வெள்ளி, மார்ச் 04, 2022

தோழி - கவிதை

ஜனவரி - பிப்ரவரி 2022 வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்த தோழி என்ற தலைப்பில் அமைந்த என்னுடைய கவிதை கீழே .

இந்த மாத வல்லினச் சிறகுகள் இதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.






தோழி 


நான் நானாய் இருக்க  

சுதந்திரக் கம்பளம் விரித்தவள்

எவரும் அறியும் முன்

என் வருங்கால உயரம் கணித்தவள்

கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்

யாரும் பாராத எனை

உயிர்த் தோழியென

ஊருக்கே அறிமுகம் செய்தவள்

நரை விழுந்து தோல் சுருங்கி

கால அலையில் தொலையும் வேளையிலும்

மாறாத இளமைத் தோற்றத்தில்

எனை நெஞ்சில் சுமப்பவள்

அவள் பிறந்த தினத்திற்கு

அவளே அழைத்து வாழ்த்துப் பெறுவாள்

செல்லக் கோபத்துடன்

எத்தனை முறை கேட்டாலும்

எல்லாம் இருக்கென

தனக்கென எதுவும் கேட்காதவள்

பார்த்துத் திரும்பும் போது

இன்னும் ஒரு நாள்

தங்கிப் போயேன் என

விருந்தோம்பலுக்கு உரை சொல்பவள்

அவளை அழைக்கும் போது மட்டும்

அனுப்ப மாட்டார் அவரென

அந்நிய முகம் காட்டுகிறாள்

அவள் சொன்ன மந்திரவாதிக் கதைகளில்

ஒருபோதும் சொன்னதில்லை

தோழியை இழந்தவள்

தனிமைச் சிறை மீளும் வழி

2 கருத்துகள்:

  1. வாவ்! அருமையா எழுதியிருக்கீங்க ரம்யா! ரசித்து வாசித்தேன்.

    வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா.

      நீக்கு