வியாழன், மார்ச் 03, 2022

இயல்புநிலை திரும்பியது - கவிதை

 




இயல்புநிலை திரும்பியது 

குண்டுகள் துளைத்த கட்டிடங்களின் 
படங்கள் தாங்கிய செய்தித்தாள்கள் 
எங்கள் கண்ணில் படவில்லை
அலுவலகத்தின் பதிமூன்றாம் மாடியில் இருந்து
வாடிய தோட்டத்துப் பூக்களாத் தெரியும்?

நெருப்பில் எரிந்து அடையாளம் தொலைந்த
உடல்களை அள்ளிக் கதறும் முகங்கள் 
எங்களது கண்களில் படவில்லை
அலுவலக பரபரப்பில் விரையும் 
வாகனத்தின் திசை அறிய 
அவற்றை தத்துக் கொடுத்திருக்கிறோம் 

இயற்கை வளங்களுக்கான போர்களில்
சிதறும் ரத்தத் துளிகளில் 
கவனம் கொள்வதே இல்லை 
குருதிநிறத்து எரிபொருள் நிரப்பிய 
மகிழுந்து பயணத்தின் போது
 ஒலிக்கும் பாடல்களின் சத்தத்தில்
 உதிர்ந்த இதயங்களின் கதறல் கேட்பதேயில்லை 

குண்டு பாய்ந்து உயிருக்கு
போராடும் மழலையோ
பனிப்பாறை உருகுவதால்
பசியுடன் இறக்கும் பனிக்கரடியோ 
எங்களை பாதிப்பதேயில்லை 
குழந்தை விட்டுச் சென்ற
பனிக்கரடி பொம்மைகள் போதும்
அடுத்த தலைமுறைக்கும் காட்ட 

பேதமில்லாமல் உயிர்களை கொல்லும் 
கொடிய நுண்ணுயிரி கூட
இத்தனை அழிவிலும் பாடம் கற்கா 
மனிதனையா பீடித்தோமென
வெட்கி விடைபெற்று விட்டது
 
அலுவலகப் பணிக்கு இடையே 
அளவளாவி குளம்பி அருந்தி
அன்றைய போரின் அவலத்தை அலசும்
அறைகளில் எல்லாம் சிதறிக் கிடக்கிறது 
உங்களுக்கான எங்கள் வெற்றுச் சொற்களும்
உதவிப்பெட்டியில் கொஞ்சம் சில்லறைகளும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக