அனைவரும்
புத்தாண்டை கோலாகலமாக
வரவேற்று இருப்பீர்கள். புதிய ஆண்டை முன்னிட்டு உற்றோர், நண்பர்
ஆகிய அனைவருக்கும் வாழ்த்துச் செய்திகளும் அனுப்பி
இருப்பீர்கள். பெரும்பாலும் வாழ்த்துச் செய்திகள் அனைவருக்கும் மகிழ்வான ஆண்டாக
அமைய வேண்டும் என்ற முறையில் அமைந்திருக்கும். பலர் இந்த ஆண்டு அடைய வேண்டிய
குறிக்கோள்களை எல்லாம் தீர்மானித்திருப்பீர்கள்.
இந்த பட்டியல் உங்கள் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அடைய வேண்டிய
இலட்சியங்கள் சார்ந்ததாக இருக்கலாம். உங்கள் உழைப்பின் மேல் உள்ள
நம்பிக்கையின்பால் விளைந்த இவை அனைத்தும் நல்ல குறிக்கோள்கள் தாம். எனினும் பெரும்பாலோனோர்
மனித வாழ்வின் முக்கியமான
ஒன்றான, மகிழ்ச்சியாக
வாழ வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொள்வதில்லை. யாரையாவது அவர்களின் புத்தாண்டு இலட்சியத்தை
பற்றிக் கேட்டால்
உடல் எடையைக் குறைக்க வேண்டும் அல்லது தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது
போன்ற ஏதோ ஒன்றைக் கூறுவார்கள். ஆனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று
ஒருவரேனும் கூறுவது அரிதினும் அரிது.
(மகிழ்ச்சியான நாடுகள் என்று தெரிவு செய்யப்பட
நாடுகள் எத்தனை முறை தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் புள்ளி விவரம்)
சமீபத்திய
கணக்கெடுப்பின்படி, உலகெங்கும்
30 சதவீதத்திற்கும்
குறைவான மனிதர்களே, தாங்கள்
மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அமெரிக்கர்கள் 25 சதவீதமும், ஐரோப்பியர்கள்
27 சதவீதமும்
மனச் சோர்வு(depression) அடைந்திருப்பதாக
தெரிவித்து இருக்கிறார்கள். 2020 ஆண்டில்
இருந்து இருதய நோய்க்கு அடுத்த நிலையில் மனச்சோர்வே பெரிய
நோயாக உருவெடுத்துள்ளது என்று
உலக
சுகாதார மையம் தெரிவிக்கிறது. சென்ற நூற்றாண்டைக் காட்டிலும்
மருத்துவம், சுகாதாரம்
ஆகியவற்றில் அதிக அளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், செல்பேசி, கணினி
போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மிகுந்திருந்தாலும், மக்களின்
மகிழ்ச்சி அளவீடு இவற்றால் அதிகரிக்கவில்லை. உலக நாடுகளைப் பொறுத்தவரை, பெருவாரியாக, மனிதர்கள்
மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் என்றால்,
அவை
பின்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியன.
மகிழ்ச்சியான மக்கள் குறைவாக உள்ள நாடுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்சுவானா ஆகிய
நாடுகள் கடைசி
நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா பத்தொன்பதாவது இடத்தில் இருக்கிறது.
மகிழ்ச்சியற்ற மனிதர்கள் வசிக்கும் நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா பத்தாவது
இடத்தில் இருக்கிறது. மொத்த உற்பத்தி திறன்(Gross
Domestic Product), சமூக ஆதரவு,
தனிநபரின் சராசரி
ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தின் அளவீடு,
சுயமாக முடிவெடுக்கும்
சுதந்திரம், சமூகத்தில்
காணப்படும் உதவும் மனப்பான்மை,
நாட்டில்
உள்ள ஊழலின் அளவு
ஆகிய பல விஷயங்களை கணக்கில்
கொண்டு இந்த மகிழ்ச்சி அளவீடு(Happiness
Index) கணிக்கப்படுகிறது.
இன்றைய
கணினி உலகில் நம்மைச் சுற்றி வாழும் நம்முடைய நண்பர்கள், உறவினர்கள்
ஆகியோர் பற்றிய தகவல்களை இணையம் வழியாக, உடனடியாக
அறிவது சாத்தியம் ஆகிறது. முகநூல்,
படவரி, கீச்சகம் ஆகிய சமூக ஊடகங்கள் வழி ஒருவரின்
தொழில், சமூக
நிலை, அவர்தம்
வசதி வாய்ப்பு என்று எதைப் பற்றி
வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதாக வாய்க்கும் போது, இவரைப்
போல
நான் இல்லை என்ற ஒப்பீட்டு மனப்பான்மையும் கூடவே வளர்கிறது. இன்னும் வேண்டும் (The myth of more) என்ற
மனோபாவமும், எதிர்காலத்தில்
நான் நினைத்த ஒன்று நடக்கும் போது நான் மகிழ்ச்சி அடைவேன்(I'll be happy when) என்ற எண்ணமும்
மகிழ்ச்சியான வாழ்விற்கு முக்கிய தடைகள்.
தொட்டதெல்லாம்
பொன்னாகும் வரம் பெற்ற மைடாஸ் என்ற அரசனுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் அறிவோம்.
"தி பர்சூட் ஆஃப்
ஹேப்பினெஸ்(The pursuit of
happyness)" என்ற ஆங்கிலத் திரைப்படம், கிறிஸ்
கார்டனர் என்ற அமெரிக்கப் பணக்காரரின் வாழ்க்கையை
அடியொற்றி எடுக்கப்பட்டது. ஒரு கால கட்டத்தில் தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சான்
பிரான்சிஸ்கோ நகர வீதிகளில் வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கிறிஸ். கிறிஸ்
என்ற இந்தக் கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகர் வில் ஸ்மித்தும், கிறிஸ்சின் மகனாக
ஜேடன் ஸ்மித்தும் நடித்திருப்பார்கள்.
வசிப்பதற்கு இடமின்றி நியூயார்க் மெட்ரோ ரயில் நிலைய கழிப்பறையில் ஓரிரவு இருவரும்
தங்கி இருப்பார்கள். அத்தகைய துயரமான நிலையில் கூட கிறிஸ்சாக நடித்த
வில் ஸ்மித் சொல்வார்- "பணம் வரும் போகும். என்னை விட அதிகம் பணம் சம்பாதித்து
இருப்பவர்களை நான் அறிவேன். ஆனால் அவர்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். பணத்தை விட
மகிழ்ச்சி மிகப் பெரியது". அவர் கூறுவதை மெய்ப்பிப்பது போல, கடந்த
ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்கர்களின் தனிநபர் வருமானம் இரண்டரை மடங்கு
அதிகரித்திருந்தாலும் அமெரிக்கர்களின் மகிழ்ச்சி அளவீடு(Happiness Index), இந்த
ஐம்பதாண்டுகளில் மாறாமல்
அதே அளவில் தான்
இருக்கிறது. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் உலகப்
பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமெரிக்கப் பணக்காரர்களில், கிட்டத்தட்ட
நாற்பது சதவீதம் பேர், சராசரி அமெரிக்கரை
காட்டிலும், மகிழ்ச்சியாக
இல்லை என்பதும்
யோசிக்க வைக்கும் செய்தி. எல்லாம் வேண்டும் என்ற ஆசை
கடைசியில் பெரும் நஷ்டத்தில் முடிவது மட்டுமன்றி வாழ்வின் முக்கிய இலக்காகிய
மகிழ்ச்சியை கூடத் தருவதில்லை
என்பதே நிதர்சனம்.
"எனக்கு
சிறந்த ஒரு வேலை கிடைத்தால்
மகிழ்ச்சியாக இருப்பேன், எனக்கு
ஒரு நல்ல கணவன் அல்லது மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் இருப்பேன், என்னுடைய
குழந்தைகள் வேலைக்குச் சென்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று
எதிர்காலத்தில் என்றோ நிகழப் போகும் ஒரு விஷயத்திற்காக இன்றைய மகிழ்ச்சியை எதிர்
காலத்திற்குரிய ஒன்றாக மாற்றி வைப்பவர்கள் ஒரு ரகம். இவர்கள், தாங்கள்
அடைய வேண்டிய இலக்கை அடைந்தாலும் அதில் திருப்தி அடைய மாட்டார்கள். கொஞ்சம்
முயற்சி செய்தால் அடுத்த இலக்கை அடைந்து விடுவேன்,
அப்பொழுது கண்டிப்பாக
மகிழ்ச்சி அடைவேன் என்று தொடர் போல ஓட்டம் போல
மகிழ்ச்சியை துரத்தியவாறே ஓடிக்கொண்டு
இருப்பார்கள்.
மகிழ்ச்சியை
ஒரு கட்டிடமாக உருவகப்படுத்தினால், ஒவ்வொருவரும்
தனது மகிழ்ச்சிக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதும், தன்னுடைய
பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் அவ்வாறு பெற்ற
மகிழ்ச்சியை பெருக்குவது அல்லது தக்க வைத்துக் கொள்வது என்ற இரண்டுமே அந்தக்
கட்டிடத்திற்கு அடித்தளமாக
சொல்லலாம். "உன்னுடைய மகிழ்ச்சிக்கான
வழியை மறித்து நீயே தான் நின்று கொண்டிருக்கிறாய்" என்பது ரால்ப் வால்டோ
எமர்சனின் கூற்று.
ஜெர்மானிய படையினரால்
சிறை பிடிக்கப்பட்டு நாசி சித்ரவதை முகாமில்
சிறை வைக்கப்பட்ட,
"மான்ஸ் சர்ச் போர் மீனிங்"(Man's
search for meaning" ) என்ற புத்தகம் எழுதிய விக்டர் பிராங்கள் இவ்வாறு
சொல்கிறார் "நாங்கள் சித்ரவதை
முகாம்களில் இருந்த போது எங்களுக்கு தங்கள் கடைசி ரொட்டித் துண்டுகளை
தந்து சென்ற சில மனிதர்களை நான் அறிவேன். அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே.
ஆனால் அவர்கள் ஒரு மனிதனிடம் இருந்து எல்லாவற்றையும் எடுக்கலாம், ஆனால்
எந்த சூழ்நிலையிலும்
ஒருவருடைய நேர்மறையான அணுகுமுறையையும்,
தானே
தன்னுடைய பாதையை
தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் மாற்ற இயலாது என்பதை எனக்கு
போதித்தார்கள்" என்பார்.
ஒரு
கடுமையான அடக்குமுறை சூழலில் கூட,
நேர்மறை அணுகுமுறை சாத்தியம் என்றால்,
என்ன சூழ்நிலை
வந்தாலும் மகிழ்ச்சியாக வாழ
முடியும் என்பதும் சாத்தியமே.
ஆனால் அதற்கு முன், அனைத்திலும்
குற்றம் கண்டுபிடித்தல், அடுத்தவரைக் குறை
சொல்லுதல் அல்லது
தன்னைத் தானே குறை சொல்லுதல் ஆகிய மகிழ்ச்சியை திருடும் கொடிய குணங்களை நாம்
களைய வேண்டும்.
ஒரு
நாளில் தான், நாம்
எத்தனை தடவை நம்மை அறியாமல் குறை சொல்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இன்று அதிக
வெயில் அடிக்கிறது, இன்று
நிறைய கூட்டம் அல்லது இன்று அதிக வேலை
என்று
ஒரு சராசரி மனிதன், ஒரு
நாளில், எழுபத்திற்கும் மேற்பட்ட
முறை புகார்ப் பட்டியல் வாசிக்கிறான் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
நமக்குள் எப்போதும் ஓடும் அந்த எதிர்மறை எண்ணங்களை மூட்டை கட்டி வைத்தாலே
மகிழ்ச்சி நிச்சயம். பிரச்சனையை விடுத்து
தீர்வை நோக்கி நகர்வது, பிரச்சனையில் உள்ள
சாதகங்களை அல்லது
படிப்பினையை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்வது ,
நடந்தது
நடந்து விட்டது பரவாயில்லை என்று சமாதானம் கொள்வது ஆகிய மூன்று அணுகுமுறையும்
மகிழ்ச்சியைத் தக்க
வைக்க உதவும். கவலை என்பது ஒரு ஆடும் நாற்காலி போன்றது. நாற்காலியை ஆட்டுவதற்கு
நிறைய சக்தி தேவைப்படும். ஆனால் எவ்வளவு சக்தியை செலவழித்தாலும் அந்த
நாற்காலி எந்த இடத்தில் இருந்ததோ, அப்படியே
தான் இருக்கும். எனவே கவலை கொள்வதோ அல்லது
புகார் சொல்வதோ சக்தியை
விரயமாக்கும் செயலாகும். ஒரு குதிரை,
சேற்றால் நிரம்பிய ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. வெளிவர முயற்சி செய்து
தோல்வியடைந்து பள்ளத்திலேயே சிக்கித்
தவித்தது. குதிரையைத் தேடி வந்த குதிரையின் சொந்தக்காரர், குதிரை சிக்கியிருந்த சேற்றின் தன்மையைப்.
பார்த்து அந்த வழுவழுப்பான சேற்றில் இருந்து அதைக் கயிறுகள் கொண்டு மீட்பது கடினம் என்பதைப் புரிந்து கொண்டார். குதிரையை
மீட்க என்ன வழி என்று யோசித்த போது,
அவருக்கு ஒரு வழி புலப்பட்டது. தன்னிடம் இருந்த
ஏனைய குதிரைகளை, அந்த
குதிரை சிக்கி இருந்து சேற்றுப் பள்ளத்தை சுற்றி
ஓட விட்டார். ஓடும் குதிரைகளைப்
பார்த்து
தானும் ஓடவேண்டும் என்ற
எண்ணத்தில் சேற்றிலே சிக்கியிருந்த அந்தக் குதிரை தன்னுடைய பலத்தை எல்லாம் திரட்டி, மிகவும் கடினப்பட்டு வெளியே வந்து விட்டது. ஆழ்
மனதில் உதிக்கும் நமது சிந்தனைகளும் நேர்மறையாக
இருந்தால், கவலை என்னும் சேற்றில் இருந்து வெளியேறுவதும் எளிதானது
என்பதை, இந்தக்
கதை தெளிவாகக் காட்டுகிறது.
அமெரிக்கச்
சுதந்திர பிரகடனத்தில் கூட ஒவ்வொரு அமெரிக்கருக்கும், சுதந்திரம், நீதி
மற்றும் மகிழ்ச்சியான வாழ்வினைத் தேடும்
உரிமை ஆகியவை அடிப்படையான
உரிமைகள் என்று வரையறுக்க பட்டிருக்கிறது. ஆனால் மகிழ்ச்சி என்பது தேடல்
என்ற அளவில் மட்டுமே நின்றுவிடுகிறது. அது இன்று நிறைவேறாத இலக்காக மாறி பலரும் உண்மையான
மகிழ்ச்சியினை அனுபவிக்காமலேயே வாழ்ந்து
மறைகின்றனர். மகிழ்ச்சிக்கு மற்றொரு தடை நாம் எண்ணுவது அனைத்தும் உண்மையென
நம்புவது. ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 60000
எண்ணங்கள்
உதிப்பதாகவும் அதில்
80 சதவிகித
எண்ணங்கள், எதிர்மறை
எண்ணங்களாக இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். நேர்மறை எண்ணங்கள் தாமரையிலை மேல் நீர் போல
நமக்கு பெரிய நம்பிக்கையை தராமல் மறைவதும்,
எதிர்மறை
எண்ணங்கள் நமக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்குவதற்கு காரணம், மனிதர்கள்
காடுகளில் வாழ்ந்த போது அபாயம் எது
என்பதை
உணர்வது, அவர்களின்
உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாத ஒன்றாக அமைந்ததாகும். எனவே அமிக்டலா என்னும்
ஆதியில் உருவான மூளைப்பகுதி , எதிர்மறை
சிந்தனைகளை அதிக அளவு நினைவில் வைத்திருக்கிறது. இதனால் தான், ஒரு
எதிர்மறை சிந்தனையை எதிர்கொள்ள பத்திற்கும் மேற்பட்ட நேர்மறை எண்ணங்கள்
அவசியமாகிறது. அதே சமயம், மனித
மூளை வளைவுத் தன்மை
உடையது. எனவே நேர்மறை சிந்தனைகளை மீண்டும் மீண்டும் நினைப்பதன் மூலம் அபாயத்தை
கிரகிக்கும் அமிக்டலா என்னும் மூளைப் பகுதியில்
இருந்து, நியோகார்டெக்ஸ்
என்னும் மூளை பகுதிக்கு நம்மால் நமது எண்ணங்களை கடத்த முடியும். நியோகார்டெக்ஸ்
என்ற இந்த மூளைப் பகுதி மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. எனவே அடுத்த முறை எதிர்மறை
எண்ணம் தோன்றும் போது, இந்த
எண்ணம் உண்மையானதா, எந்தவித
சந்தேகமும் இன்றி என்னால் இதை உறுதியாகக்
கூற முடியுமா, இந்த
எண்ணத்தை உண்மை என்று நம்பும் போது நான் எப்படி உணர்கிறேன், இந்த
எண்ணம் உண்மையானது இல்லையென்றால்,
நான்
எப்படி உணர்வேன் என்று
அந்த சிந்தனையைக் கேள்விக்கு உட்படுத்துங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்வதன்
மூலம் எதிர்மறை எண்ணங்கள், நமக்கு
துன்பம் அளிப்பதில் இருந்து
சிறிது சிறிதாக விடுபட
முடியும். இது மகிழ்ச்சிக்கான
பாதையில் நம்மை கொண்டு சேர்க்கும். "நாம்
துன்பம் நேர்வதால் துன்புறுவதில்லை, துன்பம்
வந்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே துன்பம்
அடைகிறோம்" என்கிறார்
கிரேக்க தத்துவம் ஞானி எபிக்டீடஸ்.
மகிழ்ச்சியின் ஊற்று என்று சொல்லக் கூடிய ஒரு அவயம் உண்டென்றால் அது மனிதனின் இருதயம் மட்டுமே . இருதயத்தை மகிழ்ச்சியாய் வைக்கக் கூடியவை என்றால், நன்றியுணர்வு, மன்னிப்பு, இரக்கம் ஆகிய குணங்களைக் குறிப்பிடலாம். மாசுரு எமோட்டோ என்ற ஜப்பானிய மருத்துவர் தண்ணீரைக் கொண்டு, ஒரு புதிய ஆராய்ச்சியைச் செய்தார். ஒரு நீர் நிரம்பிய குவளையின் முன், நன்றியுணர்வை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளைச் சொன்னார். பின்னர் அந்த நீரை உறையச் செய்து, அவ்வாறு உறைந்த பின் உருவான நீர்ப் படிகத்தை புகைப்படம் எடுத்தார். அதே போல வேறு ஒரு குவளை நீரின் முன் நின்று இழிந்த வார்த்தைகளை பிரயோகித்து, அதையும் புகைப்படம் எடுத்தார். நல்ல வார்த்தைகளைச் சொல்லி புகைப்படம் எடுத்த போது, அந்த நீரில் அழகிய படிக வடிவங்கள் உருவாகி இருந்தது. தீய சொற்களை பிரயோகித்த நீரில், படிகம் எதுவும் இல்லாமல் உருக்குலைந்து இருந்தது. இதை அவர், "ஹிடன் மெசேஜஸ் பிரம் வாட்டர்"(Hidden Messages from Water) என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
(முதல் படம், நன்றியுணர்வை வெளிப்படுத்திய பின் நீர்ப் படிகம், அடுத்த படம் கசப்புணர்வை வெளிப்படுத்திய பின் நீர்ப் படிகம்)
மனித
உடல் 80 சதவிகிதம்
தண்ணீரால் ஆனது என்றால் நமக்கு நன்றியுணர்வு எத்தனை அவசியமானது என்பதை
எண்ணிப் பார்க்க வேண்டும் . எனவே, எத்தகைய கடினமான
சூழலிலும், நன்றியுணர்வுடன்
இருப்பது அவசியம். "செருப்பு இல்லையே என்று
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன், கால்
இல்லாதவனை பார்க்கும் வரையில்" என்ற வரிகளும் "உனக்கும் கீழே உள்ளவர்
கோடி, நினைத்துப்
பார்த்து நிம்மதி நாடு" என்ற பாடல் வரிகளும் நமக்கு அறிவுறுத்துவதும் இதையே
தான்.
"அடுத்தவர்
செய்யும் தவறுகளை மன்னிப்பதே அன்பின் உயர்ந்த வடிவமாகும். அவ்வாறு செய்பவர்களுக்கு, ஈடு செய்ய முடியாத அமைதியும் மகிழ்ச்சியும்
பரிசாகக் கிடைக்கும்" என்பார் ஐ.நா வின் மேனாள் துணைச் செயலாளர்
ராபர்ட் முல்லர். பிறரை மட்டுமன்றி நம்மையே நாம் செய்த தவறுகளுக்காக மன்னிக்கும்
போது, கோபம்
மற்றும் வெறுப்பில் இருந்து நம்மை விடுவிக்க முடியும். இரண்டு புத்த பிட்சுக்கள்
பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் செய்யாத குற்றத்திற்காக சிறையில்
அடைக்கப்பட்டு துன்புறுத்தப் பட்டவர்கள். முதலாவது பிட்சு, இரண்டாவது
புத்த பிட்சுவைப் பார்த்துக்
கேட்டார், நீ
உன்னை துன்புறுத்தியவர்கள் மன்னித்து விட்டாயா?
என்று.
அதற்கு இரண்டாவது பிட்சு, மன்னிப்பா, ஒரு
காலும் இல்லை என்றார். அதற்கு முதலாமவர் கூறினார்,
அவர்கள்
இன்னும் உன்னைச் சிறையில் தான் வைத்திருக்கிறார்கள் இல்லையா? என்று.
மன்னிப்பு என்பது பிறருக்கானது அல்ல, அது நமக்கானது, நமது
அமைதிக்கானது, நமது
மகிழ்ச்சிக்கானது, நமது
வலிமையை மீட்டெடுக்கும்
கருவி என்பதை உணரும் போது, பிறரை
மன்னிக்கும் குணம், எந்த
வித பக்க
விளைவுகளும் இல்லாமல் ஆழ்ந்த மகிழ்ச்சியினை
நம்மிடம்
திருப்பும் மாமருந்து என்பது புலனாகும்.
அடுத்ததாக, நமது
சக உயிர்களிடம், நாம்
காட்டும் பரிவு அல்லது இரக்கம், எத்தகைய ஆழ்ந்த
மகிழ்ச்சியை அளிக்க
வல்லது என்பதற்கு நம் தமிழ் சமூகத்திலேயே பல சான்றுகள் உள்ளன. மயிலுக்கு போர்வை
அளித்த பேகனும், முல்லைக்கு
தேர் அளித்த பாரியும், புறாவுக்குத்
தன்னுடல் சதையை வழங்கிய
சிபியும் நமக்கு
உணர்த்துவதும் இதையே. தனக்கு
மறுபிறவி என்ற ஒன்று இருந்தால்,
அடுத்தவருக்கு இல்லையெனாது வழங்கும்
மனமே வரமாக வேண்டும் என்று மரணத் தருவாயில் கூட அடுத்தவரைப் பற்றியே எண்ணிய
கர்ணனை கண்டு பாரதத்தில் பகவான் கிருஷ்ணரே
கண்ணீர்
சிந்தினார் என்றால் பரிவு என்பது ஆண்டவனையே
அருகிருத்தும் ஒன்று
என்பதை உணர வேண்டும்.
மகிழ்ச்சி
என்பது மனம் சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. அது உடல் நலன் சார்ந்த
ஒன்றும் ஆகும். அதிக மன அழுத்தம் அல்லது உடலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும்
அதிக சர்க்கரை, அதிக
உப்பு அல்லது கொழுப்புச் சத்து நிறைந்த உணவினை உட்கொண்டு வியாதிகளால்
துன்புறுகிறோம்.
அமெரிக்காவை பொறுத்தவரை 42 சதவிகிதம்
பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், அதனால்
ஏற்படும் மருத்துவ
செலவுகள் ஆண்டிற்கு 14700 கோடி
டாலர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி, சரியான
உணவு, சரியான
உறக்கம், தேவையான
தண்ணீர் ஆகியவை உடல்
நலனை கட்டிக் காக்க உதவும் வழிமுறைகள். இதை பல இடங்களில் கேட்டும், படித்தும்
அனைவரும் அறிந்திருக்கலாம். எனினும், இங்கே
வலியுறுத்த விரும்புவது என்னவென்றால்,
உடல்
என்பது அறிவார்ந்த ஒன்று. அதற்கான தேவை
எது
என்பதை அது எப்போதும் உணர்த்தும். நாம் தான்,
அதைச் செவி
மடுக்காமல், பல்வேறு
துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகிறோம். இனியாவது,
நாம்
தேர்ந்தெடுக்கும் எதுவும், நமது
உடலுக்கு நன்மை தருமா அல்லது துன்பத்தை தருமா என்பதை ஆய்ந்து, சரியானதை
தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் "உடலை வளர்த்தேன், உயிர்
வளர்த்தேனே" என்ற திருமூலரின் கூற்றில் " மகிழ்ச்சியும்
அடைந்தேனே" என்பதையும் இணைத்துக் கொள்ள முடியும்.
மனப்பயிற்சி எனப்படும் தியானப் பயிற்சி செய்வதன் மூலம் எல்லையில்லாத பிரபஞ்ச ஆற்றலில் இணைந்து நீங்காத மகிழ்ச்சியை அடைய முடியும். ஒய்வு நேரத்தை புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, செய்தித்தாள் வாசிப்பது, இணையத்தில் எதையேனும் பார்ப்பது என்று எதையாவது செய்து நேரத்தை நிறைத்துக் கொண்டிருப்பதே பலரது அன்றாட வழக்கமாக இருக்கிறது. குழந்தைகளைக் கூட சும்மா இருப்பதற்கு விடுவதில்லை. ஏதேனும் ஒரு வகுப்பில் சேர்த்தோ அல்லது ஒரு வேலையில் ஈடுபடுத்தியோ அவர்களுக்கு சிறிதும் ஒய்வு கொடுக்காமல் வளர்க்கிறோம்.
உலகெங்கும், நால்வரில் மூன்று பேர்களிடம், அலைபேசி இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில், அலைபேசியைத் தாண்டி நேரத்தை கழிக்க வேறு எதுவும் தேவைப்படுவதே இல்லை. தினமும் 15 நிமிடமாவது தியானத்திற்கு ஒதுக்கும் போது, உள்ளத்தில் வலிமையும், மகிழ்ச்சியும் நிறையும். தியானத்தை ஒரு குருவிடம் இருந்து கற்கலாம், அமைதியான சூழலில் அமர்ந்து அதைப் பெற முயற்சிக்கலாம், இயற்கைக் காட்சிகளில் லயித்து அதைக் கைக்கொள்ளலாம் அல்லது இசை வழியே அதைக் காண முற்படலாம். உங்கள் வழி எதுவாயினும், தியானத்தை வழக்கம் ஆக்கும் போது, எல்லை இல்லாத பிரபஞ்ச ஆற்றலில் உங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். தியானம் என்பது, சல்லடையில் தண்ணீரை நிறைப்பதைப் போன்றது. சல்லடையை முழுமையாக நீரில் அமிழ்த்தினால் அன்றி, அதில் நீரை நிரப்புவது என்பது இயலாது. சல்லடையைப் போல நமது மனதையும் தியானத்தில் அமிழ்த்தினால் மகிழ்ச்சி என்றென்றும் நமது வாழ்வில் நிறையும்.
ஒரு
மனிதனின் வாழ்வில் இரண்டு சிறந்த தினங்கள் இருக்கின்றன. ஒன்று அவன் பிறந்த தினம், மற்றொன்று
அவன் எதைச் சாதிக்கப் பிறந்தான் என்பதைக் கண்டடையும்
தினம் என்பார்கள். உங்கள் சாதனை அல்லது நீங்கள் இந்த உலகத்திற்கு உங்களால் மட்டுமே
தரக் கூடிய ஒன்று, என்ன
என்பதைக் கண்டறிந்து, அதை
நோக்கி உங்களைச் செலுத்துவது
என்பது மகிழ்ச்சியென்னும் கட்டிடத்திற்கான மேற்கூரையைப் போன்றது.
பலரும் பிடிக்கிறதோ
இல்லையோ, குடும்ப
பொருளாதார நிலை அல்லது வேறு காரணங்களால் தாங்கள் விரும்பாத
வேலையைச் செய்து வருகிறார்கள்.
2001 இல்
நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, அமெரிக்காவில் வெறும் 20 சதவிகித
ஊழியர்களே தாங்கள்
விரும்பும் வேலையைப் பார்ப்பதாகத் தெரிவித்து
இருக்கிறார்கள். உங்களுடைய மனவெழுச்சியும்(passion), நீங்கள்
செய்யும் தொழிலும் ஒரே
புள்ளியில் இணைந்தால் அதை விட மகிழ்ச்சி தருமொன்று இருக்க இயலாது. எனினும் அவ்வாறு
அமையாத போதும், மகிழ்ச்சியாக
இருக்க முடியும். மகிழ்ச்சிக்கான
சாவி வெற்றி அல்ல. மகிழ்ச்சியே, வெற்றிக்கான
சாவி. நீங்கள் விரும்பிய ஒரு செயலை அல்லது விரும்பாத ஒரு செயலை, மகிழ்ச்சியுடன் செய்யும் போது, நீங்கள்
நினைத்துப் பார்த்திராத அளவு பெரிய வெற்றிகள் உங்களைத் தேடி வரும். நீங்கள்
நினைத்துப் பார்க்காத இடங்களில் இருந்தும்,
மற்றவர்களுக்கு
தென்படாத வழிகளில் கூட வெற்றிக்கான வாசல் உங்களுக்காகத் திறக்கும். இந்த
உலகத்திற்கு உங்களால் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று,
பெண்கள் முன்னேற்றம் , கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு
போன்று எதுவாகவும்
இருக்கலாம். தன்னை விடப் பெரியதொரு நோக்கத்தில் ஈடுபடுத்திக்
கொண்டு, அடுத்தவருக்கு ஆறுதலையும், அன்பையும்
அள்ளித் தரும் ஒருவரின் வாழ்வில், மகிழ்ச்சி
என்னும் தென்றல் எப்போதும் வீசும்.
இறுதியாக, மகிழ்ச்சிக்கான
முக்கிய கூறு நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் தாம். நாம் தினமும் நேரம்
செலவழிக்கும் ஐந்து நபர்களின் குண நலமே, நம்முடைய
குணமாக இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. நம்மை சுற்றி இருக்க நாம்
தேர்ந்தெடுக்கும் மனிதர்கள், நம்மைத் தலைச் சிறந்த மனிதராகவோ அல்லது
மோசமான மனிதராகவோ மாற்ற
வல்லவர்கள். எப்படி எதிரொலியானது நாம் நல்ல வார்த்தைகளைச் சொன்னால், பல
மடங்கு அதைப் பெருக்கி திரும்ப
நம்மிடமே எதிரொலிக்க வல்லதோ, அது
போலவே மகிழ்ச்சியான நட்புகளை, உறவுகளை
நாம் பேணத் தொடங்கினால், நம்முள்
இருக்கும் மகிழ்ச்சியை பன்மடங்கு பெருக்க
முடியும். உலகம் கண்ணாடியைப் போன்றது. நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ, அதையே
நமக்குப் பிரதிபலிக்கும். நாம் மகிழ்ச்சியாக வாழ முடிவு செய்தால், அதற்கான
ஆற்றல், சூழல், உறவுகள்
என்று எல்லாமும் தானாகவே நம்மைத் தேடி வரும்.
உள்ளத்தில்
மகிழ்ச்சி இருந்தால், அகத்தில்
அழகு இருக்கும்
அகத்தில்
அழகிருந்தால், வீட்டில்
நல்லிணக்கம் இருக்கும்
வீட்டில்
நல்லிணக்கமிருந்தால், நாட்டில்
ஒழுங்கிருக்கும்
நாட்டில்
ஒழுங்கிருந்தால், உலகத்தில்
அமைதி இருக்கும்
என்கிறது
ஒரு சீனப் பழமொழி. மகிழ்ச்சியான மனிதன் ஒரு கலங்கரை விளக்கம் போன்றவன். அவன்
தனக்கு மட்டும் அல்லாமல் இந்த உலகத்திற்கே வழிகாட்டியாக விளங்கக்
கூடியவன். மகிழ்ச்சியாக வாழ்ந்து,
பிறருக்கு
வழிகாட்டியாக இருப்பது
கூட, நாம்
இந்த உலகத்திற்கு ஆற்றும் சிறந்த சேவையாக இருக்க முடியும். அனைவருக்கும் இந்தப்
புத்தாண்டு, என்றும்
நீங்காத மகிழ்ச்சியான வாழ்விற்கான தொடக்கமாக
அமையட்டும்.
இந்தக் கட்டுரை ஜனவரி-பிப்ரவரி 2022 வல்லினச் சிறகுகள் இதழில் வந்துள்ளது. இதழினை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக