புதன், ஆகஸ்ட் 04, 2021

காந்தி உலக மையம் - பட்டிமன்ற பேச்சுப் போட்டி

காந்தி வேர்ல்ட் பௌன்டேஷன் முன்னதாக சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்களுக்கான போட்டியை அறிவித்திருந்தது. சென்ற வருடம் இந்தப் போட்டியில் பங்கேற்று பேசிய காணொளி கீழே உள்ளது. 

https://pachaimannu.blogspot.com/2020/12/blog-post_11.html

இந்தத் தகுதிச் சுற்றில் பங்கேற்றவர்களில் 30 பேர் அடுத்த சுற்றில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர்.



(என்னுடைய பேச்சு 3:06:15 என்ற நேரத்தில் ஆரம்பிக்கிறது. முடிவுகள் 6:19:50 மணித் துளியில் இருந்து காணலாம்)



இயக்குனரும்/நடிகருமான திரு.ரமேஷ் கண்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த இரண்டாவது சுற்றில் நானும் பங்கேற்றேன். அடுத்த சுற்றிற்கு செல்லும் 12 பேரில் ஒருவராக இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். இதற்கு அடுத்த அரையிறுதிச் சுற்று சென்ற வாரம் நடந்தது. இந்த சுற்றில் அறிவியலாளர் மற்றும் சந்திராயன் திட்ட இயக்குனருமான திரு.மயில்சாமி அண்ணாமலை அவர்களின் முன்னிலையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சுற்றில் மூவர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 





(என்னுடைய பேச்சு 1:18:30 என்ற நேரத்தில் தொடங்குகிறது)

அந்த மூவரில் என் பெயரில்லை என்றாலும்  இத்தகைய பெரிய ஆளுமைகளின் முன் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பேருவகை கொண்டேன்.  இந்த நிகழ்வின் காணொளி மேலே உள்ளது.

பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனுபவம் உண்டு. படித்துச் சென்றது மறந்து போய் ஒன்றும் பேசாமல் திரும்பிய அனுபவமும் உண்டு, நிறைய பேசி கைதட்டல் பெற்று அது சில ஆசிரியர்களுக்கு பிடிக்காமல் சென்று அவர்கள் என்னை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்த அனுபவமும் உண்டு. நன்றாக பேசுவாள் இவள் என்று ஏதோ ஒரு எண்ணத்தில் என்னை மேடையேற்றிய ஆசிரியர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனினும் என்னுடைய எந்த உயரத்திற்கும் என்னுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்றி வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது என்பது மட்டும் உறுதி. 

இறுதி கட்டப்  போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்பது கொஞ்சம் மகிழ்ச்சியை குறைத்தாலும் சென்ற வரை லாபம் என்று இருந்தேன். அப்போது  மதுரையில் நடக்கும் இறுதிப் போட்டியில் அய்யா சாலமன் பாப்பையா, கவிதா ஜவகர் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்கும் விழாவில் நேரடியாக பேச முடியாவிட்டாலும் கணினி வழி பேச முடியுமா என்று கடைசி நேரத்தில் அழைப்பு வந்தது. பலரும் நேரடியாக பேச நானும் இன்னொரு சிங்கப்பூர் போட்டியாளர் மட்டும் கணினி வரை பேச, இறுதியாக நானும் அந்த சிங்கப்பூர் அன்பரும் மூன்றாவது இடத்தை பிடித்தோம். இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு என்னுடைய பரிசை பெற முடியாமல் போனது வருத்தம் அளித்தாலும் நான் கனவிலும் எதிர்பாராத ஆளுமைகள் முன் ஒரு சில மணித்துளிகள் பேசும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. வாழ்க்கை ஏதோ சில ஆச்சரியங்களை ஆங்காங்கே புதைத்து வைக்கிறது. சில உன்னதமான தருணங்களில் அத்தகைய புதையல்களை நாம் பார்க்க நேரும் போது மனமகிழ்ச்சியும் நிறைவும் வருகிறது. இன்னும் இது போன்ற ஆச்சரியங்களை காண ஆவலுடன் பயணிக்கிறேன்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக