வெள்ளி, அக்டோபர் 24, 2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கவிதை

 


கண்ணாத்தாவின் கணவன் 

நான்கு சிறிய பிள்ளைகளோடு 

அவளை விட்டுப்போய் 

பத்து வருடமாகிறது

மழை ஒழுகும் வீட்டில்

இரு வேளை உணவுக்காக 

குப்பை அள்ளி

குழந்தைகளோடு கஷ்டஜீவனம் நடத்துகிறாள்

கணவன் சந்தேகப்பட்டானென

தீவைத்து சிதைந்த உடலுடன்

இருள் கவிந்த நேரங்களில் மட்டும்

பிறஆண்களுடன் சென்று வருகிறாள்

சுலோச்சனா வயிற்றுப்பாட்டுக்காக

சரசுவின் அப்பா 

அவளுடைய பதினைந்தாவது வயதில்

ஒரு சாராய பாட்டிலுக்காக

அவளை எவனுக்கோ 

விற்றுச் சீரழித்ததில் 

கையில் பிள்ளையோடு 

பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கிறாள்

சற்றே மனப்பிறழ்வோடு

தினமும் கணவனிடம் 

அடிஉதை வாங்கி

மயக்கத்தில் கிடக்கும் மாலினிக்கு

அவ்வப்போது உதவுவது

மும்பை சென்று 

உயிர்வதை அனுபவித்து

பெண்ணாக மாறிய

எதிர்வீட்டு பிருந்தா அக்கா

ஆணவக் கொலை என்றெல்லாம் பதியப்படாமல் 

தவறுதலாக நடந்தது என்றே பதியப்பட்ட

 மரணம் தான் ஆஷாவுடையது

கள்ளிப் பாலில் இறந்த 

பெயரிப்படாத பெண்சிசு

புதைக்கப்பட்ட மரத்தின் அடியில்

பறவைகள் இப்போதும் கூடு

கட்டுவதேயில்லை

பெண் பெயரிட்ட நதிகள் தோறும்

நெகிழிக் கழிவுகள் கொண்டு அடைத்து

பூமிப் பெண்ணின் மேனியெங்கும் மலடாக்கும்

இரசாயனக்கொல்லி தெளித்து புண்ணாக்கி

பூமித்தாயின் வயிற்றில் துளையிட்டு

பீச்சிடும் எண்ணெய் திரவம்

குடித்து பணமோகம் தீர்த்துக் கொள்ளும்

 பணமுதலைகள் நடைபயிலும் வீதிதோறும்

வன்கொடுமை, ஆசிட் வீச்சு

வரதட்சிணை கொடுமையென  

கொடும் பொறிகள் ஆங்காங்கே       

பரமபிதாவின் ஆசிபெற்ற பெண்ணே 

உன்னை பூலோகச் சொர்க்கத்தில்

சுகவாழ்வு வாழ அழைக்கிறோம்

உன்னைத் துன்பத்திலிருந்து

காக்கும் ராஜகுமாரன் வந்துவிட்டான்

உன்னை மிகவும் நேசிக்கிறான் 

நிதமும் ரட்சிப்பானென 

பசப்புச் சொற்களை வீசும் கனவான்களே

பூமியை எப்போது 

பெண்களின் நரகமென 

அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பீர்கள்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக