ஒரு பாடல் திரட்டு(மியூசிக் ஆல்பம்) உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று சில நாட்களாக ஒரு எண்ணம். சரி, இதைச் செயல்படுத்த, முதலில் ஒரு பாடல் எழுதுவோம், திரட்டு என்பதையெல்லாம் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று எண்ணி பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் என்று ஒரு காதல் பாடல் எழுதியாயிற்று. ஆனால் இதற்கு எப்படி இசையமைப்பு செய்வது என்று பல நாட்களாக தேடல். இதற்காக சரியான இசையமைப்பாளரைப் பிடிக்க வேண்டும், அது தவிர பாடகர்கள் போன்றோரைக் கண்டுபிடிக்க வேண்டும். அதிக செலவும் ஆகலாம், என்ன செய்வது என்று யோசித்த போது, சில செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் கண்ணில் பட்டது . இதில் பலவும் அடிப்படை வாடிக்கையாளருக்கு சில குறைந்தபட்ச சலுகைகளை கட்டணமின்றி அளிக்கின்றன. அடிப்படை வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் குறைவு தான். இருந்தாலும் ஒரு முதல் முயற்சிக்குத் தேவையான விஷயங்களை கற்றுக் கொண்டு ஓரளவு நான் எண்ணியதை செய்ய முடிந்தது என்பதே ஒரு அனுகூலமான விடயம் தான். செயற்கை நுண்ணறிவு எதைத் தருகிறதோ இல்லையோ சுயசார்பு என்ற ஒரு விஷயத்தை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. இது நல்லதா, கெட்டதா என்பது இதைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் கையில் தான் இருக்கிறது என்றாலும் என்னுடைய முதல் பாடல் முயற்சி இந்தளவு சிறப்பாக வந்ததற்கு செயற்கை நுண்ணறிவே காரணம். அப்படி உருவான என்னுடைய முதல் தமிழ் இசைப் பாடலுக்கான இணைப்பு கீழே. ஓரிரு முறைகள் கேட்டால் மனதில் பதிந்து விடக் கூடிய நல்ல மெட்டு அமைந்த பாடல் இதோ உங்களுக்காக.
பச்சை மண்ணு பக்கம்
ஞாயிறு, மார்ச் 30, 2025
சனி, மார்ச் 08, 2025
மகளிர் நாள் கவியரங்கம் - கனவு மெய்ப்பட வேண்டும் - கவிதை
பிரித்தானிய தமிழ் வானொலி, சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து இன்று நடத்திய மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கத்தில் வாசித்த எனது கவிதை. அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் நாள் வாழ்த்துகள்.
எனது "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற கவிதை 28:35இல் தொடங்குகிறது.
கனவு மெய்ப்பட வேண்டும்
வியாழன், பிப்ரவரி 27, 2025
காத்திருப்பு - கவிதை

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை
தவமிருந்து இரையாக்கிக் கொண்டது கொக்கு
எத்தனையோ மனிதர்களைக் கடந்து
ஒரு புத்தனை உருவாக்கி
காத்திருந்து ஞானம் பெற்றது போதி
அகழ்வாரைத் பொறுத்து காலங்கள் பலகடந்து
முடிவில் தனதாக்கிக் கொண்டது பூமி
மதிப்பில்லா புதையல்களைப் புறம் தள்ளி
தொழுவத்தில் அவதரித்த தேவனுக்குத் தொட்டிலாகி
வரலாற்றில் இடம் பெற்றது அத்தி
நெடிய பாறையை ஓயாமல் முட்டி வீழ்த்தி
தன்னுள் சேர்த்து அணைத்துக் கொண்டன அலைகள்
என்றாவது திரும்ப வருவாயெனக்
வருடங்களை விழுங்கி காத்திருக்கும் என்னை மட்டும்
வாழத் தெரியாதவள் எனப் பெயரிட்டு விரைகிறது உலகம்
வியாழன், ஜனவரி 16, 2025
பூக்கள் பூக்கும் தருணம் -சுற்றுலா - பாகம் 3
இரயிலை மழையில் நனைந்தபடி பிடித்து எங்கள் இருக்கையை தேடி அமர்ந்தோம். இரயிலில் இருக்கைகள் வீட்டில் உள்ள நான்கு குஷன் பொருத்திய நாற்காலிகள் நடுவே ஒரு மேசையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. குடும்பமாக பயணம் செய்பவர்கள் இந்த மாதிரி அமைப்பு கொண்ட இருக்கைகளை தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இது எங்களுக்கு பேசியபடியே செல்ல வசதியாக இருந்தது. கடைசி பெட்டி வரை நடந்து சென்றால் அங்கு சிற்றுண்டிகள் விற்கும் சிறு உணவகம் உண்டு. குழந்தைகள் குளிர்பானம் மற்றும் நொறுக்குத் தீனிகளை வாங்கிச் சுவைத்தார்கள். ஆம்ஸ்டர்டாமை கடந்து ரோட்டர்டாம் வரை செல்லும் ரயிலில் நாங்கள் ஆம்ஸ்டெர்டாமில் இறங்கிக் கொள்ளலாமா என்று பேசியபடி வந்தோம். ஆனால் நண்பர் ரோட்டர்டாமில் உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன் என்று செய்தி அனுப்பி இருந்ததால் நாங்கள் ஆம்ஸ்டர்டாமில் இறங்கவில்லை. ரொட்டர்டாமில் இறங்கிய பின்னர் இரயில் நிலையத்தை விட்டு வெளியில் செல்ல நமது டிக்கெட்டை காமிக்க நேர்ந்தது. எனவே முன்பே இறங்காமல் இருந்தோமே என்று பேசிக்கொண்டோம். வெளியில் நல்ல குளிர். நல்லவேளை இரயில் நிலையத்தின் அருகிலேயே நண்பர் தன்னுடைய மகிழுந்தை நிறுத்தி செய்திருந்ததால் விரைவாக நடந்து சென்று ஏறிக்கொண்டோம். ஐரோப்பாவை பொறுத்தவரை இளவேனில் காலம் என்றாலும் எங்கும் குளிர் தான். நாங்கள் தற்போது வசிக்கும் ஊரில் குளிர் காலம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அங்கு நிலவும் இளவேனில் கால குளிரின் அளவு அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் நன்றாகவே குளிர்கிறது. எனவே குளிரைத் தாங்கும் ஸ்வெட்டர், ஜாக்கெட் போன்றவற்றை கைவசம் பயணத்தில் கொண்டு செல்வது மிகவும் முக்கியம்.
நண்பர் எங்களை ரோட்டர்டாமில் நாங்கள் தங்க இருக்கும் வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார். ஏர்பின்பி வழியாக பதிவு செய்திருந்த இந்த வீடு மிகவும் ரம்மியமான ஒரு இடத்தில் இருந்தது. இரண்டு குளியலறைகள், இரண்டு படுக்கையறைகள், ஒரு அழகான வரவேற்பறை வாஷர், ட்ரையர் போன்ற வசதியுடன் இருந்தது. துணிகளை துவைத்துக் கொண்டே இரவுக்கான உணவு தயாரித்து உண்ணும் போது மணி நள்ளிரவாகி விட்டது. சாப்பிட்டு விட்டு துணிகளை எடுத்து ஒழுங்குபடுத்தி அடுக்கிவிட்டுப் படுக்க நேரமாகிவிட்டது என்றாலும் 10 நாட்களுக்கு மேலான பயணத்தில் நடுவில் ஒரு முறையேனும் துணிகளை துவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அத்தனை நாட்களுக்கு தேவையான சுத்தமான ஆடைகளை ஒரு சிறிய பெட்டியில் அடைப்பதும் கடினம். அதிகமான துணிகளைக் கொண்டு சென்றால் நிறைய பெட்டிகளை சமாளிப்பதும் கடினம். எனவே இரண்டிற்கும் இடையே ஒரு சரியான சமன்பாட்டை எட்டுவது பயணத்தை சுலபமாக்கும். ஒரு சில பயண அனுபவங்களுக்குப் பின் இது அனைவருக்கும் புரிபட்டு விடும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. பயணத்தில் முக்கியமானது நாம் செல்லும் இடங்களை மன மகிழ்ச்சியுடன், நமது உறவுகளுடனும் பார்த்து மகிழ்கிறோமோ என்பது மட்டுமே.
அடுத்த நாள் காலையில் விரைவாக எழுந்து அந்த இடத்தில் இருந்து கிளம்பி நேராக ஏர்போர்ட் சென்று அங்கு வாடகை கார் எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட நண்பகல் நேரத்தில் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து லிஸ் என்ற இடத்தில இருந்த கூகென்ஹாஃப் (Keukenhof) என்ற தாவரவியல் தோட்டத்திற்கு சென்றோம். இந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பதிவு செய்வது அவசியம் என்பதால் கண்டிப்பாக முன்பதிவு செய்வதுகொள்ளுங்கள். ஆம்ஸ்டெர்டாமில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் இந்தப் பூங்காவைச் சொல்லலாம். எங்கெங்கு காணினும் ட்யூலிப்(Tulip) என்பது இந்த இடத்திற்குப் பொருந்தும்.
சிவப்பு, மஞ்சள், நீலம், கருநீலம், ஊதா, வெளிர் சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் என பல வண்ணங்கள். பின்னர் இரண்டு வண்ணக் கலவை கொண்ட ட்யூலிப்கள், இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணக் கலவை கொண்ட ட்யூலிப்புகள் என்று கண்ணைப் பறித்தன. தெள்ளிய நீர் கொண்ட ஓடை, அதன் கரையோரம் ஒரு காற்றாலை, அதை சுற்றிலும் வண்ண வண்ண ட்யூலிப்புகள் என்று ஆஹா, என்னவொரு அழகிய காட்சி என்று சிலாகித்து சிலாகித்து பார்த்தோம். எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும் கண்ணில் கண்ட காட்சியின் அழகினை புகைப்படத்தில் சிறைப்படுத்த இயலவில்லை என்பது தான் உண்மை. அழகிய புற்களிடையே, நெடிய மரங்கள் கொண்ட சாலைகளிடையே எனப் பல விதமாக ட்யூலிப்புகளை வளர்த்து காட்சிப் படுத்தியிருந்தார்கள். பல பெரிய குடில்கள் அமைத்து பலதரப்பட்ட வகைமையான ட்யூலிப்புகளை அதன் உள்ளே வளர்த்து இருந்தது சிறப்பாக இருந்தது. அந்த குடில்கள் சொர்க்கத்தின் ஒரு வில்லையைப் போல அத்துணை அழகாக இருந்தது என்றால் மிகையில்லை. ட்யூலிப்கள் எப்படி நெதர்லாந்திற்கு வந்தது, அது எப்படி பயிரிடப்பட்டது, இன்று உலகிலேயே ட்யூலிப் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் நாடாக எப்படி நெதர்லாந்து வந்தது என்று பல்வேறு தகவல்களை பூங்காவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். நண்பகல் முதல் பூங்கா மூடும் வரை அங்கிருந்து பார்த்து விட்டு பின்பு நாங்கள் தங்கும் இடத்திற்கு திரும்பினோம். ட்யூலிப் தோட்டங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்த எங்களுக்கு அந்த ட்யூலிப் தோட்டத்துக் காட்சிகள் அந்த பயணத்தில் ஒரு சிறப்பம்சமாக நெஞ்சை விட்டு அகலாத இனிமையான நினைவுகளை இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
அடுத்த நாள் ரோட்டர்டாம் சென்று அந்த ஊரினைச் சுற்றிப் பார்ப்பதாக திட்டம். ரோட்டர்டாம் ஆம்ஸ்டெர்டாமை அடுத்த இரண்டாவது பெரிய நகரம். ரோட்டே என்ற ஆற்றின் கரையில் அமைந்த இந்த நகரம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய தாக்குதலில் முற்றிலும் அழிக்கப்பப்பட்ட போதும், இன்று அறுநூறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இடமாக இருக்கிறது. இராஸ்மஸ் பாலம் என்ற அழகிய பாலம் அமைந்துள்ள இந்த நகரம் ஐரோப்பாவிலேயே பெரிய துறைமுக நகரம் ஆகும். ரோட்டர்டாம்- ஹேகு(Hague) பகுதியில் மொத்தம் 180 நாடுகளைச் சார்ந்த 2.7 மில்லியன் பேர் வாழ்கின்றனர். நெதர்லாந்தில் இதுவே அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். ஐரோப்பா முழுவதையும் எடுத்துக் கொண்டால் பத்தாவது அதிக மக்கள் தொகையை நகரமாக விளங்குகிறது. கடல் வழியாகவும், சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து எனப் பல வசதிகள் கொண்ட இந்த நகரத்தை ஐரோப்பாவின் நுழைவுவாயில் என்று அழைக்கின்றனர்.
மார்க்ஹாலில் இருந்து மீண்டும் டக் டூர்ஸ் ஆரம்பிக்கும் இடத்திற்கு வருவதற்குள் அவ்வளவு டிராபிக் நெரிசல். எப்படியோ தட்டித் தடுமாறி வந்து காரை பார்க் செய்துவிட்டு ஸ்பிளாஷ் டூர்ஸ் பஸ்சில் ஏறினோம். கிட்டத்தட்ட கடைசியாக ஏறியதால் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் வேறு யாரோ அமர்ந்துவிட, கிடைத்த இடத்தில் அமர்ந்தவாறே இந்தப் பயணத்தை தொடர்ந்தோம். ரோட்டர்டாமின் பல்வேறு இடங்களை சுற்றி காண்பித்தவாறே வந்த அந்தப் பேருந்து சரியாக தண்ணீரை அடைந்தததும் ஒரு படகு போலாகி தண்ணீரில் நீந்த ஆரம்பித்தது சிறப்பாக இருந்தது. இராஸ்மஸ் பாலம், வணிகக் கட்டிடங்கள், பழைய கடைவீதி என்று எல்லாவற்றை பற்றியும் சிறப்பான விவரணையுடன் இந்த டூர் இருந்தது. ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த சுற்றுலாவை மேற்கொண்டால் ரோட்டர்டாமின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்த்து அனுபவிக்க முடியும்.
இதற்கு பிறகு நாங்கள் சென்றது, சர்வதேச நீதிமன்றம் இருக்கும் தி ஹேக் (The Hague) என்ற நகரத்திற்கு. இது ரோட்டர்டாமில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தது. ரோட்டர்டாமில் இருந்து பயணித்து ஹேக் செல்வதற்கு அதிகம் நேரம் ஆகவில்லை. கிட்டத்தட்ட மாலை 4 மணி வாக்கில் அங்கே சென்றடைந்தோம். ஹேக் நல்ல குளிராக இருந்தது. அங்கிருந்த பல்வேறு அருங்காட்சியங்களும். ஜனாதிபதி மாளிகை, உச்சநீதி மன்றம் போன்றவை நாங்கள் சென்ற போது மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் மூடி இருந்தது. எனவே பல இடங்களில் வெளியிலேயே நின்று புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோம். பல அரிதான ஓவியங்கள் கொண்ட Mauritshuis என்ற அருங்காட்சியகத்தை உள்ளே சென்று பார்க்க இயலவில்லை. காரைப் பார்க் செய்துவிட்டு நகரின் மையப் பகுதியில் இருந்த சதுக்கத்தில் நடந்து அந்த ஊரைச் சுற்றிப் பார்த்தோம். நிறைய உணவகங்கள் அங்கே இருந்ததால், அங்கேயே இரவு உணவினை உண்டோம். பின்னர் அன்று இரவு எங்கள் அறைக்கு திரும்பி அடுத்த நாள் செல்ல வேண்டிய இடத்திற்கான திட்டமிடலை செய்தோம். வெளியிடத்தில் அல்லது வெளியூரில் ஒரு நாள் சிறப்பாக அமைவது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று. முன் தினம் பார்த்த டுலிப் மலர்ப் பூங்கா மிகச் சிறப்பாக இருந்தது. அந்தப் பூங்காவை விட்டு வெளியில் வரவே மனம் இல்லை. இன்று பார்த்த ஹேக் என்பது நீதிக்கு பெயர் போன இடம். போர்க் குற்றவாளிகள், மனிதர்களுக்கு எதிரான கொடும் குற்றங்களைப் புரிந்தவர்கள் போன்றோர் தண்டிக்கப்படும் ஒரு இடம். இயற்கை அன்னையின் அழகிய எழில் காட்சியானது, எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தால் எவ்வாறு இருக்கும் என்னும் சம நீதியின் உச்சம். நீதிமன்றமானது நீதியை தேடிச் செல்லும் நீண்ட பயணக் கோட்டில் ஓர் முக்கிய இடமாகும். நீதிமன்றங்கள் தேவையற்ற ஒரு நாள் வந்தால் நன்று. அது வரை துலிப் மலர்கள் பூந்தொட்டியில் தலையாட்டும் நீதிமன்றங்களே குறைகள் நிறைந்த இவ்வுலகில் ஏதோ ஒரு நிறையை இட்டு நிரப்பும் வேலையை செய்து வருகின்றன.
முந்தைய நெதர்லாந்து பயண அனுபவத்தை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்
செவ்வாய், ஜனவரி 14, 2025
பொங்கல் வாழ்த்துகள் - கவிதை
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!
செவ்வாய், நவம்பர் 19, 2024
வேண்டுதல் - கவிதை
எப்போதேனும் பொழிந்து
என் மேனியைத் தழுவி
தன் காதலைச் சொல்கிறது மழை!
நானாகத் தேடும் போது
என் பாதங்களை முத்தமிட்டு
அலைக் கரத்தினால் இறுக அணைத்து
தன் காதலைப் பேசுகிறது கடல்!
விண்மீன் கூட்டத்தினிடையே
இரவில் மட்டும்
என் நினைவில் ஒளிர்ந்து
பகலில் என்னை மறந்து போகிறது நிலா!
என்னை நித்தமும் பின்தொடர்ந்து
என்னையே உருக்கி
நிலத்தில் நிழலாய் ஓடவிடும்
வெயிலாகவே வேண்டும் ஒரு காதல்!!
சனி, நவம்பர் 09, 2024
காந்தி சிரிக்கிறார் - கவிதை
திரையில் கற்பின் காவலனாய்
நிஜத்தில் பெண் பித்தனாய்
நங்கையரின் கனவு நாயகனின்
கட்சித் தொடக்க விழாவில்
பெண்களின் காவலன்
வாழ்கவென முழங்கினேன்
அன்பளிப்பாய் கிடைத்த நோட்டில்
காந்தி சிரித்தார்
அரசியல் தலைவரின்
நான்காவது திருமணத்தில்
கவரிமான் பரம்பரையில் வந்தவரென
வானம் வரை புகழ்ந்தேன்
தொண்டர்கள் கையளித்த கரன்சி
மாலையிலிருந்து காந்தி சிரித்தார்
பிறன் மனை நோக்குபவனை
பதிவிரதன் என்றேன்
ஏமாற்றுக்காரனுக்கு ஏகோபித்த
ஆதரவளித்தேன்
பணம் படைத்தவனின்
தகாத செயல்களை நியாயப்படுத்தினேன்
மனதில் ஒன்றை வைத்து
மன்றத்தில் வேறொன்றைச் சொன்னேன்
பதவிக்காக கை கால் பிடித்தேன்
பல நேரங்களில்
கொள்கை விடுத்து
பலவாய் நடித்தேன்
பணமே முக்கியம் என்றேன்
பதவியே உயர்லட்சியம் என்றேன்
பொய்யின் பக்கம் நின்றேன்
முகமூடிகள் அணிந்தேன்
அதுவே நிஜமுகம் என்றேன்
பொக்கைவாய் சிரிப்போடு
காந்தி கடந்து போனார்
மங்கையொருத்தியை
கயவர் பலர் துரத்திச் சென்றதை
கண்ணுற்றும் அமைதி காத்தேன்
பேதையின் அபயக் குரல்
பூட்டிய என் நெஞ்சில் மோதி
எதிரொலித்தது
மனதில் சூறாவளியொன்று முளைத்தது
முதன்முறையாய் பிறனுக்குக்
கைக் கொடுக்க அடியெடுத்தேன்
பரங்கியரின் கட்டுடைத்த காந்திக்
கைத்தடியாய் உருவெடுத்தேன்
அரசாங்க மருத்துவமனையின்
பிணவறையிலிருந்து
இன்று காந்தி
சிரித்திருப்பாராவெனத்
எனக்குத்தான் தெரியவில்லை
பரங்கியரின் கூட்டத்திலாவது
ஒரு காந்திக்கு இடமிருந்தது
கோட்சேக்களின் தேசத்தில்
காந்தியின் கைத்தடிக்குக் கூட இடமில்லை
வியாழன், நவம்பர் 07, 2024
நீரும் நிலமும் - கவிதை
ஈரைந்து திங்கள் கருவறைச் சிறையில்
கற்றவை கையளவேயானாலும்
பன்னிரு ஆண்டுகள்
பட்டாம்பூச்சிகளுக்கு பள்ளிச் சிறை
பருவத்தில் காப்பாளரெனும் காவலாளி கொண்ட
கல்லூரி என்னும் கௌரவச் சிறை
மணமுடித்து மறுவீடு என்னும்
மீளாத புதிய சிறை
குடும்பத்திற்காய் அடுமனையெனும் மூடாத ஆலையில்
முடிவுறாத வேலைச் சிறை
பொருளாதார தேவைக்காக
ஏவும் வேலையை முடிக்கும் கூலியாய்
ஈரடிக்கு ஈரடி அறையில்
நவீனச் சிறை
ஓய்வில் விட்டதை அனுபவிக்க
எப்போதோ கிட்டும் நேரத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலைக்கழிப்புச் சிறை
வயோதிகத்தில் தொடரும் அனுதாபச் சிறை
பலரிடத்திலும் கிட்டும் அலட்சியச் சிறை
பணமிருந்தாலும் உடல்நலம் குன்றினால்
மருந்துகளிடம் சிறை
மருத்துவம் கை விட்டால்
பிணவறையில் குளிர்ச்சாதன பெட்டிச் சிறை
இத்தனை சிறைவாசம் கடந்து பின்பே
மயான அக்னியில் பிறக்கும் விடுதலை
வாழ்வின் நெடிய பக்கங்கள் யாவற்றிலும்
கட்டிப் பிணைக்க பலநூறு சங்கலிகள்
கரையேறத் துடிக்கும் மீனுக்குத் தெரிகிறது
நீரே சிறைச்சாலை
நிலமே விடுதலை!
சனி, செப்டம்பர் 21, 2024
நீர் முகம் - கவிதை
இறந்தவரைப் பற்றிய இரங்கல்பா
முகநூலில் முளைத்த
அரை மணி நேரத்தில்
கவிதையொன்று இடப்படுகிறது
மெழுகுவர்த்தி உருக சில மணித்துளிகள்
பட்டாம்பூச்சியொன்று மறைய சில நாட்கள்
ஈசலொன்று தேய சில மாதங்கள்
மானுட சமுத்திரத்தின் ஒருதுளி
விண்ணேக வருடங்கள் பல
இயற்கை கூட இறந்தவற்றை செரிக்க
காலம் எடுக்கிறது
ஒரு பெரும் அலையில் தோன்றும்
நீர்முகத்தை ஒத்தது மரணம்
சமூக ஊடகத்தின்
செய்தி அலையில் நசுங்கி
மறைந்த அன்றாவது
மற்றுமொரு பதிவால் மறக்கப்படாமல்
இருக்கும் அளவாவது
வாய்க்க வேண்டும் ஒரு வாழ்வு
வியாழன், செப்டம்பர் 12, 2024
இந்திரையோ சுந்தரியோ - கவிதை
இயற்கை காட்சி ஒன்றை சமீபத்தில் வரைந்தேன். இதோ அந்த ஓவியமும் அதற்கான கவிதையும்.
பச்சை இலையாடை உடுத்தி
பலவண்ண மலர்கள் அணிந்து
நீரலைகள் நெளிந்து ஆடும்
தடாகத்தை இடையில் சூடி
இயற்கையெனும் இளைய மங்கை
இந்திரையாய் காட்சி கொண்டாள்
இமைக்கவியலா பேரழகு பூண்டு
இதயக்கூட்டில் உயிராய் நிறைந்தாள்
அன்னங்கள் நடை பயிலும்
நாணலும் வண்ணக் கோலமிடும்
காற்று நதியின் தலைகோதி விளையாடும்
பூக்கள் மணம்பரப்பி சதிராடும்
முகில்கள் வரவாயெனத் தூதனுப்பும்
மஞ்சு நீராடியிலே முகம் திருத்தும்
பசுமரங்கள் இலையாட்டி நடம் புரியும்
பைங்கிளிகள் கானமிசைத்து பறந்தோடும்
சில்வண்டு மலர்த் தாவி தேனுண்ணும்
சிட்டுக்குருவி மரம் தாவி தலையாட்டும்
இயற்கையின் ஜாலங்கள் பல வண்ணம்
இன்பங்கள் பலகோடி அவை சொல்லும்
இளமகளை இனியவளை எந்நாளும் காத்திடுவோம்
காலமெலாம் கருத்துடனே காதலித்து தொழுதிடுவோம்
வியாழன், செப்டம்பர் 05, 2024
அவளுக்கான அவள் - கவிதை
திங்கள், ஆகஸ்ட் 05, 2024
இரு துருவங்கள் - கவிதை
பல்வேறு பணிகளுக்கு இடையே இரண்டு நாட்கள் செலவழித்து வரைந்த ஓவியம். பல நாட்களுக்கு பிறகு நேரம் எடுத்து வரைந்தது மன நிறைவை அளித்தது.
நீலம் போர்த்திய தூரத்து மலை
துள்ளும் கயல் நீந்தும் சுனை
நட்டுவைத்த தூரிகையாய் தலையாட்டும் மரங்கள்
தண்மதியின் சில்லுகளாய் அழகழகாய்ப் பூக்கள்
மரகதமோ மாயக் கம்பளமோ
புல்வெளியென விரியும்
மகரந்தத் தாது உதிர்த்து
காற்றில் மலர்கள் அலையும்
அக்கரையை இக்கரையுடன் இணைக்கும்
நீர்க் கரங்கள் தாலாட்டும் தெப்பம்
காலமென்னும் ஆழியிலே ஆடும்
மனமென்னும் கலத்தின் நிழல் பிம்பம்
அக்கறையாய் கடல் கடக்கும் கடிதம்
அதை மடியேந்தும் இரும்பாலான இதயம்
இருவேறு பாதை வழிப் பயணம்
இணைவதில்லை துருவங்கள் ஒரு பொழுதும்
இருவிழிகள் காணும் காட்சி இருமை
இயற்கை மடியில் நிறைவதென்றும் இனிமை
ஏகாந்தம் இனியது கண்கூடு
நிலவின் தனிமையை நிகர்த்தது இவ்வீடு
சனி, ஆகஸ்ட் 03, 2024
உரைகல் - கவிதை
நேசத்தின் பெயரால் நுழைபவன்
துரோகமெனும் நஞ்சு விதைத்து
கண்டத்தில் ஆலகாலமாய் உறைகிறான்
காதலாய் கசிந்துருகி
எண்ணம் நிறைப்பவன்
அந்நியனாய் வார்த்தை இறைத்து
கண்ணீராய்க் கனம் தருகிறான்
நேற்றுவரை காய்தல் உவத்தலின்றி
உரிமையுடன் பழகியவன்
என் பொருளாதார நிலையறிந்து
அறியாதவன் போல் எட்டிச் செல்கிறான்
உறவென்று ஆதரவாய் கைக் கோர்த்தவன்
குறுகிய வெற்றியை விரும்பி
பொருந்தாப்பல பொய்யுரைத்து
என்தோல்வியில் அரியணை ஏறுகிறான்
தடித்த வார்த்தைகள் சாய்த்த போதும்
துரோகத்தின் தீயினில் கருகிய பின்னும்
நம்பியே நாளும் நலிந்த பின்னும்
புதியவர்களுக்கு முதல் சந்தர்ப்பமாவது
வழங்கென வாதிக்கும் என் மனதிடம்
யார் சொல்வது
ஒவ்வொரு துரோகமும்
முதன்முறையாக நடந்ததேயென்று