சென்ற ஆகஸ்ட் மாத வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்த எனது கவிதை கீழே. திருமிகு விமலா அருணாச்சலம்,நியூஜெர்சி அவர்களின் கண்கவர் ஓவியம் முகப்புப் படமாக வந்துள்ளது.
https://drive.google.com/file/d/1XOd0eW6HYqAvt4_3BE5zp4BN4GdnRf5v/view?usp=sharing
தலைப்பு: காலநதிக்கு அப்பால்
இரண்டு கோணல் கோடுகளை
வரைந்து காக்கா என்கிறது
கரிய சரளைக்கற்களை திரட்டி
புதையலென அன்பாய்த் தருகிறது
உடைந்த வளையலை கண்டெடுத்து
மறக்காமல் மீண்டும் தொலைத்து விடுகிறது
கடற்கரையின் ஞாபகமாக
கொஞ்சம் மணலை
வாயில் கொண்டு வருகிறது
எப்போதும் நீரூற்றாய் வழியும்
எச்சிலுடன் ஆசை முத்தம் அளிக்கிறது
தூரிகையால் யானைக்கு
இறக்கையும்
புலிக்கு பச்சை வண்ணமும்
அளித்து மகிழ்கிறது
இயல்பாய் புன்னகைத்து
அறியாதவர்களுடனும் ஒரு உறவுப் பாலம் அமைக்கிறது
எப்போதோ இறந்த தாத்தாவின்
சாயலில் இருக்கிறதென
பாட்டியை கடந்த நினைவுகளிலும்
அத்தையிடம் மட்டும் அழாமல்
ஒட்டிக் கொண்டு
ஆசை மருமகள் என்று பெயரெடுக்கும் போது
எதிர்காலத்திலும் பயணித்து
காலநதியின் இருவேறு எல்லைகளை
முயற்சியின்றி இணைக்கிறது
நீங்கள் அதைக் குழந்தை என்கிறீர்கள்
நான் கடவுளுக்கும் மேல் என்கிறேன்
கருணையின் எல்லை என்கிறேன்
உயிரற்ற பொம்மைகளுக்கும்
உயிர் இருப்பதாய் எண்ணி
சாலப் பரிந்தூட்டும் அன்பை
வேறு எப்படி அழைப்பது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக