மழை மண்ணில் விழுந்த பின் அது என்னவாகிறது? உணவாகிறது, மணமாகிறது, மருந்தாகிறது, பார்க்கும் எல்லாமுமாகிறது. மழையைப் போல வெகு சிலருக்கு சொற்கள் அமைந்து விடுகிறது. துவளும் போது ஊக்கமும், மகிழ்ச்சியின் போது இனிமையும், குழப்பத்தில் புது வழிகாட்டுதலுமாகிறது. அத்தகைய வீரிய சொற்களுக்கு சொந்தக்காரர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். ஓயாத அலை போல தமிழ்ச் சொல்லாலே கவி நெய்து தமிழன்னைக்கு மகுடம் சூட்டியவர். தன்னுடைய உலராத வார்த்தைகளால் வறண்ட உலகின் மனசாட்சியை ஈரப்படுத்தியவர். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்று தமிழின் புது வேகப் பாய்ச்சலுக்கு வித்திட்டவர். பாரதி, பாரதிதாசன், பெரியார், பாப்லோ நெருடா, வால்ட் விட்மன் எனப் பல ஆளுமைகளைப் பார்த்து, படித்து பாடலாக்கி, புதுக் கவிதைக்கு புத்துணர்வு ஊட்டியவர். எத்தனை உயரத்தில் இருந்தாலும் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் எளிய மனம் படைத்தவர்.
ஞாயிறு, டிசம்பர் 07, 2025
நடை மறந்த நதி - மகாகவி ஈரோடு தமிழன்பன்
சனி, நவம்பர் 01, 2025
ஹாலோவீன் 2025
சமீபத்திய இந்திய பயணத்தின் போது, எங்கள் ஊரில் உள்ள ஒரு அரசு வங்கிக்குச் சென்றிருந்தேன். கூட்டு வங்கிக் கணக்கில் இணைந்த இருவரில் ஒருவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை சேர்க்க வேண்டும். புதியதாக இணைப்பவருக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் போட்டோ, விண்ணப்பப் படிவம், விண்ணப்பக் கடிதம், எந்த நபரை நீக்குகிறோமோ அவருக்குமான அதே சுய விவரங்கள் என்று இதற்கான தரவுகள் மட்டுமே அத்துணை தேவைப்படுகிறது. இதற்கும் புதிதாக சேர்க்கப்படும் நபர் அதே வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர். ஆனாலும் எல்லா தரவுகளையும் கேட்கிறார்கள்.
ஒவ்வொரு ஆபிஸிலும் வேலை செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து இவ்வளவு தரவுகளை பெற வேண்டும் என்று ஏதோ இலக்கு வைத்திருப்பார்கள் போலும். ஒவ்வொரு அலுவலரும் தரவுகளை வாங்கி அடுக்கி அடுத்த மேசைக்கு தள்ளும் பணியையே பெரும்பாலும் செய்கின்றனர்(Paper Pushers). ஆனாலும் வேலை முடிந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை. சார், ஒரு லெட்டர் வாங்கிட்டு வாங்க, இந்த ஆவணம் எங்களுக்கு பத்தாது வேற ஆவணம் (நம்ம கிட்ட இல்லாதது) வெச்சிருக்கிங்களா? இதையெல்லாம் கூட உடனே சொல்ல மாட்டார்கள், ஓரிரு நாள் ஒவ்வொரு வழங்கிடமாக(counter) அலைய விட்டு அப்புறம் போனால் போகிறது என்று சொல்வார்கள்.
ஆனால், அதை விட முக்கியமானது வங்கிகளின் வேலை நேரம். காலை 10:30 முதல் மதியம் ஒரு 2 மணி வரை மட்டுமே வங்கிக்குள் அனுமதிப்பார்கள். அதற்குப் பிறகு உள்ளே போவது என்றால் உங்களுக்கு ஃப்யூன் முதல் ரிசப்ஷனிஸ்ட் முதல் உள்ளிருக்கும் மானேஜர் முதல் அவர் வணங்கும் கடவுள் வரை அனைவரையும் தெரிந்திருக்க வேண்டும். வெளியூரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, இது போன்ற ஒரு வங்கி வேலையை முடித்து விட்டு இத்தனை நாட்களுக்குள் ஊர் திரும்ப வர வேண்டும் என்று செல்பவர்கள் ஆகப் பெரும் நேர்மறைச் சிந்தனையாளர்கள் எனலாம். அப்படியே வெளிநாட்டில் இருந்து ஓரிரு வார விடுமுறையில் சென்று இதே போன்ற ஒரு சில வேலைகளை முடித்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் நேர்மறைச் சிந்தனையாளர்களில் உயர்ரகம். ஏனென்றால் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதம் மற்றும் சிபாரிசு கடிதம், உச்ச கிரகங்களின் பார்வை என்று அனைத்தும் நமக்காக வேலை செய்தால் மட்டுமே இது சாத்தியம்.
இது மட்டுமல்ல, மாற்றப்பட்ட புதிய வங்கிக் கணக்கில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களுடைய நேரத்தை நீங்களே மதிக்கவில்லை என்று அர்த்தம். இதற்கு வங்கிக்கு எத்தனை தடவை செல்ல வேண்டி இருக்கும், என்னென்ன தரவுகள் தர வேண்டும், தோராயமாக எத்தனை வருடங்கள் ஆகும் என்பதையெல்லாம் அறுதியிட்டு சொல்ல இயலாத ஒன்று. கூட்டுறவு வங்கிகளோ இதில் இன்னொரு படி முன்னே நிற்கிறது. பல நேரத்தில் முக்கியமான தரவு அல்லது தேவைகளை கடைசி நேரத்தில் சொல்லி நாம் ஊருக்குக் திரும்பும் முன் நமது வேலை கண்டிப்பாக முடியாது என்பதை உறுதி செய்வதில் வல்லவர்கள்.
வெள்ளி, அக்டோபர் 24, 2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கவிதை
கண்மணியின் கணவன்
நான்கு சிறிய பிள்ளைகளோடு
அவளை விட்டுப்போய்
பத்து வருடமாகிறது
மழைக்கு ஒழுகும் வீட்டில்
இரு வேளை உணவுக்காக
குப்பை அள்ளி
குழந்தைகளோடு கஷ்டஜீவனம் நடத்துகிறாள்
கணவன் சந்தேகப்பட்டானென
தீவைத்து சிதைந்த உடலுடன்
இருள் கவிந்த நேரங்களில் மட்டும்
பிறஆண்களுடன் சென்று வருகிறாள்
சுலோச்சனா வயிற்றுப்பாட்டுக்காக
சரசுவின் அப்பா
அவளுடைய பதினைந்தாவது வயதில்
ஒரு சாராய பாட்டிலுக்காக
அவளை எவனுக்கோ
விற்றுச் சீரழித்ததில்
கையில் பிள்ளையோடு
பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கிறாள்
சற்றே மனப்பிறழ்வோடு
தினமும் குடிகார கணவனிடம்
அடிஉதை வாங்கி
மயக்கத்தில் கிடக்கும் மாலினிக்கு
அவ்வப்போது உதவுவது
மும்பை சென்று
உயிர்வதை அனுபவித்து
பெண்ணாக மாறிய
எதிர்வீட்டு பிருந்தா அக்கா
ஆணவக் கொலை என்றெல்லாம் பதியப்படாமல்
தவறுதலாக நேர்ந்தது என்றே பதியப்பட்ட
மரணம் தான் ஆஷாவுடையது
கள்ளிப் பாலில் இறந்த
பெயரிப்படாத பெண்சிசு
புதைக்கப்பட்ட மரத்தின் அடியிலெல்லாம்
பறவைகள் எப்போதும் கூடு
கட்டுவதேயில்லை
பெண் பெயரிட்ட நதிகள் தோறும்
நெகிழிக் கழிவுகள் கொண்டு அடைத்து
பூமிப் பெண்ணின் மேனியெங்கும் மலடாக்கும்
இரசாயனக்கொல்லி தெளித்துப் புண்ணாக்கி
பூமித்தாயின் வயிற்றில் துளையிட்டு
பீச்சிடும் எண்ணெய் திரவம்
குடித்து பணமோகம் தீர்த்துக் கொள்ளும்
பணமுதலைகள் நடைபயிலும் வீதிதோறும்
வன்கொடுமை, ஆசிட் வீச்சு
வரதட்சிணை கொடுமையென
பாழும் குழிகள் ஆங்காங்கே
பரமபிதாவின் ஆசிபெற்ற பெண்ணே
உன்னை இந்தப் பூலோகச் சொர்க்கத்தில்
சுகவாழ்வு வாழ அழைக்கிறோம்
உன்னைத் துன்பத்திலிருந்து
காக்கும் ராஜகுமாரன் வந்துவிட்டான்
உன்னை மிகவும் நேசிக்கிறான்
நிதமும் ரட்சிப்பானென
பசப்புச் சொற்களை வீசும் கனவான்களே
பூமியை எப்போது
பெண்களின் நரகமென
அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பீர்கள்?
Dude(டியூட்) தமிழ்ப்பட விமர்சனம்
ஹீரோ என்பவன் யார்? 100 பேரை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்துபவன், ஹீரோயின் பின் தன்னுடைய நண்பர் குழாமுடன் சுற்றி அவளை காதலிக்க வைப்பவன், பெண்ணிற்கான இடம் எது, பெண் எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசுபவன் என்று தமிழ் சினிமா காலங்காலமாக அடித்த பல்வேறு ஆணிகளை எல்லாம் "இது பூராவுமே தேவையில்லாத ஆணி" என்று தைரியமாக பிடுங்கி போட்டிருக்கிறது டியூட். ஆணவக் கொலைக்கு எதிரான கருத்துகள், ஹீரோயிசம் என்றால் என்ன, பெண்ணியம் என்பது என்ன, திருமணம் என்பதற்கான உண்மையான அர்த்தம் வரும் தலைமுறையிடத்தில் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் நகைச்சுவை என்னும் வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசியாக மனதில் தைக்கும் விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி, பிரதீப்பின் தோழனாக வரும் சத்யா அக்காலா, ஹ்ரிது என்று பலரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பெண்ணியம், சாதியம், ஹீரோயிசம் என்று பல கனமான விஷயங்களை ரொம்ப யதார்த்தமாக இந்த காலத்திற்கு ஏற்ப கையாண்டிருப்பதற்கே முதலில் டியூட் படக்குழுவினர்க்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.
தாலிக்கு பின்னாடி இருக்கற அந்த பொண்ணோட பீலிங்சுக்கு தான் மரியாதை என்று தாலி சென்டிமெண்டை காலி செய்தது, ஒரு பொண்ணுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை அதுக்கு ரீசன் எல்லாம் தேவையில்லை என்று பெண்ணின் உணர்வுகளை முன்னிலைப்படுத்துவது, அவ்வளவு ஆணவம் இருந்தா நீங்க போய் சாகுங்கடா என்று ஆணவக் கொலைக்கு எதிராக சாட்டை சுழற்றுவது, எதுவா இருந்தாலும் நான் face பண்ணிக்கறேன், Frontல வெச்ச லெக்கை backல வைக்கறது நம்ம ஹிஸ்டரிலேயே இல்லை, 100 பேர் வந்தாலும் அடி வாங்க முடியும், போன்ற டயலாக்குகள் மூலம் ஹீரோயிசத்திற்கு புதிய அர்த்தம் தந்தது , "தேவதாஸ் சார், நீங்க ஏன் எனக்கு இவ்ளோ பண்றிங்க" என்று மமிதா கேட்கும் போது ஒலிக்கும் பாடலும் அதில் வெளிப்படும் பிரதீப்பின் முக உணர்வும், ஆழமான அன்பும் என்று படம் நெடுக பல அடடேக்கள். சில இடங்களில் பிரதீப் காட்டும் சராசரி ஆணின் உணர்வும் அந்த பாத்திரத்திக்கு நம்பகத் தன்மையை அளிக்கிறது.
இன்றைய இளைஞர்களின் பல்ஸ் பிடித்து சொல்ல வந்த விஷயத்தை எந்தவித சமரசமும் இல்லாமலும், பிரச்சார நெடி இல்லாமலும், பார் காட்சி அல்லது ஹீரோ குடித்துவிட்டு பாடும் காட்சி இல்லாமலும், ஒரு சில நச் வசனங்கள் வழியாக அழகாக சொல்வதிலும் நிமிர்ந்து நிற்கிறான் இந்த டியூட். பாலக்காட்டு மாதவனை பூமராக்கும் ஒரு அகன் வருவதற்கு தமிழ் சினிமாவிற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தான் சற்று ஆயாசத்தை தருகிறது. மொத்தத்தில் Dude அரிதானவன், அன்பானவன், அசலானவன்.
#dudemovie #dudetamilmovie #dude #dude2025
வியாழன், அக்டோபர் 09, 2025
காபி கவிதைகள்
வெள்ளி, செப்டம்பர் 12, 2025
பூக்கள் பூக்கும் தருணம் -சுற்றுலா - பாகம் 4
அடுத்த நாள் நாங்கள் சென்றது "தி ட்யூலிப் பார்ன்" எனப்படும் ஒரு ட்யூலிப் வயலுக்கு. பல இடங்களில் ட்யூலிப் மலர்களைப் பயிர் செய்து அந்த ட்யூலிப் மலர்கள் மலர்ந்தவுடன் அதனை பார்வையாளர்கள் வந்து பார்க்க கட்டணம் வசூலித்து அனுமதிக்கின்றனர். பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதியுடன் காபி, டீ போன்ற சூடான பானங்களும் சிற்றுண்டிகளை கிடைக்கும் சிறிய உணவகங்கள் கூடிய இந்த ட்யூலிப் வயல்கள் அழகோ அழகு. என்னதான் அழகான இளவேனிற் காலம் என்றாலும் நெதர்லாந்து எப்போதும் கொஞ்சம் குளிராகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக ட்யூலிப் வயல்களில் அடிக்கும் காற்று பின்பனிக் கால காற்று போல மிகவும் குளிர்ச்சியாகவே இருந்தது.
எனினும் அழகான பிராக் அல்லது நீண்ட உடை அணிந்து அந்தத் துலிப் வயல்களுக்கு நடுவே ஆடிப்பாடி நிறைய வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரைப் பார்த்தோம். நாங்கள் ஒரு ஸ்வெட்டர் அணிந்து அதன் மேல் ஒரு மேலுறை அணிந்த பின்னும் குளிர் தாளவில்லை. எப்படித்தான் இந்தக் குளிரில் பிராக் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அந்நியன் படத்தில் நாயகனும் நாயகியும் நாயகனின் நண்பர்களும் சாதாரண சேலை வேட்டி போன்ற உடைகளை அணிந்தே நடனமாடி இருப்பார்கள். எல்லாம் சமூக ஊடகங்கள் செய்யும் மாயை என்று தோன்றியது. கண்டிப்பாக இந்த ட்யூலிப் வயல்களுக்குச் செல்லும் முன்னர் சரியான கம்பளி உடைகளை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.
அந்த ட்யூலிப் வயலில் கார், இதய வடிவம், மிதிவண்டி, டிராக்டர், பியானோ, மாடுகள் போன்ற பல்வேறு உருவங்களை வைத்திருந்தார்கள். ட்யூலிப் வயல்களுக்கு நடுவே இருந்த அந்த வாகனங்களிலோ அல்லது வேறு அழகிய பின்னணியிலோ நீங்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். புகைப்படம் எடுத்துவிட்டு வயல்களைச் சுற்றிப் பார்க்கலாம் நாங்கள் சில மணி நேரம் அந்த ட்யூலிப் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு சிற்றுண்டி குடிலில், சூடான பானம் அருந்திவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு அரை நாள் அளவு செலவு செய்யும் கூடிய ஒரு இடமே இந்த ட்யூலிப் வயல்கள். அங்கிருந்து கிளம்பி நண்பர் பரிந்துரை செய்திருந்த இன்னொரு ட்யூலிப் வயலுக்கு நாங்கள் சென்றோம். அந்த ட்யூலிப் வயலும் முன்னது போலவே இருந்தது. எனவே அதற்குள் செல்லாமல் வெளியிலிருந்து பார்த்துவிட்டு புறப்பட்டு விட்டோம். கீழே zanse Schans இல் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், காணொளியும் உள்ளன.
அடுத்ததாக நாங்கள் அன்றிரவு செல்ல வேண்டிய Geithoorn என்ற இடத்தை நோக்கிய எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அதற்கு முன் நாங்கள் சென்றது Zanse Schans என்ற இடத்திற்கு. இது Zaandijk என்ற ஊருக்கு மிக அருகில் இருக்கும் மிகப் பழமையான காற்றாலைகள் மற்றும் மர வீடுகளைக் கொண்ட ஒரு இடமாகும். வட ஆம்ஸ்டர்டாமில் உள்ள காற்றாலைகள் பலவற்றையும் பாதுகாக்கும் பொருட்டு அவற்றை ஒரே இடத்தில் அமைத்து இருக்கின்றனர். இந்த கிராமத்தில் சான்(Zaan) ஆற்றின் கரையில் நிற்கும் பல்வேறு மரக் காற்றாலைகள், வாய்க்கால்கள் நடுவே நிற்கும் டச் மரக்குடில்கள், சிற்றுண்டி சாலைகள், சீஸ்(cheese) உற்பத்தி செய்யும் பண்ணைகள், ஈயப் பாத்திரங்கள் செய்யும் சிறு தொழில்கள், பாரம்பரிய டச் மரக் காலணிகள் செய்யும் தொழில் கூடம் ஆகியன நிறைந்த இந்த இடத்திற்கு, ஆண்டொன்றிக்கு, ஏறத்தாழ 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கண்டிப்பாக உங்களின் நெதர்லாந்து பயணத்தில் இணைத்துக் கொள்ளக் கூடிய ஓரிடமாக இதை நீங்கள் கொள்ள வேண்டும். அருங்காட்சியகம், மரக் காற்றாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு விட்டு Zaan ஆற்றின் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பியது என்றுமே மறக்க முடியாத ஒரு அனுபவத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை.
Geithoorn என்பது நெதர்லாந்தின் வெனீஸ் என்று வர்ணிக்கப்படுகிறது. தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரில் தெருக்கள் அதிகமில்லை. கைகளால் தோண்டப்பட்ட கண்மாய்கள் நிறைந்த இந்த ஊரை சிறு படகுகள் வழியாகவே சுத்திப் பார்க்க முடியும். படகுகள் ஓடும் கண்மாய்களின் கரைகளில் உணவகங்கள், காபி விற்கும் கடைகள், சர்ச், வீடுகள், லைப்ரரி யாவும் அழகாக அணிவகுத்து நிற்கின்றன.
Geithoorn கண்மாய் தோற்றம்
நேரம் போவதே தெரியாமல் அங்கே அமர்ந்து படகுகளில் செல்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகும்.
அடுத்த நாள் காலை எழுந்த பின் Geithoorn இல் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் இருந்த Fort Bourtange என்ற கோட்டையைப் பார்க்கச் சென்றோம். நெதர்லாந்தின் வடக்குப் பகுதியில் Groningen பிராந்தியத்தில் உள்ள இந்தக் கோட்டை ஜெர்மனியின் எல்லையில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவிலேயே அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பென்டகன் கட்டடத்தைப் போல நட்சத்திர வடிவில் வடிவமைக்கப்பட்டு சுற்றிலும் அல்லிகள் மலர்ந்து அழகு சேர்க்கும் அகழிகள் கொண்ட இந்தக் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
நெதர்லாந்தில் காணப்படும் காற்றாலைகள், கற்களைக் கொண்டு செதுக்கப்பட்ட பாதைகள், அகழிகள் மேல் நான்கு திசையிலும் பாலங்கள், புல்வெளிகள், கோட்டையின் உள்ளே கடைகள், பார்வையாளர் அரங்குகள் என்று பல அம்சங்கள் நிறைந்துள்ளது. கோட்டையின் உள்ளே வீரர்கள் தங்கும் அறைகள், கோட்டையைப் பற்றிய விவரங்கள் கூறும் பார்வையாளர் அரங்குகள், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்த கோட்டையைப் பற்றிய விவரங்கள் பகிர ஊடாடும் அமைப்புகள் , உள்ளேயே சாப்பிடும் இடங்கள் என்று பல அம்சங்கள் உள்ளது. வரலாற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்தக் கோட்டையை விரும்புவார்கள். ஒரு 3 மணி நேரம் கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு, சிற்றுண்டி அருந்திவிட்டு மீண்டும் Geithoorn வந்தடைந்தோம். அங்கே வந்து சேர்ந்தபின் கொஞ்ச நேரம் Geithoorn கண்மாய்க் கரையில் அமர்ந்து அந்த நகரை அமைதியாக ரசித்தோம். அன்றிரவு நாங்கள் தங்க இருந்த அறையை அடைந்து இரவு உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றோம்.
அடுத்த நாள், Geithoornஐ விட்டு புறப்பட வேண்டிய நாள் என்பதால் காலையில் சீக்கிரம் எழுந்து அறையில் இருந்து கிளம்பி கண்மாய்க் கரைக்கு சென்று அங்கே மகிழுந்தை நிறுத்தி விட்டு, படகுச் சவாரி செய்தோம். படகுச் சவாரி செய்து பல நாட்கள் ஆயிற்று என்றாலும் நிறைய கூட்டம் இருந்ததால், மற்ற படகுகளுக்கு பொறுமையாக நின்று வழி விட்டு பின்னர் படகை செலுத்தி, அந்த கண்மாயை வலம் வந்தோம். பல இடங்களில் கண்மாய் ஆழமாகவே இருந்தது. குளிர் காற்றும் வீசியது. குழந்தைகள் மிகவும் ஆர்வமாக படகினை செலுத்தியதால் நாங்கள் வெறும் பயணிகளாக மட்டுமே அமர்ந்து நன்கு இயற்கை காட்சிகளை பார்வையிட்டு ரசித்தோம்.
பின்னர் நண்பகல் உணவினை உண்டு விட்டு, ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி மகிழுந்துப் பயணத்தை தொடங்கினோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் ஆம்ஸ்டர்டாமை அடைந்து விட்டோம். அன்று நகர மையத்தில்(Downtown) இருந்த பல்வேறு சிலைகள், சர்ச்சுகள், கடைகள் போன்றவற்றை பார்த்து விட்டு அடுத்த நாள் மீண்டும் ஊர் திரும்புவதாகத் திட்டம். நகர மையத்தில் ஓர் இடத்தில வண்டியை நிறுத்திவிட்டு நடந்தே அருகில் உள்ள இடங்களை சுற்றிப் பார்த்தோம். ஆன் ஃபிராங்க் வாழ்ந்த வீடு, வான் கோ அருங்காட்சியகம், ரிக்ஸ் அருங்காட்சியகம் (Rijksmuseum) போன்ற பல்வேறு சிறப்பான இடங்கள் ஆம்ஸ்டர்டாமில் உண்டு. எனினும் நாங்கள் அங்கு சென்ற போது பார்வையாளர் நேரம் கடந்து விட்டதால் இவை எதையும் பார்க்க இயலவில்லை.
அங்கு உள்ள கடைகளில், ஊருக்குக் கொண்டு செல்ல, நினைவு பரிசுகள் ஒன்றிரண்டை வாங்கினோம். அப்படியாக வாத்து பொம்மைகள் விற்கும் கடை ஒன்றிக்கு சென்றிருந்தோம். நடிகர்கள், அரசியல்வாதிகள், பாடகர்கள் போன்ற பலரை வாத்து உருவம் கொடுத்திருந்தார்கள். இது வேடிக்கையாகவும் இருந்ததோடு மிகச் சிறப்பாகவும் இருந்தது.
பின்னர் ஆம்ஸ்டர்டாமின் மிகவும் சிறப்பம்சமான ஆம்ஸ்டெல் ஆறு படகு சவாரியை கரையில் இருந்து பார்த்து ரசித்தோம். அமரும் இருக்கைகள் கொண்ட பூங்கா, அமரும் இருக்கைகள் கொண்ட கரையோர காபி கடைகள் என்று பல இடங்களில் இருந்தும் ஆம்ஸ்டெல் ஆற்றில் சுற்றுலா செல்லும் படகுகளைப் பார்க்க முடியும். ஆங்காங்கே துலிப் மலர்கள் கொண்ட பெரிய பூந்தொட்டிகளும் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு, குளிர் காற்றில் அந்த மலர்கள் குலுங்கியது மழலைகள் தங்கள் சிவந்த கரங்களை ஆட்டி உற்சாகப்படுத்துவது போலவே இருந்தது.
நகர மையத்தில் இருந்த டாம் சதுக்கம் (Dam Square), அரண்மனை(Royal Palace) ஆகியவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மனம் நிறைய புதிய அனுபவங்களும், மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க கேமரா நிறைய புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொண்டு அன்றைய இரவு உணவினை நண்பரின் வீட்டில் முடித்துவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அன்றிரவு நாங்கள் தங்க வேண்டிய இடத்தினை அடைந்தோம்.
வியாழன், ஆகஸ்ட் 07, 2025
கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா 2025 உரை
வெள்ளி, ஜூலை 18, 2025
சக்தியில்லையேல் சகமில்லை
விளம்பரங்களை நமது சமூகத்தின் கண்ணாடி என்று கொண்டால், விளம்பரங்களில் வரும் பெண்கள், மணமும் குணமும் நிறைந்த சாம்பாரை செய்கிறவளாக இருக்கிறாள். கணவனின் அழுக்கு உடைகளை வெளுப்பவளாக இருக்கிறாள். ஊக்க பானம் கொடுத்து மகனை படிக்க வைப்பவளாக இருக்கிறாள்.தனக்குள் இருக்கும் ஐஸ்வர்யா ராயை பலவித களிம்பு பூசி, கொக்கி போட்டு இழுக்கும் வித்தையை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறாள். எத்தனை வேலைகள் செய்தாலும் எவ்வித சோர்வும் இன்றி அழகாக வலம் வருபவளாக இருக்கிறாள்.
சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை ஒரு கண்ணாடி எனக் கொண்டால், சில ஆண்டுகளுக்கு முன், தில்லியில் ஒரு இரண்டு வயது குழந்தையின் தாய் ஒரு நபரின் தற்கொலைக்கு காரணமானாள் என்று அந்த நபருடைய குடும்பத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, முகத்தினில் கருப்பு மை பூசப்பட்டு வீதியில் இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறாள். ஒரு ஆணின் காதலை ஏற்காத பெண்ணிற்கு கத்தி குத்து, ஆசிட் வீச்சு, உடலுக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தலித் பெண் என்றால் ஹத்ராஸ் சம்பவம் போல வன்கொடுமை செய்யப்பட்டு மரணமடைந்த அவளுடைய உடல் கூட எந்த வித குற்ற உணர்வும் இன்றி நள்ளிரவில் எரிக்கப்படுகிறது. ஒரு பெண் காதல் வயப்பட்டு வேறு ஒரு சாதி ஆடவனை கைப்பிடித்தால் கௌரவக் கொலை என்ற பெயரில் அழிக்கப்படுகிறாள். 15 முதல் 18 வயது வரை இளவயது பெண் திருமணங்கள் கொரோனா காலத்தில் அதிக அளவு நடந்ததாக நாம் அறிய வருகிறோம்.
மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி
ஆசைப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவி மனைவி ஆனாள்
முகம் தெரியாதவனின் கையை பிடித்து ஏழடி எடுக்கையில்
ஹோம குண்டத்தில் சாம்பல்
வழியெங்கும் நெருப்பு
இதற்கு முக்கிய காரணம் பெண்கள் படித்தவர்களாக இருந்தால் தங்களுக்கு என்று குடும்பம், வேலை என்று எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு வலிமையான இடத்திற்கு வந்து விடுவாள் என்ற பயம் தான்.
அதிகம் பேசும் பெண்ணை வாயாடி என்போம், ஆனால் அதிகம் பேசும் ஆணுக்கு தமிழில் பெயர் இல்லை வீட்டை விட்டுச் சென்ற பெண்ணிற்கு ஓடு காலி என்றும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்ணுக்கு மலடி என்றும் பெயர் உண்டு. நேர்த்தியாக உடை உடுத்தினால் எத்தனை ஜோடிக் கண்கள் ஒரு பெண்ணை உரசிச் செல்கிறது. ஒரு பெண் கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை எத்தனை கரங்கள் தீண்டத் துடிக்கிறது. இவ்வாறாக பெண்ணின் சிறகுகளை வெட்டி விட்டால் அவளால் எத்தனை உயரங்களைத் தொட முடியும்?
பெண் விடுதலை என்பது ஆண்களைச் மட்டும் சார்ந்தது அல்ல, தவறிழைக்கும் ஆண்கள் வளர்ந்த குடும்பத்தில் இருக்கும் பெண்களையும் சார்ந்தது தான். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு ஆண்களிடம் எந்த அளவு இருக்கிறதோ அளவு பெண்களிடமும் உள்ளது.
ஆற்றின் நீரோட்டத்துக்கு எதிராக ஒரு நீர் நாய் எப்படி அணைக்கட்டுகிறதோ அப்படி ஒரு பெண்ணும் நினைத்தால் சமூக போக்கிற்கு எதிராக உயர்ந்து நிற்க முடியும். இதற்கு முக்கியத் தேவை பெண்ணிற்கு மனஉறுதியும், எதற்கும் அஞ்சாத திறனும் மட்டுமல்ல, அவளுடைய குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் தான். ஒரு பெண்ணுக்கு அரணாக ஒரு சமூகமோ, அரசாங்கமோ உதவிக்கு வராத சூழலில் ஒரு பெண்ணின் கரங்களுக்கு வலு சேர்ப்பது அவளுடைய குடும்பம் மட்டுமே. ஆனாலும் குடும்ப கௌரவம், சாதிப் பெருமை போன்றவற்றை முன்னிறுத்தும் குடும்பச் சூழலில் பெண்கள் தங்களுடைய குடும்பங்களில் இருந்து பாதுகாப்பும், உதவியும் பெறுவது இல்லை. எனவே தான் ரிதன்யா போன்ற இளம் பெண்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் பரிதாப நிலையை காணும் சூழலில் வாழ்கிறோம்.
ஆண்களைப் பற்றிய புரிதல் இல்லாமலும், பெண் பிள்ளைகளின் சொந்த விருப்பங்களை மதிக்காமலும் வளர்த்து, திருமணம் என்பதே அவளுக்கான விடுதலை என்ற எண்ணத்தை விதைத்து, சுய சார்பு என்ன என்பதே தெரியாமல், தவறான உறவுகளிடம் இருந்து பிரிந்து தனியாகவும் வாழ முடியும், சாதிக்க முடியும் என்பதைப் பற்றிய புரிதல் இல்லாமல் வளர்ப்பதே பெண் பிள்ளை வளர்ப்பு என்பதையே இன்றும் பல குடும்பங்கள் கடைப்பிடிக்கின்றன. என்னுடைய தோழி ஒருத்தி மேலே படிக்க விரும்பியபோதும், அவளுக்கு பிடித்த ஒருவரை மணக்க விரும்பிய போதும் உனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி அவளை மேற்படிப்புக்கு அனுப்பாமல், அவள் விரும்பியவரைப் பற்றியும் கவலைப்படாமல் அவளுக்கு வேறு ஒரு இடத்தில் மணம் முடித்ததும் நிகழ்ந்த ஒன்று. திருமணம் என்பது பெரும்பாலும் பெண்ணின் விருப்பதிற்கு மாறாக நிகழும் ஒன்று என்பதும் எழுதப்படாத விதி.
கோடிக்கணக்கில் யாரோ ஒருவனை நம்பி கொடுக்கப்படும் வரதட்சணை பணத்தை தவிர்த்து, சொந்த பெண்ணின் மீது நம்பிக்கை வைத்து அவள் சொந்தக் காலில் நிற்க, சுயசார்புடன் வாழ, சமுதாயத்தை புரிந்து கொள்ள, வெற்றி தோல்விகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களை பெற்றோர் அளிக்க வேண்டும். பெண்களுக்கு சுய சம்பாத்யம் தேவை. எதிர்பார்ப்புகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து வாழ, சமூக ஓட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் இத்தகைய சுயசார்பு அவர்களுக்கு அளிக்கும் என்பது திண்ணம். நாளை பற்றிய நம்பிக்கையுடன் வாழும் ஒரு பெண்ணை அசைக்கக் கூடிய சக்தி இந்த உலகத்தில் இல்லை.
"நீ கல்யாணத்துக்கு அப்புறம் உன் இஷ்டத்துக்கு கணவனுடன் எங்கு வேண்டுமானாலும் போ, இப்போ எங்கேயும் போகணும்னு சொல்லாதே", "நீ வேலையெல்லாம் பார்க்க வேண்டாம், ஊரு எங்களை பொண்ணோட சம்பாத்தியத்துல வாழறோம்னு சொல்லும்", "பொண்ணை ஆண் வாசனை படாம கட்டுக்கோப்பா வளர்த்துட்டோம்", "படிக்கறது எல்லாம் புகுந்த வீட்டுக்கு போன பிறகு பார்த்துக்கோ" என்று அரதப் பழசான வசனங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு எதிராக ஒலிக்கும் போதெல்லாம் அழகான வாழ்வைத் தொலைக்கும் ரிதன்யாக்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காக, வாழ்வின் பக்கங்களில் தனக்கென வாழாமல், நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை வாழ்ந்து கொள்ளலாம் என்று வாழ்வைத் தள்ளிப் போடும் பெண்களே இங்கு மிகுதி. ஒரு ஆணுக்கு வாழ்வில் ஒரு சில பகுதிகள் கடினமாக இருக்கலாம். ஆனால் வாழ்தலே கடினமாக இருப்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்று. இன்று உலகத்தில் போர் நடக்கும் நாடுகள் எல்லாம், ஆண் பெண் பாகுபாடு அதிகம் நிலவும் இடங்களே. கல்வி, வேலை வாய்ப்பு, சுதந்திரம் என்று எல்லாமும் சமநிலையில் கிடைக்கும் நாடுகளிலேயே அமைதியும், வளர்ச்சியும் குடியிருக்கும். "மரபு" என்ற தலைப்பில் கவிஞர் ந. ஜெயபாஸ்கரன் எழுதியிருக்கும் இந்தக் கவிதை தற்கால வாழ்வின் அவலத்தை காட்டும் காலக் கண்ணாடி.
ஏதாவதொன்றை
எனதறையில்
எங்காவது வைத்துவிட்டுத் தேடுவது
அன்றாட வேலைகளில்
ஒன்றாகிவிட்டது எனக்கு
நீண்ட நேரத் தேடலுக்குப் பின்
கிடைக்கும் ஒவ்வொன்றும்
முந்தைய தேடுதலில்
கிடைத்திருக்க வேண்டியதாக
இருந்து தொலைக்கின்றன.
வியர்த்துச் சொட்டச் சொட்ட
எனக்கு நானே புலம்பியபடி
எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையல் அறை ஜன்னல் வழியே
பார்த்துப் பரிகசிப்பது
பிடித்தமான வேலையாகி விட்டது
என் மனைவிக்கு
சமையலறையில்
என் கண்களைக் கட்டி விட்டாலும்
எந்தப் பொருளிலும் விரல் படாமல்
கேட்ட பொருனைக் கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று
சவால் விடவும் செய்கிறாள் அங்கிருந்து
அவளிடம்
சொல்லிக் கொள்வதில்லை நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று!
ஞாயிறு, ஜூலை 06, 2025
யாதுமாகி நின்றாய் தமிழே
சென்ற வாரம் சூலை 4, 2025 அன்று பேரவையின் 38ஆவது விழாவில் "யாதுமாகி நின்றாய் தமிழே" என்ற தலைப்பில் வாசித்த கவிதை.
இராலே மாநகரில் நற்றமிழர் கூடலிலே
தமிழ்த்தென்றல் கமழுமிந்த கவியரங்க மேடையிலே
சுடாத சூரியனை சினேகனை நடிவிருத்தி
எண்கோளாய் சுழல்கின்றோம் தமிழன்னையை தோளுயர்த்தி
முக்கூடல் சிப்பிக்குள் பிறந்திட்ட தமிழ்முத்து
விண்தோன்றா அமுதமென வேர்விட்ட நல்வித்து
யாதுமாகி நின்றாய் தமிழேவெனும் பொருண்மையிலே
கவிபாட விழைந்தே வணங்குகின்றேன் சபையினையே
நான்முகனின் நெஞ்சிலுறை நாயகியின்
கைகளிலே கன்னலெனநீ விளைந்தாயோ
குமரிக்கண்டத்திலே சங்கம் கண்டு
கற்றறிந்தோர் சிந்தையிலேநீ கிளைத்தாயோ
கத்தும்கடல் தோணியேகி மொழிகட்கு
தாயுமாகி சொற்களீந்து கரம்சிவந்தாயோ
கணியன் காதலினால் கசிந்துருகி கேளிரென
மொழிந்ததனால் மூப்பில்லா முகம்பெற்றாயோ
ஆதியிலே வந்ததெல்லாம் பாதியிலே
பொலிவிழந்து போனவிடம் யார் பகர்வாரோ
உன்மேனியிலே மேகலையாய் மாற்றமதை
பூட்டுகிறாய் பூக்களிடம் புதுமை கற்றாயோ
வடமொழியே வண்மொழியாம் வாய்பேச்சு
வீரரெல்லாம் அலர்கூறி வேலெறிந்தபின்னே
சிந்துவெளி விட்டதெல்லாம் சங்கத்தமிழ்
தொட்டதென வளம்காட்டி வாகை சூடினாயே
காலத்தால் கரைக்கவொண்ணா கருத்தான
பனுவல்பல பெற்றிங்கே பாரில் உயர்ந்தாயே
சர்ப்பமாக சிறப்பு ழகரம் முப்புள்ளியை
சிரசில்சூடி மலைமகளின் பதியை ஒத்தாயே
வல்லினமும் மெல்லினமும் கொடியிடைமேல்
இடையினமும் சமத்துவமாய் பெயரில் சுமந்தாயோ
பித்தா எனவழைத்து பரமனையும்
பலசொல்லி வைதாலும் வாழ்விக்கும் தாயோ
நெற்றிக் கண்ணைக் காட்டிடினும்
நற்றமிழே வேதமெனும் நக்கீரப்படை அடைந்தாயோ
யானே கள்வனென்ற கோமகனின்
கொற்றம்சாய்த்து அறத்திற்கு காப்புமானாயோ
செம்மொழிக்கு இலக்கணமாய் சுட்டுகின்ற
தகுதியாவும் தன்னகத்தே தாங்கி நின்றாயே
உன்னருமை உணராத உணர்விழந்த
பேர்களுக்கு பகற்கனவே பாரில்நிறை வாழ்வே
அன்பெனும் மாமருந்தே மறத்துக்கும் மாற்றாகுமென
வள்ளுவமாய் மண்ணில் மலர்ந்தாயே
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாகுமென
அரியணைக்கும் சிலம்பில் உரைத்தாயே
குறிஞ்சியிலே கூவும்குயில் ஓசையிலே
குடிபுகுந்து ஐம்பூதமுங்களின் ஐயை ஆனாயே
மருதத்திலே யாழிசையாய் முத்தமிழே முன்பிறந்தாய்
வையமாளும் வளைக்கரமும் நீயே
வான்மழையை வரவேற்ற வண்ணமயில்
வனப்பெல்லாம் வஞ்சியுந்தன் பேரெழில்முன் வீணோ
ஒருபொருட் பன்மொழியாய் பல்பொருள்
ஒருமொழியாய் மொழிவானில் விடிவெள்ளியும் நீயோ
வடவேங்கடம் தென்குமரி இடையினிலே
இளைக்காமல் இணையமேறி தடம் பதித்தாயே
அருஞ்சொல் களஞ்சியமே கன்றாத
மொழிவளத்தால் நடமாடும் நாமகள் ஆனாயே
யாப்புக் கட்டுடைத்து புதுக்கவிதை ஏர்பிடித்தே
எளியோர்க்கும் அருள்கின்ற தாயே
மாற்றத்தின் முகவரியே முன்தோன்றிய மாமணியே
மரணமில்லா பெருவாழ்வாய் மலர்ந்ததாயே
நிலையில்லா நிலவுலகில் நீள்புகழை
நாட்டிவிட்டு அமுதமாக அகத்தில் உறைந்தாயே
கொற்றவையே குலக்கொழுந்தே தெவிட்டாத
தீஞ்சுவையே யாதுமாகி எங்கும் நிறைந்தாயே
வியாழன், ஜூன் 26, 2025
வடிவக் கவிதைகள்
கவிதைக்கு ஒரு வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறு கற்பனை. கவிதைக்கு உருவம் உண்டா? நமது மனதில் ஒரு தாக்கம் அல்லது ஒரு நினைவை மீட்டெடுக்கும் கவிதை அதுவே ஒரு வடிவத்தை எடுத்துக் கொள்ளும் என்பதே உண்மை. ஆனால் கவிதையையே ஒரு வடிவத்தில் எழுதி, அது என்ன வடிவத்தை எடுக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்தக் கவிதைகள்.
#முக்கோணக் கவிதை
செல்பேசி வந்த பின் தொலைந்தது, சிட்டுக் குருவிகள் மட்டுமல்ல, சிட்டுக் குருவிகள் போன்று சுறுசுறுப்பாக விளையாடிய குழந்தைகள், செய்தித்தாள்கள், புத்தகம் படிப்பவர்கள் என்று பலரும் தானே. ஒரு கண்டுபிடிப்பு மும்முனை தாக்குதல் தொடுத்து பலவற்றை வீழ்த்தியது உண்மை என்பதால் இந்தக் கவிதைக்கு இந்த முக்கோண வடிவம் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
#வட்டக் கவிதை
சட்டங்களில் உள்ள ஓட்டைகள், சட்டம் படித்தவர்களை விட குற்றவாளிகளே அதிகம் காண்கின்றனர். அவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அவ்வாறான ஓட்டைகள், ஓட்டை எதுவும் இல்லாத கண்களில் இருந்து பொழியும் கண்ணீரினை ஒத்ததாகவே இருக்கிறது அல்லவா, அதாவது சமூகக் கண்களை கண்ணீரில் நனைய வைப்பவர்கள் தானே இவர்கள்!!
செவ்வாய், ஜூன் 24, 2025
தீயின் இதம் சொல்லவா - பாடல்
என்னுடைய எழுத்தில் உருவான புதிய பாடலுக்கான முன்னோட்டக் காணொளி இப்போது வெளியாகி உள்ளது. பாடல் எழுதி, இசை சேர்த்து சில நாட்களாகி விட்டது. பாடல் எழுதியவுடன், இசை கோர்த்தும், சில பல காரணங்களால் அதற்கான காணொளி தயாரிப்பில் சிறிது கால தாமதம் ஏற்பட்டதால் பாடலை உடனடியாக வெளியிட முடியவில்லை. பாடலுக்கான வலையொளி இணைப்பு கீழே.
திங்கள், ஜூன் 23, 2025
ஜருகண்டி ஜருகண்டி
சென்ற வாரம் ஜூன்டீன்த்தை முன்னிட்டு வந்த விடுமுறை மற்றும் வார இறுதி இரண்டையும் சேர்த்து ஒரு நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மிச்சிகனில் வசிக்கும் உறவினர்களைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவர்களோ, இவ்வளவு தூரம் நீங்கள் மட்டுமே பயணப்பட்டு வர வேண்டாம், நாங்களும் பாதி வழி வரை வருகிறோம் என்று சொன்னதால், ஒஹையோவில் உள்ள ஆக்ரன் ,(Akron, OH) என்ற ஊரில் சந்திப்பதற்கு AirBNB வழியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்தோம். ஆக்ரனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது வீட்டை புக் செய்ததால், ஒரே ஒரு குளியலறை மட்டுமே கொண்டு இருந்தது அந்த வீடு என்பதைச் சரியாக கவனிக்கவில்லை. கிட்டத்தட்ட 7 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை கொண்ட, 8 பேருக்கு ஒரே ஒரு குளியலறை என்பது கடினமாக இருந்தது. குளியலறையில் தாழ்ப்பாள் இல்லை என்பது கூடுதல் சுமையாக இருந்தது. பொதுவாக "Buyer Beware" என்று சொல்வது உண்டு. அதாவது காசு கொடுத்து எதையும் வாங்கும் போது நமக்கு அது சரியாக வருமா அல்லது இதில் ஏதாவது மறைக்கப்பட்ட ஒன்று உள்ளதா, நாம் எல்லாவற்றையும் கவனித்துத் தான் வாங்குகிறோமா, இல்லை ஏமாறுகிறோமா என்று யோசித்து வாங்கினால் மட்டுமே நமக்கு நன்மை தருவதாக அமையும். AirBNB-ஐ பொருத்தவரை beware என்பதை அடிக்கோடிட்டு நன்றாக உள்வாங்கி அணுக வேண்டும் என்பதை மீண்டும் உணர்ந்தேன். மனிதர்கள் அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் அல்லது அடுத்தவரின் கவனத்தை திசைத்திருப்பி வேறு ஏதோ ஒன்றை முன்னிறுத்தி குறைகளை மறைக்க வேண்டும் என்று நினைக்கும் வரை இதற்கு ஒரு விடிவு இருக்கும் என்று தோன்றவில்லை. பழைய கால வீடு என்றாலும் வீட்டின் உள்ளே ஓரளவு நன்றாகவே இருந்தது. தரை தளத்தில் சமையலறை, சாப்பிடும் அறை, பெரிய ஹால், கண்ணாடி ஜன்னலைகள் பதித்த சிட்-அவுட், மேல்தளத்தில் மூன்று தூங்கும் அறைகள் மற்றும் குளியலறை, அதற்கும் மேலே இரண்டாவது தளத்தில் விஸ்தீரணமான தூங்கும் அறை என்று வசதியான வீடு தான். வீட்டின் பின் நுழைவு வாயிலில் மட்டும் முன்பு தங்கி இருந்தோர் விட்டுச் சென்ற குப்பைகளில் இருந்து அப்படி ஒரு துர்நாற்றம். எத்தனை நாட்களாக இருந்ததோ இந்தக் குப்பைகள். பின் நுழைவாயில் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்பதால் இந்த நுர்நாற்றத்தில் இருந்து தப்பிக்க இயலவில்லை. ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் அந்தக் குப்பைத்தொட்டிகளை ஓடிக் கடக்க வேண்டி இருந்தது.
அந்த வீடு சையோகா தேசியப் பூங்காவில் இருந்து (Cuyahoga National Park) 30 நிமிட மகிழுந்து பயண தூரத்தில் இருந்தது. சையோகா தேசியப் பூங்காவின் பாஸ்டன் மில்ஸ் பார்வையாளர் மையத்தில் இருந்து அங்கிருந்த டௌபாத் வழித் தடத்தில்(Towpath Trail) நடந்து சென்றால் ஒஹையோ ஆற்றின் கரையில் நடந்து செல்லும் ஒரு அருமையான அனுபவத்தைப் பெற முடியும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிளீவ்லன்ட் மற்றும் ஆக்ரன் இடையே பயணியர் மற்றும் சந்தைப் பொருட்களை கொண்டு செல்ல இந்த நீர்வழி பயன்பட்டது. இரயில் போக்குவரத்தின் வரவுக்குப் பின் இந்த பாதைகள் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உகந்த வழித்தடங்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களுக்கு மேலே தரைப் போக்குவரத்துக்கு பயன்படும் பல்வேறு தரைப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாஸ்டன் மில்ஸ் பார்வையாளர் மையத்தில் இருந்து லாக் 29 என்பது 3 மைல் தொலைவில் உள்ளது. அதுவரை நடந்து சென்று பின் மீண்டும் பார்வையாளர் மையத்தை நோக்கி நடந்து வந்து கிட்டத்தட்ட 6 மைல் தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்தோம். இது மிகவும் ரம்மியமான பொழுது போக்காக அமைந்தது.
நடைப்பயிற்சியை முடித்து விட்டு அருகில் உள்ள சாலே மார்க்கெட்டில் (Szalay Farm & Market) மகிழுந்தை நிறுத்தி, அங்கே கிடைத்த வேகவைத்த சோளத்தை சுவைத்தோம். அங்கே பழ வகைகள் பலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதையும் உண்டு மகிழ்ந்தோம். இங்கே 10 பேர் உட்கார்ந்து ஆடும் அளவு மிகப் பெரிய மரத்தாலான ஊஞ்சல் ஒன்றும் இருக்கிறது. ஆடிக் கொண்டே சாப்பிடும் வண்ணம் 4 பேர் அமரக்கூடிய உட்காரும் மேசை மற்றும் நாற்காலிகளும், ஒரு பெரிய சோளத் தோட்டத்தை பார்த்துக் கொண்டே சாப்பிடும் அனுபவமும் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்னமும் இது போன்ற கடைகளில் கிரெடிட் கார்ட் எடுத்துக் கொள்ளாமல் பணம் மட்டுமே வாங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சின்ன காய்கறிக் கடையில் கூட ஜிபேயில் பணம் கொடுக்கும் போது வளர்ந்த நாட்டில் இப்படியும் இன்னும் இடங்கள் இருக்கிறதா என்று எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் கிளம்பி பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரத்திற்கு பயணம் வந்தோம். பிட்ஸ்பர்க்கில் உள்ள பெருமாள் கோவில் பிரசித்தமானது. சனிக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அர்ச்சனை சீட்டு வாங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய அதற்கான வரிசையில் காத்திருந்தோம். அமெரிக்காவில் பல கோவில்களுக்கு போயிருந்தாலும், முக்கால் மணி நேரம் அமெரிக்க பெருமாள் கோவில் ஒன்றில் அர்ச்சனை செய்ய வரிசையில் காத்திருந்தது புதிய அனுபவமாக இருந்தது. அப்புறம் ஒரு வழியாக வரிசை முன்னேறிச் சென்றது. வரிசையில் சென்றாலும் எனக்கு தூரத்தில் இருந்தே பெருமாளின் அர்ச்சனை மற்றும் ஆராதனையை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு வரிசையாக பெருமாளை அருகில் சென்று தரிசிக்கும் வண்ணம் உள் சந்நிதிக்கு அனுப்பினார்கள். பெருமாள் கோவில்களுக்கே உரித்தான "ஜருகண்டி ஜருகண்டி" தரிசனம் தான். மின்னல் வெட்டியது போல உள்ளே சென்று வந்ததில் பெருமாளிடம் நாம் சென்று அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு வந்தது போலவே தோன்றியது.
அப்புறம் அங்கிருந்த உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வாடகைக்கு பிடித்திருந்த வீட்டிற்கு சென்றோம். இந்த வீடும் தரைத்தளம், கீழ்த்தளம், மேல்தளம் என்று மூன்று அடுக்குகள் கொண்டிருந்தது. சிறிது நேரம் ஓய்வுக்கு பின், பிட்ஸ்பர்க்கில் இருந்த புகழ்பெற்ற கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்திற்கு (Carnegie Mellon University) சென்று அதைச் சுற்றிப் பார்த்தோம். டௌன்டவுன் எனப்படும் நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது இந்தப் பல்கலைக்கழகம். விடுமுறை தினம் என்பதால் கல்லூரியின் பல கட்டடங்கள் பூட்டி இருந்தது. திறந்திருந்த ஒரு சில கட்டடங்களில் மாணவர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். இது தவிர பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக கட்டடங்களும் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தது. இந்த பழைய கால கட்டடங்கள், குறுகலான சந்துகள் மற்றும் கடைகள் ஆகியன தொலைந்து போன ஒரு காலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்தது. அங்கே இருந்த அந்தக் கட்டடங்களை சிறிது நேரம் சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அங்கிருந்த செயின்ட் பால் கதீட்ரல் சர்ச்சை அடைந்தோம். சர்ச்சில் மாஸ் நடந்து கொண்டிருந்தது என்பதால் அங்கே அதிக நேரம் செலவிட முடியவில்லை. எனினும் வழக்கமான பெரிய சர்ச்சுகளைப் போல தேவ உருவங்கள் தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தது.
அன்று இரவு உணவினை டௌன்டவுனிலேயே ஒரு இத்தாலிய உணவகத்தில் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்பும் நாள். சீக்கிரமே எழுந்து தயாராகி, வாடகை வீட்டில் இருந்து புறப்பட்டோம். பெருமாள் கோவில் ஊருக்குச் செல்லும் வழியிலேயே இருந்தது என்று கூகுள் தடங்காட்டி சொன்னதால், கோவிலுக்கு சென்று நன்கு பெருமாளை தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்பலாம் என்று எண்ணி நேராக வண்டியை கோவிலுக்கு விட்டோம். கோவிலில் அதிக கூட்டம் இல்லை. பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. கருவறை அருகில் இருந்த உள் சந்நிதியிலும், அதற்கு வெளியே இருந்த வெளி சந்நிதியிலும் ஆட்கள் அமர்ந்து பெருமாள் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூடத்தின் இறுதியில் பெருமாளை பார்த்த வண்ணம் நிற்கும், கருடத்தாழ்வார் சந்நிதியும் உண்டு. கிட்டதட்ட கருடத்தாழ்வார் சந்நிதிக்கு சற்று முன் வரை வரிசைக்கு மூன்று பேரென மக்கள் அமர்ந்திருந்தனர். அதிக பட்சமே 40 நபர்கள் அங்கே அமர்ந்திருக்கக் கூடும். கருடத்தாழ்வார் சந்நிதி முன்பாக நடப்பதெற்கான பாதை மட்டுமே இருந்தது. 4 அல்லது 5 பேர் நிற்கக் கூடிய அந்த குறுகிய இடத்தில் கிட்டத்தட்ட 10 பேர் வரை நின்று இருந்தனர். ஒரு பெண்மணி இல்லாத கூட்டத்தை ஒழுங்கு செய்கிறேன் பேர்வழி என பெருமாள் சந்நிதி அருகே நின்று கொண்டிருந்தார். அமர்ந்து இருப்பவர்கள் அருகில் நின்று பெருமாளை சில வினாடிகள் தரிசிக்கலாம் என்று எண்ணி அமர்ந்திருந்தோர் அருகே செல்ல முற்பட்ட போது அவசரமாக எங்களைத் தடுத்து இங்கே Sponsors மட்டுமே செல்ல அனுமதி. உங்களுக்கு தரிசனம் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே 10 பேர் கடைக்கோடியில் கருடத் தாழ்வார் சந்நிதிக்கு முன்பு நின்று கொண்டிருந்தார்கள் அல்லவா, அங்கே சென்று பாருங்கள் என்று எங்களை அங்கே அனுப்பி வைத்தார். அங்கே ஏற்கனவே நிறைய பேர் நின்று கொண்டிருந்ததால் பெருமாளை அரைகுறையாக மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. யாரோ மறைத்துக் கொண்டு நிற்க, குழந்தைகளும் எம்பி எம்பி பெருமாளைப் பார்த்தே தரிசனத்தை முடித்தார்கள்.
கோவில் என்பது, அந்த ஊர் மக்களைத் தவிர, அந்த ஊர் வழியாக வேறு ஊருக்குச் செல்பவர்கள், அந்த கோவிலுக்கென பல்வேறு ஊர்களில் இருந்து பயணம் செய்து வருபவர்கள் என்று பல்வேறு மக்கள் கூடும் இடமாகும். sponsors-க்கு மட்டுமே பெருமாள் அருள்பாலிப்பார் என்றால் அதை தெளிவாக குறிப்பிட்டு வெளியில் ஒரு தட்டியாவது வைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அந்த திசைக்குக் கூடச் செல்லாமல் வெளியில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்திருப்பேன். அமெரிக்காவில் வளரும் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அம்மாதிரி குழந்தைகள் வைத்திருப்போருக்குத் தெரியும். அதுவும் வளர்த்த குழந்தைகளுக்கு, சரியான உடை தேர்வு செய்து அதை அவர்களை அணியச் செய்து, அவர்களை தயார் செய்து கூட்டிச் செல்வது ஒரு சாகசம். கலாச்சார பண்பாட்டு மையங்களாக இருக்க வேண்டிய கோவில்கள் வெறும் காசு பணம் பார்க்கும் இடங்களாக, சமுதாய பாகுபாட்டினை முன்னிறுத்தும் தூண்களாக இருப்பது எந்த அளவு அடுத்த தலைமுறையை ஈர்க்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணினால் நல்லது. பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள் பெருமாளை குறைந்தபட்சம் அருகில் சென்று தரிசிக்கும் வழிவகைகள் கூடச் செய்யாமல் கூட்டம் இல்லாத நேரத்தில் கூட கடைக்கோடியில் நின்று தெரிந்த வரை பாருங்கள் என்று சொல்வதெல்லாம் என்ன கீழான மனநிலையோ தெரியவில்லை. நானாவது முன்தினமே பெருமாளை அருகில் சென்று மின்னல் வேகத்தில் பார்த்திருக்கிறேன். புதிதாக வருபவர்கள், பணம் கொடுக்க முடியாத சூழலில் இருப்பவர்கள் என்று எத்தனையோ தரப்பு மக்கள் வரும் இடத்தில் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்று ஆற்றாமை மட்டுமே எழுந்தது. தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு துரிதமாக பெருமாளை தரிசிக்க ஒரு வழியாவது ஏற்படுத்தி இருக்கலாம். அதைக் கூடச் நிர்வாகத்தினர் செய்யவில்லை.
தமிழக கோவில்களில் கூட கட்டணம் இல்லாமல் கடவுளை தரிசனம் செய்வது முயற்கொம்பே. சென்ற முறை மருதமலை முருகன் கோவிலுக்கு கட்டண தரிசனம் செய்யச் சென்றதே கசப்பான அனுபவமாக அமைந்தது. சரியான கூட்ட ஒழுங்கு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரிசையில் இணைந்து கொள்வது, விஐபிக்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு வரிசையில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் இருப்பது என்பது போன்ற சங்கட அனுபவங்களே அதிகம். வீட்டின் அருகில் உள்ள கோவில்களைத் தவிர வேறு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வது என்பது இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்கள், சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடக்கும் இடங்கள் யாவும் கனவில் கூட நெருங்கிப் பார்க்க முடியாத ஒன்று. இவ்வாறு யோசித்தவாறே உணவுக் கூடத்திற்கு வந்து சேர்ந்தோம். 3 வெள்ளிகளுக்கு ஒரு உணவுப் பொதி கோவில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளியில்(உணவுக் கூடம்) கிடைக்கிறது. பிசைந்த சாதம், பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் போன்ற உணவுகள் கிடைக்கின்றது. எல்லா நாட்களும் உணவு கிடைக்குமா அல்லது வார இறுதியில் மட்டும் கிடைக்குமா என்பது தெரியவில்லை. மாணவர்கள், குறைந்த விலையில் உணவு வேண்டுபவர்களுக்கு இது கண்டிப்பாக சலுகை விலையில் கிடைக்கும் வரப்பிரசாதம் என்றே கூறலாம். உணவை வாங்கிக் கொண்டு வெளியில் வந்த போது, வியாபார நோக்கத்தை பிரதானமாகக் கொண்டியங்கும் கருவறை மண்டபத்தை விட்டுவிட்டு, கொஞ்சமாவது மனிதநேயம் எஞ்சி இருக்கும் இந்த மடப்பள்ளியிலேயே பெருமாளும் உலாவிக் கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது.
.jpg)




























.jpg)

