ஜூலை 2021 வல்லினச் சிறகுகள் இதழில் இடம் பெற்ற முகமூடிகள் என்ற தலைப்பிலான என்னுடைய கவிதை கீழே.
ஜூலை 2021 வல்லினச் சிறகுகள் இதழினை வாசிக்க கீழே உள்ள இணைப்பை உபயோகிக்கலாம்.
தலைப்பு:முகமூடிகள்
வசீகர முகம் வெண்பனி நிறம்
ஞானம், வற்றா
செல்வம்
ஏதும் கைவரா யென்னை
சுற்றமோ கொண்டாடவில்லை
இருந்தும் சிரித்தேன் நடித்தேன்
சொந்த இயல்பை மறைத்தேன்
நல்ல பெயரை எடுக்க
முதன்முறை முகமூடி அணிந்தேன்
தோழமை கொண்ட பலரும்
நெஞ்சினில் சுமந்த சிலரும்
செய்த தவறுகள் பிழைகள்
பொறுத்தேன் பலநாள் சகித்தேன்
நல்ல நண்பனாய் நடிக்க
புதிய அரிதாரம் தரித்தேன்
சமூகம் இட்ட வரைமுறை
அரசியல் வகுத்த நடைமுறை
சாதி மதபேத அடக்குமுறை
மெலிந்தோரை முடக்கிய வன்முறை
குமுறிய உள்ளம் அடக்கி
நடைமுறை வழக்கம் என்றே
சமுதாய முகமூடி அணிந்தேன்
கடமைக்காக சில நாள்
காரியம் ஆக சிலநாள்
பலவகை முகமூடி அணிந்தே
சொந்த முகமதை தொலைத்தேன்
சுயமுகம் தேடும் ஒருவனை
செல்லும் வழியினில் கண்டால்
இரக்கம் கொண்டே அவனிடம்
இன்முகம் காட்டிச் செல்வீர்
வலிகள் பலவும் கடக்க
வழிகள் பலவும் திறக்க
தன்னைத் தோற்ற தருமன்
வழி வந்தவன் அவனே
இழந்தவன் தேடல் முடியும்
சுயமுகம் ஒருநாள் சேரும்
தேடல் இல்லா பலரின்
உண்மை முகம் என்னாகும்
வாழ்க்கை நாடக மேடை
பாத்திரம் நாம் அதில் என்றால்
விடைபெறும் நேர மாவது
வேடம் கலைத்தல் முறையே
கல்லறையில் தூங்கும் ஒருவன்
உண்மையில் தான் மறைந்தானா
இல்லை நிஜத்தின் சாயை தானா
மனத்தின்
உண்மை அகத்தில்
மறையாது ஒளிர்விடும் என்றால்
முகமூடி அணியா மனிதன்
ஒருநாள் சாத்தியமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக