மகாத்மா............
மனிதரில் தலைசிறந்தவர் அல்ல
எளியோர்களுள் மிக எளியவர்
விண்ணுலகம் ஏகிய பின்னும்
தான் வாழ்ந்த மண்ணை தீண்ட
தந்தையாய் தம் மக்களை காண
ஓர் நாள் நண்பகலில் வந்தார்
அவசரமாய் விரைந்த உலகம்
அவரவர் கைபேசியில் இணையம்
பலரும் காணாமல் கடக்க
வேகமாய் மனமுடைந்தார்
வீசிய குப்பையாய் தனை உணர்ந்தார்
மனம்வாடி
உதிர்த்த கண்ணீர்ப் பூவை
சேர்க்கவொரு
குப்பைத் தொட்டி தேடி
அதை வீசும் வேளையில்
வீறிட்டழுதது அதிலே
யாரோ போட்டுச் சென்ற
கண்திறவா சிசு ஒன்று
வீதியில் சலனமில்லை
விரையும் மனிதருள் ஈரம் இல்லை
சிசுவை பதைபதைத்து கையில் ஏந்தி
தேசத்தந்தை அவசர அன்னையானார்
ஆதரவற்றோர் இல்லம் கண்டு
ஆங்கே இடமிருக்கும் என்றேயெண்ணி
உப்பு சத்தியாகிரகம் கண்ட நம்பி
உட்புகுந்தார் மகவை ஏந்தி
பெரியவரே உமக்கேன் வேண்டாத வேலை?
கணவனால் கைவிடப்பட்டோர்
இயற்கை சீற்றத்தினால் அனாதையானோர்
தொற்று நோயால் சுற்றம் இழந்தோர்
பெற்றோரும் வேண்டாத உடல்
ஊனமுற்றோர்
பெற்றோரை வேண்டாமெனும் மன ஊனமுற்றோர்
இவர்களுக்கு பின்னே இடமிருந்தால்
கைபேசியில் செய்தி வரும்
உயிர்பிழைந்திருந்தால் வந்து சேரும்
விழுந்த சொல்லில் கருணையில்லை
சத்திய சோதனை புனைந்தவற்கே
சொற்கள் தொலைந்த மோனநிலை
தாத்தா!! அடுக்காதிது உமக்கே
எச்சரித்தாள் இளம்பெண் ஒருத்தி
இங்கு வேலிகளே பயிரை மேயும்
பகல் நேரம்கூட பகையாய் மாறும்
எனக்கே பாதுகாப்பில்லை
இளந்தளிரை காப்பதற்கில்லை
நங்கை நஞ்சாய் உதிர்த்த சொல்
மகாத்மாவின் நெஞ்சம் தொட்டது
அங்கமெங்கும் தீயாய்ச் சுட்டது
அரசு அன்பின்றி ஊமை ஆனது
அதிகார வர்க்கம் கையூட்டு கேட்டது
காக்கி எட்டி உதைத்துக் கடந்தது
நீதி கண்ணை கட்டி விரைந்தது
ஊடகம் காதைப் பொத்தி நகர்ந்தது
பசியால் கதறிய பிள்ளை
உடல் துவண்டு உறங்கும் முன்னே
மொழிந்தது இங்கனம்
ஐயா இங்கே
ஆலயம் உண்டு அன்பு இல்லை
ஆடை உண்டு மானம் இல்லை
இதயம் உண்டு
இரக்கம் இல்லை
மதம் உண்டு மனிதம் இல்லை
கடவுள் உண்டு கருணை இல்லை
கண்கள் உண்டு கனவுகள் இல்லை
சட்டம் உண்டு சமநீதி இல்லை
சோலை உண்டு பாடும் குயில்களில்லை
பாடல் உண்டு அதில் பொருளே இல்லை
பூக்கள் உண்டு புன்னகை இல்லை
போர் உண்டு சமாதான புறாக்களில்லை
வானவில் உண்டு வண்ணங்கள் இல்லை
விஞ்ஞானம் உண்டு மெய்ஞ்ஞானம் இல்லை
வேகம் உண்டு விவேகம் இல்லை
நூல்கள் உண்டு சிறகுகள் இல்லை
இனியும் பிழைத்திருக்க விருப்பம் இல்லை
கண்மூடிய பிள்ளை பின் கண்
திறக்கவேயில்லை
ஆறா மனமும் வற்றா விழியும்
துடிக்கும் மனமும்
ஆறும் வரை அழுதுமுடித்தார்
அழகான சிறுநிலவு அதை
ஆற்றின் ஓர கல்லறையிலிட்டு
ஆற்றாமையினால் ஆவி துடித்தார்
துக்கத்தில் தொண்டை அடைக்க
ஆங்கே ஊற்றில் ஒருவாய்
அள்ளிக் குடித்து
இதயம் உடைந்து
நொந்துக் கிடந்தார்
ஐயோ!! அனலாய் எரிகிறதே
உடலும் உலைகலனாய் தகிக்கிறதே
மகாத்மா அலறித் துடித்த
கூக்குரல் கேட்டு
முதலில் ஒருவரும் வரவில்லை
ரூபாய் நோட்டில் உள்ளவர் போல்
அச்சு அசலாய் இருக்கின்றார்
யாரோ ஒருவரின் குரல் கேட்டு
கொஞ்சம் கூட்டம் கூடியது
ஆற்று நீரில் ஆலைக் கழிவு
சாயப் பட்டறை நஞ்சு பொழிவு
கலப்பது கூடத் தெரியாமல்
களைப்புத் தீரக் குடித்தீரா
இன்னும் சற்று நேரத்தில்
இறப்பது சர்வ நிச்சயமே
எனினும் உம்முடன் படமெடுத்து
முகநூலில் இட்டால் சிறப்பாகும்
கூட்டத்தில் நிறைய உற்சாகம்
துடிக்கும் தலைவனை பாராது
உயிர் போகும் கணம்வரை விடாது
செல்பேசியில் புகைப்படம் எடுத்தனரே
ஆங்கிலேயர் நெஞ்சமெல்லாம்
நடுக்கம் கொள்ள செய்தவரை
துளியும் கூட கருணையன்றி
மீண்டும் கொன்று புதைத்தனரே
மீண்டும் சொர்க்கம் ஏறியவர்
நொந்துச் சொன்னார் இவ்வாறு
காந்தி நோட்டிற்கு தன்னை விற்கும்
மாக்கள் நிறைந்த இவ்வுலகில்
தண்டிக்கும் காந்தி கைத்தடிகள்
நிறைய நிறைய இனி வேண்டும்
அகிம்சை போதித்த ஆசான் யான்
ஆயுதம் எடுக்கும் நிலை கொடிதே
மனிதம் தொலைத்த மிருகங்கள்
ஆட்சிக் கட்டிலில் அரியணையில்
நல்லோர் அஞ்சி வாழ்கின்றார்
தீயோர் பயமின்றி ஆள்கின்றார்
மாமனிதன் நெஞ்சக் குமுறலையே
கவிதையில் வடித்திட முடியலையே
தமிழ்சொற்கள் எந்தன் வசமில்லையே
மனிதா கொஞ்சம் கேட்பாயே
பல்லுயிர் அனைத்தும் காப்பாயே
உன்னை தாண்டிய எல்லாமும்
நீயே இதைநீ உணர்வாயே
அன்பின் உயர்ந்த மதமில்லையே
அகிம்சை தாண்டிய அறமில்லையே
உண்மையின் சிறந்த மொழியில்லையே
சமத்துவம் தாண்டிய தவமில்லையே
மனிதம் நிறைந்த மனிதனையே
கடவுள் என்பர் உலகினிலே
இதை உணர்த்திடு இன்பம் தழைத்திடவே
நாளை மலர்ந்திடும் உலகம் அழகுறவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக