வியாழன், பிப்ரவரி 12, 2026

அக்னிச் சிறகுகள்


பட்டிமன்றம் புகழ் திரு. ராஜா அவர்கள் அட்லாண்டாவிற்கு பட்டிமன்றம் பேச சென்ற வாரம் பிப்ரவரி  3, 2026 அன்று  வந்துள்ளார். அங்கு தங்கி இருந்த போது அவருக்கு உணவு எடுத்து வந்த ஒரு பெண்மணியைப் பார்த்து நீங்கள் காரைக்குடி என்கிறீர்களே, நீங்கள் எடுத்து வந்தது செட்டிநாட்டு உணவா என்று கேட்டதாகவும் அதற்கு அந்தப் பெண் இல்லை என்று சொல்ல, அப்பறம் நீங்க என்ன ஆளுங்க என்று கேட்டதாகவும், அது அந்தப் பெண்மணிக்கு மனவருத்தத்தையும, துயரத்தையும் அளித்ததாக திரு. கார்த்திகேயன் என்பவர் எழுதிய பதிவு நேற்று மிகவும் பரபரப்பாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஜாதியா என்ற கருத்தும், ராஜா அவர்களை காட்டமாக விமரிசித்தும் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இது மட்டுமல்லாமல் முக நூலில், ட்விட்டரில்(எக்ஸ்) பலரும் நெருப்பில்லாமல் புகையாது என்றும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். இது குறித்து திரு, ராஜா அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கும் காணொளி கீழே உள்ளது.



இந்த சம்பவம் குறித்து அட்லாண்டா தமிழ்ச் சங்கமும்(GATS) ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது. அந்த விளக்கப் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பட்டிமன்ற பேச்சாளர் திருமிகு அனுக்கிரகா ஆதிபகவன் அவர்கள் திரு. ராஜா அவர்களுக்கு ஆதரவாக வெளியிட்ட பதிவும்  கீழே உள்ளது .


இது மட்டுமல்லாமல் பட்டிமன்றப் புகழ் திரு.சாலமன் பாப்பையா அவர்களும் திரு ராஜா அவர்களுக்கு ஆதரவாக ஒரு காணொளி பதிவு செய்துள்ளார்.




இதைக் குறித்து மீண்டும் முகநூலில் திரு கார்த்திகேயன் அவர்கள் இன்னொரு விளக்கத்தை அளித்து, இதுவே நான் இந்த நிகழ்வு குறித்து அளிக்கும் கடைசி பதிவு என்றும் என்னுடைய தங்கையின் மனநிம்மதிக்காக நான் இதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை என்ற ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.  


எனினும் அமெரிக்காவில் சாதியா, சாதிகளை அமெரிக்காவிலும் தூக்கிப் பிடிக்கிறார்களா என்றெல்லாம் சூடான விவாதம் வலைத்தளத்திலும், முகநூலிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒரு தமிழ்ச் சங்கத்தை சார்ந்த தன்னார்வலர்கள், அவர்கள் ஊருக்கு வந்த  விருந்தினர்களுக்கு உணவு அளிக்க சென்ற இடத்தில், அவர்கள் எதிர்பாராத எந்த ஒரு அனுபவம் ஏற்பட்டு இருந்தாலும், அதை அவர்களின் தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். பெரும்பாலும் அலுவலங்களில், பணியிடங்களில் ஒரு சம்பவம் நடக்கும் போது அதை சரி செய்ய ஒரு நெறிமுறை(protocol) இருக்கும். முதலில் மேலாளர், அப்புறம் அவருடைய உயர் அலுவலர், அதற்குப் பிறகு மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று எப்படி இந்தப் பிரச்னையை சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு ஒரு சங்கலித் தொடர்(Chain of Command) போலத் தேவையான ஆட்கள் இருப்பார்கள். இந்த முறையில் அந்தப் பிரச்னையை கொண்டு செல்வதே சரியானது, விதிமுறைகளுக்கு  உட்பட்டு அனைவருமே எளிதாகச் செய்யக் கூடிய ஒரு வழிமுறையாகவும் இது இருக்கும். அட்லாண்டா தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சொல்லாமல் நேரடியாக முகநூலில் பதிவு செய்யும் போது இந்த நிகழ்வு குறித்த உண்மைத் தன்மை குறைந்து இது ஆதாயம் தேடும் முயற்சியோ என்ற சந்தேகமே  மேலோங்குகிறது. 

அந்தப் பெண் எதிர் கொண்ட கேள்வி அவருக்குச் சங்கடம் அளித்தால் அது குறித்து திரு. ராஜா அவர்களிடம் அப்பொழுதே கேள்வி எழுப்பி இருக்கலாம் அல்லது அவர்களுடன் சென்ற நண்பர்களுடன் பேசி அவர்களைக் கேட்கச் சொல்லி இருக்கலாம், இதுவும் இல்லையா அட்லாண்டா தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவினருடன் பேசி திரு. ராஜா தரப்பை அணுகி இருக்கலாம், அல்லது அந்த பட்டிமன்ற நிகழ்விலேயே, நிகழ்ச்சிக்குப் பிறகு நேரடியாக திரு. ராஜாவை சந்தித்து விளக்கம் கேட்டிருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாமல் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் எழுதுவது முறைமையல்ல. இல்லையென்றால் எதிர்த்தரப்புடன் பேசி அவர்களின் கருத்தையும் அறிந்து கொண்டு, ஒரு நடுநிலையான பதிவினை எழுதியிருக்கலாம். சம்பந்தப்பட்டவரோடு பேசி பிரச்சனையை சுமூகமாக முடிப்பது நோக்கமாக இல்லாமல் இருப்பதற்கு வேறு ஏதேனும் வெளியில் தெரியாத காரணங்கள் இருக்குமா என்பதும், சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின் எழுப்பப்பட்ட இந்த விடயம் சிலரின் தூண்டுதலால் நடைபெற்றதோ என்றும் இது நம்மை யோசிக்க வைக்கிறது.  

சமூக வலைத்தளங்களில் ஒரு பெண் ஒரு ஆணைக் குறித்து பேசினாலோ அல்லது பதிவு எழுதினாலோ அல்லது ஒரு பெண் சார்பாக ஒரு ஆண் உறவினர் அல்லது நண்பர் அதைச் செய்தாலோ அந்தப் பதிவுக்கு ஆதரவு குவிகிறது. பொய்ப் புகாரோ, உண்மைப் புகாரோ சமூக வலைத்தளங்கள் தாங்களே இந்த நபர் குற்றவாளி என்று முடிவு செய்து வேறு எங்கேனும் இருக்கும் ஆதங்கத்தை, வன்மத்தை இந்த பதிவுகளுக்குக் கொட்டித் தீர்க்கிறார்கள். You are guilty until proven innocent என்ற ஒரு மனநிலையிலேயே இதைப் பலரும் அணுகுகிறார்கள். கேரளாவில், சில தினங்களுக்கு முன், பெண் ஒருவர் திலீப் என்ற நபர் பேருந்தில் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்தார் என்று வெளியிட்ட வீடியோ பதிவினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, திலீப் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஒரு தனி நபர் பல ஆண்டுகளாக கட்டிக் காத்த நற்பெயரை ஒரே ஒரு பதிவினால் வீழ்த்த முடியும் என்பது தனி நபர் பாதுகாப்பையே கேள்விக்குறி ஆக்கும் கவலைக்குரிய விடயம்.

இந்தியாவில் அரசு அலுவலங்களில்,, பள்ளிகளில், கல்லூரிகளில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சர்வ சாதாரணமாக கேட்கப்படும் சாதி குறித்தான கேள்விகளை எளிதாக எதிர்கொண்டு சாதி வழங்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகளை பல தலைமுறைகளாக அனுபவித்து, அது குறித்து எந்த ஒரு  நெருடலும்  இல்லாமல், யாரோ தனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் என்னுடைய  சாதியைக் கேட்டார் என்று விமர்சித்துப் பதிவிடுவது இரட்டை வேடம் இல்லையா? நான் படிக்கும் காலத்தில் 12ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் எப்போதும் ப்ராக்டிக்கல் வகுப்பில் குறிப்பிட்ட சில மாணவிகளுக்குக் குறைந்த மதிப்பெண்களையே வழங்குவார். ஆமாம், இதுங்க என்ன தவளையையும், கரப்பான் பூச்சியையும் சரியாவா வெட்டி ப்ராக்டிக்கல் செய்யப் போறாங்க என்று அதற்கு காரணமும் சொல்வார். அதே பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் விளையாட்டில் பங்கேற்க வரும் பெண்களில் ஒரு சிலரை உங்களால இதெல்லாம் முடியாது, நீங்கள் இதில் பங்கேற்காதீர்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார். இதெல்லாம் சாதி என்ன என்பதைக் கேட்டு வந்தது அல்ல, அந்தப் பெண்களின் தோற்றம், பேச்சு வழக்கு மற்றும் அவர் தந்தையின் பெயர் போன்ற ஒரு சில விடயங்களை வைத்தே எளிதாகவே ஊகித்து முடிவு செய்யப்படும். ஒரு சமூகம் எப்படி தன்னைப் பார்க்கிறது என்று அறியாத பள்ளிப்  பருவத்திலேயே இது போன்ற பாகுபாட்டை(discrimination) அந்த மாணவிகள் எதிர்கொள்ள  நேர்ந்தது பெரும் துயரமே.

பிறப்பால் யாரும் உயர்ந்தோர் இல்லை யாரும் தாழ்ந்தோர் இல்லை என்று சொல்லும் போராளிகள் அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் ஏன் உலகெங்கும் வேலைவாய்ப்புகளில், அரசியலில், சினிமாவில் என்று யார் வெற்றிகரமாக பவனி வருகிறார்களோ அவர்கள் தங்கள் சமூகத்தில்  உள்ளவர்களையே அடுத்து முன்னேற வழி விடுகிறார்கள். தெலுங்குப் பட உலகம், பாலிவுட் பட உலகம் போன்றவற்றில் உள்ள நிலையை எண்ணிப் பாருங்கள். நான் அமெரிக்காவில் பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்களை மட்டுமே திறமை அல்லது தகுதி இருக்கிறதோ இல்லையோ அவர் தன் மொழி பேசுபவர் என்ற ஒரே காரணத்தால் வேலைக்குச் சேர்த்த மேலாளரை அறிவேன். ஆங்கிலம் அல்லாத என்னுடைய தாய்மொழியிலேயே என்னால் பணியாளர்க் கூட்டம்(Staff Meeting) நடத்த முடியும், அது என் குழுவில் உள்ள அனைவருக்கும் புரியும் என்று அந்த மேலாளர் பெருமையாகச் சொன்னதை என்னுடைய அலுவலகத்தில் பலரும் அறிவார்கள். கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட குழு இது.  இந்த சம்பவம்  ஒரு பெரும் கடலில் சிறு துளி தான். இதைப் போல பலரும் பரிந்துரை(referral) முறையில் தங்களுக்கு தெரிந்தவர், தங்கள் மொழி பேசுபவர், தங்கள் உறவினர் என்று தகுதியைத் தாண்டிய பல்வேறு காரணங்களுக்காக, ஒரு நபருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதும், இன்னொருவருக்கு பதவியைப் பறிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.  அப்போது இது குறித்து நான் ஒரு சிறு கவிதை எழுதி இருந்தேன். அது என்னுடைய நூலான அம்புலிக்கு அப்பால் என்ற கவிதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

ஒருவனுடைய 
உண்மையான குணத்தை 
அறிய விரும்பினால் 
அவனுக்கு கொஞ்சம் 
அதிகாரத்தை அளித்துப் பாருங்கள்  

என்பது தான் அந்தக் குறுங்கவிதை. அமெரிக்காவிலும் இனவெறி,  தீண்டாமை என்று பலதும் இருக்கிறதே இது குறித்தெல்லாம் பேசவும், தொடர்ந்து இந்த போக்கிற்கு எதிராக குரல் எழுப்பவும் பலரும் முன் வருவதில்லையே ஏன்? தனக்கு எங்கெல்லாம் பதவி, பணம் என்று ஆதாயம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சமூக நீதி என்பதெல்லாம் பெயரளவில் மட்டுமே என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஒருவன் அடுத்தவர் மேல் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வரும் போது அவன் எந்த சமூக படிநிலையில் இருந்து வந்திருந்தாலும் அவனுடைய இயல்பு எப்படியாவது தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற மனநிலை தான். அதுவரை சம வாய்ப்பு, சம நீதி, தகுதி அடிப்படை(merit) என்றெல்லாம் கம்பு சுத்தும் மனநிலை கொண்ட அவன், முன்னேறிய பிறகு, அவனிடம் இருந்த நல்ல எண்ணங்கள் சுத்தமாக காணாமல் போய், மற்றவர்களை தனக்குக் கீழே அடிமையாக வைத்து இருப்பதையே விரும்புகிறான். அனைவருக்கும் இது பொருந்தாது என்றாலும் பெரும்பான்மையோருக்கு இதே மனநிலை தான். Outrage is selectively weaponized only when someone's needs are not met. Until such a time he/she is just a mute spectator.  

இனப் பாதுகாப்பு, சமூக நீதி, மொழி உரிமை என்பதெல்லாம் தனி மனிதனை ஈர்க்கும்படி கட்டமைக்கப்பட்ட வலிமையான பொறிகள். இதில் எந்த ஆதாயமும், உள்நோக்கமும் இன்றி அப்பாவிகள் களத்தில் நின்று போராடும் போது, பின்புலத்தில் இந்த விஷயத்தை பெரிதாக்கி தூண்டி விட்ட ஒரு சிலர் இதனால் அரசியல் ஆதாயமும் , பண ஆதாயமும் அடைவது தான் நடக்கிறது.  இவன் தான் உன் எதிரி என்று யார் சொன்னாலும் அதை நம்பாமல் நம்முடைய எதிரி யார், நம்முடைய நண்பன் யார் என்பதை நாமே முடிவு செய்வோம். 

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆண் பெண் பாகுபாடு, இனப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு என பல அவலங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் எனக்கு நடக்கவில்லை, இதை எதிர்ப்பதால் எனக்கு என்ன கிடைக்கும் அல்லது  இப்போது எனக்குப் பயன் தரும் ஒன்றைக் குறித்து கருத்துக் கூறி அதனால் எனக்கு வரும் ஆதாயத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற விட்டேத்தியான சுயநல மனோபாவம் தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் தொடரக் காரணம். நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணம் கொண்டால் எந்த அநியாயத்தையும் எதிர்த்து குரல் கொடுக்கும் வலிமையை  நாம் பெறுவோம். அனைவரும் சமம் என்று நினைத்தால் தகுதி அடிப்படையிலேயே(merit) நமது எல்லா முடிவுகளையும் அமைப்போம்.  நாம் மட்டுமன்றி நம்மைச் சுற்றி உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்கு எந்த நிலையிலும் தடுமாற்றம் வராது. அப்படிப்பட்ட சரிநிகர் சமானமான உலகம் மலர்வதே நமது குறிக்கோள் என்றால் அந்த மாற்றத்திற்கான பொறி  நம்மிடம் இருந்தே தோன்ற வேண்டும். புத்தனாக வேண்டும் என்றால் அரண்மனையைத் துறந்து நாடோடியாக அலைந்து ஞானத்தை தேடும் தியாக மனம் வேண்டும். ஏசுவாக வேண்டுமென்றால் முள் கிரீடத்தை துணிந்து தரிக்கும் மனோதைரியமும், சிலுவையைச் சுமக்கும் உள்ளமும் நமக்கு வேண்டும். நல்ல மனிதனாக வேண்டுமென்றால் எல்லா நிலைகளிலும் மோசமான விளைவுகளை தரும் எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் சரியான விளைவுகளை தரும் கடினமான பாதையை தேர்ந்தெடுக்கும் மனம் வேண்டும். Choose the harder right instead of the easier wrong and never let your wishbone grow where your backbone should be.