ஞாயிறு, பிப்ரவரி 06, 2022

கதம்ப மாலை - 8

உங்கள் ஓட்டு யாருக்கு


தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. வட மாநிலங்களான உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர்,குஜராத், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரும் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கு இடையே கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு செல்வதற்கு எதிராக பாஜக போராட்டம் செய்து வருகிறது. அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி உடை அணிந்து கல்லூரிக்கு செல்வோம் என்று மாணவர்களுக்கு இடையே பேதத்தை வளர்த்து வருகிறார்கள் இவர்கள். சித்தி செய்த கொடுமையால் தற்கொலை முடிவை எடுத்த தமிழகத்தை சார்ந்த லாவண்யா என்ற மாணவி, மத மாற்றத்திற்கு பயந்தே தற்கொலை முடிவை எடுத்ததாக தமிழ்நாட்டில் பிஜேபி-யினர் ஒரு பிரச்சனையை கிளப்பி அதை மதப் பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்து, பின்னர் அதில் தோல்வியை சந்தித்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது. இதே வாரத்தில் தான் தலைநகர் தில்லியில் இரண்டு வயது குழந்தையின் தாயை மானபங்கப்படுத்தி, அவருடைய தலைமுடியை வெட்டி, அவருடைய முகத்தில் கருப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து வீதி வீதியாக அழைத்து சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். 

புலனம் வழியாக வரும் செய்திகள் பெரும்பாலும், உங்கள் மதத்தை காப்பற்ற வேண்டுமானால் இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பகிரங்கமாக, உங்கள் ஆழ்மனத்தில் உள்ள அச்சத்தை வோட்டுக்களாக மாற்ற வேண்டும் என்ற துடிப்பில் வருவதாகவே உள்ளது. மேல் கூறிய சம்பவங்களில் வருபவர்கள் அனைவரும் முதலில் பெண்கள். அவர்கள் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள், ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியம் இல்லை. அவர்களுக்கான பாதுகாப்பை, படிக்கும் உரிமையை, அச்சம் இல்லாமல் வாழும் உரிமையை எந்த கட்சியினரும் இங்கு உறுதிப் படுத்தவில்லை என்பதை முதலில் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டில் இல்லாத பிரச்சனையா - வேலை வாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, சாலைகள் அமைப்பு மற்றும் மழை நீர் வடிகால்கள், சுத்தமான குடிநீர், எல்லை பாதுகாப்பு என்று எத்தனை பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் ஒருவர் கூட அல்லது ஒரு கட்சி கூட இந்த  பிரச்சனை குறித்த தங்கள் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறத் முன்வரவில்லை? பதவி என்பது சம்பாத்தியம் குறித்த ஒன்று என்ற அலட்சியமா? இல்லை, மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற அலட்சியமா? இல்லை, இங்கே எல்லாரையும் விலை கொடுத்து வாங்க முடியும் என்ற ஆணவப் போக்கா? நன்கு படித்தவர்கள் கூட இந்த மாயையில் சிக்குண்டு, இந்தக் கட்சி உங்கள் சமுதாயத்தை, உங்கள் மதத்தை காப்பாற்றும் என்று எனக்குக்  கூட புலனம் வழி செய்தி அனுப்பி வருகிறார்கள் என்றால் இது எத்தகைய ஒரு பெரிய மனப் பிறழ்ச்சிக்கு முன்னோட்டம் என்பதை உணர முடியும். 

குளிர்கால ஒலிம்பிக்ஸ் சீனா பெய்ஜிங்கில் பிரமாண்டமாக தொடங்கி நடந்து வருகிறது. தொழில் நுட்பத்தில், கட்டுமானத்தில் வலுவடைந்திருக்கும் சீனா, இந்திய எல்லை பகுதிகளில் ஊடுருவி கட்டுமானங்களை கட்டி வருகிறது என்று பல பத்திரிகைகளில் வந்த செய்தி. ஆனால் அதைப்  பற்றி நமக்கென்ன? நமக்கு பிக் பாஸ், தொலைக்காட்சி தொடர் நாடகங்கள், உள்ளூர் சாதிச் சண்டைகள் தாண்டி சிந்திக்க நேரமில்லை. யாராவது பணம் தந்தால் எதற்கு என்று கூட கேட்காமல் அந்தக் கட்சிக்கு வாக்குகளை அள்ளித் தெளிப்போம். பணம் வாங்கிக் கொண்டு எல்லோரும் நல்ல வேட்பாளருக்கு வாக்களித்துப் பாருங்கள். இந்த கொடிய வழக்கம் அறுபட்டுப் போகும். கட்சிகள் தாங்கள் நடத்தும் ஊழல்கள், பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகள் ஆகியவற்றை வெகுஜன மன்றத்தில் இருந்து மறைக்கும் பொருட்டே பல்வேறு தேவையற்ற செய்திகளை நமக்காக கடைவிரிக்கிறது. அனைத்து கட்சிகளும் ஐ.டி. விங் என்று ஒன்றை வைத்திருக்கிறது. எந்த செய்திகளை நோக்கி மக்களுடைய கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதை அறிந்து அதே விஷயங்களை இந்த ஐ.டி. விங்கில் உள்ளவர்கள் அதிகமாக அளிப்பார்கள். அவர்களின் இந்த ஒருங்கிணைந்த பணி மூலம் பெய்ஜிங்கின் ஆக்கிரமிப்புகளை மறந்து மக்கள் தங்களுக்குப் பிடித்த பெரிய நடிகரின் திரைப்பட பாடலைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் விமானம் எந்த காரணத்தால் விபத்துக்களானது என்பதை விட டி-20 இல் எந்த அணி ஜெயிக்கும் என்பதை பற்றிய விவாதங்கள் அதிகம் இருக்கும். இன்றைய செய்தியின் நோக்கம் எது என்பதை விடுத்து, இந்தச் செய்தி எந்த ஒரு செய்தியை பின்னே தள்ளுவதற்காக எழுப்பப்பட்டுள்ளது என்பதை சிந்தித்து விழிப்புடன் இருக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் இருக்கிறார்கள். எதைச் சொல்கிறார்கள் என்பதை விட எதைச் சொல்லாமல் விடுகிறார்கள் என்பதே பிரதானம். இன்னும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதைப் பற்றிய  தெளிவு இல்லை. நீட் தேர்வு கொண்டு வரப் பட்ட பின்னணி எது என்ற தெளிவு இல்லை. எந்தக் கட்சியை நோக்கி நீங்கள் விரல் சுட்டினாலும் , மாற்றுக் கட்சியை நோக்கியும் மீதி விரல்கள் நீள்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளை நோக்கி மாணவர்களை வரவைக்கும் பொருட்டு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும் இதில் அனைத்து கட்சிகளுக்கும் பங்கு இருப்பதாக வரும் செய்திகள் உண்மை தன்மை வாய்ந்ததாகவே தெரிகிறது. அது மட்டும் அல்லாமல் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக செலவு செய்யும் தொகை, பயிற்சி மையங்களுக்கு வரும் கணிசமான தொகை ஆகும். கல்லூரிகளை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி மையங்களைத் திறக்க எவ்வளவு நேரம் ஆகும். பொன் முட்டையிடும் வாத்தை விரும்பாதவர்கள் யார்? பொருளாதார வசதி இல்லாத மாணவர்கள் நிலை மிகவும் பரிதாபம். பொருளாதார வசதி உள்ள மாணவர்கள் படித்த பின் இந்தியாவிலா வைத்தியம் பார்க்கப் போகிறார்கள்? இவர்கள் தங்கள் வருமானத்தை  மேம்படுத்த வேண்டும் என்று நினைத்து நிச்சயம் வேறு நாடுகளுக்கு சென்று விடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்கள் ஓரளவு நாட்டிற்கும் வீட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். கோவிட் நோய் சிகிச்சை, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறப்பாக நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இதற்கு காரணம் இங்கு இத்தனை ஆண்டு காலம் இருந்து வந்த முற்போக்கான திட்டங்களும், அதனால் பயன் பெற்ற ஏழை எளிய மக்கள் ஆவர். இவர்களே இன்று உருப்படியாக வரிக் கட்டி அரசாங்கத்தை ஏய்க்காத மத்திய தர வர்க்கம்.  ஆனால் இன்று அவர்களுக்கும் சுமைக்கு மேல் சுமை. அதிக வரிச் சுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, குழந்தைகள் படிப்பதற்கு ஆயிரம் தடைகள், விவசாயத்திற்கு பலத் தடைகள் என்று நிறைய பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் வேறு வேறு முகம் கொண்டிருந்தாலும் பின்னணியில் அவர்கள் அனைவரும் ஒன்றே. எனவே சரியானவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. வெறுப்பு அரசியலையும், மேம்போக்காக பிரச்சனைகளை அணுகுகிறவர்களையும் தவிர்த்து, உண்மையாக உங்களுக்கு குரல் கொடுக்கும் ஒருவருக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். உங்களுக்கும், உங்கள் துயரங்களுக்கும், சுமைகளுக்கும்  இடையே அரணாக இருப்பது அந்த ஒற்றை வாக்கு மட்டுமே. 

நைட்டிங்கேல் லதா மங்கேஸ்கர் 



1000 ஹிந்தி படங்களுக்கு மேல் தனது இனிய குரலைத் தந்த பாடகி லதா மங்கேஸ்கர் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. 92 வயதான அவருக்கு கோவிட் நிமோனியா தொற்று ஏற்பட்டு அதனால் மருத்துவமனையில் ஐசியூ-வில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , தர்பொழுது அவர் உயிரிழந்துள்ளார். பாரத ரத்னா விருது, தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் மிக உயரிய விருதான ஆபிசர் ஆப் தி லேஜென் ஆப் ஹானர் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார்.

Encanto 




டிஸ்னி தயாரிப்பில் சென்ற வருட இறுதியில் வந்த திரைப்படம் Encanto.  கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையே இந்தத் திரைப்படம். படம் வெளியான சில வாரங்கள் கழித்தே பாடல்கள் ஹிட் அடித்தது. அதன் பின்னரே, படமும் சிறப்பாக ஓடி வெற்றிப் படமாக மாறியது. படத்தின் பாடல்கள் படத்தை ஒட்டியும், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு அற்புதமான பணியை செவ்வனே செய்துள்ளது. குறிப்பாக We don't talk about Bruno என்ற பாடலும், Surface Pressure என்ற பாடலும் செம ஹிட். படத்திற்கு இசை அமைத்த லின் மானுவேல் மிராண்டா என்ற இசையமைப்பாளர்,  நடிகர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் என்று பல்வேறு துறைகளில் மிளிர்பவர். 



ஹாமில்டன் என்ற இசையுடன் கூடிய மேடை நாடகத்தையும், டிஸ்னி தயாரித்த மோஆனா என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். 1 புலிட்சர் விருது, 3 டோனி விருது, 2 எம்மி விருது, 2 கிராமி விருது மற்றும் 2 ஆலிவியர் விருதுகளைப் பெற்றுள்ளார்.  மோஆனா பாடல்களை விட இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மனதில் நிற்கும வண்ணம் உள்ளது. டிஸ்னி பாடல்களில் சிறந்த நூறு பாடல்களின் தற்போதைய பில்போர்ட் தரவரிசை பட்டியலில் "we don't talk about Bruno: என்ற பாடல் முதல் இடத்தில் உள்ளது. டிஸ்னி படப்பாடல் ஒன்று, பில்போர்ட்டில்  முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை   இந்த வருட ஆஸ்கர் விருது பட்டியலியல் Encanto வில் இருந்து  "Dos Oruguitas" என்ற Encanto  படப்பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது. Encanto லின்னின் கனவுப் பயணமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பெய்ஜிங் நேஷனல் மைதானத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 5 அன்று கோலாகலமாக தொடங்கியது. கோவிட் மற்றும் சீன வீராங்கனை பெங் ஷுயேய் குறித்த சர்ச்சை என்று பல்வேறு சிக்கல்களுக்கு இடையே இந்தப் போட்டியை சீனா நடத்துகிறது. ஆரிப் கான் என்ற ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கு பெறத் தகுதி பெற்றிருக்கிறார். அவருக்கு பதக்கம் கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, நார்வே போன்றவை பதக்கப் பட்டியலில் நிறைய இடம் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கும் நாடுகளில்  சில. 

முன்னதாக தொடக்க விழாவினை சீனா மிகவும் அழகாக நடத்தியது. தொடக்க விழாவில் இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.






சென்ற ஒலிம்பிக்கில் 39 பதக்கம் வென்ற நார்வே தவிர ஜெர்மனி, ரஷியன் ஒலிம்பிக் கமிட்டி, கனடா, அமெரிக்க ஆகிய ஐந்து நாடுகளும் பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி வாகை சூடப் போவது யார் என்பதை பிப்ரவரி 20,2022 போட்டி முடியும் நாளன்று, நமக்குத் தெரிய வரும். பொறுத்திருப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக