வெள்ளி, அக்டோபர் 24, 2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கவிதை

 


கண்மணியின் கணவன் 

நான்கு சிறிய பிள்ளைகளோடு 

அவளை விட்டுப்போய் 

பத்து வருடமாகிறது

மழைக்கு ஒழுகும் வீட்டில்

இரு வேளை உணவுக்காக 

குப்பை அள்ளி

குழந்தைகளோடு கஷ்டஜீவனம் நடத்துகிறாள்

கணவன் சந்தேகப்பட்டானென

தீவைத்து சிதைந்த உடலுடன்

இருள் கவிந்த நேரங்களில் மட்டும்

பிறஆண்களுடன் சென்று வருகிறாள்

சுலோச்சனா வயிற்றுப்பாட்டுக்காக

சரசுவின் அப்பா 

அவளுடைய பதினைந்தாவது வயதில்

ஒரு சாராய பாட்டிலுக்காக

அவளை எவனுக்கோ 

விற்றுச் சீரழித்ததில் 

கையில் பிள்ளையோடு 

பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கிறாள்

சற்றே மனப்பிறழ்வோடு

தினமும் குடிகார கணவனிடம் 

அடிஉதை வாங்கி

மயக்கத்தில் கிடக்கும் மாலினிக்கு

அவ்வப்போது உதவுவது

மும்பை சென்று 

உயிர்வதை அனுபவித்து

பெண்ணாக மாறிய

எதிர்வீட்டு பிருந்தா அக்கா

ஆணவக் கொலை என்றெல்லாம் பதியப்படாமல் 

தவறுதலாக நேர்ந்தது என்றே பதியப்பட்ட

 மரணம் தான் ஆஷாவுடையது

கள்ளிப் பாலில் இறந்த 

பெயரிப்படாத பெண்சிசு

புதைக்கப்பட்ட மரத்தின் அடியிலெல்லாம்

பறவைகள் எப்போதும் கூடு

கட்டுவதேயில்லை

பெண் பெயரிட்ட நதிகள் தோறும்

நெகிழிக் கழிவுகள் கொண்டு அடைத்து

பூமிப் பெண்ணின் மேனியெங்கும் மலடாக்கும்

இரசாயனக்கொல்லி தெளித்துப் புண்ணாக்கி

பூமித்தாயின் வயிற்றில் துளையிட்டு

பீச்சிடும் எண்ணெய் திரவம்

குடித்து பணமோகம் தீர்த்துக் கொள்ளும்

 பணமுதலைகள் நடைபயிலும் வீதிதோறும்

வன்கொடுமை, ஆசிட் வீச்சு

வரதட்சிணை கொடுமையென  

பாழும் குழிகள் ஆங்காங்கே       

பரமபிதாவின் ஆசிபெற்ற பெண்ணே 

உன்னை இந்தப் பூலோகச் சொர்க்கத்தில்

சுகவாழ்வு வாழ அழைக்கிறோம்

உன்னைத் துன்பத்திலிருந்து

காக்கும் ராஜகுமாரன் வந்துவிட்டான்

உன்னை மிகவும் நேசிக்கிறான் 

நிதமும் ரட்சிப்பானென 

பசப்புச் சொற்களை வீசும் கனவான்களே

பூமியை எப்போது 

பெண்களின் நரகமென 

அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பீர்கள்?


Dude(டியூட்) தமிழ்ப்பட விமர்சனம்


ஹீரோ என்பவன் யார்? 100 பேரை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்துபவன், ஹீரோயின் பின் தன்னுடைய நண்பர் குழாமுடன் சுற்றி அவளை காதலிக்க வைப்பவன், பெண்ணிற்கான இடம் எது, பெண் எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசுபவன் என்று தமிழ் சினிமா காலங்காலமாக அடித்த பல்வேறு ஆணிகளை எல்லாம் "இது பூராவுமே தேவையில்லாத ஆணி" என்று தைரியமாக பிடுங்கி போட்டிருக்கிறது டியூட். ஆணவக் கொலைக்கு எதிரான கருத்துகள், ஹீரோயிசம் என்றால் என்ன, பெண்ணியம் என்பது என்ன, திருமணம் என்பதற்கான உண்மையான அர்த்தம் வரும் தலைமுறையிடத்தில் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் நகைச்சுவை என்னும் வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசியாக மனதில் தைக்கும் விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி, பிரதீப்பின் தோழனாக வரும் சத்யா அக்காலா, ஹ்ரிது என்று பலரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பெண்ணியம், சாதியம், ஹீரோயிசம் என்று பல கனமான விஷயங்களை ரொம்ப யதார்த்தமாக இந்த காலத்திற்கு ஏற்ப கையாண்டிருப்பதற்கே முதலில் டியூட் படக்குழுவினர்க்கு ஒரு சபாஷ் சொல்லலாம். 




தாலிக்கு பின்னாடி இருக்கற அந்த பொண்ணோட பீலிங்சுக்கு தான் மரியாதை என்று தாலி சென்டிமெண்டை காலி செய்தது, ஒரு பொண்ணுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை அதுக்கு ரீசன் எல்லாம் தேவையில்லை என்று பெண்ணின் உணர்வுகளை முன்னிலைப்படுத்துவது, அவ்வளவு ஆணவம் இருந்தா நீங்க போய் சாகுங்கடா என்று ஆணவக் கொலைக்கு எதிராக சாட்டை சுழற்றுவது, எதுவா இருந்தாலும் நான் face பண்ணிக்கறேன், Frontல வெச்ச லெக்கை backல வைக்கறது நம்ம ஹிஸ்டரிலேயே இல்லை, 100 பேர் வந்தாலும் அடி வாங்க முடியும், போன்ற டயலாக்குகள் மூலம் ஹீரோயிசத்திற்கு புதிய அர்த்தம் தந்தது , "தேவதாஸ் சார், நீங்க ஏன் எனக்கு இவ்ளோ பண்றிங்க" என்று மமிதா கேட்கும் போது ஒலிக்கும் பாடலும் அதில் வெளிப்படும் பிரதீப்பின் முக உணர்வும், ஆழமான அன்பும் என்று படம் நெடுக பல அடடேக்கள். சில இடங்களில் பிரதீப் காட்டும் சராசரி ஆணின் உணர்வும் அந்த பாத்திரத்திக்கு நம்பகத் தன்மையை அளிக்கிறது. 

இன்றைய இளைஞர்களின் பல்ஸ் பிடித்து சொல்ல வந்த விஷயத்தை எந்தவித சமரசமும் இல்லாமலும், பிரச்சார நெடி இல்லாமலும், பார் காட்சி அல்லது ஹீரோ குடித்துவிட்டு பாடும் காட்சி இல்லாமலும், ஒரு சில நச் வசனங்கள் வழியாக அழகாக சொல்வதிலும் நிமிர்ந்து நிற்கிறான் இந்த டியூட். பாலக்காட்டு மாதவனை பூமராக்கும் ஒரு அகன் வருவதற்கு தமிழ் சினிமாவிற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தான் சற்று ஆயாசத்தை தருகிறது. மொத்தத்தில் Dude அரிதானவன், அன்பானவன், அசலானவன்.

#dudemovie #dudetamilmovie #dude #dude2025


வியாழன், அக்டோபர் 09, 2025

காபி கவிதைகள்




#1
பனியில் சில்லிடும் மண்ணில் 
பதியும் பாதங்களுக்கு
குளிர்ச்சியைத் தாங்கும் 
வலிமையைத் தருகிறது
முகத்தில் அறையும் 
மார்கழிக் காற்றின்
குளிரைத் தாண்டி
அதன் நறுமணம் தேட விழைகிறது
குரைக்கும் நாயைப் பொருட்படுத்தாது
வீரனைப் போல வீதியில்
விரையும் உறுதியைத் தருகிறது
எல்லா சத்தங்களில் இருந்தும்
அதன் தனித்த சத்தத்தை
பிரித்துணரும் நுண்மையைத் தருகிறது
நாசியில் நறுமணமும்
வாழ்வின் கட்டுகளிடமிருந்தும் 
கண நேரமாவது விடுதலையும் தருகிறது காப்பி
எப்படியாகினும்
அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் எல்லாவற்றிலும்
இனிப்போடு கசப்பும் கலந்து விடுகிறது 


#2
வெள்ளைநிறப் பாலும் சர்க்கரையும்
அடர்பழுப்பு நிறக் காப்பித் தூளும்
இணைந்து பிறந்த
கரியநிறக் சமத்துவக் குழந்தை 
அழகாய்ச் சிரித்து 
ஆரவாரமாய் பவனி வருகிறது
பலரின் இதழ்க் கடையோரம்
இருமுறைக்கு மேல் அருந்தும் போது
குற்றவுணர்வுடனேயே சுவைக்க முடிகிறது 
வேலையிடையே வரும் தூக்கம் போல
எப்போதும் காபி அருந்துவதில்லை
என்பதெல்லாம் நல்ல பழக்கங்களில்
தவறாமல் இடம்பெற்றுள்ளது
கண நேரமாவது பிரச்சனைகளில்
இருந்தும்
விடுபட வரமளிக்கும்
காப்பி கடைகளின் மரபெஞ்சுகள்
யாவையும்
மனநல மருத்துவமனைகளே 
காப்பியின் முதல் மிடறு அருந்தி
கண்களை மூடி ரசிக்கும்
அனைவரிடமும்
புத்தரின் ஞானம் ஒளிர்கிறது 


#3
மலையிடை உதித்து 
தரை வரும் கோகோ 
பீபரிக் கொட்டைகள் 
ஆவின் மடியில் உதித்து 
கலம் சேரும் பசும்பால் 
வயல்வெளியில் உதித்து 
கன்னல் சக்கையில் 
பிறப்பெடுக்கும் சர்க்கரை 
குறிஞ்சி, முல்லை, மருதம்
மூன்றின் இணை தயாரிப்பு 
மண், தீ, நீர், காற்றின் கூட்டணி
காப்பி உலக ஒருமைப்பாட்டின் சின்னம்
அமைதியின் அடையாளமாய்
கோப்பையில் குடியிருக்கும் இன்பம் 
மொழிகளற்ற கைக்குலுக்கல்
உதட்டு முத்தங்கள் சேகரிக்கும் 
திரவப் பெட்டகம்
பல வேளைகளில் உணவுக்கு மாற்று
தண்ணீருக்கும் மணமும் குணமும் சேர்க்கும் மந்திரம்
காபி கோப்பைகள் 
நிறையும் போதெல்லாம்
காலியாகி விடுகிறது மனது