திங்கள், ஆகஸ்ட் 05, 2024

இரு துருவங்கள் - கவிதை

பல்வேறு பணிகளுக்கு இடையே இரண்டு நாட்கள் செலவழித்து வரைந்த ஓவியம். பல நாட்களுக்கு பிறகு நேரம் எடுத்து வரைந்தது மன நிறைவை அளித்தது.




நீலம் போர்த்திய தூரத்து மலை 

துள்ளும் கயல் நீந்தும் சுனை 

நட்டுவைத்த தூரிகையாய் தலையாட்டும் மரங்கள் 

தண்மதியின் சில்லுகளாய் அழகழகாய்ப் பூக்கள் 


மரகதமோ மாயக் கம்பளமோ 

புல்வெளியென விரியும் 

மகரந்தத் தாது உதிர்த்து 

காற்றில் மலர்கள் அலையும் 


அக்கரையை இக்கரையுடன் இணைக்கும் 

நீர்க் கரங்கள் தாலாட்டும் தெப்பம் 

காலமென்னும் ஆழியிலே ஆடும் 

மனமென்னும் கலத்தின் நிழல் பிம்பம் 


அக்கறையாய் கடல் கடக்கும் கடிதம் 

அதை மடியேந்தும் இரும்பாலான இதயம் 

இருவேறு பாதை வழிப் பயணம்

இணைவதில்லை துருவங்கள் ஒரு பொழுதும் 


இருவிழிகள் காணும் காட்சி இருமை 

இயற்கை மடியில் நிறைவதென்றும் இனிமை 

ஏகாந்தம் இனியது கண்கூடு 

நிலவின் தனிமையை நிகர்த்தது இவ்வீடு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக