வியாழன், ஆகஸ்ட் 16, 2012

கதம்ப மாலை - 5


உதிர்ந்த மனிதனும் தொலைந்த மனிதமும்


சமீபத்தில் கேள்விப் பட்ட உண்மை சம்பவம். தூரத்து உறவினர் ஒருவருக்கு நேர்ந்தது. கிட்டத்தட்ட 70 அல்லது 75 வயது மதிக்கத்தக்க அந்த உறவினர் மனைவின் மறைவுக்கு பின் சொந்த கிராமத்திலேயே தங்கி இருந்தார். அவருக்கு 8 குழந்தைகள். 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய டவுனில் ஒரு மகளும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய ஊரில் சில மகன்களும் மற்றும் சிலர் சென்னை போன்ற பெருநகரங்களிலும் சிலரும் வசிக்கின்றனர். சம்பவ தினத்தன்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த உறவினர் நெஞ்சு வலி காரணமாக இறந்துவிட்டார். உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர் உடல் கிட்டத்தட்ட 3 நாட்கள் வரை கண்டுபிடிக்கப் படவில்லை.3 நாட்கள் கழித்து அழுகிய உடலில் இருந்து கிளம்பிய புழுக்கள் வீடெங்கும் நெளிய ஆரம்பித்த பின்னரே யாரோ கண்டுபிடித்து ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் அவர் உடலுக்கு ஈமச் சடங்குகள் நடத்தப்பட இயலாமலேயே எரிவூட்டப்பட்டது. இத்தனை மகன்கள் மற்றும் மகள்கள் இருந்தும், கிராமத்தில் அவ்வளவு மனிதர்கள் இருந்தும், தொலைபேசி வசதிகள் இருந்தும் 3 நாட்கள் வரை யாரும் அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் கவலை கொள்ளவில்லை என்று நினைக்கும் போதே தூக்கம் வர மறுக்கிறது. நகரத்தில் அடுத்த பிளாட்டில் வசிப்பவர் யார் என்பது தெரியாமல் போனது ஆச்சரியம் இல்லை. இந்தியாவின் இதயங்கள் எனப்படும் கிராமங்களே அவ்வாறு மாறி வருவது மனதை பிசைகிறது. கிராமத்தில் அதுவும் 70 வருட காலமாக  அந்த உறவினர் வசித்து வந்த ஊரில் யாரும் எட்டிக்கூட பார்க்காத அளவிற்கு சக மனிதன் மேல் யாருக்கும் அக்கறை இல்லை. யாருக்காகவும் உலகம் நிற்பதில்லை. நம் காலத்திற்கு பின் நாம் இருந்ததை யாரும் நினைவு கொள்ளப்போவதில்லை. நாம் இல்லாத போது நமக்காக யாரும் கண்ணீர் விட்டு கதறி அழவேண்டும் என்பதும் கூட முக்கியம் அல்ல. ஆனாலும் தனியாக வசிக்கும் முதியவரோ முதியவளோ எப்படி இருக்கிறார் என்பதை விசாரிக்க கூடவா ஒருவருக்கும் மனமில்லை? இத்தனைக்கும் உறவினர் மிகவும் நல்ல மனிதர். கடைசி காலத்தை தன்னுடைய சொந்த வீட்டிலே கழிக்க வேண்டும், மகனோ/மகளோ யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர். நேரில் வர முடியாவிட்டாலும் கொஞ்சம் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வந்து சொல்லுங்கள் என்று மகன், மகள், மருமகன், மருமகள், பேரப் பிள்ளைகள் என யாரேனும் ஒருவர் பக்கத்து வீட்டாரை தொலைபேசியில் கூப்பிட்டாவது கேட்டிருக்கலாம். உறவினர் பணம் படைத்தவர் அல்ல. ஒரு வேளை வசதியானவர் என்றால் மகன்களோ/மகள்களோ வந்து உறவு கொண்டாடி இருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று வள்ளுவன் சொன்னது உண்மையிலும் உண்மை. மூன்று நாட்கள் சக மனிதர்களுக்காக காத்திருந்தது அந்த முதியவர் மட்டும் அல்ல, நகரத்து தெருக்களில் அனாதையாய் கைவிடப்பட்டு கடைக்கோடி கிராமத்தில் தஞ்சம் புகுந்திருந்த  மனிதமும் தான்.


மாயா மாயா எல்லாம் மாயா



மாயாவதி மேல் உள்ள ஊழல் புகார் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வழக்கு ஜோடிக்க பட்டது என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.அரசியல் எதிரிகளை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசு, எதிர்ப்பாளர்களை அடக்குவதற்காக வழக்குகளை ஏவுவதும் பின்னர் அவர்கள் ஒத்துழைப்பிற்காக வழக்கை தள்ளுபடி செய்வதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா போன்றோர் ஏற்கனவே வெளியே வந்துவிட்டனர். காங்கிரசுக்கு குடைச்சல் கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி இன்னும் உள்ளே இருக்கிறார். நாளை அவர் காங்கிரசுடன் இணக்கம் கொண்டால் அவரும் வெளியில் வந்துவிடுவார். உபி  முழுவதும் மாயாவதி தனது சிலைகளை நிறுவிய செலவே 700 கோடியை தாண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டு தேர்தல் மனு தாக்கல் செய்யும் போது தனக்கு 111 கோடி சொத்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். இவ்வளவு பணத்தையும் அவர் ஊழல் மூலமாகவே சேர்த்திருப்பார் என்பதை நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லும். இந்த அழகில் போதிய ஆதாரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல் தன்னிச்சையான அதிகாரம் இல்லாத சிபிஐயை வழக்கை ஜோடித்து என்று குறை கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று. மிகப் பெரிய ஊழல் வழக்கான ஸ்பெக்ட்ரம் வழக்கே ஒன்றும் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. மாயாவதியின் வழக்கு நல்லபடியாக முடிந்து தீர்ப்பு கூறும் நன்னாள் இந்த நூற்றாண்டில் வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ததால் இப்போதைக்கு மக்களின் வரிப்பணம் மிச்சம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. மறுபடியும் காங்கிரசு தவிர வேறு ஒரு அரசு மத்தியில் பதவி ஏற்றால் வழக்கு தூசி தட்டப்படும் வாய்ப்பு இருந்தாலும் இதை விட பெரிய ஊழல் வழக்குகள் வந்து மாயாவதி வழக்கை பின்னுக்கு தள்ளி விடும். எனவே இந்த வழக்கு மறுபடியும் உயிர் பெறுவதற்கான சாத்தியகூறுகள் மிகவும் குறைவு. மக்களும் நீதி என்பது எட்டாக்கனி என்பதை உணர்ந்து 'இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலையிலே உள்ளனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரதமர் மற்றும் ஜனாதிபதி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத தனியான சுய அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும். இவர்களுக்கு அரசியல் சக்திகளின் அச்சுறுத்தல் இல்லாமலும் எந்த விதமான குறிக்கீடும் இல்லாமலும் சுதந்திரமாக செயலாற்றும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அந்த நிலை வரும் வரை நீதி தேவதை கண்களில் மட்டும் அல்ல கைகளிலும் கறுப்புத்துணி கட்டப்பட்டே இருக்கும்.(எழுதி கொஞ்சம் நாளானாலும் இந்த ஊழல் செய்தி மட்டும் எப்போதும் புதிது போலவே இருப்பதற்காக கண்  துஞ்சாமல் சேவை ஆற்றும் நமது அரசியல்வாதிகள் வாழ்க) 

ஆரிருள் உய்த்து விடும் 


இன்று காலையில் நடந்த சம்பவம் இது. புதிய பள்ளியில் சேருவதற்கான ஓரியன்ட்டேஷன்  தினம் என்பதால் மகளை அழைத்துக் கொண்டு காலையில் அவளுடைய பள்ளி சென்றிருந்தேன். அனைவருக்கும் பார்க்கிங்  இட வசதி இல்லாததால் காரை எங்கே வைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு பின் வந்த ஒருவர் பார்க்கிங் அல்லாத ஒரு இடத்தில்  காரை நிறுத்துவதை கண்டு நானும் அவ்வாறே நிறுத்தினேன். அப்பொழுது சரியாக பார்க் செய்திருந்த பெண்மணி ஒருவர் தனது காரை எடுப்பதற்கு எனது காரை எடுக்க சொல்லவே எனது காரை எடுத்து பின் அந்த பெண்மணியின் கார் நிறுத்தி இருந்த இடத்தில் எனது காரை நிறுத்த எத்தனிக்கும் வேளையில் பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கிய அந்த நபர் என்னுடைய காரை மறித்து முன்னே நின்று கொண்டார். ஒன்றும் புரியாமல் என்ன விஷயம் என்று யோசிக்கும் போது கோபமாக ஏதோ கையை ஆட்டி பேச ஆரம்பித்தார். நானோ வழியில் என் கார் நின்று இருந்ததால் அந்த மனிதன் கோபமாக பேசி முடித்து நகரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதாயிற்று. பிறகு காரை நிறுத்தி இறங்கியவுடன் நீ ஏன் என்னுடைய இடத்தில் நிறுத்தினாய் என்று என்னுடன் சண்டை இட ஆரம்பித்தார். குழந்தைகள் முன் சண்டையிடுவது என்பது எனக்கு பிடிக்காத விஷயம். ஆனாலும் வலுச்சண்டைக்கு வரும் அடாவடிக்காரனுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இருக்குமா என்ன? நான் என் குழந்தைகளுடன் இருப்பதால் உன்னை சும்மா விடுகிறேன் என்று எனக்கு மிரட்டல் வேறு. நான் வரிசையில் முதலில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண்மணி காரை எடுத்தவுடன் வைக்கும் வகையில் எனது கார் இருந்ததாலும் நான் செய்தது சரியே என்றாலும் காலையிலேயே அனாவசிய சண்டையின் மூலம் எனது நாளை மட்டும் அல்லாமல் தனது நாளையும் சண்டை சச்சரவுடன்  தொடங்கி வைத்த அந்த மனிதரை என்னவென்று சொல்வது. சாதாரணமாக பேசி தீர்க்கக் கூடிய ஒரு விஷயத்தை மலையாக்கி அதனால் என்னையும் வம்புக்கு இழுத்து பின் எனது குழந்தையின் முதல் நாளை ஒரு கஷ்டமான நினைவாக்கிய அந்த மனிதர் ஒரு நிமிடம் பொறுமை கொண்டிருந்தால் எல்லாருக்கும் இந்த நாள் நல்ல நாளாகி இருக்கும் . அதிவேக(ராஷ்) டிரைவிங் செய்வது, சிக்னல் விழுந்த மறு நொடி கார் கிளம்பவில்லை என்றால் ஓட்டுனரை  அவமதிக்கும் வகையில் சைகைகள் செய்வது, பின்னிருந்து ஹாரன் அடித்து அவசரத்தை வெளிப்படுத்துவது என்று பொறுமை என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும்  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது இந்த நிகழ்வு. காலை வேளையில் அவசரமாக எங்காவது செல்ல வேண்டும் என்றால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விடுவது நமக்கு மட்டும் அன்றி நம்முடன் சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் நாம் செய்யும் உபகாரம். வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கும் அனைவரும் விருப்பு வெறுப்பு சோகம் சந்தோஷம் வெற்றி தோல்வி என்ற எல்லா உணர்வுகளையும் கொண்ட மனிதர்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.  தன்னுடைய குழந்தையுடன் படிக்கப் போகும் இன்னொரு குழந்தையின் பெற்றோருடன் சண்டை இடுகிறோம் என்பதை பற்றியாவது அந்த மனிதர் யோசித்தாரா தெரியவில்லை. பொறுமையுடன் இருப்பது, பிறரிடம் கோபம் கொள்வதை தவிர்ப்பது, விட்டுக் கொடுப்பது  எல்லாம் பணம் காசு கொடுக்காமல்  பிறருக்கு நாம் இலவசமாகவும் சுலபமாகவும்  செய்ய கூடிய உதவி. அடங்காமை மட்டும் அல்ல கோபம்கூட ஒருவனை ஆரிருள் வைத்து விடும்.

திங்கள், ஜூன் 18, 2012

கதம்ப மாலை - 4


ஒரு கல் ஒரு கண்ணாடி 

ஒரு தமிழ் திரைப்படம் பார்த்து வாய்விட்டு சிரித்து தான் எவ்வளவு நாள் ஆகிவிட்டது. அதுவும் இரட்டை அர்த்தம் இல்லாத நகைச்சுவை என்பது தமிழ் சினிமாவில் ரொம்பவே கம்மி. ஆனால் சமீபத்தில் பார்த்த "ஒரு கல் ஒரு கண்ணாடி" ரசிக்க வைக்கும் நகைச்சுவை தோரணம். நகைச்சுவை படத்திற்கு கதை என்று ஒன்று தேவை இல்லை என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. இந்த படமும் அந்த விதியை மீறாமல் இருந்தாலும் அருமையான துணை நடிகர்கள் சரண்யா, சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக வரும் அழகம் பெருமாள் தரும் அசத்தலான நடிப்பு, ஹாரிஸின் மனதை வருடும் இன்னிசை, டைரக்டரின் அசத்தலான காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை ஆகிய பிளஸ்களால் ரசிகர்கள் மனக்கண்ணாடியில் அழகான பிம்பமாய் பதிகிறது. ராஜேஷ் படம் என்றாலே டாஸ்மாக் காட்சிகளோ அல்லது தண்ணி அடிக்கிற சீனோ இல்லாமல் இருக்காது. இந்த படத்திலும் அது உண்டு. கலகலப்பாக படம் நகருவதால் அந்த காட்சிகள் மனதை உறுத்தாவிட்டாலும் ஹீரோ மற்றும் சந்தானம் மது அருந்தும் காட்சியை டைரக்டர் கொஞ்சம் ஓரம் கட்டி இருக்கலாம். உதயநிதி தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்து எடுத்திருக்கிறார்.நன்றாக நடிக்க மட்டும் அல்லாது டயலாக் டெலிவரியும் அழகாக செய்கிறார். நடனப் பயிற்சியும் எடுத்தால் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹீரோ ரெடி. ஹன்சிகா "சின்ன குஷ்பூ" என்ற பட்டத்திற்கு ஏற்ப தமிழர்களுக்கு பிடித்த மாதிரி கொழுக்கு மொழுக்கு ஹீரோயின். ஸ்டைலாக கோபப்படவும், சில நேரங்களில் அழகாக நடிக்கவும் செய்கிறார். சந்தானத்திற்கு "ஓய்ட் காலர்" காமெடி என்பது அல்வா சாப்பிடற மாதிரி. உடல்மொழி, முகபாவம் என அனைத்தும் காமெடி பேசுகிறது. தனது கலகலப்பான காமெடியால் படத்தை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்துகிறார்."அழகே அழகே" பாடலும், "வேணாம் மச்சான்" பாடலும் முணுமுணுக்க வைக்கும் ரகம். கிளைமாக்ஸ் கொஞ்சம் இழுவை. படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் சிரிப்புக்கு முழு கேரன்டியுடன் படம் ஒஹோ ஒஹோ.


உதயநிதி ஸ்டாலின் - ஹன்சிகா 
மதுரை ஆதினத்தின் இளைய ஆதினம் 

சினிமாவிற்கு கொஞ்சமும் குறையாத விறுவிறுப்பும் பரபரப்புமாய் உள்ளது நித்யானந்தா மற்றும் மதுரை பெரிய ஆதினம் பற்றி வரும் செய்திகள். மதுரை ஆதினத்தில் இளைய ஆதினமாக நித்யானந்தா தேர்வு செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பாலியல் புகார் பற்றி கேள்வி எழுப்பிய கன்னட நிருபரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதால் நித்யானந்தா கைது செய்யப்பட்டு நான் இந்த இடுகையை எழுதும் இந்த நேரத்தில் ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார். அரசியலுக்கு எவ்வாறு மன சுத்தம் உள்ளவர்கள் வந்தால் சிறப்பாக இருக்குமோ அதே பாணியில் ஆன்மிகத்திற்கும் நல்ல மனிதர்கள் தேவை. ஆனால் அரசியல் அளவிற்கு மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயம் அல்ல ஆன்மிகம் என்பதாலும் மக்கள் தங்களுக்கு பிடித்த ஆன்மீகவாதிகளை பின்பற்றலாம் அல்லது வேறு வழியில் இறைவனை தேடலாம் என்பதாலும் நித்யானந்தாவின் செயல்பாடுகளை அதிர்ச்சிகரமான கண் கொண்டு பார்க்கவில்லை. ஆனாலும் சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் இருண்ட முகங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிய விதத்தில் நித்யானந்தாவின் செய்கைகள் பகீர் ரகம். பணம், செல்வாக்கு, ஆடம்பரம், ஆசிரமத்திற்கு ஆறுதல் தேடி வரும் பெண்களிடம் முறைகேடான நட்பு, ஒரு வேளை மாட்டிக் கொண்டால் அந்த பெண் யார் என்றே தெரியாது என்று சாதிப்பது என்று காவி அணிந்த கபடதாரிகளின் இன்னொரு முகத்தை உரித்து காட்டி, சமுதாயத்தின் இன்னொரு வேரான ஆன்மிகமும் எவ்வாறு புரையோடிப் போய் இருக்கிறது என்று புரிய வைத்ததற்காக நித்யானந்தாவிற்கு நன்றி நவிலலாம். 


ஆதி சங்கரர் 
இவ்வளவு கூத்துக்கு பிறகும் அவரே இளைய ஆதினமாக நீடிப்பார் என்று பெரிய ஆதினகர்த்தர் சொல்வதை பார்த்தல் அவருக்கு என்ன நிர்பந்தமோ என்று மட்டுமே தோன்றுகிறது.மடங்கள் நிர்வகிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள், வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடை பணம், அப்படி வரும் பணம் மக்களுக்கென பயன்படுத்தப்படும் விதம் என்பதை பற்றி எந்த விதமான ஒளிவுத்தன்மை இல்லாமல் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை இத்தகைய ஆன்மிகவாதிகளே ஏற்படுத்தி விடுவர் போலிருக்கிறது. அதுவும் நன்மைக்கு தான்.இந்தியாவிலேயே எந்த நெறிமுறைக்கும் உட்படாத முழு வரி விலக்கு உள்ள தொழில் என்றால் அது ஆன்மிகம் தான். அதனால் இத்தொழிலுக்கும் கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. உங்களில் யார் ஒருவர் நல்லவரோ அவர் முதலில் கல் எறியுங்கள் என்கிறது பைபிள். எனவே நித்யானந்தா நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மானிக்கும் உரிமை நம்முடையது அல்ல.அதை காலம் தீர்மானிக்கும்.ஆயினும் இத்தகைய நிகழ்வுகள் ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லையே என்ற ஏக்கத்தை மட்டும் விட்டு செல்கிறது.

ஜனாதிபதி தேர்தல்


ஒரு ரப்பர் ஸ்டாம்பை உருவாக்கத்தான் எத்தனை பிரயத்தனங்கள். மம்தா கலாமையும், ஜெயலலிதா சங்கமாவையும், காங்கிரசு கட்சி தன்னுடைய வேட்பாளராக பிரணாபையும் அறிவித்து உள்ளன. பிஜேபி இன்னமும் தன்னுடைய வேட்பாளரை அறிவிக்கவில்லை. நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் ஜனாதிபதி பதவி ஒரு பொம்மை பதவி என்பது அனைவரும் அறிந்தது. இன்றைய அரசியலில் யார் வலிமையானவர் என்று அவரவர் மேலாண்மையை காட்டும் ஒரு நிகழ்வாகவே இன்றைய ஜனாதிபதி தேர்தல் உள்ளது. தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள பிரதிபா பாடீல் பல நாடுகளுக்கு அரசு செலவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசு பணத்தை கரைத்ததோடு மட்டும் அல்லாமல் தன்னுடைய சம்பளத்தை 200 மடங்கு உயர்த்தி உத்தரவு போட்டதோடு மட்டும் தனது கடமையை முடித்து கொண்டார். இப்படிப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தேவை தானா? இதற்கு பதில் ஜனாதிபதி பதவி என்பதை நீக்கி விட்டால் மக்களின் வரிப் பணமாவது மிஞ்சும். இந்திய அரசியலமைப்பில் ஜனாதிபதி பதவி என்பது பல்வேறு அதிகாரங்களை உள்ளடக்கியது. எனவே இந்த பதவியை நீக்கிவிடுவது என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை முன் வைப்பது அதிகப் பிரசங்கித்தனமாக தோன்றலாம்.ஆனால் பெரும்பாலும் ஆளுங்கட்சி சார்புடையோர் இந்த பதவியில் அமர்வது வாடிக்கை என்பதால் கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவது மட்டுமே இன்றைய ஜனாதிபதியின் வேலை. வட நாட்டு தலைவரான மம்தா தமிழரான கலாமை ஆதரிக்கும் போது தமிழர் நலன் காக்க மட்டுமே பிறவி எடுத்ததாக காட்டிக் கொள்ளும் ஜெயலலிதா சங்மாவையும், கருணாநிதி தனது கூட்டணி கட்சியான காங்கிரசு அரசு வேட்பாளரான பிரணாபையும் ஆதரிப்பது வேடிக்கை. இத்தனைக்கும் பிரணாப் இலங்கையில் போர் நடந்த போது இந்திய அரசின் தூதுவராக சென்றும் அங்கு அப்பாவி தமிழர்கள் மேல் இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களை கண்டிக்கவில்லை. அத்தகைய ஜனாதிபதி வேட்பாளரை வரவேற்க தடபுடலாக விருந்து உபசாரத்திற்கு ஏற்பாடு செய்கிறார் கருணாநிதி. இதை விட தமிழர்களுக்கு செய்ய கூடிய துரோகம் என்னவாக இருக்க முடியும்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் போன்றோர் அலங்கரித்த ஜனாதிபதி பதவி இன்று வெறும் அலங்கார பதவியாக இருப்பது ஜீரணிக்க கூடியதல்ல. இன்னும் என்னென்ன வேடிக்கைகளை ஜனநாயகம் என்ற பெயரால் சகித்துக்கொண்டிருக்க வேண்டுமோ தெரியவில்லை. இன்றைய நிலையில் பதவிக்கு வருவது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மக்களுக்கு சிறிதளவாவது நல்லது செய்வோம் என்ற எண்ணம் உடையவர் யாரேனும் வந்தால் நாடும் மக்களும் பிழைத்துப் போவார்கள் என்பதை தவிர வேறு சொல்வதற்கு இல்லை !!!

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா திருமணத்தில் தமன்னா
சிறப்பு பாராட்டு: இந்தோனேசியா ஓபன் பாட்மிட்டன் பட்டம் வென்ற சாய்னா நெய்வாலுக்கு பாராட்டுக்கள் மற்றும் ஒலிம்பிக்கிலும் உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் !!   



சாய்னா நெய்வால் 

ஞாயிறு, மே 13, 2012

அமெரிக்காவில் இருந்து அமீர்பெட் வரை


கிட்டத்தட்ட மூன்று மாத இந்திய பயணம் சென்ற வாரத்துடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட ஒரு டஜன் வருடங்களுக்கு பிறகு இவ்வளவு நாட்கள் இந்தியாவில் தங்கும் வாய்ப்பு. தகிக்கும் வெயில், பவர் கட், பயண அலைச்சல் என சில தொந்தரவுகள் இருந்தாலும் மொத்தத்தில் நிறைவான ஒரு பயணம். நெருங்கிய உறவினரின் கல்யாணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது கூடுதல் போனஸ் என்றே சொல்லலாம்.

இந்த பயணத்திற்கான பிள்ளையார் சுழி ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் என்னவரால் சுழிக்கப்பட்டது. "சித்தப்பா பையன் கல்யாணத்தை அட்டென்ட் பண்ண இந்தியா போறபோது அப்படியே ஹைதராபாதில் நீ எதாவது சாப்ட்வேர் கோர்ஸ் பண்ணலாமே" என்று திரி கிள்ளினார். நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பதாலும் எவ்வளவு நாள் தான் வெட்டியாக(?) வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பது இந்த நேரத்தில் வேறு ஏதாவது பயனுள்ளதாக கற்று கொள்வோமே என்று தோன்றிய அசட்டு துணிச்சலாலும் சரி என்று சொல்லிவிட்டாலும் "உனக்கு நாக்குல தான் சனி" என்று கூப்பாடு போட்ட உள்மனதை அடக்க ரொம்பத் தான்  பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று.

சென்னையில் இறங்கி அந்த வெயில் எனக்கு உரைக்கும் முன்பே உறவினரின் கல்யாண நாள் வந்துவிட்டது. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து திருமண மற்றும் இதர நிகழ்வுகள் நடக்க இருந்த இடம் சிறிது தொலைவு. சென்னை வெயிலை விட கொடுமையான விஷயம் ஒன்று உண்டென்றால் அது சென்னை டிராபிக் தான் . மக்கள் எப்படித்தான் இந்த டிராபிக்கில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வருகிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர். சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்வதற்கு ஒன்று நிறைய நேரம் கைவசம் இருக்க வேண்டும் இல்லை எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு அருகிலேயே தங்கும் வசதி வேண்டும். இந்த இரண்டும் அமையப் பெறாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.


கல்யாணத்திற்கான பட்டு புடவை, நகை மற்றும் ஒப்பனை அணிந்து நண்டு சிண்டான குழந்தை செல்லத்தையும் கிளப்பி காரில் ஏறி அமர்ந்து பல மணி நேரங்களுக்கு பிறகு தேவையான இடத்திற்கு சென்றடையும்போது புடவை கசங்கி, ஒப்பனை கலைந்து  "அப்படியே நேரா  இங்க  வந்துட்டியா, போய் சீக்கிரம் ரெடி ஆகு' என்று எரிகிற கொள்ளியில் எண்ணெய் விடும் ஆன்ட்டிகளிடம் மழுப்பலாக சிரித்து,  "அம்மா என்னோட வளையல் உடைந்திடுத்து / நசிங்கிடுத்து/ காணோம் , என்னோட தலை முடி கலைஞ்சிடுச்சு இதை சரியா போட்டு விடு , எனக்கு இந்த டிரஸ் வேண்டாம் வேர்க்குது" என்று அழும்பு பண்ணும் குழந்தையை சமாளித்து, எல்லோரையும் நலம் விசாரித்து, என்ன சாப்பிட்டோம் என்ற நின்று  நிதானிப்பதற்குள் "சீக்கிரம் கிளம்பு அப்பதான் நாளைக்கு காலையில கல்யாணத்திற்கு சீக்கிரம் வர முடியும்" என குரல் கொடுக்கும் சித்தப்பாவிடம் சரி என்று தலையாட்டி மீண்டும் எப்பொழுது முடியும் என்று தெரியாத கார் பயணம் என்று - உங்களுக்கு புரிந்திக்கும் என்று நினைக்கிறேன். கால காலத்திற்கும் ஞாபகத்தில் நிற்கும் கல்யாண நினைவுகளை பின்னுக்கு தள்ளி முன்னணியில் நிற்பது தேவையில்லாத டிராபிக் சங்கடங்கள்.


அடிப்படை வசதியான சாலை கட்டமைப்பு வசதி இல்லாத இந்த சென்னையில் இன்று வீடு மனை  வாங்குவது என்றால் சில/பல கோடிகளை தர வேண்டியிருக்கிறது. கழிவு நீர் அகற்றும் வசதி, குப்பை அகற்றும் வசதி, மேடு பள்ளம் இல்லாத அழகிய சாலைகள், அழகாக பராமரிக்கப்பட்ட பூங்கா, குப்பை இல்லாத கடற்கரை, 24 மணி நேர மின்வசதி, பழுதில்லாத சாலை விளக்குகள், கழுத்து சங்கலி அறுக்கும் திருடர்கள் இல்லாத பாதுகாப்பான சாலைகள் என்று எந்த விதமான வசதியும் இல்லாத சென்னையில் எதற்கு வீடு மனை வாங்க அத்தனை கோடிகள் தர வேண்டும் என்பது புரியாத புதிர். சென்னை இப்படி என்றால்  சிறு நகரங்களில் நிலைமை இதை விட மோசம். தமிழ்நாட்டை சுத்தப்படுத்தும் ஒரு சிறு முயற்சியாக பிளாஸ்டிக் பைகளை தமிழகம் முழுவதும் தடை செய்தால் தான் என்ன?


கல்யாணம் நல்லபடியாக முடிந்து ஹைதராபாத் செல்லும் நாளும் வந்தது. இந்தியாவில் அதிகம் ரயில் பயணம் செய்யாத எனக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் பிடிப்பது இதுவே முதல் முறை. சென்ட்ரல் எனது கற்பனைக்கு எதிராக "ச்சே இவ்வளவு அசுத்தமா" என்று அருவருக்கும் அளவுக்கு இருந்தது என்று சொன்னால் மிகை இல்லை. எத்தனை ரயில்கள் நிற்கிறதோ அத்தனையிலும் கழிவு நீர் வழிந்து தண்டவாளத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்பதும், ரயில்கள் சென்றவுடன் மக்கள் மனிதக் கழிவுகளால் அசுத்தம் அடைந்திருக்கும் தண்டவாளங்களை கடந்து செல்லும் அவலமும் இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது.ரயில்கள் மனித கழிவுகளை முறையாக தேக்கி பின்னர் பாதுகாப்பாக வேறு இடத்தில் சென்று அப்புறப்படுத்துவது என்பதை பின்பற்ற வேண்டும் என்ற சின்ன விஷயம் இந்தியாவில் யாருக்கும் தெரியாத என்ன? ரயில்வே துறையில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு சிறிய அளவு முதலீடு செய்தால் கூட இந்த திட்டத்தை அற்புதமாக செயல் படுத்த முடியுமே? இதன் மூலம் ரயில் தண்டவாளங்களை ஒட்டி வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய சுகாதாரத்தையும் மேம்படுத்தலாம் அல்லவா.


சரி ஹைதராபாத்தும் இப்படி தான் சென்னை அளவு அசுத்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. ஹைதராபாத் ஏர்போர்ட் வெளிநாட்டு ஏர்போர்ட்களுக்கு   நிகராக ஜொலி ஜொலித்தது சுத்தமான உண்மை. சென்னை ஏர்போர்ட் என்றதுமே உங்களுக்கு மூலைக்கு முலை பாக்கு கரை படிந்த சுவர்கள் ஞாபகம் வரவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஹைதராபாத் ஏர்போர்ட்டை நகரத்துடன் இணைக்கும்  சாலைகள் அத்தனை விரிவு அத்தனை அழகு. இருபுறமும் 6 தடம் என 12 தடம் கொண்ட சாலைகள்.  அதிக அளவில் வெளிநாட்டில் வசித்த இந்தியர்கள் தற்போது விரும்பி வரும் ஊர் என்பதால் கொஞ்சம் சுத்தம். பெரிய ஷாப்பிங் மால்களும், வீதிக்கு வீதி உணவகங்களும், பான் விற்கும் இடங்களும், சாட் உணவு விற்கும் சிறு வியாபாரிகளும் என்று உணவுக்கு பஞ்சம் இல்லாத ஊர். அதற்காக பிச்சைகாரர்கள் இல்லாத ஊர் என்று எண்ண வேண்டாம். வட இந்தியாவில் இருந்தும் ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் பலரும் பிழைப்பு தேடி வருவதால் ஹைதராபாத் ஏனைய நகரங்களை போல குறுக்கு வாட்டாககவும் சில இடங்களில் நெடுக்குவாட்டகவும் வளர்ந்துகொண்டே  இருக்கிறது. பல அடுக்கு கட்டிடங்களை கொண்ட அபார்ட்மென்ட் வளாகங்கள் "சிட்டி வித்தின் சிட்டி" என்று சொல்லக் கூடிய அளவில் பிரமாண்டமாக இருந்தது கண் கொள்ளா காட்சி.   


சாப்ட்வேர் ஹப் என்று சொல்லக் கூடிய ஹைதராபாதுக்கு அந்த பெயர் வரக் காரணமான இடம் அமீர்பெட்.தீப்பெட்டி போன்ற  அடுக்கு மாடி கட்டிடங்கள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் மென்மொழி பயிற்சி அளிக்கும் மையமும், காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு பெரிய ஐ.டி.  கம்பெனியில் வேலை கிடைக்கும் கனவோடு வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்று கணநேரம் கூட தூங்காத ஒரு கணினி தொழிற்சாலை. மிகக் குறைந்த விலை ஆனாலும்  நான் பார்த்த வரை நல்ல ஆசிரியர்கள் கொண்ட மையங்கள் என்று அமீர்பெட்டின் பிளஸ்கள் பல. கணினி மென்மொழியில் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.  

சார்மினார், பிர்லா மந்திர், ஹுசைன் சாகர் ஏரி,லும்பினி பூங்கா ஆகியவற்றையும் இப்பொழுதான் முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஹுசைன் சாகர் ஏரியையும், லும்பினி பூங்காவையும் மட்டும் இன்னும் சற்று பராமரித்தால் நன்றாக இருக்கும். மொழி தெரியாத ஊரில் எப்படி பேசி சமாளிப்பது என்று கொஞ்சம் உதைப்பாக இருந்தாலும் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுவதாலும், படித்தவர்கள் இங்கிலீஷ் பேசுவதால் எந்த கஷ்டமும் இல்லாமல் போனது. இதுவே தமிழ் தெரியாமல் சென்னையில் இருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.


இந்த மூன்று மாத இந்தியா பயணத்தில் கற்றது/பெற்றது என்ன என்றால்என்று யோசித்தால் பெற்றது நிறைய உண்டு. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கற்ற எந்த வித்தையும் தேவையற்றது அல்ல என்பது புரிந்தது. கஷ்டப்பட்டு சிறு வயதில் கற்ற ஹிந்தி ஹைதராபாதில் வசித்த சில மாதங்கள் அடுத்தவர்களுடன் பேச உதவியது என்று சொன்னால் அது மிகை இல்லை. எந்த விஷயத்தையும் ஆழமாக தெரிந்து கொள்ளாமல் அரை குறையாக தெரிந்து கொண்டால் எத்தனை வயதானாலும் திரும்பவும் அந்த விஷயத்தை கற்றே ஆக வேண்டிய சூழல் உண்டாகும் என்று புரிந்தது. உதாரணமாக  கல்லுரி காலத்தில் ஜாவா மென்மொழியை அரைகுறையாக படித்து இருந்தாலும் சரியாக தெரியாத காரணத்தால் திரும்பவும் முறையாகவும் ஆழமாகவும் கற்க நேர்ந்ததை சொல்லலாம். "வென் தி ஸ்டுடென்ட் இஸ் ரெடி தி டீச்சர் வில் அப்பியர்" என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு.  அது உண்மை என்பதை எனக்கு மென்மொழி போதித்த ஆசிரியர்கள் மூலமாக அனுபவப்  பூர்வமாக உணர்ந்தேன். நீங்கள் விரும்பியதை முழு முனைப்போடும் அர்ப்பணிப்போடும் செய்யுங்கள். வெற்றி உங்களை தானே தேடி வரும் என்பதும் அந்த ஆசிரியர்கள் அறிவுறுத்திய செய்தி. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் வாய்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு நிறைவு செய்கிறேன்.  

செவ்வாய், மார்ச் 06, 2012

கானல் நீர் தடாகம்

சமீபத்திய இந்தியப்  பயணத்தின் போது எனது மனதை தைத்த பல தினசரி காட்சிகளை மனதில் கொண்டு புனைந்த கவிதை. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தாலும் எனது ஜன்னல் வழி காட்சி மாறாது என்றே தோன்றுகிறது.




இதோ அந்தக் கவிதை.

கானல் நீர் தடாகம்

குழந்தையை காட்டி
கையேந்தும் சிறுமி
போதையில் சாலையை
சோலையாய் எண்ணி
புரளும் குடிகாரர்கள்
ஊரில் மழை பொழியும்
அதிசயத்தை வார்த்தையின்றி உணர்த்தும்
ஒல்லியான தெரு நாய்
சாக்கடை ஓரம்
மானுட வாழ்வின் உச்சத்தில்
எச்சமாய் புறந்தள்ளப்பட்ட  மூதாட்டி
கொளுத்தும் வெயிலிலும்
ஈர மனம் தேடும்
பிச்சைக்கார கிழவன்
பன்றியும் புறக்கணிக்கும்
குப்பை கூளத்தை
பிழைப்புக்காக பிழை
திருத்தும் பணியாளர்
கடக்கும் மனிதர்களின்
துயர் துடைக்க
கரம் கொடுக்காமல்
கவி புனையும்  நான் என
மாற்றத்திற்கே சவாலாய்
எனது இன்றும் நாளையும்

 

சனி, பிப்ரவரி 25, 2012

தமிழ் காக்க எழுந்திரு

ஆங்கில வழியில் கல்வி பயிலும்  மகனை கொண்ட  ஒரு தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த தந்தை கூறியதாவது - பள்ளியில் இரண்டாம் பாடமாக தமிழ் மொழியை  என் மகன் எடுத்திருக்கிறான்.   கணிதம், அறிவியல் போன்றவற்றில் எழும் சந்தேகத்தை நீக்குவது எளிதாக இருக்கிறது. ஆனால் தமிழில் திருக்குறளுக்கும், கம்ப ராமாயணத்திற்கும் விளக்கம் சொல்லத் தெரியவில்லை. ஒற்று எழுத்துக்கள் எங்கு பயன் படுத்த வேண்டும் எங்கு தேவை இல்லை என்பதை விளக்க இயலவில்லை.தமிழுக்கு தனி போதனை(tuition) வைப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால்  தமிழ் மொழியை இவ்வளவு விரிவாகப்  படிப்பதால் என்ன பயன், வாழ்கைக்கு  தமிழ் எந்த விதத்தில் பயன் படப் போகிறது, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த இடத்தில தமிழை என் மகன் பயன்படுத்தப்  போகிறான்  என்று கேட்டது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது . படிக்கும் அனைத்தும் எவ்வாறு பிற்கால வாழ்கை வசதிக்கு உதவும் என்ற நோக்கத்திலேயே பார்க்கப்படுவது   வருத்தத்திற்கு உரியது.
கல்கி ர.கிருஷ்ணமூர்த்தி

இன்று இரண்டாம் பாடமாக ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளை படிப்பது பெருகி வரும் வேளையில் தமிழ் மொழி  பயிலும் ஒரு சிலரும்  தமிழ் மொழியை  ஆழமாக படிப்பதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்புவது "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடியின்" மேல் கல் வீசுவதை போன்றது. மொழி என்பது ஒரு கலை வடிவம். ஒரு  மொழியை கற்கும் போது அதை வெறும் பேச மட்டுமே அறிந்தோம் என்றால் அதன் முழு சுவையையும் அறிய இயலாது. அதாவது அந்த மொழியில் தோன்றியஇலக்கியம், கதை,காப்பியம்,காவியம், புதினம்,கவிதை
போன்றவற்றையும், அந்த மொழி பேசும் மக்களையும், அவர்களுடைய
பண்பாட்டையும், நாகரீகத்தையும் அறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கப் பெறாது . ஆங்கிலத்திலும் கவிதை, நாடகம், இலக்கணம் போன்றவை உண்டு. ஆனால் ஆங்கிலத்தை விரிவாக கற்றுக்கொள்ளும் போது தோன்றாத சுமை தாய் மொழியான தமிழை கற்கும் போது மட்டும் எப்படி தோன்றுமோ?
ஒவ்வையார்

தமிழை இவ்வாறு சுமை என்று கொண்டால் வரும் தலை முறைக்கு தமிழ் என்று ஒரு மொழி இருந்தது என்று ஏட்டில் மட்டுமே காண்பிக்கும் நிலை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாம் யார் என்பது - நாம் பேசும் மொழி, நாம் வாழ்ந்த மண், நமது மண் சார்ந்த தேசம், நம் தேசம் உலகத்திற்கு அளிக்கும் பங்கு என்று பலப் படிநிலைகளை சார்ந்தது.  இந்த படிகளில் ஏதேனும் ஒரு நிலையை நீக்கினால் கூட நமது தனித்துவம் அல்லது அடையாளம் மறைந்து விடும். மொழி தகவல் பரிமாற்ற கருவி மட்டும் அல்ல. அது சிந்தனை வளத்தை வழங்கும் ஒரு கருவி. "வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்" என்பது போல ஆழ்ந்த சிந்தனை சிதறல்களும், உயர்ந்த கருத்துக்களும் கொண்ட தமிழ் மொழியை சார்ந்த சிறந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களை நமது நெஞ்சில் இருத்தினால் தமிழ் இனம் உலகத்தை வழி நடத்தும் இனமாக மாறும் நாள் தொலைவில் இல்லை.ஆனால் ஆங்கில  மோகம் மற்றும்  பொருளாதார முன்னேற்றத்திற்காக  வேற்று மொழியை கற்பதில் ஆர்வமும் கொண்டவர்கள் மிகுதியாக உள்ள இந்த காலகட்டத்தில் அந்த நிலையை என்றுமே தமிழினம் அடையப் போவதில்லை என்பதே உண்மை.

ஜப்பானிய மொழி தெரியாத ஜப்பானியரோ அல்லது கொரிய மொழி அறியாத கொரியரையோ கண்டுபிடிப்பது அரிது. ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் எழுத,  படிக்க தெரியாத படித்த தமிழர் அநேகம். தாய் மொழியான தமிழை  படிப்பதற்கு எத்தனை காரணம் வேண்டும் - தாய் மொழி என்ற ஒரே காரணத்தை தவிர. நான் சொல்லும் இந்த கருத்து அவரவர் தாய்   மொழிக்கு பொருந்தும்.  தமிழ் எனது தாய் மொழி என்பதால் தமிழை முன்னிறுத்தி எழுதி இருக்கிறேன். ஒரு வேளை எனது தாய் மொழி தெலுங்காக இருந்தால் தெலுங்கு கற்று கொள்ளாதவர்களை பற்றி ஆதங்கப்பட்டிருப்பேன். 

தனி மனித அடையாளங்களில் ஒன்றான தாய் மொழியை படிப்பதில் உள்ள சுணக்கத்தை சோம்பேறித்தனம் என்பதை தவிர வேறு எப்படி அழைப்பது என்று தெரிய வில்லை. கணிப்பொறி மென்மொழி படிப்பதில் உள்ள ஆர்வத்தில் பத்து சதவிகிதமாவது தமிழ் மேல் கொண்டால் தமிழ் பிழைத்துப்  போகும். வருங்கால சந்ததியினர் இப்படி தமிழ் மொழி மேல் ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்று தெரியுமோ என்னவோ உயர்ந்த காப்பியங்களையும், காவியங்களையும் பண்டைய காலத்திலேயே படைத்து விட்டார்கள் நமது முன்னோர்கள். நாம் மற்றும் நமது சந்ததியினர் தமிழுக்கு செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று - அந்த மொழியை கற்பது மட்டுமே. புதினங்கள், கவிதைகள், கதைகள் படைத்து தமிழ் மொழியை கரை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் இந்த சந்ததியர்க்கு இல்லை. அப்படி இருக்க தமிழை கற்கும் சிறிய விஷயத்தை நாம் சிரமம் பாராமல் செய்தால் தான் என்ன.

பேசும் மொழி இழந்து, பழக்க வழக்கங்கள் மறைந்து,  பண்பாடு இழந்து என்று ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து கொண்டே சென்றால் நான் யார் என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சும். நாம் உலகில் எந்த நாட்டிலும் வசிக்கலாம். எந்த விதமான வேலையையும் செய்யலாம். ஆனால் நமது பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான தாய் மொழியை கற்க சுணக்கம் கொண்டு கல்லாமல் போனால்  பிறகு துறப்பதற்கு என்று வகுத்துள்ள எல்லை தான் என்ன?   ஒரு சிறிய ஓட்டை ஒரு மாபெரும் கப்பலையே மூழ்கடித்துவிடும். நாம் தொலைக்கும் ஒவ்வொரு அடையாளமும் நமது சுயத்தை விட்டு நம்மை வெகு தூரம் அழைத்துக் கொண்டு சென்று விடுகிறது என்பதை மறுக்க முடியாதது. நமது கிளைகள் எங்கு வேண்டுமானாலும் படரலாம். ஆனால் நமது வேர்கள் எங்கு எத்தகைய பிடிமானம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

தாய் மொழி தெரியாத ஒருவன் தான் பிறந்த மண்ணை மட்டும் அன்றி அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களை பற்றி அறியாமலேயே வாழ்ந்து மடிகிறான். நமது மனிதர்களை நாம் அறிய முற்படவில்லை என்றால் பின் நம் இனத்தின்  வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றிக்கு நம்மால் எத்தகைய பங்கீட்டை அளிக்க இயலும்? எந்த விதமான பயனையும் நாம் வாழ்ந்த நமது சமூகத்திற்கு அளிக்க  முற்படாவிட்டால் நாம் வாழ்ந்து தான் என்ன பயன்? கம்பராமாயணத்தை, தேவாரத்தை, திருவாசகத்தை படிக்கத் தெரியாமலும், அதன் அர்த்தம் அறியாமலும் வாழ்வது குறையுள்ள வாழ்கையே. பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் படித்து பண்டைய தமிழர்கள் வீரத்தை, நாகரீகத்தை, பண்பை அறியாமல் நமது மொழியின் தொன்மையை உணராமல் வாழ்வதை விட பெரிய அறியாமை எதுவாக இருக்க முடியும்.

நான் சிறு வயதில் தமிழில் படித்த பல நெடுங்கதைகளையும், தொடர்கதைகளையும்  எனது குடும்பத்தினருடன் விவாதித்த இனிமையான நினைவுகளை நினைத்து பார்க்கிறேன். இத்தகைய இனிமையான நினைவுகள் நமது குழந்தைகளுக்கும் வரும் சந்ததியினருக்கும் கிடைக்கப் போவதில்லையோ என்ற ஆதங்கத்தை பதிவு செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஊழியஞ்செய் தமிழக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே,

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!

என்று பாரதிதாசன் அன்றே எழுதி வைத்தான். நாம் தமிழ் மொழுக்கு செய்யும் ஊழியம் ஒன்றே ஒன்று தான். தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுதப் படிக்க நமது வருங்கால சந்ததியினருக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டியது நமது கடமை. அதை விட சிறந்தது தமிழ் படிக்க தெரியாத இந்த தலைமுறையை சார்ந்தவர்கள் தமிழை படிக்க கற்றுக் கொள்வது.எனவே தமிழ் படிப்பது எதற்காக என்ற கேள்வியை விடுத்தது நமது தாய் மொழியை செம்மையாக கற்போம் என்று உறுதி கொள்வோம். "மெல்ல தமிழிங்கு சாகும்" என்ற கூற்றை மாற்றும் சக்தி நம் ஒவ்வொரு கையிலும் உள்ளது. தமிழ் கல்விக்கு கை கொடுப்போம். தமிழ் வளர்ப்போம்.

செவ்வாய், ஜனவரி 10, 2012

2011 சொல்லும் செய்தி

கால சக்கரத்தில் 2011 ஆம் ஆண்டை கடந்து 2012 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம்.  கடந்த வருடத்தை திரும்பி பார்ப்பது என்பது பழங்கதையை படிப்பதற்கு சமம் என்று எண்ணினால் அது பிழையாகும். வரலாற்றில் உள்ள சம்பவங்களையும் அந்த சம்பவங்கள் உணர்த்தும் படிப்பினைகளும் மனித இனம் சரிவர புரிந்து கொள்ளாததாலேயே  செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்து மனித குலம் இன்றும் பின்தங்கியே இருக்கிறது. உதாரணத்திற்கு பிரெஞ்சு புரட்சியின் காரணியாக வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு காட்டுவது - இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள பாகுபாடு அதிகரித்தது என்பது. இன்றும்  எகிப்து, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிக்கும் அதுவே காரணம். மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை போன்றவற்றை விட மிகவும் ஆபத்தானது அதிகாரத்தின் மேல் உள்ள ஆசை. இந்த அதிகார போதை தந்த மமதையால் அரசாங்கங்கள் தமது மக்களை கவனிக்க தவறும் போது புரட்சி வெடிக்கிறது.

எகிப்து தஹ்ரீர் சதுக்கத்தில் பிப்ரவரி 4, 2011 அன்று கூடிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கூடிய மக்கள்
அதிகார ஆசை வடகொரியா, எகிப்து, லிபியா, மியான்மர், ஸ்ரீலங்கா, ஆப்ரிக்கா என்று பல நாடுகளில் வாழும் மக்களை இன்றும் ஏழைகளாகவே வைத்திருக்கிறது. ஆணாதிக்க மனோபாவம் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற அரபு நாடுகளில் உள்ள பெண்களுக்கு ஆண்களை அண்டி மட்டுமே வாழ முடியும் என்ற நிலையை அளித்து இருக்கிறது. பெரும் பணம் வேண்டும் என்ற ஆசை ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்று தொலைக்காட்சி விளம்பரம் போல இந்திய மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்தது. மேலும் சோமாலியாவில் பல லட்சம் பேர் பட்டினியால் இறந்தது, வால்ஸ்ட்ரீட் கைப்பற்றும் போராட்டம், ஈழ நாட்டு உள்நாட்டு போர் என்று எதை எடுத்தாலும் பேராசையால் ஆட்டுவிக்கப்படும் ஆதிக்க சக்திக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தின் வெளிப்பாடே என்பது தான் நிதர்சனம்.
 
அதிகம் வேண்டும் என்ற மனோபாவம் சாமானிய மக்களிடத்தும் எவ்வாறு பரவி இருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் தானே புயல் தாக்கிய கடலூர் மக்கள். புயலால் வீழ்த்தப்பட்ட மரங்களை மட்டுமன்றி புயல் தாக்குதலுக்கு பிறகு நிற்கும் மரங்களையும் கேட்பார் யாரும் இல்லை என்ற காரணத்தால் வெட்டி வீழ்த்தி காசு பார்க்கும் கும்பல் ஒருபுறம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியின் தடுப்புகள் புயலால் சேதம் அடைந்த பின்பு அந்த கண்காட்சியில் இருந்த அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றி எடுத்து சென்ற கும்பல் ஒருபுறம் என்று மக்களும் அவர்களை ஆளும் அதிகார வர்க்கத்தை விட கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிவிட்டார்கள். புகுஷிமா அணு உலை பாதிப்பு, சுனாமி மற்றும் அதனால் உண்டான உயிரிழப்பின் பின்னும் ஜப்பான் நாட்டு மக்கள் காட்டிய மனோதிடம் எங்கே வெறும் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய தானே புயல் காற்றுக்கே பறந்த கடலூர் மக்களின்  மனோதிடம் எங்கே. எல்லாவற்றையும் இழந்த ஜப்பானியர்கள் காட்டிய நிதானம் ஏன் இந்தியர்களிடம் இல்லை. இந்தியர்கள் மட்டும் அல்ல சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல சம்பவங்களையும் சீர் தூக்கி பார்க்கும் போது உலகெங்கும் வாழும் மக்களிடம் எதையும் எப்படியும் அடையலாம் என்ற மனநிலையே அதிகம் காணப்படுகிறது.
 
"ஆசையே பெரும் துன்பம்" என்பது எவ்வளவு உண்மை. அதாவது அதிகமாக    ஆசைப்படுபவன்  மட்டுமன்றி அவனை சார்ந்து உள்ள அவனுடைய குடும்பம், சமூகம், சுற்றுசூழல் என்று சகலமும் துன்பத்தை சந்திக்கிறது.சமீபத்தில் மால்கம் கிளாட்வெல் என்பவர் எழுதிய டிப்பிங் பாயிண்ட் என்ற ஆங்கில நூலை வாசித்தேன்.இந்நூலின் தமிழாக்கமும் இப்பொழுது கிடைக்கிறது. அருமையான நூல் அனைவரும் கண்டிப்பாக ஒரு முறையேனும் படிக்க வேண்டிய நூல். மால்கம்  சொல்கிறார் - எந்த ஒரு கருத்தோ அல்லது நுகர் பொருளோ  பெருவாரியான மக்களை சென்றடைவதற்கு ஒரு ஒட்டும்தன்மை(Stickiness Factor) வேண்டி இருக்கிறது. ஊடகங்களிலும், வானொலியிலும், காணொளியிலும் மீண்டும் மீண்டும் ஊழல்வாதிகளும், அதிகார துஷ்ப்ரயோகம் செய்பவர்களும், குறுக்கு வழியில் பணம் கொழிப்பவர்களும் எந்த விதமான பாதிப்பும் இன்றி வலம் வருவதை பார்த்து "அவன் பெரிய அளவில் செய்கிறான் நான் சிறிய அளவிலாவது செய்தால் என்ன"  என்று சாமானிய மக்களும் எண்ணும் மனப்போக்கு பெருகி வருகிறது. நாளைய தலைவர்கள் இன்றைய சாமானிய மக்களிடத்திலிருந்தே தோன்றுவார்கள். அப்படி தோன்றும் தலைவர்கள் ஆட்சிக் கட்டில் ஏறினால் ஆட்சி மாறுமே தவிர என்றுமே காட்சி மாறாது. இந்த தலைமுறை போலவே வருங்காலத்  தலைவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்து மக்களை ஏய்ப்பர். 



எப்படி ஒரு ஸ்திரமான கட்டடம் பலமற்ற ஒரு அஸ்திவாரத்தின் மேல் எழுப்ப முடியாதோ அதைப்  போலவே நீதி, நேர்மை, சம உரிமை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றாமல் குறுக்கு வழியில் முன்னேற முடியாது.  இது இன்றைக்கு மட்டுமான உண்மை அல்ல எந்த காலத்திற்கும் பொருந்தும் ஒரு உண்மை.  குறுக்கு வழி மலர் பாதையாகவே தோன்றினாலும் அதில் வீழ்ச்சி என்பது உறுதி. காரணமும் விளைவும் (cause and effect) வெவ்வேறு கால கட்டத்தில் நிகழ்வதால் சுயநலவாதிகள் வளர்வது போன்ற தோற்றம் கொண்டாலும் அது மாயையே. எகிப்து,லிபியா மற்றும் சிரியா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சியின் வெற்றி இந்த வகையே. அதாவது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் வெடித்து கிளம்பி தங்களை ஆட்டிப் படைத்த கடாபிகளுக்கும், ஹோஸ்னி முபாரக்குகளுக்கும் விடை கொடுத்து விட்டார்கள். இது இன்றைய தலைவர்கள், வருங்கால தலைவர்கள் மட்டும் அன்றி நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். அதிகமாக ஆசை கொண்டவர்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை.

உலகெங்கும் சுயநல எண்ணம் மறைந்து பொதுநல  எண்ணம் மலரட்டும்.பகை மறந்து நேசம் செழிக்கட்டும்.அநீதி மறைந்து சம நீதி வளரட்டும். முயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு விலாசமாகட்டும். இதுவே இந்த புத்தாண்டுக்கான எனது பிரார்த்தனை. 
 
 
 







புதன், டிசம்பர் 28, 2011

அணை ஆயுதம் அல்ல



இதிகாசம் மற்றும் புராணங்களில் பல வகையான அஸ்திரங்களை பற்றிய குறிப்புகள்  உண்டு. பாசுபதாஸ்திரம், நாகபாணம் என்று பல பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அந்தந்த மாநில அரசியல்வாதிகளுக்கு பாசுபதாஸ்திரம், நாகபாணம் போல தமிழ்நாட்டு மக்களின் குடி நீர் மற்றும் ஜீவாதாரம் சம்பந்தப்பட்ட அணைகளோ அல்லது நதி நீர் பங்கீடோ ஆகிவிடுகிறது. கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை தேர்தல் நடந்தபோது எடியூரப்பா ஒகேனக்கல் பிரச்னையை கிளப்பி எப்படி வெற்றி வாகை சூடினாரோ அதே பாணியில் இந்த இடைத் தேர்தலை மனதில் வைத்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளார். தமிழ் நாட்டில் முல்லை பெரியாறு அணை பாசனத்தால் விளையும் உணவுப் பொருட்கள் கேரள மக்களுக்கும் போய் சேருகிறது. இடுக்கி அணையில் போதிய அளவு நீர்மின் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததாலும், அந்த பகுதியில் உள்ள கேரளாவை சார்ந்த தொழில்கள் மின் உற்பத்தி இன்றி பாதிக்கப் படுவதாலும், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம்  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 155 அடியாக உயர்த்தப்பட்டால் முறையன்றி அணை பகுதியில் கட்டப்பட்ட கேரளாவை சார்ந்த சுற்றுலா விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்றவை காணாமல் போகும் என்ற அச்சத்தாலும் அணை பலவீனமாக இருப்பதாக கபட நாடகம் ஆடி வருகிறது கேரள அரசு.

Mullaperiyar Dam
முல்லை பெரியாறு அணை
 அணை நிலநடுக்கம் பாதிக்கும் பகுதியில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் ஒரு வேளை அணை உடைந்தால் முல்லை பெரியாரில் இருந்து வெளியேறும் நீரை அதை விட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையில் தேக்க முடியும். முல்லை பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளுக்கு இடையே உள்ள குமுளி, ஏலப்பாறா பகுதிகள் முல்லை பெரியாறு அணை மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் மேலே இருக்கின்றன. எனவே நீரால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. வெறும் 3 உறுப்பினர் பெரும்பான்மையில் பதவியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி இழக்க நேரிடும். பதவி ஆசை காரணமாகவே மடுவை மலையாக்கி இன உணர்வு என்னும் நெருப்புக்கு நெய்விட்டு குளிர் காய்கிறது கேரள அரசு. ரோம் நகரம் எரிந்த போதும் பிடில் வாசித்த நீரோ போல எந்த பிரச்சனை நடந்தாலும் கருத்து சொல்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்த பிரச்னையில் தலையிட்டு எந்த சமரச முயற்சியும் எடுக்கப் போவதில்லை. முதலில் பொம்மை பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் பரவாயில்லை !!!

அணை உடைந்துவிடும் என்று முன்பு கேரள அரசு எழுப்பிய சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு 1980 முதல் 1994 வரை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகம் பல கோடி ரூபாய் செலவில் அணையை முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு பலப்படுத்தியது. இந்த உறுதித் தன்மை பல முறை நிபுணர்களின் ஆய்வின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. 2 லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் 60 லட்சம் தமிழ் மக்களின் குடி நீர் ஜீவதாரத்திற்கு ஆணிவேராக விளங்கும் முல்லை பெரியாறு அணையை வெறும் 5
வருடம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்ளை அடிக்க நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் இந்த மண்ணில் தோன்றியவர்களா என்ன என்று சந்தேகிக்க மட்டுமே முடிகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமையை பெற்றுத் தந்த கல்லணையை கட்டிய கரிகாலன் எங்கே, எந்த தொலை நோக்கும் இல்லாமல் கேவலம் ஆட்சிக்காக பல லட்சம் மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அணையை இடிக்கப் போராடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே.

கேரளா மற்றும் கர்நாடக அரசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்று கொள்ள வேண்டியது ஒன்று - தவறே ஆனாலும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பது. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல அணை பிரச்சனை ஆரம்பித்த பின்பு கேரள திரை உலகை சார்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரள அரசியல் நிலைப்பாட்டிற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டார்கள். ஆனால்
அரசியல்வாதியாக தன்னைக் காட்டி கொள்ளும் இளைய தளபதி நடிகர் மருந்துக்கு கூட தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்படிப் பட்டவரை தமிழ் நாட்டை காக்க வந்த இந்திரன் சந்திரன் என்று சிலாகிக்கும் கடைக் கோடி ரசிகனுக்கு இது புரிந்தால் சரி.தமிழ்நாட்டில் உள்ள  அரசியல் கட்சிகளும் தனி தனியாக கண்டன அறிக்கை/கூட்டம் என்று நடத்தியதுடன் சரி. ஒன்றிணைந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த தமிழக அரசியல்வாதிகள் தவறி விட்டனர். 

Unity in Diversity

எடியூரப்பா பாசுபதாஸ்திரம் என்று எண்ணி எய்த ஒகேனக்கல் அம்பு பதவி அளித்தாலும் பதவியை அளித்த சில நாட்களிலே பதவியை பறித்து ஜெயிலுக்கே அனுப்பி வைத்தது. இன்று எடியூரப்பா அரசியலில் இருக்கும் இடமே தெரியவில்லை. கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும் பிரம்மாஸ்திரம் என்று எண்ணி முல்லை பெரியாறு அணை பிரச்னையை எடுத்துள்ளார். பிரம்மாஸ்திரத்தை எய்து அதை திரும்பப் பெறும் வழி அறியாமல் தண்டிக்கப் பட்ட அஸ்வத்தாமன் கதையை உம்மன் சாண்டி படித்திருக்கவில்லை போலிருக்கிறது.எனினும் கேரள மக்கள் இந்த உண்மையை உணர்ந்து காங்கிரஸ் அரசை வரும் தேர்தலில் தோல்வி அடையச்  செய்து பிரிவினை அரசியல் வளர்ச்சி ஆயுதம் அல்ல அது வீழ்ச்சி ஆயுதம் என்றும் கேரள மக்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்பவர்கள் எதிரானவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுகிறேன்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

நீ மொழிகள் என்றால் நான் தமிழா? ஓசைகளா?

Kolaveri Di Song
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இசையோடு இணைப்பது தமிழர் வழக்கம். சந்தோஷம், துக்கம், வெறுமை, காதல், உறவு, பிரிவு என்று எல்லா வித உணர்வுகளையும் நாட்டுப்புற பாட்டு, கவிதை, கானா என்று பல வழியாக வெளிப்படுத்தியது ஒரு காலம் என்றால் இன்றோ திரை இசை அந்த இடத்தை  பிடித்து உள்ளது.

சமீபத்தில் வெளியான "மூன்று" படத்தின் பாடலே இந்த கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. "ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி" என்று தொடங்கும் அந்த பாடல் மெட்டு நன்றாக இருந்தாலும் தமிழ் பாடலா இது என்று எண்ணும் அளவுக்கு ஆங்கில வார்த்தைகள் மட்டுமே பெரும்பான்மையாக கொண்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால் மொழி எல்லைகளை கடந்து பிபிசி லண்டன் வானொலி வரை ஒலித்த முதல் தமிழ்(ஆங்கில??) பாடல் என்பது பெருமை தரும் விஷயம். ஒரு புறம் இந்திய இசை அமைப்பாளர்களின்  இசைத்திறன்  உலகெங்கும் பரவி இந்தியா என்றாலே ஐ .டி. கம்பெனிகள் மட்டும் தான் என்ற மாயையை உடைத்து இந்தியர்களின் பன்முகத் தன்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த பாடல் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், மயில் இறகு போல் மனதை வருடும் அர்த்தம் பொதிந்த பாடலுக்கே மனசு ஏங்குகிறது.

ரம்மியமான ஒரு மாலை நேர மழை நாளில் குளிருக்கு இதமாக தேநீர் பருகியபடியே வீதியில் வெள்ளமாக சுழித்து ஓடும் மழை நீரை காணும் மகிழ்ச்சி வருகிறது கீழ்வரும் இந்த பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம்.

தூரத்தில் வந்தாலே என் மனதில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தாங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணப் போகிறேன்
(திரைப்படம்: காக்க காக்க பாடல்: ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடலாசிரியர்: தாமரை )

காதலன் தன்னுடைய காதலியை பற்றி "மின்னலை பிடித்து, மேகத்தை துடைத்து, பெண் என்று படைத்து வீதியில் விட்டு விட்டான்" என்று அழகுற வர்ணிக்கும் போது  உண்மையிலேயே கேட்பவருக்கும் அத்தகைய அழகான பெண்ணை பற்றிய கற்பனையை கடத்துகிறான்.

காற்றிலே அவளது வாசனை, அவளிடம் யோசனை கேட்டுதான் பூக்களும் பூக்குமா
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
.....
சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்.
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடி போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
(திரைப்படம்: பையா பாடல்: துளி துளி துளி மழையாய் பாடலாசிரியர்: ந. முத்துகுமார்)

கோமாளியின் முகமூடி அணிந்து கமலஹாசன் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்  படத்தில் உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் என்று பாடிக்  கலங்கும் போது
 ஈரம் பூக்காத கண்களே இருக்க முடியாது. மெட்டை வார்த்தைகள் ஜெயித்த ஜாலம் அது.

வானம் அழுதாக்கா இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்...
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
(திரைப்படம்: அபூர்வ சகோதரர்கள் பாடல்: உன்ன நெனச்சேன் பாடலாசிரியர்: ந. முத்துகுமார் )

சமீபத்தில் வெளியான  7 ஆம் அறிவு திரைப் படத்தில் வந்த பாடலின் சோக வரிகள் இங்கே. நாயகனின் மனக் காயம் ஆற்றும் ஆறுதல் வார்த்தைகளை கேட்போர் அனைவரும் தேடி தோற்பர்.

வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு 
நம்பி நொந்து போனனேன் பாரு அவ பூவு இல்லை நாறு
(திரைப்படம்: 7 ஆம் அறிவு  பாடல்: யம்மா யம்மா காதல் பாடலாசிரியர்: கபிலன்)

பாரதியாரின் கருத்தாழம் மிக்க பாடல் வரிகள் கண்ணனையும் கண்ணம்மாவையும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமரவைக்கும் நேர்த்திக்கு ஈடு இணையில்லை.

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
(திரைப்படம்: ஏழாவது மனிதன் பாடல்: காக்கை சிறகினிலே பாடலாசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் )

சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா
வானக் கருமை கொள்ளோ
பட்டுக் கருநீல புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு  நிசியில்
தெரியும் நட்சத்திரங்களடி
(திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல்: சுட்டும் விழி பாடலாசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்)

சுதந்திர போராட்ட காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் வாயிலாக மக்களுக்கு ஊட்டப்பட்ட நாட்டுப்பற்று இன்று வைரமுத்துவின் வைர வரிகளாய் மக்களை சென்று அடைகிறது.

மொழி மாறலாம் பொருள் ஒன்றுதான்
கழி மாறலாம் கொடி ஒன்றுதான்
திசை மாறலாம் நிலம் ஒன்றுதான்
இசை மாறலாம் மொழி ஒன்றுதான்
நம் இந்திய மொத்தம் ஒன்றுதான் வா
(திரைப்படம்: ரோஜா பாடல்: தமிழா தமிழா பாடலாசிரியர்: வைரமுத்து)



தன் செய்கையால் மனக் காயமுற்ற வாய் பேச இயலாத காதலியை எவ்வளவு அழகாக தேற்றுகின்றன இவ்வரிகள். இவ்வளவு  அழகாக கவிதை புனையும் திறன் வாய்ந்த காதலனை ஒரு முறை என்ன ஆயிரம் முறை மன்னிக்கலாம் என்று தோன்றுகிறது.

பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவை தேட மாட்டேன்
வாழ்வோ துவற்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
(திரைப்படம்: மொழி பாடல்: கண்ணால் பேசும் பெண்ணே பாடலாசிரியர்: வைரமுத்து)

துவண்டு கிடப்பவனுக்கு 100 பாட்டில் க்ளுகோஸ் ஏற்றினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு உந்துதலை தோற்றுவிக்கிறது சமீபத்தில் வந்த இந்த பாடல்.

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
 நம்ப முடியாதா நம்மால் முடியாதா நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும்  வலியோடு பிறந்திடுமே
( திரைப்படம்: 7 -ஆம் அறிவு பாடல்: இன்னும் என்ன தோழா  பாடலாசிரியர்: ப.விஜய்)

கண்ணதாசன், சந்திரபாபு ஆகியோர் எழுதிய பாடல்களை பற்றி சொல்லவே வேண்டாம். சாகாவரம் பெற்ற பாடல்கள் என்றால் அவர்கள் எழுதிய பாடல்கள் மட்டுமே. அர்த்தம் பொதிந்த வரிகள், கருத்தாழம் மிக்க சொற்கள், அன்றைக்கு மட்டுமன்றி என்றைக்கும் மாறாத உண்மைகளை எளிமையாக எடுத்து சொன்ன பாங்கு என்று அப்பாடல்களை பற்றி பெருமையாக அடுக்கிக்  கொண்டே செல்லலாம்.

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்
( திரைப்படம்: அன்னை  பாடல்: புத்தியுள்ள மனிதர் எல்லாம் பாடலாசிரியர்: ஜே.பி. சந்திரபாபு)

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானம் உள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
(திரைப்படம்: சூரியகாந்தி  பாடல்: பரமசிவன் கழுத்தில் பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்)

வரிகளில் மட்டுமே பாடல்களின் ஜீவன் உள்ளது. நல்ல இசை அந்த பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மட்டுமே செய்கிறது. நாக்க முக்க, எவண்டி உன்னை பெத்தான், மன்மதராசா  போன்ற வகை பாடல்கள் மெட்டுக்காக ஹிட் அடித்தாலும் நல்ல அர்த்தம் கொண்ட வரிகள் உள்ள பாடல்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்.   

திரைக் கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒய் திஸ் கொலைவெறி டி பாடலின் வெற்றிக்கு பிறகு நீங்களும் "இப்போ இதான் ட்ரெண்டு", டைரக்டர் கேட்டாரு அதான், தமிழ்ல யோசிக்கவே வர மாட்டேங்குது" என்று சப்பை காரணங்களை சொல்லி ஆங்கில/தமிழ் கலவை அல்லது மிகுதியான ஆங்கில வார்த்தைகளை கொண்ட பாடல் எழுதக் கிளம்பாமல் காலம் முழுதும் நினைவில் நிற்கும் தேன் தமிழ் பாடல்கள் மட்டுமே எழுதி எங்களை மகிழ்வியுங்கள் என்பது தான். உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத  பெருமை தமிழுக்கு உண்டு - அது என்னவென்றால் தமிழ் என்ற மொழியின் பெயரையே ஒருவருக்கு பெயராக சூட்டி மகிழலாம். உலகில் உள்ள எந்த மொழிக்கு இந்த பெருமை உண்டு? ஆங்கிலம் என்ற இனிப்பை சிறிதளவு உண்டால் ஒன்றும் பாதிப்பு இல்லை. ஆனால் இனிப்பையே உணவாக உண்ண முடியாது. எனவே தெள்ளு தமிழில் மட்டுமே உங்கள் கவிதைகளை/பாடல்களை  படைத்து எங்களை மட்டுமன்றி தமிழ் தாயையும் மகிழ்வியுங்கள். பாரதியாரின் கீழ்கண்ட வாக்கை மெய்ப்பியுங்கள்.  

தேமதுர தமிழோசை உலகெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும் 

திங்கள், நவம்பர் 07, 2011

வந்தான் வென்றான்


சமீபத்திய தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில் வேலாயுதம் முந்தியதா இல்லை 7 -ஆம் அறிவு முந்தியதா என்று விஜய் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் கச்சை கட்டி மோதிக் கொள்ளும் இந்த நேரத்தில் எந்த திரைப்படம் வெற்றி வாகை சூடியது என்பது பற்றி ஒரு அலசல். முதலில் தெளிவு படுத்த வேண்டியது ஒன்று உண்டு - அது நான் விஜய் ரசிகையும் அல்ல சூரியா ரசிகையும் அல்ல. எனவே எனது விமர்சனம் எந்த சமரசத்திற்கும் உடன் பட்டது அல்ல என்பதே.
சூர்யா, விஜய் இருவரும் திறமையான நடிகர்கள்.  திரைத்துறையில் பல வருடமாக இருந்து பல வெற்றி திரைப்படங்களை நமக்கு அளித்து  இருக்கிறார்கள். சூர்யா படத்திற்கு படம் காட்டும் வித்யாசமான நடிப்பும், தன் உடலை வருத்தி - 20 வயது இளைஞன் கதாபாத்திரம் முதல் 60 வயது முதிய கதாபாத்திரம் வரை பொருந்துவதற்காக மெனக்கிடுவதாகட்டும், நடனம், சண்டை என்று எல்லாவற்றிலும் அற்புதமாக மிளிர்பவர். விஜய்யும் சூரியாவிற்கு இளைத்தவர் அல்ல. நடனம், சண்டை, காமெடி என்று பல தளங்களில் பரிமளிப்பவர். இப்படி இருக்க எந்த நடிகர் சினிமாவின் அடுத்த தளத்திற்கு தனது புதிய திரைப்படம் மூலம் சென்றார் என்ற கேள்வி எழுகிறது. 


விஜய் படம் என்றால் பொழுது போக்குக்கு கண்டிப்பான கியாரண்டி உண்டு. மசாலா ஆக்ஷன் தூக்கலான கதை, அரசியல் பலம் வாய்ந்த அல்லது மந்திரியாகவோ முதலமைச்சராகவோ பதவியில் உள்ள வில்லன், தொப்புள் காட்டும் செகண்ட் ஹீரோயின் , குடும்ப குத்துவிளக்கு பர்ஸ்ட் ஹீரோயின், அண்ணனே/மகனே உலகம் என்று வாழும் தங்கை அல்லது தாய் கதாபாத்திரம் என்று சினிமாவின் இலக்கணங்கள் மீறாத கதை அமைப்பு கொண்ட படம்  என்றால் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படம் என்று தைரியமாக சொல்லலாம்.

சூரியா படங்கள் அந்தளவுக்கு யூகிக்க கூடிய கதை அமைப்பு உள்ள படங்கள்  இல்லை என்றாலும் பல சமயம் நல்ல திரை கதையிலும் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்திற்காக திணிக்கப்படும் மசாலா விஷயங்கள் விஜய் படத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. ஆக்ரோஷமாக படம் முழுவதும் கத்திக் கொண்டிருக்கும் வில்லன், அறிமுக தத்துவ பாடல், முறுக்கு மீசை, அருவாள் என்று பல படங்களில் சூரியா படமும்  பார்முலா வட்டத்தில் சிக்கியுள்ளது கொஞ்சம் வருந்த தக்கதே.

 
ஒரு திரைக்கதை பல சமரசங்களுக்கு பிறகே திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்பதும், வியாபார நோக்கதிற்காக மட்டுமே எடுக்கப்படுகிறது   என்பதும், எப்படியாவது ரசிகர்களை இரண்டரை மணி நேரம்  தியேட்டரில் உட்கார வைக்க  வேண்டும் என்ற கட்டாயத்திற்காக பல கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டு அலங்கோலப்படுகிறது என்பதும் நான் அறியாதது அல்ல. எனினும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களான சூரியா மற்றும் விஜய்யும் தனது புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றார்களா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.




முதலில் வேலாயுதம் - விஜய் ஜெயம் ரவிக்கு இணையாக "ரீமேக்" விஜய்யாக அவதாரம் எடுத்து ரொம்ப நாள் ஆயிற்று. கடைசியாக எந்தப் விஜய் படம் ரீமேக் இல்லை என்பதே நினைவில் இல்லை. வேலாயுதமும் "ஆசாத்" என்ற தெலுங்கு படத்தின் தழுவலே. விஜய் தனது ரோலுக்காக எந்த படத்திலும் பெரிய அளவு மெனக்கிடுவதில்லை என்பது அடுத்த குறை. அதாவது எந்த படத்திலும் பெரிய அளவுக்கு கெட்டப்பை மாத்தி நடிக்க எத்தனிப்பதில்லை. (அப்படி நடிச்சாலும் யார் பார்ப்பா என்று நீங்க முணுமுணுக்கறது கேட்குது) பார்முலா மரத்தையே சுற்றி சுற்றி வரும் விஜய் நாலு பாட்டு, அஞ்சு சண்டை, இரண்டு அழுகை சீன் என்று சின்ன வட்டத்தில் சுழன்று பார்ப்பவருக்கும் அலுப்பு மூட்டுகிறார்.
வேலாயுதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சந்தானம் காமெடியில் ஏற்கனவே உச்சத்தில் உள்ளார். விவேக், வடிவேலு ஆகியோர் விட்ட இடத்தை அவர் நிரப்ப வேண்டிய அந்தஸ்தில் உள்ளதால் இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனை என்று கூற முடியாது. விஜய் அந்தோணி பாடல்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தின் மூலம் சிறிதளவாவது பயன் அடைந்தவர் என்றால் அது ஹன்சிகாவும், ஜெனீலியாவும் தான். ஏன் என்றால் அவர்களுக்கு மட்டும் தான் புதிய பட வாய்ப்பு கிடைக்கும் முகாந்திரம் உள்ளது. மற்றபடி வேலாயுதம் - புதிய மொந்தையில் பழைய கள்.

அடுத்து 7-ஆம் அறிவு. அற்புதமாக தொடங்கும் திரைக்கதை காதல், டூயட் பாடல்,  பிரிவு மீண்டும் சோகப் பாட்டு என்று பாதியிலேயே நொண்டி அடிக்கிறது. சுருதிஹாசன் அற்புதமாக நடித்துள்ளார். சில பல இடங்களில் சூரியாவையே மறக்கச் செய்கிறார். ஆனாலும் திரைக்கதையில் பல கதாபாத்திரங்கள்  என்ன ஆகியது என்பதே தெரியாமல் அமைக்கப் பட்டுள்ளது. உதாரணம் அந்த ப்ரொபசர் பாத்திரம். அவரை போலீஸ் கைது செய்ததா என்பது கடைசி வரை தெரியவில்லை. வழக்கம் போல கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் அத்தனை அடி அடித்த பின் எழும் ஹீரோ வில்லனை துவைத்து தொங்கபோடுவதை இன்னும் எத்தனை சினிமாவில் பார்த்து  நொந்து போக வேண்டுமோ. கின்னஸ் பக்ரு மற்றும் சுருதி ஹாசன் போன்றோருக்கு இந்த படத்தின் மூலம் வேறு பட வாய்ப்புகள் கிடைக்க வழி உண்டு. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல தாளம் போட வைக்கிறார். முருகதாசிற்கு அடுத்த படத்திலாவது நல்ல எடிட்டர் அமைய வாழ்த்துக்கள்.  7-ஆம் அறிவு - ஆற்றின் குறுக்கே எழுப்பட்ட மணல் பாலம். 



சரி ரெண்டு படமுமே சுமார் தானா ரெண்டுமே நல்லா இல்லையா என்று கேட்பவர்களுக்கு என்னோட அட்வைஸ். படத்தோட மெசேஜ் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக 7-ஆம் அறிவு வேலாயுதத்தை விட நிச்சயம் முன்னணியில் உள்ளது அப்படின்னு சொல்லுவேன். தமிழர்கள் எத்தகைய பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதும்  நமது மருத்துவம், வான சாஸ்திரம், அறிவியல் அறிவு ஆகியன இன்றிருக்கும் மேற்கத்திய நாகரிகத்தை விட எத்தனை உயர்வானது, விரிவானது, ஆழமானது என்பதை காட்டும் முகமாக இருந்ததால் 7-ஆம் அறிவு-க்கே  எனது வோட்டு . எல்லாருக்கும் தெரிஞ்ச மெசேஜ் தான். இருந்தாலும் தமிழன்  திரைப்படத்தின் மூலமாக மெசேஜ் சொன்னா தானே கேட்பான். வேலாயுதம் மெசேஜ் நல்லா இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் அடாவடி பண்றவனை தட்டி கேட்டால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் மதுரை அல்லது சென்னை பக்கம் போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க பாஸ் என்றே சொல்ல தோன்றுகிறது. காவலன் வந்த போது ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காமல் தவித்த விஜய் அநியாயத்தை தட்டி கேளுங்கள் என்று சொல்லும் போது கேட்க கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது. தட்டி கேட்ட ஜெனீலியா மற்றும் அவரது நண்பர்களுக்கு என்ன ஆச்சின்னு படத்துல வர்ற முதல் காட்சியை நீங்க பார்த்திங்களா விஜய் அப்படின்னும் கேட்க தோணுது. 


இத்தகைய படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த இரண்டு நடிகர்களும் செய்ய  வேண்டியது உண்டு. அது திரை துறையில் காலுன்ற கஷ்டப்படும் இளம் நடிகர்களுக்கு தங்கள் படத்தின் மூலம் வாய்ப்பு அளிப்பது, நல்ல இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது, ஆண்டு தோறும் ஒரு படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்று நடிப்பது அல்லது அப்படிப் பட்ட கதை அம்சம் உள்ள திரைப்படத்தை தயாரிப்பது போன்ற எதாவது ஒன்றை கடைபிடித்தால் இவர்களுக்கு திரைத்துறையில் அழிவில்லாத ஒரு இடம் நிச்சயம் உண்டு.


உங்களுக்கு ரெண்டு படத்தையும் பார்க்க நேரம் கிடைத்தால் ரெண்டு படத்தையும் பாருங்க. அப்படி இல்லேன்னா 7-ஆம் அறிவு-க்கு நேரம் ஒதுக்குங்கள்.  யாம் பெற்ற இன்பம்(உங்களுக்கு துன்பமாக இருந்தால்..மன்னிக்கவும்) பெருக இவ்வையகம்.

வியாழன், நவம்பர் 03, 2011

கதம்ப மாலை - 3

மனிதன் எங்கே
பெய்ஜிங் சீனா-வில் சாலை விபத்தில் அடிபட்டு ரோட்டோரம் கிடந்த குழந்தையை எண்ணற்ற பாதசாரிகள் கண்டும் உதவாமல் சென்றது மனதை சுட்டது. ஒரு வேளை சரியான நேரத்தில் முதலுதவி கிடைத்திருந்தால் குழந்தை இன்று உயிருடன் இருந்திருக்குமோ என்னமோ. அந்த குழந்தையின் தாயின் கண்ணீர் முகம் நினைவில் இருந்து அகல மறுக்கிறது. ரோட்டோரம் கிடந்தது பண மூட்டையாயின் யாரும் பார்க்காமல் சென்றிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவில் பட்டினி சாவு, சிறிலங்காவில் ஈழப்  போரில் எண்ணற்ற தமிழர்கள் உயிர் இழந்தது, துருக்கி நில நடுக்க உயிரிழப்பு ஆகியன யார் மனதிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இந்த அவசர யுகத்தில் தன் பிள்ளை தன் குடும்பம் தன் வீடு என்ற சிறிய வட்டத்தில் மனித மனம் சுருங்கி கடுகளவாகி விட்டது.  பெரியோர் ,முதியோர்  ஆகியோருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. மாசற்ற குழந்தைக்கு உதவக் கூடவா ஒருவரும் முன்வரவில்லை என்பதை நினைக்க நினைக்க மனம் பதறுகிறது.  குழந்தை அடிபட்டு ரோட்டில் கிடந்த போது 18  பேர் அதை கடந்து சென்றுள்ளனர். 19  நபராக ரோட்டில் சென்ற குப்பை அகற்றும் பணி செய்யும் பெண்மணி ஒருவர் அந்த அடிபட்ட குழந்தையை அதன் தாயிடம் எடுத்து சென்று சேர்ப்பித்துள்ளார். அவரை போன்ற ஒரு சிலர் இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது. சீனா என்றில்லை இந்தியாவிலும் சாலை விபத்தில் அடிபட்டவரின் நிலை இது தான். உயிர் காக்க உதவுவதற்கு பதில் அடிபட்டவரின் பணம், நகை ஆகியவற்றை களவாட கண்டிப்பாக ஒரு கும்பல் கூடிவிடும். நாகரிகத்தின் தொட்டில் என்று தங்களை அடையாள படுத்திக்கொள்ளும் இந்தியா போன்ற நாடுகளும்,  உலகின் பெரிய வலிமை வாய்ந்த நாடாக காட்டிக் கொள்ளும் சீனா போன்ற நாடுகளும் தங்கள் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கு பிறர் துன்பம் கண்டு இரங்கும் மனநிலை உள்ள மக்கள் வசிக்கிறார்களோ, எங்கு சின்னஞ்சிறு குழந்தை முதல் முதியோர் வரை சமமான பாதுகாப்பு உள்ளதோ  அந்த நாடே வலிமை வாய்ந்த நாடு. அதுவே நாகரீகத்தின் தொட்டில். மற்றதெல்லாம் மனித தோல் போர்த்திய கொடிய மிருகங்கள் வசிக்கும் காடு மட்டுமே.



இயற்கை என்னும் இளைய கன்னி

வட அமெரிக்காவில் வந்து குடியேறிய பிறகே பருவ கால சுழற்சியை நேரில் கண்டு உணர முடிந்தது - பனிக்காலம், வசந்தகாலம், கோடைகாலம், முன்பனிக்காலம் என்ற நான்கு விதமான காலங்களும் ஒவ்வொன்றிற்கும் உரித்தான பண்டிகைகளும், அதை கடைப்பிடிப்பதன் நோக்கமும் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு அத்துபடியாகிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் முன்பனிக்காலத்தில் மரங்கள் நிறம் மாறும் அழகை(Fall Colors) எத்தனை முறை கண்டாலும் அலுப்பதில்லை. மஞ்சள், சிவப்பு, இளம் சிவப்பு, மனம் மயக்கும் பச்சை என்று பல்வேறு வண்ணங்களில் இலைகள் கொண்ட மரங்களை கண்டு களிக்க இந்த முறை நாங்கள் சென்றது டென்னிசியில் உள்ள ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்காவிற்கு. அமெரிக்கா-வில் அதிகமான மக்களால் பார்வையிடப்படும் தேசிய பூங்காவான ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்கா வண்ணங்களின் குவியமாக காட்சி அளித்தது. அடிக்கும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சியை கண்டு களிப்பதற்காக வந்திருந்தனர். சலசலக்கும் ஓடைகளும், வெண்மேகம் தங்கும் மலை முகடும், வண்ணங்கள் தெறித்தார் போன்ற மலை பிரதேசமும், சிலு சிலு வென்ற வாடை காற்றும் அள்ள அள்ள தெவிட்டாத அழகு. குடும்பத்தினர், நண்பர் என்று வெகு நாட்களாக பார்க்காத பலரை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருந்தது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் குடும்பத்தினருடன் அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஒரு வேளை அங்கு செல்ல முடியாவிட்டாலும் தெற்கு கரோலினாவில் உள்ள ஆஷ்வில் சென்றும் அப்பளசியன் மலை தொடரின் அழகை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினருடன் சென்றால் பூங்காவினுள் அமைந்து உள்ள பல நூறு குடில்களில் (cabin ) ஒன்றை வாடகைக்கு எடுத்து பூங்காவின் இயற்கை அழகை அருகிலேயே கண்டு களிக்கலாம்.பார்வைக்கு விருந்தளிக்கும் சில புகைப்படங்கள் கீழே.
  


நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது
என்னடா தலைப்பு இப்படி இருக்கே ஒருவேளை நான் அதிமுக அனுதாபியோ என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு மோசமான அரசியல்வாதிகள் வந்தாலும் கடுகளவேனும் நன்மை நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் வாழ்க்கையை நடத்தும் கடைசி குடிமகன் போன்ற நம்பிக்கைவாதி நான் என்று கொள்ளலாம். உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது அதிமுக. முன்னமே சட்டசபை தேர்தலை பற்றி நான் எழுதியது போன்று இது அதிமுகவிற்கு விழுந்த வோட்டு அல்ல. மக்கள் திமுக மேல் கொண்ட தீராத அதிருப்தி காரணமாக அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படாமல் "கடவுளுடனும் மனசாட்சியுடனும் மட்டுமே கூட்டு" என்று தேர்தலுக்கு முன்பு முழங்கி பின்னர் கூட்டணிக்காக ஏங்கி தவித்து நின்ற தேமுதிக விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தடாலடியாக சரிந்துள்ளது நல்லதற்கே. மக்களை அவ்வளவு சீக்கிரம் முட்டாள் ஆக்கிவிட முடியாது என்று தேமுதிக-விற்கு இதன் மூலம் புரிந்தால் நலம்.
கூட்டணி இல்லாமல் அனைத்து பெரிய கட்சிகளும் தனியாக நின்று எதிர்கொண்ட இந்த தேர்தல் ஒரு அதிசயம். இதன் மூலம் தனித்து நிற்கும் கட்சிகளுக்கு தங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை சீர்துக்கி பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும், கூட்டணி பலத்தால் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய கட்சிகள் தற்போது தனித்து நின்றதால் மக்கள் மனதில் தாங்கள் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளும் முகமாக அமைந்ததாலும் இந்த தேர்தல் வரலாற்றில் ஒரு மைல் கல்.  ஆனாலும் "உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது அதிசயம் அல்ல" என்று வாய் ஜாலம் காட்டும் கருணாநிதி இந்த தோல்வி மூலம் ஒன்றும் தெரிந்து கொள்ளபோவதில்லை என்பது மட்டும் உண்மை.கருணாநிதிக்கு உள்ள குடும்ப பிரச்சனையில் அவரால் வெற்றி தோல்வியை சீர் தூக்கிப் பார்த்து கட்சியை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஜெயலலிதா இந்த வெற்றியை சாமர்த்தியமாக கையாண்டால் அதிமுகவுக்கு ஏறுமுகம் தான். வேண்டும் போது காலில் விழுவதையும் வேண்டாத போது கழுத்தை பிடிப்பதையும் கொள்கையாக வைத்திருக்கும் ஜெயலலிதா மக்களின் எண்ண ஓட்டத்தை படித்து அவர்களுக்கு பயன் தரும் பல நல்ல திட்டங்களை ஊழலற்ற முறையில் செயல்படுத்தினால் அவரை வீழ்த்த எவரும் இல்லை. ஜெயிப்பாரா அல்லது வெற்றி தந்த மமதையில் வீழ்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

அமலா பால்
தோன்றின் புகழோடு தோன்றுக
"இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது ஆப்பிள் சக நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த செய்தி கேட்டு. கல்லூரி படிப்பை கூட முடிக்காத ஸ்டீவ், தனது ஆப்பிள் நிறுவனம் மூலம் உருவாக்கிய ஐ-பாடு, ஐ-பாட், ஐ-போன், மாக் வகை பி.சி- க்கள் போன்ற நவீன கருவிகளால் தொலைபேசி, இசை, கம்ப்யூட்டர் என்று எல்லா துறைகளையும்  நவீனப்படுத்தினார்  என்று சொன்னால் மிகை இல்லை. ஒரு தனி மனிதனால் எந்த வகையான மாற்றத்தை இந்த உலகத்தில் கொண்டு வர முடியும் என்பதற்கு சிறந்த இரு வார்த்தை பதில் - ஸ்டீவ் ஜாப்ஸ். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் உபயோகப்படுத்தக் கூடிய எளிய வகை வன்பொருள்கள், அதை வடிவமைத்த விதம், தொழில்நுட்பம் மற்றும் அதை அற்புதமான சந்தை பொருள் ஆக்கிய வித்தை ஆகியன ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி கொடுத்தன என்று சொன்னால் மிகை இல்லை. பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்டு, மேற்படிப்புக்கு வழி இல்லாததால் கல்லூரி படிப்பை கை விட்டு, பின்பு தனி நபர் கணினியை தனது வாகன கூடத்தில் இருந்து உற்பத்தி செய்து விற்று, தனது இருபத்தி ஒன்றாவது வயதில் கோடீஸ்வரன் ஆனது என்று ஸ்டீவ் நடந்து வந்த பாதை பற்றி படிக்க படிக்க நமக்கு வியப்பு வராமல் இருக்காது. பிறகு தான் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே  வெளியேற்றப்பட்டு நெக்ஸ்ட் என்னும் கம்ப்யூட்டர் நிறுவனம் மூலம் இரண்டாவது சகாப்தத்தை தொடங்கினார். அதன் பின் பிக்சார் என்ற நிறுவனம் மூலம் அவர் தயாரித்த அனிமேஷன் படங்களுக்கு உலகெங்கும் தட புடல் வரவேற்பு. எந்த ஆப்பிள் நிறுவனம் அவரை வெளியேற்றியதோ அந்த நிறுவனமே சில பல சரிவுகளுக்கு பிறகு அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பின்னர் அவர் ஆப்பிள் நிறுவனத்தை எவ்வாறு உலகப் புகழ் பெற செய்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் அவர் ஆற்றிய தொடக்க உரையை கேட்க கீழே கிளிக் செய்யவும்.
அவர் சொன்னதில் என்னை தொட்ட மூன்று சிந்தனைகள் - வாழ்க்கையானாலும், வேலையானாலும் நீங்கள் விரும்புவதை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். அதுவே மனமகிழ்ச்சிக்கு சிறந்த வழி. நீங்கள் உங்களுக்காக வாழுங்கள். யாரை திருப்தி படுத்தவும் நீங்கள் வாழ வேண்டாம். வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அர்த்தம் நிறைந்தது. எனவே வாழ்கை அர்த்தமற்ற அலங்கோலம்அல்ல. அர்த்தம் பொதிந்த அற்புதம். அவர் அனுபவத்தில் இருந்து வந்த இந்த சிந்தனைகள் ஆழமானது;  வாழ்க்கையில் நம்மால் முடிந்த வரை கடைபிடிக்க வேண்டியது.

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

சங்கே முழங்கு

முதல் முழக்கம்



1942 -ல் அடிமை  இந்தியாவில் நடந்தது ஆங்கிலேயர்களுக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு" இயக்கம். கிட்ட தட்ட 69 ஆண்டுகள் கழித்து இந்நாள் தொடங்கியுள்ளது "கொள்ளையனே வெளியேறு" என்று அன்னா ஹசாரே தொடங்கியுள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டம் மாணவர்கள், இல்லத்தரசிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பு மக்களையும் இனம்,மொழி,பேதம் என்ற எல்லைகளை தாண்டி இணைத்துள்ளது.  "என்னதான் சொல்லுங்க, ஊழலை ஒழிக்க முடியாது" என்று சொல்லுவோர் கூட அன்னாவின் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று ரகசியமாக விரும்பாமல் இல்லை.அன்னா ஹசாரே இந்த போராட்டத்தை நடத்த கூடிய சரியான நபர் இல்லை அவர் ஒரு ஊழல்வாதி என்று சேற்றை வாரி இறைக்கும் சிலருக்கு சொல்வது என்ன வென்றால் - உங்களில் யார் ஒருவர் சுத்தமானவரோ அவர் முதலில் கல் எறியுங்கள் என்பது தான். ஒரு உயரிய இலட்சியத்தை நோக்கி ஒருவர் முதல் அடி எடுத்தால் அந்த லட்சியத்தின் தாக்கம் அவர் தீயவராக இருந்தாலும் அவரை நெறிப்படுத்தும்.நல்லவனாக்கும். சரி இந்த போராட்டத்தின் மூலம் நாட்டில் ஊழல் ஒழிந்து விடுமா இல்லை இதுவும் கடந்து போகுமா என்பதை காலம் மட்டுமே சொல்லும். ஆனால் சுதந்தர இந்தியாவில் இந்த போராட்டம் ஒரு மைல்கல். ஊழலில் திளைக்கும் அரசியல் கட்சிகளுக்கும், அந்த ஊழல்வாதி அரசியல்வாதிகளை கையில் போட்டுக் கொண்டு கொள்ளை லாபம் சம்பாரிக்கும் பண முதலைகளுக்கும் இந்த போராட்டம் மக்கள் அடிக்கும் எச்சரிக்கை மணி. இந்த மணி ஓங்கி ஒலிக்கட்டும். இது வெறும் எச்சரிக்கை மணியாக மட்டும் இல்லாமல் வெற்றி முரசாக மாறட்டும். முதல் முழக்கம் ஊழலுக்கு எதிராக.

இரண்டாம் முழக்கம்




லாக்-அப்  மரணங்கள் பற்றி நாளிதழ்களில் செய்தி
வெளியாகாத நாளே இல்லை என்னும் அளவுக்கு தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது மட்டும் அல்லாமல் என்கௌன்டர் கொலைகள் மூலம் தனக்கு இடைஞ்சல் என்று கருதும் ரௌடிகளை அப்புறப்படுத்த போலீசை ஆள்பவர்கள் பயன்படுத்தி வருவதும் வாடிக்கை ஆகிவருகிறது. குற்றவாளிகளை வளர்த்து விடுவதில் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு மிக அதிகம் என்பதை பிறந்த குழந்தை கூட சொல்லும். இந்நிலையில் குற்றவாளிகள் என்று கருதப்படும் நபர்களை நீதித்துறையில் நிறுத்த வேண்டிய காவல் துறையே நீதித்துறையை மதியாமல் குற்றவாளிகளை கொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. லாக்-அப் மரணங்களை பொறுத்த வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே.லாக்-அப் மரணத்தை நிகழ்த்திய காவல்துறையினரை வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்தவுடன் காவல் துறை இந்த விஷயத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல கை கழுவி விடும். அரசு தரப்பும் பாதிக்கப் பட்டவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுத்தவுடன் நகர்ந்து கொள்ளும். ஆனால் லாக் அப் மரணத்தால் கணவனை இழந்து வாடும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அல்லது மனைவியை இழந்து வாடும் கணவனுக்கும் நீதி என்பது எட்டாக்கனியே. நீதிக்காக போராடும் பண வசதியோ, கல்வியோ இல்லாத மக்கள் வாழும் இந்த நாட்டில் லாக்-அப் மரணங்கள் மற்றும் என்கௌன்டர் மரணங்கள் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் நிகழ்வு. சந்தன கடத்தல் வீரப்பன் என்கௌன்டர் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால் அரசாங்கத்திற்கே நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை என்பது தான். வீரப்பனை உயிருடன் பிடித்திருந்தால் அவனை இயக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மக்கள் மன்றத்தில் தெரிந்திருக்கும். ஆனால் பொதுமக்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பில் உள்ள அரசுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. லாக்-அப் மற்றும் என்கௌன்டர் மரணங்கள் நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயல். இத்தகைய செயலில் ஈடுபடும் போலீசாருக்கு ஒருவர் உயிர் கொலை புரிந்தால் என்ன தண்டனை கிடைக்குமோ அதே தண்டனை வழங்க வேண்டும். என்கௌன்டர் என்ற பெயரில் போலீசே குற்றவாளிகளை கொல்லும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது. இரண்டாம் முழக்கம் நீதிக்கு ஆதரவாக.
மூன்றாம் முழக்கம்



செஹ்லா மசூத்
செஹ்லா மசூத், நியமத் அன்சாரி இவர்களை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. செஹ்லா மசூத் மத்ய பிரதேச மாநிலத்தை சார்ந்த சமூக ஆர்வலர். மத்திய பிரதேசத்தில் உள்ள ஆலைகளிலும் மற்றும் சட்டர்பூர் மாநிலத்தில் நிகழும் சுற்று சூழல் சீர்கேடுகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். இதற்கு அவர் கொடுத்த விலை - தன்னுடைய உயிர். தன் வீட்டின் முன்னே நிறுத்தி இருந்த காரில் ஏறப் போன அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல் அன்சாரியும் ஜார்கந்து மாநிலத்தில் நடந்த ஊழல் குற்றங்களை தட்டிக் கேட்டமைக்காக தன் வீட்டிலேயே அடித்துக் கொல்லப்பட்டார். இதே போல் ஆண்டு தோறும் பல நூறு சமூக ஆர்வலர்களை இந்த மண்ணில் இழந்து வருகிறோம் நாம். குற்றம் செய்தவர்களோ ஆட்சியாளர்களின் தயவினால் சுதந்திரமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிக்கைகள், வானொலி, டிவி போன்ற ஊடகங்களின் பணி என்ன. இத்தகைய சமூக ஆர்வலர்களின் பணியை மக்களுக்கு எடுத்து சொல்வது தானே. ஆனால் அவர்களோ சினிமா செய்திகளையும், கிரிக்கெட் செய்திகளையும் போட்டால் தன் கடமை முடிந்தது என்று இருந்து விடுகிறார்கள்.

நியமத் அன்சாரி



அன்னாவின் உண்ணாவிரதத்தை பற்றி செய்தி வெளியிட்டால் மட்டும் போதுமா, கங்கை நீரை தூய்மை படுத்த கோரி 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சாது நிகமானந்தா- வை பற்றி ஊடகங்களில் ஒரு வரி செய்தி கூட வரவில்லை. சமூக ஆர்வலர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஊடங்களுக்கு உள்ள சுணக்கம் காரணமாக பல தன்னார்வலர்கள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே மறைந்து விடுகிறார்கள். எனவே இந்த மூன்றாம் முழக்கம் பத்திரிக்கை எழுச்சிக்காக.  பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி ஆகியன மக்கள் பிரச்சனைக்காக போராடும் எண்ணற்ற தன்னார்வலர்கள் பற்றி மக்களுக்கு எடுத்து செல்ல உறுதி கொள்ள வேண்டும்.  தன்னார்வலர்கள் பின்னே பத்திரிக்கை உலகம் திரளுமாயின் இந்தியாவை பீடித்திருக்கும் பல பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது என்பதை நிருபிக்கும் தருணம் இது.  



நான்காம் முழக்கம்


ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப் பட இருக்கிறது. உலகத்தில் 139 நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உயிரை எடுக்கும் அதிகாரம் உலகில் எவருக்கும் இல்லை. ஆளும் அரசாங்கங்கள் உட்பட. எனவே குற்றவாளிகள் எனக் கருதப்படும் மூவரை மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அவர்கள் தண்டனை காலம் முடிவடைந்தவுடன் அவர்களை விடுவிக்க வேண்டும். எய்தவன் எங்கேயோ இருக்க அம்பை நோவது ஏன் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்ததும் ஆள்பவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்கள் உறுதியாக நிரூபிக்க படவில்லை என்பதும் குற்றவாளிகள் என்று அடையாளம் காண்பிக்கப்படும் பலரும் இன்றும் வெளியே சுதந்திரமாக உலவுவதும் நாம் கண்ணார காணும் நிஜம். இந்த அழகில் அப்பாவிகளை தூக்கில் போட்டு தமிழர்களை மேலும் கொன்று குவிக்க அரசாங்கமே துணை போக வேண்டாம். ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் கொலைகள் போதாதா. இன்னும் எவ்வளவு தமிழ் ரத்தத்தை இந்த மண்ணில் வீணாக சிந்த வேண்டும். பாதசாரிகள் மீது குடிபோதையில் கார் ஏற்றி கொன்ற கான் நடிகருக்கும், மும்பை வெடிகுண்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட தத் நடிகருக்கும் ஒரு நீதி. பணபலமோ, அதிகாரபலமோ இல்லாதோ அப்பாவிகளுக்கு ஒரு நீதி. ஒரு வேலை அரசாங்கம் தூக்கு தண்டனை வழங்க முற்பட்டால் முதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்களை மும்பையில் கொன்று குவித்த அப்துல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கட்டும். அதன் பிறகு இந்த மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கலாம். இதனால் நான் தூக்கு தண்டனையை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். முதலில் அரசாங்கத்திற்கு கசாபுக்கு தண்டனை வழங்கும் தைரியம் உள்ளதா என்பதை சோதித்து பார்க்கவே இந்த கேள்வியை எழுப்புகிறேன். ராஜீவின் இழப்பு இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்பதை மறுப்பதற்கு இல்லை. எனினும் ராஜீவின் பெயரால் அநீதி இழைப்படுவதை அவரே விரும்ப மாட்டார்.இந்த நான்காம் முழக்கம் தூக்கு தண்டனைக்கு எதிராக.தனி மனித உரிமைக்கு ஆதரவாக.   

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்,
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
ஆண்மை சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோருக்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே !!! சங்கே முழங்கு !!!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதிதனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! தமிழ் எங்கள் மூச்சாம்!

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

விருது வாங்கலையோ விருது

சமீபத்தில் சூடான செய்திகளில் இடம் பிடித்த பிரபலங்களுக்கு விருதுகள் கொடுத்தால் என்ன விருது கொடுக்கலாம் என்று ஒரு சுவையான கற்பனை.

"குடும்பம் ஒரு கோயில்" விருது

 "தி அதர் சைடு" என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி குடும்பத்து சொத்து பட்டியல் மலைக்க வைத்துள்ளது என்று சொன்னால் மிகை இல்லை. கலைஞர் குடும்பம் கடந்த 60 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து எவ்வாறு மக்களுக்கு சேவை ஆற்றி உள்ளது என்பது எண்ணும் போது புல்லரிகிறது. பின்னே எந்த ஊரில்  எந்த சொத்து உள்ளது, அது யார் பராமரிப்பில் உள்ளது, வேறு எங்கெல்லாம் சொத்து வாங்கலாம் என்றெல்லாம் திட்டமிடுவது எவ்வளவு கஷ்டம். அஞ்சாநெஞ்சன், தளபதி, அவரது வாரிசுகள், மகள்கள், மருமகன்கள் என்று  எல்லாரும் தலைமுறை தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிட வசதியாக சொத்து சேர்த்து கொடுத்து "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற பாரம்பரியம் உள்ள கட்சியை  "திருடர் முன்னேற்ற  கழகம்" என்றும் "திரு.மு. கருணாநிதி கழகம்" அனைவரும் பரிகாசிக்கும் அளவுக்கு தரம் தாழ வைத்திருக்கும் கருணாநிதிக்கு இந்த சிறப்பு விருது. விக்கிலீக்ஸ் தரும் தகவல் படி 35000 கோடி ருபாய் அளவுக்கு சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் நமது திருக்குவளை தவப்புதல்வனுக்கு அடிக்கடி நடக்கும் கட்சிக்காரர்களின் கைது நடவடிக்கைகளை  மறக்கச் செய்யும் இந்த  விருது என்று தாராளமாக நம்பலாம்.

"சிறந்த புதுமுக நடிகை" விருது
 காதலனுடன் ரகசியமாக திருமணம் முடித்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அவரது  மகள் ஸ்ரீஜாவை அவ்வளவு சீக்கிரமாக யாராலும் மறந்திருக்க முடியாது. இன்ஜினியரிங் பட்டதாரியான ஸ்ரீஜா தன் சக மாணவனை மணந்து தாய் தந்தையரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி சட்டம் காவல்துறையை நாடியது ஒரு காலம்.  இன்றோ எனது கணவன்  மற்றும் கணவன் வீட்டாரும் வரதட்சணை கேட்டு என்னை சித்திரவதை செய்து வருகிறார்கள் எனவே எனக்கு விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று கோர்ட் கதவை தட்டி இருக்கிறார். இன்ஜினியரிங் படித்து, அரசியல் பலமும், பண பலமும் வாய்ந்த குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஸ்ரீஜாவை பெரிய பின்புலம் இல்லாத அவரது கணவரோ அல்லது அவரது கணவரின் வீட்டுக்காரர்களோ துன்புறுத்தி இருப்பார்கள் என்பது நம்பும் படியாக இல்லை. இரண்டாம் திருமணம் பற்றிய கிசுகிசுக்கள் வலம் வரும் இந்த வேளையில் வரதட்சணை  கொடுமை  என்று  
கிளிசரின் இல்லாமலேயே டன் கணக்கில் அழுது அனுதாபம் தேடும் ஸ்ரீஜாவிற்கு  இந்த டன்டனக்கா விருது.



  "அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன " விருது
  தி.மு.க, அதி.மு.க மீண்டும் தி.மு.க என்று டென்னிஸ் பந்து போல இந்த பக்கம் அந்த பக்கம் மீண்டும் இந்த பக்கம் என்று பறந்து பறந்து வாக்காளர் என்ணத்தை விட்டே பறந்த பா.ம.க  நிறுவனர் ராமதாசுக்கு இந்த விருது. இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காதது, பல்வேறு ஊழல் புகார்களில் கூட்டணி கட்சியான தி.மு.க-வின் பங்கு பற்றி தெரிந்தும் அமைதி காத்தது, தன் மகன்அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது ஒன்றே குறிக்கோள் என்று கட்சி நடத்தியது பின்னர் தேர்தலில் தோல்வியை தழுவியதும் கூட்டணி உறவை திடீரென்று முறித்து கொண்டு நாங்கள் இனி வரும் எந்த திராவிட கட்சியிடமும் இனி கூட்டணி வைக்காமல் தேர்தலில் தனியாக போட்டு இடுவோம் என்று சலம்புவது என்று காமெடி செய்யும் ராமதாசுக்கு இந்த கலக்கல் விருது. இனி போட்டியே இட வேண்டாம் வீட்டிற்கு சென்று நிரந்தர ஒய்வு எடுங்கள் என்று தமிழக வாக்களர்கள் அடுத்த தேர்தலில் ராமதாசுக்கு தெளிவு படுத்துவார்கள் என்று நம்புவோமாக.



"நான் சொல்வேதல்லாம் உண்மை உண்மையை தவிர வேறில்லை" விருது
கற்பனை விருது என்றாலும் இதை வாங்க கூட சோனியாவிடம் பெர்மிஷன் வாங்க கால் கடுக்க காத்திருக்கும் மன்மோகன் சிங்கை விட  இந்த விருதுக்கு பொருத்தமானவர் ஈரேழு பதினான்கு லோகத்திலும் இல்லை. 2-ஜி  ஊழல் பற்றி  எதாவது தெரியுமா என்று சுப்ரீம் கோர்ட் கேட்டாலும், முன்னாள் மத்திய  அமைச்சர் ராஜா பிரதமர் அலுவலகத்திற்கு தெரியாமல் எந்த அலைகற்றை ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினாலும், காமன்வெல்த் ஊழல் பற்றி எதை கேட்டாலும் எனக்கு எதுவும் தெரியாது யுவர் ஆனர் என்று ஜகா வாங்கி, இந்த பொம்மை பிரதமரை உண்மையான பிரதமர் என்றா இன்னும் இந்த உலகம் நம்புது என்று வடிவேலு கணக்காய் மிரளுவதாகட்டும், எனக்கு அவ்வளவு பவர் எல்லாம் இல்லை சும்மா நம்புங்க என்று உண்மையாகவே கூறினாலும் எதிர் கட்சிகள் பிரதமரை துவைத்து காயப்போடுவதால் நொந்து நூடில்ஸாகி இருக்கும் சிங்குக்கு ஏதோ நம்மால் முடிஞ்ச உபகாரம் இந்த விருது.

"வில்லன் இல்லை ஹீரோ" விருது
 மதுரையை ஐந்து வருடங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து நில அபகரிப்பு, கொலை,மணல் கொள்ளை, கட்டை பஞ்சாயத்து, அடிதடி,வன்முறை என்று சிற்றரசர்கள் போல் கோலோச்சிய அஞ்சா நெஞ்சனின் அல்லு சில்லுகளான  மதுரை தி.மு.கா-வினருக்கு இந்த விருது. எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற அச்சத்தால் 100 கோடி மதிப்புள்ள நிலங்களை மீண்டும் மிரட்டி வாங்கியவர்களிடமே கொடுத்து சமாதானமாக போய்விடுவதிலாகட்டும், தான்  தப்பிப்பதற்காக தன் கட்சிகாரனையே காட்டி கொடுத்து திடீர் நல்லவன் ஆவதாகட்டும், நானா தி.மு.கா ஆளா நல்ல கதை நான் எப்பவுமே  அம்மா கட்சிதான் என்று அந்தர் பல்டி அடிப்பது வரை இவன் நல்லவனா கெட்டவனா என்று போலீஸ் முதல் பொதுமக்கள் வரை எல்லாரையும் மண்டை காய வைப்பதால் பிடிங்கள் இந்த சூப்பர் விருது.


"நான் அவனில்லை" விருது
   
போலி பத்திர மோசடி செய்து வேறொருவர் நிலத்தை அபகரித்தார் என்றும், போலீஸ் கைதில் இருந்து தப்ப தலைமறைவு ஆகிவிட்டார் என்று இறக்கை கட்டி பறக்கும் வதந்திகளாலும் "மாப்பு வைச்சிட்டாண்டா ஆப்பு" என்று பம்மி திகிலடித்து கிடக்கும் வடிவேலுக்கு இந்த அம்சமான விருது. தனது வெள்ளந்தி பேச்சு,  உடல் மொழி, எல்லோரையும் கவரும் நகைச்சுவை என்று திரை  துறையில் மறக்க முடியாத நட்சத்திரமாக மின்னும் கைப்புள்ளைக்கே கட்டம் சரியில்லாமல் போனதால் வேணாம் வேணாம் அழுதுடுவேன் என்று அவர் கெஞ்சியும் வதந்திகளும்  வம்பும் விடாது தொடர்வதால் இந்த சங்கத்தை கலைச்சிவிட வேண்டியது தான் என்று புலம்பித் தளும்பும் வடிவேலுக்கு இந்த ஆறுதல் விருது.