ஞாயிறு, டிசம்பர் 07, 2025

நடை மறந்த நதி - மகாகவி ஈரோடு தமிழன்பன்




மழை மண்ணில் விழுந்த பின் அது என்னவாகிறது? உணவாகிறது, மணமாகிறது, மருந்தாகிறது, பார்க்கும் எல்லாமுமாகிறது. மழையைப் போல வெகு சிலருக்கு சொற்கள் அமைந்து விடுகிறது. துவளும் போது ஊக்கமும், மகிழ்ச்சியின் போது இனிமையும், குழப்பத்தில் புது வழிகாட்டுதலுமாகிறது. அத்தகைய வீரிய சொற்களுக்கு சொந்தக்காரர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். ஓயாத அலை போல தமிழ்ச் சொல்லாலே கவி நெய்து தமிழன்னைக்கு மகுடம் சூட்டியவர். தன்னுடைய உலராத வார்த்தைகளால் வறண்ட உலகின் மனசாட்சியை ஈரப்படுத்தியவர். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்று தமிழின் புது வேகப் பாய்ச்சலுக்கு வித்திட்டவர். பாரதி, பாரதிதாசன், பெரியார், பாப்லோ நெருடா, வால்ட் விட்மன் எனப் பல ஆளுமைகளைப் பார்த்து, படித்து பாடலாக்கி, புதுக் கவிதைக்கு புத்துணர்வு ஊட்டியவர். எத்தனை உயரத்தில் இருந்தாலும் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் எளிய மனம் படைத்தவர்.



உலகனாய் இருக்கும் நான்
நிச்சயமாய் இந்தியன்
அதைவிடச் சத்தியமாய்த்
தமிழன்
தமிழனாக இருப்பதற்குத்
தடைபோட்டால்
இந்தியனாகத் தொடர்வது பற்றிச்
சிந்திக்க வேண்டிவரும்
என்று தமிழினத்தின் உணர்வைப் பேசி நமது உரிமை வானத்தை இன்னும் கொஞ்சம் விரிவடையச் செய்த வானம்பாடி.
முள்ளையும்
மலரையும்
வெளிப்படையாகவே
காட்டிக் கொண்டிருக்கிறது
ரோஜா;
நாம்?
என்று மனித மனங்களை போகிற போக்கில் தோலுரித்துக் காட்டியவர்.

துவண்டு கிடந்த மனிதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் தேவை என்றால்

பத்தாவது முறை விழுந்தவனை
முத்தமிட்டு சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா?
என்ற அவர் பாடலைச் சுட்டலாம். அடுத்தவரின் வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்.

படித்துப் படித்து - நீயே
புத்தகமாகி விடு
புத்தகமான பின்னும்
படித்துக் கொண்டிரு

என்று ஒரு ஆசிரியர் எப்படி தன் மாணவனுக்கு எடுத்துச் சொல்வாரோ அப்படி அன்புடன் அறிவுறுத்துவார்.

அவர் தொடாத உயரங்கள் இல்லை, எழுதாத பொருண்மை இல்லை, எண்ணிலடங்கா கவிதைகளை, ஆழ்ந்த ஜென் தத்துவங்களை, சிந்தனைச் சிதறல்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார். 2022 பேரவை விழாவில் அவர் தலைமையில் கவிதை வாசித்தது, என்னுடைய மகள் எழுதிய புத்தகத்தை அவர் வெளியிட்டது, அவருடைய பெயரில் அளிக்கப்படும் தமிழன்பன் 80 விருதினை பெற்றது, வல்லினச் சிறகுகள் இதழ்/உலகப் பெண் கவிஞர் பேரவைப் பணிகளின் போது ஐயாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது என்று பல்வேறு நினைவுகள் விரிகிறது.
சடலத்தைக் கைப்பற்றி
என்
சரித்திரத்தின் கடைசிப் பக்கத்தை
நெருப்பு
சுடச்சுட எழுதும்போது
அதைப்
படித்தபடி நான் முடிவதற்கு
இரு சொட்டு தமிழ்த் தேன்துளிகள்
என் செவியில்
விழ வேண்டும்
என்று எழுதியதோடு நில்லாமல் கடைசி நொடி வரை தமிழ்ச் சேவை ஆற்றி, ஒரு மகா கவிஞனின் வார்த்தைகள் என்றுமே பொய்ப்பதில்லை என்பதை அழுத்தமாக நிறுவியவர்.

அவரைக் குறித்து நான் எழுதிய சில வரிகள்.

இளந்தென்றல் தழுவாத இளவேனில் காலப் பகலாய் இளமஞ்சள் வெய்யோனின் இன்முகங் காணா இரவாய் இருவிழி இடைநின்ற முள்ளாய் இமைப் பொழுதும் ஆறாத ரணமாய் இலங்கும் கறைப்பட்டு கலங்கும் ஈரோட்டு இளங்கவியின் கவிகேளா நாளும் கன்னலும் கனி சிந்தும் தேனும் கனியமுதும் தெவிட்டாத பாலும் குன்றும் நின்தமிழின் முன் குறையும் மாற்றுப் பொன்னல்லோ வளையாத நின் எழுதுகோலும் பல்லாயிரம் பொருண்மையில் கவிதீட்டி பாரோர் வாழ நல்வழி காட்டி அன்பிலா நெஞ்சுக்கும் அருள் கூட்டி அணியணியாய் தமிழுக்கு அழகூட்டி சென்ரியு, லிமரிக்கூவென பல் வகைமை தந்தாய் கவிஞருள் மேருவாய் பலர் நெஞ்சில் நின்றாய் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு ஆழ்ந்த வாசிப்பு, தேர்ந்த உச்சரிப்பு பரந்த நுண்ணறிவு மேன்மையில் பணிவு அருங்குணங்கள் பல கொண்டாய் அவனியில் ஆன்ற புகழ் கண்டாய் வள்ளுவனைப் பார்த்ததில்லை வான்புகழ் கம்பனைக் கண்டதில்லை பாரதியை அறிந்ததில்லை பாரதிதாசனுடன் பழகியதில்லை உன் அகம் கண்ட பின்னாளில் இக்குறைகள் எழுவதில்லை தமிழ் மைந்தனே பெருங் கவிஞரே தமிழ் ஆழியில் உந்தன் அலை ஓய்ந்ததில் துயரக்கடலில் நாங்கள் ஆண்டு பல செல்லட்டும் ஆயிரம் பிறை உதிக்கட்டும் போதவிழ் சோலைக்கெல்லாம் யாத்த உன்பண் விதையாகட்டும் இளங்காற்று அதை ஏந்தி இதயமெல்லாம் நிறைக்கட்டும் விண்ணும் மண்ணும் நின்புகழ்பாடி களிக்கட்டும்

புரட்சிக்கவி பாரதிதாசன் தமிழ் மன்றம் 12/06/2025 அன்று நடத்திய நினைவேந்தல்


வல்லினச் சிறகுகள் மின்னிதழ் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை ஆகிய அமைப்புகள் 12/05/2025 அன்று நடத்திய நினைவேந்தல் கூட்டம் 




தமிழன்பன் அவர்கள் ஏன் மகாகவி என்று அழைக்கப்படுகிறார் என்பதை கீழே உள்ள இந்த ஆவணப்படத்தை பார்த்தால் தெளிவாக விளங்கும். இரண்டு பகுதிகளாக உள்ள அவரைப் பற்றிய இந்த காணொளியில் அவரின் படைப்புகளைப் பற்றி பெரிய எழுத்தாளர்கள், வெளிநாட்டு படைப்பாளிகள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் பேசி இருக்கிறார்கள்.
முதல் பகுதி:
 
இரண்டாம் பகுதி:



மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. எளிமை, இனிமை, புதுமை என்று மூன்றின் கலவை அவர். அவரின் கவிதைகள் காலம் உள்ளவரை நிலைத்து நின்று நெஞ்சகத்து இருள் நீக்கும் செஞ்சுடராய் ஒளி வீசிக்கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக