வெள்ளி, ஆகஸ்ட் 27, 2021

என் சமையலறையில் ஒரு அந்நியன்


அமெரிக்காவில் கோடை விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகள் தொடங்கி விட்டன. காலையில் அவசர அவசரமாக எழுந்து குழந்தைகளைக் கிளப்பி, அவர்களுக்கு காலை உணவு கொடுத்து, அதன் பிறகு மதிய  சாப்பாடு கட்டிக் கொடுத்து, அவர்கள் அதை சாப்பிடாமல் திரும்ப எடுத்து வந்தால் தூக்கிப் போடவும் முடியாமல், மீண்டும் நாம் அதைச் சாப்பிடவும் முடியாமல் இருக்கும் சங்கடங்களைச் சமாளித்து, தினமும் காலை உணவு என்ன, மதிய உணவு என்ன, இரவு உணவு என்ன என்று முடிவு செய்து அதைக் காலையிலோ அல்லது மாலையிலோ பரபரப்பாக செய்யும் வழக்கம் தொடங்கி விட்டது. இந்த  உணவைத் தாண்டிய வாழ்க்கை உண்டா என சமையல் அறையில் உழலும் போது ஒரு கேள்வியும் அடிக்கடி வந்து வந்து போகும். ஒரு குடும்பத்திற்கான உணவுத் தேவைகளை பெண்களே பார்த்து செய்ய வேண்டிய ஒரு நிலை, அவர்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தாலும்  இருக்கிறது என்பதே யதார்த்தம். இந்நிலையில்  பெண்கள் பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தாலும் அதை அவர்கள் செய்யக் கூடிய வகையில் இன்றைய சமுதாய நிலை உள்ளதா என்பது கேள்விக்குறியே. எத்தனை அத்தைகளும், பெரியம்மாக்களும், சித்திகளும் இப்படியே மனித சமூகத்திற்கான முன்னேற்றத்திற்கு பணியை செய்ய முடியாமல் சமையல் அறையிலேயே தங்கள் வாழ்வை வாழ்ந்து முடித்திருப்பார்கள் என்பது கடவுள் மட்டுமே அறிந்த ஒன்று. ஒரு வேளை பெண்கள் அந்தப் பணியினை மேற்கொண்டு செய்யாவிட்டாலும் வேறு ஒரு பணிப்பெண்ணோ அல்லது வேலையாளோ அந்தப் சுமையினை ஏற்க வேண்டி வரும். எனவே ஒரு மனிதனின் சாதனை என்பது அந்த தனி மனிதரின் சாதனையாக மட்டும் போய்விடாது. கண்காணாது பின்னின்று உழைத்த பலரின் கூட்டுச் சாதனையாகவே அதனை நோக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாமல் பின் நின்று உழைக்கும் அவர்களின் பணியினாலேயே அந்த தனி மனிதர் வெற்றி அடைகிறார் என்ற உண்மையை ஒத்துக் கொள்ளும் பக்குவம் எல்லாம் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது வேறு விஷயம்.

என்னுடைய இந்தப் பதிவின் நோக்கம் அந்த பின்னணியில் இருக்கும் குழுவினைப் பற்றியது. எங்கள் வீட்டில் சகோதர சகோதரிகள் நாங்கள் மொத்தம் மூன்று பேர். ஒவ்வொருவரையும் எந்தக் குறையும் இன்றி வளர்த்து ஆளாக்கியது என் அன்னையின் சிறந்த சாதனை எனக் கொள்வேன். அவருடைய பொறுமையும், உழைப்பும், கரிசனமும் இன்றைக்கு எனக்கே உண்டா என்பதில் எனக்கு மிகுந்த சந்தேகம் உண்டு. அதுவும் பார்த்துப் பார்த்து குழந்தைகளுக்கு இது நல்லது, கீரை சாப்பிட வேண்டும், இந்த சத்து மாவு செய்ய வேண்டும் என்று சமையலுக்கான எல்லாவற்றையும் தேடித் தேடி செய்வதில் ஆகட்டும், அந்த வருடத்திற்கான வடகம், வத்தல் என தயார் செய்வதில் ஆகட்டும் அத்தனை பொறுமையுடன் செய்வார். நன்கு படித்தவர், ஆனால் வேலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் வேலைக்கு செல்லாமல் சமையல், குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது, பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், சிறு கட்டுரை எழுதி அனுப்புவது என்று தன்னுடைய வட்டத்தை சுருக்கிக் கொண்டார். இன்றும் விவசாய வேலை, வீட்டு வேலை என்று வேலை அவருக்கு குறைந்தபாடில்லை என்பது வேறு விஷயம்.




அடுத்து நினைவுக்கு வருபவர் ராதா என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் அவர்கள். கொஞ்சம் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். எந்த வேலை என்றாலும் செய்வார். மாவு மில்லுக்கு போவது, ரேஷன் கடைக்கு செல்வது, ஒரு நாள் சமையல் செய்யவில்லை என்றால் எங்கள் ஒவ்வொருவரின் பள்ளிகளுக்கும் வெளியில் இருந்து உணவு வாங்கி குறித்த நேரத்தில் அளிப்பது அல்லது வீட்டில் சமைத்த உணவைக் கொண்டு வந்து வந்து பள்ளியில் அளித்து விட்டு காத்திருந்து அந்த பாத்திரங்களை நாங்கள் உண்டு முடித்த பின் வாங்கிக் கொண்டு செல்வது என்று அவரின் வேலைகள் பலவிதமாக இருக்கும். சில நாட்கள் உடம்பு சரி இல்லை என்றால் குழந்தைகளை டாக்டர் வீடு வரை ஆட்டோவிலோ அல்லது சைக்கிளிலோ கூட அவர் அழைத்து வருவதுண்டு. அல்லது பள்ளிக்கு ரிக்க்ஷா வராத நாட்களில் அவரே சைக்கிளில் அழைத்துச் சென்று வீடு வரை கொண்டு வந்து சேர்ப்பார்.



சந்திரா அம்மாவை எப்பொழுதில் இருந்து தெரியும் என்பது நினைவில் இல்லை. ஒடிசலான தேகம், ஐந்தடி உயரம் இருக்கும், மாநிறத்திற்கும் கருப்பு நிறத்திற்கும் இடைப்பட்ட நிறம், கழுத்திலும் காதிலும் எதுவும் அணிந்திருக்க மாட்டார். விரும்பி இல்லை அவருடைய பொருளாதார நிலை அவ்வாறு இருக்க பாவம் அவர் என்ன செய்வார். காலில் சில நாட்கள் செருப்பு இருக்கும். சில நாட்கள் அதுவும் இருக்காது. கையில் சில ரப்பர் வளையல்கள்  அணிந்து பார்த்ததாக ஒரு  ஞாபகம். காலையில் வேகமாக சமையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது என்பதால் ஒரு எட்டாம் வகுப்பில் இருந்து சந்திரா அம்மாவிடம் சாப்பாடு கொடுத்து அனுப்புவார்கள். கிட்டத்தட்ட நான் பள்ளி முடித்த பின்பும் அவர் என் சகோதரிக்கு உணவு கொண்டு சென்று கொடுத்ததாக ஞாபகம். ஒரு பெரிய கூடை நிறைய, பல வீடுகளில் இருந்து பெறப்பட்ட மதிய உணவுப் பைகளை அடுக்கிக் கொண்டு, ஒரு நீண்ட துண்டை சும்மாடாக இருத்தி, அதன் மேல் கூடையை வைத்து அதைத் தலையில் சுமத்தவாறே தினமும் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரம் உச்சி வெயிலில் நடந்து வருவார். மதிய உணவிற்கான மணி அடித்தவுடன் ஓட்டமும் நடைமாக பள்ளியின் முன் வாசல் வழியாகவோ அல்லது பின்வாசல் வழியாகவோ உள் நுழைந்து மைதானத்தில் இருக்கும் ஒரு பெரிய மரத்தின் கீழ் அந்தப் பையை இறக்கி யார் யாருடைய பை என்று சரியாகப் பார்த்து அந்த அந்த குழந்தைக்கு சரியாக அளிப்பார். அம்மாவின் சூடான உணவு, பசித்த அந்த நேரத்தில் கொண்டு வந்து தரும் சந்திரா அம்மா ஒரு தேவதையாகத் தெரிவார். அந்த உணவின் சூடும், ஆறுதலும் இப்பொழுதும் நெஞ்சுக்குள் வந்து போகிறது. கொஞ்ச நேரம் ஓய்வெடுப்போமே என்று இல்லாமல் சின்னக் குழந்தைகளுக்கு அந்த உணவினை பிரித்து வைத்து அவர்களுக்கு ஊட்டவும் செய்வார். குழந்தைகள் அனைவருக்கும் சந்திரா அம்மா என்றால் கொள்ளைப் பிரியம்.  வியர்வை வழியும் முகத்துடனும், வெயிலில் களைத்து வரும் சந்திரா அம்மா இன்னும் நினைவில் நிற்கிறார். பல நாட்கள் அவர் செருப்பின்றி கூட வெயிலில் நடந்து வருவதைப் பார்த்ததாக நினைவிருக்கிறது. ஒரு நாள் கூட அவர் குழந்தைகளிடம் கோபத்தையோ, களைப்பையோ காட்டியதாக நினைவில் இல்லை. அத்தனை சாப்பாட்டையும் கீழே போடாமல் நடந்தே எடுத்து வந்து, சாப்பாட்டுப் பையை மாற்றி கொடுக்காமல் சரியாகக் கொடுத்து, உணவு எடுத்துக் கொண்டு வந்ததோடு வேலை முடிந்து விட்டது என்று இருக்காமல் சின்னக் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு, ஒரு ரிக்க்ஷாவில் வந்து செல்லக் கூட வசதி இல்லாமல் மறுபடியும் நடந்து சென்று அந்த உணவு டப்பாக்களை வீட்டில் சேர்ப்பித்து விட்டே செல்வார். அத்தனை வருடங்களும் அதைத் தவறாமல் செய்ததும், ஒரு நாள் கூட முடியவில்லை என்று படுத்ததாக கூட நினைவிற்கு வரவில்லை. இப்பொழுது அவர் இருக்கிறாரோ இல்லையோ என்பது தெரியவில்லை. எனினும் அவரைப் பற்றிய நினைவு மதிய உணவை தயார் செய்யும் போது  தோன்றியதே இந்த பதிவை எழுதுவதற்கான முக்கிய தூண்டுகோல்.

"It takes a village to raise a child" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனை வளர்த்தெடுக்க ஒரு ஊரே சேர்ந்து பாடுபடவேண்டும் என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம். ஒரு குழந்தை பிறந்து வளர இந்த சமுதாயம் பெரிய வழியிலும் சிறிய வழியிலும் உதவுகிறது. ஆனால் சிறிய வழியிலும் பெரிதாக உதவ முடியும் என்று காட்டியவர்கள் இவர்கள். இத்தகைய மனிதர்களிடமும் அன்று கருணை, நேரம் தவறாமை, செய்யும் வேலையை திறம்பட முடிக்கும் பாங்கு என்று பலதும் இருந்தது. சமுதாயம் நல்ல மனிதர்களால் நிரம்பி உள்ளது  என்பதை தங்கள் செய்கைகளால் காட்டியவர்கள் இவர்கள். இன்று சமையல் அறையில் ஒரு தாயாகவும், உணவை தயார் செய்து சரியாக சேர்க்கும் போது சந்திரா அம்மாவாகவும், குழந்தையை பள்ளியில் இருந்து கூட்டிச் செல்ல வரிசையில் நிற்கும் போது ராதாவாகவும், அவர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் போது என்னுடைய தந்தையாகவும் அத்தனை வேடங்கள் போடும் போது அயர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. "ஒரு காலத்தில் குழந்தைகள் வளர்ந்தார்கள். இன்று நீங்கள் குழந்தைகளை வளர்க்கிறீர்கள்" என்பார் என் தாயார். அவர் சொல்வது உண்மை தான். சமுதாயம் செய்யும் பணியினை தனி ஒருவராக அல்லது கணவன் மனைவி இருவராக செய்யும் போது எளிதில் அயர்ச்சி தோன்றுகிறது. பள்ளி திறந்து ஒரு வாரம் ஓடி விட்டது இன்னும் மிச்சம் இருக்கும் நாற்பது சொச்ச வாரங்கள் கடினமாகவே இருக்கும்.  என்ன தான் அந்நியனாய் மாறி அத்தனை பாத்திரங்களாக வாழ்ந்தாலும். ஒவ்வொரு வருடமும் பள்ளி நாட்களை "போ போ போடா" என்று சதா ஒரு திரைப்படத்தில் சொல்வது போல போ போ என்று தள்ளத்தான் வேண்டி இருக்கிறது. ஆனைக்கு மட்டும் அல்ல வெளிநாடுகளில் வசிக்கும் அந்நியன் வேடம் இட்ட தாய்மார்களுக்கும் அவ்வப்போது அடி சறுக்குகிறது.  


3 கருத்துகள்:

  1. "It takes a village to raise a child" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனை வளர்த்தெடுக்க ஒரு ஊரே சேர்ந்து பாடுபடவேண்டும் என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம். ஒரு குழந்தை பிறந்து வளர இந்த சமுதாயம் பெரிய வழியிலும் சிறிய வழியிலும் உதவுகிறது.//

    உண்மை உண்மை...இது நானும் மகனும் அடிக்கடி சொல்லும் வரிகள். ஒருவர் இந்தச் சமுதாயத்தில் ஒருவர் "அந்நியராக" (மனம் காரணமாக) மாறுவதற்குக் காரணங்களில் இச்சமுதாயம் குடும்பம் இரண்டும் காரணமே. பொதுவாகச் சொல்வது ஒருவன் ரௌடியாகிறான், கொலையாளி ஆகிறான், அல்லது பயங்கரவாதி ஆகிறான் என்றால் வன்முறை அவன் உடம்பிலேயே இருக்கு என்று இல்லை....அவர்கள் வளரும், வளர்க்கப்படும் விதத்தில்தான் இருக்கிறது...இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது ரம்யா.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. "It takes a village to raise a child" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனை வளர்த்தெடுக்க ஒரு ஊரே சேர்ந்து பாடுபடவேண்டும் என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம். ஒரு குழந்தை பிறந்து வளர இந்த சமுதாயம் பெரிய வழியிலும் சிறிய வழியிலும் உதவுகிறது.//

    உண்மை உண்மை...இது நானும் மகனும் அடிக்கடி சொல்லும் வரிகள். ஒருவர் இந்தச் சமுதாயத்தில் ஒருவர் "அந்நியராக" (மனம் காரணமாக) மாறுவதற்குக் காரணங்களில் இச்சமுதாயம் குடும்பம் இரண்டும் காரணமே. பொதுவாகச் சொல்வது ஒருவன் ரௌடியாகிறான், கொலையாளி ஆகிறான், அல்லது பயங்கரவாதி ஆகிறான் என்றால் வன்முறை அவன் உடம்பிலேயே இருக்கு என்று இல்லை....அவர்கள் வளரும், வளர்க்கப்படும் விதத்தில்தான் இருக்கிறது...இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது ரம்யா.

    கீதா

    பதிலளிநீக்கு