புதன், ஏப்ரல் 29, 2020

அன்றாட வாழ்வில் நகைச்சுவை


வாழ்க்கை என்பதை "என்ன படிக்கற? என்ன வேலை? கல்யாணம் ஆயிடுச்சா? எத்தனை குழந்தைங்க? ரிட்டையர் ஆயாச்சா? போய்ட்டாரா?  என்ற ஒரு சில கேள்விகளில் அடக்கிவிடலாம். சாமானிய வாழ்க்கை வாழவே இங்க நொந்து நூடுல்ஸ் ஆக வேண்டி இருக்கு. சரித்திரம் படைக்கறதெல்லாம் வெறும் கனவு தான். சாமானிய வாழ்க்கைனா பெரும்பாலும் ஒரு இரண்டாம் தரக் காலேஜில் இன்ஜினியரிங் படிச்சி, ஏதோ விசா கிடைச்சா போதும்னு அமெரிக்காவோ ஆஸ்திரேலியாவோ வந்து புரியாத ஒரு மேற்படிப்பை படிச்சி ஒப்பேத்தி, ஒரு வேலை நமக்கு பிடிக்கிதோ இல்லையோ கிரீன் கார்டு ஸ்பொன்சர் பண்ணுவாங்கன்னு அதை வாங்கி, வீட்ல பார்க்கிற வரனுக்கு தலை ஆட்டி, குழந்தைகளை பெற்று வளர்த்து, புரியாத ஜாவா எல்லாம் படிச்சி, டொக்கு டொக்குனு ஒரு சில ப்ரோக்ராமை கம்ப்யூட்டர்ல தட்டி, ட்விட்டர்ல நாலு கருத்து சொல்லி, டிக் டாக்ல ரெண்டு சிரிப்பு சீனை பார்த்து, எப்பவுமே போனும் கையுமாவா இருக்கீங்கன்னு நம்ம குழந்தைகளை போன் போட்டு திட்டி வாழறது தான் சாமானிய வாழ்க்கை.   

ஒரு பாடி பில்டர் எப்படி சாம்பார் வாளியை பிடித்து தூக்கி கொண்டு வருவது போல கையை வைத்து கொண்டு வருவாரே, அதே போலவே கண்ணுக்கு தெரிஞ்ச பல அலங்காரங்களும், கண்ணுக்கு தெரியாத பல அழுகைகளும் நிறைஞ்சதே சாமானிய வாழ்க்கை. முதல்ல நம்ம துணையவே எடுத்துக்குவோம். எல்லாருக்கும் கடவுள் வெறும் துணையை மட்டுமே செலக்ட் பண்ற ஒரே ஒரு பொறுப்பை தான் கொடுத்திருக்கார் என்பதே அவரின் பெருங்கருணை. ஒரு வேளை அம்மா, அப்பா, தம்பி, தங்கை, சொந்த பந்தங்களை செலக்ட் பண்ற பொறுப்பை கொடுத்திருந்த இந்த குடும்ப நல கோர்ட் எல்லாம் எவ்ளோ பிசியா இருக்கும்னு யோசிச்சு பார்த்தா கூட தலை சுத்துது. நாம துணையிடம் என்ன தகுதி, பொருத்தம் எல்லாம் இருக்கணும்னு எதிர் பார்க்கிறோமோ அதை எல்லாம் ஒரு தாள்ல எழுதி கிழிச்சி போட்டுடனும், அதோட நிறுத்திடாம அந்த கிழிந்த தாள்களை நெருப்புல பொசுக்கணும். அந்த சாம்பலை தண்ணீர்ல கலக்கணும். அந்த தண்ணீரை பாலைவனத்துல போய் ஊத்திடனும் ஏன்னா "எது கிடைக்கணுமோ அது கிடைக்காம போகாதுன்னு, எது கிடைக்க கூடாதோ அது கிடைக்காது" அப்படின்னு ஒரு மகான் சொன்ன மாதிரி பிரச்சனை இல்லாத பிக்கல் பிடுங்கல் இல்லாத இடம் வேணும்னு நினைச்சா கண்டிப்பா பயங்கர பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை துணையை தான் கடவுள் கொடுப்பார். அன்பான, அனுசரனையான துணை வேணும்னா நீங்க நினைச்சா கண்டிப்பா நீங்க யூகிச்சிருப்பிங்க அதற்கு நேர்மறையான ஆளை தான் கண்டிப்பா உங்களுக்குன்னு ஸ்பெஷலா அனுப்பி  வைப்பர். கடவுள் ஒரு துரித உணவகத்தில் பணிபுரியும் சர்வர் மாதிரி. நாம பரோட்டா-ன்னு சொன்ன  அவருக்கு போண்டா-ன்னு காதுல விழும். நாம  "இட்லின்னா, என்னது சட்னியா கேக்கறன்னு" சட்டி நிறைய கொடுத்து அனுப்புவான். ஏன்னா சாமானியன் வாழ்க்கை டிசைன் அப்படி.

சரி துணை அமைஞ்சது அமைஞ்சிடுச்சு எப்படியாவது சரிக்கட்டி வாழ்க்கை என்னும் வண்டியை  ஓட்டுவோம்னு பார்த்தா அதுவும் பொருத்தம் இல்லாத இரட்டை வண்டி சவாரி மாதிரி தான் போகும் - நாம ஒரு திசையிலே போகணும்னு நினைக்கும் போது அது வேற ஒரு திசையிலே நம்மள கூட்டிகிட்டு போயிடும். உதாரணமா நாம சண்டை போடறோம்னு வெச்சுக்கோங்க அவங்களும் திருப்பி சண்டை போட்டு, பத்து வருஷம் முன்னாடி ஒரு மே மாசம் போட்ட சண்டையில நாம அவங்களை என்ன சொன்னோம்னு ஞாபகம் வெச்சி அதை சொல்லி காமிச்சு மறுபடியும் அதே விஷயத்துக்காக கோல்டன் ஜூப்லி கண்ட படம் மாதிரி நூறாவது முறையா கோவிச்சிக்கிட்டு பேசாம இருக்கறது ஒரு ரகம்னா, அமைதியா இருந்துட்டு அடுத்த ஒரு வாரம் இரவு உணவுக்கு உப்புமா மட்டும் சமைச்சி போட்டு, ஏதாவது ஒரு பெரிய செலவை நம்ம கிரெடிட் கார்ட்ல இழுத்து விட்டு  அமைதியா அகிம்சை முறையில போராடி நம்மள அவங்க வழிக்கே கொண்டு வரது வேறு ரகம். என்ன, அஹிம்சை முறையில் நமக்கு எப்பவுமே அடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். சண்டையில கிழியாத சட்டை ஏதுன்னு வடிவேலு எக்ஸ்பிரசனை கொடுத்து கடைசிலே மதபோதகர்கள் உணர்த்தாத சரணாகதி தத்துவத்தை உணர்ந்து சரண்டர் ஆகறதை தவிர வேறு வழி எதுவும் இல்ல.

சரி "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" அப்படின்னு கண்ணதாசன் வரிகளை நினைச்சு மனசை தேத்திகிட்டு நாம அடுத்து அதிக நேரம் பார்க்கற பழகற ஆபிஸ் மனைவி அதாங்க நம்ம மேனேஜர் எப்படி பட்ட ஆளுன்னு பார்த்தா, மனைவியவே நமக்குன்னு செஞ்சி அனுப்புன கடவுள் இது தான் நல்ல வாய்ப்புன்னு ஏடாகூடமான வில்லத்தனமான மேனேஜரை கொடுத்து நம்மள வெச்சு  செய்வாரு. நாம வருஷ இறுதியில் நம்ம மானேஜர் எதிர் பார்க்கும் டார்கெட்டை அடைந்தாலும்  "இந்த வருஷம் நம்ம பிசினஸ் கொஞ்சம் வீக்கா இருந்ததால இந்த வருஷம் எல்லா டிபார்ட்மெண்ட்லேயும் போனஸ், இன்க்ரீமெண்ட் எல்லாம் கம்மி பண்ணிட்டாங்க அதனால உங்களுக்கு இந்த வருஷம் இன்க்ரீமெண்ட் இல்லை போனசும் போன வருஷத்தோட ரொம்ப கம்மி" அப்படின்னு நோ பால் போடுவார். ஒருவேளை பிசினஸ் நல்லா போனாலும்  இந்த வருஷம் நீங்க கொடுத்த வேலைகளை பண்ணீங்க. ஆனா நீங்களே சுயமா எந்த முயற்சியும் எடுத்து தனிச்சு உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை நிறுவலை. ஆனா ஏதோ உங்களுக்காக பேசி போனசும் இன்க்ரீமெண்ட்டும் கொடுத்திருக்கேன்னு பந்தா விடுவார். சரி ஏதோ பெரிசா பண்ணிருப்பாருன்னு ரெண்டையும் கூட்டி கழிச்சு பார்த்தாலும் போன வருஷம் கொடுத்த அதே அளவு பணமே தான் வந்திருக்கும். எப்படி, ஒரு கயித்தில, கேரட்டை கட்டி அதை காட்டி காட்டி  ஒரு முயலை ஓட வைப்போமோ, அதை போலவே உங்களுக்கு கண்டிப்பா அடுத்த வருஷம் ப்ரமோஷன் இருக்குன்னு சொல்லி சொல்லியே வேலை வாங்கறது,  இந்த வார இறுதியில்  உங்களுக்கு வேலை இருக்கு, எங்கேயும் போய்டாதீங்க அப்படின்னு நாம குடும்பத்தோட ஊருக்கு போக பிளான் செய்திருக்கிற வார இறுதியில்  திடீர்னு வேலையை சொல்றது, நாம வீட்லேர்ந்து வேலை செஞ்சா என்ன காலை 10:15 லேர்ந்து 10:20 வரைக்கும் உன்னை ஆன்லைன்ல காணோம், இனிமேல் வீட்லேருந்து வேலை எல்லாம் செய்ய பர்மிசன் இல்ல அப்படின்னு  சொல்லி படுத்தறதுன்னு பல விதமான டார்ச்சர் டெக்னிக்கை  கையிலேயே வெச்சிட்டு சுத்தற ஆளு தான் நமக்குன்னு வாய்க்கற மானேஜர்.

அப்படிப்பட்ட தயாள உள்ளம் கொண்ட நம்ம மானேஜருக்கு, அவரு என்ன சொன்னாலும், செய்தாலும் "சார் எங்கேயோ போயிட்டீங்க சார், உங்க ஓவ்வொரு செய்கையிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கு சார்" அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் படத்துல ஜனகராஜ் கூடவே வர ஆர்.எஸ். சிவாஜி மாதிரி, நம்ம மானேஜர் கூடவே வந்து அவரோட வலது கையா செயல்படற நம்ம டீம் மெட்டை சமாளிப்பதும், ஒரு நல்ல பாம்போட குடும்பம் நடத்தறதும்   ஒண்ணுதான். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத மாதிரி, நாம ஒரு ஐடியா சொன்னாலும் அதுல சொத்தை சொள்ளை  சொல்லி குற்றம் கண்டுபிடித்த பேர் வாங்கும் நக்கீரப் பரம்பரையை சேர்ந்த நம்ம டீம்மெட், எனக்கு ஒரு கண்ணு போனாலும் உனக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு நெனைக்கற தாராள மனசுக்கு சொந்தக்காரர். இந்த பிக்கல் பிடுங்கலை எல்லாம் சமாளிச்சு சமாளிச்சு நமக்கு வர பக்குவம் இருக்கே இது போதி மரத்துக்கு அடியிலே கூட நமக்கு கிடைக்க பெறாத ஞானம்.

சரி, வீடு, ஆபிஸ் விட்டுட்டு நம்ம நண்பர்கள் எப்படின்னு பார்த்தா, அந்த உறவும் ஒரு இடியாப்ப சிக்கல் தான். சரி, நாம யாரோடவாவது கொஞ்சம் க்ளோசா பழகினா, மற்ற நண்பர்கள் கோபித்து கொள்வார்கள். அந்த அளவுக்கு மன முதிர்ச்சி இல்லாத நண்பர்களை ஏன் வெச்சிக்கறிங்கன்னு கேக்கறவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு தான் சொல்ல முடியும் "நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்" அப்படின்னு படத்துல வேணா பாட்டு பாடலாம். ஆனா நிஜத்துல நண்பர்களுடன் பழகுதல் என்பது "கம்பி மேலே நடப்பது மாதிரி. கரணம் தப்பினா கலகம் தான்". சரி, யாரோடயும் நெருங்கி  பழகலைன்னாலும் நீங்க ரொம்ப சீரியஸ் டைப் அப்படின்னு முகத்துக்கு நேரே அடிச்சி விடற ஆட்கள் உண்டு. குத்துமதிப்பா  என்ன சொல்றாங்கன்னா நீங்க பெரிய "முசுடு" அப்படிங்கறதை தான். சரி, நாம எல்லாரோடையும் சகஜமா இருப்போம்ன்னா தேவை இல்லாத அட்வைஸ் எல்லாம் நமக்கு சொல்லி நம்ம காது புண் ஆகறது எல்லாம் கண்டிப்பா நடக்கும். ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்கள் கிடைப்பதெல்லாம் வரம்.  "முகநக நட்பதே நட்பு" என்ற அளவில் வெறும் வாய் ஜாலம், புகழ்ச்சி, வார்த்தை அலங்காரம் என்பதோடு ஐசியூ-வில் உள்ள கோமா பேஷண்ட் மாதிரி இருந்தும் இல்லாமல் இருப்பதே நட்பு என்று ஆகியுள்ளது. இதில் நகைச்சுவை என்பது இன்றளவில் கேளிக்கை, பண்டிகை கொண்டாட்டம், பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற அளவில் நின்று விட்டது.

சிறு வயதில் உறவுகளின் இடையே நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை. பெரும்பாலும் அந்த வயதில் ஏற்பட்ட நகைச்சுவை அனுபவங்கள் பசுமரத்து ஆணி போல மனதில் பதிவதால் அவை நினைத்து நினைத்து மீண்டும் ரசிக்கும் அனுபவத்தை தருகின்றது.

கேள்வி
குளிர்ந்த நீர் தானே ஏன்
வேர்கிறது பாட்டிலுக்கு

இந்த ஹைகூவை எழுதியது என் தங்கை. அவள் இதை ஒரு சிறிய தாளில் எழுதிய பின், அந்த கவிதையை படிப்பதற்காக என் தந்தையாரிடம் நீட்டினாள். கவிதை என்றால் யார் எழுதியது என்று முதலில் பார்ப்பது இயல்பு தானே. அவரும் கடைசி வரியை படித்துவிட்டு "ஓ, யாரோ டிலுக்கு என்பவர் எழுதியதா இந்த கவிதை" என்றிருக்கிறார். ஏனென்றால் இடப் பற்றாக்குறை காரணமாக பாட்டிலுக்கு என்ற வார்த்தையில் "பாட்" என்பதை மேல்வரியிலும் "டிலுக்கு" என்பதை கீழ்வரியிழும் எழுதி இருந்தாள். டிலுக்கு என்பது கவிஞரின் பெயர் என்று தந்தை நினைத்ததால் வந்த குழப்பம். அவளை அது முதல் கவிஞர் டிலுக்கு என்று அன்புடன் அழைத்து மகிழ்ந்தோம் என்பது தனிக் கதை. ஒரு முறை சேட்டை செய்த  எனது 4 வயது தம்பியை பார்த்து என் தாயார், நீ இன்னும் ஏதாவது சேட்டை செய்தால் மறுபடியும் பள்ளியில் கொண்டு சென்று விட்டுவிடுவேன் என்று மிரட்டினார். எல்.கே.ஜி. வகுப்புகள் அப்பொழுதெல்லாம் அரை நாள் மட்டுமே நடக்கும். அரை நாள் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்திருந்த அவன் வழக்கம் போல் ஏதோ சேட்டை செய்து கொண்டிருந்தான். இதை கேட்டுக் கொண்டிருந்த என் தங்கை சிறிது நேரம் கழித்து அவன் மேலும் ஏதோ ஒரு சேட்டை செய்யவே என் தாயார் சொன்னதை மனதில் வைத்து யூனிபார்ம் கூட அணிவிக்காமல் அப்படியே வீட்டில் அணிந்திருந்த உடையுடன் அவனை நடந்தே செல்ல கூடிய அளவு வீட்டிற்கு அருகிலேயே  உள்ள பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று  விட்டு விட்டு வந்து விட்டாள். சிறிது நேரம் கழித்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு வந்த என் தாயார்,  "எங்கே உனது தம்பி?" என்று என் தங்கையிடம் கேட்கும் போது அவள் "அவனை நீ கூறியது போல பள்ளியில் விட்டுவிட்டு வந்து விட்டேன்" என்று கூறினாள். அனைவரும் அடித்து பிடித்து பள்ளியை அடைந்து  அவன் வகுப்பிற்கு சென்று அவனையும் அவனை விட மிகவும் குழப்பத்தில் இருந்த அவனுடைய ஆசிரியையும்  கண்டு, விஷயத்தை கூறிய பிறகே ஆசிரியர் நிம்மதி அடைந்தார். இன்று தம்பி பெரிய வேலையில் இருந்தாலும் வெறும் பனியன் மற்றும் கால்சட்டை  மட்டுமே  அணிந்து அவன் பள்ளி சென்ற கோலத்தை இப்போதும் அவனுடைய ஆசிரியை நினைவு கூர்ந்து  சிரிப்பலையில் ஆழ்வது வழக்கம்.

இன்று இருக்கும் வாழ்க்கை சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். பிள்ளைகள் என்றால் பெரும்பாலான வீடுகளில்  ஒன்றுடனோ அல்லது இரண்டு குழந்தைகளுடனோ நிறுத்தி விடுவது வாடிக்கை. அந்த குழந்தைகளும் மொபைல், டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என்று பல்வேறு தொழில்நுட்ப சாதனைகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்டு நாட்கள் பலவாகிறது. வெளிநாடுகளில் வாழும் பதின்பருவ குழந்தைகள் தாய் தந்தையருக்கு பெரும்பாலும் ஹாய் ஹலோ  சொல்வதையே இன்று பெரியதாக எண்ண வேண்டியதாய் இருக்கிறது. அப்படி ஒரு வேளை அவர்கள் நம்மிடம் முகம் கொடுத்து பேசினார்கள் என்றால் விலையுர்ந்த பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என்று ஏதேனும் கோரிக்கை இல்லாமல் போகாது. சிறு குழந்தைகள் என்றால்  அவர்களை பியானோ கிளாஸ், பாட்டு கிளாஸ், நடனம், ஓவியம், தமிழ் வகுப்பு என்ற பல வகுப்புகளுக்கு அழைத்து சென்று பெரும்பாலும் நாளைய வாழ்க்கையை பற்றிய பயத்துடனே  நமது குழந்தைகளை வளர்த்து வருகிறோம்.ஆனா இந்த காலத்து குழந்தைகள் பயங்கர ஸ்மார்ட். நான் என் பொண்ணு கிட்ட "நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனாதான் நிறைய பணம் சம்பாரிச்சு நல்லா சந்தோஷமா இருக்க முடியும்னு" தெரியாம ஒரு அறிவுரை சொன்னேன். உடனே என் பொண்ணு "இப்பவே நான் சந்தோஷமா தான் இருக்கேன். கஷ்டப்படாம இப்பவே கிடைக்கிறதை ஏன் கஷ்டப்பட்டு  வாங்கணும்னுகிறேன்னு" என்னையே மடக்கிட்டா.  

ஆபிஸ்லயும் டம்மி பீஸ் என்று பெயர் வாங்கி, வீட்லயும் ஒண்ணும் தெரியாதவங்கன்னு பெயர் எல்லாம் வாங்க வேண்டாம், நாம என்ன தான் உலக வங்கியோட சேர்மனா இருந்தாலும் நமக்கு அது நான் வீட்டுக்குள்ள பேரு. வெளியூர்ல இருக்கறதால உறவு என்பதை விட நட்பு என்பது தான் அதிகம் சாத்தியம் ஆகிறது. ஆனா நட்பு என்பதும் பெரும்பாலும் மேம்போக்காகவே அமைகிறது. ஒத்த அலைவரிசை உள்ள ஆட்களின் சந்திப்பு என்பது அத்தி பூத்தார் போல எப்பொழுதேனும் நிகழ்கிறது. ஆனாலும் தூரம், நட்பு வட்டம் என்பதை பொறுத்து அந்த உறவும் தொடரமுடிவதில்லை பெரும்பாலும். 

அப்போ ஒரு தனி மனுஷன் சந்தோஷமா இருப்பது வெறும் தூங்கு போது மட்டும் தானா என்றால் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.  

கண்ணை விழித்திந்தக்
காசினியைப் பார்க்குங்கால்
என்ன துயர்வருமோ
எங்கெங்கே அடிவிழுமோ
காதல் வருமோ
காதலுக்குத் தடைவருமோ
மோதல் வருமோ
முறைகெடுவார் துணைவருமோ?
நன்றியிலா நண்பர்கள்தாம்
நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி
நாயகியாய் வருவாளோ
செய்யத் தொழில்வருமோ
திண்டாட்டந்தான் வருமோ
வெய்யில் அழைத்துவரும்
வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்
றலைகின்ற நிலைவருமோ?
என்ன வருமென்று
இப்போது யாரறிவார்
அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும் !

ஒரு மொட்டு மலர்வது எவ்வளவு இயற்கையானதோ, அதை போலவே  தினமும் நகைச்சுவை என்ற தென்றல் நம்மை தொட்டுச் செல்லும். அதை இனம் கண்டு அனுபவிக்கும் பழக்கத்தை மட்டுமே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நம்மை நாமே குடும்ப தலைவன் அல்லது தலைவி  அல்லது அலுவலகத்தில் இந்த பதவியில் இருப்பவர் என்று சீரியஸான ஒரு வட்டத்தில் நிறுத்தி பார்க்கும் வழக்கத்தை விட வேண்டும். வாழ்க்கை பயணம் இலகுவாக, நாணல் போன்ற குழைவு வேண்டும் ஒருவர் மனதில். அந்த குழைவை ஒரு சிறிய நகைச்சுவை துணுக்கோ அல்லது ஒரு அனுபவமோ தர முடியும்.  அஞ்சு ரூபா பெறாத ஐடியா எல்லாம் நம்ம மேனேஜருக்கு தோணும் போது, "செம ஐடியா சார், இதை நம்ம டீம் மெட், (அதாங்க நம்மை சிக்கலில் மாட்டி வைக்கும் அன்பான டீம்மேட்)  அழகா செஞ்சு தருவாருன்னு. எனக்கெல்லாம் கூட அந்த அளவுக்கு செய்ய வராது" என்று அவருக்கும் வேலையை இழுத்து விட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார் போல அசுர வெற்றி. "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு" என்று பின்னணி இசை அன்று முழுவதும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பது  சர்வ நிச்சயம்.  மனைவி சமைத்த உப்புமாவை ரசித்து சாப்பிட்டு விட்டு "எங்க அம்மாவை அல்லது சமையல் தெரிந்த ஆளை கொஞ்ச நாள்  வர சொல்லேன். இந்த அழகான உப்புமா செய்தே சிவந்த கைகள் கொஞ்ச நாள் ஒய்வு எடுக்கட்டும். எத்தனை வேலைகளை நீயே இழுத்து போட்டுச் செய்வாய்" என்று நேர்த்தியாய் பேசுபவர்- வாழ்க்கையையும், உப்புமா சாப்பிட்டதால் செத்து போன நாக்கையும் ஒரே நேரத்தில் தூக்கி நிறுத்தும் வித்தையை அறிந்தவர். அவர் ஒரு நாளும் சோர்ந்த முகத்தோடு உறங்கச்  செல்வதில்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். பத்தாவது திருமண நாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கும்  நண்பரிடம்  உனக்குன்னு ஒரு கஷ்டம் வந்தா அதில் பங்கேற்க நான் வரமாட்டேன்னா என்ன? என்று இருவர் மனைவியும் அருகில் இல்லாமல் இருக்கும் வேளையில் தனியாக அவரிடம் சொல்லி நட்புக்கு  நீரூற்றும் சாமர்த்தியம் உள்ளவன் எப்போதும் நட்பு வட்டத்தில் பெரிதும் விரும்பப்படுகிறவனாகவே இருப்பான். விலையுயர்ந்த பொருளை வேண்டும் என்று கேட்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளை "பால் நிலவின் முகமும், திராட்சை கண்களும், ஆரஞ்சு உதடும், செர்ரி கன்னங்களும் கொண்ட பழமுதிர்ச்சோலைக்கு ஏன் ஆப்பிள் வாட்ச்" என்று அடுக்கு மொழி வசனம் பேசி அசத்தலாம். இந்த வார்த்தைகள் கை கொடுக்கவில்லையென்றால் எப்படியேனும் பேரம் பேசி குறைந்த விலையில் வேறு ஒரு வாட்சை வாங்கிக் கொடுத்து அவர்களின் மனதில் பல்லாலதேவனை வென்ற பாகுபலி போல  சிம்மாசனமிட்டு அமரலாம். பர்ஸிலும் கனம் குறையாது. (பின் குறிப்பு:  இங்கே கொடுத்துள்ள யோசனைகளை எசகு பிசகாக செயற்படுத்தி மேலும் சிக்கலில் மாட்டுபவர் யாருக்கும் கம்பெனி பொறுப்பேற்காது)

இறுதியாக சொல்லவது என்னன்னா, அன்றாட வாழ்வில், வரவும் செலவும் போல,  துன்பம் இன்பம் என்பது கலந்தே வரும். பாலை மட்டும் உண்டு நீரை விடும் அன்னம் போல, பல்வேறு சூழலிலும் தன்னை தானே மகிழ்ச்சியுடனும், எந்த துன்பம் வந்தாலும், தன்னம்பிக்கையுடன் அணுகுபவன், வாழ்க்கை பாதையை ரோஜாக்கள் செறிந்த மலர் பாதையாய் மாற்றும் திறன் பெற்றவன். இந்த வாய்ஜாலம்/பேச்சு திறன் எல்லாம் எனக்கு இல்லாமல் தானே இந்த மாதிரி தவிக்கிறேன் என்று அங்கலாய்ப்பவர் அனைவருக்கும் சொல்வது இது தான் இவரு சரியான "டம்மி பீசு" என்று அறியப்படுவதை விட இவரு சரியான "காமெடி பீசு" என்று அறியப்படுவது மேல். இவரு சரியான "காமெடி பீசு" என்று அறியப்படுதலை விட  இவரு "காமெடில பாஸ்" என்று அறியப்படுதல் மேலும் சிறப்பு. 

(இது தமிழ்ச்சரம் நடத்தும் கட்டுரை போட்டிக்காக புதியதாக எழுதப்பட்ட கட்டுரை. வலைத்தளம், அச்சு ஊடகம் உள்ளிட்ட எதிலும் இதற்கு முன்பு பிரசுரம் ஆகாத கட்டுரை)

#tccontest2020

12 கருத்துகள்:

  1. ஹா... ஹா...

    அனுபவித்து எழுதியது போல...

    ரசித்தேன்... பாராட்டுகள்...

    வெற்றி பெற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உண்மை. இன்று அந்த நிகழ்வை நினைத்தாலும் ஒரு புன்முறுவல் தோன்றி மறைகிறது.தங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  3. போட்டியில் முதல் பரிசு வென்றமைக்கு மனமார்ந்த பாராட்டுகளு, வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

  4. தமிழ்ச்சரம் நடத்திய போட்டியில் இந்த கட்டுரை முதல் பரிசு பெற்றுள்ளது. ஒருங்கிணைத்த தமிழ்ச்சரம் பொறுப்பாளர்களுக்கும், நடுவர் குழுவினருக்கும் என்னுடைய நன்றிகள். வெற்றி பெற்ற ஏனைய போட்டியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    http://tamilcharamblog.blogspot.com/2020/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ்ச்சரம் நடத்திய போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்றதை முரளி மூலம் அறிந்தேன் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  6. பெரும்பாலான நபர்களின் அன்றாட வாழ்வையும் அவர்களின் தினசரி நிகழ்வுகளுக்கிடையே கடந்து செல்லும் நகைச்சுவைகளையும் படம் வரைந்து பாகம் குறித்தது போல் விளக்கியுள்ளீர்கள். படிக்கும்போதே அவ்வப்போது உதட்டோரம் லேசாக புன்முறுவல் துளிர்த்தது. ஒரு சில இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்...

    "டிலுக்கு" ஒரு உதாரணம்.

    இதைப் படித்தபோது நான் பள்ளி செல்லத் தொடங்கிய காலத்தில் ஜனவரியை ஏன் காலண்டரில் ஐனவரி என்று தப்பாக அச்சடித்துள்ளார்கள்? ஒருவேளை அச்சுக் கோர்க்குற மெசின்ல "சனவரி"ன்னு போட்டிருக்கணுமே... ஒருவேளை அப்படி ஒரு எழுத்து இல்லையோ என்று ‍யோசித்திருக்கிறேன். பிறகுதான் வடமொழி எழுத்தாக அறியப்படும் "ஜ" எனக்கு அறிமுகமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான கருத்தூட்டத்திற்கு மிகவும் நன்றி.

      நீக்கு