வியாழன், மார்ச் 03, 2022

எரிமலை அடைத்த சாடி - கவிதை

உலக மகளிர் தினத்தை ஒட்டி படைப்பு குழுமம் நடத்தும் கவிதைப் போட்டிக்கு எழுதிய கவிதை. கவிதை பிடித்திருந்தால் இணைப்பில் ஒரு லைக் போடவும்.

http://padaippu.com/submitted/magalir2022/354



எரிமலை அடைத்த சாடி


கரிய விழியில் மைப் பூசி காலதர் திறந்து கொண்டலை வரவேற்றேன் கண்ணால் வலைவீசி காளையரை வளைப்பதாய் காற்று காதோடு புகார்ப் பட்டியல் வாசித்தது விரும்பிய பொன் மஞ்சள் உடையுடுத்தி கதிர்காயும் மேலறையில் ஒய்யார நடைபயின்றேன் வீதியிலே வாலிபர் நெஞ்சம் கலங்கியதாய் சுடுசொற்கள் மேலெறிந்து கதிரவனும் தகித்தது காலில் அணிந்த கழலின் ஒலி காவியணிந்த நெஞ்சத்தை காதலில் வீழ்த்தியதாய் சலசலக்கும் ஓடை நீர் சொல்லியது கார் வண்ணத் துகிலாலே உடல்மறைத்ததால் ஊருக்குள் பேதம் வளர்ப்பதாய் பூக்கள் முகம் திரும்பியது படித்ததால், கர்வம் கொண்டவள் உண்மை பேசுவதால், தர்க்கம் செய்பவள் சிரிப்பதால், எதற்கும் துணிந்தவள் சிந்திப்பதால், ஆணின் எதிரியிவள் காதல் செய்யவும், பிள்ளைப் பேணவும் அடக்கி ஆளவும்,குடும்ப மானம் காக்கவும் சூதில் விற்கவும், சொந்தப் பகையைத் தீர்க்கவும் கற்பின் உருவமாய், போரில் பகடையாய், பெண் என்ன ஆணின் உடைமையா? உயிர் ஊற்றிய வெற்றுப் பொம்மையா? ஈரைந்து திங்களே குடியிருந்தவன் அகத்தின் உரிமை கோரல் முறையாகுமோ? கற்பை பொதுவில் வைப்பின் நெறி தவறா ஓர்ஆண் கிடைத்திடக்கூடுமா? சகம் தொடங்கி, மனிதயினம் பெருக நலம் வழங்க கரங்கொடுத்த உனையீன்ற மாதரை நசித்தல் வீரமாகுமோ? கற்பை விற்பனை பொருளாக்கிய கேடுகெட்ட அநேகர் திருந்தும் வரை கருப்பைகள் மூடிவிட்டால் மானுடம் பிழைக்குமா? செவ்வாய்க்கு கலம் அனுப்பும் முன் மெய்வாய்க்கு உணவிடும் மங்கையை மதித்திடு கணினி மென்மொழி அறியும் முன் பெண் ஆணுக்கு சரிநிகர் சமானமென்று மொழிந்திடு வலியனென்று நெஞ்சம் நிமிர்த்தும் முன் கரும்பாறையை துகளாக்கும் நீருண்டு உணர்ந்திடு உரிமை கோரா அரிவையெனும் முன் உயரிய தமிழும் ஆயுதமேந்துவதை எண்ணிடு எள்ளி நகையாடி துச்சமாய் ஒதுக்கும்முன் பெண் எரிமலை அடைத்த சாடியென்று தெளிந்திடு ஏவாளுக்கு முன்பிறந்தோனென பிதற்றும் முன் மாதிரி முன்செய்வது அசல் பின்செய்வதென்று அறிந்திடு இமைக்கும் நொடியில் தலைகீழ் மாற்றம் நேர்வது மட்டும் நிச்சயமாகும் திருந்தா மனங்கள் வீழ்வதும் கூட வரலாறு கண்ட சத்தியம் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக