மார்ச் 2022 வல்லினச் சிறகுகள் இதழில் நான் எழுதிய கட்டுரை. வல்லினச் சிறகுள் இதழை முழுமையாக படிக்கச் கீழே சொடுக்கவும்.
"உங்களைச்
சுற்றியுள்ள இந்த உலகத்தைப் பாருங்கள். யாராலும் அசைக்க முடியாத,
வீழ்த்த முடியாத ஒரு இடமாகத் தென்படும். ஆனால்
உலகம் உண்மையில் அப்படிப்பட்டதல்ல. சரியான இடத்தில் ஒரு சின்ன அழுத்தம் கொடுத்தால்
இந்த உலகினை எளிதாக உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க முடியும்" என்னும்
மந்திர வார்த்தைகள் மூலம் நம்மைத் தன் வசப்படுத்துகிறார் மால்கம் க்ளாட்வெல் என்ற கனேடிய
எழுத்தாளர். Blink(பிளிங்க்),
அவுட்லையர்ஸ்(Outliers), டாக்கிங்
டு ஸ்ட்ரெஞ்சர்ஸ் (Talking to Strangers) எனப்
பல வெற்றிப் புத்தகங்கள் எழுதியுள்ள இவரின் பேச்சைக் கேட்க நாற்பதாயிரம் அமெரிக்க
டாலர்கள் வரை தருவதற்குப் பல முன்னணித் தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இவரின்
முதல் புத்தகமான "Tipping Point" (டிப்பிங்
பாயிண்ட்) என்ற புத்தகம் 2000-மாவது ஆண்டு வெளியானது. ஒரு
சின்னச் சிந்தனை எப்படிக் காட்டுத்தீ போலப் பரவ முடியும்,
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கு என்ன விதமான
காரணிகள் அல்லது மனிதர்கள் தேவை, அப்படிப் பரவக் கூடிய அந்த
யோசனை என்ன தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பல உதாரணங்களுடன் பேசுகிறது
இந்தப் புத்தகம். ஒரு புதிய சிந்தனை அல்லது ஒரு சித்தாந்தம் வெற்றிகரமாக மாறும்
அந்தப் புள்ளியை இவ்வியக்கப் புள்ளி(Tipping Point) அல்லது
மாறுநிலைப் பொருண்மை(critical mass) என்று
சொல்கிறார் மால்கம். உதாரணமாகப் படவரியை (Instagram) எடுத்துக்
கொள்ளுங்கள்.2012 ஆம் ஆண்டு வரை மிகவும் சீரான
வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், பிப்ரவரி
2012
ஆம் ஆண்டு திடீரென்று அதீத வளர்ச்சி அடைய
ஆரம்பித்து இன்று கிட்டத்தட்ட 100 கோடி வாடிக்கையாளர்களைக்
கொண்டுள்ளது. ஒரு பனிக்கட்டியை ஒரு அறையில் வைத்து விட்டு அந்த அறையின் வெப்ப
நிலையை ஒவ்வொரு டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகப்படுத்துங்கள். இருபத்தி ஒன்பது டிகிரி
ஃபாரன்ஹீட் வெப்ப அளவில் பனிக்கட்டி அப்படியே தான் இருக்கும். முப்பது டிகிரி
ஃபாரன்ஹீட் அளவிலும் பெரிய மாறுதல் இருக்காது. முப்பத்தி ஒன்று டிகிரி
ஃபாரன்ஹீட்டிலும் எந்த ஒரு மாற்றமும் நேராது. ஆனால் வெப்ப நிலை முப்பத்தி இரண்டு
பாரன்ஹீட்டைத் தொட்டவுடன் பனிக்கட்டி உருகி நீராக மாறி விடும். பனிக்கட்டி நீராக
மாறும் இந்த மாற்றம் திடீரென்று முப்பத்தி இரண்டு ஃபாரன்ஹீட்டில் நிகழ்ந்த
மாற்றம். இப்படியாக, ஏதோ ஒரு நிகழ்வு,
சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவும். ஒரு விஷயம் மெல்ல மெல்லப் பரவி,
திடீரென்று கட்டுக்கடங்காத வேகத்தில்,
எல்லார் எண்ணங்களிலும் பரிணமிக்கும் அந்தத் தருணமே,
இவ்வியக்கப் புள்ளி ஆகும்.
1990-களில்
ஹஷ் பப்பீஸ் என்ற ஒரு வகைக் காலணிகள் வருடத்திற்கு 3 லட்சம் காலணிகள் மட்டுமே
விற்றன. காலணி விற்பனை பெரும்பாலும் சிறிய ஊர்களிலும், சின்னச் சின்ன வணிக
வளாகங்களிலும் மட்டுமே நடந்தது. இந்தக் காலணிகளை உற்பத்தி செய்யும் உல்வரைன் (Wolverine) என்ற
நிறுவனம், இந்தக்
காலணியின் உற்பத்தியை நிறுத்தி விடலாமா என்று யோசித்து வந்தது. 1994 ஆம்
ஆண்டு இறுதியில் நியூயார்க் நகர வீதிகளிலும்,
பேஷன் அரங்குகளிலும் மீண்டும் இந்த வகைக்
காலணிகள் உலா வரத் தொடங்கின. உடை வடிவமைப்பாளர்களும், பதின்பருவ வயதினரும், பேஷன் மாடல்களும் இந்த வகைக்
காலணியைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் 1995
ஆண்டு இறுதியில் 4 லட்சத்து முப்பதாயிரம் ஹஷ்
பப்பீஸ் காலணிகள் விற்றுத் தீர்ந்தன. அதற்கு அடுத்த வருடம் இந்தக் காலணிகள்
விற்பனை நான்கு மடங்கு ஆனது. 1996
ஆம் ஆண்டு லிங்கன் மையத்தில் நடைபெற்ற ஆடை
வடிவமைப்பாளர்களுக்கான விருது நிகழ்ச்சியில் ஹஷ் பப்பீஸ் நிறுவனத்திற்குச் சிறந்த
காலணிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்ற, அந்த நிறுவனத்தின் தலைவரே, இந்த விருதுக்காகத் தனது
நிறுவனம் எந்த வித பிரத்யேக முயற்சியும் எடுக்கவில்லை என்று பின்னர் உரைத்தார்.
ஈஸ்ட் வில்லேஜ் மற்றும் சோஹோ போன்ற நியூயார்க் பகுதிகளில் சில இளைஞர்களும்
யுவதிகளும், யாரும்
பயன்படுத்தாத காலணிகள் என்ற வகையில்,
ஹஷ் பப்பீஸ் காலணிகளை அணிய ஆரம்பித்த பின்னரே
ஹஷ் பப்பீஸ் காலணிகளைப் பலரும் விரும்பி அணிய ஆரம்பித்தனர். இவ்வாறு புதிய ஒரு
பேஷன் அல்லது ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கக் காரணமான மனிதர்கள்
எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழும். இவர்களையும்
நமக்கு அடையாளம் காட்டுகிறார் மால்கம்.
முதல் வகை மனிதர்களை இணைப்பர்கள்(Connectors) என்றும், இரண்டாம் வகை மனிதர்களைத் துறைசார் நிபுணர்கள்(Mavens) என்றும் மூன்றாம் வகை மனிதர்களை விற்பனையாளர்கள் (Salesmen) என்றும் அழைக்கிறார் மால்கம். 1775 ஆம் ஆண்டுப் பிரிட்டனுக்கு எதிரான அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பால் ரிவீர் மற்றும் ஜோசப் வாரன் ஆகிய இரு நண்பர்களுக்கும், பிரித்தானியப் படைகள் பாஸ்டன் நகருக்கு அருகில் உள்ள லெக்சிங்டன் என்ற நகரத்தை அடைந்து அங்கு உள்நாட்டுப் போரைத் தலைமையேற்று நடத்தி வரும் ஜான் ஹான்காக் மற்றும் சாமுவேல் ஆடம்ஸ் ஆகியோரைக் கைது செய்து பின்னர் அங்கிருந்து கான்கார்ட் என்னும் நகரத்தை அடைந்து, அங்கே உள்நாட்டுப் போருக்கான ஆயுதங்களைச் சேமித்து வைத்திருக்கும் ஆயுதக் கிடங்கை அழிக்கத் திட்டம் இருப்பதாக, ஓர் உறுதியான தகவல் தெரிய வந்தது. அந்த நண்பர்கள் இருவரும் உள்நாட்டுப் படைகளுக்கு இந்தத் தகவலை தெரிவிப்பதற்காக உறுதி பூண்டனர். பால் ரிவீர், பாஸ்டன் நகரில் இருந்து இரவு பத்து மணிக்கு கிளம்பி, வடமேற்குத் திசையில் ஒரு குதிரையின் மீது பயணித்தார். பால் ரிவீரின் நள்ளிரவுப் பயணம் என்று அமெரிக்க வரலாற்று ஏடுகளில் இடம் பெற்று அமெரிக்க உள்நாட்டுப் போர் துவங்கக் காரணியாக இருந்ததாக, இந்தப் பயணம் வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது. பால் ரிவீர் வழியில் இருந்த சார்ல்ஸ்டௌன், மெட்போர்ட், நார்த் கேம்பிரிட்ஜ், மெனோடோமி போன்ற பல்வேறு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள உள்ளூர்த் தலைவர்களுக்குப் பிரித்தானியப் படைகள் வரும் செய்தியைத் தெரியப்படுத்தினார். மக்களை ஆயத்தம் செய்யத் தேவாலய மணிகளும், போர் முரசுகளும் கொட்டப்பட்டன. அடுத்தடுத்த ஊர்களுக்குச் செய்தியை தெரிவிக்கும் பொருட்டு வீரர்கள் அனுப்பப்பட்டனர். இதனால் பாஸ்டனில் இருந்து நாற்பது மைல் தொலைவில் இருந்த ஆன்டோவர் நகருக்குப் பாலின் செய்தி, இரவு ஒரு மணிக்குத் தெரியவந்தது. காலை ஐந்து மணிக்குள் பாஸ்டனில் இருந்து அறுபது மைல் தொலைவில் இருந்த ஆஷ்பி நகருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது. அடுத்த நாள் காலை கான்கார்டு நகருக்குள் நுழைந்த பிரித்தானியப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, அமெரிக்கப் புரட்சிக்கான வித்து அங்கே விதைக்கப்பட்டது. எப்படி ஒரு நோய்த் தொற்று வேகமாகப் பரவுமா, அது போல ஒரு செய்தியைக் கொண்டு செல்லும் நபரைப் பொறுத்து, அந்தச் செய்தி, காட்டுத்தீ போலப் பரவக்கூடும். அதே இரவில், பாஸ்டனில் இருந்து கிழக்கில் அமைந்துள்ள ஊர்களுக்குப் பிரித்தானியப் படைகள் வரும் செய்தியைக் கொண்டு சென்ற வில்லியம் டாஸ் என்பவரின் செய்தி இந்த அளவு வேகமாகப் பரவவில்லை. செய்தியின் தன்மை ஒன்றாக இருந்தாலும் பால் ரிவீரின் செய்தி ஏற்படுத்திய அதிர்வலையை, வில்லியம் டாஸ்சின் செய்தி எதனால் ஏற்படுத்தவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு.
1960-களில்
ஸ்டான்லி மில்கிராம் என்ற உளவியல் நிபுணர் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி இணைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் இந்த
ஆராய்ச்சி வழி, ஒரு
நபர் இன்னொரு நபருடன் அதிகபட்சம் ஐந்து முதல் ஆறு நபர்களால் இணைக்கப்படுகிறார்
என்பதை நிறுவினார். உதாரணமாக,
ஒரு பெரிய தொழிலதிபரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவரை உங்களுக்கு நேரடியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் நண்பரின், நண்பருக்கு அல்லது
உறவினருக்கு அவரைத் தெரிந்திருக்கும். இது போல உங்களுக்குத் தெரியாத யாருடனும்
நீங்கள் அதிகப் பட்சம் ஆறு நபர்கள் மூலம் ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்த முடியும். இஃது
ஆறு படிநிலைப் பிரிவு (Six Degrees of
Separation) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆறு
படிநிலைகளில் உள்ள அனைவரும் சமம் இல்லை. இதைச் சோதிக்க, மில்கிராம், நெப்ராஸ்கா, ஒமாஹாவில் உள்ள 160 பேர்களிடம், ஒவ்வொருவரிடமும் ஒரு பொருளைக்
கொடுத்து, அந்தப்
பொருளைக் கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறு மைல் தொலைவில் அமைந்துள்ள பாஸ்டன்,
மசாசூசெட்ஸ்சில் உள்ள ஒரு நபரிடம் சேர்க்கச்
சொன்ன போது, கிட்டத்தட்டப்
பதினாறு ஆட்கள், ஒரே
நபர் வழியாகப் பாஸ்டனில் உள்ள நபருக்கு அந்தப் பொருளை அனுப்பி இருந்தனர். பலருடன்
தொடர்பில் உள்ள இந்த நபரே இணைப்பர் எனப்படும் Connector.
இந்த இணைப்பர் எனப்படும் நபரே, பெரிதாக அறியப்படாத ஒரு நபரை, மற்ற எல்லாருடனும் இணைக்கும்
மையப்புள்ளி ஆவார். இந்த இணைப்பர்கள் மனிதர்களை இன்னும் இறுக்கமாகப் பிணைக்கும்
பாலங்கள் எனலாம். தபால் தலைச் சேகரிப்பவர்கள் எப்படித் தபால் தலைகளைத் தேடித் தேடிச்
சேர்ப்பார்களா, அது
போல இணைப்பர்கள் மனித உறவுகளைத் தேடித் தேடிச் சேகரிப்பவர்கள். இவர்கள் பல்வேறு
படிநிலைகளில், கலாச்சாரம், பிரிவு, ஏற்றத் தாழ்வுகள், பாகுபாடுகள் ஆகியவற்றைத்
தாண்டிப் பல தரப்பட்ட மனிதர்களுடன் உறவுகளைப் பேணுபவர்.
புரட்சிப் படைகளுக்கு நள்ளிரவில் செய்தியைக்
கொண்டு சென்ற பால் ரிவீர் ஓர் இணைப்பர். பால் ரிவீர் அக்காலப் பாஸ்டனில் ஒரு
வெற்றிகரமான தொழிலதிபர். பாஸ்டன் துறைமுகத் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க மக்களிடம் தோன்றி
இருந்த சுதந்திர வேட்கை, பல்வேறு
புரட்சிக் குழுக்களை உருவாக்கி இருந்தது. இவ்வாறு தோன்றிய அனைத்துக் குழுக்களிலும்
உறுப்பினராக இருந்த இருவரில்,
பால் ரிவீரும் ஒருவர். ஃபிலடெல்பியா, பாஸ்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில்
பரவி இருந்த இந்தக் குழுக்களுக்கு இடையே சென்று தகவல் பரிமாறுவதை வழக்கமாகச்
செய்து வந்த பால் மிகவும் எளிதாக யாரையும் தோழமை கொள்ளும் ஓர் ஆளுமையைக்
கொண்டிருந்தார். எனவே தான் பிரித்தானியப் படைகளின் வரவைப் பற்றித் தான் சென்ற
ஒவ்வொரு ஊரிலும் யாரிடம் சொல்ல வேண்டும் என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது.
மாறாக, வில்லியம்
டாஸ் ஒரு சாதாரண நபர். அவர் கொண்டு சென்ற செய்தி உண்மையாக இருந்தாலும், அஃது
எத்தகைய பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஒரு செய்தி பரவுவதற்கு வெறும் இணைப்பர்கள்
மட்டும் தேவைப்படுவதில்லை. இணைப்பர்களுக்குச் செய்தியைத் தெரிவிக்கக் கூடிய
துறைசார் நிபுணர்கள் தேவை. இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள அல்லது தங்களுக்கு
விருப்பமான துறையைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள். உதாரணத்திற்கு நீங்கள் புதிதாக
ஒரு புகைப்படக் கருவி வாங்க வேண்டுமென்றாலோ அல்லது ஒரு கார் வாங்க வேண்டுமென்றாலோ
உங்கள் நினைவுக்கு வரும் அந்த நபரே இந்தத் துறைசார் நிபுணர், ஆங்கிலத்தில் Maven என்று
கூறப்படுபவர். Maven என்ற
ஆங்கில வார்த்தைக்கு அறிவைச் சேகரிப்பவர் என்று பொருள் உண்டு. கார் என்று
எடுத்துக் கொண்டால், வாகனத்திற்கு
எந்த இடத்தில் குறைந்த செலவில் எரிபொருள் நிரப்ப முடியும், எந்த இயந்திர வல்லுனரிடம்
காரைப் பழுது பார்க்கலாம், எந்த
விற்பனை நிலையங்களில் நல்ல விலைக்குக் கார் கிடைக்கும் என்று கார் பற்றி அக்குவேறு
ஆணிவேராகப் பிரித்துத் தகவல்களை அடுக்குபவரே இந்த நிபுணர்கள். ஒரு விஷயத்தை
முழுவதுமாகப் படித்து, அதில்
உள்ள சாதகப் பாதகங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அதன் பின்னர்த் தாங்கள் பெற்ற அறிவை
எந்தத் தயக்கமும் இன்றி, பிறருக்கும்
அளிக்கக் கூடிய இந்த உதவும் குணம் கொண்டவர்கள் சொல்லும் எந்த ஒரு செய்தியும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த
கூடிய ஒன்றாக மாறும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
நிபுணர்கள் தகவல் சேகரித்துப் பிறருக்கு
அளிப்பவர்கள். இணைப்பர்கள் தகவலைத் தனக்கும் பிறருக்கும் உள்ள உறவின் அடிப்படையில்
அந்தச் செய்தியை மற்றவருக்குக் கொண்டு சேர்ப்பவர்கள். இதில் தான் பெற்ற செய்தியை, தன்னுடைய நண்பர்கள் மற்றும்
தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களைத் தன் வயப்படுத்தும்
ஆற்றல் மிக்கவரே விற்பனையாளர்(Salesmen)
எனப்படுபவர். உதாரணமாக நீங்கள் கண்டிப்பாகப்
படிக்க வேண்டிய புத்தகம் இது என்று உங்களுக்குப் பரிந்துரைத்து உங்களை அந்தப்
புத்தகத்தை வாங்க வைப்பவர் ஒரு விற்பனையாளர். இவர்களுக்கு மற்றவரைத் தூண்டும்
சக்தி அதிகம் இருக்கும். ஒரு செவிபேசி (Headphone)
நிறுவனம் நிறைய மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சியை
மேற்கொண்டது. அந்த நிறுவனம்,
செவிபேசியின் திறன், தலையை இடம் வலமாகவோ அல்லது
மேல் கீழாகவோ ஆட்டும் போது மாறுகிறதா என்பதைக் கண்காணிக்க இருப்பதாகச் சொன்னது.
ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சியின் நோக்கம் உடல்மொழியை மாற்றுவதன் மூலம் ஒரு
விஷயத்தைப் பற்றிய மாணவர்களின் எண்ண ஓட்டத்தினை மாற்ற முடியுமா என்பதை
அறிவதற்காகவே நடந்தது. செவிபேசியில் சில பாடல்கள் ஒலித்த பின், மாணவர்களுக்குக் கல்லூரிக்
கட்டணம் உயர்த்த வேண்டுமா என்பதைப் பற்றிய ஒரு விவாதத்தை ஒளிபரப்பினார்கள். முதல்
பிரிவு மாணவர்கள் விவாதத்தைக் கேட்கும் போது தலையை மேல் கீழாக ஆட்டியபடிக்
கேட்டார்கள். அடுத்தப் பிரிவில் வந்தோர்த் தலையை இடது வலமாக ஆட்டியபடி அந்த
விவாதத்தைக் கேட்டார்கள். மூன்றாம் பிரிவினர் தலையை அசைக்காமல் அந்த விவாதத்தைக்
கேட்டார்கள். இறுதியாகக் கல்லூரிக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டுமா என்ற கேள்வி
ஆராய்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் வழங்கப்பட்டது. இதில் தலையை அசைக்காமல்
உரையாடலைக் கேட்டவர்கள் கல்லூரிக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டாம் என்று
பதிலளித்தனர். தலையை மேல் கீழாக ஆட்டியபடிக் கேட்டவர்கள்,கட்டண உயர்வுத் தங்களைப்
பாதிக்கும் என்பது தெரிந்தும் கல்லூரிக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று பதில்
அளித்தனர். தலையை இடம் வலமாக ஆட்டியபடிக் கேட்டவர்கள் கல்லூரிக் கட்டணம்
குறைக்கப்பட வேண்டும் என்று பதில் அளித்தனர். அதாவது ஒன்றின் மேல் ஒருவருக்கு
ஏற்படும் சார்பு, அவர்
காதால் கேட்கும் விஷயத்தைத் தாண்டி உடல் மொழியால் கூடக் கடத்த முடியும் என்பது
இந்த ஆராய்ச்சி மூலம் எளிதாக விளங்குகிறது. ஒரு சிறப்பான உரையையோ அல்லது ஓர் இனிய
இசையையோ கேட்கும் போது பார்வையாளர்கள் பேசுபவரின் அசைவுகளுக்கு ஏற்ப தன்னைத்
தகமைத்துக் கொள்ளும் ஒத்திசைவை,
தன்னுடன் பேசுபவருக்குக் கடத்தும் தன்மையே
விற்பனையாளர்களின் தனிச் சிறப்பு. கேட்பவரின் எண்ணத்தை உடல்மொழியின் மூலமும், குரல் ஏற்ற இறக்கம் மூலமும் அடுத்தவரைத்
தன் வயமாக்கும் காந்த சக்தி மிக்கவர் விற்பனையாளர்.
அடுத்ததாக,
ஒரு சிந்தனை பரவுவதற்கு, அந்தச் சிந்தனைக்கு ஓர் ஒட்டும் தன்மை தேவைப்படுகிறது(Stickiness Factor). ஒட்டும்
தன்மை என்பது ஒரு செய்தி அல்லது கருத்தின் தனித்தன்மையான தரம். இந்தத் தரத்தின்
வழி அது வாடிக்கையாளரின் எண்ணத்தில் வேரூன்றி அவர்களின் நடத்தையில் அல்லது
அவர்களின் இயல்பில் ஒரு மாற்றத்தை உண்டாக்கக் கூடிய தன்மை ஆகும். நாம் காணும்
குழந்தைகளுக்கான சத்துப்பான விளம்பரம்,
பற்பசை விளம்பரம் , குளியல் சோப்பு விளம்பரம்
அல்லது துணிகளுக்கான சோப்பு விளம்பரம் ஆகிய எல்லாமே, வாடிக்கையாளரின் எண்ணத்தில் ஓர்
ஒட்டும் தன்மையை உண்டாக்க முயற்சிக்கும் உத்தி தான். கெவின் கேர் என்ற நிறுவனம்
வெறும் பதினைந்தாயிரம் ருபாய் முதலீட்டில் துவக்கப்பட்டது. சென்னையைத்
தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், இன்று கிட்டத்தட்ட ஆயிரத்து
இருநூறு கோடிகளுக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. முதன் முதலில் சாஷேக்களில் விற்பனை
செய்யப்பட்ட சிக் ஷாம்பூ என்ற ஒரு நுகர்பொருள் வழி, கிராமங்கள், சிறு மளிகைக் கடைகள், சிற்றூர்கள் என்று
எங்கெங்கும் பரவி, கோத்ரேஜ்
போன்ற பெரிய தொழில் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் வெகு வேகமாக
வளர்ந்துள்ளது. ஒரே ரூபாயில்,
எளிய மனிதர்களாலும் பயன்படுத்த கூடிய வகையில்
ஷாம்பூவை சாஷேக்களில் அடைத்து,
விற்பனை செய்த விதம், வாடிக்கையாளர் மனதில் ஓட்டும்
தன்மையை உண்டாக்கியது. பெரிய பெரிய நிறுவனங்கள் ஷாம்பூவை பாட்டில்களில் அடைத்து
நகர்புறத்தில் மட்டும் பெருமளவில் விற்பனைச் செய்து வந்த நிலையில் எளிய
மக்களுக்குக் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நுகர்பொருள் வெற்றி
பெற்றதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. சில திரைப்படங்கள் திரைக்கு வந்த பல
நாட்களுக்குப் பிறகு வெற்றிப்படமாக மிளிரத் தொடங்குவதும், ஒரு புத்தகம் வெளிவந்த பல
நாட்களுக்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றி பெறுவதும் இதனால்
தான்.
கடைசியாக,
ஒரு சிந்தனை,
வெகுஜன மக்களுக்கான ஒன்றாக மாற அதற்குச் சரியான
புறச்சூழல்(Context) மிகவும்
அவசியம். இந்தப் புறச்சூழல் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைக்
கண்டறிய 1920
ஆம் ஆண்டுப் பள்ளி மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது. முதலில், மாணவர்களுக்கு ஒரு கடினமான
தேர்வு வைக்கப்பட்டது, பாதி
மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியரும்,
மீதி மாணவர்களின் விடைத்தாள்களை அந்தந்த
மாணவர்களே திருத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. தாங்களே திருத்தும்
விடைத்தாள்களில் அதிக அளவு மாணவர்கள் நேர்மையாகத் தங்கள் விடைத்தாள்களைத் திருத்த
மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு எந்தப் பாடத்தில்
நடத்தப்பட்டது, தேர்வை
மேற்பார்வை செய்ய எவரேனும் இருந்தார்களா,
எத்தனை மாணவர்கள் அந்தத் தேர்வில், நேர்மையாக இல்லாமல், மற்றவரைப் பார்த்துத் தங்கள்
தேர்வை எழுதினார்கள் அல்லது தேர்வு அறை எத்தனை பெரிதாக அல்லது சிறியதாக இருந்தது
போன்ற புறசூழல் காரணிகளைப் பொறுத்து மாணவர்களின் நேர்மையும் மாறுபட்டது. அதாவது எந்த
மாணவரும் எல்லா நேரங்களிலும் நேர்மையானவர்களாக இல்லை. ஒருவரைப் பற்றி நாம் பேசும்
போது, "அவர்
மிக நல்லவர்" அல்லது "அவர் உண்மையானவர், நேர்மையானவர்" என்று
பொதுவாகச் சொல்கிறோம். ஆனால் ஒருவரின் குணநலன் என்பது எந்தக் காலத்திலும் மாறாமல்
ஒரே நிலையில் இருக்கக் கூடிய இயல்பல்ல. நேர்மையான ஒருவரைக் கூடப் புறச்சூழல்
காரணிகள் நேர்மையற்றவராக மாற்றும் வல்லமை உடையது.
நல்ல சிறப்பானக் கருத்துகள் கொண்ட கட்டுரை.
பதிலளிநீக்குதுளசிதரன்
பல சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி ரம்யா.
பதிலளிநீக்குஅதையும் குறித்துக் கொண்டேன். கருத்துகள் சிறப்பு. நல்ல விளக்கங்கள்
வாழ்த்துகள்
கீதா