சனி, ஏப்ரல் 18, 2020

அசோகவனத்து சிறை


ஒரு சிறுகதை போட்டிக்காக எழுத்தியது……..வெற்றி பெறவில்லை என்றாலும் போட்டியில் பங்கேற்றது நிறைவளித்தது….


அந்த அறையில் மண்ணெண்ணெய் நெடி அடித்துக் கொண்டிருந்து. தாழ் போடாமல் திறந்திருந்த அந்த ஒற்றை ஜன்னல் வழியே காற்று மட்டுமே உள்நுழைந்து அந்த மண்ணெண்ணெய் வாடையை நீக்கும் கடினமான பணியை செய்து கொண்டிருந்தது. மண்ணெண்ணெய் டின்னும் தீப்பெட்டியும் அந்த அறையில் இருந்த அந்த பழைய பெஞ்சில் இருந்தது. அந்த பெஞ்சின் இன்னொரு மூலையில் அமர்ந்து இருந்தாள் கருணா. அவள் மனம் கடலலையில் சிக்கிய ஓடம் போல அலைபாய்ந்து கொண்டிருந்தது.     

கணவன் பார்த்திபன், மகள் அனுஷா என்று சிறிய குடும்பம். சென்னை போன்ற பெரு நகரத்தில் ஒற்றை சம்பளத்தில் வாழ முடியாது என்று பார்த்திபன் மணமான புதிதிலே சொன்னதால் மதுரையிலேயே இருந்துவிட்டார்கள். கருணாவிற்கு தாய் தந்தையர் அடுத்தடுத்து தவறி விட்டதால் மதுரையை தாண்டி வேறெங்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரே தம்பியும் பெங்களூரில்  இருக்கிறான். எப்போதாவது போன் செய்து பேசுவான். அவனை நேரில் சென்று பார்க்க அவளுடைய பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பதை விட பார்த்திபன் அதில் ஆர்வம் அதிகம் காட்ட மாட்டான் என்பதே முதன்மை காரணி.  இந்த ஊரை தாண்டி பார்த்திபன் வேற எங்கேயாவது தன்னையும், தன்  பெண்ணையும் அழைத்துச்  செல்வான் என்பதெல்லாம் அவளை பொறுத்தவரை பகல் கனவு மட்டுமே.  மகள் அனுஷா நன்கு படிப்பவள். 10-வது  வந்த பிறகு இப்போது தான் தன்னை சற்று கூடுதலாக அலங்கரித்து கொள்கிறாள். கண்ணாடி முன் கொஞ்சம் அதிக நேரம் செலவிடுகிறாள் என்பதை தவிர மற்றபடி அவளால் கருணாவிற்கு எந்த குறையும் இல்லை. அனுஷாவிற்கு மேடை பேச்சு நிரம்ப பிடிக்கும். பள்ளிக்கு கூடத்தில் பட்டிமன்றம், பேச்சு போட்டி போன்றவற்றில் ஆர்வமாய் பங்கேற்பாள். அம்மா, இன்னும் இரண்டு நாள்ல தமிழ் பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் பேச போறேன். நீங்க கண்டிப்பா வந்து பாக்கணும்னு கட்டளை வேறு போட்டிருந்தாள்.

சிறிய குடும்பம் பெரிய பிடுங்கல் இல்லை என்று இந்நேரம் நீங்கள் நினைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம். பார்த்திபன் கொஞ்சம் குடிப்பான். அதைத் தவிர மனைவி மேல் நிறைய சந்தேகப்படுவான். அடுத்த வீட்டுக்கு சென்று காப்பித் தூள் வாங்கவேண்டும் என்றாலும் கூட அனுஷாவை மட்டுமே அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால்  அங்கே "எவன் கிட்ட பல்லை இளிச்சிட்டிருந்த" என்று கூசாமல் பேசுவான்.அவனை பொறுத்தவரை கருணா வீட்டிற்கு யாரவது வந்து அவர்களிடம் பேசினால் கூட அவர்கள் போன பிறகு "பட்டு பட்டுனு பேசி அனுப்ப வேண்டியது தானே. அது இல்லாம என்ன சிரிச்சு சிரிச்சு பேச்சு" என்பான். கருணா வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்றால் பால் வாங்கணும், காய்கறி வாங்கணும், மாவு மெஷினுக்கு போகணும் அப்படின்னு எப்போதும் ஒரு அரிசி, கோதுமை வைக்கப்பட்ட பாத்திரமோ, ஒரு கூடையோ எடுத்துக் கொண்டே வீட்டை விட்டு செல்வாள். ஒரு நாள் கூட இவங்க வீட்டுக்கு போகணும்னு அவள் சொல்லிவிட்டு போக முடியாது. அப்படி சொன்ன எதுக்கு? ஏன்? என்ன பேசணும் அப்படின்னு அவன் பண்ற கெடு பிடியில் கருணாவிற்கு வெளியே போக வேண்டும் என்ற ஆசை கூட போய்விடும். அவனுடைய குணம் தெரிந்து அவன் வீட்டில் உள்ள நேரம் பெண்களை தவிர அக்கம் பக்கத்தில் உள்ள ஆண்கள் யாரும் வரவே மாட்டார்கள். இதில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இல்லை. பக்கத்து வீட்டு பையன் 6 வயது ரகு கூட வர மட்டான் பார்த்திபன் வீட்டில் இருக்கிறான் என்பது தெரிந்தால்.

அன்றும் வழக்கம் போல அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் ஹாலில் உள்ள சேரில் ஹாயாக அமர்ந்திருந்தான். காலை முதல் வீட்டில் அடைந்து கிடந்த கருணாவிற்கு அன்று எங்கேயாவது போக வேண்டும்  போல் இருந்தது. என்ன செய்வது இவனிடம் எங்கே என்று சொல்லிவிட்டு செல்வது என்று யோசனையில் இருந்தாள்.

நைட், சப்பாத்தி குருமா செய் என்று சொன்னவாறே பேப்பரில் ஆழ்ந்தான். பின்னர் வெளியே  வராந்தாவிற்கு சென்றவன் சிறிது நேரத்தில் விறு விறு என உள்ள வந்தான். அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவனுடைய முகத்தை ஏறிட்டு பார்த்தவளுக்கு வயிற்றை பிசைய ஆரம்பித்தது.

அனுஷா சற்று நேரத்தில் வீட்டில் நுழைந்தாள்.

அனுஷா, நில்லு. எங்க போயிட்டு வர?

டியூஷனுக்கு பா. கணக்கு டியூஷன்.

கணக்கு டியூஷன் போ. ஆனா கண்ட கண்ட பசங்க கிட்ட என்ன பேச்சு. தெரு முனையிலே நோட்டு கொடுக்கறது, நோட்டு வாங்கறது அப்படிங்கறது எல்லாம் என்ன புது பழக்கம். நீ பசங்க கிட்ட பேசி தான் படிக்கணும்னா அப்படி பட்ட படிப்பே வேண்டாம் என்று சீறினான்.

அனுஷாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

இல்லப்பா, டியூஷன் நோட்ஸ் நான் தான் வாங்கினேன். ரெண்டு நாள் உடம்பு சரி இல்லாம நோட்ஸ் மிஸ் பண்ணிட்டேன். அதை எழுதறத்துக்காக தெரு முனைல இருக்கற சரவணன் கிட்ட நோட்ஸ் வாங்கினேன். அதை தவிர ஒண்ணும் இல்லை என்றவள் உதவிக்காக அம்மாவை பார்த்தாள்.

கருணா தவித்தாள். இறைவா, இவ்ளோ நாள் என்னை மட்டும் தான் இந்த மனிதன் கஷ்டப் படுத்திக் கொண்டிருந்தான். வேறு போக்கு இல்லாததால் நான் வாய் மூடி மௌனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது என்னை மட்டுமல்ல என் பெண்ணையும் வார்த்தைகளால் கொல்கிறானே. எங்களை காப்பாற்று என்று எல்லா கடவுளையும் வேண்டினாள்.

இல்லங்க, நான் பாத்துக்கறேன். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க என்று மெல்லிய குரலில் அவள் ஆரம்பிக்கவும், “என்னடி, அம்மாவும், பொண்ணும் சேர்ந்து நாடகம்  ஆடறீங்க. நீயே ஒரு ஏமாத்துக்காரி. கடைக்கு போறேன், மில்லுக்கு போறேன்னு அங்க இங்க போற. என்ன முழிக்கற, உன்னை பத்தி என் காதுக்கு விஷயம் வராதுன்னு நினைக்கறியா?  எனக்கும் இந்த ஊர்ல தெரிஞ்சவங்க இருக்காங்க. நல்லது கெட்டது என் காதுக்கும் வரும். பேச வந்துட்டா பெரிசா என்று சீறினான்.

இந்த நல்லது கெட்டது சொல்றவங்க உன்னை குடியையும் விட சொல்லிருக்காங்களா என்று நா வரை வந்த கேள்வியை கேட்க முடியாமல் அடக்கினாள் கருணா. அனுஷாவை அந்த இடத்தில் இருந்து சீக்கிரம் எப்படி அனுப்புவது என்று கையை பிசைந்தவள், அந்த நேரத்தில் அழைப்பு மணி அடிக்கவும் சற்று ஆசுவாசமானாள்.

பார்த்திபன் கதவை திறந்து வந்தவரை பேசி அனுப்புவதற்குள் அனுஷாவை கண் ஜாடை மூலம் அவளுடைய அறைக்கு அனுப்பினாள். கிச்சனில் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். ரகசியமாக அனுஷாவிற்கு சாப்பாடை அவளுடைய அறையிலேயே கொடுத்தவள் தானும் இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு அவனுக்கான உணவை ஹாட்-பாக்கில் எடுத்து வைத்தாள். கிச்சனை சரி செய்து விட்டு வந்தவள், அனுஷா ரூமிற்கு சென்று அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றாள்.

அனுஷா அழுதிருப்பாள் போலும், கண்கள் கொஞ்சம் சிவந்திருந்தது. ஏதோ புத்தகத்தை வெறித்து பார்த்தவாறு இருந்தவள் தாயைப் பார்த்ததும் விசும்ப ஆரம்பித்தாள்.

அனுஷா, சாப்பிட்டியா என்று ஆதரவாக கேட்டவுடன், அம்மா என்று அனுஷா மேலும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். பதறிப் போன கருணா,  அனுஷா, தங்கமே "அழாதே. உனக்கு அப்பாவை பத்தி தெரியும் தானே. இனிமேல் ஜாக்கிரதையா இரு . அம்மா உன்னை நம்பறேன்" என்றாள்.

கருணாவுடைய சமாதானத்தில் சற்று அழுகையை நிறுத்திய அனுஷா, சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனாள். ஏதோ ஏதோ எண்ண ஓட்டத்தில் இருந்த கருணா எப்போது தூங்கினாள் என்று தெரியாது. அவளுடைய கனவில் எல்லா திசைகளிலும் பளீரென வெளிச்சம் தென்பட்டது. கருணா அந்த வெளிச்சத்தை நெருங்கும் போதே அது பெரும் தீ என்பதை அறிந்தாள். அந்த தீயிலிருந்து வெளியேற வழி ஏதும் தென்பட வில்லை. கருணாவை அந்த தீ நெருங்கியது. கருணா பதறி எழுந்த போது பொழுது புலர்ந்திருந்தது.

காலை வேலைகளை முடித்து பார்த்திபனுக்கும், அனுஷாவிற்கும் தேவையான உணவினை தயாரித்து, அவர்கள் கிளம்பிய பின் துணி துவைத்து, அடுக்களையை ஒழித்து அவள் வந்து சிறிது நேரம் இளைப்பாறிய போது மணி பதினொன்று. திடீரன்று செல்பேசி ஒலிக்கவும் எடுத்து பேசினால் மறுமுனையில் அவள் தம்பி. சம்பிரதாய விசாரிப்புக்கு பின் "என்ன திடீர்னு போன் செய்யற?" என்றாள். இல்லை பிரமீளாவிற்கு ஒரு சின்ன ஆபரேஷன். ஒரு பத்து நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். பசங்களை வேற பாக்கணும். நீ வந்து ஒரு வாரம் இருந்தா எனக்கு கொஞ்சம் உதவிய இருக்கும் என்று நிறுத்தினான்.  டேய், உனக்கு அவரை பத்தி தெரியாதா. எனக்குன்னா எச்சி கையால காக்கா ஓட்ட மாட்டார். நீ போன் பண்ணேன்னு தெரிஞ்சா "இதான் சாக்குன்னு அங்கே போகலாம்னு பிளான் பண்ணாதே, யாரு எனக்கு இங்க சமைச்சு போடுவா. உன் புள்ளைய யாரு பாத்துக்கறதுன்னு ஏகத்துக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுவார்.நீயே பாத்துக்கோடா" என்றாள் இயலாமையுடன். சரிக்கா, நான் எப்படியாவது சமாளிச்சிக்கிறேன், யோசிச்சு பாத்து உன்னால முடிஞ்சா சொல்லு நானே டிக்கெட் எடுத்திடறேன் என்று சொன்னான். ம்ம் சரி என்று பெருமூச்சுடன் செல்பேசியை அணைத்தாள். தன்னை தாண்டி மற்றவர்களை பார்க்கும் மனநிலை ஆண்களுக்கு எளிதில் கைவருவதில்லை. அடுத்த வீட்டு பாட்டி உடல் நிலை சரி இல்லாத போது கூட "சும்மா எல்லாருக்கும் போய் செஞ்சிட்டு இருக்காதே. அப்பறம் அவங்க இதையே எதிர் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அவங்கள டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், மருந்து வாங்கி தரேன்னு செலவை  இழுத்து விட்டுடாதே, பணம் மரத்துல காய்க்கல என்பான். இத்தனை பேச்சும் அவள் அந்த பாட்டிக்கு ஒரு வேளை கஞ்சி காய்ச்சி கொடுத்ததற்கு மட்டுமே. அந்த பாட்டி ஆசையுடன் செய்து தந்த வடை,டீ போன்றவற்றை உண்டவன் தான். ஒருவரின் தயவு தேவை இல்லை என்று அவனால் எப்படி அவ்வளவு சீக்கிரம் ஒதுக்க முடிகிறதோ என்று அவளுக்கு கூட ஆச்சரியமாக இருக்கும்.

அன்று காலை முழுவதும் தம்பியிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பையே எண்ணிக்  கொண்டிருந்தது அவள் மனம்.

பார்த்திபன் அலுவலகத்திலிருந்து வந்த பின் அவனுக்கு டிபன் எடுத்து கொடுத்து விட்டு, மகள் அனுஷா டியூஷன் சென்ற பின் மெதுவாக அவனிடம்

என்னங்க, இன்னைக்கு என் தம்பி போன் பண்ணான்.



ம்..என்றான் பார்த்திபன் சுரத்தின்றி.



அவன் மேலும் எதுவும் கேட்பான் என்று அவளுக்கு தோன்றாது போகவே, அவளே மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.



எங்க நாத்தனாருக்கு ஒரு சின்ன ஆபரேஷன். ஒரு வாரம் நான் வர முடியுமான்னு கேட்டான்?



அம்மணி, என்ன முடிவு பண்ணியிருக்கீங்க என்றான் கொஞ்சம் ஏளனமாய்



அவளுக்கு சற்றே தயக்கமாய் இருந்தது. ஆனது ஆகட்டும் என்று இல்லை, உடம்பு முடியலன்னு தானே கூப்பிடறாங்க. கஷ்டமா  இருக்கு வர மாட்டேன்னு சொல்றதுக்கு. நானும் அனுஷாவும் ஒரு வாரம் போய் இருந்திட்டு வரட்டுமா?”

அவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு நீ போற. ஆனா இங்க நான் மட்டும் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவேன்னு ஏன் உனக்கு தோணலை. ஊர் சுத்த போறதுல உள்ள அக்கறை கொஞ்சம் புருஷன் மேலயும் வைக்கலாம் இல்ல என்றான் சுருக்கென்று ..

இல்ல, பக்கத்துக்கு வீட்டு பாட்டி கேட்டா சமைச்சி தருவாங்க.உங்களுக்கும் வீட்டு சாப்பாடு கிடைக்கும். உங்க ஆபீஸ்ல லீவு கிடைக்கும்னா நீங்களும் வாங்க. எங்களுக்கும் துணையா இருக்கும்.

ஆமா, நீங்க போறதுக்கே நான் இன்னும் சரி சொல்லல. இதுல என்னை வேற கூப்பிடற. டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சா? இல்ல வெறும் தகவலா சொல்றியா?

என்னங்க நீங்க? உங்கள கேக்காம எப்படி பண்ணுவேன்? என்றாள் கருணா.

அந்த மட்டும் புருஷன் மேல மரியாதை வெச்சிருக்கியே. அதுவே பெரிய விஷயம். ஆமா, பெங்களூர்ல தம்பி வீட்டுக்கு மட்டும் தான் போறியா? இல்ல, இதான் சாக்குன்னு உங்க அத்தை பசங்க இருக்காங்களே அவங்களையும் பாக்க போறியா. பெங்களுர்ல தானே இருக்காங்க.

இல்லைங்க தம்பி வீட்ல நான் இருந்தா அவங்களுக்கு உதவியா இருக்கும் தானே போகிறேன். அதனால தம்பி வீடு தவிர வேற எங்கேயும் போக மாட்டேன். அத்தை, நாத்தனாரை பாக்க வந்தா அவங்கயும் பார்ப்பேன். இல்லனா இதுக்காக அங்க போக போறது இல்லை என்றாள், அவன் போக வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்று பயந்தவாறே.

கருணாவின் அத்தை மகன்கள் சந்திரன் மற்றும் புவனன் இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். கை நிறைய சம்பளம் வேறு. பார்க்கவும் லட்சணமாக இருப்பார்கள்.  அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பது கூட தெரியாதா இல்லை வேண்டும் என்றே அவளை காயப்படுத்த வேண்டும் என்று கேட்கிறானா என்று  தோன்றியது.

சரி, சரி போய் தொலை. ஆனா போறதுக்கு முன்னாடி உன் தம்பிய தவிர வேற யார் வீட்டுக்கும் போக கூடாது. உன் தம்பியவே டிக்கெட் எடுத்து தர சொல்லு. வழி செலவுக்கு 500 ரூபா தரேன். அதை செலவு பண்ணாம எடுத்திட்டு வந்தா நல்லது. அப்பறம் இவங்க வீட்டுக்கு போனேன், அவங்க வீட்டுக்கு போனேன் அப்படின்னு எனக்கு தெரிய வந்தா நீங்க ரெண்டு பேருமே திரும்பி வர வேண்டாம் அங்கேயே இருந்திடுங்க என்றான் சுருக்கென்று.

அவளுக்கு கன்னத்தில் அறைந்ததை போல் இருந்தது.ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் கூட போய் பார்ப்பதற்கு எத்தனை பேச்சுகளை கேட்க வேண்டி இருக்கிறது. இத்தனை நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சந்தேகப்பட்டது  போய் இன்று உறவினர்கள் கூட பார்த்திபனின் சந்தேக வட்டத்தில் இருந்து தப்பவில்லை.

சரிங்க என்றாள். அத்தனை பெரிய நகரத்தில் 500 ருபாய் எல்லாம் எந்த மூலை. ஒரு வேளை சாப்பாடு கூட வாங்க முடியாது. ஒரு இடத்தில் இன்னொரு இடத்திற்கு ஆட்டோவில் செல்வது கூட கடினம் ஆயிற்றே? இன்னும் பணம் கேட்டால் நீங்க போக வேண்டாம் என்று சொல்வான். தம்பியிடம் கேட்பதற்கு கூச்சம் மட்டும் அல்ல. தம்பி குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொண்டு போய் கூட கொடுக்க முடியாதே. பணமாக கொடுப்பது என்றாலும் 100 ரூபாயை விட கம்மியாக கொடுக்க முடியாது. வழி செலவு, சாப்பாடு என்று அவர்களுக்கு வேறு செலவு ஆகும் .வேண்டாம் என்று சொல்லாமல் போவதை எவ்வளவு கடினம் ஆக்கிவிட்டான். பணம் சம்பாதிக்காத பெண்கள் எல்லாம் அடிமையை விட கீழானவர்கள் என்று மறுகினாள். போக முடியாது என்பதை விட எல்லாவற்றையும் சந்தேக் கண் கொண்டு நோக்கும் அவன் செயல் அவளை அருவருக்க வைத்தது. ஒரு கூண்டுக்குள் அவளை அடைத்ததை  போல் உணர்ந்தாள். கழிவிரக்கம் மிகுந்து ஒரு துளி கண்ணீர் வெளிவந்து அவள் கன்னத்தை நனைத்தது.

அந்த கண்ணீர் அவள் கண்களை தாண்டி கன்னத்தை தொட்டபோது கருணா நனவுலகத்திற்கு வந்தாள். கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் ஆவேசமாய் அந்த மண்ணென்னை டின்னை திறந்தாள். அவள் திறந்த வேகத்தில் மண்ணெண்ணெய் திறந்து கீழே சிதறியது . அந்த மண்ணெண்ணெய் சிதறிய இடத்தின் மையத்தில் வந்து நின்றாள். இன்னொரு கையால் அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்து பொருத்தினாள்.

பள்ளிகளுக்கு இடையே நடந்த அந்த பேச்சு போட்டியில் அனுஷா ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தாள். ஓராண்டு காலம் அசோக வனத்தில் சிறைப்பட்ட சீதையின் மனதில் ஒரு வினாடி கூட இராவணன் தங்கவில்லை. தன் கற்பு திறத்தை ஒரு முறை அல்ல இரு முறை எளிதாய் தீயில் புகுந்து நிரூபித்தாள். ஆனால் இராமானுக்கோ யுத்த களத்தில் அல்லாமல் வேறெங்கும் காணாத இராவணன் அவன் உள்ளத்திலேயே தங்கி விட்டான். மனைவியை சந்தேகித்தான், அவளை பிரிந்து வாழ்ந்தான், அசோகவனம் உண்மையில் சீதையின் சிறை அல்ல..அது ராமனுடைய சிறை...கைதட்டல் ஓசை வெகுவேகமாக எழுந்தது.

அந்த கைதட்டல் ஓசை ஏற்படுத்திய அதிர்வொலி காற்றில் பரவியிருக்கலாம். அதுவோ, அனுஷாவை பற்றிய எண்ண அதிர்வோ, இராமனின் பெருமூச்சோ எதுவோ திறந்திருந்த சாளரத்தின் வழி சென்று கருணாவின் கையில் இருந்த அந்த தீக்குச்சியை அணைத்தது.

மாற்றம் ஒன்றே மாறாதது - கொரோனா ஒரு பார்வை

தடைபடா  மனித ஓட்டம் நின்றாகிவிட்டது. தூங்கா நகரம் தூங்கி விட்டது. விண்வெளியில் இருந்தும் தெரியும் பெருஞ்சுவர்கள் கண்ணுக்கு  புலப்படாத  கிருமிகளை தடுக்கும் சக்தியற்றதாகிவிட்டது. மனிதனின் ஆணவம் அடித்து நொறுக்கப்பட்டது. எத்தனை பணம் இருந்தாலும் உனது நேரம் குறிக்கப்பட்ட பிறகு உலகில் உள்ள எதை கொடுத்தாலும் ஒரு வினாடி கூட அதிகம் பெறப்  முடியாது என்பது மீண்டும் நிறுவப்பட்டது. உண்ண உணவு, உடுக்க சில உடைகள், குடிக்க நீர், பேச தன் குடும்பம் மட்டுமே என்ற அளவில் தேவைகள் சுருங்கிவிட்டன. கேளிக்கை, கும்மாளம், யாரை பற்றியும் எதற்கும் கவலைபடாமல் புற இன்பத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பலவும் இன்று தேவையற்றதாய் போய்விட்டது. ஆணவத்துடன் உணவு சங்கிலியில் மனிதனை எல்லா உயிரினங்களுக்கும் மேல் நிறுத்திய செய்கையை கண்டு எல்லா உயிரினங்களும் மனிதனை ஏளனத்துடன் பார்க்கின்றன.

நிலைமை சரியானவுடன் மனிதன் தடை செய்யப்பட்ட விலங்குகள் விற்கும் சந்தையில் பாம்பையும், வௌவாலையும், பூச்சிகளையும் அடைத்து விற்பனை செய்வதை நிறுத்தி விடுவானா, இல்லை. சீனா திடீரன்று உலக மக்கள் மேல் அக்கறையும் கரிசனம் கொள்ளுமா,  அமெரிக்கா பொருளாதாரத்தை காரணம் காட்டி மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் புவி வெப்பமயமாக்கல், இயற்கை  பேரழிவு போன்றவற்றை தடுத்து நிறுத்துமா,  சுதந்திரம் இல்லாமல் வாழ்வது என்றால் என்ன என்று உணர்ந்து மனிதன், மிருகக் காட்சிசாலைகளையும், விலங்குகளை கேளிக்கைக்காக சிறைப்படுத்துவதையும் கைவிட்டு விடுவானா அல்லது  தன்னுடைய தேவைகளுக்காக மனிதன் அழிக்கும் காடுகளையும், அதனால் சீர்கெடும் விலங்குகளின் வாழ்வாதாரத்தை மீட்டு  தருவானா என்றால் இது எதுவும் நடக்க போவது இல்லை.

ஏனென்றால் நிலைமை சீரானவுடன், தனி மனிதன் திரையில் காணும் நட்சத்திரங்களை உண்மை என எண்ணி கை தட்டுவதை  தொடங்கி விடுவான். ஊரை தூய்மையாக வைக்க பாடுபட்ட துப்புரவு பணியாளர்களையும், உயிர் காக்க பாடுபட்ட மருத்துவ சமுதாயத்தையும் மறந்து விடுவான்.  ஊரை  காக்க வெயிலிலும், இரவிலும் அரும்பாட்டு பட்ட காவலர்களை விட ஊரில் உள்ள பெரிய பணக்காரனிடம் சென்று உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேள்விக் கணை வீசி புளகாங்கிதம் அடைவான். கடவுள் தனக்குள்ளே என்பதை மறந்து வெளியில் சென்று போலி சாமியார்கள் இடையே தேடி அலைவான். நிலையாமையை மறந்து அடுத்தவனை ஏய்த்து சில பல கோடிகள் சேர்த்து சாமர்த்தியசாலி என்றும் வெற்றியாளன் என்றும் பெயரை சேர்த்து சமுதாயத்தில் தலை நிமிர்த்தி வலம் வருவான். பணம் சேர்க்க வேண்டும் என்று தன்னுடைய உடலை வருத்தி பணம் சேர்த்து பின் மருத்துவரிடம் சென்று அதை பாங்காய் செலவழிப்பான். போதை, மது என்ற எல்லாவற்றிடம் நிம்மதி தேடி அடுத்தவருக்கு உதவி செய்வதில் உள்ள மனநிறைவை அறியமாலேயே வாழ்ந்து மடிவான். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் இருக்க வேண்டும் என்பதை மறந்து  பெரிய விளம்பர பலகைகளிலும், சுவரொட்டிகளிலும்  ஆடம்பரமாய் விளம்பரம் செய்து சுயபெருமை சொல்லித் திரிவான். எல்லா விலங்குகளும் உணவு என்ற எண்ணத்தில் மட்டுமே பார்த்து மேலும் பல புதுப்புது வியாதிகளை உருவாக்கி தன இனம் அழிவதை கண்டு மருளாமல் உலகப் பொருளாதாரம் சரிந்ததால் பங்குகள் மலிவான விலையில்  கிடைக்கிறது என்று எண்ணி பூரிப்பான்.

சரி, அப்பொழுது கொரோனவால் ஒரு மாற்றமும் வரவில்லையா என்று கேட்போருக்கு:

1. வீட்டில் அமர்ந்தே இருந்து வேலை செய்ததால்  ஐ.டி. ஊழியர்களுக்கு உடை அளவு மாறிவிட்டது.
2. வேலை இல்லாமல் அடுத்த வேளை கஞ்சிக்கே வழி இன்றி வீடு திரும்ப முடியாமல் தவித்த ஏழைகளின் உடை அளவும் மாறி விட்டது.
3. வாரம் ஒரு சினிமா, ஹோட்டலில் சாப்பாடு, வாரம் இரண்டு பார்ட்டி என்ற  அனாவசிய செலவுகளை குறைத்ததால் இப்போது கொஞ்சம் பாங்க் அக்கௌண்டில்  பணம் இருக்கிறது. அதையும் நிலைமை சரியானவுடன் உடலை சீரழிக்கும் எல்லாவற்றையும் ஒன்றிற்கு இரண்டு மடங்காக சாப்பிட்டு எப்படியும் டாக்டர் வீட்டிற்கு சென்று பணத்தை செலவழித்து சுகம் பெறுவோம் என்பதை உறுதியாக நம்பலாம்.
4. டாக்டர் வீட்டில் கூட்டம் குறைந்துள்ளது. அத்தியாவசியம் அன்றி வேறு சிலவற்றுக்கு காலமும், நல்ல உணவும், ஓய்வும் மட்டுமே மருந்து என்பது தெரிந்துள்ளது.
5. காற்றின் மாசு அளவு குறைந்துள்ளதால் நல்ல சுத்தமான காற்று இப்பொழுது எல்லாருக்கும் கிடைக்கிறது. ஓசோன் படலம் தன்னை மறுசீரமைத்துக்கொள்ள கொஞ்சம் அவகாசம் கிடைத்துள்ளது. பஞ்சாபில் இருந்து 200  கி.மீ தொலைவிலுள்ள இமயமலை இப்பொழுது தெரிகிறதாம். 
6.  உலகம் முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட்டு குறைந்து அமைதி திரும்பியுள்ளது. நான் பெரியானவனா, நீ பெரியவனா என்ற பலம் காட்டும் பரிட்சையில் போட்டியிட்ட நாடுகள் பலவும் உள்ளூரில் உள்ள மக்கள் தேவைகளை பற்றி சிந்திக்க தொடங்க ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
7.  பல்வேறு மிருகங்கள் தாங்கள் வாழும், இடம், சூழல் போன்றவற்றை மீட்டெடுத்துள்ளன. இத்தாலியில் கரையோரம் தென்படும் டால்பின்கள் ஆகட்டும், மும்பையில் கடற்கரையில் தற்போது படையெடுக்கும் டால்பின்கள் ஆகட்டும் உலகெங்கும் விலங்குகள் தங்கள் வசிப்பிடங்கள் எவை எவை என்பதை மறுபடியும் நிறுவுகின்றன.
8. பெட்ரோல், டீசல் விலை அதலபாதாளத்தை தொட்டிருக்கிறது. ஒரு பொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் போனால் அந்த பொருளின் விலை எவ்வாறு கட்டுப்படுகிறது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அமைகிறது என்பதை இது காட்டுகிறது. அக்ஷய திருத்திகை என்று தங்கத்தை வாங்கி குவிக்கும் அம்மணிகள் கவனிக்க.
9. ஆணவத்தின் உச்சியில் நின்று, மனிதனை உணவு சங்கிலியின் உச்சத்தில் நிறுத்திய அசட்டுத்தனத்தை பார்த்து கரடியும் காரி துப்பியது.அப்படி துப்பிய எச்சிலை துடைக்க பெரிய பேப்பரை மனித குலம் வெட்கிக்  கொண்டே தேடிக் கொண்டிருக்கிறது அதோடு  கரடிகளும்,புலி, சிங்கத்தையும் விலங்கு காட்சி சாலைகளிலும், சர்க்கஸ் போன்ற இடத்தில் அடிமைப்படுத்தி வைக்கும் போது அவ்விலங்குகளுக்கு உண்டாகும் மனா அழுத்தத்தையும், சுதந்திரத்தை பறிக்கும் செயலையும் மனித குலம் கைவிடாவிட்டால் இதை விட பலமாக இயற்க்கை திருப்பி அடிக்கும் என்பதை மனிதர்கள் மறக்காமல் காலத்தின் பக்கத்தில் குறித்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
10. கிரேட்டா தார்ன்பர்க் உள்ளிட்ட சுற்றுசூழல் காப்பாளர்கள் இத்தனை காலம் உலக வெப்பமயமாதலால் உண்டாகும்  அழிவுகளை பற்றி கரடியை கத்தியும் கரடி பாஷை தெரியாது என்று கேளாமல் இருந்த உலக மாந்தர் இப்போது விழித்து கொண்டது போல தோன்றுகிறது. அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகளுக்கு அடியே மனித குலத்துக்கு எமனாய் பலவிதமான உயிர் கொல்லி வைரஸ்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். இந்த அபாய சங்கு ஊதுவதை கேளாமல்  செவிடு போல் நடிக்கும் மனப்பான்மையை கைவிட்டு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.
https://www.express.co.uk/news/world/1269334/arctic-news-coronavirus-outbreak-deadly-disease-ancient-virus-climate-change-ice-caps
11. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கை கட்டமைப்பு. இந்த கட்டமைப்பு இயற்கை என்ற ஆதி கட்டமைப்புக்கு கீழானது என்பதை மனிதர்கள் உணரவேண்டிய தருணம் வந்து விட்டது. இல்லையென்றால் இத்தகைய உயிர் கொல்லி நோய்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டி வரும் என்பது மட்டும் திண்ணம்.
12. உலகின் முன்னணி நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில் இத்தனை உயிர் இழப்புகள் ஆன பின் நல்ல தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை இப்போது உணர்ந்திருப்பார்கள். நல்ல தலைமை தனக்கு வரும் பல்வேறு தகவல்களை சீர் தூக்கி பார்த்து ஆபத்து வருவதற்கு முன் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை  முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். 2005-ல் ஜார்ஜ் புஷ் மற்றும் சில வருடங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கொள்ளை நோய்கள் பற்றி ஆற்றிய உரையினை குறிப்பிட வேண்டும். வெறும் ஓட்டிற்காக மட்டும் அல்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் தலைவர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை மட்டும் அல்ல நம்மை காக்கும் கருவியாகும்.
https://www.youtube.com/watch?v=uSDC5L7qYUc
https://www.youtube.com/watch?v=6Af6b_wyiwI
https://www.sciencemag.org/news/2020/02/trump-s-new-budget-cuts-all-favored-few-science-programs
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
என்று வள்ளுவர் பெருந்தகை கூறியதை இந்நாளில் சீர் தூக்கி பார்க்க வேண்டிய நேரம் இது.
13. இந்தியா ஒரு வல்லரசாக இந்த ஆண்டு மாறும். சீனாவை விட ஒரு பெரிய சக்தியாக வலம் வரும் என்று கம்பு சுழற்றிக் கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. சீனா போன்ற உற்பத்தி முனைவோராக இந்தியா இருக்க வேண்டிய நேரம் இது என்று பிதற்றி கொண்டிருப்போர் உணவுக்காக அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு 6 அடி  இடைவெளியில் நின்று கொண்டு காய்கறி வாங்கி கொண்டிருக்கும் போது தற்சார்பு பொருளாதாரத்தை பற்றி சற்றே சிந்திக்க வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகைக்கு தேவையான மருத்துவம், குடிநீர், உணவு, சுற்றுசூழல் போன்றவற்றில் முதலில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். சந்தை சார்ந்த பொருளாதாரம் என்பது எவ்வளவு அதல பாதாளத்தை நோக்கிய ஒரு பயணம் என்பது இப்போது சந்தையில் பெட்ரோல் டீசலை விற்க முடியாமல் அல்லாடும் ரஷியா, சவுதி போன்ற நாடுகளை கேளுங்கள். விவசாயத்தில் தன்னிறைவு பெற்று ஒரு விவசாய நாடாக மாற வேண்டிய கடமை மட்டுமே இந்தியாவிற்கு உண்டு.
கரோனா மனிதர்களை பெரிய அளவில் மாற்றிவிட்டதா அல்லது மாற்றவில்லையா என்பதை காலம் தன் வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யா காத்திருக்கிறது. மனிதா உனது அடுத்த நடவடிக்கை என்ன?

வியாழன், டிசம்பர் 05, 2019

அமெரிக்க மண்ணில் தமிழ்

அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் (அ.த.க.) முதலாம் ஆண்டு  விழா அரசி நகரமாம் சார்லட் வட கரோலினாவில், நவம்பர்  23,2019 அன்று, கோலாகலமாக நடைபெற்றது. கிட்ட தட்ட 122 வட  அமெரிக்க பள்ளிகள், 10000-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே குடையின் கீழ் இணைக்கும் பெரும் பணியையும், தமிழ் வழிக்  கல்வி அயல் மண்ணில் தழைக்கும் பொருட்டு தமிழில் பாடபுத்தங்கள், தமிழ் பள்ளியை திறம்பட நடத்தவும், நிர்வகிக்கவும் மென்பொருள், ஆசிரியர் பயிற்சி மற்றும் நீண்ட நாள் தான்னார்வல பணி ஆற்றும் ஆசிரியருக்கு விருதுகள் என்று பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்து வரும் தன்னார்வலர் அமைப்பே அ.த.க.

அடை மழை விடாது பெய்த போதிலும் தெற்கு கரோலினா, வாஷிங்டன் டி.சி. ஜாக்சன்வில் புளோரிடா, ஆஸ்டின், டெக்சாஸ், பிலெடெல்பியா, பென்சில்வேனியா என்று பல பகுதிகளில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும், சிறப்பு விருந்தினர்களும் வந்து விழா அரங்கத்தில் குழுமி இருந்தனர். முதலில் அ.த.க பள்ளி மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடினர் .அ.த.க. தலைவர் மணிமேகலை மற்றும் அகரம் தமிழ் பள்ளி ஆசிரியர்கள் திருமதி. விஜி சுரேஷ், திருமதி.ஜெயஸ்ரீ சேகர், கிரீன்ஸ்பரோ ட்ரியாட் பள்ளி ஆசிரியர்   திருமதி.பிரேமா அருள், கொலம்பியா தமிழ் குடில் பள்ளி ஆசிரியர் திருமதி.சிமிலதா ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை  துவக்க, பேராசிரியர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். ட்ரியாட் தமிழ் பள்ளி மாணவர்கள் வழங்கிய "கற்றதும் கேட்டதும்" என்ற பல்சுவை நிகழ்ச்சியனை தொடர்ந்து, அ.த.க-வின் நிர்வாக குழு மற்றும்  எதிர்கால திட்டம் பற்றிய உரையை  அ .த .க. தலைவர் திருமதி. மேகலை எழிலரசன் வழங்கினார். பாட நூற்களை வடிவமைத்தல் - சிக்கல்களும் , சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர். வாசு அரங்கநாதன் அவர்களும், இருமொழி முத்திரையின்வழி அமெரிக்காவில் தமிழ்க்கல்விக்கு ஊக்கம் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர். அனந்தகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் அவர்களும் தமது நெடிய தமிழ் பயணத்தில்  தாம் பெற்ற அனுபவங்களை, கேட்போர் பயன் பெறும் விதமாக எடுத்துரைத்தனர். அ.த.க பள்ளிகளை சார்ந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நெடு நாள் ஆசிரியர், செந்தமிழ் செல்வி, செந்தமிழ் செல்வன் விருதுகள் வழங்கப்பட்டன. அகரம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தனபாலன் சௌந்தரராஜன்(நிலை 4), தர்ஷன் சித்ராவினோதினி நிர்மல் (நிலை  2) ஆகியோர் செந்தமிழ் செல்வன் விருதும், யாழினி முருகன் (நிலை 6), தர்ஷினி ஷங்கர்(நிலை 4) மற்றும் ஸ்ருதிகா பிரதாப்குமார்(நிலை  1) ஆகியோர் செந்தமிழ் செல்வி விருதும், ஆசிரியர் திரு.சுதாகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியை திருமதி. திவ்யா தமிழரசு ஆகியோர் நெடுநாள் ஆசிரியர் விருதும் பெற்றனர்.  காலை நிகழ்ச்சிகளை அனைவரும் ரசிக்கும் விதமாக தொகுத்து அளித்தவர்கள் அகரம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி. உமா ரகுநாத் மற்றும் திருமதி. ரம்யா ரவீந்திரன் ஆவர்.

உணவு இடைவேளைக்கு பின்னர், முதல் நிகழ்ச்சியாக, முன் மழலை நிலை முதல் மூன்றாம் நிலை வரை இந்த வருடம் புதிதாக  தயாரிக்கப்பட்ட  பாட புத்தகங்களை முனைவர் திரு அரசு.செல்லையா அவர்கள் வெளியிட அ.த.க. ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள். அ.த.க.விழா மலரை ட்ரியாட் தமிழ் குடில் பள்ளியை  சார்ந்த ஆசிரியர். ரிஷி ரவீந்திரன், அகரம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி.ரம்யா ரவீந்திரன் மற்றும் ஆசிரியர் திருமதி. கம்சலா ஆகியோர் வெளியிட முனைவர். அரசு செல்லையா அவர்கள் பெற்றுக் கொண்டார். அகரம் தமிழ் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் தர்ஷன் சித்ரவினோதினி நிர்மல் 50 திருக்குறள்களை தங்குதடையின்றி அனைவரின் முன் சொல்லி அசத்தினார். ட்ரியாட் தமிழ் பள்ளி மாணவர்களின் "நாங்க தமிழ் பசங்க" நாடகமும், திருக்குறள் நாடகமும் அனைவரின் பாராட்டை பெற்றது. அப்பள்ளி மாணவர்களின்  பழமை, புதுமை, இளமை/இனிமை  என்ற பாடல் நிகழ்ச்சியும் கேட்டோரை  மெய்மறக்க செய்தது என்றால் மிகையில்லை.

பின்னர் அகரம் தமிழ் பள்ளி மாணவர்கள் வழங்கிய தங்க தமிழ்நாடு நடன நிகழ்ச்சி அரங்கேறியது. நடனம், காணொளி, பாடல் என்று முத்தமிழாய் இனித்தது இந்த நடன நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. பின்னர் பள்ளி பிரதிநிதிகள் அறிமுகம் மற்றும் உரை வழங்கும் நிகழ்ச்சி  நடந்தது. அகரம் தமிழ்ப் பள்ளி சார்பாக ஆசிரியர் திரு.சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, கொலம்பியா தமிழ் குடில் சார்பாக ஆசிரியர் திரு. சிவகுமார் ஷண்முகம், ஜாக்கிசான்வில் தமிழ்ப்  பள்ளி சார்பாக ஆசிரியர் திரு. கதிரவன் பெரியசாமி, பிரெட்ரிக் தமிழ்ப் பள்ளி, மேரிலாந்து தமிழ் அகாடமி சார்பாக  ஆசிரியர் திரு.பாலா குப்புசாமி, ட்ரியாட் தமிழ்க் கல்வி - கிரீன்ஸ்போரோ சார்பாக ஆசிரியர் திரு.முத்தையா சின்னசாமி மற்றும் சௌந்தர் கனகராஜன்,  ட்ரியாட் தமிழ்க் கல்வி வின்ஸ்டன்-சேலம்  சார்பாக ஆசிரியர் திரு.அருள் கார்த்திகேயன் மற்றும் ரிச்மண்ட் தமிழ்ப் பள்ளி சார்பாக ஆசிரியர் திரு.கணேஷ் குமார் அவர்களும் பேசினார்கள்.

தேநீர் இடைவேளைக்கு பின்  கவனகர். கலைச்செழியன் அவர்களின் கவனகம் நிகழ்ச்சி நடந்தது. எண் கவனகம், வண்ண கவனகம், திருக்குறள், மாய கட்டம், பிறந்த தேதி கேட்டு அந்த நாளுக்குரிய கிழமையை சொல்லுதல் ஆகிய அனைத்தையுமே சதுரங்கம் விளையாடி கொண்டே அவர் லாவகமாய் எடுத்துரைத்த விதம் பார்வையாளர்களை மிகுந்த  வியப்பில் ஆழ்த்தியது. குழந்தைகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்வுடன் பங்கேற்று கவனகத்தை எவ்வாறு செய்வது என்று செயல்வழியில்  கற்று பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டல் பெற்றனர். மதிய நிகழ்ச்சிகளை இனிமையாக தொகுத்து வழங்கியவர் அகரம் தமிழ் பள்ளி ஆசிரியர் திருமதி. ஜோதி வெங்கடேஷ் ஆவார். இறுதியாக அ.த.க. துணைத் தலைவர் கரு.மாணிக்கவாசகம் அவர்கள் நன்றியுரை நல்கி விழாவினை முடித்து வைத்தார். விழா மேடை அலங்காரம், புகைப்பட சாவடி(Photo  Booth) குழந்தைகளை கவரும் Face Painting, உணவு ஏற்பாடு, விருந்தினர் உபசாரம் என்று பல தன்னார்வலர்கள் கட்டி இழுத்த தேர் இந்த விழா என்று சொன்னால் மிகை ஆகாது. அடுத்த நாளும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கான்கார்ட் ஹில்டன் ஹோட்டலில் நடந்தது. அமெரிக்க மண்ணில் தமிழ் கல்வி தழைக்க பெற்றோரின் பங்களிப்பு, ஆசிரியரின் பங்களிப்பு, தமிழ் கல்விக்கு அ.த.க.-வின்  பங்களிப்பு என்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலை முனைவர் திரு. வாசு அரங்கநாதன், அ.த.க. இயக்குனர் முனைவர்  திரு. சிவகுமார் ராமச்சந்திரன், திரு. தினகர் கருப்புசாமி மற்றும் அ.த.க. முன்னாள் தலைவர் முனைவர் திரு. அரசு செல்லையா, அ.த.க. துணை தலைவர் திரு. கரு. மாணிக்கவாசகம் அவர்களும் வழிநடத்தினர்.

இந்த விழா நிகழ்வினை கீழ் காணும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் கண்டு மகிழுங்கள்.

காணொளி:

புகைப்படத் தொகுப்பு:

புதன், மே 30, 2018

ஒரு துரோகத்தின் வரலாறு


இந்தியா சுதந்திரம் வாங்கி 75 வருடம் கூட நிறைவடையவில்லை. அஹிம்சை வழி போராட்டம் செய்த போது திருப்பூர் குமரனை ஆங்கிலேய காவல்துறையினர் லத்தியால் அடித்தே கொன்றனர் என்பதை கேட்டிருப்போம். ஜாலியான்வாலாபாக்  சம்பவத்தில் கூட்டத்தினரிடம் துப்பாக்கி சூடு என்ற எச்சரிக்கை கொடுக்காமலேயே அவர்களை ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்பதையும் படித்திருப்போம். ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற பெயரில் நம்முடன் வர்த்தக தொடர்பு கொள்ள வந்த ஆங்கிலேயர் நம்மை ஆண்டவர்களை கொண்டே நம்மை அடிமைப்படுத்தினர் என்பதையும் நாம் நன்கறிவோம். மேலே சொன்ன எந்த விஷயத்தையாவது நீங்கள் மறந்துள்ளீர்களா? அல்லது இந்த சம்பவம் நடந்த போது நான் பிறக்கவே இல்லை என்கிறீர்களா? அப்படியானால் May  22, 2018 அன்று  நடந்த தூத்துக்குடி சம்பவத்தை நினைவு கூர்ந்தால் உங்கள் மறதி தொலைந்து போகும் அல்லது உங்கள் ஞாபகம் கூர் தீட்டப்படும்.

வேதாந்தா என்பது லண்டனை தலைமையிடமாய் கொண்டு செயல்படும் ஒரு வெளிநாட்டு கம்பெனி. அப்படிப்பட்ட வெளி நாட்டு முதலாளிக்காக நம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தி, மக்களை அடித்து துன்புறுத்தி அவர்தம் உரிமையை நசுக்கி அரச பயங்கரவாதத்தை சென்ற ஒரு வாரமாக நிகழ்த்தி காட்டினர்.எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டெரிலைட் ஆலையை எதிர்த்தவர்களை கொன்று குவித்து அதனால் எந்த விதமான குற்ற நடவடிக்கைகளுக்கும் இலக்காமல் இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் அவர்தம் ஏவல்படி செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும்.

நம்முடைய நீதித்துறை இந்த ஆலையை எவ்வாறு பார்க்கிறது? சம்பவம் நடப்பதற்கு முன் தினம் 144 தடை உத்தரவை போடுமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேட்கிறது . மதுரை நீதி மன்றமும் அப்படியே அனுமதி அளிக்கிறது. அதாவது இன்னொரு நாட்டின் நீதித்துறையிடம் ஒரு அயல் நாட்டு ஆலை கட்டுப்பாடு மிகுந்த கிட்டத்தட்ட எமெர்ஜென்சி போன்ற ஒரு அவசர நிலையை பிரகடனப் படுத்த சொல்கிறது என்றால் நாம் இன்னமும் சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்த கேள்விக்கான பதிலும் இந்த வாரம் உங்களுக்கு கிடைத்திருக்கும். நீங்கள் சுதந்திரம் அடைந்த நாட்டில் வாழவில்லை.

பிரிட்டிசாரின்  ஈஸ்ட் இந்தியா கம்பெனி போல வேதாந்தா என்ற வேறொரு கம்பெனி இங்கு சட்டம் போடுகிறது. காலம் வேறாகியிருக்கலாம் காரணம் வேறாகியிருக்கலாம் ஆனால் நம்முடைய எதிரிகள் அன்றும் இன்றும் ஒன்று தான். நம்முடைய அதிகாரிகள், அரசியல்(வியா)வாதிகள் என்று அனைவரும் வழக்கம் போல கையூட்டு, தேர்தல் நிதி பெற்று அப்பாவிகளின் பிணங்களின் மேல் தங்கள் அதிகாரத்தையும் பண பலத்தையும்  நிலைநாட்டி வருகிறார்கள். இப்போது புதிதாக போராட்டத்தை நீர்த்து போக செய்ய ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளார்கள். இப்படி சீல் வைப்பது இது நாலாவது முறை.

துப்பாக்கி சூட்டில் எத்தனை பேர் இறந்தார்கள், யார் இந்த துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது, 22 வருடம் 100 நாட்கள் ஒரு தொடர் போராட்டமாக அஹிம்சை வழியில் நின்ற மக்களை ஒருங்கிணைத்தவர்களை இப்படி அநியாயமாக மிக அருகில் இருந்தே சுட்டு வன்மம் தீர்த்த அதிகாரிகள் யார், ஒரு 17 வயது மாணவியை வாயிலேயே  சுட்டு அவளை அநியாயமாக சாகடித்த கொலை வெறியர்கள் யார், சுதந்திர போராட்டத்திற்கு பின் இத்தனை பெண்களை துப்பாக்கி மூலம் கூட்டுக்கொலை செய்த கொடூரர்கள் யார், மக்களை நடு இரவில் வீடு புகுந்து தாக்கிய மிருகங்கள் யார், நாலு வயது குழந்தையை கூட விட்டு வைக்காமல் லத்தியால் அடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தவர் யார், முன்விரோதம் காரணமாக ஒருவரை இந்த போராட்டத்தில் சுட்டு கொன்று விட்டு , இறந்தவரை காலால் உதைத்து எழுந்திரிடா நடிக்காதே என்று நையாண்டி பேசிய காக்கி சட்டைகள் யார், எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் இன்னும் மிக மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள், எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், இத்தனை சுற்று சூழல் கேட்டினை விளைவித்த வேதாந்தா என்ன விதமான நஷ்ட ஈடு இந்த மக்களுக்கு தரும், ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்திய நிலங்கள் உரியவர்களுக்கு எவ்வாறு மீட்டு தரப்படும், ஆலையின் மூடு விழாவிற்காகவா இத்தனை உயிர்களை பலி ஆக்கியது அரசு அல்லது இந்த தாக்குதல் வேறு எதேனும் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா என்பதை போன்ற பல விதமான கேள்விகளுக்கு வழக்கம் போல மௌனத்தையே பதிலாக்கி விடும் இந்த அரசு. ஏற்கனவே மக்கள் காலா டிரைலர் பார்த்து தூத்துக்குடி விவகாரத்தை மறந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த வாரம் இந்த பிரச்சனையின் சுவடு கூட இல்லாமல் செய்திருப்பார்கள். ஏற்கனவே ஊடகங்கள் மீது அடக்குமுறை, மின்சார துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, இருட்டில்  போலீசார் நடத்திய அதிகார வெறியாட்டம் என்ற பல நிகழ்வுகளுக்கு முன் இது எம்மாத்திரம்.

அன்றும் இன்றும் நமக்கான எதிரிகள் ஒன்று தான். உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் அதிகார வர்க்கம் இன்றும் பல பெயர்களில் உலாவி வருகிறார்கள். என்ன சொல்கிறீர்கள்- பொருளாதார முன்னேற்றம் வேண்டாமா, வேலை வாய்ப்பு வேண்டாமா என்றால் ஆரோக்கியத்தை இழந்து பெறும் முன்னேற்றம் வேண்டாம். சுற்றுசூழலை இழந்து பெறும் முன்னேற்றம் வேண்டாம். சுத்தமான காற்று, நீர், நிலம் இவற்றை இழந்து பெறும் எந்த முன்னேற்றமும் நீடித்து நிற்காது. ஸ்டெரிலைட் போல எத்தனை கம்பெனிகள் இயற்கை சூழலை மாசு படுத்துகிறதே அவற்றை எல்லாம் மூடத்தான் வேண்டுமா என்றால் மக்கள் அனைவரின் விருப்பம் அது தான் என்றால் அவற்றை மூடுவது என்பது அரசாங்கத்தின் கடமையாகும். எண்ணூரில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயை அள்ள வெறும் பக்கெட்டுகளை பயன்படுத்திய இந்த அரசாங்கம், இத்தனை ஆண்டுகள் தூத்துக்குடி பகுதியில் சுற்றுசூழல் மாசு உண்டாக காரணமான ஸ்டெர்லைட்டை ஒரு கேள்வி கூட கேட்காத இந்த அரசாங்கம், கூடங்குள அணு உலை திட்டத்தை அப்பகுதி வாழ் மக்களின் விருப்பத்தை மீறி நடத்தி வரும் இந்த அரசாங்கம், காவிரி நீரை பற்றிய சிந்தனை இல்லாமல் மணல் கொள்ளையை வெற்றிகரமாக நடத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட இந்த அரசாங்கம், அடுத்து மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம், சாகர்மாலா திட்டம் என்று பல திட்டங்களை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும், அப்பகுதி வாழ் மக்களின் விருப்பத்திற்கும் ஏற்ப தான் நடத்தும் என்பதை  எவ்வாறு நம்ப முடியும்.

இந்தியா(தமிழ்நாடு) ஒரு சிறந்த விவசாய நாடாக உலக அரங்கில் கோலோச்ச வேண்டியது . எங்கோ உலகில் ஒரு மூலையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வரும் பன்னாட்டு முதலாளிகளுக்காக நம் நாட்டு வளங்களை கொள்ளை அடித்து, அதற்கு பிரதிபலனாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கொஞ்சம் காசை வீசி எறிந்து, மக்களை கொன்று அவர்தம் உரிமையை நசுக்கி வரும் முன்னேற்றம் தான் முன்னேற்றம் என்றால் அப்படியான முன்னேற்றம் எங்களுக்கு வேண்டாம் என்று தூத்துக்குடி மக்கள் பொட்டில் அறைந்தார் போல பதில் சொல்லி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு பாடம். நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் கேள்வி கேட்க தொடங்க வேண்டும். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு வந்தால் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் நியாயம் பிறக்கும். கண்மூடி, வாய்மூடி, காதை மூடி எது நடந்தால் எனக்கென்ன என்று வாழ்ந்தால் நம் மூச்சு காற்று கூட வேறொருவனுக்கு விற்கப்பட்டு விடும் எனபதே நிஜம்.

கடந்த வார சம்பவங்கள் பற்றிய செய்திகளை படிக்க கீழே சொடுக்கவும்.





திங்கள், மார்ச் 07, 2016

என்ன சமையலோ

எனக்கு தெரிஞ்சு, சமையல் செய்ய தெரியும் ஆண்களில் கைவிட்டு எண்ணக்கூடிய சிலரில் நானும் ஒருவன் என்றார் நண்பர் ஒருவர். உண்மை தான், சிறு வயதில் கேட்ட கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் பெரும்பாலும் சமையல் அறையில் இருப்பதை போன்றோ அல்லது சமையல் செய்வதை போன்றோ தான் சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். ஒரு ஊர்ல பாட்டி ஒருவர் வடை சுட்டுகிட்டு இருந்தாங்க அப்படின்னு ஆரம்பிக்கற கதைகள் , அம்மா பற்றிய குழந்தைகள் பாடல்களில் வரும் உணவை பற்றிய வரிகள் என்று சமையல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கான துறை என்பதே இங்கு மரபாகி விட்டது. ஆயினும் இன்றைய நடைமுறைக்கு மாறாக புராணங்களில் பெண்கள் சமையல் கலையில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் நினைவிற்கு வரவில்லை. பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதி கூட அக்ஷய பாத்திரத்தில் இருந்தே உணவு அளித்ததாக மகாபாரதத்தில் வருகிறது. (அந்த காலத்து "பாஸ்ட் புட்" இது தான் போலிருக்கிறது.)பண்டவர்களில் பீமனே சிறந்த சமையல் நிபுணனாக அறியப்படுகிறான். நளபாகம் என்றாலே நினைவுக்கு வரும் நள மகாராஜாவும் ஒரு ஆண் . சமையல் செய்ய தேவையான அக்னி, அந்த அக்னி எரிய தேவையான வாயு , உணவை விளைவிக்க தேவையான மழையை தரும் இந்திரன் என்று உணவு சம்பந்தப்பட்ட பெருவாரியான கடவுளர் கூட ஆண்களே. பெண்கள் கல்வி உரிமை மறுக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் ஆண்களை சார்ந்திருக்கும் நிலை வந்து வந்த சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பெண்கள் சமையலறையில் தஞ்சம் புகும் நிலை வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்று பெண்கள் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய பல துறைகளில் முத்திரை பதித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெருவாரியாக பெண்கள் மட்டுமே கோலோச்சும் அவரவர் வீட்டு சமையல் அறையில் வேலை செய்வதை இன்றும் ஆண்கள் தகுதிக் குறைவாக நினைப்பதாகவே தோன்றுகிறது. என்னை பொறுத்த வரையில் பெண்கள் ஆண்களுடன் இணைந்து குடும்ப பொருளாதார சுமையில் பங்கேற்கும் போது, ஆண்கள் சமையல் செய்யத் தெரிந்து கொள்வதை பெண்களுடைய அடுக்களை சுமையில் பங்கெடுக்கும் முகமாகவே பார்க்க வேண்டும். அவருக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது, பாவம் பசங்க பசியோட இருப்பாங்க என்று வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின்னும் அடுக்களையில் உழலும் குடும்பத் தலைவிகளை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. உடம்பு சரியில்லை என்றால் கூட தானே சமையல் செய்தாக வேண்டும் என்று கட்டாயத்தில் இருக்கும் இல்லத்தரசிகளில் பலரை உங்களுக்கு தெரிந்து இருக்க கூடும். அப்படிப்பட்டவர் உங்கள் தாயாகவோ அல்லது நெருங்கிய உறவினர்களில் ஒருவராக கூட இருக்கலாம். உணவு என்பது அனைவருக்கும் தேவையான அடிப்படையான ஒன்று. அதை எப்படி செய்வது என்பது கட்டாயம் அறிய வேண்டிய வாழ்வியல் திறனாக ("லைப் ஸ்கில்") மட்டுமே பார்க்கிறேன். இதில் ஆண்கள் தகுதி பாராமல் என்னுடைய குடும்பத்திற்காக செய்கிறேன் என்று ஆவலுடன் பங்கேற்க வேண்டும்.
பி கு : இந்த கட்டுரையை படித்து விட்டு ஆண்கள், "என்ன பெரிய சமையல்" என்று அதில் குதித்து கை,கால், முகம் எல்லாம் சுட்டுக்கொண்டு, கறை படிந்த பாத்திரங்களும், அழுக்கான சமையல் அறையையும் அவரவர் வீட்டம்மாவிற்கு கொடுத்து வேலை சுமையை இன்னும் அதிகப்படுத்துவது போன்றவற்றிற்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது.

ஞாயிறு, மார்ச் 01, 2015

பல நேரங்களில் பல மனிதர்கள்

சமீபத்தில் இந்தியா சென்று வந்தேன். வயதில் சிறிய குழந்தைகளை அழைத்துச் சென்று எப்படித்தான் திரும்ப போகிறோமோ என்று பயந்தது போல குழந்தைகள்  விமான பயணத்தில் பயங்கரமாக படுத்தி எடுத்து விட்டார்கள். பசி அறியாமல் அழுதது, சிறிய இடத்தில நீண்ட நேர அமர்ந்து பிரயாணம் செய்ததில் ஏற்பட்ட சோர்வு கோபம், விமான நிலையத்தில் புரண்டு அழுதது, பயணம் செய்கையில் உயர் வகுப்பிற்கு என்று ஏற்படுத்திய  தடுப்பை மீறி அங்கு ஓடி அங்கிருந்த பயணிகளை எழுப்பியது, விமான நிலையத்தில் கீழே விழுந்த உணவு பதார்த்தங்களை பொறுக்கி உண்டது என்று பண்ணாத சேட்டைகளே  இல்லை. இன்னும் 10 வருடங்கள் கழித்து குழந்தைகள் வளர்ந்த பின் தான் இந்திய பயணம் மேற்கொள்வேன் என்று என்னை சபதம் ஏற்கும் நிலைக்கு தள்ளி விட்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

பயணம் பயணம் பயணம் என்றே தான் கழிந்தது இந்தியாவில் இருந்த நாட்களும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இந்தியா சென்றால் நிலவும் அழகான குளிர் காலம், எப்பொழுதுமே கோடை காலங்களில் சென்று அந்த வெயிலிலும் வியர்வையிலும் வேகும் எனக்கு ஆனந்த மாறுதல் என்றே சொல்லலாம். ரம்யமான அந்த பருவத்திற்கேனும் முடிந்தால் இந்த மாதங்களில் செல்வது நல்லது. ஆனால் இந்த மாதங்களில் கொசு கொஞ்சம் அதிகம் தான். கொசு விரட்டி மற்றும் கொசுவிலிருந்து பாதுகாக்கும் களிம்புகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.

விமான நிலையத்தில் இருந்து எங்களை அழைத்து சென்ற கார் டிரைவர் நன்கு தெரிந்தவர் தான். சென்ற முறை நாங்கள் சென்ற பொழுது பல கோயில்களுக்கு அவருடைய வாடகை காரில் சென்றோம். அப்பொழுது எல்லாம் தனக்கு திருமணத்திற்காக பெண் தேடி கொண்டிருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லை, சொந்தமாக சில வண்டிகள் வைத்து காரோட்டி வருகிறேன் ஆனாலும் அரசாங்க வேலையில் இல்லை என்ற காரணத்தால் திருமணம் தட்டி போகிறது என்று சொல்வார். நாங்கள் சென்ற எல்லா கோவிலுக்கும் வந்து அவரும் பிரார்த்தனை செய்வார். முதிர் கன்னிகள் பற்றி இந்த சமூகம் நிறைய கரிசனப்படுகிறது. ஆனால் முதிர் இளைஞர்கள் படும் துயரம் அதற்கு குறைந்தது அல்ல என்பது புரிந்தது. இந்த முறை விசாரித்த பொழுது அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாம். தன்னை விட பத்திற்கும் மேற்பட்ட வயது குறைந்த அவ்வளவு வசதி இல்லாத பெண்ணை திருமணம் செய்திருந்தார். வயது அதிகமில்லை என்று சொல்லி மறைத்தே திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என்று சொன்னார்.

ஆயிரம் பொய் சொல்லி  கல்யாணம் செய் என்பது பெண்கள் ஆண்கள் என்ற இரு பாலருக்கும் பொருந்தி போகிறது என்று தோன்றியது .இந்த விஷயத்தில் ஆண்கள் நிலை கொஞ்சம் பரவாயில்லை. அதிக பொருள் வசதியில்லாத இடத்திலிருந்து நல்ல பெண் கிடைத்து விடுகிறது. பெண்கள் நிலைமை தான் பரிதாபம். சில நேரங்களில் தன்னை விட மிகவும் அதிக வயது கொண்ட நபரை பொருளாதார நிர்பந்தத்தினால் திருமணம் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். திருமணத்தில் மனப் பொருத்தத்தை விட பண பொருத்தமே கை ஓங்கி நிற்கிறது என்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு என்ன இருபத்தி ஒன்றாயிரம் நூற்றாண்டில் கூட மாறப் போவதில்லை. வயதானவன் ஆனாலும் கணவன் பணக்காரன் என்பதால் அவன் புருஷன் என்ற புது மொழி என்று மாறுமோ தெரியவில்லை .

சென்னை மற்றும் அதன் அருகில் வசிக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் பார்க்க வேண்டும் என்பதால் பரிசு பொருள்கள் நிறைய வாங்கி சென்றிருந்தோம். ஆனாலும் நிறைய பேரை பார்க்க முடியவில்லை. ஏதேதோ காரணங்கள், வேலைகள் என்று பலர் காரணம் காட்ட வெகு சிலரை மட்டுமே சந்திக்க முடிந்தது. இதற்கும் நாங்கள் வேலை நாளை தவிர்த்து விடுமுறை தினம் அன்றே சென்றோம். பொதுவாகவே பெண் தோழிகளை திருமணம் முடிந்த பிறகு சந்திக்கவே இல்லை. முன்பெல்லாம் அப்பாவிடம் அனுமதி வாங்குவது கடினம், இப்பொழுது அப்பா இடத்தில் கணவன். அனுமதி என்பதெல்லாம்  பகல் கனவு என்னும் தோழிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அமெரிக்கா மட்டும் அல்ல இந்தியாவில் வசிக்கும் ஆண்கள் பலர் இன்றும் தங்கள் பள்ளி கல்லூரி நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினருடன் சென்று தன் நண்பனின் வீட்டில் தங்குவது போன்றதெல்லாம் சகஜமாக நடப்பது. ஆனால் எத்தனை ஆண்கள் தங்கள் மனைவியின் தோழி வீட்டிற்கு மனைவியை அழைத்து செல்வார்கள் என்றால் அந்த எண்ணிக்கை வெகு சொற்பமே. அப்படியே அனுமதி தந்தாலும் போயிட்டு 6 மணிக்குள் வந்துவிடு, வந்து சமைக்கணும், இல்லை வந்து  குழந்தையை கவனிக்கணும் என்பது போன்ற விதிகளுக்கு உட்பட்டே  அனுப்படுகின்றனர்.

 உன் தோழி வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறாளா, சரி நான் குழந்தையை பார்த்து கொள்கிறேன், நீ சென்று வா, இல்லை நேரம் ஆகும் என்றால் நானும் துணைக்கு வருகிறேன் எல்லாரும் சென்று சந்திப்போம் என்ற எண்ணம் இன்றைய ஆண்களுக்கு இல்லாதது பெரும் குறையே. ஆண்களே இன்று உங்கள் மனைவி பத்தரை மாற்று தங்கமாக இருக்கிறாள் என்றால் அது வெவ்வேறு பருவத்தில்  அவளுடன் இருந்த ஒரு நல்ல தோழியால் நேர்ந்தது. அவர்களில் எல்லோரையும் சென்று உங்கள் மனைவியை சந்திக்க நீங்கள் அனுமதி தராவிட்டாலும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வசித்து சில வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்தியா வரும் தோழியையாவது/தோழனையாவது  சந்திக்க அனுமதியுங்கள். வாட்ஸ்அப்பில் ஹலோ சொல்வது, பேஸ்புக்கில் லைக் செய்வது மட்டும் நல்ல நட்புக்கு அடையாளம் அல்ல. வேலை இருந்தாலும் உன்னை மறுபடி சந்திக்க எத்தனை நாள் ஆகுமோ,  நீ வா நாளை பார்த்து கொள்கிறேன் அந்த வேலையை என்ற நண்பன் தோழி மற்றும் உறவினர் மட்டுமே மனதில் நின்றார்கள். மற்றவர்களிடம் இருந்து உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பதை  புரிந்து கொண்டேன் .  வாட்ஸ்அப் வரை நட்பு, ஈமெயில் வரை உறவு, ஸ்கைப் வரை சொந்தம், கடைசி வரை யாரோ என்று இந்த காலத்தில் எல்லாரும் தனித் தனி தீவுகளாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. நண்பர்களுக்கு என்று வாங்கி சென்ற இனிப்பு சாக்லேட் வகைகளை அருகில் உள்ள அனாதை இல்லங்களுக்கு வழங்கினோம் என்ற ஆத்ம திருப்தி ஒன்று தான் .

உறவினர் வீட்டு விசேஷம் என்பதால் வெளியூர் பிரயாணம் இந்த முறை தவிர்க்க முடியவில்லை. என்னை பொறுத்த வரை குழந்தைகளை அத்தனை இடங்களுக்கும் பத்திரமாக அழைத்து சென்று வந்ததே பெரிய சாதனை. நாங்கள் வாங்கி சென்ற பரிசு பொருட்கள் தான் நண்பர்களுக்கு பயன்படவில்லை என்றால் மற்றவர் எங்களுக்கு என்று வாங்கிய பொருட்களும் சரியாக வந்து சேரவில்லை. அதுவும் விலை அதிகமான இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த கூடிய பொருட்கள் உரிய நேரத்தில் வராமல் காலம் கடந்து கிடைத்த பொழுது பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமலும் அதே நேரத்தில் உறவினர் மனம் கோணாமல் வேண்டாம் என்று சொல்ல இயலாமலும் "மோப்பக் குழையும் அனிச்சம்' என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப விருந்தினராக சென்ற நான் வாடி நின்றது தனிக் கதை. இக்காலத்தில் அனைவரும் பொருள் படைத்தவரே. எனவே பரிசு போன்றவைகளை உரிய நேரத்தில் தருவது என்பது "நான் உனக்காக வாங்கியது என்பதை கடந்து, நீ என்னுடைய நினைவில் இருந்தாய்(You were in my thoughts) என்ற அளவிலேயே அடையாளப்படுத்தப்படுகிறது.  அவ்வாறு உள்ள போது பரிசை உரித்த நேரத்தில் தர முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால் அடுத்த முறை அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். "காலத்தினால் செய்த உதவி" என்பது இதற்கும் கூட பொருந்தும்.

மிகுந்த பொருள் செலவிற்கும், உடல் சிரமத்திற்கும் இடையே இந்தியா சென்று வந்தாலும் சில பல நெருடல்களுடனையே இந்த பயணம் நிறைவுற்றது. உறவுகளை இத்துணை தூரத்தில் இருந்து பேணுவது என்பது மிகவும் கடினம்.எனினும் கடல் கடந்த நாடுகளில் பலகாலமாக வசிப்பவர்களுக்கு வேறு ஒன்றும் மார்க்க்கம் இல்லை. "என்னுடைய வீட்டிற்கே என்னை விருந்தாளியாய்  அழைத்து வந்தது இந்த வெளி நாட்டு வாழ்க்கை' என்று ட்விட்டரில் ஒரு அன்பர் எழுதியிருந்தார்.  நம் நண்பர் உறவினர்  எண்ணங்களில் நாம் முதன்மையானவராய் இல்லாவிட்டாலும் எங்கேனும் ஒரு ஓரத்திலேனும் இருப்போம் என்ற நம்பிக்கை எல்லா வெளிநாட்டு வாழ் மக்களுக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை.எனினும் அந்த நம்பிக்கையின் ஆணிவேரை அசைப்பதாகவே இருந்தது இந்த பயணம் என்றால் அது மிகை இல்லை.



சனி, ஜூன் 28, 2014

கதம்ப மாலை - 6

எனக்கு ஒரு லைக் போடுங்க

காலை எழுந்தவுடன் பேஸ்புக்கில் கைகுலுக்கி ,வாட்ஸாப்பில் பழகி, ட்விட்டரில் கதைத்து, இன்ஸ்டாக்ராமில் புகைப்படம் பரிமாறி என்று வாழ்க்கை எவ்வளவு வேகமாய் மாறிவருகிறது. முன்பு நான் எழுதிய ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. "இன்றைய நண்பர்களின் எண்ணிக்கை எனது புகைப்படத்திற்கு விழுந்த "லைக்"கில் இருந்து அறியப்படுகிறது' என்று. நாம் எழுதிய அல்லது பகிர்ந்த ஒரு விஷயம் எந்தளவிற்கு நமது நண்பர்களின் கவனத்தை ஈர்த்தது , எத்தனை பேர் அதை விரும்பினார்கள் என்பதில் தான் எத்தனை ஆர்வம் கொள்கிறோம். என்னுடைய புகைபடத்திற்கு லைக் போடலை, இந்த கமெண்ட் சரியாய் இல்லை போன்ற விஷயங்களுக்கு எல்லாம் நட்பை முறித்தவர்கள் ஏராளம். மற்றவர்களின் ஒப்புதல் தான் நமக்கு எல்லாமே என்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துவது மட்டும் அன்றி நம்மை பற்றிய மதிப்பீடை நாமே உயர்த்திக் கொள்வது  போன்ற ஒரு சூழலும் பேஸ்புக் வந்த பின் இன்று ஏற்பட்டு உள்ளது. இது போன்ற போலியான மாயை, உண்மையான எந்த ஒரு விமர்சனத்தையும் தாங்கும் அளவிற்கு யாரையும் பக்குவப்படுத்த வில்லை என்பதே  நிதர்சனமான உண்மை.




ஸ்ரீ திவ்யா 

தோழியிடம் உனது குழந்தை அதிகமாக சிரிப்பதில்லை என்று சாதரணமாக சொன்னது கூட நீ எப்படி அவ்வாறு கூறலாம் என்று சண்டையில் வந்து முடிவடைகிறது. நான் தினமும் நடைப்பயிற்சி செல்லும் வழியில் என்னை வம்பிழுக்கும் சிறுமியை பற்றி அவளுடைய தாய்  தந்தையரிடம் - உங்கள் குழந்தையை கண்டியுங்கள் என்று சொல்ல தயக்கமாய் இருக்கிறது. காரணம் பிறர் சொல்லும் உண்மையை காது கொடுத்து கேட்கும் அளவிற்கு பக்குவம் உள்ளவர்களா அவர்கள் என்ற எண்ணம் தான். போலியான வெளித் தோற்றத்தை வைத்து அடுத்தவரை மதிக்கவும், அடுத்தவர் சொல்லும் உண்மையான விமர்சனத்திற்கு வம்படியாக தப்பர்த்தம் கற்பிக்கும் இன்றைய சூழலில் நேர்மையான விமர்சனத்தை ஏற்கும் பக்குவத்தை நமது இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்லாது  அடுத்த சந்ததியினருக்கு இல்லை என்பது நிச்சயம் கவலைக்கு உரியது.

இன்று நிறைய டீன் ஏஜ் பருவத்தினர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் புகைப்படங்களுக்கு விழும் லைக்கை உண்மை என்று நம்பி தற்பெருமையும் பெருமிதமும் கொள்வது எவ்வளவு ஆபத்தானது. இந்த குழந்தைகள் தன்னை போல அதிகம் லைக் விழும் பெண்களிடமோ அல்லது ஆண்களிடமோ நட்பு கொள்வர். தம்மை போல் அல்லாதவரை கிண்டல் செய்யவும், தனிமை படுத்தவும் இவர்களால் முடியும்.இது எத்தகைய சமுதாயத்தை உருவாக்குமோ என்று நினைத்தால் பதைபதைக்கிறது.
உண்மையில் ஒருவரின் நிறை குறைகளை பகுத்து கூறும் நேர்மையான குரலை அந்நியப்படுத்தும் வேலையை தான் பலர் செய்கிறார்கள்.



அனுஷ்கா

அலுவகத்தில் உயரதிகாரி முதல் கூட பணிபுரியும் ஊழியர் வரை யாரும் இத்தகைய மனப்போக்கிற்கு விதி விலக்கல்ல. வீட்டிலும் கணவனோ மனைவியோ இதே போன்ற மன நிலையுடன் தான் இருக்கிறார்கள். எல்லாருக்கும் என்னை பிடிக்குது, ஆனா உனக்கு என்னை பத்தி குறை சொல்வதே வேலை என்று மனைவியோ கணவனோ கோபம் கொள்வது எத்தனை வீட்டில் நடக்கிறது. நமது உள்ளுக்குள் இருக்கும் "நார்சிசிஸ்ட்டை" திருப்திப்படுத்தத் தான்  எத்தனை எத்தனை வழிகள். அடுத்த முறை அந்த "லைக்" பட்டனை கடனே என்றே அழுத்தும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள். இன்றைய சமுதாயத்திற்கு தேவை உண்மை என்ற கசப்பு மருந்து சில குவளைகளும் ஒரு அன்-லைக் பட்டனும் தான்.

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

கதம்ப மாலை - 5


உதிர்ந்த மனிதனும் தொலைந்த மனிதமும்


சமீபத்தில் கேள்விப் பட்ட உண்மை சம்பவம். தூரத்து உறவினர் ஒருவருக்கு நேர்ந்தது. கிட்டத்தட்ட 70 அல்லது 75 வயது மதிக்கத்தக்க அந்த உறவினர் மனைவின் மறைவுக்கு பின் சொந்த கிராமத்திலேயே தங்கி இருந்தார். அவருக்கு 8 குழந்தைகள். 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய டவுனில் ஒரு மகளும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய ஊரில் சில மகன்களும் மற்றும் சிலர் சென்னை போன்ற பெருநகரங்களிலும் சிலரும் வசிக்கின்றனர். சம்பவ தினத்தன்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த உறவினர் நெஞ்சு வலி காரணமாக இறந்துவிட்டார். உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர் உடல் கிட்டத்தட்ட 3 நாட்கள் வரை கண்டுபிடிக்கப் படவில்லை.3 நாட்கள் கழித்து அழுகிய உடலில் இருந்து கிளம்பிய புழுக்கள் வீடெங்கும் நெளிய ஆரம்பித்த பின்னரே யாரோ கண்டுபிடித்து ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் அவர் உடலுக்கு ஈமச் சடங்குகள் நடத்தப்பட இயலாமலேயே எரிவூட்டப்பட்டது. இத்தனை மகன்கள் மற்றும் மகள்கள் இருந்தும், கிராமத்தில் அவ்வளவு மனிதர்கள் இருந்தும், தொலைபேசி வசதிகள் இருந்தும் 3 நாட்கள் வரை யாரும் அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் கவலை கொள்ளவில்லை என்று நினைக்கும் போதே தூக்கம் வர மறுக்கிறது. நகரத்தில் அடுத்த பிளாட்டில் வசிப்பவர் யார் என்பது தெரியாமல் போனது ஆச்சரியம் இல்லை. இந்தியாவின் இதயங்கள் எனப்படும் கிராமங்களே அவ்வாறு மாறி வருவது மனதை பிசைகிறது. கிராமத்தில் அதுவும் 70 வருட காலமாக  அந்த உறவினர் வசித்து வந்த ஊரில் யாரும் எட்டிக்கூட பார்க்காத அளவிற்கு சக மனிதன் மேல் யாருக்கும் அக்கறை இல்லை. யாருக்காகவும் உலகம் நிற்பதில்லை. நம் காலத்திற்கு பின் நாம் இருந்ததை யாரும் நினைவு கொள்ளப்போவதில்லை. நாம் இல்லாத போது நமக்காக யாரும் கண்ணீர் விட்டு கதறி அழவேண்டும் என்பதும் கூட முக்கியம் அல்ல. ஆனாலும் தனியாக வசிக்கும் முதியவரோ முதியவளோ எப்படி இருக்கிறார் என்பதை விசாரிக்க கூடவா ஒருவருக்கும் மனமில்லை? இத்தனைக்கும் உறவினர் மிகவும் நல்ல மனிதர். கடைசி காலத்தை தன்னுடைய சொந்த வீட்டிலே கழிக்க வேண்டும், மகனோ/மகளோ யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர். நேரில் வர முடியாவிட்டாலும் கொஞ்சம் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வந்து சொல்லுங்கள் என்று மகன், மகள், மருமகன், மருமகள், பேரப் பிள்ளைகள் என யாரேனும் ஒருவர் பக்கத்து வீட்டாரை தொலைபேசியில் கூப்பிட்டாவது கேட்டிருக்கலாம். உறவினர் பணம் படைத்தவர் அல்ல. ஒரு வேளை வசதியானவர் என்றால் மகன்களோ/மகள்களோ வந்து உறவு கொண்டாடி இருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று வள்ளுவன் சொன்னது உண்மையிலும் உண்மை. மூன்று நாட்கள் சக மனிதர்களுக்காக காத்திருந்தது அந்த முதியவர் மட்டும் அல்ல, நகரத்து தெருக்களில் அனாதையாய் கைவிடப்பட்டு கடைக்கோடி கிராமத்தில் தஞ்சம் புகுந்திருந்த  மனிதமும் தான்.


மாயா மாயா எல்லாம் மாயா



மாயாவதி மேல் உள்ள ஊழல் புகார் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வழக்கு ஜோடிக்க பட்டது என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.அரசியல் எதிரிகளை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசு, எதிர்ப்பாளர்களை அடக்குவதற்காக வழக்குகளை ஏவுவதும் பின்னர் அவர்கள் ஒத்துழைப்பிற்காக வழக்கை தள்ளுபடி செய்வதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா போன்றோர் ஏற்கனவே வெளியே வந்துவிட்டனர். காங்கிரசுக்கு குடைச்சல் கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி இன்னும் உள்ளே இருக்கிறார். நாளை அவர் காங்கிரசுடன் இணக்கம் கொண்டால் அவரும் வெளியில் வந்துவிடுவார். உபி  முழுவதும் மாயாவதி தனது சிலைகளை நிறுவிய செலவே 700 கோடியை தாண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டு தேர்தல் மனு தாக்கல் செய்யும் போது தனக்கு 111 கோடி சொத்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். இவ்வளவு பணத்தையும் அவர் ஊழல் மூலமாகவே சேர்த்திருப்பார் என்பதை நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லும். இந்த அழகில் போதிய ஆதாரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல் தன்னிச்சையான அதிகாரம் இல்லாத சிபிஐயை வழக்கை ஜோடித்து என்று குறை கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று. மிகப் பெரிய ஊழல் வழக்கான ஸ்பெக்ட்ரம் வழக்கே ஒன்றும் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. மாயாவதியின் வழக்கு நல்லபடியாக முடிந்து தீர்ப்பு கூறும் நன்னாள் இந்த நூற்றாண்டில் வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ததால் இப்போதைக்கு மக்களின் வரிப்பணம் மிச்சம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. மறுபடியும் காங்கிரசு தவிர வேறு ஒரு அரசு மத்தியில் பதவி ஏற்றால் வழக்கு தூசி தட்டப்படும் வாய்ப்பு இருந்தாலும் இதை விட பெரிய ஊழல் வழக்குகள் வந்து மாயாவதி வழக்கை பின்னுக்கு தள்ளி விடும். எனவே இந்த வழக்கு மறுபடியும் உயிர் பெறுவதற்கான சாத்தியகூறுகள் மிகவும் குறைவு. மக்களும் நீதி என்பது எட்டாக்கனி என்பதை உணர்ந்து 'இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலையிலே உள்ளனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரதமர் மற்றும் ஜனாதிபதி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத தனியான சுய அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும். இவர்களுக்கு அரசியல் சக்திகளின் அச்சுறுத்தல் இல்லாமலும் எந்த விதமான குறிக்கீடும் இல்லாமலும் சுதந்திரமாக செயலாற்றும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அந்த நிலை வரும் வரை நீதி தேவதை கண்களில் மட்டும் அல்ல கைகளிலும் கறுப்புத்துணி கட்டப்பட்டே இருக்கும்.(எழுதி கொஞ்சம் நாளானாலும் இந்த ஊழல் செய்தி மட்டும் எப்போதும் புதிது போலவே இருப்பதற்காக கண்  துஞ்சாமல் சேவை ஆற்றும் நமது அரசியல்வாதிகள் வாழ்க) 

ஆரிருள் உய்த்து விடும் 


இன்று காலையில் நடந்த சம்பவம் இது. புதிய பள்ளியில் சேருவதற்கான ஓரியன்ட்டேஷன்  தினம் என்பதால் மகளை அழைத்துக் கொண்டு காலையில் அவளுடைய பள்ளி சென்றிருந்தேன். அனைவருக்கும் பார்க்கிங்  இட வசதி இல்லாததால் காரை எங்கே வைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு பின் வந்த ஒருவர் பார்க்கிங் அல்லாத ஒரு இடத்தில்  காரை நிறுத்துவதை கண்டு நானும் அவ்வாறே நிறுத்தினேன். அப்பொழுது சரியாக பார்க் செய்திருந்த பெண்மணி ஒருவர் தனது காரை எடுப்பதற்கு எனது காரை எடுக்க சொல்லவே எனது காரை எடுத்து பின் அந்த பெண்மணியின் கார் நிறுத்தி இருந்த இடத்தில் எனது காரை நிறுத்த எத்தனிக்கும் வேளையில் பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கிய அந்த நபர் என்னுடைய காரை மறித்து முன்னே நின்று கொண்டார். ஒன்றும் புரியாமல் என்ன விஷயம் என்று யோசிக்கும் போது கோபமாக ஏதோ கையை ஆட்டி பேச ஆரம்பித்தார். நானோ வழியில் என் கார் நின்று இருந்ததால் அந்த மனிதன் கோபமாக பேசி முடித்து நகரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதாயிற்று. பிறகு காரை நிறுத்தி இறங்கியவுடன் நீ ஏன் என்னுடைய இடத்தில் நிறுத்தினாய் என்று என்னுடன் சண்டை இட ஆரம்பித்தார். குழந்தைகள் முன் சண்டையிடுவது என்பது எனக்கு பிடிக்காத விஷயம். ஆனாலும் வலுச்சண்டைக்கு வரும் அடாவடிக்காரனுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இருக்குமா என்ன? நான் என் குழந்தைகளுடன் இருப்பதால் உன்னை சும்மா விடுகிறேன் என்று எனக்கு மிரட்டல் வேறு. நான் வரிசையில் முதலில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண்மணி காரை எடுத்தவுடன் வைக்கும் வகையில் எனது கார் இருந்ததாலும் நான் செய்தது சரியே என்றாலும் காலையிலேயே அனாவசிய சண்டையின் மூலம் எனது நாளை மட்டும் அல்லாமல் தனது நாளையும் சண்டை சச்சரவுடன்  தொடங்கி வைத்த அந்த மனிதரை என்னவென்று சொல்வது. சாதாரணமாக பேசி தீர்க்கக் கூடிய ஒரு விஷயத்தை மலையாக்கி அதனால் என்னையும் வம்புக்கு இழுத்து பின் எனது குழந்தையின் முதல் நாளை ஒரு கஷ்டமான நினைவாக்கிய அந்த மனிதர் ஒரு நிமிடம் பொறுமை கொண்டிருந்தால் எல்லாருக்கும் இந்த நாள் நல்ல நாளாகி இருக்கும் . அதிவேக(ராஷ்) டிரைவிங் செய்வது, சிக்னல் விழுந்த மறு நொடி கார் கிளம்பவில்லை என்றால் ஓட்டுனரை  அவமதிக்கும் வகையில் சைகைகள் செய்வது, பின்னிருந்து ஹாரன் அடித்து அவசரத்தை வெளிப்படுத்துவது என்று பொறுமை என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும்  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது இந்த நிகழ்வு. காலை வேளையில் அவசரமாக எங்காவது செல்ல வேண்டும் என்றால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விடுவது நமக்கு மட்டும் அன்றி நம்முடன் சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் நாம் செய்யும் உபகாரம். வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கும் அனைவரும் விருப்பு வெறுப்பு சோகம் சந்தோஷம் வெற்றி தோல்வி என்ற எல்லா உணர்வுகளையும் கொண்ட மனிதர்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.  தன்னுடைய குழந்தையுடன் படிக்கப் போகும் இன்னொரு குழந்தையின் பெற்றோருடன் சண்டை இடுகிறோம் என்பதை பற்றியாவது அந்த மனிதர் யோசித்தாரா தெரியவில்லை. பொறுமையுடன் இருப்பது, பிறரிடம் கோபம் கொள்வதை தவிர்ப்பது, விட்டுக் கொடுப்பது  எல்லாம் பணம் காசு கொடுக்காமல்  பிறருக்கு நாம் இலவசமாகவும் சுலபமாகவும்  செய்ய கூடிய உதவி. அடங்காமை மட்டும் அல்ல கோபம்கூட ஒருவனை ஆரிருள் வைத்து விடும்.