சனி, ஏப்ரல் 18, 2020

கனவுகளின் பலிபீடம்


மெலிதான மழை தூறிக் கொண்டு இருந்தது. விசாலினி மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த ஸ்டார்பக்ஸ் சிகாகோ நகரின் மையப் பகுதியில் இருந்தது. உள்ளே இருந்து பார்த்தால் பளிச்சென்ற சாலையும் அதை தாண்டி, ஓய்வின்றி உழைத்த கரங்களில் துருத்திக் கொண்டிருக்கும் ரத்த நாளங்களை போல குச்சி குச்சியாய் நின்ற மரங்களும் தெரிந்தது. விசாலினி அமெரிக்கா வந்து 5 வருடங்கள் ஆகியிருந்தது. யூனிவர்சிட்டி ஆப் சிகாகோவில் மாஸ்டர் ஆப் சயின்ஸ் படித்து, இந்தியர்களுக்கு என்றே நேர்ந்துவிடப்பட்ட ஒரு ஐ.டி வேலையில்  இருப்பவள். ஐந்தடி ஆறு அங்குல உயரம், வசீகரமான உருண்டை முகம், தீர்க்கமான நாசி, அகண்ட கண்கள், ஆரஞ்சு சுளை உதடுகளுக்கு சொந்தக்காரி. இரண்டு புருவங்களின் மேலும்  அழகான கருப்பு மச்சங்கள், கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி, கையில் “வி” என்ற எழுத்து பொறித்த மெல்லிய தங்க காப்பு அணிந்திருந்தாள்.

“சே! எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? பச்” என்றவாறே தன்னுடை கஃபே லாட்டேவில் ஒரு சிப் குடித்து கீழே வைத்தாள். தன்  செல்பேசியை தட்டி மணி பார்த்தவள் நேரம் சரியாக மாலை 6:20 என்றதை பார்த்து இருக்கலாமா? போகலாமா என்று எண்ணி கதவை பார்த்துக் கொண்டிருந்தாள். இத்தனை அழகான பெண்ணை வெயிட் செய்ய வைப்பது ஒரு அழகான ஆண் என்பது இன்னும் பிறக்காத குழந்தைக்கு கூடத் தெரியும்.

சரக்கென்று என்று பிரேக் அடித்து அந்த வளாகத்தில் வந்து நின்றது ஒரு அழகான கருப்பு மெர்சிடிஸ். ஆறடிக்கு சற்றே குறைவான உயரம், மாநிறம், பக்கவாட்டில் பார்த்தால் ஏதோ ஒரு பட ஹீரோவை நினைவு படுத்தும் முகமுமாய், குளிருக்கு இதமான ஆரஞ்சு ஸ்வெட்டர் அணிந்து கீழே இறங்கினான் திவாகர். கண்ணாடி தடுப்பு வழியே இவளை கண்டவன் முகத்தில் ஒரு அழகான குறும்பு புன்னகை மலர்ந்தது.

ஹே, பேபி என்று அருகில் வந்தவனை கண்டதும் அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து விசாலினியின் முகம் மலர்ந்தது. “இரு, ஒரு காபி வாங்கிட்டு வரேன்னு”  என்று சொன்ன திவாகர் அங்கிருந்த சிறிய வரிசையில் சென்று நின்றான். மொத்தம் 6 பேர் மட்டுமே இருந்த அந்த வரிசை வேகமாகவே நகர்ந்தது. அவன் எப்போது வருவான் என்று விசாலினி திரும்பி பார்த்த அந்த வினாடி சரேலென அவன் கண்ணடிக்கவே விசாலினியின் கண்கள் ஒரு கணம் மலர்ந்து பின்னர் இதழ்களும் சிரித்தன.

என்னடா, வர சொல்லிட்டு ஆளை காணோம்னு தானே தேடிட்டு இருக்கே?. காபி வாங்கி கொண்டு அருகில் வந்தான் திவாகர்.

பின்ன என்ன?, நான் வந்து ஒரு மணி நேரம் ஆகுது. எவ்ளோ நேரம் போனை பார்ப்பது? உனக்கு போன் போட்டாலும் வாய்ஸ் மெயில் போகுது. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? என்று படபடவென பட்டாசு போல பொரிந்தாள் விசாலினி.

வினி, நீ பேசும் போது ஒண்ணு கவனிக்கிறேன்.

என்னது, திவா?

எறும்பு மாதிரி ஒரு பூச்சி உன் கன்னத்துல இருக்கு.

தட்டி விடாம என்ன பார்த்துட்டு இருக்கே, திவா?

இரு ஊதி விடுறேன் என்று பக்கத்தில் வந்தவன் கன்னத்தில் இச்சென்று ஒரு சந்தர்ப்ப முத்தத்தை இறக்கினான்.

விசாலினிக்கு ஒரு கணம் வெட்கப் புன்முறுவல் தோன்றியது. என்னை எப்படி எல்லாம் கவுக்கணும்னு உனக்கு தெரியும். இருந்தாலும் நான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணதால கோவமாய் தான் இருக்கேன் என்று சிரிப்பின் இடையே கூறினாள்.

உன்னோட அழகான சிரிப்பை க்ளோஸப்பில் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?

“மூணு நாள் தான் ஆகுது”, திவா என்றாள் விசாலினி.

ஆனா உன்னோட பர்ஃப்பியும் வாசனை இவ்ளோ க்ளோஸ்ஸா ஸ்மெல் பண்ணி சரியாய் 72 மணி நேரம்  45 நிமிடம் 20 வினாடி ஆகுது. வா ஒரு டிரைவ் போயிட்டே பேசலாம் என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் ஒரு கையால் அவளுடைய ஜாக்கெட்டை எடுத்து அவளுக்கு போத்தி விட்டு மறுகையால் அவளுடைய கை விரல்களை மென்மையாக ஆனால் உறுதியாக பிடித்தான். கார் வரை கூட்டி சென்று அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு அவள் ஏறிய பின் கதவை சாத்தி விட்டு தானும் ஏறினான்.

திவாகரும் விசாலினியை போலவே அவளது கல்லூரியிலேயே மாஸ்டர்ஸ் படித்தவன். படிக்கும் போதே இருவருக்கும் இடையே ஈர்ப்பு இருந்தாலும் ஒரு நல்ல வேலை கிடைத்த பின்பே திவாகர் தன காதலை விசாலினிக்கு சொன்னான். விசாலினி அவளுடைய வீட்டில் மூத்த பெண். கூடப் பிறந்தது ஒரு தம்பி மட்டுமே.  முதலில் தயங்கியவள் பின்னர் எப்படியும் வீட்டில் சம்மதம் பெற்று விடலாம் என்ற நினைப்பில் சம்மதம் என்று சொல்லி விட்டாள். திவாகருக்கு ஒரு 3 மணி நேரம் தள்ளி பியோரியாவில்  வேலை.

பெரும்பாலும் வியாழன் இரவே திவாகர் சிகாகோ வந்து விடுவான். இருவரும் ஒன்றாக ஊர் சுத்துவது, சமைப்பது, வெளியே செல்வது என்று வார இறுதியை ஒன்றாக கழிப்பார்கள். பின்னர் மீண்டும் திங்கள் அன்று அதிகாலை கிளம்பி அவன்  பியோரியா சென்று விடுவான்.

கார் கிளம்பி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஹைவேயில் விரைந்தது. சீரான வேகத்தில் காரை செலுத்த மெல்ல திவாகர் மேல் சாய்த்தாள் விசாலினி. என்ன இன்னைக்கு அய்யா நல்ல மூட்ல இருக்க மாதிரி தெரியுது என்றாள்.

ஆமா, நல்ல விஷயம் தான். இந்த வாரம் உன்னை பத்தி எங்க வீட்டில் சொல்லியாச்சு. அவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அதிர்ச்சி. நான் தான் வீட்ல கடைசி பையன் அப்படிங்கிறதால என்னுடைய அக்காக்களுக்கு  எனக்கு பொண்ணு பாக்கணும்னு ஆசை. அம்மா அப்பாவிற்கும் தான். எல்லாரும் மும்முரமா பொண்ணு தேடறப்ப நானே பொண்ணை கண்டுபிடிச்சாச்சுன்னு சொன்ன உடனே எல்லாருக்கும் பயங்கர ஷாக். ஆனா ஒரு ரெண்டு நாள்லேயே எல்லாரும் சகஜம் ஆயாச்சு. உன்னோட போட்டோவும் அனுப்பியிருந்தேன்.அம்மாவுக்கு எல்லாம் ஓகே. அடுத்து என்னன்னு அம்மணி தான் சொல்லணும். கல்யாணமா தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா இல்ல ஓடி போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என்று சிரித்தவாறே பாடினான் திவாகர்.

என்ன திவா, இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ கேசுவலா சொல்ற. வாவ், ஐ ஆம் சோ ஹாப்பி. எங்க வீட்டை விட உங்க வீட்டை நெனச்சி தான் பயங்கரமா பயந்திட்டு இருந்தேன், என்ன சொல்வாங்களோன்னு. சூப்பர், திவா. பேசியே சம்மதிக்க வெச்சிட்ட. உனக்கு என்ன வேணாலும் சொல்லு வாங்கி தரேன் என்றாள் விசாலினி.     

அப்படியா என்று அவள் காதருகில் திவா ஏதோ கிசுகிசுக்க அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் வெட்கச் சிவப்பு ஏறியது. வர வர நீ ரொம்ப சரியில்லை என்றாள் பொய் கோபத்துடன் அவனை பார்த்து சிரித்தவாறே.

ஹே, கோபத்துல கூட நீ ரொம்ப அழகா தெரியற என்று திவா ஆக்சிலரேட்டரை அழுத்தினான்.கார் வேகம் எடுத்து செல்லத் தொடங்கியது. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் என்று ரஹ்மான் ஸ்பீக்கரில் இருந்து கசிய ஆரம்பித்தார்.

கேலி கிண்டல் காதலும் ஊடலுமாக இரண்டு மாதங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. திவாகரின் மேல் அவளுக்கு இருந்த காதல் பன்மடங்காக வளர்ந்திருந்தது. தனக்கானவன் என்ற உரிமை தந்த பற்றுதலால் தான் இவ்வளவு அன்யோன்யம் தோன்றியிருக்கிறது  என்று நினைத்தாள் விஷாலினி. அந்த நினைப்பு தந்த உணர்வு அவள் முகத்தில் புன்முறுவலாக  தோன்றியது. அந்த வியாழக்கிழமை மாலை விசாலினி கொஞ்சம் சீக்கிரமாகவே வேலை முடிந்து வந்திருந்தாள்.  உள்ளறைக்கு சென்று முகம் கழுவி  திவாகருக்கு பிடித்த வெள்ளை மேக்சி அணிந்து அழகான ஒப்பனை அணிந்திருந்தாள். இருவரும்  இரவு  ஒரு உணவு விடுதிக்கு செல்வதாக திட்டம். அவள் கிளம்பி வந்த போது திவாகர் குளியல் போட்டுக் கொண்டிருந்தான். குளியல் அறையின் உள்ளிருந்து  எஸ்பிபி போல அவன் பாட முயற்சிக்கும் ஓசை கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. வெளியில வரட்டும் வெச்சிக்கிறேன் என்று நினைத்தவள்,  சமையலறைக்கு சென்று அவனுக்கு ஒன்று அவளுக்கு ஒன்று என்று இரண்டு கோப்பைகளில் தேனீர் தயாரித்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அவள் ஹாலுக்கு வரவும் திவாகருடைய கம்ப்யூட்டர் திரையில் ஒரு ஈமெயில் வரவும் சரியாக இருந்தது. கம்ப்யூட்டர் லாக் செய்யாமல் இருந்தது. சும்மா காசுவலாக எட்டி பார்த்தவள் அவனுடைய தந்தையின் பெயரை பார்த்ததும் என்னவாக இருக்கும் என்று ஆவல் மேலிட்டு அந்த ஈமெயிலை படிக்க ஆரம்பித்தாள்.

திவாகர் குளித்து முடித்து வெளியில் வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. ஒரு குளியல் ரோப் அணிந்து வெளியே வந்தவனிடம் இருந்து  மெல்லிய சோப்பு வாசம் அடித்துக் கொண்டிருந்தது. விசாலினி வந்திருக்க மாட்டாள் என்று எண்ணியவாறே வந்த அவன் அவளை ஹாலில்  கண்ட வினாடி முகம் மலர்ந்தான்.

என்ன பேபி என்று அருகில் நெருங்கியவன் அவள் முகத்தை பார்த்ததும் ஒரு வினாடி நின்றான்.

ஹே, ஏன் டல்லா இருக்க, வேலை அதிகமா என்று அவளை ஏறிட்டவன், அவள் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்து, என்னடா? என்ன ஆச்சு? என்றான் மெதுவாக.

அவள் பதில் சொல்லாமல் அந்த கணினியை அவனை நோக்கி திருப்பினாள். “எந்த பொண்ணு போட்டோவை பார்த்து நீ ஓகே சொல்ல போற திவா” என்றாள்.

ஒரு கணம் அவளை கூர்ந்து நோக்கியவன், “அடுத்தவங்க ஈமெயிலை படிச்சவங்களும், அடுத்தவங்க செல்போனை பார்த்தவர்களும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை” என்று கூறி புன்னகைக்க முயன்றான்.

விசாலினி முகம் குன்றியது. “நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன். நீ என்னவோ ஜோக் அடிக்கற?  ஏன் திவா என் கிட்ட பொய் சொன்ன. உங்க வீட்ல நம்ம விஷயம் தெரியுமா, இல்ல தெரியாதா?”

“நம்ம விஷயம் தெரியும் பேபி. எனக்கு இங்க ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு அப்படின்னு சொன்ன உடனேவே அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க”. அப்பா,அக்கா எல்லாரும் ஆப் ஆயிட்டாங்க. அப்பறம், “இல்ல சும்மா சொன்னேன் அப்படின்னு சொல்லி அவங்களை சமாதானப்படுத்தவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு”..

"என்ன திவா சொல்ற? அப்போ இவ்ளோ நாளா நாம இங்க கிட்ட தட்ட புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்திருக்கோம். இதெல்லாம் வெறும் பொய்யா. ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் இல்லாட்டியும் நான் உன்னை கல்யாணம் செய்ய ரெடி. அதே முடிவை உன்னால எடுக்க முடியுமா?” என்றாள் விசாலினி. அவள் குரல் உடைந்திருந்தது

வினி மா, என்னால அப்படி செய்ய முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் பேசி பார்க்கிறேன்.

இந்த ஈமெயிலை பார்க்கும் போது நீ பேசி ஒண்ணும் ஆகறா மாதிரி தெரியலையே. உண்மையை சொல்லு. ஏதாவது பாஸிட்டிவா நடக்க வாய்ப்பு இருக்கா இல்லையா திவா?

எனக்கு அப்படி எல்லாம் சொல்ல தெரியாது. எல்லார் மனசையும் கஷ்டப்படுத்தறத விட்டுட்டு நாம ரெண்டு பேரும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம் இல்லையா?  நான் உன் கூட இருந்த இந்த ரம்மியமான நாட்கள் இந்த நினைவுகள் எனக்கு போதும். இது இன்னும் பல காலம் தொடர்ந்தா சந்தோஷம். இல்லைனா எனக்கு கொடுத்து வெச்சது அவ்ளோ தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.

இவ்ளோ யோசிச்சீங்களே. என்னை பத்தி யோசிச்சீங்களா? எனக்கு என்ன தேவை தேவையில்லைனு யோசிச்சீங்களா? உனக்கு வேணும்னா நான் லவ் பண்ணனும். நீ பிரியணும்னு நெனச்சா நான் பிரிஞ்சி போகணும். எனக்குன்னு ஒரு மனசு இருக்கு அதில் கனவு இருக்கு அப்படிங்கறது எல்லாம் உனக்கு தோணாதா திவா. எனக்கு நீ வேணும். என்னால காம்ப்ரமைஸ் எல்லாம் பண்ண முடியாது. உங்க வீட்ல சம்மதிச்சிட்டாங்கன்னு ஏன் பொய் சொன்னே. ஒய் திவா ஒய்?

சாரி டா. என்னை மன்னிச்சுடு, உன்னிடம் பொய் சொன்னதற்கு. நீயும் என்னை கொஞ்ச நாளா வீட்ல கல்யாணத்தை பத்தி பேசச் சொல்லி நச்சரிச்சிட்டே இருந்த. ஆனா அவங்க மனப்போக்கு தெரிஞ்ச பிறகு அவங்க முடிவை உடனே  சொல்லி உன்னோட மனசை காயப் படுத்த விரும்பல. அதான் பொய் சொன்னேன்.

“காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ண முடியாத அளவு கோழை ஆகிட்ட தானே. நான் இதை உன்கிட்ட இருந்து கொஞ்சமும் இதை எதிர்பார்க்கலை திவா. என் கிட்ட இனி பேசாதே. என்னுடைய மூஞ்சில கூட முழிக்காதே”.

விசாலினி அந்த அபார்ட்மெண்டில் இருந்து புயலென வெளியே வந்த போது வானம் தூற ஆரம்பித்தது. அதை விட அதிகப் படியான தண்ணீரை அவளுடைய கண்கள் பொழிய ஆரம்பித்திருந்தது. அவள் தன்னுடைய காரை நோக்கி விரைவாக ஓடினாள். விசாலினி கிளம்பிய உடன் கையில் கிடைத்த ஒரு உடையை அணிந்து அவளை சமாதனப்படுத்த வெளியில் வந்த திவா அவளை பார்க்கிங் லாட்டில் தேடும் போது விசாலினி அந்த பார்க்கிங் லாட்டிலிருந்தும் அவனுடைய வாழ்கையிலிருந்தும் வெகு தூரம் சென்றிருந்தாள்.

அந்த விமானம் ரன்வேயில் டாக்ஸி ஆகும் போது காலை மணி ஒன்பது  ஆகியிருந்தது. உள்ளே அமர்ந்து இருந்த திவாகருக்கு சிகாகோ வந்தாலே விசாலினியின் நினைவு வராமல் போகாது. இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய நினைவு என்றாலும் அன்றே நடந்தது போன்று அவ்வளவு தெளிவாக நினைவிருக்கிறது.

அவனுடைய மகள் ஹாசினி யூனிவர்சிட்டி ஆப் சிகாகோவில் இறுதி ஆண்டு படிக்கிறாள். விசாலினியுடனான பிரிவிற்கு பிறகு அவன் வீட்டில் பெற்றோர் பார்த்த ஆஷாவை கரம் பிடித்தான். ஒரு மகன் மகள் என்று அளவான குடும்பம். மகள் கல்லூரியில் படிக்க மகன் உயர் நிலைப்பள்ளியில் இறுதி வருடம் படிக்கிறான். அலுவலகம் சம்பந்தமான ஒரு கான்ஃபரென்ஸ்சிற்கு சிகாகோ வந்திருந்தான். இரவு மகளுடன் சேர்ந்து உணவு அருந்துவதாக திட்டம்.  

இரவு சரியாக 7 மணிக்கு “இந்தியன் கிளே பாட்” என்ற அந்த உணவகம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பார்க்கிங் கிடைக்காததால் சற்று தூரத்தில் பார்க் செய்து திவாகர் அந்த ரெஸ்டாரண்ட் உள்ளே நுழைகையில் ஹாசினி ஏற்கனவே இடம் பிடித்து அமர்ந்திருந்தாள். அவனை கண்டதும் வேகமாக கையை ஆட்டியவள் அன்று அழகான பிங்க்  உடை அணிந்து தேவதை போல அழகாக இருந்தாள்.

ஹாய் டாட்,  ஹௌ  ஆர் யூ? என்று அழகான நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாள்.

அவளை கூர்மையாக பார்த்தவாறே “நல்லா, தமிழ்ல கேட்கலாமே இதை” என்றான்.

நான் நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா” என்றான் சிரித்தவாறே.

யூ லுக் வெரி ஷார்ப்  ஹாஸு. என்ன ஸ்பெஷல்? என்றான் திவாகர்.

“சும்மா கிண்டல் செய்யாதீங்க டாட். நான் இப்படித்தான் எப்பவுமே இருப்பேன் இல்லையா” என்றாள் ஹாசினி தந்தையை பார்த்து கண்ணடித்தவாறே.

“ஹ்ம்ம், ஏதோ ஸ்பெஷல் இருக்கு”. சரி, நீ சொல்லு என்ன சாப்பிடற?

அவர்கள் இருவரும் மெனுவை பார்த்து ஆர்டர் செய்தார்கள். ஆர்டர் செய்த உணவும் அதிசயமாக சீக்கிரமே வரவும் படிப்பு, அலுவலக வேலை என்று பலதும் பேசி உணவை சாப்பிட்டு முடித்தார்கள்.

“என்ன ஹாஸு, ஏதோ சொல்லணும் அப்படின்னு நினைத்து சொல்லாத மாதிரி தெரியுது” என்றான் திவாகர் சாக்லேட் ஐஸ்கிரீமை சுவைத்தவாறே.

இல்லப்பா. எனக்கு பெர்லின்ல ஒரு இன்டர்நேஷனல் அசைன்மென்ட் கிடைச்சிருக்கு. இந்த வருட இறுதி தேர்வு முடிஞ்ச உடனே போகணும். அம்மா கிட்ட சொன்னேன். ஒரு அளவுக்கு ஓகே. நானே அப்பாகிட்ட சொல்வேன்னு அவங்களை உங்களிடம் சொல்ல விடலை. அசைன்மென்ட் நல்லபடியா   முடிஞ்சா அங்கேயே வைஸ் ப்ரெசிடெண்ட் மாதிரி கேடர்ல போஸ்டிங் கிடைக்கலாம். சோ, கொஞ்ச வருடங்கள் அங்கே இருக்கற மாதிரி இருக்கும்.

திவாகர் மனம் கொஞ்சம் பாரமானது. குழந்தைகள் படிப்பு என்று வெளியில் சென்றாலே பின்னர் வேலை குடும்பம் என்று வீடு திரும்புவதே இல்லை. இருந்தும் அதை வெளி காட்டாமலேயே புன்னகைத்து "அப்பா ரொம்ப ஹாப்பி ஹாசினி. செமத்தியான நியூஸ். ஜெர்மனி தானே. ஒன் பிளைட் அவே. நானும் அம்மாவும் நினைச்சா பாக்க வந்திடுவோம். காங்கிராட்ஸ்" என்று அவனுடைய உண்மையான மனநிலையை வெளிக்காட்டி கொள்ளாமல் சிரிப்புடன் அவள் கையை பற்றி குலுக்கினான்.

அப்பறம் அப்பா, என்று சொல்லி நிறுத்தினாள் ஹாசினி.

என்னம்மா?  

“நான் ஜெர்மனி போக போறது என்னோட பியான்ஸ்  கூட என்று சொல்லி நிறுத்தினாள்” ஹாசினி. அப்பொழுது தான் அவளுடைய கைகளை கவனித்தான்.ஒரு ஒற்றை வைர ரிங் அவனை பார்த்து சிரித்தது.

என்னம்மா சொல்ற? என்று திவாகர் மெல்ல அதிர்ந்தவாறே.

ஆமாம் பா. என்னுடைய பியான்ஸ் இந்த வாரம் தான் ப்ரொபோஸ் பண்ணா. நானும் ஓகே சொல்லிட்டேன். ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து தான் ஜெர்மனி போறோம். அவளையும் வர சொல்லிருக்கேன், உங்களை பார்க்கறதுக்கு என்ற போதே வெள்ளை உடையில் ஹாசினியின் ஒத்த வயதுடைய ஒரு அழகான இளம் பெண் அவர்கள் டேபிளை நோக்கி வரவும் சரியாக இருந்தது.

அப்பா, “மீட் விசாலினி கணேஷ். மை பியான்ஸ்” என்று ஹாசினி சொன்னது திவாகருக்கு மங்கலாக கேட்டது. அவனுடைய கனவுகள் உடைபடும் சத்தம் மட்டும் அங்கிருந்த எல்லோருக்கும் கேட்டிருந்தால் ஒரு ஆழி பேரலையின் இரைச்சலை தங்கள் காதுகளுக்கு வெகு அருகிலேயே கேட்டிருப்பார்கள். திவாகர் மயங்குவதற்கு முன் கடைசியாக அந்த வெள்ளை உடை பெண்ணை பார்த்த போது அவனுக்கு அவளுடைய முகத்திற்கு பதில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பார்த்த விசாலினியின் முகமே தெரிந்தது.

“அப்பா, அப்பா” என்று ஹாசினி மயங்கி சரிந்த அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

காலம் ஒரு சரியான தீர்ப்பு வழங்கியதாய் தன்னுடைய பக்கங்களில் குறித்திருக்க கூடும்.

அசோகவனத்து சிறை


ஒரு சிறுகதை போட்டிக்காக எழுத்தியது……..வெற்றி பெறவில்லை என்றாலும் போட்டியில் பங்கேற்றது நிறைவளித்தது….


அந்த அறையில் மண்ணெண்ணெய் நெடி அடித்துக் கொண்டிருந்து. தாழ் போடாமல் திறந்திருந்த அந்த ஒற்றை ஜன்னல் வழியே காற்று மட்டுமே உள்நுழைந்து அந்த மண்ணெண்ணெய் வாடையை நீக்கும் கடினமான பணியை செய்து கொண்டிருந்தது. மண்ணெண்ணெய் டின்னும் தீப்பெட்டியும் அந்த அறையில் இருந்த அந்த பழைய பெஞ்சில் இருந்தது. அந்த பெஞ்சின் இன்னொரு மூலையில் அமர்ந்து இருந்தாள் கருணா. அவள் மனம் கடலலையில் சிக்கிய ஓடம் போல அலைபாய்ந்து கொண்டிருந்தது.     

கணவன் பார்த்திபன், மகள் அனுஷா என்று சிறிய குடும்பம். சென்னை போன்ற பெரு நகரத்தில் ஒற்றை சம்பளத்தில் வாழ முடியாது என்று பார்த்திபன் மணமான புதிதிலே சொன்னதால் மதுரையிலேயே இருந்துவிட்டார்கள். கருணாவிற்கு தாய் தந்தையர் அடுத்தடுத்து தவறி விட்டதால் மதுரையை தாண்டி வேறெங்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரே தம்பியும் பெங்களூரில்  இருக்கிறான். எப்போதாவது போன் செய்து பேசுவான். அவனை நேரில் சென்று பார்க்க அவளுடைய பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பதை விட பார்த்திபன் அதில் ஆர்வம் அதிகம் காட்ட மாட்டான் என்பதே முதன்மை காரணி.  இந்த ஊரை தாண்டி பார்த்திபன் வேற எங்கேயாவது தன்னையும், தன்  பெண்ணையும் அழைத்துச்  செல்வான் என்பதெல்லாம் அவளை பொறுத்தவரை பகல் கனவு மட்டுமே.  மகள் அனுஷா நன்கு படிப்பவள். 10-வது  வந்த பிறகு இப்போது தான் தன்னை சற்று கூடுதலாக அலங்கரித்து கொள்கிறாள். கண்ணாடி முன் கொஞ்சம் அதிக நேரம் செலவிடுகிறாள் என்பதை தவிர மற்றபடி அவளால் கருணாவிற்கு எந்த குறையும் இல்லை. அனுஷாவிற்கு மேடை பேச்சு நிரம்ப பிடிக்கும். பள்ளிக்கு கூடத்தில் பட்டிமன்றம், பேச்சு போட்டி போன்றவற்றில் ஆர்வமாய் பங்கேற்பாள். அம்மா, இன்னும் இரண்டு நாள்ல தமிழ் பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் பேச போறேன். நீங்க கண்டிப்பா வந்து பாக்கணும்னு கட்டளை வேறு போட்டிருந்தாள்.

சிறிய குடும்பம் பெரிய பிடுங்கல் இல்லை என்று இந்நேரம் நீங்கள் நினைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம். பார்த்திபன் கொஞ்சம் குடிப்பான். அதைத் தவிர மனைவி மேல் நிறைய சந்தேகப்படுவான். அடுத்த வீட்டுக்கு சென்று காப்பித் தூள் வாங்கவேண்டும் என்றாலும் கூட அனுஷாவை மட்டுமே அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால்  அங்கே "எவன் கிட்ட பல்லை இளிச்சிட்டிருந்த" என்று கூசாமல் பேசுவான்.அவனை பொறுத்தவரை கருணா வீட்டிற்கு யாரவது வந்து அவர்களிடம் பேசினால் கூட அவர்கள் போன பிறகு "பட்டு பட்டுனு பேசி அனுப்ப வேண்டியது தானே. அது இல்லாம என்ன சிரிச்சு சிரிச்சு பேச்சு" என்பான். கருணா வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்றால் பால் வாங்கணும், காய்கறி வாங்கணும், மாவு மெஷினுக்கு போகணும் அப்படின்னு எப்போதும் ஒரு அரிசி, கோதுமை வைக்கப்பட்ட பாத்திரமோ, ஒரு கூடையோ எடுத்துக் கொண்டே வீட்டை விட்டு செல்வாள். ஒரு நாள் கூட இவங்க வீட்டுக்கு போகணும்னு அவள் சொல்லிவிட்டு போக முடியாது. அப்படி சொன்ன எதுக்கு? ஏன்? என்ன பேசணும் அப்படின்னு அவன் பண்ற கெடு பிடியில் கருணாவிற்கு வெளியே போக வேண்டும் என்ற ஆசை கூட போய்விடும். அவனுடைய குணம் தெரிந்து அவன் வீட்டில் உள்ள நேரம் பெண்களை தவிர அக்கம் பக்கத்தில் உள்ள ஆண்கள் யாரும் வரவே மாட்டார்கள். இதில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இல்லை. பக்கத்து வீட்டு பையன் 6 வயது ரகு கூட வர மட்டான் பார்த்திபன் வீட்டில் இருக்கிறான் என்பது தெரிந்தால்.

அன்றும் வழக்கம் போல அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் ஹாலில் உள்ள சேரில் ஹாயாக அமர்ந்திருந்தான். காலை முதல் வீட்டில் அடைந்து கிடந்த கருணாவிற்கு அன்று எங்கேயாவது போக வேண்டும்  போல் இருந்தது. என்ன செய்வது இவனிடம் எங்கே என்று சொல்லிவிட்டு செல்வது என்று யோசனையில் இருந்தாள்.

“நைட், சப்பாத்தி குருமா செய்” என்று சொன்னவாறே பேப்பரில் ஆழ்ந்தான். பின்னர் வெளியே  வராந்தாவிற்கு சென்றவன் சிறிது நேரத்தில் விறு விறு என உள்ள வந்தான். அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவனுடைய முகத்தை ஏறிட்டு பார்த்தவளுக்கு வயிற்றை பிசைய ஆரம்பித்தது.

அனுஷா சற்று நேரத்தில் வீட்டில் நுழைந்தாள்.

அனுஷா, நில்லு. எங்க போயிட்டு வர?

டியூஷனுக்கு பா. கணக்கு டியூஷன்.

கணக்கு டியூஷன் போ. ஆனா கண்ட கண்ட பசங்க கிட்ட என்ன பேச்சு. தெரு முனையிலே நோட்டு கொடுக்கறது, நோட்டு வாங்கறது அப்படிங்கறது எல்லாம் என்ன புது பழக்கம். நீ பசங்க கிட்ட பேசி தான் படிக்கணும்னா அப்படி பட்ட படிப்பே வேண்டாம் என்று சீறினான்.

அனுஷாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“இல்லப்பா, டியூஷன் நோட்ஸ் நான் தான் வாங்கினேன்”. ரெண்டு நாள் உடம்பு சரி இல்லாம நோட்ஸ் மிஸ் பண்ணிட்டேன். அதை எழுதறத்துக்காக தெரு முனைல இருக்கற சரவணன் கிட்ட நோட்ஸ் வாங்கினேன். அதை தவிர ஒண்ணும் இல்லை என்றவள் உதவிக்காக அம்மாவை பார்த்தாள்.

கருணா தவித்தாள். இறைவா, இவ்ளோ நாள் என்னை மட்டும் தான் இந்த மனிதன் கஷ்டப் படுத்திக் கொண்டிருந்தான். வேறு போக்கு இல்லாததால் நான் வாய் மூடி மௌனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது என்னை மட்டுமல்ல என் பெண்ணையும் வார்த்தைகளால் கொல்கிறானே. எங்களை காப்பாற்று” என்று எல்லா கடவுளையும் வேண்டினாள்.

“இல்லங்க, நான் பாத்துக்கறேன். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க” என்று மெல்லிய குரலில் அவள் ஆரம்பிக்கவும், “என்னடி, அம்மாவும், பொண்ணும் சேர்ந்து நாடகம்  ஆடறீங்க. நீயே ஒரு ஏமாத்துக்காரி. கடைக்கு போறேன், மில்லுக்கு போறேன்னு அங்க இங்க போற”. என்ன முழிக்கற, உன்னை பத்தி என் காதுக்கு விஷயம் வராதுன்னு நினைக்கறியா?  எனக்கும் இந்த ஊர்ல தெரிஞ்சவங்க இருக்காங்க. நல்லது கெட்டது என் காதுக்கும் வரும். “பேச வந்துட்டா பெரிசா” என்று சீறினான்.

இந்த நல்லது கெட்டது சொல்றவங்க உன்னை குடியையும் விட சொல்லிருக்காங்களா என்று நா வரை வந்த கேள்வியை கேட்க முடியாமல் அடக்கினாள் கருணா. அனுஷாவை அந்த இடத்தில் இருந்து சீக்கிரம் எப்படி அனுப்புவது என்று கையை பிசைந்தவள், அந்த நேரத்தில் அழைப்பு மணி அடிக்கவும் சற்று ஆசுவாசமானாள்.

பார்த்திபன் கதவை திறந்து வந்தவரை பேசி அனுப்புவதற்குள் அனுஷாவை கண் ஜாடை மூலம் அவளுடைய அறைக்கு அனுப்பினாள். கிச்சனில் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். ரகசியமாக அனுஷாவிற்கு சாப்பாடை அவளுடைய அறையிலேயே கொடுத்தவள் தானும் இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு அவனுக்கான உணவை ஹாட்-பாக்கில் எடுத்து வைத்தாள். கிச்சனை சரி செய்து விட்டு வந்தவள், அனுஷா ரூமிற்கு சென்று அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றாள்.

அனுஷா அழுதிருப்பாள் போலும், கண்கள் கொஞ்சம் சிவந்திருந்தது. ஏதோ புத்தகத்தை வெறித்து பார்த்தவாறு இருந்தவள் தாயைப் பார்த்ததும் விசும்ப ஆரம்பித்தாள்.

அனுஷா, சாப்பிட்டியா என்று ஆதரவாக கேட்டவுடன், அம்மா என்று அனுஷா மேலும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். பதறிப் போன கருணா,  அனுஷா, தங்கமே "அழாதே. உனக்கு அப்பாவை பத்தி தெரியும் தானே. இனிமேல் ஜாக்கிரதையா இரு . அம்மா உன்னை நம்பறேன்" என்றாள்.

கருணாவுடைய சமாதானத்தில் சற்று அழுகையை நிறுத்திய அனுஷா, சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனாள். ஏதோ ஏதோ எண்ண ஓட்டத்தில் இருந்த கருணா எப்போது தூங்கினாள் என்று தெரியாது. அவளுடைய கனவில் எல்லா திசைகளிலும் பளீரென வெளிச்சம் தென்பட்டது. கருணா அந்த வெளிச்சத்தை நெருங்கும் போதே அது பெரும் தீ என்பதை அறிந்தாள். அந்த தீயிலிருந்து வெளியேற வழி ஏதும் தென்பட வில்லை. கருணாவை அந்த தீ நெருங்கியது. கருணா பதறி எழுந்த போது பொழுது புலர்ந்திருந்தது.

காலை வேலைகளை முடித்து பார்த்திபனுக்கும், அனுஷாவிற்கும் தேவையான உணவினை தயாரித்து, அவர்கள் கிளம்பிய பின் துணி துவைத்து, அடுக்களையை ஒழித்து அவள் வந்து சிறிது நேரம் இளைப்பாறிய போது மணி பதினொன்று. திடீரன்று செல்பேசி ஒலிக்கவும் எடுத்து பேசினால் மறுமுனையில் அவள் தம்பி. சம்பிரதாய விசாரிப்புக்கு பின் "என்ன திடீர்னு போன் செய்யற?" என்றாள். இல்லை பிரமீளாவிற்கு ஒரு சின்ன ஆபரேஷன். ஒரு பத்து நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். பசங்களை வேற பாக்கணும். நீ வந்து ஒரு வாரம் இருந்தா எனக்கு கொஞ்சம் உதவிய இருக்கும் என்று நிறுத்தினான்.  டேய், உனக்கு அவரை பத்தி தெரியாதா. எனக்குன்னா எச்சி கையால காக்கா ஓட்ட மாட்டார். நீ போன் பண்ணேன்னு தெரிஞ்சா "இதான் சாக்குன்னு அங்கே போகலாம்னு பிளான் பண்ணாதே, யாரு எனக்கு இங்க சமைச்சு போடுவா. உன் புள்ளைய யாரு பாத்துக்கறதுன்னு ஏகத்துக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுவார்.நீயே பாத்துக்கோடா" என்றாள் இயலாமையுடன். சரிக்கா, நான் எப்படியாவது சமாளிச்சிக்கிறேன், யோசிச்சு பாத்து உன்னால முடிஞ்சா சொல்லு நானே டிக்கெட் எடுத்திடறேன் என்று சொன்னான். ம்ம் சரி என்று பெருமூச்சுடன் செல்பேசியை அணைத்தாள். தன்னை தாண்டி மற்றவர்களை பார்க்கும் மனநிலை ஆண்களுக்கு எளிதில் கைவருவதில்லை. அடுத்த வீட்டு பாட்டி உடல் நிலை சரி இல்லாத போது கூட "சும்மா எல்லாருக்கும் போய் செஞ்சிட்டு இருக்காதே. அப்பறம் அவங்க இதையே எதிர் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அவங்கள டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், மருந்து வாங்கி தரேன்னு செலவை  இழுத்து விட்டுடாதே, பணம் மரத்துல காய்க்கல என்பான். இத்தனை பேச்சும் அவள் அந்த பாட்டிக்கு ஒரு வேளை கஞ்சி காய்ச்சி கொடுத்ததற்கு மட்டுமே. அந்த பாட்டி ஆசையுடன் செய்து தந்த வடை,டீ போன்றவற்றை உண்டவன் தான். ஒருவரின் தயவு தேவை இல்லை என்று அவனால் எப்படி அவ்வளவு சீக்கிரம் ஒதுக்க முடிகிறதோ என்று அவளுக்கு கூட ஆச்சரியமாக இருக்கும்.

அன்று காலை முழுவதும் தம்பியிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பையே எண்ணிக்  கொண்டிருந்தது அவள் மனம்.

பார்த்திபன் அலுவலகத்திலிருந்து வந்த பின் அவனுக்கு டிபன் எடுத்து கொடுத்து விட்டு, மகள் அனுஷா டியூஷன் சென்ற பின் மெதுவாக அவனிடம்

“என்னங்க, இன்னைக்கு என் தம்பி போன் பண்ணான்”.



“ம்..”என்றான் பார்த்திபன் சுரத்தின்றி.



அவன் மேலும் எதுவும் கேட்பான் என்று அவளுக்கு தோன்றாது போகவே, அவளே மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.



எங்க நாத்தனாருக்கு ஒரு சின்ன ஆபரேஷன். ஒரு வாரம் நான் வர முடியுமான்னு கேட்டான்?



“அம்மணி, என்ன முடிவு பண்ணியிருக்கீங்க” என்றான் கொஞ்சம் ஏளனமாய்



அவளுக்கு சற்றே தயக்கமாய் இருந்தது. ஆனது ஆகட்டும் என்று “இல்லை, உடம்பு முடியலன்னு தானே கூப்பிடறாங்க. கஷ்டமா  இருக்கு வர மாட்டேன்னு சொல்றதுக்கு. நானும் அனுஷாவும் ஒரு வாரம் போய் இருந்திட்டு வரட்டுமா?”

அவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு நீ போற. ஆனா இங்க நான் மட்டும் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவேன்னு ஏன் உனக்கு தோணலை. ஊர் சுத்த போறதுல உள்ள அக்கறை கொஞ்சம் புருஷன் மேலயும் வைக்கலாம் இல்ல என்றான் சுருக்கென்று ..

இல்ல, பக்கத்துக்கு வீட்டு பாட்டி கேட்டா சமைச்சி தருவாங்க.உங்களுக்கும் வீட்டு சாப்பாடு கிடைக்கும். உங்க ஆபீஸ்ல லீவு கிடைக்கும்னா நீங்களும் வாங்க. எங்களுக்கும் துணையா இருக்கும்.

ஆமா, நீங்க போறதுக்கே நான் இன்னும் சரி சொல்லல. இதுல என்னை வேற கூப்பிடற. டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சா? இல்ல வெறும் தகவலா சொல்றியா?

என்னங்க நீங்க? உங்கள கேக்காம எப்படி பண்ணுவேன்? என்றாள் கருணா.

அந்த மட்டும் புருஷன் மேல மரியாதை வெச்சிருக்கியே. அதுவே பெரிய விஷயம். ஆமா, பெங்களூர்ல தம்பி வீட்டுக்கு மட்டும் தான் போறியா? இல்ல, இதான் சாக்குன்னு உங்க அத்தை பசங்க இருக்காங்களே அவங்களையும் பாக்க போறியா. பெங்களுர்ல தானே இருக்காங்க.

இல்லைங்க தம்பி வீட்ல நான் இருந்தா அவங்களுக்கு உதவியா இருக்கும் தானே போகிறேன். அதனால தம்பி வீடு தவிர வேற எங்கேயும் போக மாட்டேன். அத்தை, நாத்தனாரை பாக்க வந்தா அவங்கயும் பார்ப்பேன். இல்லனா இதுக்காக அங்க போக போறது இல்லை என்றாள், அவன் போக வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்று பயந்தவாறே.

கருணாவின் அத்தை மகன்கள் சந்திரன் மற்றும் புவனன் இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். கை நிறைய சம்பளம் வேறு. பார்க்கவும் லட்சணமாக இருப்பார்கள்.  அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பது கூட தெரியாதா இல்லை வேண்டும் என்றே அவளை காயப்படுத்த வேண்டும் என்று கேட்கிறானா என்று  தோன்றியது.

சரி, சரி போய் தொலை. ஆனா போறதுக்கு முன்னாடி உன் தம்பிய தவிர வேற யார் வீட்டுக்கும் போக கூடாது. உன் தம்பியவே டிக்கெட் எடுத்து தர சொல்லு. வழி செலவுக்கு 500 ரூபா தரேன். அதை செலவு பண்ணாம எடுத்திட்டு வந்தா நல்லது. அப்பறம் இவங்க வீட்டுக்கு போனேன், அவங்க வீட்டுக்கு போனேன் அப்படின்னு எனக்கு தெரிய வந்தா நீங்க ரெண்டு பேருமே திரும்பி வர வேண்டாம் அங்கேயே இருந்திடுங்க என்றான் சுருக்கென்று.

அவளுக்கு கன்னத்தில் அறைந்ததை போல் இருந்தது.ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் கூட போய் பார்ப்பதற்கு எத்தனை பேச்சுகளை கேட்க வேண்டி இருக்கிறது. இத்தனை நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சந்தேகப்பட்டது  போய் இன்று உறவினர்கள் கூட பார்த்திபனின் சந்தேக வட்டத்தில் இருந்து தப்பவில்லை.

சரிங்க என்றாள். அத்தனை பெரிய நகரத்தில் 500 ருபாய் எல்லாம் எந்த மூலை. ஒரு வேளை சாப்பாடு கூட வாங்க முடியாது. ஒரு இடத்தில் இன்னொரு இடத்திற்கு ஆட்டோவில் செல்வது கூட கடினம் ஆயிற்றே? இன்னும் பணம் கேட்டால் நீங்க போக வேண்டாம் என்று சொல்வான். தம்பியிடம் கேட்பதற்கு கூச்சம் மட்டும் அல்ல. தம்பி குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொண்டு போய் கூட கொடுக்க முடியாதே. பணமாக கொடுப்பது என்றாலும் 100 ரூபாயை விட கம்மியாக கொடுக்க முடியாது. வழி செலவு, சாப்பாடு என்று அவர்களுக்கு வேறு செலவு ஆகும் .வேண்டாம் என்று சொல்லாமல் போவதை எவ்வளவு கடினம் ஆக்கிவிட்டான். பணம் சம்பாதிக்காத பெண்கள் எல்லாம் அடிமையை விட கீழானவர்கள் என்று மறுகினாள். போக முடியாது என்பதை விட எல்லாவற்றையும் சந்தேக் கண் கொண்டு நோக்கும் அவன் செயல் அவளை அருவருக்க வைத்தது. ஒரு கூண்டுக்குள் அவளை அடைத்ததை  போல் உணர்ந்தாள். கழிவிரக்கம் மிகுந்து ஒரு துளி கண்ணீர் வெளிவந்து அவள் கன்னத்தை நனைத்தது.

அந்த கண்ணீர் அவள் கண்களை தாண்டி கன்னத்தை தொட்டபோது கருணா நனவுலகத்திற்கு வந்தாள். கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் ஆவேசமாய் அந்த மண்ணென்னை டின்னை திறந்தாள். அவள் திறந்த வேகத்தில் மண்ணெண்ணெய் திறந்து கீழே சிதறியது . அந்த மண்ணெண்ணெய் சிதறிய இடத்தின் மையத்தில் வந்து நின்றாள். இன்னொரு கையால் அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்து பொருத்தினாள்.

பள்ளிகளுக்கு இடையே நடந்த அந்த பேச்சு போட்டியில் அனுஷா ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தாள். ஓராண்டு காலம் அசோக வனத்தில் சிறைப்பட்ட சீதையின் மனதில் ஒரு வினாடி கூட இராவணன் தங்கவில்லை. தன் கற்பு திறத்தை ஒரு முறை அல்ல இரு முறை எளிதாய் தீயில் புகுந்து நிரூபித்தாள். ஆனால் இராமானுக்கோ யுத்த களத்தில் அல்லாமல் வேறெங்கும் காணாத இராவணன் அவன் உள்ளத்திலேயே தங்கி விட்டான். மனைவியை சந்தேகித்தான், அவளை பிரிந்து வாழ்ந்தான், அசோகவனம் உண்மையில் சீதையின் சிறை அல்ல..அது ராமனுடைய சிறை...கைதட்டல் ஓசை வெகுவேகமாக எழுந்தது.

அந்த கைதட்டல் ஓசை ஏற்படுத்திய அதிர்வொலி காற்றில் பரவியிருக்கலாம். அதுவோ, அனுஷாவை பற்றிய எண்ண அதிர்வோ, இராமனின் பெருமூச்சோ எதுவோ திறந்திருந்த சாளரத்தின் வழி சென்று கருணாவின் கையில் இருந்த அந்த தீக்குச்சியை அணைத்தது.

மாற்றம் ஒன்றே மாறாதது - கொரோனா ஒரு பார்வை

தடைபடா  மனித ஓட்டம் நின்றாகிவிட்டது. தூங்கா நகரம் தூங்கி விட்டது. விண்வெளியில் இருந்தும் தெரியும் பெருஞ்சுவர்கள் கண்ணுக்கு  புலப்படாத  கிருமிகளை தடுக்கும் சக்தியற்றதாகிவிட்டது. மனிதனின் ஆணவம் அடித்து நொறுக்கப்பட்டது. எத்தனை பணம் இருந்தாலும் உனது நேரம் குறிக்கப்பட்ட பிறகு உலகில் உள்ள எதை கொடுத்தாலும் ஒரு வினாடி கூட அதிகம் பெறப்  முடியாது என்பது மீண்டும் நிறுவப்பட்டது. உண்ண உணவு, உடுக்க சில உடைகள், குடிக்க நீர், பேச தன் குடும்பம் மட்டுமே என்ற அளவில் தேவைகள் சுருங்கிவிட்டன. கேளிக்கை, கும்மாளம், யாரை பற்றியும் எதற்கும் கவலைபடாமல் புற இன்பத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பலவும் இன்று தேவையற்றதாய் போய்விட்டது. ஆணவத்துடன் உணவு சங்கிலியில் மனிதனை எல்லா உயிரினங்களுக்கும் மேல் நிறுத்திய செய்கையை கண்டு எல்லா உயிரினங்களும் மனிதனை ஏளனத்துடன் பார்க்கின்றன.

நிலைமை சரியானவுடன் மனிதன் தடை செய்யப்பட்ட விலங்குகள் விற்கும் சந்தையில் பாம்பையும், வௌவாலையும், பூச்சிகளையும் அடைத்து விற்பனை செய்வதை நிறுத்தி விடுவானா, இல்லை. சீனா திடீரன்று உலக மக்கள் மேல் அக்கறையும் கரிசனம் கொள்ளுமா,  அமெரிக்கா பொருளாதாரத்தை காரணம் காட்டி மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் புவி வெப்பமயமாக்கல், இயற்கை  பேரழிவு போன்றவற்றை தடுத்து நிறுத்துமா,  சுதந்திரம் இல்லாமல் வாழ்வது என்றால் என்ன என்று உணர்ந்து மனிதன், மிருகக் காட்சிசாலைகளையும், விலங்குகளை கேளிக்கைக்காக சிறைப்படுத்துவதையும் கைவிட்டு விடுவானா அல்லது  தன்னுடைய தேவைகளுக்காக மனிதன் அழிக்கும் காடுகளையும், அதனால் சீர்கெடும் விலங்குகளின் வாழ்வாதாரத்தை மீட்டு  தருவானா என்றால் இது எதுவும் நடக்க போவது இல்லை.

ஏனென்றால் நிலைமை சீரானவுடன், தனி மனிதன் திரையில் காணும் நட்சத்திரங்களை உண்மை என எண்ணி கை தட்டுவதை  தொடங்கி விடுவான். ஊரை தூய்மையாக வைக்க பாடுபட்ட துப்புரவு பணியாளர்களையும், உயிர் காக்க பாடுபட்ட மருத்துவ சமுதாயத்தையும் மறந்து விடுவான்.  ஊரை  காக்க வெயிலிலும், இரவிலும் அரும்பாட்டு பட்ட காவலர்களை விட ஊரில் உள்ள பெரிய பணக்காரனிடம் சென்று உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேள்விக் கணை வீசி புளகாங்கிதம் அடைவான். கடவுள் தனக்குள்ளே என்பதை மறந்து வெளியில் சென்று போலி சாமியார்கள் இடையே தேடி அலைவான். நிலையாமையை மறந்து அடுத்தவனை ஏய்த்து சில பல கோடிகள் சேர்த்து சாமர்த்தியசாலி என்றும் வெற்றியாளன் என்றும் பெயரை சேர்த்து சமுதாயத்தில் தலை நிமிர்த்தி வலம் வருவான். பணம் சேர்க்க வேண்டும் என்று தன்னுடைய உடலை வருத்தி பணம் சேர்த்து பின் மருத்துவரிடம் சென்று அதை பாங்காய் செலவழிப்பான். போதை, மது என்ற எல்லாவற்றிடம் நிம்மதி தேடி அடுத்தவருக்கு உதவி செய்வதில் உள்ள மனநிறைவை அறியமாலேயே வாழ்ந்து மடிவான். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் இருக்க வேண்டும் என்பதை மறந்து  பெரிய விளம்பர பலகைகளிலும், சுவரொட்டிகளிலும்  ஆடம்பரமாய் விளம்பரம் செய்து சுயபெருமை சொல்லித் திரிவான். எல்லா விலங்குகளும் உணவு என்ற எண்ணத்தில் மட்டுமே பார்த்து மேலும் பல புதுப்புது வியாதிகளை உருவாக்கி தன இனம் அழிவதை கண்டு மருளாமல் உலகப் பொருளாதாரம் சரிந்ததால் பங்குகள் மலிவான விலையில்  கிடைக்கிறது என்று எண்ணி பூரிப்பான்.

சரி, அப்பொழுது கொரோனவால் ஒரு மாற்றமும் வரவில்லையா என்று கேட்போருக்கு:

1. வீட்டில் அமர்ந்தே இருந்து வேலை செய்ததால்  ஐ.டி. ஊழியர்களுக்கு உடை அளவு மாறிவிட்டது.
2. வேலை இல்லாமல் அடுத்த வேளை கஞ்சிக்கே வழி இன்றி வீடு திரும்ப முடியாமல் தவித்த ஏழைகளின் உடை அளவும் மாறி விட்டது.
3. வாரம் ஒரு சினிமா, ஹோட்டலில் சாப்பாடு, வாரம் இரண்டு பார்ட்டி என்ற  அனாவசிய செலவுகளை குறைத்ததால் இப்போது கொஞ்சம் பாங்க் அக்கௌண்டில்  பணம் இருக்கிறது. அதையும் நிலைமை சரியானவுடன் உடலை சீரழிக்கும் எல்லாவற்றையும் ஒன்றிற்கு இரண்டு மடங்காக சாப்பிட்டு எப்படியும் டாக்டர் வீட்டிற்கு சென்று பணத்தை செலவழித்து சுகம் பெறுவோம் என்பதை உறுதியாக நம்பலாம்.
4. டாக்டர் வீட்டில் கூட்டம் குறைந்துள்ளது. அத்தியாவசியம் அன்றி வேறு சிலவற்றுக்கு காலமும், நல்ல உணவும், ஓய்வும் மட்டுமே மருந்து என்பது தெரிந்துள்ளது.
5. காற்றின் மாசு அளவு குறைந்துள்ளதால் நல்ல சுத்தமான காற்று இப்பொழுது எல்லாருக்கும் கிடைக்கிறது. ஓசோன் படலம் தன்னை மறுசீரமைத்துக்கொள்ள கொஞ்சம் அவகாசம் கிடைத்துள்ளது. பஞ்சாபில் இருந்து 200  கி.மீ தொலைவிலுள்ள இமயமலை இப்பொழுது தெரிகிறதாம். 
6.  உலகம் முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட்டு குறைந்து அமைதி திரும்பியுள்ளது. நான் பெரியானவனா, நீ பெரியவனா என்ற பலம் காட்டும் பரிட்சையில் போட்டியிட்ட நாடுகள் பலவும் உள்ளூரில் உள்ள மக்கள் தேவைகளை பற்றி சிந்திக்க தொடங்க ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
7.  பல்வேறு மிருகங்கள் தாங்கள் வாழும், இடம், சூழல் போன்றவற்றை மீட்டெடுத்துள்ளன. இத்தாலியில் கரையோரம் தென்படும் டால்பின்கள் ஆகட்டும், மும்பையில் கடற்கரையில் தற்போது படையெடுக்கும் டால்பின்கள் ஆகட்டும் உலகெங்கும் விலங்குகள் தங்கள் வசிப்பிடங்கள் எவை எவை என்பதை மறுபடியும் நிறுவுகின்றன.
8. பெட்ரோல், டீசல் விலை அதலபாதாளத்தை தொட்டிருக்கிறது. ஒரு பொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் போனால் அந்த பொருளின் விலை எவ்வாறு கட்டுப்படுகிறது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அமைகிறது என்பதை இது காட்டுகிறது. அக்ஷய திருத்திகை என்று தங்கத்தை வாங்கி குவிக்கும் அம்மணிகள் கவனிக்க.
9. ஆணவத்தின் உச்சியில் நின்று, மனிதனை உணவு சங்கிலியின் உச்சத்தில் நிறுத்திய அசட்டுத்தனத்தை பார்த்து கரடியும் காரி துப்பியது.அப்படி துப்பிய எச்சிலை துடைக்க பெரிய பேப்பரை மனித குலம் வெட்கிக்  கொண்டே தேடிக் கொண்டிருக்கிறது அதோடு  கரடிகளும்,புலி, சிங்கத்தையும் விலங்கு காட்சி சாலைகளிலும், சர்க்கஸ் போன்ற இடத்தில் அடிமைப்படுத்தி வைக்கும் போது அவ்விலங்குகளுக்கு உண்டாகும் மனா அழுத்தத்தையும், சுதந்திரத்தை பறிக்கும் செயலையும் மனித குலம் கைவிடாவிட்டால் இதை விட பலமாக இயற்க்கை திருப்பி அடிக்கும் என்பதை மனிதர்கள் மறக்காமல் காலத்தின் பக்கத்தில் குறித்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
10. கிரேட்டா தார்ன்பர்க் உள்ளிட்ட சுற்றுசூழல் காப்பாளர்கள் இத்தனை காலம் உலக வெப்பமயமாதலால் உண்டாகும்  அழிவுகளை பற்றி கரடியை கத்தியும் கரடி பாஷை தெரியாது என்று கேளாமல் இருந்த உலக மாந்தர் இப்போது விழித்து கொண்டது போல தோன்றுகிறது. அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகளுக்கு அடியே மனித குலத்துக்கு எமனாய் பலவிதமான உயிர் கொல்லி வைரஸ்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். இந்த அபாய சங்கு ஊதுவதை கேளாமல்  செவிடு போல் நடிக்கும் மனப்பான்மையை கைவிட்டு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.
https://www.express.co.uk/news/world/1269334/arctic-news-coronavirus-outbreak-deadly-disease-ancient-virus-climate-change-ice-caps
11. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கை கட்டமைப்பு. இந்த கட்டமைப்பு இயற்கை என்ற ஆதி கட்டமைப்புக்கு கீழானது என்பதை மனிதர்கள் உணரவேண்டிய தருணம் வந்து விட்டது. இல்லையென்றால் இத்தகைய உயிர் கொல்லி நோய்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டி வரும் என்பது மட்டும் திண்ணம்.
12. உலகின் முன்னணி நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில் இத்தனை உயிர் இழப்புகள் ஆன பின் நல்ல தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை இப்போது உணர்ந்திருப்பார்கள். நல்ல தலைமை தனக்கு வரும் பல்வேறு தகவல்களை சீர் தூக்கி பார்த்து ஆபத்து வருவதற்கு முன் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை  முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். 2005-ல் ஜார்ஜ் புஷ் மற்றும் சில வருடங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கொள்ளை நோய்கள் பற்றி ஆற்றிய உரையினை குறிப்பிட வேண்டும். வெறும் ஓட்டிற்காக மட்டும் அல்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் தலைவர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை மட்டும் அல்ல நம்மை காக்கும் கருவியாகும்.
https://www.youtube.com/watch?v=uSDC5L7qYUc
https://www.youtube.com/watch?v=6Af6b_wyiwI
https://www.sciencemag.org/news/2020/02/trump-s-new-budget-cuts-all-favored-few-science-programs
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
என்று வள்ளுவர் பெருந்தகை கூறியதை இந்நாளில் சீர் தூக்கி பார்க்க வேண்டிய நேரம் இது.
13. இந்தியா ஒரு வல்லரசாக இந்த ஆண்டு மாறும். சீனாவை விட ஒரு பெரிய சக்தியாக வலம் வரும் என்று கம்பு சுழற்றிக் கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. சீனா போன்ற உற்பத்தி முனைவோராக இந்தியா இருக்க வேண்டிய நேரம் இது என்று பிதற்றி கொண்டிருப்போர் உணவுக்காக அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு 6 அடி  இடைவெளியில் நின்று கொண்டு காய்கறி வாங்கி கொண்டிருக்கும் போது தற்சார்பு பொருளாதாரத்தை பற்றி சற்றே சிந்திக்க வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகைக்கு தேவையான மருத்துவம், குடிநீர், உணவு, சுற்றுசூழல் போன்றவற்றில் முதலில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். சந்தை சார்ந்த பொருளாதாரம் என்பது எவ்வளவு அதல பாதாளத்தை நோக்கிய ஒரு பயணம் என்பது இப்போது சந்தையில் பெட்ரோல் டீசலை விற்க முடியாமல் அல்லாடும் ரஷியா, சவுதி போன்ற நாடுகளை கேளுங்கள். விவசாயத்தில் தன்னிறைவு பெற்று ஒரு விவசாய நாடாக மாற வேண்டிய கடமை மட்டுமே இந்தியாவிற்கு உண்டு.
கரோனா மனிதர்களை பெரிய அளவில் மாற்றிவிட்டதா அல்லது மாற்றவில்லையா என்பதை காலம் தன் வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யா காத்திருக்கிறது. மனிதா உனது அடுத்த நடவடிக்கை என்ன?

வியாழன், டிசம்பர் 05, 2019

அமெரிக்க மண்ணில் தமிழ்

அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் (அ.த.க.) முதலாம் ஆண்டு  விழா அரசி நகரமாம் சார்லட் வட கரோலினாவில், நவம்பர்  23,2019 அன்று, கோலாகலமாக நடைபெற்றது. கிட்ட தட்ட 122 வட  அமெரிக்க பள்ளிகள், 10000-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே குடையின் கீழ் இணைக்கும் பெரும் பணியையும், தமிழ் வழிக்  கல்வி அயல் மண்ணில் தழைக்கும் பொருட்டு தமிழில் பாடபுத்தங்கள், தமிழ் பள்ளியை திறம்பட நடத்தவும், நிர்வகிக்கவும் மென்பொருள், ஆசிரியர் பயிற்சி மற்றும் நீண்ட நாள் தான்னார்வல பணி ஆற்றும் ஆசிரியருக்கு விருதுகள் என்று பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்து வரும் தன்னார்வலர் அமைப்பே அ.த.க.

அடை மழை விடாது பெய்த போதிலும் தெற்கு கரோலினா, வாஷிங்டன் டி.சி. ஜாக்சன்வில் புளோரிடா, ஆஸ்டின், டெக்சாஸ், பிலெடெல்பியா, பென்சில்வேனியா என்று பல பகுதிகளில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும், சிறப்பு விருந்தினர்களும் வந்து விழா அரங்கத்தில் குழுமி இருந்தனர். முதலில் அ.த.க பள்ளி மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடினர் .அ.த.க. தலைவர் மணிமேகலை மற்றும் அகரம் தமிழ் பள்ளி ஆசிரியர்கள் திருமதி. விஜி சுரேஷ், திருமதி.ஜெயஸ்ரீ சேகர், கிரீன்ஸ்பரோ ட்ரியாட் பள்ளி ஆசிரியர்   திருமதி.பிரேமா அருள், கொலம்பியா தமிழ் குடில் பள்ளி ஆசிரியர் திருமதி.சிமிலதா ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை  துவக்க, பேராசிரியர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். ட்ரியாட் தமிழ் பள்ளி மாணவர்கள் வழங்கிய "கற்றதும் கேட்டதும்" என்ற பல்சுவை நிகழ்ச்சியனை தொடர்ந்து, அ.த.க-வின் நிர்வாக குழு மற்றும்  எதிர்கால திட்டம் பற்றிய உரையை  அ .த .க. தலைவர் திருமதி. மேகலை எழிலரசன் வழங்கினார். பாட நூற்களை வடிவமைத்தல் - சிக்கல்களும் , சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர். வாசு அரங்கநாதன் அவர்களும், இருமொழி முத்திரையின்வழி அமெரிக்காவில் தமிழ்க்கல்விக்கு ஊக்கம் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர். அனந்தகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் அவர்களும் தமது நெடிய தமிழ் பயணத்தில்  தாம் பெற்ற அனுபவங்களை, கேட்போர் பயன் பெறும் விதமாக எடுத்துரைத்தனர். அ.த.க பள்ளிகளை சார்ந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நெடு நாள் ஆசிரியர், செந்தமிழ் செல்வி, செந்தமிழ் செல்வன் விருதுகள் வழங்கப்பட்டன. அகரம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தனபாலன் சௌந்தரராஜன்(நிலை 4), தர்ஷன் சித்ராவினோதினி நிர்மல் (நிலை  2) ஆகியோர் செந்தமிழ் செல்வன் விருதும், யாழினி முருகன் (நிலை 6), தர்ஷினி ஷங்கர்(நிலை 4) மற்றும் ஸ்ருதிகா பிரதாப்குமார்(நிலை  1) ஆகியோர் செந்தமிழ் செல்வி விருதும், ஆசிரியர் திரு.சுதாகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியை திருமதி. திவ்யா தமிழரசு ஆகியோர் நெடுநாள் ஆசிரியர் விருதும் பெற்றனர்.  காலை நிகழ்ச்சிகளை அனைவரும் ரசிக்கும் விதமாக தொகுத்து அளித்தவர்கள் அகரம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி. உமா ரகுநாத் மற்றும் திருமதி. ரம்யா ரவீந்திரன் ஆவர்.

உணவு இடைவேளைக்கு பின்னர், முதல் நிகழ்ச்சியாக, முன் மழலை நிலை முதல் மூன்றாம் நிலை வரை இந்த வருடம் புதிதாக  தயாரிக்கப்பட்ட  பாட புத்தகங்களை முனைவர் திரு அரசு.செல்லையா அவர்கள் வெளியிட அ.த.க. ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள். அ.த.க.விழா மலரை ட்ரியாட் தமிழ் குடில் பள்ளியை  சார்ந்த ஆசிரியர். ரிஷி ரவீந்திரன், அகரம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி.ரம்யா ரவீந்திரன் மற்றும் ஆசிரியர் திருமதி. கம்சலா ஆகியோர் வெளியிட முனைவர். அரசு செல்லையா அவர்கள் பெற்றுக் கொண்டார். அகரம் தமிழ் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் தர்ஷன் சித்ரவினோதினி நிர்மல் 50 திருக்குறள்களை தங்குதடையின்றி அனைவரின் முன் சொல்லி அசத்தினார். ட்ரியாட் தமிழ் பள்ளி மாணவர்களின் "நாங்க தமிழ் பசங்க" நாடகமும், திருக்குறள் நாடகமும் அனைவரின் பாராட்டை பெற்றது. அப்பள்ளி மாணவர்களின்  பழமை, புதுமை, இளமை/இனிமை  என்ற பாடல் நிகழ்ச்சியும் கேட்டோரை  மெய்மறக்க செய்தது என்றால் மிகையில்லை.

பின்னர் அகரம் தமிழ் பள்ளி மாணவர்கள் வழங்கிய தங்க தமிழ்நாடு நடன நிகழ்ச்சி அரங்கேறியது. நடனம், காணொளி, பாடல் என்று முத்தமிழாய் இனித்தது இந்த நடன நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. பின்னர் பள்ளி பிரதிநிதிகள் அறிமுகம் மற்றும் உரை வழங்கும் நிகழ்ச்சி  நடந்தது. அகரம் தமிழ்ப் பள்ளி சார்பாக ஆசிரியர் திரு.சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, கொலம்பியா தமிழ் குடில் சார்பாக ஆசிரியர் திரு. சிவகுமார் ஷண்முகம், ஜாக்கிசான்வில் தமிழ்ப்  பள்ளி சார்பாக ஆசிரியர் திரு. கதிரவன் பெரியசாமி, பிரெட்ரிக் தமிழ்ப் பள்ளி, மேரிலாந்து தமிழ் அகாடமி சார்பாக  ஆசிரியர் திரு.பாலா குப்புசாமி, ட்ரியாட் தமிழ்க் கல்வி - கிரீன்ஸ்போரோ சார்பாக ஆசிரியர் திரு.முத்தையா சின்னசாமி மற்றும் சௌந்தர் கனகராஜன்,  ட்ரியாட் தமிழ்க் கல்வி வின்ஸ்டன்-சேலம்  சார்பாக ஆசிரியர் திரு.அருள் கார்த்திகேயன் மற்றும் ரிச்மண்ட் தமிழ்ப் பள்ளி சார்பாக ஆசிரியர் திரு.கணேஷ் குமார் அவர்களும் பேசினார்கள்.

தேநீர் இடைவேளைக்கு பின்  கவனகர். கலைச்செழியன் அவர்களின் கவனகம் நிகழ்ச்சி நடந்தது. எண் கவனகம், வண்ண கவனகம், திருக்குறள், மாய கட்டம், பிறந்த தேதி கேட்டு அந்த நாளுக்குரிய கிழமையை சொல்லுதல் ஆகிய அனைத்தையுமே சதுரங்கம் விளையாடி கொண்டே அவர் லாவகமாய் எடுத்துரைத்த விதம் பார்வையாளர்களை மிகுந்த  வியப்பில் ஆழ்த்தியது. குழந்தைகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்வுடன் பங்கேற்று கவனகத்தை எவ்வாறு செய்வது என்று செயல்வழியில்  கற்று பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டல் பெற்றனர். மதிய நிகழ்ச்சிகளை இனிமையாக தொகுத்து வழங்கியவர் அகரம் தமிழ் பள்ளி ஆசிரியர் திருமதி. ஜோதி வெங்கடேஷ் ஆவார். இறுதியாக அ.த.க. துணைத் தலைவர் கரு.மாணிக்கவாசகம் அவர்கள் நன்றியுரை நல்கி விழாவினை முடித்து வைத்தார். விழா மேடை அலங்காரம், புகைப்பட சாவடி(Photo  Booth) குழந்தைகளை கவரும் Face Painting, உணவு ஏற்பாடு, விருந்தினர் உபசாரம் என்று பல தன்னார்வலர்கள் கட்டி இழுத்த தேர் இந்த விழா என்று சொன்னால் மிகை ஆகாது. அடுத்த நாளும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கான்கார்ட் ஹில்டன் ஹோட்டலில் நடந்தது. அமெரிக்க மண்ணில் தமிழ் கல்வி தழைக்க பெற்றோரின் பங்களிப்பு, ஆசிரியரின் பங்களிப்பு, தமிழ் கல்விக்கு அ.த.க.-வின்  பங்களிப்பு என்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலை முனைவர் திரு. வாசு அரங்கநாதன், அ.த.க. இயக்குனர் முனைவர்  திரு. சிவகுமார் ராமச்சந்திரன், திரு. தினகர் கருப்புசாமி மற்றும் அ.த.க. முன்னாள் தலைவர் முனைவர் திரு. அரசு செல்லையா, அ.த.க. துணை தலைவர் திரு. கரு. மாணிக்கவாசகம் அவர்களும் வழிநடத்தினர்.

இந்த விழா நிகழ்வினை கீழ் காணும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் கண்டு மகிழுங்கள்.

காணொளி:

புகைப்படத் தொகுப்பு:

புதன், மே 30, 2018

ஒரு துரோகத்தின் வரலாறு


இந்தியா சுதந்திரம் வாங்கி 75 வருடம் கூட நிறைவடையவில்லை. அஹிம்சை வழி போராட்டம் செய்த போது திருப்பூர் குமரனை ஆங்கிலேய காவல்துறையினர் லத்தியால் அடித்தே கொன்றனர் என்பதை கேட்டிருப்போம். ஜாலியான்வாலாபாக்  சம்பவத்தில் கூட்டத்தினரிடம் துப்பாக்கி சூடு என்ற எச்சரிக்கை கொடுக்காமலேயே அவர்களை ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்பதையும் படித்திருப்போம். ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற பெயரில் நம்முடன் வர்த்தக தொடர்பு கொள்ள வந்த ஆங்கிலேயர் நம்மை ஆண்டவர்களை கொண்டே நம்மை அடிமைப்படுத்தினர் என்பதையும் நாம் நன்கறிவோம். மேலே சொன்ன எந்த விஷயத்தையாவது நீங்கள் மறந்துள்ளீர்களா? அல்லது இந்த சம்பவம் நடந்த போது நான் பிறக்கவே இல்லை என்கிறீர்களா? அப்படியானால் May  22, 2018 அன்று  நடந்த தூத்துக்குடி சம்பவத்தை நினைவு கூர்ந்தால் உங்கள் மறதி தொலைந்து போகும் அல்லது உங்கள் ஞாபகம் கூர் தீட்டப்படும்.

வேதாந்தா என்பது லண்டனை தலைமையிடமாய் கொண்டு செயல்படும் ஒரு வெளிநாட்டு கம்பெனி. அப்படிப்பட்ட வெளி நாட்டு முதலாளிக்காக நம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தி, மக்களை அடித்து துன்புறுத்தி அவர்தம் உரிமையை நசுக்கி அரச பயங்கரவாதத்தை சென்ற ஒரு வாரமாக நிகழ்த்தி காட்டினர்.எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டெரிலைட் ஆலையை எதிர்த்தவர்களை கொன்று குவித்து அதனால் எந்த விதமான குற்ற நடவடிக்கைகளுக்கும் இலக்காமல் இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் அவர்தம் ஏவல்படி செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும்.

நம்முடைய நீதித்துறை இந்த ஆலையை எவ்வாறு பார்க்கிறது? சம்பவம் நடப்பதற்கு முன் தினம் 144 தடை உத்தரவை போடுமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேட்கிறது . மதுரை நீதி மன்றமும் அப்படியே அனுமதி அளிக்கிறது. அதாவது இன்னொரு நாட்டின் நீதித்துறையிடம் ஒரு அயல் நாட்டு ஆலை கட்டுப்பாடு மிகுந்த கிட்டத்தட்ட எமெர்ஜென்சி போன்ற ஒரு அவசர நிலையை பிரகடனப் படுத்த சொல்கிறது என்றால் நாம் இன்னமும் சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்த கேள்விக்கான பதிலும் இந்த வாரம் உங்களுக்கு கிடைத்திருக்கும். நீங்கள் சுதந்திரம் அடைந்த நாட்டில் வாழவில்லை.

பிரிட்டிசாரின்  ஈஸ்ட் இந்தியா கம்பெனி போல வேதாந்தா என்ற வேறொரு கம்பெனி இங்கு சட்டம் போடுகிறது. காலம் வேறாகியிருக்கலாம் காரணம் வேறாகியிருக்கலாம் ஆனால் நம்முடைய எதிரிகள் அன்றும் இன்றும் ஒன்று தான். நம்முடைய அதிகாரிகள், அரசியல்(வியா)வாதிகள் என்று அனைவரும் வழக்கம் போல கையூட்டு, தேர்தல் நிதி பெற்று அப்பாவிகளின் பிணங்களின் மேல் தங்கள் அதிகாரத்தையும் பண பலத்தையும்  நிலைநாட்டி வருகிறார்கள். இப்போது புதிதாக போராட்டத்தை நீர்த்து போக செய்ய ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளார்கள். இப்படி சீல் வைப்பது இது நாலாவது முறை.

துப்பாக்கி சூட்டில் எத்தனை பேர் இறந்தார்கள், யார் இந்த துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது, 22 வருடம் 100 நாட்கள் ஒரு தொடர் போராட்டமாக அஹிம்சை வழியில் நின்ற மக்களை ஒருங்கிணைத்தவர்களை இப்படி அநியாயமாக மிக அருகில் இருந்தே சுட்டு வன்மம் தீர்த்த அதிகாரிகள் யார், ஒரு 17 வயது மாணவியை வாயிலேயே  சுட்டு அவளை அநியாயமாக சாகடித்த கொலை வெறியர்கள் யார், சுதந்திர போராட்டத்திற்கு பின் இத்தனை பெண்களை துப்பாக்கி மூலம் கூட்டுக்கொலை செய்த கொடூரர்கள் யார், மக்களை நடு இரவில் வீடு புகுந்து தாக்கிய மிருகங்கள் யார், நாலு வயது குழந்தையை கூட விட்டு வைக்காமல் லத்தியால் அடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தவர் யார், முன்விரோதம் காரணமாக ஒருவரை இந்த போராட்டத்தில் சுட்டு கொன்று விட்டு , இறந்தவரை காலால் உதைத்து எழுந்திரிடா நடிக்காதே என்று நையாண்டி பேசிய காக்கி சட்டைகள் யார், எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் இன்னும் மிக மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள், எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், இத்தனை சுற்று சூழல் கேட்டினை விளைவித்த வேதாந்தா என்ன விதமான நஷ்ட ஈடு இந்த மக்களுக்கு தரும், ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்திய நிலங்கள் உரியவர்களுக்கு எவ்வாறு மீட்டு தரப்படும், ஆலையின் மூடு விழாவிற்காகவா இத்தனை உயிர்களை பலி ஆக்கியது அரசு அல்லது இந்த தாக்குதல் வேறு எதேனும் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா என்பதை போன்ற பல விதமான கேள்விகளுக்கு வழக்கம் போல மௌனத்தையே பதிலாக்கி விடும் இந்த அரசு. ஏற்கனவே மக்கள் காலா டிரைலர் பார்த்து தூத்துக்குடி விவகாரத்தை மறந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த வாரம் இந்த பிரச்சனையின் சுவடு கூட இல்லாமல் செய்திருப்பார்கள். ஏற்கனவே ஊடகங்கள் மீது அடக்குமுறை, மின்சார துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, இருட்டில்  போலீசார் நடத்திய அதிகார வெறியாட்டம் என்ற பல நிகழ்வுகளுக்கு முன் இது எம்மாத்திரம்.

அன்றும் இன்றும் நமக்கான எதிரிகள் ஒன்று தான். உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் அதிகார வர்க்கம் இன்றும் பல பெயர்களில் உலாவி வருகிறார்கள். என்ன சொல்கிறீர்கள்- பொருளாதார முன்னேற்றம் வேண்டாமா, வேலை வாய்ப்பு வேண்டாமா என்றால் ஆரோக்கியத்தை இழந்து பெறும் முன்னேற்றம் வேண்டாம். சுற்றுசூழலை இழந்து பெறும் முன்னேற்றம் வேண்டாம். சுத்தமான காற்று, நீர், நிலம் இவற்றை இழந்து பெறும் எந்த முன்னேற்றமும் நீடித்து நிற்காது. ஸ்டெரிலைட் போல எத்தனை கம்பெனிகள் இயற்கை சூழலை மாசு படுத்துகிறதே அவற்றை எல்லாம் மூடத்தான் வேண்டுமா என்றால் மக்கள் அனைவரின் விருப்பம் அது தான் என்றால் அவற்றை மூடுவது என்பது அரசாங்கத்தின் கடமையாகும். எண்ணூரில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயை அள்ள வெறும் பக்கெட்டுகளை பயன்படுத்திய இந்த அரசாங்கம், இத்தனை ஆண்டுகள் தூத்துக்குடி பகுதியில் சுற்றுசூழல் மாசு உண்டாக காரணமான ஸ்டெர்லைட்டை ஒரு கேள்வி கூட கேட்காத இந்த அரசாங்கம், கூடங்குள அணு உலை திட்டத்தை அப்பகுதி வாழ் மக்களின் விருப்பத்தை மீறி நடத்தி வரும் இந்த அரசாங்கம், காவிரி நீரை பற்றிய சிந்தனை இல்லாமல் மணல் கொள்ளையை வெற்றிகரமாக நடத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட இந்த அரசாங்கம், அடுத்து மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம், சாகர்மாலா திட்டம் என்று பல திட்டங்களை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும், அப்பகுதி வாழ் மக்களின் விருப்பத்திற்கும் ஏற்ப தான் நடத்தும் என்பதை  எவ்வாறு நம்ப முடியும்.

இந்தியா(தமிழ்நாடு) ஒரு சிறந்த விவசாய நாடாக உலக அரங்கில் கோலோச்ச வேண்டியது . எங்கோ உலகில் ஒரு மூலையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வரும் பன்னாட்டு முதலாளிகளுக்காக நம் நாட்டு வளங்களை கொள்ளை அடித்து, அதற்கு பிரதிபலனாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கொஞ்சம் காசை வீசி எறிந்து, மக்களை கொன்று அவர்தம் உரிமையை நசுக்கி வரும் முன்னேற்றம் தான் முன்னேற்றம் என்றால் அப்படியான முன்னேற்றம் எங்களுக்கு வேண்டாம் என்று தூத்துக்குடி மக்கள் பொட்டில் அறைந்தார் போல பதில் சொல்லி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு பாடம். நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் கேள்வி கேட்க தொடங்க வேண்டும். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு வந்தால் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் நியாயம் பிறக்கும். கண்மூடி, வாய்மூடி, காதை மூடி எது நடந்தால் எனக்கென்ன என்று வாழ்ந்தால் நம் மூச்சு காற்று கூட வேறொருவனுக்கு விற்கப்பட்டு விடும் எனபதே நிஜம்.

கடந்த வார சம்பவங்கள் பற்றிய செய்திகளை படிக்க கீழே சொடுக்கவும்.