சனி, ஆகஸ்ட் 01, 2020

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 3




Helgafellsveit-இல் நாங்கள்  தங்கியிருந்த பண்ணை வீட்டில் இருந்து கிளம்பவே மனம் இல்லாமல் கிளம்பினோம். எங்கள் ஐஸ்லாந்து பயணத்தில் மனதை விட்டு நீங்காத சிறந்த தங்குமிடம் என்னவென்றால் இந்த இடத்தையே குறிப்பிடுவோம். எனினும், அடுத்து என்ன இடம், அது எப்படி இருக்கும் என்றெல்லாம் எதிர் பார்ப்பு இருந்தது உண்மை. நீங்கள் எந்த வித இயற்கை காட்சிகளை உங்கள் மனதிற்குள் கற்பனை செய்து வைத்துள்ளீர்களோ அதை விட பன்மடங்கு அழகான காட்சி கிடைப்பது 100 சதவிகிதம் உறுதி. என்ன எத்தனை எத்தனை அழகான இடங்களோ அத்துணை ஆள் அரவமற்ற பகுதியில் இருக்கும். கொஞ்சம் முயற்சி, நிறைய தைரியம் மட்டுமே வேண்டும்.  


Stykkisholmur என்பது நாங்கள் தங்கியிருந்த Helgafellsveit- டில் இடத்தில் இருந்து கிட்ட தட்ட அரை மணி நேர பயண தூரத்தில் இருந்தது. Stykkisholmur  என்பது மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஒரு துறைமுகம். அங்கிருந்து ஒரு படகில் அதாவது Ferry என்று அழைக்கப்படும் பெரிய படகு - இது மனிதர்களை மட்டுமன்றி  கார், வேன், போன்ற பெரிய வண்டிகளையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கூட்டிச் செல்லும். கோடை காலம் என்பதால் கார் மற்றும் நாமும் செல்வதற்கு கண்டிப்பாக முன்பதிவு அவசியம். இல்லாவிட்டால், காருக்கு இடம் இருக்காது. இந்த படகின் பெயர் "Baldur Ferry" என்பதாகும். இந்த படகு Stykkisholmur-ரில் இருந்து Flatey தீவு வழியாக வடக்கு ஐஸ்லாந்தில் உள்ள Brjansleuker என்ற இடத்திற்கு செல்கிறது.  Flatey  தீவு  என்பது ஐரோப்பிய பறவைகளை பார்க்க ஒரு சிறந்த இடம். நிறைய ஐரோப்பிய பறவைகள் கோடை காலத்தில் வந்து இனப்பெருக்கம் செய்யும்.இந்த பறவை இனங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். Stykkisholmur -ரில் இருந்து படகில்  கிட்ட தட்ட இரண்டரை மணி நேர பயணம் Brjansleuker -க்கு . சுற்றிலும் பனி சூழப்பட்ட மலைகள். மேகங்கள் வந்து தங்கும்  மலை முகடுகள், வெயிலையும் தாண்டி முகத்தை அறையும் சுத்தமான குளிர் காற்று போன்றவை பயணத்தின் தனி சிறப்புகள். படகின் உள்ள சிறிய உணவகம், கழிவறை மற்றும் வை-பை வசதி உண்டு. ஆனால் அழகான இயற்கை காட்சிகள் இருக்கும் போது பசியோ, செல்பேசியோ தேவைப்படுவதில்லை. குளிரை தாங்கும் உடைகள் அணிந்திருந்தாலும் படகின் மேலே அமர்ந்து இயற்கை காட்சிகளை தொடர்ச்சியாக பார்க்க குளிரின் காரணமாக முடியவில்லை. சிறிது நேரம் படகின் உள்ளும் சிறிது நேரம் படகின் மேல்தளத்தில் என்று மாறி மாறியே இருக்க நேர்ந்தது.

Flatey  தீவில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி பின் கிட்டதட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பயணித்து Brjansleuker-ஐ அடைந்தோம். கீழே இறங்கியவுடன் நல்ல பசி வயிற்றை கிள்ளவே மதிய உணவை முடித்து  கொண்டு "Latrabjarg Cliffs"  எனப்படும் பறவைகள் தங்கும் பாறைகளை பார்க்க புறப்பட்டோம். செங்குத்தான மலைகள்  இடையே இருக்கும் நீண்ட கடலை Fjord  என்று அழைப்பார்கள். நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் இந்த Fjord நிறைய உண்டு. பார்ப்பதற்கு மட்டும் அல்ல இந்த Fjord-டை காண பயணம் செய்வதும் கொஞ்சம் கடினமே. பெரும்பாலும் மலைகள் வழியாக பயணித்து அம்மலையின் உச்சிலிருந்து கீழே பார்த்தால் அழகான Fjords -ஐ  காணலாம். ஆனால் மலை மேல் பயணம் என்பதால் மிகுந்த கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும். ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம். பள்ளத்தின் முடிவில் ஆழமான கடல். எனவே வாகனத்தை மெதுவாக மட்டுமே  இயக்க முடியும். மேற்கு ஐஸ்லாந்து செல்பவர்கள் கண்டிப்பாக இந்த Fjords -சை  கண்டிப்பாக பார்த்து வரவும். 

Latrabjarg Cliffs -க்கு கிட்டதட்ட 3 மணி நேர பயணம் பாதி இடங்களில் fog எனப்படும் மூடு பனி வேறு. கொஞ்சம் பயணம் செய்வது கொஞ்சம் நேரம்  நிறுத்தி இயற்கை காட்சிகளை பார்த்து புகைப்படம் எடுப்பது என்று சென்றதால் சற்று அதிக நேரம் பிடித்தது. எனினும் இந்த பாதை பனிக்காலத்தில் மூடப்பட்டு விடும் என்பதால் இது கோடைகாலத்தில் மட்டுமே சென்று பார்க்க கூடிய  இடம். 




ஐரோப்பாவிலேயே அதிக பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்யும் ஒரு பெரிய மலை என்று Latrabjarg -ஐ குறிக்கின்றனர். ஐரோப்பாவில் கடைசி கிழக்கு முனை என்றும் Latrabjarg கிற்கு பெருமை உண்டு. 14 கி.மீ. பரப்பளவு கொண்டு கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பபின்ஸ் (Puffins) எனப்படும் பறவைகளை இங்கு அதிக அளவு காணலாம். அது மட்டும் அல்லாமல் Seal  எனப்படும் கடல் நாய்களையும் இங்கே காண முடியும். காற்று இங்கு அதிக வேகத்தில் வீசுவதால் நடப்பதற்கு என்று உள்ள பாதைகளில் மட்டுமே நடந்து பாதுகாப்பாக சென்று வருதல் வேண்டும். சிலர் புகைப்படம் எடுக்கிறேன் என்று மலையோரத்தில் சென்று எடுத்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்பு என்பது கவனத்தில் கொள்ள  வேண்டிய இடம் இது என்பதில் வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.








திரும்ப வரும் போது அப்படியே ஆரஞ்சு நிற மண் கொண்ட Raudasandur கடற்கரைக்கு செல்லலாம் என்று கிளம்பினோம். ஆனால் நிறைய மூடு பனி இருந்ததால் கொஞ்சம் எச்சரிக்கையுடனே செல்ல நேர்ந்தது. அத்தனை தூரம் சென்றாலும் பீச்சுக்கு செல்வது எவ்வாறு என்பது தெரியவில்லை. சரி, என்று தூரத்தில் இருந்தே புகைப்படம் எடுத்து திரும்பினோம். கீழே புகைப்படம் உங்கள் பார்வைக்கு.


கிட்ட தட்ட திரும்பும் போது மதியம் 3 மணிக்கு மேல் ஆகி விட்டது. எனவே அந்த நேரத்தில் ஒரு உணவிடத்தை தேடி உணவருந்தி பின்னர் அங்கிருந்து நாங்கள் அன்று இரவு தங்குவதற்கு என்று தேர்ந்தெடுத்த மற்றோரு Fjord உள்ள Patreksfjordur என்ற இடத்திற்கு சென்றோம். ஒரு சிறிய படுக்கை அறை மற்றும் குளியல் அறை மற்றும் சிறிய சமையலறை கொண்ட அந்த வீட்டிற்கு நாங்கள் செல்லும் போது மாலை 6 மணிக்கு மேல் ஆகி விட்டது. எனவே வெளியிலேயே உணவருந்தலாம் என்று வெளியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தி அந்த நாளை இனிமையாக முடித்துக் கொண்டோம்.

Patrekfjordur-இல் இருந்து அடுத்த நாள் காலையில் கிளம்பி நாங்கள் Isafjordur என்ற வடக்கு ஐஸ்லாந்தில் உள்ள  ஊருக்கு சென்றோம். Fjord நிறைய உள்ள இந்த இடங்களில் போகும் வழியே இருந்த இயற்கை காட்சிகள் அடடா அழகு.

வானரங்கள்  கனிகொடுத்து  மந்தியொடு  கொஞ்சும் !
..........மந்திசிந்து  கனிகளுக்கு  வான்கவிகள்  கெஞ்சும் !
கானவர்கள் விழிஎறிந்து  வானவரை  அழைப்பர் !
..........கமனசித்தர்  வந்துவந்து  காயசித்தி  விளைப்பர் !

தேன்அருவித்  திரைஎழும்பி  வானின்வழி  ஒழுகும் !
..........செங்கதிரோன்  பரிக்காலும்  தேர்க்காலும்  வழுகும் !
கூனல்இளம்  பிறைமுடித்த  வேணி  அலங்காரர் !
..........குற்றாலத்  திரிகூடமலை  எங்கள்  மலையே !!


திரிகூட ராசப்பா கவிராயர் எழுதிய இந்த குற்றால குறவஞ்சி பாடல் எனக்கு அந்த இயற்கை காட்சிகளை பார்க்கும் போது ஞாபகம் வந்தது வெளிநாடுகளில் உள்ள பல இடங்கள் இத்தனை எழிலுடனும் இயற்கை வனப்புடனும் பாதுகாக்கப் படும் போது இந்தியாவில் இந்த நிலை வரும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் கூடியது. அழகிய நதி வளத்தையும், இயற்கை சிறப்பையும் பெற்றுள்ள நம்மால் ஏன் நமது சுற்றுப்புறத்தையும் நமது இயற்கை வளத்தையும் சரியாக பாதுகாக்க முடியவில்லை. "பணத்தை சரியாக ATM -ல் போடும் நாம், குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள் என்று எழுதி வைத்தும் அதனை பின்பற்றவில்லை என்றால் அது யார் மீது குற்றம்" என்ற கேள்வி எழாமல் போகவில்லை. 



Patreksfjordur-இல் இருந்து Isafjordur  செல்லும் வழியில் உள்ளது Dynjandi என்னும் அருவி உள்ளது. Bridal Veil  falls என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒரு வகையான அருவி. மேலை நாடுகளில் மணப்பெண்ணின் தலையில் அணியும் மெல்லிய வலை போன்ற சன்னமான துணியை ஒத்து அழகாக படர்ந்து விரிந்து வழியும் தண்ணீரை காண கண்கோடி வேண்டும். கிட்டத்தட்ட ஆறு சிற்றறிவிகள் அதன் மேல் பிரதான அருவி என்று மொத்தம் ஏழு அருவிகள். பிரதான அருவி மேலே 30 மீட்டர் அகலம் கொண்டதாகும் அடியில் 60 மீட்டர் அகலம் கொண்டதாகவும் உள்ளது. 20 நிமிடம் மேலே நடந்து இந்த பிரதான அருவியை பார்க்க முடியும். வழியில் உள்ள சிற்றறிவிகளை பார்ப்பதற்கென்று அமரும் வகையில் நீண்ட இருக்கைகளும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள பெரிய அருவியான இதற்கு "Jewel Of West  Fjords' என்ற சிறப்பு உண்டு. 





   

Dynjandi அருவியை அடுத்து நாங்கள் அன்றைய தினமும் அடுத்த இரண்டு தினங்களும் தங்க தேர்ந்தெடுத்திருந்த இடம் Isafjordur  என்ற ஊராகும். Isa என்றால் ஐஸ்(பனிக்கட்டி) என்று பொருள். பனிப்பாறைகளால் உருவாக்கப் பட்ட Fjord  என்பதே இந்த ஊருக்கான காரணப் பெயர்.  Isafjordur என்பதில் உள்ள ஊர் என்பது ஒரு நகரம் என்ற தமிழ் பொருள் அளித்தது  கொஞ்சம் வியப்பளித்தது. ஐஸ்லாந்திக் என்ற மொழியின் மூலம் ஆங்கிலம் என்பதனால்   ஆங்கிலத்திலிருந்து  வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஊர் என்பது தமிழ் சொல் என்று பிராமி கல்வெட்டிலும் குறிக்க பெற்றிருக்கிறது. எனவே ஊர் என்பது தமிழில் இருந்து வந்த சொல்லே என்று தோன்றுகிறது.

அழகான பனி சூழ் மலைகள், உடலை தழுவும் குளிர் காற்று, நிறைய கடைகள், Fjord -ஐ சுற்றி நிறைய வீடுகள், பெற்றோர் துணையின்றி வீதியில், பூங்காக்களில் ஓடி ஆடும் குழந்தைகள் என்று என் மனதை கவர்ந்த விஷயங்கள் பல. வட அமெரிக்காவில் குழந்தைகள் பெற்றோர்கள்/பெரியோர்கள் துணை இன்றி  தனியே வெளியே விளையாடுவது என்பது மிகவும் அரிது. எனவே ஐஸ்லாந்தில் தனி மனித பாதுகாப்பு என்பதை பொறுத்த வரையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. 





Isafjordur செல்லும் வழியெங்கும் அருமையான இயற்கை காட்சிகள். சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு மேலே இணைத்திருக்கிறேன். Isafjordar-ஐ அடைய Vestfirdir  என்ற சுரங்க வழி பாதியில் பயணிக்க நேர்ந்தது. நாங்கள் ஏற்கனவே ஐரோப்பாவில் பயணம் செய்த போது நிறைய சுரங்க வழி பாதையில் சென்றதால் இது எங்களுக்கு புதிய அனுபவம் இல்லை என்றாலும் கிட்டதட்ட 6 கீ.மீ நீளமான இந்த சுரங்க வழி பாதை அதன் நீளம் காரணமாக எங்களுக்கு ஆச்சரிய அனுபவம் என்றே சொல்லலாம். 
 
Isafjordur-ல் ஒரு அருமையான பெரிய வீட்டீல் தங்க நேர்ந்தது. மூன்று படுக்கை அறைகள், பெரிய ஹால், சமையலறை மற்றும் பெரிய டைனிங் ரூம் உடைய அழகான வீடு. அந்த வீடு Fjord-டை பார்த்தவாறு இருந்தது இன்னும் அழகு. எந்த ஜன்னலில் இருந்து பார்த்தாலும் தண்ணீர் மற்றும் அதை சுற்றி மலைத்தொடர்களை காணுவது ஆனந்த அனுபவமாக இருந்தது. Fjord-ஐ பார்த்தவாறே உறங்க செல்வதும் பின்பு விழித்தவுடன் திரும்பவும் Fjord -ஐ பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதும் மனதிற்கு மிகவும் மகிழ்வு தருவதாக இருந்தது. 

அடுத்த நாள் Isafjordur-ல் உள்ள உயரமான இடமான Bolafjall என்ற இடத்தை பார்க்க சென்றோம். அதற்கு முன் காரில் பெட்ரோல் நிரப்ப காரை நிறுத்தினோம். கிட்டத்தட்ட அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இலவசமாக கார் கழுவும் வசதி இருப்பதால் எங்கே நிறுத்தினாலும் இதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. நிறைய சரளை கற்கள் நிறைந்த பாதைகளில் செல்வதால் கார் நிரம்ப தூசி படிந்து அழுக்கு ஆகும் என்பது நிச்சயம். 

 
Bolungarvik என்ற ஊரிலிருந்து Bolafjall -ஐ அடைய முடியும்., அந்த இடத்திலிருந்து பார்த்தால் Isafjordur மற்றும் fjord முழுவதையும் பார்க்க முடியும். ஒரு பறவை பார்வை என்று கொள்ளலாம்.  ஜூன் மாதத்தில் இருந்தும் ஆகஸ்ட் வரை மட்டுமே இந்த பாதையில் கார்கள் செல்ல அனுமதி உண்டு. ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம் என்று கிட்டத்தட்ட 2000 அடி  உயரத்தில் அமைந்துள்ளது  இந்த Bolafjall. மேலே சென்றவுடன் அங்கே நிற்க முடியாத அளவிற்கு காற்று பிச்சு உதறுகிறது. குளிர் காற்று என்றாலும் கடமையே கண்ணாக அரை மணி நேரம் நேரம் அளவிற்கு நின்று அந்த இடத்தை ரசித்து விட்டு பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே திரும்பினோம். 





 


தூரத்தில் பனி படர்ந்த மலைகள், நீலத்தை பிரதிபலிக்கும் கடலும், வானமும் என்று ஒரு ஏகாந்த அனுபவமாக இருந்தது. இந்த அழகான காட்சிகளின் வண்ண புகைப்படம் மேலே.  

பின்னர் திரும்ப Isafjordur திரும்ப வந்து அங்கிருந்த பூங்காவில் சிறிது நேரம் செலவிட்டோம். 


அந்த பூங்காவில் கடலில் உயிர் நீத்த மாலுமிகளுக்காக வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  Isafjordur -இல் அதுவே கடைசி இரவு என்பதால் அதன் பின் நாங்கள் தங்கி இருந்த அறைக்கு திரும்பி இரவு உணவை முடித்து விட்டு சீக்கிரமே உறங்கினோம்.

அடுத்த நாள் Isafjordur-இல் இருந்து கிளம்பி வழியில் Sudavik  என்ற இடத்தில் இருந்த Arctic  Fox  Museum என்ற இடத்தில வளர்க்கப்பட்ட சிறிய நரியை பார்த்தோம். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே உங்கள் பார்வைக்கு. 



அடுத்து நாங்கள் எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

செல்லும் வழியில் படம் பிடித்த சில அழகிய புகைப்படங்கள் கீழே 



 

ஐஸ்லாந்து பயண அனுபவம் - பாகம் 4 இங்கே 

5 கருத்துகள்:

  1. ரம்யா பாதி வாசித்துவிட்டேன் ஹையோ ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது உங்கள் பயண விவரமும் மிகவும் நன்றாக சிறப்பாக எழுதுகிறீர்கள்.

    //வெளிநாடுகளில் உள்ள பல இடங்கள் இத்தனை எழிலுடனும் இயற்கை வனப்புடனும் பாதுகாக்கப் படும் போது இந்தியாவில் இந்த நிலை வரும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் கூடியது. அழகிய நதி வளத்தையும், இயற்கை சிறப்பையும் பெற்றுள்ள நம்மால் ஏன் நமது சுற்றுப்புறத்தையும் நமது இயற்கை வளத்தையும் சரியாக பாதுகாக்க முடியவில்லை. "பணத்தை சரியாக ATM -ல் போடும் நாம், குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள் என்று எழுதி வைத்தும் அதனை பின்பற்றவில்லை என்றால் அது யார் மீது குற்றம்" என்ற கேள்வி எழாமல் போகவில்லை. //

    அதே அதே., நான் அடிக்கடி நினைப்பது.

    மீதியையும் வாசித்து விடுகிறென். இடம் மிக மிக அழகாக இருக்கிறது. குறித்தும் கொண்டுவிட்டேன் மகனிடம் சொல்லிவிட்டேன் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று.!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அத்தனையும் அழகு. ரம்மியமாக இருக்கிறது!!!

    ஐஸ்லேண்டை ஒரு ரவுன்ட் அடித்தால் (அதுதான் நீங்கள் முதலிலேயே மேப் போட்டு சொல்லியிருந்தீங்க...ரவுண்டா ஹைவே..) ஆங்காங்கே உள்ள இடங்களை உள்ளே சென்று....பார்த்துவிடலாம் இல்லையா

    அருமையான இடம். இயற்கை இயற்கைதான். பெயர்கள்தான் வாயில் நுழையே மாட்டேங்குது!!! உங்கள் பதிவு நிச்சயமாக நல்ல வழிகாட்டல். அதுவும் தமிழில்.

    மிக்க நன்றி ரம்யா. அடுத்த பகுதிகளுக்கும் காத்திருக்கிறோம்

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, தங்கள் கருத்திற்கு நன்றி. நீங்கள் இந்த பதிவை படித்து படித்து பயன் பெறுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது. பெயர்கள் கடினமாக இருந்தாலும் இடங்கள் அருமை. பலாவை போல, பார்க்க கரடு முரடாக இருந்தாலும் உள்ளே இனிய சுளைகள் இருக்குமே அது போல. ரிங் ரோட்டில் பயணம் செய்தால் முழு ஐஸ்லாந்தை பார்த்து விடலாம். கொஞ்சம் இன்னும் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்றால் வெஸ்ட் ஐஸ்லாந்தை பயண திட்டத்தில் கொள்வது நல்லது. நிச்சயம் 15 நாட்கள் பிளான் செய்வது நல்லது. கொஞ்சம் செலவு ஆனாலும் முழுமையாக பார்த்த திருப்தி நிச்சயம்.

      நீக்கு
  3. அட்டகாசமாக இருக்கிறது இந்தப் பகுதிகள். படங்கள், காணொளி வழி நானும் பார்த்து ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார்.நிறைய காணொளிகள் இருக்கின்றன. எனினும் பிளாகரில் குறிப்பிட்ட நீளத்தை தாண்டி அப்லோட் செய்ய இயலவில்லை. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு