வெள்ளி, ஜூன் 17, 2022

உரைகல்

இந்த மாத வல்லினச் சிறகுகள் இதழ் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. நான் வரைந்த ஓவியம் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றதும் ஒரு காரணம். இந்த மாத இதழை கீழே உள்ள இணைப்பில் படிக்கலாம்.

https://tinyurl.com/mutujp95

இந்த மாதம் நான் பெரிய சாதனையாளர்கள் அளித்த உரைகளைப் பற்றி ஓர் கட்டுரையை அளித்திருக்கிறேன். அதைக்  கீழே வாசிக்கலாம்.


"உங்களின் உரை, உங்களின் மௌனத்தை விடச் சிறப்பாக அமையப் பாடுபடுங்கள். ஒரு வேளை அது முடியாதென்றால் மெளனமாக இருந்து விடுவதே மேலானது' என்பார் டயநீசியஸ் என்ற கிரேக்க வரலாற்று அறிஞர். 

உரைகள் அறிவுக் கடத்திகள். அவை வெறும் பரப்புரைகள் மட்டும் அல்ல. மனிதர்களை நெறிப்படுத்த கூடிய அல்லது வழி மாற்றக் கூடிய விசையாக மாறும் வல்லமை உடையது.  நெருப்பை வைத்து தீபமும் ஏற்ற முடியும், காட்டையும் அழிக்க முடியும் என்பது போல, உரைகள் பல மனித வாழ்வினை நல்ல வழியிலும் சில நேரங்களில் அல்ல வழியிலும் செலுத்தி இருக்கின்றன.

உலகை மாற்றிய உரைகள் என்றவுடன் "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்ற மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் உரையும், மகாத்மா காந்தி அவர்களின் வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான உரைகளும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அவர்களின் "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ உன் நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்" என்ற அவரின் பதவியேற்பு உரையும் நமக்கு உடனேயே நினைவிற்கு வரும். சமூக ஊடகங்களின் பெருக்கத்திற்கு பிறகு அரசுப் பதவிகளில் இருப்பவர்களைத் தாண்டிச் சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மனிதர்களின் உரைகளை வலையொளியிலும்  பல்வேறு வலைத்தளங்களிலும் தற்போது பரவலாகப் பார்க்க முடிகிறது.

"மனிதர்கள், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறக்கலாம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறக்கலாம், ஆனால் அவர்கள் எப்போதும் உங்கள் வார்த்தைகள் அவர்களின் மனதில் எப்படிப்பட்ட உணர்வுகளை விதைத்தது  என்பதை நினைவில்  வைத்திருப்பார்கள்" என்பார் மாயா ஆஞ்சலோ என்ற அமெரிக்க கவிஞர்.

அதை மெய்ப்பிப்பது போல, அமெரிக்கக் கல்லூரிகள், வருடந்தோறும் நடத்தும் பட்டமளிப்பு  விழாவில்தங்கள் கல்லூரியில் பயின்று, தற்சமயம் பெரும் சாதனைகளுக்கு  சொந்தக்காரராய்ச் சமூகத்தில் வலம் வரும்   சாதனையாளர்களுள்  ஒருவரை அழைத்துஅந்த பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தச் சொல்லும். இதே போல வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழாப் பேருரைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள். சோர்ந்த நேரத்தில் ஒருவரைத் தூக்கி நிறுத்தும் உற்சாக ஊற்றுகள். அந்த உரைகள் வெறும் வார்த்தைக் குவியல்கள் அல்ல. அவை அந்தச் சாதனை மனிதர்களின் வாழ்வின் சாரம். தன்னுடைய சக மனிதருக்கு அவர்கள் காட்டும் சீரிய பாதை. வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு என்றும் ஒரு கலங்கரை விளக்கமாய் நின்று ஒளித் தருபவை. 

ஆப்பிள் மற்றும் பிக்சார் அனிமேஷன் நிறுவனங்களை அறியாதவர்களே  இல்லை . இந்த இரு நிறுவனங்களின் தலைவராய், ஆப்பிள் மாக்கின்டாஷ் வகை கணினி, ஐபாட், ஐபோன் என்று பல்வேறு புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி பல்வேறு சாதனைகளை  நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனர் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு சிறப்பான உரையை வழங்கினார். "உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நீங்கள் கடைசி நாளாகவே எண்ணுங்கள். ஒரு நாள் நீங்கள் எண்ணுவது உண்மை ஆகும்." என்ற பழமொழித் தன்னை மிகவும் பாதித்ததாக சொல்லும் ஸ்டீவ், ஒவ்வொரு நாளும்  தன்னை அந்தப் பழமொழியே வழி நடத்தியதாக கூறுகிறார். இது என்னுடைய கடைசி நாள் என்பது உண்மையாக இருக்குமானால், நான் செய்யும் இந்தப் பணி எனக்கு எந்த மனநிறைவும் தரவில்லை என்றால், நான் என்னுடைய பாதையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது எனக் கொள்கிறேன். இறப்பு என்பது நாம் அனைவரும் சந்திக்க வேண்டிய ஒன்று என்பதே, என்னை பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் விமர்சனங்களைப் புறம் தள்ளி, சரியான முடிவுகளை எடுக்க வைத்தது. இறப்பின் முன் கோபம், கர்வம், பிறரின் எதிர்பார்ப்பு, பயம் என்ற எல்லாமும்  மறைந்து எது முக்கியமானதோ அது மட்டுமே எஞ்சியிருக்கும்.

நான் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட போது டாக்டர்கள் எனக்கு உயிர் வாழ மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே அளித்திருந்தனர். ஆனால் புற்று நோய்க்கான பரிசோதனையின் போது எனக்கு வந்துள்ளது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த கூடிய ஒரு வகைப் புற்றுநோய் என்று தெரியவந்தது. அறுவை  சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இன்று நான் உங்களின் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். மரணத்திற்கு வெகு அருகில் சென்று மீண்டவன் என்ற முறையில் சொல்கிறேன், உலகில் உங்களுக்கான காலம் மிகவும் குறைவு. எனவே வேறு ஒருவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை வாழாதீர்கள். மற்றவரின் எதிர்பார்ப்போ அல்லது அவர்களின் ஒப்புதலோ உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.

நான் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே ஒரு கட்டத்தில் வெளியேற்றப்பட்டேன். என்னுடைய வாழ்க்கையில் அடுத்தது என்ன ஒரு தெரியாதபுதிரான இடத்தில என்னை வாழ்க்கை நிறுத்தி இருந்தது.  ஆனால் அந்த இடத்திலேயே நான் என்னைத் தேங்கவிடவில்லை. பிக்சார் என்ற அனிமேஷன் படம் எடுக்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். இந்த புதிய தொடக்கம், அழுத்தம் நிறைந்த பெரும் பொறுப்புகளை  ஏற்றிருந்த சூழலில் இருந்து என்னை விடுவித்துஓர் ஆரம்ப நிலைத்  தொழில் முனைவராக ஒரு புதிய தொடக்கத்தை அளித்தது. பல புதிய விஷயங்களை தோல்வி பற்றிய எந்த தயக்கமும் இல்லாமல் அறிய முடிந்தது. நான் ஏற்றுக் கொண்ட பணியை மிகவும் நேசித்ததாலேயே இந்த மாற்றம் சாத்தியமானது. நீங்கள் பார்க்கும் வேலைக்காக உங்களின் வாழ்வில் ஒரு பெரிய பகுதியை செல்வழிக்கிறீர்கள். எனவே நீங்கள் பார்க்கும் வேலையை உங்களுக்கு கட்டாயம் பிடித்த ஒன்றாக அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரசித்து,அனுபவித்து செய்யும் வேலைக் கிடைக்கும் வரை தேடிக் கொண்டே இருங்கள். எக்காரணம் கொண்டும் நீங்கள் பிடிக்காத ஒரு வேலையைச் செய்து உங்கள் கனவுகளை இழக்காதீர்கள்.

 


வாழ்க்கையை முன்னோக்கி மட்டுமே வாழ முடியும். ஆனால், வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எனவே நீங்கள் செல்லும் பாதையில் எதிர்ப்படும் தோல்விகள், புறக்கணிப்புகள், அவமானங்கள் அனைத்தும் உங்களின் குறிக்கோளை நோக்கி உங்களை செலுத்தும் ஓர் உந்து சக்தியாகவே எண்ணிக் கொள்ளுங்கள். எதையும் அறிந்து கொள்ளக் கூடிய தணியாத அறிவு தாகத்தையும், புதிய விஷயங்களைத் தயங்காமல் செய்து பார்க்கக் கூடிய ஒரு மனநிலையும் வளர்த்துக் கொண்டால் மாபெரும் வெற்றிகள் சாத்தியமாகும் என்று அவர் மாணவர்களுக்கு நிகழ்த்திய உரை, வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வரிகள் என்றால் அது மிகை இல்லை.

ஜிம் கேரி மிகச் சிறந்த அமெரிக்க நடிகர்."மாஸ்க்", "ப்ரூஸ் ஆல்மைட்டி', 'லையர் லையர்', 'தி ட்ரூமன் ஷோ' போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தவர். காமெடி நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்கும் அவர் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட. ஒரு நடிகரான என்னால் இத்தனை ஆழமாக, உங்களைக் கவரும் வகையில் பேச முடிகிறது என்பதே உங்களுக்கு புதிதான ஒன்றாக இருக்கும் என்று சுய பகடியுடன் தொடங்கும் உரையை, அவர், மகரிஷி சர்வதேசப் பல்கலைக்கழத்தில், மேலாண்மை பயின்று பட்டம் பெறும் மாணவர்களிடேயே, 2014 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். நான்  எல்லை இல்லாத ஆற்றல் உள்ளவன்.  ஜிம் கேரி என்பவர் இந்த உடல் மட்டும் அல்ல. இந்த உடலைத் தாண்டி இருக்கும் அனைத்தும் இறைவனின் வடிவம் என்பதால் நானும் எல்லையில்லாதவன் என்பதை என்னால் உறுதியாகக்  கூற முடியும்.

என்னுடைய தந்தை ஒரு காமெடி நடிகராக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். ஆனால் காமெடியனாக தான் வெற்றி பெறுவோம் என்று அவர் எண்ணவில்லை. அதனால் அவர் தன்னுடைய விருப்பத்தை பின் தள்ளி ஒரு கணக்கராக பணியில் சேர்ந்தார். ஒரு நாள் அவருடைய வேலை பறி போனது. அதனால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த வறுமையான சூழலில்  இருக்க நேர்ந்தது.  என்னுடைய தந்தையின் வாழ்வில் இருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன், அதில் முக்கியமானது, உங்களுக்கு பிடிக்காத ஒரு பணியில் நீங்கள் தோல்வி அடைய முடியும் என்றால், நீங்கள் ஏன் உங்களுக்குப் மிகவும் பிடித்த பணியைத் தேர்ந்தெடுத்து அதைச் செய்யக் கூடாது என்பதாகும். என்னுடைய தந்தையின் அன்பும், நகைச்சுவை உணர்வும் எனக்கும், என் குடும்பத்தார்க்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்த ஒன்று. எனவே நானும் என்னைச் சுற்றி உள்ள மனிதர்களை மகிழ்விக்க  நகைச்சுவையைத் தேர்ந்தெடுத்தேன்.

 

என்னுடைய வீட்டிற்கு வரும் உறவினர்களைச் சிரிக்க வைக்க, அவர்கள் என் வீட்டிற்கு வரும் போது மாடிப்படியில் இருந்து உருண்டு வருவேன். அவர்கள் ஆச்சரியத்துடன்  என்ன நடந்தது என்று கேட்கும் போது, இப்போது நிகழ்ந்ததை நாம் மறுமுறைப் பார்க்கலாம் என்று கூறி, நான் மீண்டும் மேலிருந்து மிக மிக மெதுவாக உருண்டு வருவேன். என்னுடைய தந்தை என்னுடைய நகைச்சுவை உணர்வை தனக்கு கிடைத்த இரண்டாம் வாய்ப்பாகவே எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டார். பிறரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதே நான் இந்த உலகத்திற்கு செய்யக்கூடிய  சிறந்த பணியாக  இருக்க முடியும் என்று,  நான் அந்தப் பாதையையே  தேர்ந்தெடுத்தேன். நீங்கள் உங்களுடைய வாழ்வில் எந்த முறையில் இந்த உலகிற்கு சேவையாற்ற  விரும்புகிறீர்கள்? உங்களது எந்தத் திறமை உங்களால் இந்த உலகத்திற்கு பயன் தர முடியும் என்று  நீங்கள் கருதுகிறீர்கள்? இந்த உலகத்தில் மிகவும் விலைமதிக்க முடியாத ஒன்று, உங்களின் இருப்பின் மூலம், நீங்கள் அடுத்தவர் மேல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதே.

நீங்கள் சம்பாதித்த, சேர்த்து வைத்த அனைத்தும் காலப் போக்கில் ஒரு நாள் உங்களை விட்டு நீங்கி விடலாம். உங்களின் எண்ணங்கள் மட்டுமே எப்போதும் உங்களின் கூட வரும். எனவே உயர்வான எண்ணங்களையே நீங்கள் சிந்தியுங்கள். சக மனிதர்களின் அங்கீகாரத்தை விரும்பினால் உங்களால்  உயர்ந்த இடங்களை அடைய முடியாது.  நீங்கள் ஒரு சூரியனைப் போல தனித்தன்மையுடன் ஒளிவீசப்  பிறந்தவர்கள். எனவே பிறரின் அங்கீகாரத்தை பெற உங்களின் தனித்தன்மையை ஒரு போதும் இழந்து விடாதீர்கள்.

 

புகழும், செல்வமும் பெற உழைக்கும் எவரும் அதை சீக்கிரம் அடைய வேண்டும் என்று நான் அடிக்கடிச் சொல்லுவேன். ஏன் என்றால் அதை பெற்ற பின்பே அவர்களால் நீடித்த அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் அத்தகைய செல்வத்தாலோ, புகழாலோ எந்த விதப் பயனும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் எதை அடைந்தாலும், அதை விட ஒரு பெரிய வெற்றியை அடைபவர் எவரோ ஒருவர் இந்த உலகத்தில் இருக்கத்தான் போகிறார்கள். உங்களின் எண்ணங்கள் அடுத்ததாக இப்படிப்பட்ட வெற்றியை நோக்கி  உங்களைத் துரத்தும். ஆனால் உங்களை விடச் சிறந்தவர் ஒருவர், உங்களின் இருப்பை விட சிறந்த வெற்றி எதுவும் இந்த உலகத்தில் இல்லை. எனவே நீங்கள் விரும்பிய எதுவோ அதை நோக்கி உழைக்கத் தொடங்குங்கள். அந்த எண்ணம் எப்படி நிறைவேறும் என்பதைப்  பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை என்பது உங்களுக்கு நடக்கும் ஒன்று அல்ல. உங்களுக்காகவே நடக்கும் ஒன்று . இரண்டு பாதைகள் இந்த உலகத்தில் உண்டு, ஒன்று அன்பினால் தேர்ந்தெடுக்கப்படுவது. இன்னொன்று பயத்தினால் தேர்ந்தெடுக்கப்படுவது. நீங்கள் பயத்தை விடுத்து, உங்களை நீடித்த மகிழ்ச்சியிலும், எல்லையற்ற அன்பிலும் ஆழ்த்தக் கூடிய பாதையையே தேர்ந்தெடுங்கள். இப்படிப்பட்ட வலிமையான நம்பிக்கை விதைகளை நமது மனதில் விதைக்கும், இந்த உரையை  வலையொளியில் பல லட்சம் பார்வையாளர்கள் கேட்டிருக்கிறார்கள் என்பதே இந்த உரையின் வெற்றிக்குச் சான்று. 

 

"உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் அதை எப்படி வாழ வேண்டும் என்பது நீங்கள் மாற்றக் கூடிய ஒன்றே" என்று தன்னுடைய உரையை ஆரம்பிக்கிறார் ராண்டி பாஷ் என்ற கல்லூரிப்  பேராசிரியர். கார்னகி மில்லன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் தாங்கள் இறக்கும் முன் ஒரு கடைசி உரையை வழங்கும் வழக்கம் உள்ளது. ராண்டி பாஷும் தான் இறக்கும் முன் வழங்கிய "கடைசி உரை" அவருடைய இறுதி நாட்களில், அவருக்கு ஒரு திருப்பு முனையை அளித்தது என்றே சொல்லலாம். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு, குறிப்பாக "தி ஓப்ரா வின்பிரி ஷோ', ஏபிசி தொலைக்காட்சியில் வரும் "டயான் சாயர்" நிகழ்ச்சி, பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் கால்பந்து அணியுடன் விளையாடும் வாய்ப்பு, மிகவும் புகழ் வாய்ந்த ஸ்டார் ட்ரெக் என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு, நியூயார்க் டைம்ஸ் வெளியிடும் அதிக விற்பனை ஆகும் புத்தக வரிசையில் கிட்டத்தட்ட 85 வாரங்கள் ராண்டி எழுதிய "கடைசி உரை" (The Last Lecture) என்னும் புத்தகம் இடம் பெற்றது, அமெரிக்கச் செனட் சபையில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அவர் உரையாற்றியது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.


ஆனால் இந்தச் சாதனை அனைத்திற்கும் வித்திட்டது 2007 ஆம் ஆண்டு ராண்டி அவரது பல்கலைக்கழக மாணவர்களிடையே வழங்கிய உரை ஆகும்.  கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட வாழ்வதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டவரின் மன நிலை எவ்வாறு இருக்கும். சாமானிய நபர் என்றால் மிகவும் மனச்சோர்வுற்று அடைந்திருப்பர்.  ஆனால் தான் இறப்பதற்கு ஐந்து மாதங்கள் முன்பு ராண்டி மிகுந்த உற்சாகமாக வழங்கிய  உரை இது. நீங்கள் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் முன் இந்த உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் கடைசி செய்தி என்ன? நாளை இந்த மண்ணில் நீங்கள் இல்லையென்றால் உங்களை இந்த உலகம் எதைக் கொண்டு நினைவில் கொள்ளும்? என்ற இரண்டு முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி இந்த உரை வடிவமைக்கப்பட்டிருந்தது.

நீங்கள் அடைய விரும்பும் குறிக்கோளை எட்டும் முன் தடை என்ற பெரிய சுவர் உண்டாகும். அந்தச் சுவர் உங்களை அந்த லட்சியத்தையே அடைய முடியாமல் தடுக்க அல்ல. நீங்கள்  அந்த இலட்சியத்தை எவ்வளவு அதிகம் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டவே உண்டான ஒன்று. எனவே தோல்விகளைக் கண்டோ, தடைகளைக் கண்டோ துவண்டு விடாதீர்கள். தயங்காமல் முன்னேறிச் செல்லுங்கள் என்று உற்சாகம் ஊட்டுகிறார் ராண்டி.  அவர் தான் சிறு வயது முதல் அடைய விரும்பிய பல்வேறு கனவுகளைப் பட்டியலிடுகிறார்.  புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில் (Zero Gravity) இருத்தல்தேசிய கால்பந்து அணியில் விளையாடுதல்உலக கலைக்களஞ்சியம் என்னும் புத்தகத்தில் எழுதுதல், டிஸ்னி நிறுவனத்தில் ஒரு வடிவமைப்பாளராக சேருதல் என்று சிறியதும் பெரியதுமான கனவுகளை, தன்னுடைய முயற்சியாலும் கடின உழைப்பாலும் எப்படி  எட்டினார் என்பதையும் சுவாரசியத்துடனும், நகைச்சுவையுடனும் கூறுகிறார்.

உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் ஒருபோதும் குறைவாக எடை போடாதீர்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் தன்னுடைய செய்கையின் மூலம் உங்களை கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்துவார்கள். இது நாள் வரை அவ்வாறு நடக்கவில்லை என்றால், நீங்கள் அவருக்கான நேரத்தை தரவில்லை என்பது மட்டுமே பொருள். புதிதாக ஏதோ ஒன்றைத்  தொடங்கும் போது எதிர்ப்புகளும், சிரமங்களும் வந்தே தீரும். ஆனால், அதை எதிர் பாருங்கள், எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய கனவுகள் மற்றும் ஆசைகள் நிறைவேறிய பிறகு நான் கற்றதை மற்றவரும் கற்பிக்கும் நோக்கில் தயாரித்த மென்பொருளைக் இன்று 10 சதவிகித அமெரிக்கப் கல்லூரிகளில் பயன்படுத்துகிறார்கள். என்னுடைய வாழ்நாள் சாதனைகளுள் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். உங்கள் குழந்தைகள், அவர்கள் செய்ய விரும்புவதைச் செய்ய அனுமதி கொடுங்கள். குழந்தைகளுக்கு விலையுயர்ந்த பொருட்களை அளிப்பதற்கு பதிலாக அவர்களுடன் உங்கள் விலைமதிப்பில்லாத நேரத்தைச் செலவு செய்யுங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்தால் இன்முகத்தோடு  ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர் உங்களின் மேல் அக்கறை கொண்டுள்ளதால் மட்டுமே அவற்றை கூறுகிறார் என்பதை நினைவில் நிறுத்துங்கள். எதைப் பற்றியும் குறைபட்டுக் கொள்வது  தேவையற்றது. அதற்கு பதிலாக முன்பை விட அதிகம் உழையுங்கள். ஜாக்கி ராபின்சன் என்ற புகழ்வாய்ந்த கறுப்பின அடிப்பந்தாட்ட விளையாட்டு வீரரின் விளையாட்டு ஒப்பந்தத்தில், அவர் மீது எவரேனும் காறி உமிழ்ந்தால் கூட, அவர் அதைப் பற்றி புகார் ஏதும் கூறக் கூடாது என்ற ஒரு விதி எழுதப்பட்டிருந்தது. அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக தன்னை நிலைநிறுத்த கடின உழைப்பும், விமர்சனங்களை புறம் தள்ளும் மன உறுதியும் அவருக்கு உதவியது என்றால் அது மிகை இல்லை. எந்த ஒரு துறையிலாவது நிபுணத்துவம் பெறுங்கள். அஃது உங்களை விலை மதிப்பில்லாதவராக மாற்றும். உழைப்பை நம்புங்கள். உழைப்பும், வாய்ப்பும் சந்திக்கும் புள்ளியே அதிர்ஷ்டம் என்பதாகும். அதிர்ஷ்ட தேவதையை அருகில் நிறுத்தும் கடின உழைப்பை ஒரு போதும் கைவிடாமல் இருங்கள். இந்த உரை நான் எப்படி வாழ்ந்தேன், என்னுடைய கனவுகளை எப்படி அடைந்தேன், மற்றவர்களின் கனவினை நிஜமாக்க நான் எங்கனம் உழைத்தேன் என்பதைப் பற்றியதல்ல, இந்த உரை என்னுடைய குழந்தைகளுக்கானது என்று தன்னுடைய மூன்று குழந்தைகளின் புகைப்படத்தோடு, ராண்டி அந்த உரையை முடிக்கும் போது கலங்காத கண்களே அந்த அரங்கத்தில் இல்லை. 

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஓப்ரா வின்பிரி, இலான் மஸ்க், சுந்தர் பிச்சை, நடிகர் டென்சல் வாஷிங்டன், ஷோண்டா ரைம்ஸ், காமெடி நடிகர் வீர் தாஸ் என்று அனைவரும் கேட்க வேண்டிய பல்வேறு அருமையான உரைகள் வலைத்தளத்தில் உள்ளன.     

அரங்கில் பேசப்படுபவை அனைத்தும் உயர்ந்த உரைகள் ஆகிவிட முடியாது. உதட்டில் இருந்து வரும் அழகான வார்த்தைகளை விட உள்ளத்தில் இருந்து வரும், அனுபவ வார்த்தைகள் பொதிந்த உரைகளே காலத்தைக்  கடந்தும் நிற்பவை. நல்ல உரைகள் கேட்பவருக்கு உத்வேகம் தருவதோடு மட்டும் அல்லாமல்   எல்லா மனிதர்களுக்கும் பயனுள்ள ஏதேனும் ஒரு செய்தியையாவது விட்டுச் செல்ல வேண்டும்.  ஒட்டுமொத்த மனித இனத்தின் முதிர்ச்சியை ,மேன்மையைக் காட்டும் காலக் கண்ணாடியாகவே உரைகள் அமைவதால், அவற்றை உரைகல் என்று கூறுவது கூட சாலப் பொருத்தமாக உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக