஊரில்
எந்த பெண்ணையும் வம்பிழுக்கமால் போக
மாட்டார்கள், கொஞ்சம் அழகான பெண்ணான வத்சலா உட்பட.எட்டாம் வகுப்பிற்கு பின் மாரியப்பனுக்கு படிக்க வசதி இல்லை. அவர் தன்னுடைய
தந்தையுடன் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். வயலில் உழவு
வேலை,
தோப்பில் காவல் என்று மாறி மாறி போவார்.
மாரியப்பனை பற்றி அவ்வப்போது
கேள்விப்படுவார். ஆனால் எதுவும் நல்ல
விஷயமாக இல்லை. நல்லா இருக்க
வேண்டியவன் ஏன் இப்படி இருக்கான் என்று
நினைப்பார். தன்னால் படிக்க
முடியாவிட்டாலும் பள்ளி செல்லும்
பிள்ளைகள் மேல் அவருக்கு தனி வாஞ்சை.
அவர்களுக்கு தனக்கு கிடைக்கும் கூலியில்
இருந்து புத்தகம், பென்சில் எல்லாம் முடிந்த போது வாங்கி
தருவார். வேலை முடிந்து வரும் போது,
பள்ளி விடும் சமயமாக இருந்தால்
பள்ளி விட்டு வரும் சிறுவர்களுக்கு மிட்டாய் வாங்கித் தருவார், பசியுடன் இருக்கும்
பிள்ளைகளுக்கு பன்னும் வாங்கித் தருவார்.
சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள், வத்சலா அந்த ஊர்
குளத்தில் மூழ்கி உயிரிழந்து விட்டாள். வத்சலா சுமார் பதினைந்து பதினாறு வயது
பெண். அந்த குளம் ஒன்றும் அதிக ஆழமும் இல்லை. வத்சலா தற்கொலை செய்து
கொண்டாள் என்று பரவலாக பேச்சு எழுந்தது. அவள் இறந்த அதே நாளே
மாரியப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளும் அந்த ஊரை விட்டு சென்று விட்டனர்.
அவர்களில் ஒரு சிலர் சில மாதங்களுக்கு பிறகு ஊர் திரும்பினார். வத்சலாவின் அண்ணன் அதில் ஒருவனை நன்றாக அடித்து
துவைத்து விட்டான் என்பதை கேள்விப்பட்ட மற்றவர்கள் அதன் பிறகு உடனடியாக ஊர்
திரும்பவில்லை.
மாரியப்பன் ஊர் திரும்பிய போது
நான்கைந்து வருடங்கள் கடந்திருந்தது.
மாரியப்பன் இப்போது
கரை வேட்டிக்கு மாறி இருந்தான். வத்சலாவின் அண்ணனால் அவனை சுற்றி
பாதுகாப்பு அரண் போல இருந்த அவனுடைய அல்லக்கைகளை கடந்து அவனை ஒன்றும் செய்ய
வில்லை. வத்சலாவின் அண்ணனும் ஒரு நாள் வத்சலா இறந்த குளத்திலேயே பிணமாக
மிதந்தான். அவன் உடலில் இருந்த காயங்கள் அவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை
பட்டவர்த்தனமாக காட்டினாலும் கூட அவன் மரணம் ஒரு தற்கொலை என்றே போலீஸ்
அந்த கேஸை முடித்தது. மாரியப்பன் ஒரு திராவிட கட்சியில்
இணைந்திருந்தான் .அவனுடைய கட்சி செல்வாக்கினாலே அவனை போலீசால்
ஒன்றும் செய்ய முடியவில்லை என்று ஊர்காரர்கள் பேசிக் கொண்டார்கள். மாரியப்பனும் கட்சிக்காக உழைத்தான். நிறைய ஆட்களை கட்சியில் சேர்த்து அவனுடைய
ஆளுமையை காட்டினான். கட்சியின் தலைமையை அந்த ஊருக்கு அழைத்து
வந்து பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தான். அவனுடைய அணுகுமுறை பிடித்த
தலைமைக்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றான். அப்படி
இப்படி என்று காக்காய் பிடித்து எம்.எல்.ஏ சீட் வாங்கி தேர்தலில் போட்டி
இட்டு எம்.எல்.ஏ ஆகிவிட்டான். அதன் பிறகு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சாராயம், ஊழல், அந்த ஊழல் பணத்தில்
குவித்த சொத்துக்கள் என்று, ஒரு சரியான தலைவனுக்கு உரிய அடையாளங்கள் அனைத்தும் பெற்று விட்டான்.
நல்ல வசதி, அந்த ஊரில் ஒன்று,
பக்கத்து ஊரில் ஒன்று என்று திருமணம் முடித்து
நான்கைந்து பிள்ளைகள் பெற்றிருந்தான்.
அதே சமயம் முத்தையாவும்
பொன்னுமணியுடன் திருமண முடிந்து ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையை பெற்றிருந்தார்.
பெண் குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் ஏதோ ஒரு நோய் கண்டு இறந்து
விட, பையனை எந்த குறையும் இல்லாமல் நன்றாக
வளர்த்தார். அவனும் நன்றாக படித்தான். மேல்நிலை
பள்ளியை பக்கத்துக்கு ஊரில் முடித்த பின், மிகவும் விரும்பி ராணுவத்தில் சேர்ந்தான். சேர்ந்த சில வருடங்களில் மேற்கு
இந்தியாவில் நடந்த ஒரு எல்லை சண்டையில் வீர மரணம் அடைந்தான்.
வாழ்க்கையில் அத்தனை ஒரு கடினமான துயரம் யாருக்கும் வரக் கூடாது. அதுவும் நன்றாக வளர்த்த மகனை மண்ணுக்கு கொடுத்து விட்டு ஒதுங்க நிழல் கூட இல்லாத ஒரு தனிமை என்பது அளக்க முடியாத துயரம் . எனினும் முத்தையா மனைவிக்காக தன்னுடைய துக்கத்தை பெரிதாக வெளிக்காட்டியதில்லை. அவளும் தன்னுடைய துக்கத்தை அவரின் பொருட்டு வெளிக்காட்டியதில்லை. மகன் இறந்த பின் அவருடைய பூர்வீக நிலத்தை விற்று அந்த பணத்தை அந்த ஊர் பள்ளிக்கே கொடுத்து விட்டார். ஊருக்கு ஒதுக்கு புறமான இருந்த அந்த நிலமே நமக்கு போதாதா என்று அங்கேயே ஒரு குடிசை அமைத்துக் கொண்டு விட்டார்.
கொஞ்ச நாட்களாக பொன்னுமணி உடம்பு ரொம்ப வலிக்கிதுன்னு சொல்ல ஆரம்பித்த பிறகு தான் அவருக்கு டாக்டர் செலவிற்கு என்று பணத் தேவை கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இதுவரை அவருடைய முதலாளி கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார். இப்பொழுது உணவுப் பிரச்சனையும் வேறு சேர்ந்திருக்கிறது. முன்பு போல் உடல் நலம் இல்லாததால், அடிக்கடி வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் கூலிப் பணம் சரியாக வருவதில்லை. எனவே உணவுக்கே தட்டுப்பாடு ஆகியிருந்தது.
முத்தையா இதையெல்லாம்
யோசித்தவாறே அந்த கஞ்சியை குடித்து முடித்திருந்தார். ராத்திரிக்கு
சாப்பாடு வாங்க வேண்டும் என்றால் முதலாளியை பார்த்து பணம் ஏதாவது கேட்க
வேண்டும் என்று தோன்றியது. "நான் முதலாளி அய்யாவை பார்த்து விட்டு
வருகிறேன்" என்றவாறே அந்த மதிய வெயிலில் இறங்கி நடை போட்டார்.
பொன்னுமணி அந்த கஞ்சி
பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்று துலக்கி வைத்தாள். உடம்பு
பாரமாய் இருப்பது போல் தோன்ற சிறிது நேரம் தூங்கலாம் என்று அந்த
திண்ணையில் சாய்ந்து அமர்ந்து தூங்க ஆரம்பித்தாள்.
முத்தையா முதலாளியை தேடி போன
போது அவர் வீட்டில் இல்லை. ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று அவர்
மனைவி சொல்ல அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.
முதலாளி சற்று நேரத்தில் ஒரு புல்லட்டில் வந்தார்.
முத்தையாவை பார்த்தும் நிற்காமல் உள்ளே சென்று விட்டார். அரை மணி
நேரம் அளவுக்கு பொறுத்து பார்த்த முத்தையா மெதுவாக கதவின் அருகே சென்று
"அய்யா" என்று அழைத்தார். வெளியே வந்த முதலாளி என்ன என்பது போல அவர்
முகத்தை ஏறிட்டார்.
முத்தையா,
"அய்யா கொஞ்சம் முன்பணம் கொடுத்தீங்கன்னா"
என்று மெதுவாக ஆரம்பித்தார்.
"என்னைய்யா
பணம். போன தடவை வாங்கிட்டு
போன பணத்தையே இன்னும் வேலை செஞ்சி கழிக்கல.
இதுல கேட்டா உடம்பு முடியலன்னு சாக்கு
வேற. இன்னும் பணம் வாங்கிட்டு
போய் எப்போ கடனை முடிப்பே" என்றார் கொஞ்சம் கோபமாக
"பொஞ்சாதிக்கு
உடம்பு முடியலிங்க. கொஞ்சம் காசிருந்தா
டாக்டர் கிட்டே கூட்டிட்டு
போவேங்க. நாளைக்கு சாப்பாட்டுக்கும் வழி
ஒண்ணும் இல்ல. கொஞ்சம் கொடுத்தா
உதவியா இருக்கும் அய்யா" என்றார்
பணிவாக.
கொஞ்ச நேரம் யோசித்த
முதலாளி உள்ளே சென்று இரு நூறு ருபாய் தாள்களை அவரிடம் கொடுத்து விட்டு
மீண்டும் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டார்.
அந்த நோட்டுக்களை
இடுப்பில் இருந்த சுருக்கு பையில் வைத்து பத்திரப்படுத்திக்
கொண்டவர் மெதுவாக நடந்து மளிகை
கடைக்கு சென்றார். கொஞ்சம் அரிசி, பருப்பு, புளி வாங்கியவர் அப்படியே பத்து ரூபாய்க்கு கொஞ்சம் மிட்டாய்
வாங்கினார். வரும் வழியில் இருந்த பள்ளியில்,
பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு அந்த மிட்டாய்களை
கொடுத்து அவர்கள் மலர்ந்த முகத்தில் தெரியும் சந்தோஷக் கீற்றுகளை
ரசித்தார்.
அவர் வீடு திரும்பும் போது கொஞ்சம் வெயில்
தாழ்ந்து இருந்தது. "பொன்னுமணி" என்று அழைத்தவர் திண்ணையில் சரிந்து
தூங்கும் அவளை கண்ணுற்று "அசதியா தூங்கறியா"
என்றவாறே உள்ளே சென்று உலை வைத்து சாதம் வடித்தார். புளி கரைத்து ரசம் வைத்தார். சமையல்
தயாரானவுடன் வெளியே வந்து அவளை எழுப்பினார். மெதுவாக எழுந்து
அமர்ந்தவளிடம் "சாப்பிடறியா" என்றார் கரிசனமாக , "எனக்கு கொஞ்சம் போதும்.
பசியில்லை" என்றாள். அவளுக்கு எடுத்த அளவு தனக்கும் சாப்பாடு எடுத்துக்
கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார்.
"நீ படுத்துக்க"
என்று அவளை படுக்க வைத்து விட்டு, ஒரு போர்வையை
அவளுக்கு போர்த்தி விட்டுவிட்டு, பாத்திரங்களை சுத்தம் செய்து விட்டு, அந்த குடிசையின் கதவை
ஒருக்களித்து சாற்றி விட்டு தானும் படுத்தார். சில மணி நேர போராட்டத்திற்கு பின் அவருக்கும் தூக்கம்
வந்தது.
பொழுது புலர்ந்து சிறிது நேரம்
ஆகியிருந்தது. மெதுவாக எழுந்தார் முத்தையா. வெளியில் வந்து முகம் கை கால்
கழுவியவர், உள்ளே சென்று அடுப்பை பற்ற வைத்து டீத்தூள் கருப்பட்டி சேர்த்து
கொதிக்க வைத்து அதை வடிகட்டி இறக்கினார். அதை கொஞ்சம் பருகியவர், அப்படியே பொன்னுமணிக்கு
ஒரு குவளையில் ஊற்றி எடுத்துக் கொண்டு
மெதுவாக அவள் அருகே சென்று அவளை
எழுப்பினார். சற்றே பிளந்த நிலையில் இருந்த
அவளுடைய வாயும், சில்லிட்ட அவளுடைய
உடலும் அவள் அவரையும், இந்த உலகையும் விட்டுப் போய் சில மணி நேரம் ஆகிறது என்பதை கூறியது.
விஷயம் கேள்விப்பட்டு சில மணி நேரத்தில் அக்கம் பக்க வீட்டிலிருந்து ஆட்கள் கூடிவிட்டார்கள். "ஆக வேண்டியதை பாருங்க" என்று யாரோ ஒருவர் சொல்ல மளமளவென்று பொன்னுமணியை குளிப்பாட்டி புடவை சுற்றி கீற்று பாடையில் படுக்க வைத்தனர். பாடையை தூக்கிய நாலு பேர் மற்றும் முத்தையாவை தவிர அந்த சாவு ஊர்வலத்தில் வேறு யாரும் இல்லை. அவர்களை கடந்து சென்ற ஆட்டோ "தானைத் தலைவன், பொன்மனச் செம்மல், ஏழைகளின் இதயம், வெற்றித் திருமகன் திரு. மாரியப்பன் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை இடுவீர்" என்று ஒலித்தவாறே சென்றது. அதன் பின்னே சில பல கார்கள் அணிவகுத்தன. அதற்கு பின்னே ஒரு பிரச்சார வேனில் மாரியப்பன் கைகளை ஆட்டியபடியும், கைகளை கும்பிட்டபடியும் வந்து கொண்டிருந்தான். அவனுடைய வேனுக்கு பின்னும் சில பல கார்கள் அணிவகுத்து கொண்டிருந்தன.. அந்த நொண்டிக் காகம் அங்கே சிதறிக் கிடந்த வாய்க்கரிசியை உண்ணாமல் ஒரு மரத்திலிருந்து வேறு ஒரு மரம் தாவி அந்த சாவு ஊர்வலத்தை பின் தொடர்ந்து கொண்டிருந்தது..
நன்றாக எழுதியிருக்கீங்க ரம்யா.
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
கீதா
கதை நன்றாக இருக்கிறது ரம்யா. முடிவு நல்லாருக்கு. வித்தியாசமான முடிவுகள் எனக்கு இப்படியான முடிவுகள் மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குநன்றாகக் கதை எழுத வருகிறது. இன்னும் மேலும் மேலும் முயற்சி செய்யுங்கள்... மெருகூட்டுங்கள். வாழ்த்துகள்!
கீதா
நன்றி கீதா. தங்கள் பாராட்டுக்கள் மேலும் சிறப்பாக எழுத்துவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.
பதிலளிநீக்கு