வயற்காட்டில் களையெடுக்கும்
நங்கைக்கு சமக் கூலியே சீர்
நள்ளிரவு பேருந்து பயணத்தில்
தங்கைக்கு பாதுகாப்பே பரிசு
நேர்த்தியான உடையணிந்தால்
தீண்டாத கண்களே கருணை
மனீஷாக்களும் ஆசிஃபாக்களும்
அலங்கரிக்காத செய்தித்தாள்களே வரம்
பணியிடங்களில் ஒலிக்காத
"மீ டூ" வே மங்கல வாழ்த்து
நடுநிசியில் சிதைந்த பெண்ணுடல்
சிதைபுகா நாளே பொன்னாள்
ஆணை ஏற்கா பெண்ணிற்கு
அமிலத்தை பரிசளிக்காத மனத்திட்பமே வீரம்
காதலனுடன் சென்ற கன்னிகைக்கெதிராய்
ஆயுதமேந்தா அன்பே சகோதரத்துவம்
உடல்நலமில்லா பொழுதுகளில்
உற்சாக வார்த்தைகளே உரம்
படிக்கும் மங்கையர்க்கு உடையால்
பகைவளர்க்கா கண்ணியமே பரிவு
பெண்களுக்கான விடயங்களில்
அவர்களே முடிவெடுக்கும்
சுதந்திரமே வெற்றி
ஆண் பெண் சமத்துவத்தை
கொண்டாடும் நாளல்ல
இரண்டும் இருவேறு
பெண்கள் அடிமை விலங்கை
தகர்க்கும் நாளல்ல
அனைத்து பாலினங்களும்
ஒன்றேயென்று களிக்கும் நாள்
புதிய புரிதலை நோக்கி
புயலென நகரும் நாள்
ஆண்கள் பாரதியை
சிந்தையில் இருத்தும் நாள்
பெண்கள் பெரியாரின் வாரிசென்று
நெஞ்சம் நிமிர்த்தும் நாள்
பெண்களுக்கான தினமல்ல இது
மானுடம் ஒன்றேயென்று முரசறைந்து
அறிவுறுத்தும் நாள்
அனைத்து மாந்தரும் சமம் என்ற சமத்துவ தினமாக இந்த உலக மகளிர் நாளைக் கொண்டாடுவோம்.
அருமை ரம்யா. நல்லாருக்கு
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்கு