மகளிர் தினத்தை முன்னிட்டு FeTNA பேரவை இலக்கியக் குழு சார்பாக மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி கீழே. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறேன்.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப்
பெண்ணுருப் போந்து நிற்பது
தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு
நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
என்ற கூற்றுப்படி பாரதி கண்ட கனவினை உண்மையாக்க உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களை இந்தச் சிறப்பு இலக்கியக் கூட்டத்தின் வழியாக சந்திக்கவிருக்கிறோம். பெண் என்னும் பெரும் சக்தியை ஆண்டுதோறும் பெண்கள் நாளன்று கொண்டாடுகிறோம்.
இவ்வாண்டும் பெண்களின் ஆற்றலை, அறிவை, மேன்மையை கொண்டாடும் வகையில் இந்த நாளினைச் சிறப்பிக்க மூன்று ஆற்றல் பொருந்திய சாதனைப் பெண்களை நம்மிடையே உரையாற்ற அழைத்திருக்கிறோம்.
"பெண்ணின் பெருந்தக்க யாவுள" என்று வள்ளுவர் பெருந்தகை பெண்மையைக் கொண்டாடுகிறார். மலைவாழ், சிற்றூர் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வியல் சூழல் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து "மனிதரில்" என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை வழங்க கவிஞர் திருமிகு வைகைச்செல்வி அவர்கள் வருகிறார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இன்று எல்லா மனிதர்களையும் அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை. தமிழகத்தில் நிலவும் சுற்றுசூழல் குறித்த பார்வையைப் பகிர்ந்து கொள்ள நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சித் தலைவர் திருமிகு இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் அவர்கள் நம்முடன் இணையவுள்ளார். முன்களப் பணியாளராக அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தன்னுடைய எண்ணங்களை பகிரவும், பெண்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயமும் இயற்கை பாதுகாப்பிற்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும் "மண்ணில்" என்ற தலைப்பில் நம்முடன் உரையாற்றவிருக்கிறார்.
பெண்கள் பலர் உயர்கல்வி பெற்று பல துறைகளில் சிறந்து விளங்கினாலும், விண்வெளித்துறை என்பது பல பெண்களுக்கு குறிப்பாக சிற்றூரிலுள்ள பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்தத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள நாளைய தலைமுறையை தயார் செய்யும் விதமாக "விண்ணில்" என்ற தலைப்பில், தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் மேனாள் துணை இயக்குனர் திருமிகு ந.வளர்மதி அவர்கள் வருகை தரவிருக்கிறார்.
தமிழகத்தின் எடுத்துக்காட்டுப் பெண்களாக வலம் வந்து, சிறந்த களப்பணியாளர்களாக மிளிரும் இவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பேரவை இலக்கியக் குழு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.
வாருங்கள் எங்களோடு கலந்துகொண்டு வாழ்வை வென்றெடுத்த இந்தப் பெண்கள் கூறுவதை கேளுங்கள்!
நிகழ்ச்சி நடைபெறும் நாள்:
அமெரிக்க நேரம்: சனிக்கிழமை மார்ச் 12 2022
இரவு 8:30 மணி கிழக்கு நேரம் (EST)
இந்திய நேரம்: ஞாயிற்றுக்கிழமை மார்ச் 13 2022
காலை 7:00 மணி
சிறப்பான நிகழ்வு. இதற்கு முன்னான உங்கள், மகளிர் தினக் கவிதையும் அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
மிக்க நன்றி துளசிதரன்.
பதிலளிநீக்கு