ஞாயிறு, மே 09, 2021

குரு


 வட அமெரிக்காவில் ஒரு அமைப்பு கவிதை போட்டி, கதை, கட்டுரை, பாடல், ஆடல், குறும்படம், ஓவியம்  என்று பல்வேறு போட்டிகளை அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான பயிற்சி பட்டறைகளை அந்த அந்த துறையில் உள்ள வல்லுநர்களை வைத்து நடத்தியது. பயிற்சிப் பட்டறை முடிவுற்று இப்போது போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி பட்டறைகளில் பலவற்றில் கலந்து கொண்ட ஒரு அடிப்படையில் சொல்கிறேன். பெரும்பாலும் எல்லா பயிற்சி பட்டறைகள் அடிநாதமாக எல்லாரும் சொன்னது - போட்டிக்கு நிறைய பயிற்சி செய்ய வேண்டும், அப்படியே பயிற்சி செய்தாலும் உங்களுக்கு என்று அந்தக் கலை பிரத்யேகமாக வாய்த்திருக்க வேண்டும். உதாரணமாக சங்கீதத்தை எடுத்துக் கொள்ளலாம். இனிமையான குரல் வளம், பெண்கள் என்றால் ஒரு மெல்லிய மேல் சுருதியில் சர்வ சாதாரணமாக பாடுவது. அப்படியே அந்தக் கலை உங்களுக்கு  வாய்த்தாலும் அது ஏற்கனவே வரை முறை செய்யப்பட்ட ஒரு வரையறைக்குள் நீங்கள் திறமையாக வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக கர்நாடக சங்கீதம் என்ற வரைமுறையில் அல்லது  மெல்லிசை பாடல் என்ற வரைமுறை. இந்த மாதிரி பாடும் போது பெண்கள் பொதுவாக ஹை பிட்சில் பாடுவது சிறந்த முறையில் பாடுவது என்பதாக பாராட்டுப் பெறுகிறது. 

"Why fit when you are born to stand out"

என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. எஸ்.ஜானகி, சித்ரா போன்ற பாடகிகளின் குரல் ஒரு மரத்தை சுற்றி பாடி ஆடும் கதாநாயகியின் குரலாக மிகச் சரியாக பொருந்திப் போகிறது. இந்த குரல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக எப்போதும் கேட்கிறது, அதாவது வலிமையற்ற பெண் குரல்கள், ஆணை சார்ந்து இருக்கும் பெண், பெண் என்றால் இப்படித்தான்  இருக்க வேண்டும் என்ற வரையறையில் வைக்கப்பட்ட பெண்களின் குரலாகவே நான் பார்க்கிறேன். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் அந்தக் குரலை எளிதாக இன்னொரு பாடகியால் வெளிப்படுத்திவிட முடியும் என்ற அளவில் தான் இருக்கிறது.இன்றைய சங்கீத ஆசிரியர்கள் கூட குரலின் தனித்தன்மையை வெளிப்படுத்த முயலாமல் நீங்களும் இப்படியே ஹை பிட்சில் பாடுங்கள் என்று ஆதரிக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட ஒன்று. இதில் கூட ஆண்களின் குரல்கள் தனித்து ஒலிக்கிறது. உங்களால் எஸ்.பி.பி, ஜேசுதாஸ் முதல் சித் ஸ்ரீராம் வரை யார் குரல் என்பதை எளிதாக அடையாளம் சொல்ல முடிகிறது. தனித்துவம் தானே மனித அடையாளம். மனித குலத்தின் முன்னேற்றமும் கோட்பாடுகளை தகர்த்தெறிந்து, பழைய சிந்தனைகள் களைந்து முன்னேறி செல்வதில் இருந்து தானே பிறக்கிறது.  திரைப்படங்களும் வலியுறுத்தும் இந்த பெண் குரல் மேல் உள்ள கட்டுப்பாடுகள் வலிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இது எளிதாக உடைத்துச் செல்லக்கூடிய ஒன்று அல்ல. பெண் குரல்கள் முகமற்று போவதும், சங்கீதம் என்பது வரையறுக்கப்பட்ட மரபாக,  அது திறமையாக பிரதி எடுக்கப்பட்டே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதும் மறுக்க இயலாத உண்மை. இது தான் ஒரு சிலருக்கு சங்கீதம் என்பது அவர்களுக்கே உரித்தான சொத்தாக காலங்காலமாக பாதுகாக்க ஏதுவாகவும் இருக்கிறது.

வட அமெரிக்காவில் நிறைய பெண் குழந்தைகள் பரதம்  பயின்று இங்கேயே  அரங்கேற்றம் செய்கிறார்கள். இதையும் கட்டுப்படுத்துவது அந்தந்த ஊரில் இருக்கும் அந்த குழந்தைகளை பயிற்றுவிக்கும் பரத ஆசிரியர்களே.குழந்தைகளுக்கு அரங்கேற்றம் என்றால் 7 லட்சத்தில் தொடங்கி 30 லட்சத்திற்கு மேல் ஆகும். அதாவது ஒரு கல்யாணம் அல்லது ஒரு குழந்தை நான்கு வருட காலேஜ் படிப்பிற்கு ஆகும் அளவு செலவு ஆகின்றது என்றால் இது எவ்வளவு ஒரு பெரிய தொகை என்பதை அறியலாம். நடன ஆசிரியர் கை காட்டும் போட்டோகிராபர், வீடியோகிராபர், பிளக்ஸ் போர்டு செய்பவர், பேனர் கம்பெனி, விழா தலைமை, மேக்கப் வுமன் என்று அவர்கள் கூறும் ஆட்களை மட்டுமே நீங்கள் அழைக்க முடியும். அவர்கள் கை காட்டும் எல்லா ஆட்களும் நிறைய இது போன்ற நிகழ்வுகளை செய்து தருவதால் அரங்கேற்றம் முடிந்து ஆறு மாத காலம் வரை ஆகிறது விழா நிகழ்விற்கான போட்டோ அல்லது வீடியோ வருவதற்கு.  சில ஆயிரம் வெள்ளிகள் தந்தாலும் உங்கள் குழந்தையின் புகைப்பட ஆல்பம் கையில் வர இத்தனை கால தாமதம் எதற்கு என்று கேட்க முடியாது. போட்டோகிராபரை புக் செய்யும் போதே 6 மாத காலம் காத்திருக்க வேண்டும் என்பதையும் ஒத்துக்கொண்டே புக் செய்ய வேண்டும். நாமாக நமக்கு தெரிந்த ஆளை புக் செய்கிறேன் என்றால் அதற்கும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லானா ஆடும் போது அடுத்து என்ன போஸ் வரும் என்பது எங்கள் போட்டோகிராபருக்கு தெரியும். அதனால் அவரால் மட்டுமே சிறப்பாக எடுக்க முடியும் என்று பதில் வரும். எங்களுக்கு எதுவாயினும் அது பரவாயில்லை  என்று சொன்னாலும் போதாது.  அது மட்டும் அல்லாமல் விழா அழைப்பாளர்களுக்கு என்ன பரிசுப் பொருள் தருவது என்பது முதல் நடன ஆசிரியருக்கு தரும் பரிசுப் பொருள் வரை பர்ஸை பதம் பார்த்து விடுகிறார்கள். பட்டுப் புடவை தங்க நகை வரை ஒவ்வொரு வருடமும் இந்த ஆசிரியர்கள் பெரும் பரிசுத் தொகையும் பெரிது. இது மட்டும் அல்லாமல் அரங்கேற்றம் வரை நடக்கும் ஸ்பெஷல் கோச்சிங்குக்கு என்றும் ஆசிரியர்கள்  நிறைய பணம் கறந்து விடுகிறார்கள். எனவே ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறையை கட்டுப்படுத்தும் பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காததைப் போல இவர்கள் சொன்னதைச் செய்யவில்லை என்றால் நீங்கள் இந்த கலையை கற்றுக் கொள்ளும் தகுதியை இழக்கிறீர்கள்.

இதே போல கவிதைகளுக்கென நடந்த முதற்கட்ட போட்டியில் வந்திருந்த நடுவர்கள் இருவரும் பின் நவீனத்துவ கவிஞர்கள்/பெண்ணியக் கவிஞர்கள். அதிலும் அவர்களுக்கு வைரமுத்து கவிதைகள் மேல் என்ன கோபமோ. வைரமுத்து பாணி கவிதைகளை அவர்கள் சற்று குறைத்தே கூறினார்கள். பின் நவீனத்துவக் கவிதைகளை பற்றிய இந்த பதிவு சிரிக்க வைப்பதாக இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது. 

http://www.nisaptham.com/2008/03/blog-post_19.html?m=1

கவிதைகள் என்பது அவரவர் அனுபவத்தின் வழியில் வெளிப்படும் உணர்ச்சிக் குவியல். கவிதைகளில் சிறந்த ஒரு கருத்து இருப்பின் அது காலத்தை கடந்து நிற்கும். ஒரு கவிதைக்கான இடத்தை காலமே தீர்மானிக்கிறது. கவிதைகள் மரபுக் கவிதைகள் போன்ற ஒரு வரைமுறைக்குள் வைத்து எழுதுவது சிலருக்கு இயல்பாக வாய்க்கிறது. சிலர் நீண்ட வசனங்களை உடைத்து புதுக் கவிதையாக வடிக்கிறார்கள். ஆனால் சொல்வது எவ்வாறாகினும் சொல்லப்படும் கருத்துக்கள் தான் இங்கே சிறப்பு பெறுகிறது. வடிவத்தைவிட எண்ணத்தின் மேன்மை, சொல்லிய கருத்தின் தாக்கம் என்பதே மேலோங்கி நிற்கிறது என்பேன். எளிமை என்பது கவிதையின் உயிர்நாடி என்பேன். 

"குளத்தில் முகம் பார்க்கும் நிலா 

குளிக்காமலேயே திரும்பினேன்"

இந்தக்  கவிதை ஏற்படுத்தும் தாக்கத்தை விடவா ஒரு சிறந்த அழகியலை, கவிஞனின் மென்மையான மனதை அதாவது நிலவுக்கு கூட இரங்கும் ஒரு மனிதனின் மனநிலையை படிப்பவருக்கு எளிதாக கடத்திவிட முடியும்? 

"பறவைகள் பறந்த பின்னும்

 கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை "

என்ற நா.முத்துக்குமார் கவிதை வரிகளை நீங்கள் ரசிக்காமல் போக முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு  பாணி. இதில் பங்குபெற்ற நடுவர்களின் கருத்து பெரும்பாலும் வட அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் சங்க இலக்கியத்தில் வைத்துள்ள ஒரு புரிதலை, தேடலை, பின் நவீனத்துவ, பெண்ணியம் சார்ந்த நூல்களை படிப்பதில்லை என்றும் அது சார்ந்த எழுத்து  நடை, சொற்கள் போன்றவற்றை பயன்படுத்துவது இல்லை என்பது போன்ற விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். பெரும்பாலும் இன்று வட அமெரிக்காவில் கவிஞர்களாக விளங்குபவர்கள் பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள். மரபுக் கவிதைகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன் என்று வளர்ந்தவர்கள். இவர்களுக்கு பின் நவீனத்துவ கவிதைகளில் ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம், அல்லது இந்தக் கவிதைகள் பற்றி அறிந்திருந்தாலும் அந்த புத்தகங்களை இங்கு வாங்கி வந்து படிக்க முடியாத ஒரு நிலையில் இருப்பவர்களாக இருக்கலாம். தமிழ் புத்தகங்களை வட அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடிய நூலக வசதியோ, அப்படியே வாங்கினாலும் அதை எளிதில் கொண்டு வர முடியாத எடைக் கட்டுப்பாடுகள், புத்தகம் வாங்குவதை விட அதை வட அமெரிக்கா வரை கொண்டு வர ஆகும் செலவு என்று பல்வேறு விஷயங்கள் உள்ளது. எனவே பெண்ணியம், பின் நவீனத்துவம், தலித் கவிதைகள் என்று வேறு தளங்களில் இயங்கும் ஆளுமைகளுக்கு பெரும்பாலும் இலக்கியம் சாராத துறைகளில் (ஐடி பணியாளர், குடும்பத்தலைவி) உள்ள மனிதர்களின் கவிதையை கேட்டு அவர்கள் கவிதைகளை எடை போடும் ஒரு ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்றே  தோன்றுகிறது. இது இந்த நடுவர்களை கூட்டி வந்த  அமைப்பின் குற்றமே என்றாலும் நடு நிலைமை என்பதே நிலையான தன்மையில் இருந்து மதிப்பீடு செய்வது. நம் தளத்திற்கு வரமுடியாதவர்களை அவரவர் தளங்களுக்கு சென்று மதிப்பீடு வழங்குவது. என்பதே முறை. அதைக் கூட வந்த நடுவர்கள் சிறப்பாக செய்ததாக தோன்றவில்லை.  கொடுத்திருந்த  தலைப்புகளிலும் அப்படி ஒரு கற்பனை வறட்சி. நடுவர்களை கொண்டு வரும் போதும், தலைப்புகளை தேர்ந்தெடுக்கும் போதும் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும் இந்த அமைப்புகள்.

நடுவர்களும் பெரும்பாலும் மரபுக் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது மரபுக் கவிதைகள் எழுதியவர்களுக்கு மிகவும் புதியதாகவும் சற்றே அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. எனினும் நடுவர்களின்  கருத்து - உதாரணமாக கவிஞர்களின் சொல்லாடல், கவிதை முறைமை பற்றிய அனைத்தும் வட அமெரிக்க கவிஞர்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டதாகவே இருந்தது. அது மட்டும் அல்லாமல் சமூக பிரச்சனைகளை இன்னும் ஆழமாக சொல்ல வேண்டும் எனினும் அது நடப்பு செய்திகளை சார்ந்து இருப்பதாக இருக்கக் கூடாது என்ற நடுவர்களின் கருத்துக்களையும் ஏற்க முடியவில்லை. இது அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு இயலாத ஒன்று. கவிதைகள் அவரவர் வாழ்க்கை முறையில், அவரவர் அனுபவங்களின் வழி பிறக்கிறது. இதில் ஒருவர் அனுபவத்தை விட இன்னொருவரின் அனுபவங்கள் எந்த விதத்தில் குறைவானவை. தீட்டுத் துணியும், பெண்ணின்/ஆணின் அங்கங்கள் பற்றிய வர்ணனைகள் கொண்டது சிறந்த பின் நவீனத்துவ இலக்கியம்/கவிதை என்ற நடுவர்களின் கருத்தை  ஏற்றுக் கொள்ளும் போது  வட அமெரிக்க தமிழ் வாழ் மக்களின் அனுபவம் வழி விளைந்த கவிதைகளும் இலக்கியம் தானே. இதில் வேறு நடுவர்கள் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி சொன்னார்கள். நிறைய புத்தகம் படித்தவன் வாசகனாக தங்கி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லை நிறைய படிப்பவன் தான் படித்த விஷயங்களையே பிரதிபலிக்கும் வாய்ப்பும் உண்டு . காப்பி அடிச்சிட்டான் என்று இதற்கு வேறு எதிர்மறை விமர்சனம் வரும். காமராசர் போல நிறைய படிக்காதவர்கள், படித்தவர்களுக்கும் சேர்ந்த நல்ல திட்டங்களை வகுத்த கதைகளும் உண்டு. எல்லாவற்றையும் சமமாக பார்த்தது தானே தமிழ் மண். வந்தவர்களை மதிப்பீடு செய்து யாரையோ சிலரை வெற்றியாளர்களாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்பது ஒரு புறம் இருந்தாலும் பூக்களின் மாநாட்டிற்கு வாட்களை கொண்டு வந்த ஒரு அனுபவமாகவே அமைந்தது இந்த நிகழ்வு. 

பெரும்பாலும் எந்த துறையில் ஒருவர் சிறந்தவர் என்று கொண்டாடப் பட்டாலும் அவர் அந்தத் துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவர். சங்கீதம் என்பது ஒரு தட்டு மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல வெவ்வேறு துறைகளிலும் கோலோச்சும் சிலரும் அவர்களுக்கென்று ஒரு குழுவும் அதன் மூலம் தங்களை பலப்படுத்தும் பிரயத்தனங்களை செய்து கொண்டே இருக்கிறார்கள். இதில் ஒரு வகைமை என்பது அடுத்தவருக்கு இடம் கொடாமல் இருப்பது அல்லது பழிப்பது.  சமூகமே சாதி என்கிற ஒரு கோட்பாட்டின் படி வடிவமைக்கப்பட்ட ஒன்று என்று எழுத்தாளர் இமையம் அவர்கள் நேற்று பேரவை இலக்கிய குழு நடத்திய நிகழ்வில் கருத்து தெரிவித்திருந்தார். (நிகழ்வின் இணைப்பு கீழே)

இலக்கிய கூட்டம்: 


அது எத்தனை உண்மை.  பொதுவுடைமை பேசுபவர்களும் தங்களுக்கு என்று வந்தால் அந்தக் கருத்தில் இருந்து பிறழ்வார்கள் என்பது மட்டுமே நிதர்சனம். உங்களுக்கு நீங்களே ஆசான்.  உங்கள் எழுத்துக்களுக்கான உரைகல் நீங்கள் மட்டுமே. உங்களை வழிநடத்தும் சக்தி உங்கள் அறிவிற்கும், உங்கள் கண்களுக்கும் உங்கள் கால்களுக்கும் மட்டுமே உண்டு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதல்ல கணியனின் சிறப்பான வரிகள். "பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தலும் இலமே" என்பதே அவர் கூறியதிலேயே மிகவும் சிறந்த கருத்து. சிறந்த இலக்கியங்களை படைப்பதில் உங்களுக்கு நீங்கள் மட்டுமே குரு. உங்கள் எழுத்துக்கள் என்றாவது இந்த சமூகத்தின் கண்களில் படும். நீங்கள் வாழும் காலத்திலேயே அது ஏற்பட்டால்  அது நீங்கள் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் உங்களுக்கு பிறகாவது இது கொண்டாடப்படும் என்று நம்ப வேண்டும். அதுவும் இல்லை என்றால் இப்படிப் பாருங்கள். கோவில் என்பது வெறும் கண்களுக்கு தெரியும் கட்டிடம்  மட்டும் அல்ல, கோவில் என்பது கண்ணுக்கு தெரியாத அதன் கீழிருக்கும் அஸ்திவாரமும் கூடத்தான். தமிழின் அஸ்திவாரமாக உங்கள் எழுத்துக்கள் என்றும் இம்மொழியை தாங்கி நிற்கும் என்று தெளிக.

இந்த வாரம் நடந்த சார்லட் தமிழ் சங்க சித்திரைத் திருநாள் நிகழ்வினை கண்டு களிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள். முனைவர். கோ.ப. நல்லசிவம் அவர்கள் பண்ணிசையே பழந்தமிழர் இசை என்ற தலைப்பில் சிறப்பாக பேருரை ஆற்றினார். இதைத் தவிர பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக