ஏப்ரல் மாத வல்லின சிறகுகள் இதழில் இடம் பெற்ற என்னுடைய கவிதை. இந்த முழு இதழையும் படிக்க இங்கே சொடுக்கவும். திரு.லோகராஜ் அவர்களின் சிறந்த வடிவமைப்பில் இந்த இதழ் வெளிவந்துள்ளது. சாதனை பெண்களின் பேட்டிகள், நூல் திறனாய்வு, மொழிபெயர்ப்பு கவிதைகள் என்று பலவும் இடம் பெற்றுள்ளது.
வெற்றி என்னும் மாயமான்
முயற்சியெனும் நீர் ஊற்றி
உழைப்பெனும் உரம் இட்டு
தன்னம்பிக்கை ஒளி பாய்ச்சி
வெற்றியெனும் கனி பறிக்க
எத்தனை பிரயத்தனங்கள்
தோல்வியில் தோய்ந்து
அவமானங்கள் பல கடந்து
துரோகத்தின் கசப்புணர்ந்து
கண்ணீரும் பெருவலியும் பழகி
அனுபவமெனும் ஆலகாலம் விழுங்கி
எண்ணற்ற விழுப்புண்கள் சுமந்து
மனிதருள் சிறந்தவராய் அறியப்பட
நில்லாத மனித ஓட்டம்
தோற்றவர் காரணம் அறியார்
வென்றவர் காரணம் விரும்பார்
தோல்வி சமத்துவத்தில் படி நிலை
வெற்றி தனித்துவத்தில் உயர் நிலை
இங்கே தோற்பதும் மரணிப்பதும் ஒன்றே
இரண்டாவது வருவோரை
நினைவில் கொள்வதில்லை உலகம்
சதுரங்க ஆட்டத்தின் முடிவில்
சிப்பாயும் அரசனும் ஒரே பெட்டியில்
இறப்பொக்கும் வாழும் உயிர்கள் எனில்
இங்கே வென்றவர் யார் தோற்றவர் யார்
அது மட்டும் அல்லாமல், மருத்துவர் அம்பிகாதேவி நினைவு கவிதை நூல் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றது மன மகிழ்வை அளித்தது.
கவிதை மிகச்சிறப்பு. விழுப்புண்கள் இல்லாத வெற்றி உண்டோ?
பதிலளிநீக்குமுதலாக வருபவரையே இந்த உலகம் சில நாட்களில் மறந்துவிடும் போது, இரண்டாவதாக வருபவரை உலகம் நினைத்திருக்குமோ?
சிப்பாயும் அரசனும் ஒரே பெட்டியில்
இறப்பொக்கும் வாழும் உயிர்கள் எனில்
இங்கே வென்றவர் யார் தோற்றவர் யார்//
வெற்றி என்பது மாயமான் தான். அருமையா எழுதியிருக்கீங்க ரம்யா. பாராட்டுகள்.
பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துகள்
கீதா
தங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி கீதா. கவிதையின் கரு அனுபவத்தில் கண்ட ஒன்று. தங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்கு